எனது இந்தியா! எஸ். ராமகிருஷ்ணன்,(7) புலியின் கேள்விகள்
வேட்டை என்பது சாகச விளையாட்டா? அல்லது உயிர்க் கொலையா? பசிக்காக மிருகங்களைக் கொல்வது வேறு, பெருமை அடித்துக்கொள்ள மிருகங்களை கொல்வது வேறு இல்லையா? ஆட்சியில் இருக்கும் மன்னர்களே வேட்டை ஆடுவது சரிதானா? இந்தக் கேள்விகளுக்கான பதிலை வரலாற்றுப் பாடப் புத்தகங்களில் தேடி அலைந்து ஏமாந்துபோயிருக்கிறேன்.வெள்ளைக்காரர்களுக்கு இந்தியா என்றாலே... முரட்டு யானையும், புலியும், பாம்பும்தான் அடையாளமாக இருக்கின்றன. அப்படித்தான் அவர்கள், அனுபவக் குறிப்புகளில் இந்தியாவைப்பற்றி எழுதி இருக்கிறார்கள். அதை வாசிக்கும் அயல்நாட்டுகாரர்களுக்கு இந்தியா என்பது நாகரிகமற்ற மனிதர்கள் வாழும் ஓர் அடர்ந்த காடு என்றுதான் தோன்றக்கூடும்.இந்தியர்களை நல்வழிப்படுத்தி நாகரிகமடையச் செய்தது ஆங்கிலேய அரசு மட்டுமே என்ற பொய்யை இன்றும் திரும்பத் திரும்ப பிரிட்டிஷ் சரித்திரக் குறிப்புகள் கூறிக்கொண்டு இருக்கின்றன. உணவுக்காக வேட்டையாடுதல் என்பது தொல்குடிகளில் இருந்து தொடர்கிறது. ஆனால், வேட்டை எவ்வாறு பணம் படைத்தவர்களின் பொழுதுபோக்காக, வீரத்தை நிலைநாட்டும் சாகச விளையாட்டாக உருமாறியது? வன விலங்குகள் இன்று பன்னாட்டுச் சந்தைப் பொருள் ஆகியிருப்பது எதனால் என்பது நாம் அறிந்துகொள்ள வேண்டிய வரலாறு.
எந்தப் புலி, தேசிய விலங்காகப் பெருமையோடு இன்று அறியப்படுகிறதோ, அது நூற்றாண்டு காலமாக வேட்டையாடும் மனிதர்களிடம் இருந்து தப்பிப் பிழைக்க ஓடிய ஓட்டமும், பட்ட காயமும், அடைந்த வலியும் அறிவீர்களா? ஓடிய புலியின் கால் தடங்களுக்கு கீழே அறியப்படாத வரலாறு மறைந்துகிடக்கிறது. அதிகாரம், மனிதர்களை மட்டும் இல்லை, விலங்குகளைக்கூட தனது வாழ்விடத்தில் இருந்து துரத்தி அடிக்கிறது என்பதுதான் காலம் உணர்த்தும் உண்மை.வரலாற்று வெளி எங்கும் ரத்தம் காயாத கால் தடங்களாக புலியின் மௌனமான கேள்விகள் பதிந்து இருக்கின்றன. காலம் மறந்த அந்தக் கேள்விகள் முக்கியமானவை. அதற்கு மனசாட்சியுள்ள மனிதன் பதில் சொல்லியே ஆக வேண்டும். உண்மையில், ஒவ்வொரு புலியும் மனிதனைப் பார்த்துக் கேட்க நினைப்பது, 'பசித்தால் மட்டுமே நாங்கள் வேட்டையாடுகிறோம். அதுவும் ஒரு மானையோ, முயலையோதான். நீங்களோ உங்கள் பொழுதுபோக்குக்காக வேட்டையாடுகிறீர்கள். ஒன்றிரண்டு இல்லை, ஒரே நேரத்தில் 40 மிருகங்களைக்கூடக் கொன்று உங்களை வீரனாக அடையாளம் காட்டிக்கொள்கிறீர்கள் என்றால், நம் இருவரில் யார் கொடூரமானவர்கள்? யார் ஆபத்தானவர்கள்?’காலம் இந்தக் கேள்வியை நம் முன்னே அலையவிடுகிறது. பதில் தெரிந்தும் நாம் சொல்ல மறுக்கிறோம். புலிகளைப் பார்த்து மனிதன் பயந்து நடுங்கிய காலம் போய், மனிதர்களைக் கண்டு புலி அஞ்சி பதுங்கும் காலம் உருவாகிவிட்டது, ஓர் உயிரின் அழிவு மற்றொரு உயிருக்குக் கேளிக்கையாக மாறியிருக்கிறது. ஏராளமான பணம் சம்பாதிக்கும் ஒரு கள்ளத் தொழிலாக இன்று வேட்டை ஆடுவது மாறியிருக்கிறது.
இந்த எதிர்நிலை எப்படி உருவானது? அதைச், சமூகம் ஏன் கண்டுகொள்வதே இல்லை?இயற்கையை அழித்தொழிக்க முனைந்தது விலங்குகளை உணவாகக்கொள்ளும் ஆதிவாசிகள் இல்லை, அரசாண்ட மன்னர்களே. அடிமைப்பட்ட இந்தியாவின் முதல் பேரரசியாக இங்கிலாந்து ராணி பதவி ஏற்றார். அவருக்குப் பின், மூன்று இங்கிலாந்து மன்னர்கள் இந்தியாவை ஆட்சி செய்தார்கள். நான்காம் அரசராகப் பதவி ஏற்றவர் வேல்ஸ் இளவரசனும் விக்டோரியாவின் பேரனுமான ஐந்தாம் ஜார்ஜ். இவர், இந்தியாவுக்கு வந்து மன்னராக முடிசூடிக்கொள்ள விரும்பினார். இதற்காக, 40 நாட்கள் பயணமாக இந்தியா வந்து சேர்ந்தார். 1911 டிசம்பர் 12-ம் தேதி சிறப்பு தர்பார் ஏற்பாடு செய்யப்பட்டது. இளவரசர்கள், வைஸ்ராய்கள், குறுநில ஆளுநர்கள், ஐ.சி.எஸ். அலுவலர்கள், இந்தியப் பிரபுக்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் தர்பார் ஹாலில் கூடியிருந்தனர். புதிய மன்னரும் மகாராணியும் பட்டம் ஏற்றுக்கொண்டார்கள்.
தமிழ்நாட்டில்கூட பல இடங்களில், ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் பதவி ஏற்பதைக் கொண்டாடும் விதத்தில், சிலைகள், அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டன. சென்னையில் உள்ள பனகல் பூங்காவில் ஒரு காலத்தில் ஐந்தாம் ஜார்ஜின் மார்பளவு சிலை இருந்தது. ஐந்தாம் ஜார்ஜுக்கு, வேட்டையாடுவது மிகவும் பிடித்த பொழுதுபோக்கு. இளவரசராக இந்தியா வந்த நாட்களிலேயே, நேபாளத்தின் அடர்ந்த காடுகளுக்குள் வேட்டையாட வேண்டும் என்று வேல்ஸ் ஆசைப்பட்டார். காலரா நோய் பரவியிருந்த நேரம் என்பதால், அவரது விருப்பம் அப்போது நிறைவேறவில்லை. ஆகவே, மன்னர் ஆன உடனேயே, ஒரு பெரிய வேட்டையை நடத்த வேண்டும் என்று திட்டமிட்டார். இதை, நேபாள மன்னர் ரானா ஏற்பாடு செய்தார். இமயமலை அடிவாரத்தில் உள்ள தராய் பகுதியில் முகாம் அமைத்து வேட்டையாட ஏற்பாடு செய்யப்பட்டது. விசேஷ ரயிலில் நேபாள எல்லை வரை சென்ற மன்னர், அங்கிருந்து காரில் காட்டின் உள்ளே அமைக்கப்பட்ட முகாமுக்குப் போனார்.இந்த வேட்டைக்காக 14,000 ஆட்கள், 300 யானைகள், டபுள் பேரல் மற்றும் சிங்கிள் பேரல் துப்பாக்கிகள் என்று விதவிதமான துப்பாக்கிகள் மன்னருடன் அனுப்பிவைக்கப்பட்டன. ஜந்தாம் ஜார்ஜ் மன்னர் வேட்டையாட வரப்போகிறார் என்பதால், நான்கு நாட்களுக்கு முன்பே, 20 தனிப் பிரிவுகள் காட்டுக்குப் போனது. புலிகளின் நடமாட்டம் எங்கு இருக்கிறது என்று அறிவதற்காக, எருமைக் கன்றுக்குட்டிகளை தண்ணீர் துறை அருகில் கட்டிப் போட்டனர். அதை அடிக்க புலி வருகிறதா என்று கண்காணித்தனர். எருமைக் கன்று கொல்லப்பட்டு இருந்த பகுதிகளை அடையாளப்படுத்திக்கொண்டனர். சில இடங்களில் கடுகு எண்ணையை ரப்பர் பந்துகளோடு சேர்ந்து புலி தண்ணீர் குடிக்க வரும் நீர்நிலையில் கலந்துவிடுவார்களாம். புலி, தண்ணீரைக் குடிக்கும்போது பிசுபிசுப்பு ஒட்டிக் கொள்ளவே முகத்தை காலால் துடைப்பது போல தடவித் தடவி கண்ணில் பிசுபிசுப்பு படும்படியாகச் செய்துவிடுமாம். அதன் பிறகு, அந்தப் புலியால் துல்லியமாக எதையும் பார்க்க முடியாது. உடனே அதை வேட்டையாடத் துவங்கிவிடுவார்களாம். இப்படி, புலியை அடையாளம்கொண்டு அதை எங்கே இருந்து சுற்றிவளைப்பது என்று திட்டமிட்டார்கள். புலி வேட்டைக்கு உகந்த காலம் ஜனவரி முதல் மார்ச் வரை. அந்தப்பருவத்தில்தான் புற்கள் செழித்து வளர்ந்து இருக்காது. புதர்களும் காய்ந்துபோயிருக்கும். ஆகவே, புலிகளை எளிதாக மடக்கிவிடலாம். ஒன்று, புதர்களுக்குத் தீ வைத்து புலி தப்பி ஓடும்போது அதைக் கொல்வது, அல்லது புலி பதுங்கி உள்ள இடத்தைச் சுற்றி யானைகளைக்கொண்டு ஒரு வளையம் போலாக்கி, நடுவில் புலியை ஓடவிட்டுக் கொல்வது. இந்த இரண்டில் எதை மன்னர் விரும்புகிறாரோ... அப்படி வேட்டையாடலாம் என்று முடிவு செய்துகொண்டார்கள்.
யானைகளை வைத்து வளைத்து நேரடியாக வேட்டையாடலாம் என்று மன்னர் முடிவு செய்தார். அதுதான் துணிச்சல் மிக்கதாக இருக்கும் என்றார். அதன்படி, முதல் நாள் 300 யானைகள் அழைத்துச் செல்லப்பட்டன. ஒரு யானையின் தங்க சிம்மாசனம் கொண்ட அம்பாரியில், ஐந்தாம் ஜார்ஜ் துப்பாக்கியோடு உட்கார்ந்துகொண்டார். 300 யானைகள், அதை ஓட்டிச் செல்லும் ஆட்கள், சிகாரி எனப்படும் வழிகாட்டிகள், உடல் வலிமைகொண்ட கிராமவாசிகள், வேட்டையாடிய புலியின் தோலை உரிக்க தனித் திறன்கொண்ட ஆதிவாசிகள், வேட்டையைப் படம் பிடிக்க புகைப்படக் கலைஞர் என ஒரு படையே புலி வேட்டைக்குப் புறப்பட்டது.புலி பதுங்கி உள்ள இடத்தை 300 யானைகள் வளைத்துக்கொண்டன. புலி எங்கே போவது என்று தெரியாத சீற்றத்தில் பாய்ந்தது. யானை மீது இருந்த வீரர்கள் குத்தீட்டியால் புலியைத் துரத்தி மன்னர் முன்னால் போகும்படி செய்தார்கள். புலி ஆவேசமாகப் பாய்ந்தது. ஜந்தாம் ஜார்ஜ், தனது துப்பாக்கியால் புலியைச் சுட்டுக் கொன்றார். உடனே, கூட்டம் கைதட்டிப் பாராட்டியது. சுட்டுக் கொன்ற புலியோடு மன்னர் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இப்படியாக, ஐந்து நாட்கள் தொடர்ந்த வேட்டையில் 39 புலிகள், 18 காண்டா மிருகங்கள், 4 கரடிகள், 6 காட்டு எருதுகள் கொல்லப்பட்டன. இவை தவிர, பறவைகள், குழிமுயல்கள் மற்றும் மான்கள் ஆகியவை உணவுக்காக வேட்டையாடப்பட்டன.புதிய மன்னரின் பதவியேற்பு, 39 புலிகளைக் கொன்று உற்சாகமாகத் தொடங்கியது. இந்தப் பணிக்கு தன்னோடு உதவியாக வந்த 14,000 பேருக்கும் மன்னர் சன்மானம் வழங்கினார்.
நேபாள மன்னருக்கு விசேஷ சலுகைகளும் பரிசுகளும் வழங்கப்பட்டன.பதிலுக்கு, நேபாள மன்னர் யானை முதல் கிளி வரை 70 விதமான காட்டு மிருகங்களைக் கூண்டில் அடைத்து இங்கிலாந்தில் உள்ள மிருகக்காட்சி சாலைக்குப் பரிசாகக் கொடுத்தார். பிறந்த காடு தவிர வேறு ஒன்றும் அறியாத கரடியும், காண்டா மிருகமும், ஓநாயும் கப்பலில் பயணம் செய்து இங்கிலாந்தின் கண்காட்சிப் பொருளாக மாறின. அந்த ஊரின் குளிரும் உணவும் சேராமல் கொஞ்சம் கொஞ்சமாக செத்துப்போயின.நினைவில் காடுள்ள மிருகத்தைப் பழக்க முடியாது என்பார்கள். அது உண்மைதான். மனிதர்கள்தான் நினைவுகளைத் தூர எறிந்துவிட்டு எந்த இழிநிலைக்கும் தன்னை ஒப்புக்கொடுத்துவிடுவார்கள். மிருகங்கள் அப்படி இல்லை. பட்டினி கிடந்து சாகுமே அன்றி, அது எளிதில் தன்னை விட்டுக்கொடுத்து விடாது. ஒரு மிருகம் பணிந்துபோகிறது என்பது மனிதன் மேல் உள்ள அன்பால் மட்டுமே, பயத்தால் இல்லை.ஒரே வேட்டையில் இவ்வளவு புலிகளைக் கொன்ற சந்தோஷமோ என்னவோ, ஐந்தாம் ஜார்ஜ் அது வரை இந்தியாவின் தலைநகரமாக இருந்த கல்கத்தாவில் இருந்து மாறி, புதிய தலைநகரமாக டெல்லியை அறிவித்தார். பிரிட்டிஷ் கட்டடக் கலை நிபுணர் எட்வின் லூட்டியன்ஸிடம் புதிய தலைநகரம் அமைப்பது பற்றி அரசர் ஆலோசனை செய்தார். மனிதர்களின் சமாதிகள் இல்லாத வெற்று நிலமாக ஒரு பெரிய பரப்பளவு இருந்தால், அதில் ஒரு புதிய டெல்லி நகரை உருவாக்கிக் காட்டுகிறேன் என்றார் எட்வின் லூட்டியன்ஸ். அப்படித்தான் புது டெல்லி உருவானது!
நன்றி ஜூனியர் விகடன்
1 comment:
சிறப்பான பதிவு, விஷயங்கள் அறிந்து கொண்டேன்...!!!
Post a Comment