Jun 1, 2013

வெற்றிக்கு அடிப்படை மனக் கட்டுப்பாடே !

வாழ்வில் ஒருவர் பெறும் வெற்றியானது, அவரின் அறிவுத்திறன் அல்லது கல்லூரியில் அவர் பெறும் மதிப்பெண்களால் மட்டும் நிகழ்வதில்லை. ஒருவரின் சுயகட்டுப்பாடே, வெற்றியை பிரதானமாக தீர்மானிக்கும் அம்சமாக திகழ்கிறது.
பள்ளிப் படிப்பை முடித்து, கல்லூரி வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கும் ஒருவர், பல்வேறான குழப்பங்களுக்கு ஆளாகிறார். தான் படிக்கும் கல்லூரி, சிறந்ததாக இருக்க வேண்டுமென கருதுகிறார். ஆனால் ஒருவர், எத்தகைய பிரபலம் வாய்ந்த கல்லூரியில் படிக்கிறார் என்பதைவிட, அவர் அங்கே எதை கற்றுக்கொள்கிறார் மற்றும் எப்படி கற்றுக்கொள்கிறார் என்பதே முக்கியம்.
அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலையில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வின்படி, ஒருவர் வாழ்வில் வெற்றியடைய வேண்டுமெனில், அவருக்கு சுய கட்டுப்பாடு மிகவும் முக்கியம் என்ற முடிவு கிடைத்துள்ளது. உங்களின் மிதமிஞ்சிய உணர்வுகளை அடக்கும் சுய கட்டுப்பாட்டு பழக்கமானது, கல்லூரி வாழ்க்கையில் மட்டுமல்ல, உங்களின் ஒட்டுமொத்த வாழ்க்கை முழுவதும், உங்களுக்கு வெற்றியைத் தரும்.
சுய கட்டுப்பாட்டின் சக்தியை நீங்கள் உணர வேண்டுமெனில், Marshmallow டெஸ்ட் பற்றி நீங்கள் தெரிந்துகொள்வது அவசியம். வால்டர் மிஸ்செல் என்ற உளவியல் நிபுணரால், கடந்த 1972ம் ஆண்டு, ஸ்டான்போர்டு பல்கலையில், நடத்தப்பட்ட ஒரு பரிசோதனையே Marshmallow டெஸ்ட். Marshmallow என்பது ஒரு இனிப்பான தின்பண்டம்.
தனது செயல்பாட்டிற்கு, ஒரு வகுப்பறையில், நர்சரி பள்ளி மாணவர்களை அவர் திரட்டினார். வகுப்பின் ஆசிரியர் அந்தக் குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் அந்த தின்பண்டத்தை வழங்கினார். தின்பண்டங்களைப் பெற்ற குழந்தைகளிடம் ஒரு நிபந்தனை விதிக்கப்பட்டது. அதாவது, வகுப்பின் ஆசிரியை வெளியே சென்று ஒரு சிறு வேலையை முடித்துவிட்டு வருவார். அதுவரை, அத்தின்பண்டத்தை குழந்தைகள் உண்ணலாம் அல்லது ஆசிரியர் வரும்வரை காத்திருக்கலாம். காத்திருக்கும் குழந்தைகளுக்கு, ஆசிரியர் வந்தபின், கூடுதலாக இன்னொரு தின்பண்டம் வழங்கப்படும் என்பதே அந்த நிபந்தனை.
ஆசிரியர் வெளியில் சென்று திரும்பிய பின்னர், குழந்தைகளைப் பார்த்தார். சில குழந்தைகள் தின்று முடித்திருந்தன. சில குழந்தைகளோ, பொறுமையாக காத்திருந்தன.
காத்திருந்த குழந்தைகளை, வளர்ந்து, கல்லூரிப் படிப்பை முடித்து, வேலைக்கு சென்று பணிபுரியும் காலம் வரை, வால்டர் மிஸ்செல் கண்காணித்து வந்தார். சிறுவயதில், அந்த வகுப்பறையில், தின்பண்டத்தை உண்ணாமல் வைத்திருந்து, காத்திருந்த குழந்தைகள், மேல்படிப்பில் சிறந்து விளங்கியதோடு, நல்ல பணிவாய்ப்புகளைப் பெற்று, ஆரோக்கியமான உடல்நலத்தைக் கொண்டிருந்து, மற்றவர்களுடன் நல்ல உறவையும் பேணி வந்தார்கள் என்பதை அவர் கண்டறிந்தார்.
கல்லூரி வாழ்வில் நுழைந்தவுடன், ஒரு புதிய சுதந்திரமான உலகை, இளைஞர்கள் உணர்கிறார்கள். கல்லூரி வாழ்க்கை என்பதே, சந்தோஷமாக ஆடி-பாடி திரிந்து, இன்பமாக இருப்பதற்குத்தான் என்றும், படிப்பது மற்றும் வகுப்பறை நடவடிக்கைகளில் பங்கு கொள்வது அவ்வளவு முக்கியமற்றது என்றும் அவர்கள் நினைத்துக் கொள்கிறார்கள். இதன்மூலம், அவர்களின் தங்களின் எதிர்கால மற்றும் நீண்டகால நலனை பணயம் வைக்கிறார்கள். அவர்களால், தங்களின் மனஉணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடிவதில்லை. குறுகியகால சந்தோஷங்களுக்காக, நீண்டகால நன்மையை தொலைக்கின்றனர்.
எனவே, ஒவ்வொரு மாணவரும், எப்போதுமே கட்டுப்பாட்டோடு இருக்கப் பழகிக்கொள்ள வேண்டும். இன்னொரு கூடுதல் தின்பண்டத்திற்கு காத்திருக்கும் பண்பானது, எதிர்காலத்தின் மீது நம்பிக்கை வைத்தல் மற்றும் நேர்மறையாக இருத்தல் ஆகிய குணநலன்களை குறிக்கின்றன.
நீங்கள் உங்களுக்குள் நம்பிக்கை வைக்கவில்லையெனில், உங்களுக்கு நல்லது நடக்கும் என்று நம்பவில்லையெனில், உங்களின் வாழ்வில் எதிர்மறை விளைவுகளே ஏற்படும். எதிர்மறை எண்ணங்களை தன்னுள் வளர்த்துக் கொண்டவர்கள், வெற்றிக்கான வாய்ப்புகள், தங்கள் கதவுகளை தட்டும்போது, அதை கவனிக்க தவறிவிடுவார்கள்.
எனவே, அவசரப் புத்தியை கைவிடுங்கள். தேவையற்ற கோபம் மற்றும் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துங்கள். பொறுமையையும், நேர்மறை எண்ணத்தையும் மேம்படுத்திக் கொள்ளுங்கள். நிச்சயமாக, வெற்றி உங்களைத் தேடிவரும்.

May 22, 2013

''தண்ணி அடிக்கும் இடத்தில் யார் படம் வைப்பது என்று அண்ணிக்குத் தெரியாதா?'' வெளுத்துகட்டும் நாஞ்சில் நம்பத்


'டாஸ்மாக் கடைகளில் ஜெயலலிதா படத்தைத்தான் மாட்ட வேண்டும்’ என்று, பிரேமலதா விஜயகாந்த் கொளுத்திப் போட்டிருக்கும் தீ, அ.தி.மு.க. வட்டாரத்தைக் கொந்தளிக்கவைத்துள்ளது. சென்னை தேனாம்பேட்டையில் நடந்த கூட்டத்தில் பேசிய அ.தி.மு.க. கொள்கை பரப்புத் துணைச் செயலாளர் நாஞ்சில் சம்பத், விஜயகாந்தை திட்டித் தீர்த்தார். அவரைச் சந்தித்தோம். 
'டாஸ்மாக் கடைகளுக்கு 'அம்மா டாஸ்மாக்’ என்று பெயர்சூட்டி முதல்வர் ஜெயலலிதா படத்தை ஒவ்வொரு கடையிலும் வைக்க​வேண்டும்’ என்று, திருப்பூர் கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேசியுள்ளாரே?'
''இதுவரை விஜயகாந்த் மட்டும்தான் பிதற்றி வந்தார். இப்போது பிரேமலதாவும் தொடங்கிவிட்டார்.
நீதியை நிலைநாட்டும் இடங்களில் எல்லாம், மகாத்மா காந்தி படம் இருக்கும். மனிதநேயம் குடியிருக்கும் இடங்களில், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். படம் இருக்கும். தன்மானம் உள்ள இடத்தில், தந்தை பெரியார் படம் இருக்கும். தமிழ்நாட்டை நேசிப்பவர்கள் இல்லங்களில், தமிழ்நாடு என பெயர் சூட்டிய அண்ணா படம் இருக்கும். பசித்த வயிற்றுக்கு பால் சோறுபோட்டு அன்னம் பாலிக்கும் இடத்தில் எல்லாம், எங்கள் அன்னபூரணி மாண்புமிகு புரட்சித்தலைவி டாக்டர் அம்மா படம்தான் இருக்கும். சரக்கு விற்கும் இடங்களில் தண்ணி அடிப்பவன் படத்தைத்தான் வைக்க வேண்டும். இதை அண்ணி புரிந்துகொள்வது நல்லது.''
'என் பேச்சு முன்ன, பின்னத்தான் இருக்கும். அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை. எனக்கு ஜெயிக்கத் தெரியும்’ என்று விஜயகாந்த் பேசியதை கவனித்தீர்களா?'
''அவர் என்ன பேசுகிறார் என்று எதிரில் இருப்பவர்களுக்கே புரியவில்லை. அவர் பேசவில்லை. அவரை ஒரு 'சக்தி’ பேசவைக்கிறது. ஓர் எதிர்க்கட்சித் தலைவர் புள்ளிவிவரங்களை அள்ளிக்கொட்டி ஆதாரங்களை அடுக்கிக்காட்டி ஆளும் அரசாங்கத்தை ஆற்றுப்படுத்த வேண்டும். வெந்ததைத் தின்று வாயில் வந்ததைப் பேசுகிற ஒரு பேட்டை பிஸ்தாவைப் போல, எதிர்க் கட்சித் தலைவர் பேசுகிறார். மக்கள் உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். அம்மாவின் ஆட்சி மீது எந்தவிதமான குற்றச்சாட்டுகளையும் சொல்வதற்கு அவருக்கு வக்கும் இல்லை. துப்பும் இல்லை. இவர் எதிர்க் கட்சித் தலைவர் ஆனதே எங்கள் அம்மா போட்ட பிச்சை.

அவருக்கு ஜெயிக்கத் தெரிந்தது ஒரே ஒரு தொகுதியில்தான். அம்மாவின் கருணைப் பார்வையால் 29 இடங்களையும் எதிர்க் கட்சி அந்தஸ்தையும் பெற்றார். 'எனக்கு ஜெயிக்கத் தெரியும்’ என்று அவர் சொல்வதைக் கேட்டு, அவரது கட்சிக்காரர்களே சிரிக்கிறார்கள். நாங்கள் அதை வேடிக்கை பார்க்கிறோம்.''
'வரும் நாடாளுமன்றத் தேர்தலில் விஜயகாந்த் விஸ்வரூபத்தை பார்ப்பீர்கள்  என்கிறாரே? '
''எம்.எல்.ஏ.வாக இருந்தவர், எதிர்க் கட்சித் தலைவர் ஆனது எங்கள் அம்மாவின் விஸ்வரூபம். அகலிகை மீது ராமன் கால்வைத்ததால் சாபவிமோசனம் கிடைத்தது. காக்கையின் மீது அம்மா கால் வைத்ததால், அவர் எதிர்க் கட்சித் தலைவராகிவிட்டார். நாடாளுமன்றத் தேர்தல் இருக்கட்டும். உள்ளாட்சித் தேர்தலில் எங்கே போனார்?
இந்திய அரசியல் வரலாற்றிலேயே ஆளும் கட்சிக்கு 95 சதவீகித வெற்றி கிடைத்தது கடந்த உள்ளாட்சித் தேர்தலில்தான். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் கிடைக்காத இந்த வெற்றி, அம்மா ஆட்சிக் காலத்தில் சாத்தியமானது. கட்டிய மனைவிக்காகவும் மச்சானுக்காகவும் மட்டும் கட்சி நடத்துகிற புட்டிப் பேர்வழி, விஸ்வரூபம் எடுப்பதெல்லாம் நடக்கிற காரியமல்ல. கூவம், பாவத்தைப் போக்கினாலும் போக்கும்... கள்ளிப்பால், கண் நோயை நீக்கினாலும் நீக்கும்... ஓலமிடும் கடல், ஊமை ஆனாலும் ஆகும். ஒரு நாளும் இனி தே.மு.தி.க தேறாது. அவர் அகந்தையின் உச்சியில் நின்று ஆரவாரம் செய்கிறார். இந்த மாயாஜாலப் பேர்வழி மண்ணைக் கவ்வும் நாள் வெகுதொலைவில் இல்லை.''
''எதிர்க் கட்சித் தலைவராக விஜயகாந்தின் செயல்பாடு எப்படி?''
''எதிர்க் கட்சித் தலைவர், நிழல் அமைச்சரவைக்குத் தலைமை தாங்குகிறவர். ஆளும் கட்சி கொண்டுவரும் தீர்மானங்களை நிறைவேற்ற ஆரோக்கியமான விவாதங்களை முன்வைக்க வேண்டியவர். ஆனால், இவர் அப்படிச் செய்கிறாரா? முல்லைப் பெரியாறு பிரச்னையில் தமிழகத்தின் உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது என்று காலத்தால் அழியாத தீர்மானத்தை அம்மா கொண்டுவந்தபோது, அதைக்கூட ஆதரிக்கும் மனோபாவம் இல்லாதவர்.
கோவை கருத்திருமன், பொன்னப்ப நாடார், அகிலமே ஆச்சரியப்படும் மாண்புமிகு அம்மா ஆகியோர் உட்கார்ந்த எதிர்க் கட்சி ஆசனத்தில் எதுவுமே தெரியாத ஒருவர் உட்கார்ந்திருப்பது தமிழகத்துக்கு இழுக்கு. இந்த அழுக்கும் இழுக்கும் எப்போது விலகும் என மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.''
- எஸ்.முத்துகிருஷ்ணன்
படம்: கே.ராஜசேகரன்

நாஞ்சில் சம்பத் இல்ல திருமண விழா: முதல்வர் ஜெயலலிதா நேரில் வாழ்த்து

அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நாஞ்சில் சம்பத்தின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.  அவரது மகள் மதிவதனிக்கும், ஆனந்த் என்பவருக்கும் கடந்த சில தினங்களுக்கு முன்பு  திருமணம் நடைபெற்றது.  இவர்களது திருமண வரவேற்பு, சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸில் நேற்று நடைபெற்றது. இந்த திருமண வரவேற்பு விழாவிற்கு மாலை 4 மணிக்கு முதல்வர் ஜெயலலிதா வந்தார். அவரை நாஞ்சில் சம்பத் குடும்பத்தினர் மற்றும் அமைச்சர்கள் வரவேற்றனர். மேடைக்கு வந்த முதல்வர் தயாராக இருந்த மாலைகளை எடுத்து மணமக்களிடம் கொடுத்தார். அவர்கள் மாலை மாற்றிக் கொண்டு முதல்வர் காலில் விழுந்து ஆசி பெற்றனர்.

May 5, 2013

ப்ளஸ் 2 தேர்வு முடிவுகளை எந்தெந்த வலைத்தளங்களில் பார்க்கலாம் அரசு அறிவிப்பு


சென்னை, மே 3: ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் அரசு வலைத்தளங்களின் முகவரிகளை அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்து உள்ளது.

இந்த ஆண்டு ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள், இணையத்தில் தனியார் வலைத்தளங்களில் வெளியிடப்படாது என்று அரசு அறிவித்துள்ளது.எனவே, அரசு வலைதளங்களின் வேகம் குறையாமல் இருக்க 16 சர்வர்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

தேர்வு முடிவுகள் வெளியாகும் அரசு வலைத்தளங்களின் இணைப்புகள்:

http://tnresults.nic.in
http://dge1.tn.nic.in
http://dge2.tn.nic.in
http://dge3. tn.nic.in

இந்த நான்கு வலைத்தளங்களிலும் மே 9-ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் http://dge3.tn.nic.in என்ற இணையதள முகவரியில் ஜி.பி.ஆர்.எஸ். வசதியுடன் செல்போனிலும் தேர்வு முடிவுகளைப் பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

தேர்வு முடிவுகளை மாணவர்கள் உடனடியாக அறிந்துகொள்ளும் வகையில் தேசிய தகவல் மையத்தில் 16 சர்வர்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவல் மையங்களிலும், மாநிலத்தில் உள்ள அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் மாணவ, மாணவியர் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

செல்போன், எஸ்.எம்.எஸ். மூலமும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளைத் தெரிந்துகொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எஸ்.எம்.எஸ். மூலம் தேர்வு முடிவுகளைப் பெறுவதற்கான நடைமுறைகள் மே 8-ஆம் தேதி அறிவிக்கப்படும்.

மாணவர்கள் தங்களது பள்ளிகளில் மதிப்பெண்களைத் தெரிந்துகொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Apr 7, 2013

விடுதலைப் புலிகளால் 30 ஆண்டுகளாக முடியாததை, பாரதீய ஜனதா கட்சி தமிழ் ஈழம் அமைத்து கொடுத்துவிடும்-ஜஸ்வந்த் சிங்

இலங்கையில் திடீர் அலறல்

“இலங்கை அரசு சும்மா பார்த்துக் கொண்டு இருந்தால், இந்தியாவின் பாரதீய ஜனதா கட்சி, இலங்கைக்குள் தமிழர்களுக்கு தமிழ் ஈழம் ஒன்றை உருவாக்கி கொடுத்துவிட்டு போய்விடும். அதன்பின் நாம் எதுவும் செய்ய முடியாது” என்று அபாய எச்சரிக்கை கொடுத்துள்ளது, இலங்கை எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி.

இலங்கை ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவர்களில் ஒருவரான லக்ஷ்மன் கிரியெல்ல, கொழும்புவில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் இந்தக் கருத்தை தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து பேசுகையில், “பா.ஜ.க., இந்தியாவில் தற்போதுள்ள ஆளும் கட்சியான காங்கிரஸ் போன்ற ‘கொட்டாவி விடும்’ கட்சி அல்ல. அவர்கள் (பா.ஜ.க.) தீவிரவாத இந்துத்துவா அமைப்பு. அந்த கட்சியின் தலைவர்களில் ஒருவரான ஜஸ்வந்த் சிங், ‘இலங்கை அரசு இனியும் தமிழர்களுடன் விளையாடினால், எமது கட்சி அங்கே ஈழத்தை அமைத்து கொடுத்து விடும்’ என டில்லியில் வைத்து கடந்த வியாழக்கிழமை கூறியுள்ளார்.

இந்தக் கட்சியினர் சொல்வதை செய்யக் கூடியவர்கள். விடுதலைப் புலிகளால் 30 ஆண்டுகளாக சாதிக்க முடியாததை, பாரதீய ஜனதா கட்சி சாதித்து, ஈழத்தை அமைத்து கொடுத்துவிடும்.

பா.ஜ.க. ஈழம் உருவாக்கி கொடுக்கப்படும் என்று கூறுவதை நாம் லேசாக எடுத்துக் கொள்ள கூடாது. இந்தியாவின் தேசியக் கட்சி ஒன்று, அது ஆளும் கட்சியோ, எதிர்க் கட்சியோ, முதல் தடவையாக ஈழம் பற்றி பேசியிருப்பது ஒரு அபாய எச்சரிக்கை” என்றார்.

லக்ஷ்மன் கிரியெல்ல, “வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரீஸூக்கு சமீபத்தில் நான் நாடாளுமன்றத்தில் வைத்து கூறியதைதான் மீண்டும் கூறுகிறேன். இலங்கை தற்போது போகும் பாதை, சூடான், மற்றும் கிழக்கு திமோர் சென்ற அதே பாதை. அங்கெல்லாம் அரசுக்கு என்ன நடந்தது?

இப்போது, இந்தியாவின் பா.ஜ.க.வினால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. நாம் உடனடியாக இந்தியா தொடர்பான எமது வெளியுறவு கொள்கையில் மாற்றம் கொண்டுவர வேண்டும்” என்றும் கூறியுள்ளார்.