Jul 2, 2014

நலம் 360’ - 3



மருத்துவர் கு.சிவராமன்.

முடி பற்றிய புரிதலும் வரலாறும் மிக மிக நீட்சியானது. முடியைப் பராமரிக்க, அலங்கரிக்க, அதை வைத்து அடையாளப்படுத்திக்கொள்ள மனித இனம் காலம்தொட்டு எடுத்துக்கொண்ட முயற்சிகளும், அதற்கான பதிவுகளும் வியப்பையும் விஞ்ஞானத்தையும் உள்ளடக்கியவை.

'ஆய்மலர் வேய்ந்த இரும்பல் கூந்தல் இருள்மறை ஒளித்தே’ என, காதலோடு நெருங்கிய கணவனைக் காண வெட்கி, ஆம்பல் மலர் கொய்த தன் கூந்தலை விரித்து அதன் கருமைக்குள் புதைந்த கவித்துவம் முதல், 'அரிவை கூந்தலின் நறியவும் உளவோ...’ என ஆண்டவரும் அரசாங்கக் கவியும் அடித்துக்கொண்டது வரை சங்க இலக்கியத்தில் கூந்தல் குறித்த செய்திகள் ஏராளம். ஆணும் பெண்ணும் பன்னெடுங்காலமாகக் கூந்தலை ஆற்றலின் வடிவமாக, ஆண்மையின் அடையாளமாக, பெண்மையின் அழகியலாக, மனச்செம்மையின் சின்னமாக... எனப் பல வடிவில் வைத்திருந்தனர். சமணர்கள், துறவின் அங்கமாக மழித்ததும், சமயம் கிடைத்தபோதெல்லாம் சைவம் அதைப் பழித்ததும் வரலாறு சொல்லும் முடி குறித்த செய்திகள்.

தன் அழகிய கூந்தலை, மிகுந்த மனஉளைச்சலில் இருக்கும் பெண்கள் கத்தரிக்கோலால் வெட்டிக்கொள்ளும் செய்தி, இன்றைக்கு உளவியல் நோயான Paranoid Diseases-ல் விவரிக்கப்படுவதுபோல, தமிழின் பழம் இலக்கியங்களில் உளப் பிறழ்வு கிரியை நோய்களிலும் சொல்லப்பட்டுள்ளன. கவிதையாக சங்கம் பேசிய இந்த முடி விஷயம், இன்று இந்தியச் சந்தையில் 100 பில்லியன் ரூபாய் வணிகம் என நீல்சன் கணக்கீடு சொல்கிறது.

'கோவிந்தா... கோவிந்தா...’ என திருப்பதியில் நாம் கொடுக்கும் முடி, நம்மிடம் மழித்த பிறகு fumigate (கிருமி களை முழுமையாக நீக்க, பூச்சிக்கொல்லி மருந்தடித்து 'ட்ரீட்’ செய்யும் முறை) செய்யப்பட்டு, பல தரப் பிரிவுகளாகப் பிரிக்கப் பட்டு, கொஞ்சம் கெரட்டின் சத்து எடுக்கவும், 'தாத்தா’ வயதில் 'மாமா’ தோற்றம் காட்ட 'விக்’ செய்யவும் விற்கப்படுகிறதாம். எவ்வளவுக்குத் தெரியுமா? வருடத்துக்கு 200 கோடி ரூபாய் மதிப்புக்கு!

20 வயது வரை, 'எண்ணெயா? என் தலையைப் பார்த்தா, உனக்குத் தாளிக்கிற பாத்திரம் மாதிரி தெரியுதா?’ என்றெல்லாம் கேட்டுவிட்டு, 'அங்கிள்... நீங்க எங்கே வேலை பார்க்கிறீங்க?’ எனப் பக்கத்து வீட்டுச் சின்னப் பெண் கேட்டதும் பதறி, 'அங்கிளா... நானா?’ என ஓடிப்போய் கண்ணாடியைப் பார்க்கையில், முன் மண்டையின் ஊடாக 'கூகுள் எர்த்’ தெரியும். உடனே, 'மச்சான் டேய்... முடி கொட்டுதுபோல. யாரைப் பார்க்கலாம்?’ என்ற முதல் கேள்வி பிறக்கும்.

அப்படி விசாரிக்கும் இளைஞர் கூட்டம் சிட்டி, பட்டி வித்தியாசம் இல்லாமல் பல்கிப் பெருகுவது தெரிந்ததும், 'பிசிபிசுப்பு இல்லாத மிகவும் லேசான எண்ணெய், நறுமண எண்ணெய், நெல்லிக்காய் முதலிய மூலிகை சேர்ந்த தைலம், வைட்டமின், புரதம் எல்லாம் சேர்ந்த மருத்துவ எண்ணெய், குளிர்ப்பூட்டி எண்ணெய்...’ என, இன்று சந்தையில் பல கம்பெனிகள், இந்த முடி பிரச்னைக்கு மருந்து தருவதாக ஏராளமான எண்ணெய் களுடன் திரிகின்றன. 'சாட்சாத் சந்திர மண்டலத்தில் இருந்து எடுத்த எண்ணெயில் காய்ச்சியது என்றும், வெள்ளை கோட் அணிந்த டாக்டர் தோற்ற அழகி, 'இந்த உலகின் முதல் தர சர்ட்டிஃபிகேட் பெற்றது எங்கள் எண்ணெய்’ என்றும் அல்வா கிண்டுகிறார்கள். கூடவே, 'இது மொட்டை மண்டையில்/வழுக்கையில் முடி வளரவைக்கும்’ என்றெல்லாம் சொல்லி, சாட்சிக்கு கிராஃபிக்ஸ், அனிமேஷன் எல்லாம் செய்து, 'அப்போ அப்படி... இப்போ இப்படியாக்கும்’ என, கூந்தல் வளர்ந்ததைக் காண்பித்து நடக்கும் வணிகம் கோடிகளில் கொடிகட்டிப் பறக்கிறது.

Androgenetic alopecia எனும் வழுக்கைதான், இன்றைய இளைஞர்களுக்கும் பெண்களுக்குமான முக்கிய முடி பிரச்னை என நவீன மருத்துவம் கூறுகிறது. AR எனும் மரபணுவின் காரணமாகத்தான் இந்த வழுக்கை வருகிறது. பொதுவாக, தலையின் ஒரு சதுர செ.மீட்டரில் புதிதாக முளைக்கும் முடி, நீளமான வளர்ந்த முடி, வளர்ந்து வாழ்ந்து ஓய்வில் இருக்கும் முடி... எனப் பலதரப்பட்ட முடிகள் இருக்கும். அந்தக் கூட்டத்தில் வயதாக வயதாக புது முடி பிறக்காமல் இருப்பதுதான் வழுக்கைக்கான காரணம்.

டைஹைட்ரோ டெஸ்டோஸ்டீரோன் எனும் ஆண்ட்ரோ ஜனின் காரணமாக இது அதிகரிப்பதாகவும் கண்டறிந் துள்ளார்கள். தமிழர் மருத்துவமான சித்த மருத்துவமோ பித்தம் உடலில் அதிகரிப்பதும், உடற்சூடு பெருகுவதை யுமே முடி கொட்டுவதற்கான முக்கியக் காரணங்கள் எனச் சொல்கிறது. இதில் முக்கியமான விஷயம், ஹிப்போகிரேட்டஸ் பேரன்மார் சொல்லும் நவீன மருத்துவ டைஹைட்ரோ டெஸ்டோஸ்டீரோனும், புலிப்பாணி பேரன்மார் சொல்லும் சித்த மருத்துவப் பித்து ஆதிக்கமும் உற்றுப்பார்த்தால் ஒன்றாகப் புரிவது வியப்பு மட்டுமல்ல; பாரம்பரிய அனுபவத்தின் அறிவியல் செறிவும்கூட!

கூந்தல் ஆரோக்கியமாக இருக்க, குழந்தை முதலே கரிசனம் வேண்டும். உணவு அக்கறை, முடி பராமரிப்பு, கூடவே நன்மை மட்டுமே விளைவிக்கும் வாழ்வியல்... இவைதான் அடர்த்தியான முடிக்கு அடிப்படை. அதோடு அப்பாவுக்கு 'அனுபம்கெர்’ நெற்றி இருக்கும்போது, பையனுக்கு 40 வயதில் 'விராட் கோஹ்லி’ கூந்தல் வராதுதான். முடி கொட்டுவதால் மன உளைச்சலுக்கு உள்ளாகி, எந்த நேரமும் அதைப் பற்றியே சிந்தித்து, கூகுளில் துழாவி, எல்லா மருத்துவர் கிளினிக்கிலும் கர்ச்சீஃப் போட்டு வைத்து, வாழ்வைத் தொலைக்கும் இளைஞர் கூட்டமும் இன்று ஏராளம். 'சார்... போன 15 நாள்ல எனக்குக் கொட்டுன முடியைப் பார்க்கிறீங்களா?’ என ஒரு கைப்பையில், தினமும் படுக்கையில், பாத்ரூமில், சீப்பில் சேகரமான முடிகளை ஒன்றுவிடாமல் சேகரித்து எடுத்து வந்த அந்த இன்ஜினீயரிங் கல்லூரி மாணவர் எனக்கு திகில் ஏற்படுத்தினார். 'சுவாரஸ்யமாப் படிச்சிட்டு இருக்கும்போது, என்னை அறியாம முடியை விரல்ல சுத்தி 'பச்சக்’னு பிடுங்கிடுறேன்’ என, தலைப்புண்ணோடு முடி கொட்டி வந்த பெண்ணையும் பார்த்துப் பயந்திருக்கிறேன்.

'தலைக்குக் குளிச்சிட்டு காஞ்சதும் தேங்காய் எண்ணெய் கொஞ்சமாவது தேய்ச்சுக்கணும்’ என்பது மட்டும்தான் நம்மவர்கள் கடைப்பிடிக்கும் பல ஆண்டு பழக்கம். ஆனால் இன்றைக்கு, பல குளியல் அறைகளை எட்டிப் பார்த்தால், ஒரு மருந்துக்கடை அலமாரி போலவே காட்சியளித்து பயம் தருகிறது. பழைய நம்பியார் படங்களில் கண்ணாடிக்குப் பின் உள்ள அலமாரியில் தங்கக்கட்டிகள் இருப்பதுபோல, குளியலறை சவரக் கண்ணாடிக்குப் பின் பல கெமிக்கல் சாமான்கள். 'குளிப்பதற்கு முன் இந்த ட்ரீட்மென்ட் ஆயிலை கொஞ்சம் தேய்க்கணும். அப்புறம் இந்த ஷாம்பு, அதுக்குப் பின்னாடி இந்தக் கண்டிஷனர், அதன் பின்னர் உலர்த்திவிட்டு இதில் சில சொட்டுகள்... அதோடு முடி கலையாமல் இருக்க இந்த கிரீம், மினுமினுப்பாக இருக்க இந்தத் தெளிப்பான்’ என, ஏழெட்டுச் சங்கதிகளை சின்னதாக ஒரு யாகம் நடத்துவதுபோல தலையில் நடத்தும் இளைஞர்களுக்கும், ஆன்ட்டி-அங்கிள் பருவத்தினருக்கும், சோடியம் லாரல் சல்பேட், மீத்தைல் ஐசோ தையோசிலினைன் முதலான பல விஷமிகள் அலர்ஜி முதல் கேன்சர் வரை வரவைப்பன என்று தெரியுமா?

சரி, இதற்கெல்லாம் என்ன செய்யலாம்?

சின்ன வயசு முதலே சாப்பாட்டில் முருங்கைக் கீரை, பொன்னாங்கண்ணி கீரை, சிறுகீரை சேர்த்துச் சாப்பிட வேண்டும். கம்பஞ்சோறு, நெல்லிக்காய், கறிவேப்பிலை துவையல்... போன்றவை வாரம் 2-3 நாட்கள் அவசியம். மாதுளை ஜூஸ், காய்ந்த திராட்சை, உலர் அத்தி சாப்பிடுவது மிக நல்லது. வாரம் ஒரு நாளேனும் தலைக்கு நல்லெண்ணெய்த் தேய்த்துக் குளிப்பது அவசியம். தினமும் தலைக்குக் குளிப்பது முடி கொட்டும் என்பது, புளியமரத்தடியில் படுத்தால் பேய் பிடிக்கும் என்பது மாதிரியான மூடநம்பிக்கை. தலைக்குக் குளித்தால் முடி வளர்க்கும். சிஸ்டின் லைசின், அர்ஜினைன், மித்தோனைனின் போன்ற அமினோ அமிலங்களின் குறைவும்கூட முடி கொட்டுவதற்கான காரணங்கள். குழந்தைப் பருவம் முதல் வீட்டில் அடிக்கடி சுண்டல், நவதானியச் சத்துமாவுக் கஞ்சி, சிறுதானிய உணவு, பீன்ஸ், அவரை முதலான காய்கறிகள் சாப்பிடுவது, முடி கொட்டும் குறைபாடு நிகழாது தடுக்கும். இளம் வயதில் உணவின் மீதான அக்கறை, பின்னாளில் இளநரை இல்லாமல் முடியைக் காக்கும்!

திருச்செங்கோடு அருகில் 2,200 அடி தோண்டி தண்ணீர் எடுத்து, தென்னைக்கு ஊற்றுகிறார்களாம். இப்படிச் சூழல் சிதைவால் நீர் வற்றி, காற்று மாசுபட்டுப்போனதும் முடி கொட்டுவதற்கானப் பின்னணிச் சூழலியல் காரணங்கள். கட்டுப்படாத சர்க்கரை, இதய நோய், அதற்கான தவிர்க்க முடியாத மருத்துவம், சினைப்பை நீர்க்கட்டிகள், புராஸ்டேட் கோள வீக்கம், தைராய்டு குறைவு... என, சில மருத்துவக் காரணங்களும் முடி கொட்டுதலுக்குத் துணை செய்யும். இவையெல்லாம் தாண்டி, முடி கொட்டுவதற்கு மிக முக்கிய இன்னொரு காரணம், பரபரப்பாகவும், பரிதவிப்பாகவும், பயமாகவும் நகரும் மனம். பல பெண்களுக்கு மாதவிடாய் சமயத்தில் முடி கொட்டுவதற்கும் இதுதான் முக்கியக் காரணம். இளைஞர்களுக்கு வாழ்வின் முக்கிய நகர்வுகள் மீதான பயமும் அவநம்பிக்கையும் முடி கொட்டவைக்கும் முக்கியக் கூறுகள். மசபுசா மலையடிவார மூலிகை, அல்ட்ரா டெக்னாலஜி அணுக்கள் அடங்கிய ட்ரீட்மென்ட்டைவிட, சின்னதாக உச்சி முத்தம், கைகளை அழுந்தப் பற்றிய நடை, தோளோடு சேர்த்த அரவணைப்பு, 'அட’ எனும் பாராட்டுகள்கூட முடி கொட்டுவதை நிச்சயம் நிறுத்தும். செய்துதான் பாருங்களேன்..!

- நலம் பரவும்...

பொடுகு, டை... சில நம்பிக்கைகள்!

1. பொடுகுத் தொல்லை, தலையில் உள்ள சரும உலர்வால் ஏற்படு வதே தவிர, பூச்சித் தொற்று காரணம் கிடையாது. 'பொடுதலை’ என்ற ஒரு மூலிகை நம் மண்ணில் உண்டு. அதன் சாற்றை, தேங்காய் எண்ணெயில் காய்ச்சி வாரம் 2-3 நாட்கள் தலைக்குத் தேய்த்துக் குளிக்கலாம். SCALP PSORIASIS எனும் தோல் நோயைப் பலரும் பொடுகுத் தொல்லை என தவறாக நினைத்து அலட் சியப்படுத்துகின்றனர். அதிக அளவில் பொடுகுத் தொல்லை இருந்தால் குடும்ப மருத்துவரை ஆலோசிப்பது அவசியம்.

2. 100 சதவிகித 'மூலிகை டை’ என்று ஒன்று உலகில் இல்லவே இல்லை. 'கௌரவ வேடத்தி லாவது நீங்க நடிச்சா போஸ்டர்ல உங்க படம் போட்டு பப்ளிசிட்டி பண்ணிக்குவோம் சார்!’ எனப் பிரபலத்தை 'லைட்டா’ காட்டி படம் எடுப்பது போலத்தான், மூலிகை டை விஷயமும். கறுப்பு வண்ணம் தரும் நிறமி மட்டும்தான் மூலிகை. அதைத் தலையில் நிறுத்துவது ரசாயனக் குழம்பே!

3. தலையில், தாடி, மீசை, புருவத் தில் ஆங்காங்கே மழித்ததுபோல் வரும் சிக்கலை 'புழுவெட்டு’ எனும் அலோபீசியா ஏரியேட்டா என்பார்கள். இது உடல் நோய் எதிர்ப்பாற்றல் குறைபாட்டால் முடி வளர்ச்சியைப் பாதிக்கும் நோய். ஆனால் புழு, பூச்சிகள் இதற்குக் காரணம் கிடையாது. மற்றவர் பயன்படுத்திய சீப்பைப் பயன்படுத்தியதால் பரவும் தொற்று நோயும் கிடையாது. இதற்கு தடாலடி மருத்துவம் பயன் அளிக்காது. மன அழுத்தம் காரணமாக ஏற்படும் இந்தத் தொல்லைக்கு, தொடர்ச்சியான சிகிச்சை மட்டுமே அதுவும் மெள்ள மெள்ள நிவாரணம் அளிக்கும்!

வீட்டிலேயே முடி வளர்ச்சித் தைலம் செய்வது எப்படி?

1. தேங்காய் எண்ணெய் - 1.5 லிட்டர். (செக்கில் ஆட்டிய சுத்தமான தேங்காய் எண்ணெய் என்றால் சிறப்பு. கடையில் வாங்கும் புட்டி எண்ணெய்களில், தேங்காய்க்குக் கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத ரசாயன எண்ணெய் இருக்கின்றனவாம்!)

2. வெள்ளைக் கரிசாலைச் சாறு - 0.5 லிட்டர்

3. கீழாநெல்லிச் சாறு - 0.5 லிட்டர்

4. அவுரி சாறு - 0.5 லிட்டர்

5. கறிவேப்பிலைச் சாறு - 0.5 லிட்டர்

6. பொடுதலைச் சாறு - 0.5 லிட்டர்

7. நெல்லிக்காய்ச் சாறு - 0.25 லிட்டர்

8. சோற்றுக் கற்றாழைச் சாறு - 0.25 லிட்டர்

(மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் பொருட்கள் கிராமப்புறங்களில் பரவலாகக் கிடைக்கும். அப்படிக் கிடைக்காத இடங்களில், நாட்டு மருந்துக் கடைகளில் வாங்கிக்கொள்ளலாம்.)

இலைச் சாறுகளைத் தண்ணீர் அதிகம் சேர்க்காமல் இடித்தோ, மிக்ஸியில் அடித்தோ பிழிந்து சாறு எடுத்துக்கொள்ளவும். நெல்லிக்காய் களில் கொட்டைகளை நீக்கிவிட வேண்டும். சோற்றுக் கற்றாழையில் அதன் உள்ளிருக்கும் ஜெல்லி போன்ற பகுதியை எடுத்து நன்கு கழுவிவிட்டு, பின்னர் அதில் இருந்து மட்டும் சாறு எடுக்கவும்.

இந்தச் சாறுகளின் கலவையைத் தேங்காய் எண்ணெயுடன் கலந்து மெல்லிய தீயில் எரித்து, நீர் வற்றி தைலம் பிரியும் தருவாயில் (அந்தச் சமயம் அடியில் தங்கியிருக்கும் கசடு மெழுகு போல இருக்கும்) பாத்திரத்தை இறக்கி வடித்துக்கொள்ளவும்.

இது மருந்து கிடையாது. அதனால் முடி வளர்ச்சியை ஊக்குவிக்க இந்தத் தைலம் குறைந்தபட்சம் 4-5 மணி நேரம் தலையில் ஊற வேண்டும். (10, 15 சொட்டுகள் தேய்த்தால் போதும்.) அதன் பிறகே தலைக்குக் குளிக்க வேண்டும். பலர் நினைப்பது போல செயற்கை கண்டிஷனர்கள் அசகாயப் பொருள் அல்ல. செயற்கை எண்ணெய் ப்ளஸ் ரசாயனங்களின் கலவைதான். எண்ணெய் தேய்க்காத தலைமுடி கண்டிப்பாக உதிரும் என்பது நியூட்டன் சொல்லாமல் போன நான்காம் விதி!

Jun 29, 2014

உணவு யுத்தம் 18


உணவு யுத்தம்! – 18


டூப்ளிகேட் ஜவ்வரிசி!

ஜவ்வரிசிக்குப் போடப்பட்ட தடையை சமாளித்து, தொழிலை முன்னெடுத்துச் செல்லவே 1943-ல் சேகோ உற்பத்தியாளர் சங்கம் உருவாக்கப்பட்டது. இந்தச் சமயத்தில் தமிழகத்துக்கு வெளியே ஜவ்வரிசியைக் கொண்டுபோய் விற்கவும் அன்றைய அரசு தடை விதித்தது. இதனை எதிர்த்து சேகோ உற்பத்தியாளர் சங்கம் போராடவே, இந்தத் தடை விலக்கிக்கொள்ளப்பட்டது.
1944-ல் 24 பவுண்டுகள் கொண்ட குச்சிக் கிழங்கு மாவு ரூ.20-ல் இருந்து ரூ.24 வரை விற்றது. இதன் தயாரிப்புச் செலவு வெறும் நான்கு ரூபாய்தான். இதனால், ஜவ்வரிசி தொழிலில் லாபம் கொட்டியது.
ஆனால், உலகப்போர் முடிந்த பிறகு, பனையில் இருந்து தயாரிக்கப்படும் ஒரிஜினல் சேகோவை நேரடியாக இறக்குமதி செய்வதற்கு, பலருக்கும் பிரிட்டிஷ் அரசு உரிமை வழங்கியது. இந்த நிலையில் ஒரிஜினல் ஜவ்வரிசியைவிட டூப்ளிகேட் ஜவ்வரிசி சந்தை பிரபலமாகி இருந்த காரணத்தால், அதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என, இறக்குமதி உரிமை பெற்றவர்கள் அரசிடம் கோரிக்கை வைத்தனர். அதோடு, இந்த நகல் ஜவ்வரிசியை சேகோ என்று அழைக்கக் கூடாது என முறையிட்டார்கள்.
‘மரவள்ளிக் கிழங்கில் இருந்து தயாரிக்கப்படும் ஜவ்வரிசி சந்தை பெருகிவிட்டது. அதோடு, இதன் விலை மலிவு என்பதால் அதை அரசு கட்டுப்படுத்தக் கூடாது’ என்று சேகோ உற்பத்தியாளர் சங்கம் அரசிடம் முறையிட்டது.
அப்போது ராஜாஜி தொழில் துறை அமைச்சராக இருந்த காரணத்தாலும், அவர் சேலம் பகுதி வளர்ச்சியில் ஆர்வம் கொண்டவர் என்பதாலும், வெளிநாட்டில் இருந்து ஜவ்வரிசியை இந்தியாவுக்கு இறக்குமதி செய்வதற்கு, தற்காலிகத் தடை விதித்தார். 1949 வரை இந்தத் தடை அமலில் இருந்தது.
1950-க்குப் பிறகு இந்தியாவுக்குள் கிழக்கிந்தியத் தீவுகளில் இருந்து அசல் சேகோ இறக்குமதி செய்யப்பட்டு விற்பனையானது. அசல் ஜவ்வரிசியின் நிறம், லேசான தவிட்டு நிறம் கொண்டது. ஆனால் டூப்ளிகேட் ஜவ்வரிசி பளீரென ஒளிரும் வெண்மை நிறமுடையது. அசல் சரக்கு விலை அதிகம் என்பதால், அதன் விற்பனை குறையத் துவங்கியது. வங்கத்தில் ஜவ்வரிசி அதிகம் விற்பனையானதால், அங்குள்ள வணிகர்கள் போலி ஜவ்வரிசியை வாங்கி அதன் நிறத்தை மாற்றி, ஒரிஜினல் மலேசியன் சேகோ என விற்கத் தொடங்கினர்.
இப்படி நிறத்தை மாற்றித் தருவதற்கான சாயமேற்றும் நிறுவனங்கள் உருவாகின. இவர்கள் மரவள்ளிக் கிழங்கு ஜவ்வரிசியை ரசாயனம் மூலம் நிறம் மாற்றி ஒரிஜினல் மலேசியன் ஜவ்வரிசி என விற்பனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் அதிக லாபம் கிடைக்கிறது என அறிந்துகொண்ட வணிகர்கள் பலரும், நிறம் மாற்றிய போலி ஜவ்வரிசிகளைச் சந்தையில் விநியோகம் செய்ய ஆரம்பித்தனர்.
மக்களால் இரண்டு ஜவ்வரிசிகளுக்கும் பெரிய வேறுபாடு கண்டறிய முடியவில்லை என்ற ஒரு காரணத்தை வைத்து, கோடி கோடியாகப் பணம் சம்பாதிக்கத் தொடங்கினர்.
இப்படிப் போலி ஜவ்வரிசிகள் வருவதை அறிந்த சுகாதாரத் துறை, இதனைக் கண்டறிந்து டூப்ளிகேட் ஜவ்வரிசி மூட்டைகளைக் கைப்பற்றி அழித்தனர். இதனால், சேகோ தொழில் ஆட்டம் காணத் தொடங்கியது.
‘மரவள்ளிக் கிழங்கில் இருந்து தயாரிக்கப்படும் ஜவ்வரிசி ஆரோக்கியமான உணவுதான். அதைச் சாப்பிடுவதால் உடல்நலக் குறைவு ஏற்படாது. இதைத் தனித்த ஒரு தொழிலாக அங்கீகாரம் செய்ய வேண்டும்’ என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதற்காக மேற்கு வங்கத்தில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. அதில் முடிவு எட்டப்படவில்லை.
வழக்கு உச்ச நீதிமன்றத்தின் விசாரணைக்கு வந்தபோது, டாக்டர் பி.சி.ராய் வழியாக சமரச முயற்சி மேற்கொள்ளப்பட்டு, சாதகமான ஒரு முடிவு ஏற்படுத்தப்பட்டது. அதன்படி, இந்தியத் தர நிர்ணயக் கழகமும் சேகோ நிபுணர் கமிட்டியும் ஒன்றுகூடி ஆய்வுசெய்து, மரவள்ளிக் கிழங்கில் இருந்து செய்யப்படும் ஜவ்வரிசியை சேகோ என்று அழைக்கலாம் என அறிவித்தது. அதே நேரம், இதில் கலப்படம் செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை செய்தது.
தமிழ்நாட்டின் சேலம் மாவட்டம் தவிர, ஆந்திர மாநிலம் சாமல்கோட் பகுதியிலும் சேகோ ஆலைகள் செயல்பட்டு வருகின்றன.
உணவாக மட்டுமின்றி, பருத்தித் துணிகளைச் சலவை செய்யும்போது கஞ்சி போட ஜவ்வரிசி உதவியது. இதனால், அதன் தேவை மேலும் அதிகரித்தது. இந்த வளர்ச்சியால் சேலத்தைச் சுற்றி வாழப்பாடி, ஆத்தூர், நாமகிரிப்பேட்டை, ராசிபுரம் பகுதிகளில் மரவள்ளிக் கிழங்கு புதிய பயிராக அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழ்நாட்டில் மொத்தமாக 85 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் மரவள்ளி விளைவிக்கப்படுகிறது.
மரவள்ளிக் கிழங்கு, தென் அமெரிக்காவையும் மேற்கு ஆப்பிரிக்காவையும் தாயகமாகக் கொண்ட தாவரம். மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியா, இன்று உலகின் மிகப்பெரிய மரவள்ளிக் கிழங்கு உற்பத்திசெய்யும் நாடு. உலகம் முழுவதும் ஒவ்வொரு நாளும் சுமார் 500 மில்லியன் மக்கள் மரவள்ளிக் கிழங்கில் இருந்து தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களைப் பயன்படுத்துகின்றனர். உலகின் மரவள்ளிக் கிழங்கு உற்பத்தியில் இந்தியா மட்டும் ஆறு சதவிகிதம் உற்பத்தி செய்கிறது.
இனிப்பு மரவள்ளி, கசப்பு மரவள்ளி என இரண்டு வகை மரவள்ளிகள் உள்ளன. இந்தியாவில் 17-ம் நூற்றாண்டில் கேரளாவில் போர்த்துகீசியர்களால் மரவள்ளிக் கிழங்கு அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்தியாவில், 3.1 லட்சம் ஹெக்டேர் பரப்பில் பயிரிடப்படுகிறது. 60 லட்சம் டன் கிழங்கு உற்பத்தி செய்யப்படுகிறது. மரவள்ளிக் கிழங்கு இந்தியாவின் 13 மாநிலங்களில் பயிரிடப்படுகிறது என்றாலும், கேரளா, தமிழ்நாடு மற்றும் ஆந்திரப்பிரதேச மாநிலங்களில் அதிகமாகப் பயிராகிறது. நவம்பர் மாதம் தொடங்கி மார்ச் மாதம் வரை மரவள்ளிக் கிழங்கு அதிகம் விளைகிறது.
கேரளாவில் கப்பைக் கிழங்குடன் மீன் சாற்றைத் தொட்டு உண்பதை முக்கிய உணவாகக் கொண்டிருக்கிறார்கள். அவித்த கிழங்கை மிளகாய், உப்பு போன்ற பொருட்களுடன் சேர்த்து உண்பதும் உண்டு. கிழங்கைக் குறுக்காகச் சீவி, எண்ணெயில் இட்டுப் பொரித்து சிப்ஸாகவும் சாப்பிடுகிறார்கள்.
உற்பத்தி செய்யப்படும் மரவள்ளிக் கிழங்கில் 58 சதவிகிதம் மனிதர்களுக்கு உணவாகப் பயன்படுகிறது. 28 சதவிகிதம் கால்நடைத் தீவனமாகவும், நான்கு சதவிகிதம் ஆல்கஹால் மற்றும் ஸ்டார்ச் சார்ந்த துறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது.
உணவுத் தொழில்களிலும், பசைத் தயாரிப்பிலும் ஸ்டார்ச் பயன்படுகிறது. இன்று தமிழ்நாட்டில் ஜவ்வரிசித் தொழிலில் ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமானவர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆலைகள் மூலம் வருடத்துக்கு 23 லட்சம் மூட்டை ஜவ்வரிசியும், அது தவிர ஸ்டார்ச் மாவும் தயாரிக்கப்படுகின்றன.
ஸ்டார்ச் மாவில், மக்காச்சோளம் மாவை கலப்படம் செய்து ஜவ்வரிசி தயார் செய்கிறார்கள். அதிகப்படியான வருவாயை ஈட்ட, எடை கூட வேண்டும் என்பதற்காக சுண்ணாம்பு பவுடர், சோக் பவுடர் போன்றவற்றைக் கலக்கின்றனர் எனப் பல குற்றச்சாட்டுகள் சமீபமாக எழுந்துள்ளன.
மரவள்ளிக் கிழங்கில், தோல் நீக்கிய பின்பே மாவு தயாரிக்க வேண்டும். ஆனால் பல தொழிற்சாலைகள், தோலை நீக்காமலேயே, ஸ்டார்ச் தயாரிக்கின்றன. தோல் கலந்த ஸ்டார்ச்சை வாங்கிச் செல்லும் வணிகர்கள், இதைக் குழந்தைகள் விரும்பிச் சாப்பிடும் உணவுப் பொருட்களில் கலக்கின்றனர். குறிப்பாக, சில ஐஸ்க்ரீம் தயாரிப்பவர்கள் பால் மூலம் க்ரீம் தயாரிக்கச் செலவு அதிகம் என்பதால், ஸ்டார்ச் மாவு கலந்த கிரீமைப் பயன்படுத்துகின்றனர்.
சில்லி சிக்கன், மீன் வறுவல் ஆகியவற்றிலும், மொறுமொறுப்பு வேண்டும் என்பதற்காக ஸ்டார்ச் கலக்கின்றனர். இதனைச் சாப்பிடும் குழந்தைகள், வயிற்று வலி, அல்சர் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளுக்கு உட்படுவார்கள். இந்திய உணவு பாதுகாப்புச் சட்டப்படி, ஜவ்வரிசியில் இது போன்ற கலப்படங்கள் செய்வது குற்றம். நோயாளிகளுக்கு உணவாக அளிக்கப்படும் ஜவ்வரிசியில் கலப்படம் செய்வது, மனித உயிருடன் விளையாடுவதாகும்.
உணவை நஞ்சாக்கும் இதுபோன்ற வணிக முயற்சிகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்காவிட்டால் பாயசமாக இருந்தாலும் நம்பி சாப்பிட முடியாத நிலை உருவாகிவிடும். இனிப்புக்காகச் சாப்பிடும் பாயசத்தின் பின்னே இத்தனை கசப்பான உண்மைகள் மறைந்திருப்பது அதிர்ச்சி அளிக்கவே செய்கிறது. உணவுச் சந்தையின் மோசடிகளை நினைத்தால் அடுத்த வேளை என்ன சாப்பிடுவது என்பதே பயமாக இருக்கிறது.

Jun 26, 2014

உணவு யுத்தம்! 17


 


பாயசம் கசக்கிறதா?

‘திருமண விருந்தில் பரிமாறப்பட்ட ஜவ்வரிசி பாயசம் சாப்பிட்டு 16 பேர் மயக்கம், மருத்துவமனையில் அனுமதி’ என்ற செய்தியை தொலைக்காட்சியில் பார்த்தேன். பாயசம் சாப்பிட்டு ஏன் மயக்கமடைந்தார்கள் என அரசு மருத்துவரான எனது நண்பரிடம் கேட்டேன். அவர் ஆதங்கமான குரலில் சொன்னார்: ”எங்கேயும் நம்பி பாயசம் குடித்துவிடாதீர்கள். சில கம்பெனிகள் தயாரிக்கிற ஜவ்வரிசிகள் கலப்படமானவை. அதில் மக்காச்சோள மாவும் செயற்கை ரசாயனங்களும் கலந்துவிடுகிறார்கள். அந்தப் பாயசம் சாப்பிட்டால் வாந்திபேதி ஏற்படும்.”
என்னால் அவர் சொன்னதை நம்ப முடியவில்லை. நிஜம்தானா என மறுபடியும் கேட்டேன்.
”100 சதவிகிதம் உண்மை. ஜவ்வரிசி தயாரிக்கும்போது, பளீரென வெள்ளை நிறம் இருக்க வேண்டும் என்பதற்காக வாஷிங் பவுடரைச் சேர்க்கின்றனர். இந்தப் புகாரில் சமீபமாக ஒரு தொழிற்சாலை மூடப்பட்டிருக்கிறது” என்றபடியே, ”ஜவ்வரிசிக்கு அந்தப் பெயர் எப்படி வந்தது தெரியுமா?” எனக் கேட்டார்.
பச்சைக் குழந்தை முதல் பாயசம் சாப்பிட்டு இருந்தாலும், ஜவ்வரிசிக்கு எப்படி பெயர் வந்தது என யோசிக்கவே இல்லை. அவர் கேட்டபோதுதான் எப்படி அந்தப் பெயர் வந்தது என யோசித்தேன்.
டாக்டர் சிரித்தபடியே சொன்னார்.
”அது ஜாவாவில் இருந்து வந்தது. கஞ்சி செய்யப் பயன்பட்டதால், அதை ஜாவா அரிசி என்று அழைத்தார்கள். அதைச் சொல்லத் தெரியாமல் நம் மக்கள் ஜவ்வரிசி ஆக்கிவிட்டார்கள். மரவள்ளிக் கிழங்கில் இருந்து செய்யப்படுவதே ஜவ்வரிசி. இதனைச் சாகோ, சகுடானா, சபுடானா, சௌவாரி என்றும் அழைக்கின்றனர். கூடுதல் விவரங்கள் வேண்டும் என்றால் மைக்கேல் டார்வர் எழுதிய ‘ஹிஸ்டரி ஆஃப் ஃபுட்’ படித்துப் பாருங்கள்” என்றார்.
உணவின் வரலாற்றை மேலை நாடுகளில் துல்லியமாக எழுதி வைத்திருக்கிறார்கள். இந்திய உணவு முறைகள் பற்றியும் அதன் பண்பாட்டு வரலாற்றையும் நாம் இன்னமும் தொகுத்து நூலாக்கவில்லை.
சாப்பிடுகிற உணவின் பெயர் தமிழ் சொல்லா எனக் கூடத் தெரிந்துகொள்ளாமல் சாப்பிடுகிற பழக்கம் நமக்குள் உருவாகிவிட்டது. உலகம் முழுவதும் பரவலாக உண்ணப்படும் உணவு வகைகள், அதன் தோற்றம், பரவல், உணவில் உள்ள சத்துகள், குறைபாடுகள் பற்றி மைக்கேல் டார்வரும் ஆலன் ஆஸ்டினும் இணைந்து இரண்டு தொகுதிகளாக உணவின் வரலாற்றை எழுதியிருக்கிறார்கள். கேம்பிரிட்ஜ் பதிப்பகம் இதை வெளியிட்டுள்ளது. இதில் பல தகவல்கள் விரிவாக உள்ளன.
தமிழ்நாட்டில் 700-க்கும் மேற்பட்ட ஜவ்வரிசி தொழிற்சாலைகள் உள்ளன. இதில் 90 சதவிகிதம் சேலம், நாமக்கல் வட்டாரத்தில் அமைந்துள்ளன. ஜவ்வரிசியில் அதிக அளவில் கார்போ ஹைட்ரேட், குறைந்த அளவில் கொழுப்பு ஆகியவை உள்ளன. 100 கிராம் ஜவ்வரிசியில் 351 கிலோ கலோரிகள் உள்ளன. இதில் 87 கிராம் கார்போ ஹைட்ரேட், 0.2 கிராம் கொழுப்பு மற்றும் 0.2 கிராம் புரதம் ஆகியவை உள்ளன.
ஒரு பங்கு ஜவ்வரிசியை 15 பங்கு தண்ணீரில் கொதிக்க வைத்து, அது மூன்றில் ஒரு பாகம் சுண்டிய பிறகு குடித்தால் வியாதிகள் குணமாகும் என்கிறது யுனானி மருத்துவம். நோயாளிகளுக்கு ஏற்ற உணவு என்பதுடன், உடல் வெப்பத்தைத் தணித்துக் குளிர்ச்சி அடைய செய்யக் கூடியது என்ற விதத்திலும் ஜவ்வரிசி முக்கியப் பங்கு வகிக்கிறது.
ஆங்கிலத்தில் இதை சேகோ என அழைக்கிறார்கள். இந்தச் சொல், மலேய மொழியில் உள்ள சேகு என்ற சொல்லில் இருந்து ஆங்கிலத்துக்குச் சென்றிருக்கிறது.
மெட்ரோசைலான் ஸாகு என்பது ஒரு வகைப் பனைமரம். இதன் பழத்தின் ஊறலைக் காய்ச்சி கிடைக்கும் மாவுதான் சேகோ. அந்த மாவை பாசி போலச் சிறுசிறு உருண்டையாக உருட்டி செய்வதே ஜவ்வரிசி. இரண்டாம் உலகப் போருக்கு முன்பு வரை சேகோ ஜாவாவில் இருந்து கப்பல் மூலம் இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டது. அதன் காரணமாகவே ஜாவா அரிசி எனப்பட்டது.
இந்தியாவில் வங்காளம், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் ஆகியவற்றில் ஜவ்வரிசி முக்கிய உணவாக விளங்குகிறது. மகாராஷ்டிரத்தில் இதைச் சாபுதானா என்று அழைக்கிறார்கள்.
மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் ஜவ்வரிசியினால் உப்புமாவும் கஞ்சியும் தயாரித்து உண்கின்றனர். ஒவ்வொரு குடும்பமும் சராசரியாக மாதம் ஒன்றுக்கு ஐந்து கிலோ அளவில் ஜவ்வரிசி பயன்படுத்துகின்றனர். கேரளத்திலும் ஜவ்வரிசியைச் சாதம்போல் செய்து உண்பது வழக்கம்.
ஜவ்வரிசியின் கதையைப் பார்ப்பதற்கு முன் பாயசம் எப்படி இந்திய உணவில் முக்கிய இடம் பிடித்தது என அறிந்துகொள்வோம்.

இந்தியாவில் அரிசியில் செய்யப்படும் பாயசமே முதலாகச் செய்யப்பட்டிருக்கிறது. பாலும் அரிசியும் சேர்ந்து இந்தப் பாயசத்தைச் செய்திருக்கிறார்கள்.

பாயசத்தை வட இந்தியாவில் கீர் என்கிறார்கள். அதன் பொருள் பாலில் செய்த இனிப்பு என்பதாகும். தமிழில் பாயசம் என்ற சொல் உருவானதும் சமஸ்கிருத சொல்லான பாயசா என்பதில் இருந்தே. அதன் பொருளும் பால் என்பதையே குறிக்கிறது. 100-க்கும் மேற்பட்ட பாயச வகைகள் இருக்கின்றன. இதில் பால் பாயசமே ராஜா என்கிறார்கள். இப்படிச் சொல்வதுடன் அது குறித்து ஒரு கதையும் சொல்கிறார்கள்.
ஒரு அரசனின் பிறந்தநாள் விருந்தில் விதவிதமான உணவு வகைகள் பரிமாறப்பட்டன. சாப்பிட வந்த ஒரு பிச்சைக்காரன் ருசியான உணவு வகைகளை அள்ளி அடைத்து வயிற்றை நிரப்பினான். அவன் சாப்பிடுவதை மன்னர் வியப்போடு பார்த்துக்கொண்டிருந்தார். ஏப்பம் வந்தபோதும் வயிற்றை அசைத்துக் கவளம் கவளமாகச் சோற்றை உள்ளே திணித்தான். அத்தனையும் சாப்பிட்டுவிட்டு பெரிய கிண்ணம் நிறையப் பால் பாயசத்தைக் குடிக்க எடுத்தான்.
‘இவ்வளவு சாப்பிட்ட பிறகு எப்படி இதைக் குடிக்க முடியும்?’ என அரசர் கேட்டதற்கு, அந்தப் பிச்சைக்காரன் பதில் சொன்னான்.
”அய்யா, எவ்வளவு கூட்டமாக இருந்தாலும் அரசர் வந்தால் விலகி அவர் செல்வதற்கு வழி தர மாட்டார்களா? அப்படி உணவில் ராஜா, இந்தப் பால் பாயசம். அது உள்ளே போவதற்கு எந்த உணவாக இருந்தாலும், ஒதுங்கி இடம் தரவே செய்யும்.”
இப்படிப் பால் பாயசக் கதையைப் பெருமையாகச் சொல்கிறார்கள்.
இந்தியக் கோயில்களில் கடவுளுக்குப் படைக்கப்படுவதற்காகப் பாயசம் தயாரிக்கப்படுவது 2,000 ஆண்டுகளுக்கு முன்பே நடைமுறையில் இருந்திருக்கிறது. வெல்லமிட்ட பாயசம் ஒடிசா மாநில பூரி ஜெகனாதர் கோயிலில் இன்றும் கடவுளுக்குப் படைக்கப்படுகிறது.
கேரளாவில் பாயசம் மிகவும் புகழ்பெற்ற உணவு என்பதால், ஆண்டுதோறும் பாயசத் திருவிழா ஒன்றை கேரள சுற்றுலாத் துறை ஏற்பாடு செய்கிறது. இதில் விதவிதமான பாயச வகைகள் விற்பனைக்கு வைக்கப்படுகின்றன. ஒரு கிண்ணம் பாயசத்தின் விலை ரூபாய் 25-ல் தொடங்கி 2,500 வரை உள்ளது.
தமிழ்நாட்டில் எப்படி ஜவ்வரிசி தொழில் உருவானது என்பது சுவாரஸ்யமான நிகழ்வு. இதுகுறித்து, பொருளாதாரப் பேராசிரியர் எஸ்.நீலகண்டன் ஜவ்வரிசி தமிழகம் வந்த கதை என விரிவான கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார். இந்தக் கட்டுரையில் இவர் தரும் தகவல்கள் வியப்பானவை.
சுதந்திரத்துக்கு முந்தைய காலங்களில் மைதா மாவுக்குப் பெயர் மரிக்கன் மாவு என்று பெயர். அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதால், அதை அமெரிக்கன் மாவு என்று அழைத்தார்கள். அது மருவி மரிக்கன் மாவு என அழைக்கப்பட்டது. ஜவ்வரிசியும் மைதாவும் முக்கிய இறக்குமதி பொருட்களாக இருந்தன.
இரண்டாம் உலகப் போர் காலத்தில் கப்பல்களில் ராணுவ தளவாடப் பொருட்கள் கொண்டுவருவதற்கு மட்டுமே முன்னுரிமைத் தரப்பட்டது. அதனால், இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்ட ஜவ்வரிசி இறக்குமதி பாதிக்கப்பட்டது. சந்தையில் ஜவ்வரிசி கிடைக்காத காரணத்தால் அதன் விலை பலமடங்கு உயர்ந்தது.
முதல் தரமான ஜவ்வரிசி என்பது முழுக்க முழுக்கப் பனைச் சாற்றில் இருந்து தயாரிக்கப்பட்டது. மட்டரகச் சேகோ என்பது பனைச் சாற்றோடு மைதா மாவைக் கலந்து உருவாக்குவதாகும். இது கலப்பட ஜவ்வரிசி என அழைக்கப்பட்டது. இதன் விலை குறைவு.

இறக்குமதி குறையத் தொடங்கிய காலத்தில் சேலத்தில் வணிகம் செய்துவந்த மாணிக்கம் செட்டியார் என்பவர் கேரளாவுக்குச் சென்று வந்தபோது, அங்கே மைதா மாவுக்குப் பதிலாக மரவள்ளிக் கிழங்கு மாவைப் பயன்படுத்துவதைக் கண்டார். தாமும் அதுபோன்று தயாரித்து, விற்பனை செய்யலாமே என, 

புதிய தொழிலை தொடங்கியிருக்கிறார். மாவு விற்பனை பிரபலமாகத் தொடங்கியது. உடனே மரவள்ளிக் கிழங்கை ஏற்காடு மலைப்பகுதியில் பயிரிட்டு, தனக்குத் தேவையான மரவள்ளிக் கிழங்கினை தானே உற்பத்தி செய்ய ஆரம்பித்தார் மாணிக்கம் செட்டியார்.

இதே நேரம் பொப்பட்லால் ஜி ஷா என்ற வணிகர் மலேசியாவில் இருந்து ஜவ்வரிசி வாங்கி, இந்தியாவில் விற்று நிறையச் சம்பாதித்தார். அவர் இந்தியாவிலே ஜவ்வரிசியைத் தயாரிக்க விருப்பம் கொண்டார். இதற்கான தேடுதலில் இருந்தபோது, தமிழ்நாட்டில் மரவள்ளிக் கிழங்கு மாவு விற்பனை சக்கை போடு போடுவதை அறிந்தார்.
அதற்குக் காரணமாக இருந்த சேலம் மாணிக்கம் செட்டியாரைப் பற்றிக் கேள்விப்பட்டு நேரில் வருகை தந்து, மரவள்ளிக் கிழங்கு மாவைக் கொண்டு ஜவ்வரிசி தயாரிக்க முடியுமா என விசாரித்தார். செட்டியாருக்கு இந்த யோசனையை ஏன் முயன்று பார்க்கக் கூடாது என்று தோன்றியது.
அரைத்த மரவள்ளிக் கிழங்கு மாவை தொட்டிலில் போட்டு நனைய வைத்துக் குலுக்கினால், அது குருணை போலச் சிறு சிறு உருண்டைகளாக மாறுவதைக் கண்டார். அதைத் தனித்து எடுத்து வறுத்தால், ஜவ்வரிசி போல உருவாவதை அறிந்துகொண்டார். இந்த மரவள்ளிக் கிழங்கு உருண்டைகள் நிஜ ஜவ்வரிசி போலவே இருந்தன.
சந்தையில் ஜவ்வரிசிக்கு இருந்த கிராக்கியைப் பயன்படுத்தி, புதிய ஜவ்வரிசியை விற்பனை செய்யலாம் என முடிவுசெய்து 1943-ல் ஷாவோடு இணைந்து மரவள்ளிக் கிழங்கு ஜவ்வரிசியை விற்பனைசெய்யத் தொடங்கினார்.
ஒரிஜினல் ஜவ்வரிசி போலவே இருந்த நகலுக்குப் பெரிய லாபம் கிடைத்தது. இருவரும் பணம் அள்ளத் தொடங்கினார்கள். சந்தையின் வேகத்துக்கு ஈடுகொடுத்து போலி ஜவ்வரிசிகளைத் தயாரிக்க முடியாத அளவுக்கு வணிகம் பெருகியது.
இயந்திரங்களைக் கொண்டு போலி ஜவ்வரிசி உற்பத்தி செய்தால் மட்டுமே சந்தையின் தேவையைத் தீர்க்க முடியும் என முடிவுசெய்து இயந்திரத் தொழில்நுட்பம் அறிந்த வெங்கடாசலக் கவுண்டர் என்பவரை அணுகி, ஜவ்வரிசி தயாரிக்கும் இயந்திரம் ஒன்றை வடிவமைத்துத் தரும்படி கேட்டுக்கொண்டார் மாணிக்கம் செட்டியார்.
அப்படி உருவாக்கப்பட்டதே ஜவ்வரிசி செய்யும் இயந்திரம். இதன் உதவியைக் கொண்டு தினமும் 50 மூட்டைகளுக்குக் குறையாமல் ஐவ்வரிசி தயாரிக்க முடிந்தது. ஜவ்வரிசி தொழிற்சாலைகள் அப்படித்தான் தமிழகத்தில் தொடங்கப்பட்டன.
மரவள்ளிக் கிழங்கினைக் கொண்டு ஜவ்வரிசி தயாரித்து விற்றால் நிறைய லாபம் என்பதைக் கண்டுகொண்ட பலரும், இந்தப் புதிய தொழிலில் ஈடுபடத் தொடங்கினார்கள்.
இந்தத் தொழில் தீவிரமாக வளர்ச்சி அடைந்தபோது 1943-ல் இந்தியாவில் கடுமையான பஞ்சம் உருவானது. இது சர்ச்சில் திட்டமிட்டு உருவாக்கிய பஞ்சம் என்று வரலாற்று ஆய்வாளர் மதுஸ்ரீ முகர்ஜி போன்றவர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். வங்கப் பஞ்சம் என்று அழைக்கப்படும் இந்தக் கொடும் பஞ்சத்தில் இந்தியாவில் பல்லாயிரம் மக்கள் உயிர் இழந்தனர்
பஞ்ச காலத்தில் உணவுப் பற்றாக்குறை தீவிரமாகியது. அந்தக் காலத்தில் பஞ்சம்தாங்கி என மரவள்ளிக் கிழங்கு அழைக்கப்பட்டது. அதைக் கப்பங்கிழங்கு, ஏழிலைக் கிழங்கு, மரச்சீனிக் கிழங்கு எனப் பலவிதமாக அழைக்கிறார்கள். பஞ்ச காலத்தில் இந்தக் கிழங்கை உண்டு பிழைத்தவர்கள் ஏராளம்.
பஞ்சம் வேகமாகப் பரவியதால், மரவள்ளிக் கிழங்கு மாவைக் கொண்டு ஜவ்வரிசி தயாரிக்கக் கூடாது என சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஓர் உத்தரவு பிறப்பித்தார். இதன் காரணமாக ஜவ்வரிசித் தொழிலுக்குத் தற்காலிகப் பின்னடைவு ஏற்பட்டது.

உணவு யுத்தம்!-16

இந்தியாவின் முதல் பேக்கரி!
வேட்டை சமூகத்தில் இருந்து வேளாண் சமூகமாக மனிதன் மாறிய காலத்திலேயே, ரொட்டி சாப்பிடும் வழக்கம் உருவாகிவிட்டது.
ரோமானியர்கள் ரொட்டி தயாரிப்பதில் முன்னோடியாக இருந்த தகவல்களை அவர்களின் வரலாற்று நூல்களில் காண முடிகிறது. கி.மு. 168-ல் ரோமில் அடுமனை தொழிலாளர்களின் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. அந்த நாட்களில் செய்யப்பட்ட ரொட்டியும், இன்று நாம் சாப்பிடும் ரொட்டியும் ஒன்று இல்லை. அப்போது அவை அரைத்த தானியத்துடன் உப்பும் வெண்ணெய்யும் சேர்த்து செய்யப்பட்டவை. மாவு அரைக்கும் இயந்திரங்கள் உருவாகாத காலம் என்பதால், ரொட்டி கடினமானதாக இருந்தது. ஏதென்ஸ் நகரின் சாலையில் வைத்து ரொட்டிகள் கூவி விற்கப்பட்டன.

சிறந்த ரொட்டி செய்பவர்களுக்குப் பெரிய கிராக்கி இருந்தது. விருந்துகளில் ரொட்டி செய்வதற்காக வெளிநாடுகளில் இருந்து ஆட்கள் வரவழைக்கப்பட்டனர், ரொட்டியின் அளவு, எடை, விலை ஆகியவற்றை முறைப்படுத்த வேண்டும் என்று மக்கள் புகார் தெரிவித்தார்கள். இதற்காக 1266-ல் ஒரு சட்டம் கொண்டுவரப்பட்டது.
அதன் முன்பு வரை ரொட்டியின் விலை என்பது ரொட்டி சுடுபவரின் சம்பளம், அவரது வீட்டுச் செலவு, மனைவியின் செலவுகள், கடை நிர்வாகச் செலவு, எரியும் விறகுகளுக்கான பணம், வீட்டு நாய்களின் உணவு ஆகிய அத்தனையும் சேர்த்தே நிர்ணயிக்கப்படும்.
அதை எதிர்த்த மக்கள், ரொட்டி விலையை முறைப்படுத்தக் கோரி போராடினார்கள். 13-ம் நூற்றாண்டில் ரொட்டியின் தரமும் விலையும் வரையறை செய்யப்பட்டன. ஆனாலும், முழுமையாக அதை நடைமுறைப்படுத்த முடியவில்லை.
1718-ல் ரொட்டி தயாரிப்பதற்காக சிறப்புப் பள்ளி தொடங்கப்பட்டு, முறையான பயிற்சிகள் அளிக்கப்பட்டன. பயிற்சி பெற்ற ரொட்டி செய்பவர்கள் புது வகை ரொட்டிகளை உருவாக்கினார்கள். உணவு மேஜையில் எப்படி ரொட்டியைப் பரிமாற வேண்டும்… யாருக்கு எத்தனை ரொட்டிகள் வழங்கப்பட வேண்டும் என்ற ஒழுங்குமுறைகளும் உருவாக்கப்பட்டன.
ரஷ்யாவில் உப்பும் ரொட்டித்துண்டும் கொடுத்து வரவேற்பது சம்பிரதாயம். நோன்பு இருப்பவர்களுக்காக விசேஷமான ரொட்டிகள் தயாரிப்பது ஐரோப்பாவில் மரபு.  உலகெங்கும் 1,000-க்கும் மேற்பட்ட விதங்களில் ரொட்டிகள் தயாரிக்கப்படுகின்றன.
ஆட்டோ ரோவெடர் என்ற அமெரிக்கர், மிசூரி மாகாணத்தைச் சேர்ந்தவர். இவர் 1928-ல் ஓர் இயந்திரத்தை உருவாக்கினார். அதன் மூலம் ரொட்டிகளைச் சரியான அளவில் துண்டுசெய்து ஒரு பாக்கெட்டில் அடைத்து விற்க முயன்றார். இயந்திரத்தால் துண்டிக்கப்பட்ட ரொட்டித் துண்டுகளைப் பற்றி பெரிய அளவில் விளம்பரம் செய்த ரோவெட்டர், 1928-ல் தனது விற்பனையைத் தொடங்கினார்.
துண்டாக்கப்பட்ட ரொட்டிகள் மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றன. இதைக் கொண்டு உடனடியாக சாண்ட்விச் செய்ய முடிகிறது என்பதால், அதன் விற்பனை பெருகியது. அப்படித்தான் துண்டிக்கப்பட்ட ரொட்டித் துண்டுகள் பாக்கெட்டில் விற்பனைசெய்வது உலகெங்கும் பரவியது.
17-ம் நூற்றாண்டுக்குப் பிறகு பேக்கரி தொழிலில் புதிய மாற்றங்கள் உருவாகின. அறிவியல் கண்டுபிடிப்புகளின் மூலமும், புதிய தொழில்நுட்பக் கருவிகளின் வருகையும் ரொட்டித் தயாரிப்பில் வளர்ச்சியை உருவாக்கின.
தொழில் புரட்சியின் முன்பு வரை, பிறந்தநாள் கொண்டாட்டங்கள் வசதியானவர்களுக்கு மட்டுமே உரியதாக இருந்தன. அவர்கள் மட்டுமே கேக் வெட்டி கொண்டாடினார்கள். தொழில் புரட்சியால் உருவான மாற்றங்களால், பேக்கரி தொழிலுக்குத் தேவையான ஈஸ்ட் தயாரிப்பு எளிதாகியது; மாவு அரைக்கும் இயந்திரங்கள் உருவானது. புதிய உபகரணங்களின் வருகை, கேக்குகளின் விலையை மலிவாக்கின. அதனால், ஏழை எளிய மக்களும் பிறந்தநாள் கொண்டாடத் தொடங்கினார்கள். அப்படித்தான் பிறந்தநாள் கொண்டாட்டம் பரவத் தொடங்கியது.
கேக் மற்றும் பிஸ்கட் வகைகளை உண்பதில் பிரெஞ்சுகாரர்களும் பெல்ஜியர்களும் இத்தாலியர் களும் மிக விருப்பம் கொண்டிருந்தார்கள். முதன்முதலாக பாரீஸில்  விதவிதமான கேக்குகள் செய்து விற்கும் பேக்கரி தொடங்கப்பட்டது, அதன் வெற்றியே உலகெங்கும் பேக்கரிகள் உருவாகக் காரணமாகின.
பிறந்தநாளில் நாம் பாடும், ‘ஹேப்பி பர்த் டே டு யூ’ என்ற பாடலை இயற்றியவர்கள் மில்ட்ரெட் ஜே.ஹில், பட்ரி ஸ்மித் ஹில் என்ற சகோதரிகள். இவர்கள் அமெரிக்காவின் கென்டெகி மாநிலத்தில் பிறந்தவர்கள். இவர்கள் இதே மெட்டில், ‘குட் மார்னிங் டு ஆல்’ என்ற ஒரு பாடலை உருவாக்கினார்கள். அந்த மெட்டிலே, ‘ஹேப்பி பர்த் டே’ பாடப்பட்டது.
1893-ம் ஆண்டு முதன்முதலில் பிறந்தநாள் பாடல் வெளியிடப்பட்டிருந்தாலும், 1935-ம் ஆண்டுதான் காப்புரிமை பெற்றது. இன்று வரை அதன் காப்புரிமை நீடிக்கப்படுகிறது.
இதுகுறித்து அமெரிக்க நீதிமன்றத்தில் ஒரு வழக்கு நடைபெற்றது. தனி நிகழ்வுகளில் பிறந்தநாள் வாழ்த்துப் பாடுவதற்கு அனைவருக்கும் உரிமை இருக்கிறது. ஆனால், இதை வணிகரீதியாகப் பயன்படுத்தினால் அதற்கான உரிமைத் தொகை கொடுக்க வேண்டும் என்றது நீதிமன்றம்.
இந்த பாடலின் வருகைக்குப் பின்னரே கேக்குகளில், ‘ஹேப்பி பர்த் டே’ என எழுதப்படுவது வழக்கமானது.
இந்தியாவில் 100 ஆண்டுகளுக்கு முன்னதாகவே கேரளத்தில் பேக்கரி ஆரம்பிக்கப்பட்டது. 1880-ல் தலைச்சேரியைச் சேர்ந்த மாம்பள்ளி பாபு என்பவர் ராயல் பிஸ்கட் ஃபேக்டரி என ஒரு கடையைத் துவங்கினார். அப்போது இந்தியாவில் இரண்டே இரண்டு பேக்கரிகள் மட்டுமே இருந்தன. ஒன்று மேற்கு வங்கத்தில். அதை நடத்தியது ஒரு பிரிட்டிஷ்காரர். இந்தியரால் ஆரம்பிக்கப்பட்ட முதல் பேக்கரி தலைச்சேரியில்தான் ஆரம்பிக்கப்பட்டது என்கிறார்கள்.
அந்த பேக்கரிக்கு 1883-ம் ஆண்டு வருகை தந்த தேயிலைத் தோட்ட உரிமையாளரான முர்டாக் பிரௌன் என்ற  வெள்ளைக்காரர் தனது குதிரை வண்டியை நிறுத்தி, கடையினுள் வந்து இங்கிலாந்தில் இருந்து தனக்கு அனுப்பி வைக்கப்பட்ட பிளம் கேக் ஒன்றைக் காட்டினார். ‘இதுபோல ஒன்றை செய்துத்தர முடியுமா?’ என விசாரித்தார்.
அதேபோல ஒரு கேக்கை சில தினங்களில் செய்து தந்தார் மாம்பள்ளி பாபு. இந்த கேக்கின் சுவை இங்கிலாந்தில் செய்த கேக்கை விடவும் சிறப்பாக இருந்தது. அதன் பிறகு அந்தக் கடையின்  வியாபாரம் புகழ்பெறத் தொடங்கியது.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் கேக் அதுவே. அந்த நிகழ்வு நடைபெற்று 129 ஆண்டுகள் ஆனதைக் கொண்டாடும் விதமாக சென்ற வருடம் 1,200 கிலோ எடையில் 300 அடி நீளமான கேக் ஒன்றை உருவாக்கி கிறிஸ்துமஸ் பரிசாக அளித்திருக்கிறார்கள்.
கேக் என்ற ஆங்கிலச் சொல் 13-ம் நூற்றாண்டில்தான் அறிமுகமாகியது. சந்திரனை வழிபடும் ரோமானியர்கள் அதன் வடிவம் போலவே வட்டமாக கேக் தயாரித்தனர் என்கிறார்கள். இதுபோலவே சீனாவிலும் நிலவின் வடிவமாக கேக் அடையாளப்படுத்தப்படுகிறது. ஆனால், ரஷ்யாவில் சூரியனை வழிபடுவதால் வட்ட கேக்குகள் தயாரிக்கப்பட்டிருக்கின்றன.
தங்களின் 50-வது பிறந்தநாளை கொண்டாட தேனில் செய்த கேக் தயாரிப்பது ரோமானியர்களின் வழக்கம். ஸ்பாஞ்ச் கேக்குகளை உருவாக்கியவர்கள் ஸ்பானியர்கள். 1840-ல் பேக்கிங் சோடாவும் 1860-களில் பேக்கிங் பவுடரும் அறிமுகமான பிறகே பேக்கரி தொழில் வளர்ச்சி கண்டது.

க்ரீம் மற்றும் சாக்லேட் கொண்டு தயாரிக்கப்படும் பிளாக் ஃபாரஸ்ட் கேக்குகளுக்கு அந்தப் பெயர் வரக் காரணம், அது ஜெர்மனியின் பிளாக் ஃபாரஸ்ட் ஏரியாவில் முதன்முறையாகத் தயாரிக்கப்பட்டதே.

இன்றும் ஃபிரான்ஸும் இத்தாலியும் ஜெர்மனியும் கேக் தயாரிப்பில் முதன்மையான நாடுகளாக உள்ளன. அவர்களின் தனிச்சுவை மிக்க பேக்கரிகள் உலக நாடுகளில் கிளைபரப்பி வணிகம் செய்து வருகின்றன. இந்தியாவின் பல இடங்களிலும் ஜெர்மன் பேக்கரி இருப்பதற்கு அதுவே காரணம். புதுச்சேரி போன்ற ஃபிரெஞ்சு பண்பாடுள்ள நகரில் ஃபிரான்ஸின் புகழ்பெற்ற பேக்கரிகள் இன்றும் இருந்துவருவது இந்த மரபின் சான்றாகும்.
கேக் இல்லாத கிறிஸ்துமஸ் கிடையாது. அதிலும் பிளம் கேக் என்பது கிறிஸ்துமஸ் பண்டிகைக்காகவே பிரத்யேகமாகத் தயாரிக்கப்படுவதாகும். இந்தியாவில் கேக் விற்பனை கிறிஸ்துமஸை ஒட்டி 10 மடங்கு அதிகமாகிவிடுகிறது என்கிறார்கள் பேக்கரி உரிமையாளர்கள்.
பிறந்தநாளில் கேக் வெட்டி, பரிசு கொடுத்து, விருந்து அளிப்பதுடன் நமது கொண்டாட் டங்களை ஏன் சுருக்கிக் கொள்கிறோம். எத்தனையோ ஏழை குழந்தைகள் கல்விபெற இயலாமல் தவிக்கிறார்கள். அவர்களுக்கு நாம் நிதி உதவி செய்யலாம். கைவிடப்பட்ட முதியவர்கள் வாழும் இல்லங்களுக்குச் சென்று உதவி செய்யலாம்.
கிராமப்புறப் பள்ளிகளுக்குத் தரமான 100 புத்தகங்களை வாங்கிப் பரிசளிக்கலாம். சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நிறுவனங்களுக்கு உதவி செய்யலாம். கிராமியக் கலைகளை வளர்க்க ஆதரவு தரலாம். மாற்றுத் திறனாளிகளுக்கு முடிந்த உதவிகளை செய்து தரலாம். பார்வையற்றவர்கள் அறிந்துகொள்வதற்காக தமிழின் சங்க இலக்கியம் முதல் நவீன இலக்கியம் வரை அத்தனையும் ஆடியோவில் பதிவுசெய்து அதற்காக விசேஷ நூலகம் அமைக்கலாம். இப்படி உருப்படியாக செய்வதற்கு எத்தனையோ அரிய வழிகள் இருக்கின்றன. ஆனால் நாம் பிறந்தநாளின் பெயரில் பெருமளவு பணத்தை உணவு சந்தையில் வீணடிக்கிறோம்.
மெழுகுவத்தியை ஊதி அணைப்பதை விடவும் யாரோ ஒரு முகம் அறியாத மனிதருக்கு உதவும்படியாக வெளிச்சம் ஏற்றி வைப்பது முக்கியமானது இல்லையா? பிறந்தநாள் என்பது எப்படி வாழ்கிறோம் என்பதை அடையாளம் காட்டுவது. அதை அர்த்தம் உள்ளதாக்கிக்கொள்வது நம் கையில்தான் இருக்கிறது.

உணவு யுத்தம்!-15

பிறந்தநாள் கேக்குகள்!

சில நாட்களுக்கு முன் நாளிதழ் செய்தி ஒன்றில் வெளியான செய்தி இது: மும்பையில் 60 வயதைத் தொட்ட ஒரு தொழில் அதிபர் தனது பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக ஒரே நேரம் 60 கேக்குகளை வெட்டினார். அந்த கேக்குகளின் மொத்த எடை 6,000 கிலோ.
எதற்கு இந்த ஆடம்பரம்? வணிகச் சந்தை உருவாக்கிய பண்பாடு எந்த அளவு விபரீதமாக வளர்ந்திருக்கிறது என்பதற்கு இது ஓர் உதாரணம்.
பிறந்தநாள் கொண்டாட்டம் என்றாலே, புத்தாடை அணிந்து கேக் வெட்டுவதும் சாக்லெட்

பரிமாறிக்கொள்வதும், விருந்தும்தான் என உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. உணவுச் சந்தையின் முக்கிய இலக்குகளில் ஒன்று பிறந்தநாள். அதை மையமாகக்கொண்டு பெரும் வணிகம் நடைபெறுகிறது. நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த ஒருவன் சராசரியாக தனது பிறந்தநாளில் கேக், குளிர்பானங்கள், சிற்றுண்டி, விருந்து என 2,000 ரூபாயில் தொடங்கி 5,000 வரை செலவு செய்கிறான். மேல்தட்டு குடும்பங்கள் ஐந்து லட்சம் முதல் 20 லட்சம் வரை செலவு செய்கின்றன. இந்த செலவில் 80 சதவிகிதம் சந்தைக்கானதே!  
இந்தியாவில் ஆண்டுதோறும் விற்பனை யாகும் பேக்கரி பொருட்களின் மதிப்பு 3,295 கோடி ரூபாய். இதில் 50 சதவிகிதம் ரொட்டிகள் விற்பனை. 15 முதல் 18 சதவிகிதம் பிறந்தநாள் கேக்குகளின் விற்பனை என்கிறார்கள்.
இந்த விற்பனை ஆண்டுக்கு எட்டு சதவிகிதம் முதல் 9.5 சதவிகிதம் வரை வளர்ச்சியடைந்து வருகிறது. அதற்குக் காரணம் வாழ்க்கை முறையில் ஏற்பட்ட மாற்றம் என்கிறது பேக்கரி மார்க்கெட் சர்வே.
ஒரு பிறந்தநாள் கேக்கின் விலை 500 ரூபாயில் தொடங்கி ஒரு லட்சம் வரை இருக்கிறது. அவரவர் வசதியைப் பொறுத்து பிடித்தமான வடிவத்தில், ருசியில் வாங்கிக்கொள்கிறார்கள். பெருநகரங்களில் புதுப் பழக்கம் உருவாகி உள்ளது. குழந்தைகளின் பிறந்தநாள் கோடை விடுமுறையில் வந்துவிட்டால், பள்ளி திறந்த பிறகு ஒரு நாளை பிறந்தநாளாகக் கொண்டாடுகிறார்கள்.
பிறந்தநாள் கொண்டாடுகிற பழக்கம் நமக்கு மரபானது இல்லை. அதை ஆங்கிலேயர்களிடம் இருந்து கற்றுக்கொண்டிருக்கிறோம். அவர்கள் இதை ரோமானியர்களிடம் இருந்து கற்றுக் கொண்டார்கள். பைபிளில் பிறந்தநாள் கொண்டாடும்படியாக எந்தக் குறிப்பும் இல்லை. நமது பிறந்தநாளை எப்படிக் கொண்டாடுவது என்பதை சந்தையும் ஊடகங்களும்தான் தீர்மானிக்கின்றன. ஐந்து முக்கிய உணவு நிறுவனங்களே இன்று பிறந்தநாளை வடிவமைக்கின்றன என்கிறார் உணவியல் ஆய்வாளர் ஆர்தர் டிகாட்.
அவை, பிறந்தநாள் கேக்குகள் தயாரிக்கும் பேக்கரிகள், சாக்லெட் தயாரிப்பு நிறுவனங்கள், மது மற்றும் குளிர்பானங்கள், உணவகங்கள், பரிசுப்பொருள் விற்பனையகங்கள்… இவர்களின் சந்தைப்படுத்துதலே பிறந்தநாளை வடிவமைக்கின்றன.
எனது தாத்தா காலத்தில் யாரும் வீட்டில் பிறந்தநாள் கொண்டாடியது இல்லை. அதைவிடவும் பிறந்தநாளை நினைவில் வைத்துக்கொண்டதுகூட இல்லை. எந்த மாதம் பிறந்தேன் என்றுதான் சொல்வார்கள். எந்த நட்சத்திரத்தில் பிறந்தோம் என்பதை வைத்து அந்த நட்சத்திரம் வரும் நாளில் கோயில்களுக்குப் போய் வணங்கி வருவதும் பெரியவர்களின் ஆசி பெறுவதும் தானம் அளிப்பதும் வழக்கம். எளிமையான நம்பிக்கையாக மட்டுமே பிறந்தநாள் இருந்தது.
இன்று வயது வேறுபாடின்றி எல்லோரது பிறந்தநாள் கொண்டாட்டத்திலும் கேக் தவறாமல் இடம் பெறுகிறது. கேக் வெட்டும் ஒருவர்கூட எதற்காகப் பிறந்தநாளில் கேக் வெட்டுகிறோம்… ஏன் மெழுகுவத்திகள் ஏற்றப்படுகின்றன… ஏன் அதை ஊதி அணைக்கச் சொல்கிறார்கள்… ஹேப்பி பர்த்டே டு யூ பாடலை யார் உருவாக்கினார்கள் என எதையும் அறிந்திருக்கவில்லை.
முன்பு ஊருக்கு ஒன்றோ, இரண்டோ பேக்கரி இருக்கும். அதுவும் கிராமப்புறங்களில் கிடையாது. நோயாளிகளுக்கு பன், ரஸ்க், பிரெட் வாங்குவதற்கும், குழந்தைகளுக்கு கேக், பிஸ்கட், செர்ரி பழ ரொட்டி வாங்குவதற்கும் போவார்கள். பேக்கரியின் பெயர்கள் பெரும்பாலும் கிறிஸ்துவப் பெயர்களாகவே இருக்கும். மாடசாமி பேக்கரி, மதுரைவீரன் பேக்கரி என்ற பெயர்களை நான் கண்டதே இல்லை. கருப்பட்டி மிட்டாயும் காரச்சேவும் அதிரசமும் முறுக்கும் சாப்பிட்டு பழகிய தமிழ் மக்கள் எப்படி இன்று கேக், சாண்ட்விச், டோனெட் சாப்பிடப் பழகினார்கள்? வெறும் பழக்கம் மட்டும் பாரம்பரிய உணவு முறையை கைவிட செய்துவிடுமா என்ன?
30 ஆண்டுகளுக்கு முன் பேக்கரிக்குப் போய் வருகிறேன் என்றாலே, ‘வீட்டில் யாருக்காவது உடல்நலம் இல்லையா?’ என்றுதான் கேட்பார்கள். அதுபோல பன், ரொட்டி சாப்பிடுவதற்காகவே காய்ச்சல் வர வேண்டும் என நினைக்கும் சின்னஞ்சிறுவர்களும் இருந்தனர். கேக்கில் முட்டை கலந்திருக்கிறது, அதனால் சைவர்களாகிய நாங்கள் கேக் சாப்பிடமாட்டோம் என ஒரு கோஷ்டி கேக் மற்றும் பிஸ்கட்டுகளை ஒதுக்கி வைத்திருந்தது. இன்று அந்த பேதங்கள் மறைந்து போய்விட்டன. வீதிக்கு இரண்டு பேக்கரிகள் முளைத்திருக்கின்றன. மாநகரில் பிரெட் பட்டர் ஜாம் சாப்பிடும் பழக்கம் அடித்தட்டு மக்கள் வரை பரவியிருக்கிறது. பண்பாட்டைத் தீர்மானிப்பதில் சந்தை எவ்வளவு முக்கியப் பங்கை வகிக்கிறது என்பதற்கு பேக்கரிகளே உதாரணம்.
இன்று பேக்கரி மிக முக்கியமான வணிக மையம். பெரு நகரங்களில் புதிது புதிதாகப் பன்னாட்டு அடுமனைகள் பெருகிக்கொண்டிருக்கின்றன. ஒரு துண்டு கேக்கின் விலை ரூபாய் 275-ஐ தொட்டுவிட்டது. கேக் சாப்பிடுவது இளமையின் அடையாளமாக முன்னிறுத்தப்படுகிறது. ஒரு துண்டு கேக்கில் 385 கலோரி இருக்கிறது. ஆகவே, பார்த்துச் சாப்பிடுங்கள். தொடர்ந்து சாப்பிட்டால் நீரழிவு நோயும் உயர் ரத்த அழுத்தமும் உருவாகக்கூடும் என எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள். ஆனால், இளையோர் காதுகளில் அது ஒலிப்பதே இல்லை.
பேக்கரி என்பதற்குப் பதிலாக வெதுப்பகம் என்ற தமிழ்ச் சொல்லை ஒரு கடையின் பெயர் பலகையில் பார்த்தேன். அடுமனை என்றும் சில விளம்பரங்களில் கண்டிருக்கிறேன். இப்படி அழகான தமிழ்ச் சொற்கள் வந்தபோதும் மனதில் பதிந்துபோன பேக்கரி என்ற சொல்லை விலக்கவே முடியவில்லை. கேக், பிரெட், பிஸ்கட் என ஆங்கிலச் சொற்கள்தான் உடனடியாகப் பேச்சில் வருகின்றன.
பேக்கரியின் சமையல் கூடத்துக்குள் போயிருக்கிறீர்களா? அபூர்வமான ஒரு மணம் வரும். அந்த மணத்துக்காகவே பேக்கரியின் பின்கட்டில் போய் நின்றிருக்கிறேன். பிஸ்கட் செய்பவர்கள் எப்படி இவ்வளவு கச்சிதமாக செய்கிறார்கள், பன் ரொட்டிக்குள் எப்படி செர்ரி பழம் ஒளித்து வைக்கப்பட்டிருக்கிறது என, பள்ளி வயதில் வியப்பாக இருக்கும்.
கிறிஸ்துவர்கள் மட்டுமே வீட்டில் கேக் செய்வார்கள் என பள்ளி நாட்களில் நம்பிக் கொண்டிருந்தேன். உடன் படித்த கிறிஸ்துவ நண்பனிடம் ‘உன் வீட்டில் கேக் செய்வீர்களா?’ எனக் கேட்டபோது, ‘இல்லை, பேக்கரியில்தான் வாங்குவோம்’ என்றான். இவ்வளவு ருசியாக உள்ள கேக்குகளை ஏன் வீட்டில் செய்வதில்லை என யோசித்திருக்கிறேன். ஒருமுறை அம்மாவிடம் கேட்டேன். ‘அதை செய்வதற்கான அடுப்பு வேண்டும். சரியான பக்குவம் தெரிய வேண்டும். கடையில் உள்ளதுபோல வீட்டில் செய்ய முடியாது’ என்றார்.
இன்று வரை கேக் வகைகள், பிஸ்கட்டுகள், ரொட்டித்துண்டுகள் கடைகளில் வாங்கப்படும் விற்பனைப் பொருளாக மட்டுமே இருக்கின்றன. இந்தியா முழுவதுமாக 20 லட்சம் பேக்கரிகள் இருக்கின்றன என்கிறார்கள். சிறுதொழிலாக இதை செய்பவர்கள் 60 சதவிகிதம். இரண்டு பெரிய நிறுவனங்கள்தான் இந்தச் சந்தையில் கோலோச்சுகின்றன. பெரிய நிறுவனங்களுடன் சிறிய வீட்டுத் தயாரிப்புகள் பலத்த போட்டி போடுகின்றன. நோயாளிகளுக்கான உணவில் பேக்கரி தயாரிப்புகளே இப்போதும் முக்கிய இடத்தில் இருக்கின்றன.
எதற்காக இவ்வளவு பணம் செலவழித்து பிறந்தநாட்களைக் கொண்டாடுகிறோம்? உண்மையில் நாம் கொண்டாட்டத்துக்காக ஏங்குகிறோம். மதம் சார்ந்த விழாக்கள், பண்டிகைகள் தவிர, வேறு கொண்டாட்டங்களுக்கு தனிநபர் வாழ்வில் இடம் இல்லை. ஆகவே, பிறந்தநாளும் திருமணநாளும் முக்கியமானதாக மாறியிருக்கின்றன.
பிறந்தநாளைக் கொண்டாடுவதற்கான வழிமுறைகளை ஆங்கிலேயர்கள் உருவாக்கித் தந்துவிட்டார்கள். அதை அப்படியே நாமும் பின்பற்றுகிறோம். ஆனால், திருமண தினத்தைக் கொண்டாடும்போது அவர்களின் பண்பாடு நம்மோடு ஒத்துப்போக மறுப்பதால், சாம்பெயின் குடிப்பதையும் கைகோத்து நடனமாடுவதையும் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
ஒருகாலத்தில் பிறந்தநாள் கொண்டாட்டம் என்பது மன்னர்களுக்கு மட்டுமேயானது. கிறிஸ்து சகாப்தம் துவங்குவதற்கு மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பே எகிப்திலும் ரோமிலும் அரசர்களின் பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றிருக்கிறது. கிரேக்க மக்கள் நிறைய கடவுள்களை வணங்குபவர்கள். நிலவுக்கான கடவுள் ஆர்திமிஸ். அதன் வடிவம் போலவே தேன் கலந்த வட்டவடிவமான கேக் ஒன்றை செய்து, அதில் பிரகாசத்துக்காக மெழுகுவத்தியை ஏற்றி கடவுளுக்கு நன்றி சொல்லிக் கொண்டாடியிருக்கிறார்கள். அப்படித்தான் பிறந்தநாள் கேக் பிறந்தது என உணவியல் அறிஞர் டி.எஸ்.ராவத் கூறுகிறார்.
பிறந்ததினத்தின்போது மெழுகுவத்தியை ஏற்றுவது ஒரு சடங்கு. தீவினைகள் விலகி ஓடுவதற்காகவே மெழுகுவத்தி ஏற்றப்படுகிறது என்கிறார்கள் ஸ்காட்டிஷ் நாட்டுபுறவியல் ஆய்வாளர்கள்.
பிறந்தநாள் கேக்கின் நடுவில் ஒரேயொரு மெழுகுவத்தி ஏற்றிவைக்கும் வழக்கம் ஜெர்மனியில்தான் துவங்கியிருக்கிறது, குழந்தைகளின் பிறந்தநாள் விழாக்களை தனியே ஓர் அரங்கில் கொண்டாடுவது ஜெர்மானியரின் வழக்கம். அதன் பெயர் கிண்டர்பெஸ்ட். அதில் இருந்துதான் குழந்தைகளுக்கான பிறந்தநாள் கொண்டாட்டங்களைத் தனித்த நிகழ்வாக கொண்டாடுவது தொடங்கியிருக்கிறது.
குழந்தைகளை தீய ஆவிகள் பற்றிக் கொள்ளாமல் காப்பதற்காகப் பெரியவர்கள் ஒன்றுகூடி வாழ்த்துவதும் பரிசுகளைப் பரிமாறிக் கொள்வதும் வழக்கம். அப்படித்தான் பிறந்தநாள் கொண்டாட்டம் உலகெல்லாம் பரவியது என்கிறார்கள்.
பிறந்தநாள் கொண்டாடுகிறவர் தனது மனதுக்குள் ஓர் ஆசையை நினைத்துக்கொள்ள வேண்டும். அது நிறைவேற வேண்டும் என்பதன் அடையாளமாக எரியும் மெழுகுவத்தியை ஊதி அணைக்க வேண்டும். இதன் வழியேதான் மெழுகுவத்தியை ஊதி அணைக்கும் பழக்கம் உருவானது என பிரிட்டிஷ் மக்கள் சொல்கிறார்கள். வயதுக்கு ஏற்ப மெழுகுவத்திகள் அதிகமாவது பின்னாளில் உருவான மாற்றமே.
கிரேக்கர்கள் ஆரம்ப காலங்களில் கேக்குகளை குறிப்பதற்கு பிளகோஸ் என்றே அழைத்தனர். அதன் பொருள் வட்ட வடிமானது என்பதாகும். அவர்களே சடுரா என்ற கேக்கையும் தயாரித்தார்கள். அது பெரிய அளவிலான கேக் ஆகும்.
ரோமானியர்கள் இதுபோலவே பிளசென்டா என்ற வெண்ணைய் சேர்ந்த கேக்குகளை தயாரித்து கடவுளுக்கு அர்ப்பணம் செய்தனர். ரோமில் மூன்றுவிதமான பிறந்ததினங்கள் கடைப்பிடிக்கப்பட்டன. ஒன்று தனிநபர்களின் பிறந்ததினங்கள், மற்றது கடவுளின் பிறந்ததினம். மூன்றாவது அரசனின் பிறந்ததினம். இந்த மூன்றில் அரசனின் பிறந்தநாளே மிகவும் விசேஷமாகக் கொண்டாடப்பட்டது. மூன்று நிகழ்வுகளுக்கும் மூன்றுவிதமான கேக்குகள் தயாரிக்கப்பட்டன.
பிறந்தநாள் கேக்கின் வரலாற்றை அறிந்துகொள்ள வேண்டும் என்றால் அதற்கு முன்பாக ரொட்டியின் வரலாற்றைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
அது..