Mar 18, 2017

நடைபயிற்சி

‘நடைபயிற்சி மேற்கொள்வதால் உடல்ரீதியாக எத்தனையோ நன்மைகள் கிடைப்பதை நாம் அறிவோம். அதேபோல், மனதுக்கும் பல நன்மைகள் உண்டு என்பது தெரியுமா?’ என்கிறார் உளவியல் மருத்துவர் மோகன் வெங்கடாஜலபதி

நடப்பதை ஒரு பயிற்சியாக மட்டும் அல்ல... ஒரு தவமாகவே கருதுகின்றன புத்த மத சாஸ்திரங்கள். வாக்கிங் மெடிட்டேஷன்(Walking meditation) என்று புத்த மத நூல்கள் இதனை குறிப்பிடுகின்றன. எப்படி நடக்க வேண்டும் என்று யோசித்து இருக்கிறீர்களா?

இயற்கையோடு இணைந்து இருத்தலே ஒரு சுகமான அனுபவம். அதிலும் இயற்கையை ஒட்டிய அழகான பகுதிகளில் நடை பழகுவது என்பது நமது படைப்பாற்றலையும் தூண்டக்கூடியது.

பூமியில் நாம் எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும் நிலத்தின் மீது அழுத்தமாக வைக்க வேண்டும். வேறு எதிலும் கவனம் சிதறக்கூடாது. அவசரம் கூடாது. சுற்றி நடக்கும் சம்பவங்கள், அலைபோல் எழும் சிந்தனைகள், நேற்றைய நினைவு எச்சங்கள், இன்றைய எதிர்பார்ப்புகள் இப்படி எதையுமே நினைக்கக் கூடாது.

மண்ணின் மீது படும் நமது பாதங்களை அதன் அழுத்தங்களை மட்டுமே கவனிக்க வேண்டும். ஒன்று, இரண்டு, மூன்று என்று நமது பாதம் அழுந்த அழுந்த மெல்ல எண்ண வேண்டும். ‘நான் தனி ஆள் இல்லை; இந்த பிரபஞ்சத்தில் ஒரு புள்ளி நான்’ என்பதோடு காலம் சென்ற நமது மகான்கள், முன்னோர்கள் இவர்களின் நல்லெண்ணங்கள் புதைந்துக்கிடக்கும் இந்த மண்ணில் மென்மையாக அடி பதிப்பதன் மூலம் அவர்களுடன் ஒரு தொடர்பை ஏற்படுத்தும் ஒரு முயற்சியாகவே இதை கருத வேண்டும்.

ஆழமாக மூச்சை இழுத்து, அவசரம் இல்லாமல் வெளியே விட்டுக்கொண்டே அமைதியாக நடக்க பழக வேண்டும். நமது முழு கவனமும் உள்ளே/வெளியே இழுக்கும் மூச்சில் மட்டுமே இருக்க வேண்டும். மன அழுத்தம் குறைவதற்கும் நம்மை புத்தாக்கம் செய்துகொள்வதற்கும்தான் இந்த நடை தியானம். அதனால், முடிந்தவரைத் யாரையும் அழைத்துச் செல்லக்கூடாது. குறிப்பாக, அன்றாடப் பிரச்னைகள் எதையும் நினைக்கக் கூடாது.

இதை ஒரு சக்தி சேகரிப்பு நிகழ்வாகக் கருதி ஒவ்வொரு நாளும் 20 நிமிடங்களாவது உங்களுக்கான ஏகாந்த தனிமையில், இயற்கை எழில் நிரம்பிய சூழலில் நடந்து பழகுங்கள். கம்பீரமாக நிற்கும் மலைகளைப் பாருங்கள். பூத்துக்குலுங்கும் மலர்களைப் பாருங்கள். ‘கிரீச்... கிரீச்...’ எனும் பெயர் தெரியாத பறவைகளின் ஒலிக்கவிதைகளைக் கேளுங்கள்.

எத்தனைத் தலைமுறைகளை கடந்து வந்து என்னை யார் என்ன செய்துவிட முடியும் என்று சொல்லாமல் சொல்லும் மலைகளின் கம்பீரத்துக்கு முன்பு நாம் எம்மாத்திரம்?.சற்றே அண்ணாந்து அகண்டிருக்கும் நீல வானத்தைப் பாருங்கள். கடந்த ஒரு மாதத்தில் வானத்தை நோக்கி நிதானமாகப் எத்தனை முறை பார்த்திருப்பீர்கள் என்பதையும் யோசியுங்கள்.

நாம் என்னும் அகங்காரம் நம்மை விட்டு அகலும் அற்புதமான தருணங்களை அந்த காலை நேர நடையில் நீங்கள் உணர்வீர்கள். இதை எல்லாம் விடுத்து, கிளம்பும்போதே ஒரு தோழர்கள் படையுடன், அரசியலில் ஆரம்பித்து ரியல் எஸ்டேட் வரை உலகின் எல்லா பிரச்னைகளையும் பேசிக்கொண்டு நடப்பது நல்லதில்லை. அந்த நேரத்திலும் சும்மா இருக்காமல் காதில் வயர்போனை சொருகிக்கொண்டு ‘காச்மூச்?’ என்கிற சப்தங்களை கேட்டு மீண்டும் மனதை டென்ஷனிலேயே வைத்திருக்க வேண்டாம்.

மருத்துவரும் தத்துவ அறிஞருமான ஹிப்போக்ரடீஸ்  சொல்கிறார், ‘நடப்பது என்பது சிறந்த மருந்து.’ கம்ப்யூட்டர் ஜாம்பவானும் ஆப்பிள் நிறுவனத்தின் தலைவருமாக இருந்த ஸ்டீவ் ஜாப்ஸுக்கு ஒரு சுவாரஸ்யமான பழக்கம் உண்டு. முக்கிய கூட்டங்களில் பேசும் முன் அல்லது முக்கிய முடிவுகள் எடுக்கும்போது தானும் நடப்பார்; தன்னுடன் ஆட்களை அழைத்துக்கொண்டு நடந்த வண்ணமே விவாதமும் செய்வார்.

பல படைப்பாளிகளை கேட்டால் அவர்களுக்கு சிறந்த ஐடியாக்கள் பிறந்த நேரம் நடைபயிற்சியின்போது என்று சொல்கிறார்கள். இன்னும் சொல்லப்
போனால் படைப்பாற்றல் மிக்க சிந்தனையாளர்கள் பலரும் நடைபயிற்சி செல்வதை தினசரி வாடிக்கையாகக் கொண்டிருப்பதை நீங்கள் காணலாம்.தத்துவ ஞானியான அரிஸ்டாட்டில் ஏதென்ஸ் நகரில் வாழ்ந்துக்கொண்டிருந்தார்.

நகரத்துக்கு வெளியே ஒரு உடற்பயிற்சி கூடத்தில் சொந்தமாக பள்ளி ஒன்றை அங்கே அவர் நடத்தி வந்தார். ஏராளமான புத்தகங்களை அங்கு வைத்திருந்ததுடன், தன்னைச் சுற்றிலும் ஏராளமான சிஷ்யப் பிள்ளைகளையும் அவர் வைத்திருந்தார். அதில் கல்வி
பயிலும் முறை எப்படித் தெரியுமா? நடந்துகொண்டேதான். நடந்துகொண்டே தத்துவம் கற்பிப்பார். நடந்துகொண்டே மாணவர்கள் கேட்கும் சந்தேகங்களை தீர்ப்பார். இதனை ஆங்கிலத்தில் Peripatetic என்பார்கள்.

எதையும் சிந்திக்காமல் அந்த நேரத்தில், அந்தப் பொழுதில் நம்மை நாம் பரிபூரணமாக ஆட்படுத்திக்கொள்வதைத் தான் ‘Mind fullness’ என்கிறது உளவியல். இப்படி நடைபயிற்சியில் மட்டும் அல்ல... ஒவ்வொரு செயலிலும் மனப்பூர்வமான முழு ஈடுபாட்டை செலுத்தும்போது மனநோய்கள் நம் அருகில் நெருங்க முடியாது. மன அழுத்தம் என்கிற சொல்லுக்கே உங்கள் அகராதியில் இடம் இருக்காது.

நன்றி குங்குமம் டாக்டர் 

Jun 9, 2016

இந்த வாரம் இவர்

“மதுரைனாலே அழகுதான்!”

துரை என்றவுடன் செம்மண் புழுதியும், காய்ந்த பனைமரமும், ‘டாட்டா’ சுமோவில் ஸ்டாண்டிங்கில் நின்றுகொண்டு ‘ஏய்...ஏய்...’ என அரிவாளை சுற்றியபடி கத்திக்கொண்டே போகும் மீசைக்காரர்கள்தான் தமிழ் சினிமா பார்ப்பவர்களுக்கு நினைவில் வரும். ஆனால், உண்மையில் சூப்பர் சிங்கர் அனந்த் சார் அணியும் சுடிதார் போல அவ்வளவு கலர்ஃபுல்லாக இருக்கும் மதுரை. அதை இந்தத் தமிழ் கூறும் நல்லுலகிற்கு தன் கேமரா மூலம் புகைப்படங்களாக வெளிச்சம் போட்டு காட்டிக்கொண்டிருக்கிறார் புகைப்படக் கலைஞர் குணா அமுதன். அவரை போனில் பிடித்துப் பேசினால்...
‘‘நான் குணா அமுதன். வயசு 47. திருமங்கலத்தில் 20 வருடங்களா பிளாஸ்டிக் மற்றும் ரப்பர் தொழிற்சாலை வெச்சு நடத்திட்டு இருக்கேன். 2008-ம் ஆண்டு கடுமையான மின்வெட்டு பிரச்னை ஏற்பட்டுச்சு. அப்போ, நான் பார்த்துட்டு இருந்த தொழிலுக்கு மாற்றாக வேறு ஏதாவது தொழில் செய்யலாம்னு யோசிச்சு, நான் கையில் எடுத்ததுதான் இந்த கேமரா’’ என மதுரைக்காரர்களுக்கே உரிய அசால்டான டோனில் ஆரம்பித்தார் குணா.

‘‘ஏன் போட்டோகிராஃபி தேர்ந்தெடுத்தீங்க?’’
‘‘மற்றவர்களைச் சார்ந்து இருக்காத, அதிக முதலீடு தேவைப்படாத, திறமையையும், திறனையும் வளர்க்கக்கூடிய வேலையா இருக்கணும்னு உறுதியா இருந்தேன். அப்போ மனசுல வந்ததுதான் போட்டோகிராஃபி. சென்னையில் மூன்று மாதங்கள் போட்டோகிராஃபியில் உள்ள அடிப்படை விஷயங்களைப் படிச்சேன். ஆரம்பத்தில், ஒரு ஸ்டுடியோ ஆரம்பிச்சு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ எடுத்து சம்பாதிக்கலாம்ங்கிறது என் ஐடியாவா இருந்துச்சு. ஆனால், அந்தப் பயிற்சியில் வெறும் ஒரு ஆளை நிற்கவெச்சு அவன் முகத்தில் ஃப்ளாஷ் அடிக்கிறது மட்டும் போட்டோகிராஃபி இல்லைனு புரிஞ்சுது. அப்படியே ‘ஸ்ட்ரீட் போட்டோகிராஃபி’யில் இறங்கிட்டேன்.’’

‘‘வீட்ல என்ன சொன்னாங்க?’’
‘‘ஆரம்பத்தில், நடுரோட்டில் குப்பைத்தொட்டி பக்கத்துல நாம படுத்து உருண்டு, புரண்டு போட்டோ எடுப்பதைப் பார்த்து ரொம்பவே ஃபீல் பண்ணாங்க. இப்போ ஃபேஸ்புக், மீடியா, சினிமானு ஓரளவு ஃபேமஸ் ஆகிட்டதால் வீட்ல சந்தோசப்பட ஆரம்பிச்சுட்டாங்க.’’

‘‘சினிமாவில் வாய்ப்பு கிடைச்சது எப்படி?’’
‘‘இயக்குநர் பொன்ராமின் உதவி இயக்குநர் அருண் கே.சந்திரன் மூலமாகத்தான் ‘ரஜினி முருகன்’ பட வாய்ப்பு கிடைச்சது. மதுரைனாலே வெட்டு, குத்து, அருவா, ரத்தம்னு எல்லாம் சிகப்பு கலர்லேயே படம் எடுத்துட்டு இருக்காங்க. நாம கொஞ்சம் கலர்ஃபுல்லா எடுக்கலாம்னுதான் ‘ரஜினி முருகன்’ படம் எடுக்க ஆரம்பிச்சாங்களாம். இதைத்தான் நாங்க சொல்ல வர்றோம்னு காட்ட படத்தின் டைட்டில் கார்டிலேயே கலர்ஃபுல்லான மூடில் இருக்கும் மதுரையின் புகைப்படங்களை வைக்கலாம்னு யோசிச்சுருக்காங்க. அந்த நேரம் சரியாக என்னுடைய புகைப்படங்களை அருண் கே.சந்திரன் பார்க்க, பின்னர் எல்லோருக்கும் பிடித்துப்போக நான் எடுத்த புகைப்படங்கள்தான் அந்த ‘ரஜினிமுருகன்’ டைட்டில் கார்டை அலங்கரிச்சுச்சு.’’

‘‘ஜல்லிக்கட்டு விளையாட்டை வளைச்சு வளைச்சு போட்டோ எடுத்துருக்கீங்கிற வகையில், ஜல்லிக்கட்டிற்கு தடை என்ற செய்தியைக் கேட்டதும் உங்களுக்கு எப்படி இருந்தது?’’
‘‘உண்மையைச் சொல்லணும்னா, கண்ணீர்விட்டு அழுதுட்டேன். ஜல்லிக்கட்டு விளையாட்டை போட்டோ எடுக்கும்போதே எனக்கும் மாடுகள், மாடு வளர்ப்பவர் இடையிலும் விவரிக்க முடியாத ஒரு நட்பு ஏற்பட்டுச்சு. தடைக்குப் பிறகு நாட்டுமாடுகள் அடிமாடாய்ப் போவதைப் பார்க்கும்போது மனசுக்கு ரொம்ப வருத்தமா இருக்கு.’’

‘‘உங்களுக்குக் கிடைத்த சிறந்த அங்கீகாரம்னா எதைச் சொல்வீங்க?’’
‘‘குற்றாலத்தில் ‘குற்றால சாரல் திருவிழா’னு நான் எடுத்த போட்டோக்களை கண்காட்சிக்கு வைத்தேன். அந்தக் கண்காட்சிக்கு மாநில அரசின் விருது கிடைத்தது. அப்புறமா, டைம்ஸ் போட்டோ ஜார்னலில் நான் எடுத்த போட்டோ அட்டைப்படமா வந்திருக்கு.’’

‘‘மதுரையில் உங்களுக்குப் பிடித்த இடம்?’’
‘‘திருமலைநாயக்கர் மஹால்தான். மஹாலுக்கு நடுவில் வெளிச்ச விழுந்து அப்படியே தெறிக்கும். அங்கே சும்மா ஒரு போட்டோ எடுத்தாலே அப்படி ஒரு ஃபீல் கிடைக்கும்.’’

‘‘உங்களின் கனவு, ஆசை?’’

‘‘அப்படியெல்லாம் எதுவுமே கிடையாது!’’
-ப.சூரியராஜ்,  படம் : ந.ராஜமுருகன்

Feb 9, 2016

50 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.22 ஆயிரத்து 450 கோடி கடன்: அம்மா அரசு சாதனை அமைச்சர் செல்லூர் கே.ராஜு தகவல்

வட்டியில்லா அம்மா சிறுவணிகக் கடன் திட்டத்தின் கீழ் சிறுவணிகர்களுக்கு இதுவரை ரூ.68.29 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு கூறினார்.
கூட்டுறவுச் சங்கங்கள் வாயிலாக கடந்த 5 ஆண்டுகளில் 49,61,362 விவசாயிகளுக்கு ரூ.22,449.56 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் 13,521 டன் காய்கறிகள் ரூ.40.18 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
அம்மா மருந்தகங்கள் மற்றும் கூட்டுறவு மருந்தகங்கள் வாயிலாக ரூ.304.31 கோடி மதிப்பிலான மருந்துகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.
முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆணைக்கிணங்க, கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு தலைமையில் இன்று தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய கூட்ட அரங்கில், அனைத்து மண்டல இணைப்பதிவாளர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், முதலமைச்சர் ஜெயலலிதாவினால் ஏழை, எளிய நடுத்தர மக்கள் குறிப்பாக விவசாயிகள் பயனடையும் வகையில் கூட்டுறவுத்துறை வாயிலாக செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்களின் செயல்பாடுகள், அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம், கூட்டுறவுச் சங்கங்கள் நவீனமயமாக்கல் பணிகள் மற்றும் பாதுகாப்பு பணிகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இக்கூட்டத்தில், அமைச்சர் செல்லூர் கே.ராஜு கூறியதாவது:–
முதலமைச்சர் ஜெயலலிதா, ஏழை, எளிய மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு இன்றியமையாத அத்தியாவசியப் பொருள்களை காலத்தே வழங்கும் தலையாய பணியை செவ்வனே மேற்கொண்டு வரும் கூட்டுறவுத்துறையினை மேம்படுத்தும் வகையிலும், சிறப்பான சேவையினை பொதுமக்களுக்கு வழங்குவதற்காகவும் பல்வேறு சீரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு கூட்டுறவுத்துறையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
அண்மையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிறு வணிகர்களின் வாழ்வாதாரத்தை மீட்கும் வகையில் முதலமைச்சர் ஜெயலலிதாவினால் செயல்படுத்தப்பட்டு வரும் வட்டியில்லா அம்மா சிறுவணிகக் கடன் திட்டத்தின் கீழ் அனைத்து சிறுவணிகர்களும் பயன்பெறும் வகையில் 13 நாட்கள் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வியாபாரிகளின் இடத்திற்கே சென்று விண்ணப்பங்கள் வழங்கி, பரிசீலனை செய்து, கடனுதவிகள் வழங்கப்படும் வகையில் 7076 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு 4,47,787 விண்ணப்பங்களை சிறு வணிகர்கள் பெற்றுள்ளனர். இதுவரை 1,36,586 சிறுவணிகர்களுக்கு தலா ரூ.5000 வீதம் வட்டியில்லா கடனாக ரூ.68.29 கோடி சிறுவணிகக் கடன் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள விண்ணப்பங்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு கடனுதவிகளை வழங்க வேண்டும்.
ரூ.22,450 கோடி விவசாய கடன்
முதலமைச்சரால் வேளாண் உற்பத்தியினை பெருக்கிடும் வகையில் 2011ம் ஆண்டிலிருந்து இதுவரை 49,61,362 விவசாயிகளுக்கு ரூ.22,449.56 கோடி பயிர்க்கடன் கூட்டுறவுச் சங்கங்கள் வாயிலாக வரலாறு காணாத அளவிற்கு வழங்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டிற்கு ரூ.5,500 கோடி வட்டியில்லா பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இதுவரை 9,41,145 விவசாயிகளுக்கு ரூ.5,103.63 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. முழு குறியீட்டினையும் உடனடியாக எய்திட வேண்டும்.
முதலமைச்சர் அம்மா, 2011ம் ஆண்டிலிருந்து இதுவரை ரூ.154.62 கோடி நிதியுதவி வழங்கி, நலிவுற்ற கூட்டுறவு வங்கிகளுக்கு புத்துயிரூட்டி அவற்றின் செயல்பாடுகளை மேம்படுத்தியுள்ளார்கள். 43 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களை நகர சங்கங்களாக தரம் உயர்த்தியுள்ளார். தமிழ்நாட்டில் உள்ள 4,571 தொடக்க வேளாண்மைக் கடன் சங்கங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு சரித்திர சாதனை படைக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு வங்கிகள் மற்றும் சங்கங்களின் 5,118 கிளைகளில் உட்சுற்று தொலைக்காட்சி நிறுவும் பணிகள் நடைபெற்று வருகிறது. 652 கூட்டுறவு நிறுவனங்களில் ரூ.34.44 கோடியில் பாதுகாப்பு கதவுடன் கூடிய பாதுகாப்பு அறைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 176 தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்களில் வாடிக்கையாளர்கள் பாதுகாப்பு பெட்டக வசதி பணிகள் நடைபெற்று வருகிறது. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு இணையாக கூட்டுறவு வங்கிகள் கணினிமயத்துடன் நவீனமயமாக்கப்பட்டு, அனைத்து வாடிக்கையாளர்களின் சேவையையே குறிக்கோளாகக்கொண்டு செயலாற்றி வருவதால், பொதுமக்களின் நம்பிக்கையை பெற்றதின் காரணமாக 2011ம் ஆண்டிலிருந்து இதுவரை கூட்டுறவு வங்கிகளின் வைப்புத் தொகை ரூ.26,247.43 கோடியிலிருந்து ரூ.49,184.63 கோடியாக உயர்ந்துள்ளது.
கூட்டுறவு நிறுவனங்கள் நவீயமாக்கப்படுவது மட்டுமன்றி, பணியாற்றும் பணியாளர்களின் நலன் கருதி கூட்டுறவு நியாய விலை கடைகளில் பணியாற்றும் 25,635 பணியாளர்களுக்கு ரூ.51.65 கோடி அளவுக்கு சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளது. மேலும், முதலமைச்சரால் துவக்கி வைக்கப்பட்ட கூட்டுறவுச் சங்கங்களின் பணியாளர்களுக்கான புதிய மருத்துவ காப்பீடுத் திட்டத்தில் 38,023 பேர் இணைத்துள்ளனர். 342 பணியாளர்களின் மருத்துவ செலவினமாக ரூ.1.56 கோடி காப்பீடுத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
கிராமப்புற மக்களும், வருவாய்த்துறை மற்றும் சமுக நலத்துறையின் மூலம் வழங்கப்படும் சான்றிதழ்களை தங்களுக்கு அருகாமையில் உள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் பெற்றுக்கொள்ளும் வகையில் 4,415 சங்கங்களில் பொதுச் சேவை மையங்கள் துவக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இச்சேவை மையங்கள் வாயிலாக இதுவரை 43,95,339 சான்றிதழ்கள் பெற்று வழங்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக சங்கங்களுக்கு 17.19 கோடி நிகர வருமானம் கிடைக்கப்பெற்று உள்ளது.
ரூ.40 கோடி காய்கறி விற்பனை
வெளிச்சந்தையில் காய்கறி விலையினை கட்டுப்படுத்தும் வகையிலும், ஏழை, எளிய, நடுத்தர மக்கள் தரமான காய்கறிகளை குறைந்த விலையில் பெற்று பயன் பெறும் வகையிலும், இடைத்தரகரின்றி விவசாயிகளையும், நுகர்வோரையும் இணைக்கும் வகையில் முதலமைச்சர் அம்மாவின் பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் திட்டத்தின்கீழ், சென்னை மாநகரில் 2 நகரும் பண்ணைப் பசுமை நுகர்வோர் கடை உட்பட 72 பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் காய்கறிகள் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இக்கடைகள் வாயிலாக இதுவரை 13,521 மெ.டன் காய்கறிகள் ரூ.40.18 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
அம்மாவின் தொலைநோக்குத் திட்டமான, அனைத்து தரப்பு மக்களும் 15 சதவிகிதம் வரை தள்ளுபடி விலையில் தரமான மருந்துகளை பெற்று பயனடையும் வகையிலான 106 அம்மா மருந்தகங்கள் மற்றும் 193 கூட்டுறவு மருந்தகங்கள் வாயிலாக இதுவரை ரூ.304.31 கோடி மதிப்பிலான மருந்துகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அம்மா மருந்தகங்களில் குறைந்த விலையில் தரமான மருந்துகள் கிடைப்பதால் மக்களிடையே இத்திட்டம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. எனவே, மக்களின் தேவைக்கேற்ப மருந்துகளை தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

Feb 10, 2015

இலங்கை இறுதி யுத்தம்: இலங்கை இராணுவம் வென்றது எப்படி?…..1,2,3–நிதின் கோகலே –

யுத்தத்தின் கடைசிகட்ட நாட்களில் பிரபாகரன் தளபதி ஜெயத்துடன் நடந்த சந்திப்பு பற்றி கசிந்த ஓர் சுவாரசியமான தகல்..!!

விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை ராணுவத்துக்கும் இடையே நடைபெற்ற இறுதி யுத்தத்தின்போது விடுதலைப் புலிகள் தரப்பில் நடைபெற்ற சம்பவங்கள் பற்றிய தகவல்கள் தற்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வருகின்றன.
2009-ம் ஆண்டு மே மாதம் ஆரம்பத்தில் இருந்து சிறிய பகுதியான முள்ளிவாய்க்காலில் விடுதலைப் புலிகள் இயக்கம் முடங்கிய நிலையில், இலங்கை ராணுவம் அவர்களை முற்றுகையிட்டிருந்தது. மே 2-வது வாரத்தில், அந்த முற்றுகையை உடைத்துக் கொண்டு பிரபாகரனை வெளியே கொண்டுசெல்ல சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த முயற்சிகளில், மே மாதம் 11-ம் தேதி இரவு விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஒரு குழு வெற்றிகரமாக ராணுவ முற்றுகையை உடைத்துக்கொண்டு வெளியே சென்றது. ஆனால், அந்தக் குழுவில் பிரபாகரன் இல்லை.
அந்த வழியில் பிரபாகரனை அழைத்துச் செல்வது சாத்தியமா என்பதை பார்க்க அனுப்பி வைக்கப்பட்ட முன்னோடி குழு அது. சுமார் 30 பேரடிங்கிய அந்தக் குழு முற்றுகையை உடைத்துக்கொண்டு வெளியே சென்றபின், அதில் இருந்த சிலர் மீண்டும் முள்ளிவாய்க்கால் பகுதிக்கு திரும்பி வந்தனர் – அதே பாதையில் பிரபாகரனையும், வேறு சிலரையும் அழைத்துச் செல்வதற்காக.
ஆனால், 11-ம் தேதி இரவு நடந்த இந்த ஊடுருவலை தெரிந்துகொண்ட இலங்கை ராணுவம், அந்த லூப்-ஹோலை சரிசெய்து பாதுகாப்பை பலப்படுத்தி விட்டது. இலங்கை ராணுவத்தின் 59-வது படைப்பிரிவு நிறுத்தப்பட்டு இருந்த இடத்திலேயே இந்த சம்பவம் நடந்தது.
முதல் குழுவில் சென்று திரும்பிய ஆட்கள், மீண்டும் 12-ம் தேதி இரவு பிரபாகரனையும் வேறு சிலரையும் அழைத்துக்கொண்டு 59-வது படைப்பிரிவு முற்றுகையிட்டிருந்த இடத்தை அடைந்தபோது, இவர்களால் தப்பிச் செல்ல முடியவில்லை. சுமார் ஒன்றரை மணி நேர முயற்சியின்பின் மீண்டும் முள்ளிவாய்க்காலில் அமைக்கப்பட்டிருந்த பிரபாகரனின் மறைவிடத்துக்கு திரும்பினர்.
அப்போது அந்தக் குழுவில் சென்றிருந்த புலிகள் அமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர், அதன்பின் ராணுவத்தின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு, சமீபத்தில் விடுவிக்கப்பட்டார். அவருடன் பேசியபோது, இறுதி யுத்தத்தின் இறுதி நாள் ஒன்றில் பிரபாகரனை மீண்டும் அவர் சந்தித்தது பற்றி அறிய முடிந்தது.
‘இறுதி நாள் ஒன்றில்’ என்று நாம் குறிப்பிடுவதன் காரணம், மீண்டும் பிரபாகரனை சந்தித்த தேதியை அவரால் சரியாக ஞாபகப்படுத்தி கூற முடியவில்லை. மிகவும் பதட்டமும் பரபரப்புமாக இருந்த அந்த இறுதி நாட்களில் சூரியன் உதிக்கும்போது அன்று என்ன தேதி என்பது பலருக்கு தெரியாமல் இருந்தது என்றார் அவர்.
அவர் கூறிய தகவல்களில் நடந்த சம்பவங்களை வைத்து பார்த்தால், இவர் மே மாதம் 14-ம் தேதி, அல்லது 15-ம் தேதி பிரபாகரனை சந்தித்து இருக்கலாம்.
எமக்கு தகவல் தெரிவித்தவர், விடுதலைப் புலிகளின் தளபதி ஜெயம் (உயிரிழந்து விட்டார்) தலைமையில் இருந்த குழுவினருடன் இருந்தார். இவர்கள் இருந்த பகுதிக்கு மதியம் 3 மணியளவில் திடீரென நாலைந்து பேருடன் பிரபாகரன் வந்தார்.
மிகவும் சோர்வடைந்த முகத்துடன் வந்த பிரபாகரன், ஜெயத்துடன் சுமார் 5 நிமிடங்கள் பேசினார்.
அப்போது ஜெயம், “நீங்கள் இங்கே நிற்காதீர்கள். இங்கிருந்து போய் விடுங்கள் ராணுவத்தின் ஸ்னைப்பர் அணியினர் உங்கள்மீது குறி வைக்கலாம்” என்று சொன்னார்.
அதன்பின் மேலும் ஓரிரு நிமிடங்கள் அங்கே நின்றிருந்த பிரபாகரன், சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.
அதன்பின், இரவு 7 மணிக்கு பிரபாகரனிடம் இருந்து ஒரு ஆள் வந்தார். ஜெயத்தையும், எமக்கு தற்போது தகவல் தெரிவித்தவரையும் பிரபாகரன் அழைத்துவர சொன்னதாக சொன்னார். இருவரும் சென்றனர்.
முள்ளிவாய்க்கால் பகுதியில் பிரபாகரனுக்காக தற்காலிகமாக ஒரு இருப்பிடம் தயார் செய்யப்பட்டு இருந்தது. அந்த இடத்தில் பாதுகாப்பு பலமாகவே இருந்தது. உள்ளே பிரபாகரன் இருந்த நிலை இவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவருக்கு ஒரு மருத்துவர் செலைன் (Saline) ஏற்றிக்கொண்டு இருந்தார்.
மருத்துவ ரீதியாக சில காம்பிளிகேஷன்கள் இருந்த பிரபாகரனுக்கு இரவு பகல் ஓயாத சிந்தனை காரணமாக லேசாக மயக்கம் ஏற்பட்டதாக அங்கிருந்த ஒருவர் தெரிவித்தார்.
செலைன் மூலம் ஏற்றப்பட்டு கொண்டிருந்த நிலையில், படுத்திருந்தபடியே இவர்களுடன் சுமார் 15 நிமிடங்கள் பேசினார் பிரபாகரன். வெளியே என்ன நடக்கிறது என விசாரித்தார்.
அப்போது ஒருவர் வந்து பிரபாகரனை சந்திக்க ஜவான் (விடுதலைப் புலிகளின் ‘புலிகளின் குரல்’ பெறுப்பாளராக இருந்தவர்) வந்திருப்பதாக சொன்னார். “இப்போது வேண்டாம்” என சைகையாலேயே பதில் கூறினார் பிரபாகரன்.
“அமெரிக்க அதிகாரிகளுடன் நடேசன் (விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர்) தொடர்பில் இருக்கிறார். அமெரிக்கா தலையிடும் போல இருக்கிறது. நடேசனிடம் இருந்து நல்ல தகவலை எதிர்பார்க்கிறேன்” என்றார் பிரபாகரன்.
அதன்பின் ஜெயத்திடம் ஆயுதங்கள் பற்றி விசாரித்தார். கையிருப்பில் அதிகளவு ஆயுதங்கள் இல்லை என தெரிவித்த ஜெயம், இன்னும் சில தினங்களுக்கு மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என்றார்.
இதைக் கேட்டவுடன் பிரபாகரன் ஆச்சரியப்படும் விதமாக சிரித்தார். “கழுதையிடம் ஆயுதங்களுக்கு சொல்லுவோமா?” என சிரிப்புடன் கேட்டார். அவர் ‘கழுதை’ என்று சொன்னது, ஒருவரின் பட்டப்பெயர்.
விடுதலைப் புலிகளின் ஆயுத சப்ளைக்கு ஒருகாலத்தில் பொறுப்பாளராக இருந்த குமரன் பத்மநாதனை (கே.பி.) சில சமயங்களில் ‘கழுதை’ என்று குறிப்பிடுவார் பிரபாகரன். (கழுதை சுமை ஏற்றி வருவதுபோல, ஆயுதங்களை கொண்டு வருவார் என்பதற்காக)
இதைக் கேட்டு மற்றவர்களும் சிரித்தார்கள். ஆனாலும், அங்கே ஒரு கனமான இறுக்கம் நிலவியது. எப்போதும் துடிதுடிப்புடன் காணப்படும் பிரபாகரன், மிகவும் சோர்ந்த நிலையிலேயே காணப்பட்டார். அவரது குரல்கூட மிக பலவீனமான விதத்திலேயே இருந்தது.
இந்த நிலையில் எமக்கு தற்போது தகவல் தெரிவித்தவர் தயங்கியபடி, “இங்குள்ள மக்கள் மத்தியில் சலசலப்பு இருக்கிறது. ராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்குள் செல்ல பலரும் முயற்சிக்கிறார்கள்.
அதை தடுப்பது சரி. ஆனால், தப்பிச் செல்ல முயல்பவர்களுக்கு தண்டனை கொடுக்கிறோம். அது சரியல்ல. மக்கள் எம்மை வெறுக்க தொடங்குவார்கள்” என்றார்.
இவரை தொடர்ந்து பேச விடாதபடி கையால் பிடித்து தடுத்தார் ஜெயம் (அடுத்த பாகத்தில் நிறைவுபெறும்).

25 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கை அரசை, ஆட்டிப் படைத்த பிரபாகரன்; “இலங்கை இறுதி யுத்தம்”: இலங்கை இராணுவம் வென்றது எப்படி? (PART-1)

ltte.piraba-death-001
இலங்கை இறுதி யுத்தம்: இலங்கை இராணுவம் வென்றது எப்படி?…..
பிரபாகரனின் இறுதி நாட்கள் என்.டி.ரி.வி. தொலைக்காட்சியின் பாதுகாப்பு மற்றும் இராணுவ விடயங்கள் தொடர்பான ஆசிரியராகப் பணியாற்றும் நிதின் கோகலே எழுதிய “இலங்கை இறுதி யுத்தம் ஆங்கில நூலின் தமிழாக்கத்தின் ஒரு பகுதி

இறுதி நாள் -19 மே 2009…
இறுக்கமான முகத்துடன் விநாயகமூர்த்தி முரளிதரன் குனிந்து பார்த்தார். உடலைக் கவனித்தார். பெல்ட்டைப் பார்த்தார். அடையாள அட்டையை நோக்கினார். துப்பாக்கியை ஆராய்ந்தார். அனைத்தும் அவரது முன்னாள் தலைவருடையவை.சில கணங்களுக்குப் பின் உலகுக்கு அறிவித்தார். விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இறந்து விட்டார்.

கர்ணல் கருணா என்றழைக்கப்படும் முரளிதரனுக்கு அது ஒரு சோகமான தருணம். ஒரு காலத்தில் பிரபாகரனின் மெய்க்காப்பாளராக இருந்த கருணா, விடுதலைப் புலிகள் அமைப்பின் அடிமட்டத்தில் சேர்ந்து சிறிது சிறிதாக உயர்ந்து அந்த அமைப்பின் மிகவும் சிறந்த தளபதிகளில் ஒருவராக மிகவும் நம்பத்தகுந்தவராக ஆனார். அதே அமைப்பிலிருந்து 2004 இல் விலகினார்.
பின்னர் இலங்கை அரசில் ஓர் அமைச்சராக இருந்த அவர், போர் நிகழ்ந்த வடகிழக்கு இலங்கையில் சிறுமண் திட்டுக்கு விமானத்தில் அழைத்து வரப்பட்டார்; உலகிலேயே மிகவும் அபாயகரமான தீவிரவாதத் தலைவர் என்று கருதப்படும் விடுதலைப் புலிகளின் தலைவர் இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்டார் என்று அரசு அறிவித்தது உண்மை தான் என்பதை உலகுக்குப் பறைசாற்ற..
அடிமட்டத்திலிருந்து ஒரு கெரில்லாப் படையை உருவாக்கி, அதில் வலுவான ஒரு தரைப்படை, திறமையான ஒரு கடற்படை, அப்போது தான் முளைத்துள்ள ஒரு விமானப்படை என அனைத்தையும் கொண்டிருந்தார் பிரபாகரன்.
பத்தாண்டுகளுக்கும் மேலாக இலங்கையின் மூன்றில் ஒரு பகுதியைத் தன் கைக்குள் வைத்திருந்தார். 25 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கை அரசை ஆட்டிப்படைத்து வந்தார். அப்படிப்பட்ட வலுவான ஒரு தலைவருக்கு ஏற்பட்டது மிகச் சாதாரணமான ஒரு முடிவு. ஆனால் இலங்கை இராணுவத்துக்கு அது அவ்வளவு எளிதான ஒரு வெற்றியாக இருக்கவில்லை.
33 மாதங்கள் கடுமையான, தொடர்ச்சியான, தீவிரமான போராட்டத்துக்குப் பிறகே, பிரபாகரனை ஒரு சதுப்புநிலக் காட்டுப் பகுதிக்குள் குறுக்கி கொல்ல முடிந்தது.
பிரபாகரன் கொல்லப்பட்டு இரு நாட்களுக்குப் பின் இந்தப் போரை வழி நடத்திய இலங்கை இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா என்னிடம் பேசினார். “பிரபாகரனும் அவரது நெருங்கிய கூட்டாளிகளும் கடைசி நேரத்தில் இராணுவத்தை ஏமாற்றி, தப்ப முயற்சி செய்து, ஒரு கடுமையான தாக்குதலை நிகழ்த்தினராம்”. அவரது அலுவலகத்தில் நடந்த நேர்முகத்தின் போது பிரபாகரனின் கடைசி சிலமணிகளைப் பற்றி விளக்கிய பொன்சேகா இவ்வாறு கூறினார்.
“18 மே இரவு, 19 காலை, விடுதலைப் புலிகள் மூன்று குழுக்களாகப் பிரிந்து கொண்டனர். நந்திக்கடல் காயல் பகுதியில் எங்களது முதல் பாதுகாப்பு வளையத்தை தாக்கி உடைத்து வெளியேறினர். இந்த மூன்று குழுக்களுக்கும் தலைமை தாங்கியவர்கள் ஜெயம், பொட்டுஅம்மான், சூசை ஆகியோர்.
ஆனால் முதல் வளையத்துக்குப் பின் இரண்டாவது மூன்றாவது வளையங்கள் இருக்கும் என்பதை அவர்கள் கணிக்கத் தவறி விட்டனர்.
பிரபாகரனும் அவரது மெய்க்காப்பாளர்களும் தப்பித்து விட்டதாக நினைத்தனர். ஆனால் உண்மையில் 250 பேர் அடங்கிய புலிகள் எங்களது முதலாம், இரண்டாம் பாதுகாப்பு வளையங்களுக்குள் நன்றாகச் சிக்கிக் கொண்டனர்.
அன்று இரவு நடந்த கடுமையான போருக்குப் பின், கிட்டத்தட்ட அனைத்துத் தலைவர்களுமே கொல்லப்பட்டனர். 19 காலை, பிரபாகரனின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
ஜெனரல் பொன்சேகா நிதானமாக, சுருக்கமாகச் சொன்ன இது அனைத்துமே தொலைக்காட்சி வாசகர்களுக்கானது… இந்தியாவின் 24 மணி நேர செய்தித் தொலைக்காட்சி என்.டி.டி.விக்காக நான் அவரைப் பேட்டி எடுத்துக் கொண்டிருந்தேன். அவரது பேச்சில் 18,19 மே மாதத்தில் நடந்த முழு விவரமும் வெளிவரவில்லை. பின்னர் பலருடன் பேசியதில் அந்த இரு நாள்களில் என்ன நடந்தது என்பதை அறிந்து கொண்டேன்.
பொன்சேகா சொன்னது போல, இறுதிப்போர் நடந்தது மிகக் குறுகிய மண் திட்டில், கிழக்கில் இந்தியப் பெருங்கடலாலும் மேற்கில் நந்திக்கடல் காயலாலும் சூழப்பட்ட பகுதி. கிழக்கில் கடற்கரை. மேற்கில் நீர் நிரம்பி இருக்கும் சதுப்பு நிலக் காடுகள். இடையில் மண் திட்டு.அந்தப் பகுதியில் ஒரு முக்கிய சாலை இருந்தது. வடமேற்கு, தென்கிழக்கு அச்சில் காயல்களை நோக்கிச் சாய்ந்தபடி செல்லும் ஏ- 35 பரந்தன்- முல்லைத்தீவு நெடுஞ்சாலை, காயலை நெருங்குவதற்கு முன் இயற்கைத் தடுப்பரண்கள், மனிதனால் செயற்கையாக உருவாக்கப்பட்ட தடுப்புக்கள் ஆகியவற்றைத் தாண்டித்தான் செல்ல முடியும்.
விடுதலைப் புலிகளின் கடைசி நிலத்துண்டை அணுக இராணுவம் இரு தாழ்ந்த பாலங்கள், ஒரு விரிந்த கடற்கடை, புலிகளால் ஏற்படுத்தப்பட்ட பல மேடுகள், பள்ளங்கள் ஆகியவற்றைத் தாண்டிச் செல்லவேண்டும்.
விடுதலைப் புலிகளின் தலைமை மீதான இந்தக் கடைசி முற்றுகையைச் செயற்படுத்த ஜெனரல் பொன்சேகா மூன்று இராணுவப்படைப்பிரிவுகள், ஒரு சிறப்பு அதிரடிப்படை ஆகியவற்றை இறக்கியிருந்தார்.
53 வது டிவிஷனுக்கு மேஜர் ஜெனரல் கமல் குணரத்னே தலைமை வகித்தார். கர்ணல் ஜி.வி. ரவிப்பிரியா தலைமையிலான டாஸ்க் போர்ஸ் 8 க்கும் அவரே பொறுப்பு. கடந்த 33 மாதங்களாக நான்காம் ஈழப்போரில் பெரும் பங்கு ஆற்றிய பிரிகேடியர் ஷவீந்திர சில்வாவின் 58வது டிவிஷன் இப்போதும் முன்செல்லும் படையாக இருந்தது.
இறுதியில் மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா தலைமையிலான 59 வது டிவிஷன் வட்டுவாகல் தரைப்பாலத்துக்குத் தெற்கே தடுப்பு விய+கம் அமைந்திருந்தது. வடக்கிலிருந்து மற்ற இரு படைப்பிரிவுகளும் தாக்குதலைத் தொடங்கியிருந்தன.
இந்த மாபெரும் படைக்குவியலுக்கு முன், பிரபாகரனும் விடுதலைப் புலிகளின் தலைமையும் முற்றிலுமாகச் சிக்கிக் கொண்டனர்.
பிரபாகரன் தப்பிக்க ஒரே வழி தான் இருந்தது. காயல் வழியாக. இலங்கை இராணுவத்துக்கு அது நன்றாகவே தெரிந்திருந்தது. அதனாலேயே முன்னெச்சரிக்கையாக அங்கும் படைகளை நிறுத்தியிருந்தனர்.
இறுதிப்போர் மே 17 அன்றே தொடங்கி விட்டது. போரில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளின் தகவல்களின்படி மே 17 அன்றே புலிகள் தப்பிக்க முயற்சி எடுத்தனர்.
ஜெயத்தின் தலைமையில் 150 புலிகள் சிறு படகுகள் மூலமும் அன்று காலை 3 மணிக்கு இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தினர். கெப்பிலாறு தடுப்பரணுக்கு அருகில் காயலின் மேற்குக் கரையில் புலிகள் இறங்கினர்.
அங்கே 5 வது விஜயபா இன்பண்ட்ரி றெஜிமென்ட்டும் 19 வது ஸ்ரீலங்கா லைட் இன்பன்ட்ரியும் தயாராக இருந்தன. காயலின் மேற்கு கரையில் மூன்று மணி நேரம் நிகழ்ந்த கடுமையான போரில் 148 புலிகள் கொல்லப்பட்டனர்.
இராணுவத்துக்கும் கடுமையான உயிர்ச்சேதம். ஆனால், புலிகளால் இராணுவத்தில் தடுப்பரணை உடைக்க முடியவில்லை.
இந்தச் சண்டையில் இருந்து காயலின் கரையின் ஒரு பகுதியைக் கைப்பற்றி, அங்கிருந்து முதியங்காட்டுக்குள் தப்பிச் செல்ல பிரபாகரனுக்கு ஒரு வழியை ஏற்படுத்தித் தர புலிகள் முயற்சி செய்கிறார்கள் என்பது இராணுவத்துக்குப் புரிந்து விட்டது.
ஜெனரல் பொன்சேகா என்னிடம் சொன்னார். “விடுதலைப் புலிகள் இந்த வழியைத் தான் முதலில் பின்பற்றுவார்கள் என்று எங்களுக்குத் தெரியும். அங்கே ஒரு பகுதியைத் தக்க வைத்திருந்தார்கள் என்றால் காயல் வழியாகத் தலைவர்கள் அனைவரும் தப்பி, முதியங்காட்டுக்குள் சென்று மறைந்திருப்பார்கள். அவர்களைப் பிடிப்பது இயலாததாகி இருக்கும். கடந்த பல வருடங்களில் அவர்களது செயற்திட்டங்களில் எந்தவித மாற்றமும் இல்லை என்பதால் நாங்கள் அதனை முன்னதாகவே எதிர்பார்த்திருந்தோம்.
போர் முடியும் நிலையில், விடுதலைப் புலிகள் பிணையாக வைத்திருந்த கடைசி சிவிலியன்களும் தப்பித்து அரசு கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்து விட்டனர். அதனால் நன்கு பயிற்சி பெற்றிருந்த புலிகளைத் தாக்குவதில் இராணுவத்துக்கு கட்டுப்பாடுகள் ஏதும் இருக்கவில்லை.
கொழும்பில் இருந்தபடி ஜெனரல் பொன்சேகாவே நேரடியாக நிலைமையைக் கண்காணித்து வந்தார். போர்க்களத்தில் தளபதிகள் பிரபாகரனைப் பிடிக்க நேர்த்தியான திட்டம் ஒன்றை உருவாக்கியிருந்தனர்.
இதற்கு இடையில், விடுதலைப் புலிகள் தோற்று விடுவது உறுதி, பிரபாகரன் பிடிக்கப்படலாம் அல்லது கொல்லப்படலாம் என்று தெரிந்த காரணத்தால் உலக ஊடகங்களைச் சேர்ந்த அனைவரும் கொழும்புக்கு கூட்டம் கூட்டமாக வரத் தொடங்கினர்.
நானும் மே 16 அன்று விமானத்தில் கொழும்பு சென்றடைந்தேன். அன்றோ இந்தியர்கள் அனைவரும் இந்தியப் பொதுத் தேர்தல் முடிவுகளைக் காண்பதற்காக தொலைக்காட்சிப் பெட்டியிலேயே கண் வைத்த வண்ணம் இருந்தனர்.
அடுத்த 24 மணி நேரத்துக்கு பத்திரிகையாளர்கள் நாங்கள் அனைவரும் போர் முனையில் என்ன நடக்கின்றது என்பதை அறிந்து கொள்ள, எங்களுக்குத் தெரிந்த அனைவரிடமும் தொடர்பு வைத்துக் கொண்டு இருக்கை நுனியில் உட்கார்ந்திருந்தோம்.
ஆனால் அரசுத் தரப்பிலிருந்து ஒரே ஒரு செய்தி தான் வந்து கொண்டிருந்தது. “விடுதலைப் புலித் தலைமை முழுவதும் ஒரு சிறுதுண்டு நிலத்தில் மாட்டிக் கொண்டுள்ளனர்” அதற்கு மேல் வேறு எந்தத் தகவலும் கிடையாது…..
(தொடரும்…..) –நிதின் கோகலே –

முதல் போராளிப் படைக்கு, பிரபாகரனின் மகன் சார்லஸ் ஆன்டனி தலைமை; “இலங்கை இறுதி யுத்தம்”: இலங்கை இராணுவம் வென்றது எப்படி? (PART-2)

ltte.piraba-016


மே17 இரவு ஆனதும், விடுதலைப் புலிகளிடமிருந்து கடுமையான தாக்குதலை இராணுவம் எதிர்நோக்கியது. எதிர்பார்த்தது போலவே மே 17 நள்ளிரவுக்குப் பின் புலிகளின் தாக்குதல் ஆரம்பித்தது.
பாதுகாப்பு அமைச்சகத்தின் இணையத்தளம் டிபன்ஸ் எல்கே, 17 ஆம் கெமுனு கண்காணிப்பு றெஜிமெண்டின் தளபதி லெப்டினண்ட் கர்ணல் கீர்த்தி கொட்டாச்சியை மேற்கோள்காட்டி, இந்தத் தாக்குதல் வஞ்சகமான முறையில் நடைபெற்றது என்றது.
கொட்டாச்சியின் தகவலின்படி, சிவிலியின் உடையில் இருந்த சில தீவிரவாதிகள், காயல் கரையைக் காத்துக் கொண்டிருந்த துருப்புக்களை அணுகி, தங்களை உள்ளே அனுமதிக்குமாறு கேட்டுள்ளனர். அப்போது மே 18, அதிகாலை 2.30 மணி.
“எனது படைகள் தான் காயமுள்ளிவாய்க்கால் சிவிலியின் மீட்புப் புள்ளியில் காவல் காத்துக் கொண்டிருந்தன. காயல் கரை வழியாக வந்த சில தீவிரவாதிகள் எங்கள் பாதுகாப்பு வளையத்துக்குச் சற்று முன்னதாக, சிறு தீவுக் குழுமங்களில் ஒளிந்து கொண்டிருந்தனர். ஒரு சிறு குழு மட்டும் எங்கள் அதிகாரிகளிடம் வந்து, அவர்கள் குழுவில் பலர் காயம் அடைந்துள்ளதாகவும் அவர்களை உள்ளே அனுமதிக்குமாறும் கேட்டனர் என்று கர்ணல் கொட்டாச்சி தெரிவித்தார்.
ஆனால், டாஸ்க்போர்ஸ்8 இன் தலைவர் கர்ணல் ரவிப்பிரியாவும் பிரிகேட் கமாண்டர் லெப்டினண்ட் கர்ணல் லலாந்த கமகேவும் கர்ணல் கொட்டாச்சியிடம் ஏற்கனவே விரிவாகப் பேசியிருந்தனர். விடுதலைப் புலிகள், சிவிலியன் வேடத்தில் தாக்குதல் நடத்தக்கூடும் என்பதைச் சொல்லியிருந்தனர்.
“அனைத்துச் சிவிலியன்களையும் ஏற்கனவே காப்பாற்றி விட்டதால், காலை விடிவதற்கு முன் யாரையும் உள்ளே அனுமதிக்க வேண்டாம் என்று நான் கூறிவிட்டேன். காலை 3 மணி ஆனபோது மீட்புப் புள்ளியில் இருந்த அதிகாரி, சிவிலியன் குழு என்று சொல்லிக் கொண்டு வந்தவர்கள் வன்முறையில் இறங்குவதாகவும் பாதுகாப்பு வளையத்தை உடைக்க முற்படுவதாகவும் தெரிவித்தார்.
உடனே நிலைமையைக் கட்டுப்படுத்த, வானை நோக்கி இரு முறை சுடுமாறு அவருக்கு ஆணையிட்டேன். உடனே 200 புலிகள் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டே எங்கள் பகுதியைத் தாக்கத் தொடங்கினர் என்றார் கர்ணல் கொட்டாச்சி.
இறுதி யுத்தம் நிஜமாகவே ஆரம்பித்து விட்டது. 681வது பிரிகேடின் தளபதி லெப்டினண்ட் கர்ணல் லலாந்த கமகே, இந்தச் சண்டையைப் பற்றிக் குறிப்பிடுகையில் சொன்னார்: “தீவிரவாதிகள் எங்களது இரண்டு பதுங்கு குழிகளைக் கைப்பற்றினர். எங்களது பாதுகாப்பு வளையத்தில் 100 மீட்டருக்கு இடைவெளியை ஏற்படுத்தினர்.
ஆனால் முதலாவது தாக்குதலுக்குப் பிறகு, உள்ளே நுழைந்த அனைவரும் எங்களது மெஷின் துப்பாக்கியின் வீச்சுக்குள் வந்தனர். அவர்கள் அந்தக் காயல் கரையிலேயே மடிந்தனர். எங்கள் தரைப்படையும் டாஸ்க் போர்சும் சுமார் 100 புலிகளைக் கொன்றிருப்பர். அதில் சில தலைவர்களும் அடக்கம். அவர்கள் தண்ணீருக்குள்ளிருந்து வெளிவரும் முன்னரேயே கொல்லப்பட்டனர்”.
இதற்கிடையே, காலை விடியும் போது 100 புலிகளைக் கொண்ட மற்றுமொரு குழு வட்டுவாகலுக்கு வடக்கே தடுப்பாக இருந்த 58வது பிரிவைத் தாக்கியது. இந்தப் புலிகளும் கொல்லப்பட்டனர். ஏ- 35 நெடுஞ்சாலையில் கடற்கரைப் பகுதிக்கு நீந்தி வந்த புலிகளில் பெரும்பான்மையானோர் 58வது டிவிஷனால் சுட்டுக் கொல்லப்பட்டனர். சதுப்புநிலக் காடுகளில் ஒழிந்திருந்த புலிகள் சுமார் 100 பேர் டாஸ்க்போர்ஸ் 8 ஆலும் தரைப்படையினராலும் தேடிப் பிடித்துக் கொல்லப்பட்டனர்.
இராணுவத்தின் கையில் சிக்கி இறந்த முதல் போராளிப் படைக்கு பிரபாகரனின் மகன் சார்லஸ் ஆன்டனி தலைமை தாங்கினார். அந்தக் குழுவினர் வந்து இறங்கிய இடத்திலிருந்து 250 மீட்டர் தூரம் கடப்பதற்குள்ளாகவே சுட்டுக் கொல்லப்பட்டனர். சார்லஸ் ஆன்டனியின் குண்டு துளைத்த உடல் உடனடியாகக் கண்டு பிடிக்கப்பட்டு அடையாளம் காட்டப்பட்டது.
மே 18,
இந்தச் செய்தியை நாங்கள் தொலைக்காட்சியில் அறிவித்து, தூரத்தில் கொழும்பில் இருந்தபடி அதன் விளைவுகளை ஆராய்ந்து கொண்டிருந்தோம். அதற்குள்ளாக வதந்திகள், அரை உண்மைகள், பொய்கள் என அனைத்தும் முடிவே இல்லாமல் பரவ ஆரம்பித்தன.

அன்று முழுதும் பிரபாகரனின் இருப்பிடம் பற்றி முற்றிலும் மாறுபட்ட பல்வேறு தகவல்கள் ஊடகங்களில் வெளியாயின. ஒரு தகவல், பிரபாகரன் முதியங்காட்டுக்குள் தப்பிச் சென்று விட்டார் என்றது.
பிரபாகரன், கடற்புலிகளின் தலைவர் சூசை, விடுதலைப் புலிகளின் உளவு அமைப்புத் தலைவர் பொட்டு அம்மான் ஆகியோர் கைப்பற்றப்பட்ட ஒரு அம்புலன்ஸில் ஏறித் தப்பிச் செல்லும் போது சுட்டுக் கொல்லப்பட்டனர் என்றும் அவர்களது உடல்கள் அடையாளம் தெரியாமல் எரிந்து போயின என்றும் இராணுவத்தைச் சேர்ந்த ஒருவரை மேற்கோள் காட்டி மற்றொரு தகவல். இந்தத் தகவல்கள் எவையுமே உண்மை இல்லை என்று பின்னர் தெரிய வந்தது.
ஒரு மூத்த இராணுவ அதிகாரி பின்னர் தெளிவுபடுத்தினார். ஏயார் மொபைல் பிரிகேடின் ஆம்புலன்ஸ் வாகனம் அது. அதனைத் தீவிரவாதிகள் கைப்பற்ற முயன்று தாக்கிய போது அது தீப்பிடித்து எரிந்தது. எரிந்து நாசமான வண்டியின் உள்ளே ஓர் உடல் உள்ளது என்று படைவீரர்கள் தகவல் தெரிவித்தனர். அந்த உடல், பார்க்க பிரபாகரனின் உடலை ஒத்திருந்தது என்றனர். ஆனால் அந்தத் தகவல் தவறானது என்று நிரூபணம் ஆனது.
ஆனால் இந் விளக்கம் வர நிறையத் தாமதம் ஆனது. எனவே 18 மே அன்று ஊடகங்களில் இருந்த நாங்கள் இந்தச் செய்தியைத் திரும்பத் திரும்ப ஒளிபரப்பிக் கொண்டிருந்தோம். இத்தனைக்கும் பாதுகாப்பு அமைச்சகமும், இராணுவமும் இந்தத் தகவலை அதிகாரப+ர்வமாக உறுதி செய்ய மறுத்திருந்தன.
போர்முனையில் சுற்றிவளைக்கும் இராணுவத்திடமிருந்து தப்பிச் செல்ல விடுதலைப் புலிகளின் தலைமை செய்த அனைத்து முயற்சிகளையும் படைகள் தடுத்து விட்டன. நாள் முழுவதும் போர் நடக்கும் பகுதியில் எஞ்சியுள்ள புலிகளைப் பிடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
350க்கும் மேற்பட்ட விடுதலைப் புலிகளின் உடல்கள் கிடைத்தன. ஆனால் ஒவ்வொன்றும் யாருடைய உடல் என்று அடையாளம் காண்பதில் நிறையச் சிரமங்கள் இருந்தன. உளவு நிறுவனத்தைச் சேர்ந்தவவர்கள் அந்த வேலையில் இறங்கினர். தம்மிடம் உள்ள புகைப்படங்களைக் கொண்டு இறந்த ஒவ்வொருவரையும் கவனமாகப் பார்க்கத் தொடங்கினர்.
அன்று மாலைக்குள்ளாக, கொல்லப்பட்டதில் 30 க்கும் மேற்பட்டோர் விடுதலைப் புலி அமைப்பின் மேல் நிலை, இடைநிலைத் தலைவர்கள் என்று இராணுவம் அடையாளம் கண்டு கொண்டது. ஆனால் பிரபாகரன், சூசை, பொட்டு அம்மான் ஆகியோர் எங்குமே காணப்படவில்லை.
எனவே கண்காணிப்பு தொடர்ந்து பலமாகவே இருந்தது. பிரபாகரனும் அவரது கூட்டாளிகளும் அங்கே தான் எங்கேயோ பதுங்கியுள்ளனர் என்பதை நன்கு உணர்ந்திருந்த படைத்தளபதிகள் ஒருதுளி கூடக் கவனம் சிதறிவிடக் கூடாது. துருப்புக்கள் கண்காணிப்பை தளர்த்திவிடக் கூடாது என்பதில் முனைப்பாக இருந்தனர். அடுத்த 12 மணி நேரம், மிகவும் முக்கியமானவை.
இலங்கையைப் பொறுத்தமட்டில் 19 மே 2009 மிக முக்கியமான நாளாக இருந்தது. காலை 9.30 மணிக்கு குடியரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச நாடாளுமன்றத்தில் தன் உரையைத் தொடங்கினார். தமிழில் பேச ஆரம்பித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
ஆனால் ராஜபக்சவும் பிரபாகரன் பற்றி ஒன்றுமே சொல்லவில்லை. அதனால் இராணுவம் போரை முடித்து விட்டதா? என்ற கேள்விக்குப் பதில் ஏதும் கிடைக்கவில்லை.
ஆனால் யாருக்குமே தெரியாமல் அன்று அதிகாலையிலேயே 25 ஆண்டுகாலப் போர் அதன் உச்சக்கட்டத்தை அடைந்திருந்தது. ஆள்நடமாட்டம் இல்லாத ஒரு சதுப்புநிலக் காட்டில் கடும் போர் நிகழ்ந்திருந்தது…
(தொடரும்…..) –நிதின் கோகலே –

தன் அழிவுக்கான வித்தை, பிரபாகரன் தானே விதைத்தது; “இலங்கை இறுதி யுத்தம்”: இலங்கை இராணுவம் வென்றது எப்படி? (PART-3)

ltte.piraba-00818 மே இரவு முழுவதும், 19 மே அதிகாலையிலும் மேஜர் ஜெனரல் கமல் குணரத்னே, கர்ணல் ரவிப்பிரியா, லெப்டினண்ட் கர்ணல் லலாந்த கமகே ஆகியோர் கரயமுள்ளிவாய்க்கால் தரைப் பாலத்தின் மீது எப்படி இறுதித் தாக்குதலைச் செய்வது என்று திட்டமிட்டபடி இருந்தனர்.
அதிரடிப்படையினர் அதற்கு முதல் நாளே பெரும் பகுதி சதுப்பு நிலத்தை முழுவதுமாகச் சோதனை செய்திருந்தனர். அன்று 8.30 மணிக்கு மிச்சம் உள்ள சதுப்பு நிலங்களை டாஸ்க்போர்ஸ் 8ம் 4ம் விஜயபா இன்பண்ட்ரி றெஜிமெண்டும் சோதனை செய்யத் தொடங்கினர்.
லெப்டினண்ட் கர்ணல் லலாந்த கமகேயுடன் 4 வது விஜயபாவின் தளபதி லெப்டினண்ட் கர்ணல் ரோஹித அலுவிஹாரேயும் நேரடியாகப் படைகளுக்குத் தலைமை தாங்கி முன்னே சென்றனர். 8 வீரர்கள் கொண்ட இரு குழுக்கள், 4 வீரர்கள் கொண்ட ஒரு குழு என மூன்று குழுக்கள் சதுப்பு நிலத்தில் நீரில் அமிழ்ந்தபடி தேடுதலைத் தொடங்கின.
சார்ஜண்ட் எஸ்.பி.விஜேசிங்க தலைமையிலான முதல் குழு சதுப்பு நிலத்தில் நுழைந்ததும் அவர்களை நோக்கி துப்பாக்கிக் குண்டுகள் எகிற ஆரம்பித்தன. நெஞ்சளவு நீரில், முள் புதர்களுக்குப் பின் வீரர்கள் பதுங்க வேண்டியிருந்தது.
ஒரு மணி நேரம் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு, விஜேசிங்கயின் படை சுமார் 50 மீட்டர் தூரம் முன்னேறியது. அங்கே ஐந்து உடல்கள் கிடந்தன. இறந்தவர்கள் உடல்களில் பிஸ்டல்களும் ரிவால்வர் துப்பாக்கிகளும் கிடந்தன.
விஜேசிங்கவுக்கு உடனடியாகப் புரிந்து விட்டது. அவர்கள் மிக முக்கியமான தலைவர்களுக்கு அருகில் இருக்கின்றார்கள். ஏனெனில் விடுதலைப் புலிகளின் உயர்மட்டத் தலைவர்களினக் மெய்க்காப்பாளர்கள் மட்டுமே பிஸ்டல்களை வைத்திருக்கலாம்.
சார்ஜண்ட் உடனே தன் பிரிகேட் தலைவருக்கும் கமாண்டிங் அதிகாரிக்கும் தகவல் அனுப்பினார். சில நிமிடங்களுக்குள்ளாக இறந்த ஒருவரது உடல் வினோதனுடையது என்று கண்டு பிடிக்கப்பட்டது.
பிரபாகரனின் உள்வட்டப் பாதுகாப்பு அணியின் மூத்த மெய்க்காப்பாளர்களிர் வினோதன் ஒருவர். “உடனேயே இது முக்கியமான கண்டுபிடிப்பு என்று எங்களுக்குத் தெரிந்துவிட்டது” என்று லலாந்த கமகே பின்னர் தெரிவித்தார்.
2009-06-04-தங்கள் இறுதி இலக்குக்கு மிக மிக அருகில் வந்து விட்டோம் என்று படைகளுக்குப் புரிந்து போனது. மேஜர் ஜெனரல் கமல் குணரத்னே தன் அணியின் ஒவ்வொரு நகர்வையும் மிகவும் நெருக்கமாகப் பார்த்து வந்தார்.
அவர் உடனேயே சார்ஜண்ட் விஜேசிங்கவின் ஆட்களைத் தடுப்பு விய+கத்தில் நிற்கச் சொன்னார். தப்பிச் செல்லும் அனைத்து வழிகளையும் அடைக்குமாறு கூறினார்.
8 பேர் அடங்கிய தரைப்படைக் குழு ஒன்றும் நால்வர் அடங்கிய டாஸ்க் போர்சும் விஜேசிங்கவின் குழுவுக்குப் பக்க பலமாக உடனடியாக அனுப்பப்பட்டன. இந்த இரண்டாவது குழுவுக்கு சார்ஜண்ட் டி.எம்.முத்துபண்டா தலைமை தாங்கினார்.
இந்த அணியினர் முன்னேறும்போது மீண்டும் துப்பாக்கிச் சூடு ஆரம்பமானது. கடுமையான துப்பாக்கிச் சண்டை நிகழ்ந்தது. ஒரு மணி நேரத்துக்குப் பிறகு சதுப்பு நிலக்காட்டில் அமைதி. இரு அணிகளும் மிகவும் மெதுவாகப் புதர்களுக்கு இடையே முன்னேறினர். 18 இறந்த உடல்கள் கிடைத்தன.
அதில் வேலுப்பிள்ளை பிரபாகரனும் ஒருவர். இலங்கை அரசை 30 ஆண்டுகளாகத் துன்புறுத்தி வந்தவர். அப்போது காலை 8.30 மணி.19 மே 2009.
உடனே இராணுவத் தளபதிக்குத் தகவல் பறந்தது. ஆனால் உலகுக்குத் தகவலை அறிவிப்பதற்கு முன் ஜெனரல் பொன்சேகா இருமுறை உறுதி செய்து கொள்ள விரும்பினார்.
பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவுடனான ஆலோசனைக்குப் பிறகு விநாயகமூர்த்தி முரளிதரன் என்னும் கர்ணல் கருணாவை அழைத்து பிரபாகரனது உடலை அடையாளம் காட்டுமாறு கேட்டுக் கொண்டனர்.
அத்துடன் சில நாட்களுக்கு முன் இலங்கை அரசிடம் தஞ்சம் புகுந்திருந்த விடுதலைப் புலிகளின் ஊடகத் தொடர்பாளர் தயா மாஸ்டரையும் போர் முனைக்கு அழைத்த வந்தனர்.
இருவருமே, நந்திக்கடல் காயலில் வீழ்ந்து கிடந்த உடல் பிரபாகரனுடையதே என்று உறுதி செய்தனர். உலகின் மிகப் பயங்கரமான தீவிரவாத அமைப்பைத் தோற்றுவித்த பிரபாகரனின் கதை முடிந்து விட்டது. விடுதலைப் புலிகளின் இராணுவத் தோல்வி முழுதானது.
அப்போது தான் நாடாளுமன்றத்தில் தன் பேச்சை முடித்திருந்த குடியரசுத் தலைவருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஒரு மணி நேரத்துக்குள் இராணுவ உடையில் பிரபாகரனின் உடல் உலகின் அனைத்துத் தொலைக்காட்சி சானல்களிலும் ஒளிபரப்பாக ஆரம்பித்தது.
யாராலும் இதனை நம்பமுடியவில்லை. விடை தெரியாத பல கேள்விகள் தான் எஞ்சியிருந்தன.
எத்தனையோ புதுமையான தீவிரவாத வழிமுறைகளைப் புகுத்திய ஒரு மனிதர், எப்படி ஒரு சாதாரண சாவைச் சந்தித்திருக்க முடியும்?
தப்பிக்க அவரிடம் வழியே இருக்கவில்லையா?
அவர் ஏன் பிற விடுதலைப் புலி வீரர்களைப் போல சயனைட்டைச் சாப்பிட்டு உயிர் துறக்கவில்லை?
எவ்வளவோ இன்னல்கள் வந்த போதும் ஆச்சரியமூட்டும் வகையில் எதிர்த்தாக்குதல்களைப் புரிந்த ஒருவர், இம்முறை ஏன் அப்படி ஏதும் செய்து நிலைமையை மாற்றவில்லை?
அவரது நெருங்கிய கூட்டாளிகளால் அல்லது குடும்பத்தினரால் மட்டுமே இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியும். ஆனால் அவர்கள் அனைவரும் இறந்திருந்தனர்.
பிரபாகரன் இறந்து பல நாள்கள் ஆன பிறகும் வதந்திகள் பரவிய வண்ணம் இருந்தன. எப்படி பிரபாகரனையும் அவரது குடும்பத்தினரையும் இராணுவம் உயிருடன் பிடித்து, அவர்களைத் துன்புறுத்தி ஒவ்வொருவராக கொலை செய்தது என்றது ஒரு வதந்தி.
மற்றொரு வதந்தியில் தங்களை இராணுவம் சுற்றி வளைத்து விட்டது என்பதை அறிந்த பிரபாகரன், தன் மனைவி மதிவதனி, மகள் துவாரகா(23), இளைய மகன் பாலச்சந்திரன் (11) ஆகியோரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டு, தன்னைத் தானே சுட்டுக் கொன்றதாகச் சொன்னது.
ஆனால் இந்த வதந்திகள் எதையுமே உறுதி செய்ய முடியவில்லை. அதேநேரம் இலங்கை அரசும் மதிவதனி, துவாரகா, பாலச்சந்திரன் ஆகியோர் பற்றி அமைதி காத்தது. விளைவாக வதந்திகள் பரவுவதை தடுக்க வழியில்லாமல் இருந்தது.
பிரபாகரனின் இறப்புக்கு அடுத்த வாரம், புலி ஆதரவு இணையத்தளங்களும் தமிழ் இதழ்களும் செய்தித்தாள்களும் பிரபாகரன் உயிருடன் இருப்பதாகவும் இராணுவம் காட்டிய உடல் பிரபாகரனைப் போன்ற வேறு ஒருவரது உடல் என்றும் எழுதின.
ஆனால் இலங்கை அரசைப் பொறுத்தமட்டில் இராணுவத்தால் பிரபாகரன் கொல்லப்பட்டது உறுதியே. ஒரு மாதம் கழித்து டி.என்.ஏ. சோதனை மூலம் நந்திக்கடல் காயலில் கண்டெடுக்கப்பட்ட உடல் பிரபாகரனுடையதே என்று உறுதி செய்யப்பட்டது.
பிரபாகரனின் அழிவுக்கு காரணம் என்ன?…
விடுதலைப் புலிகளின் அழிவுக்குப் பல காரணங்களைச் சொல்லலாம். ஆனால் “கர்ணல் கருணா, பிரபாகரனின் உடலை அடையாளம் காட்டிய மறுநாள் என்னிடம் சொன்ன ஒரு வாக்கியம், பிரபாகரனின் சுய அழிவைத் தெளிவாக விளக்குகின்றது.
தன் முன்னாள் தலைவரின் கோரமான சாவுக்காகத் தான் வருந்துவதாக என்னிடம் ஒப்புக் கொண்ட கருணா சொன்னார். “ பிரபாகரன் அமைதிக்கான மனிதர் கிடையாது. அவருக்கு அழிக்க மட்டுமே தெரியும். ஆக்க அல்ல”
இந்த உலகுக்கு மனித வெடிகுண்டுகளை அறிமுகப்படுத்திய ஒருவரைப் பற்றிய மிகச் சரியான கணிப்பு இது. பிரதமர்களையும் குடியரசுத் தலைவர்களையும் கொல்வதற்கு ஆணையிட்டவர் பிரபாகரன்.
ஆயிரக்கணக்கான இளம் ஆண்களையும் பெண்களையும் கவர்ந்து, தமிழ் ஈழத்துக்காகத் தம் உயிரையும் கொடுக்குமாறு தூண்டியவர் பிரபாகரன். ஆனால், எப்போது நிறுத்திக் கொள்வது என்று பிரபாகரனுக்குத் தெரிந்திருக்கவில்லை.
பல வருடங்களாகத் தொடர்ந்து பெற்ற வெற்றிகள், விடுதலைப் புலிகளின் தலைவருக்குத் தன் திறமை மீது அதீத தன்னம்பிக்கையையும் சுயதிருப்தியையும் வளர்த்து விட்டது. அதனால் மாறும் நிலைமைகளை அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஒரு பயங்கரவாதியாகவே வாழ்ந்து ஒரு பயங்கரவாதியாகவே மறைந்தார். ஒரு அரசியல்தலைவராக அவர் முன்னேறவே இல்லை.
தன் அழிவுக்கான வித்தை பிரபாகரன் தானே விதைத்தது, 2008 க்குப் பிறகான காலகட்டத்தில் தான் என்கிறார் கருணா. நார்வே முன் வைத்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்ட பிரபாகரன் அதை முன்னெடுத்துச் செல்ல முயற்சிக்கவே இல்லை.
என்னுரை..
இந்தோரிலிருந்து டெல்லிக்கு விமானத்தில் வந்து கொண்டிருக்கும் போது தான் இந்தப் புத்தகத்தை எழுதும் எண்ணம் எனக்குத் தோன்றியது. உத்தராஞ்சல் மாநிலத்தின் மோ நகரில் உள்ள புகழ்வாய்ந்த இராணுவப்படைக் கல்லூரியில் “ இராணுவத்துக்கும், ஊடகங்களுக்கும் இடையேயான உறவு” என்ற தலைப்பில் பேசிவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தேன்.
அந்தப் பேச்சின் போது, சமீபத்தில் இலங்கையில் நடந்து முடிந்த போரைப் பற்றி என்னிடம் இந்திய இராணுவத்தினர் ஏகப்பட்ட கேள்விகளைக் கேட்டிருந்தனர்.
நான் இலங்கைக்குச் சென்று அங்கு நடந்த போரை , என்.டி.டி.வி. தொலைக்காட்சிக்காகப் பின்பற்றி செய்திகளை அனுப்பிக் கொண்டிருந்தேன். போர் முடிந்த காரணத்தால் அப்போது தான் இந்தியா திரும்பி வந்திருந்தேன்.
என் அனுபவங்களை இந்திய இராணுவ வீரர்களிடம் பகிர்ந்து கொண்ட போது தான் இந்தப் போரைப் பற்றிய பல விஷயங்கள் வெளி உலகுக்குச் சற்றும் தெரிந்திருக்கவில்லை என்பதைப் புரிந்து கொண்டேன்.
இலங்கை இராணுவத்தின் வெற்றிக்கான சூத்திரம் என்ன? என்று பலரும் கேட்டனர். இன்னும் பலர், விடுதலைப் புலிகள் தவறு செய்த இடம் எது? என்று தெரிந்து கொள்ள விரும்பினர்.
எனவே, உலகின் மிகக் கொடூரமான ஒரு தீவிரவாதக் குழுவை எப்படி இலங்கை இராணுவம் ஒழித்துக் கட்டியது என்ற கதை எழுதப்பட்டே ஆகவேண்டும் என்று எனக்குத் தோன்றியது.

–நிதின் கோகலே –