Jun 8, 2012

இந்தியா வல்லரசா ? இதபடிங்க


நாணயம் இழந்த நாணயம்



ரூபாயின் வீழ்ச்சியை இப்படியும் சொல்லலாம். 2012, மே 23-ஆம் தேதி நிலவ ரப்படி கடந்த ஆண்டுடன் ஒப்பிட்டால் ரூபாயின் வீழ்ச்சி 20 சதம்.
 ஒரு டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு ரூ. 55.50. ரூபாய் 45-க்கு விற்ற டாலர் இப்போது ரூ. 55.50. ஒரு டாலர் வாங்க நாம் கூடுதல் அளவில் ரூபாயைக் கொட்ட வேண்டும்.
 ரூபாயின் நாணய மதிப்பை இழந்து கொண்டிருக்கும் இந்தியா எதிர்நோக்க வேண்டிய பிரச்னை குறையும் அன்னிய முதலீடுகள். நாளுக்கு நாள் ரூபாய் நாணயம் மதிப்பிழந்து கொண்டே போவதைப் பார்த்தால் முன்பே நாம் எச்சரித்தபடி ஒரு டாலருக்கு ரூ. 65 வரை நாம் கொட்டி அழவேண்டிய நிலை ஏற்பட்டால்கூட அதிசயம் இல்லை. மிகவும் இழிவான நிலைக்கு நாம் தள்ளப்பட்டு விட்டோம்.
 இந்த நிலையைப் படம்பிடித்துக் காட்டுவதுபோல் ஸ்டாண்டர்ட் அண்ட் பூர் என்ற தரநிர்ணய ஆலோசனை நிறுவனம் ஸ்டேட் பேங்க் உள்பட தேசியமயமாக்கப்பட்ட அனைத்து அரசு வங்கிகளுக்கும் பிபிபி - என்ற தரமற்ற சான்று வழங்கியுள்ளது.
 இந்தியாவின் அரசு முத்திரைக் கடன் பத்திரங்களின் நாணயம் கேள்விக்குறியாகிவிட்டது. நாணய இழப்புக்குப் பணவீக்கம், பணவீக்கத்தைச் சமன்செய்யும் அளவில் வளர்ச்சி இல்லா நிலை - அதாவது ஜி.டி.பி.யில் தொய்வு, இறக்குமதிகளின் ஏற்றம் என்று காரணங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.
 இப்படிப்பட்ட நாணய இழப்பை வேறொரு கோணத்தில் கவனித்தால் "வெள்ளையனே வெளியேறு' என்ற 1942 ஆம் ஆண்டு இயக்கம் இன்று 2012-ல் மீண்டும் எதிரொலிக்கிறது. அன்னிய முதலீடுகள் இந்தியக் கதவுகளைத் தட்டும் என்ற எதிர்பார்ப்புகள் பொய்த்து வருகின்றன.
 2008 ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவில் செயல்பட்டு வந்த ஏ.ஐ.ஜி., ஏகான், டெமாசக், மெரில் லைஞ்ச் போன்ற அன்னிய நிதி நிறுவனங்கள் வந்தவரை லாபம் என்று இந்திய நிறுவனங்களிடம் பங்குகளை விற்றுவிட்டு விமானம் ஏறிவிட்டன.
 இந்தியாவில் உள்ள அன்னிய வங்கிகள் இந்திய வங்கிகளிடம் பங்குகள் வாங்குவதைக் கணிசமாகக் குறைத்துவிட்டன. இன்சூரன்ஸ் துறையில் 25 அன்னிய நிறுவனங்கள் உண்டு. இப்போது அவை ஒவ்வொன்றாகத் தங்கள் பங்குகளை விற்றுவிட்டுக் கரையேறி வருகின்றன. உதாரணமாக நியூயார்க் லைஃப் தங்களது 30 சதவிகிதப் பங்குகளை மித்சூயி சுமிடோமோவுக்கு விற்றுவிட்டது.
 அன்னிய முதலீட்டாளர்களின் வெளியேற்றத்துக்குரிய முக்கியக் காரணம் போதிய அங்காடியில்லாத நிலை. அங்காடியில்லா நிலையின் அடிப்படைத் தொழில் உற்பத்தியில் தொய்வு. தொழில் ஏற்றுமதி பூஜ்ஜியமாகி வருகிறது. ஏழு வருஷமாக இந்தியாவில் உட்கார்ந்து நாங்கள் என்ன சம்பாதித்தோம் என்று கேட்கும் ஃபிடலிட்டி, அனைத்துலகத் தரத்துக்கு 8,800 கோடி என்பது அற்பமாம். நியாயமாகப் போட்ட முதலுக்கு 3 லட்சம் கோடி சம்பாதித்திருக்க வேண்டுமாம்.
 "பிரிக், பிரிக்' என்று பெரிதாகப் பேசுகிறார்களே. அந்தக் கதை இன்னமும் பரிதாபம். பிரிக் என்றால் பிரேசில், சீனா, இந்தியா, ஆப்பிரிக்கா இணைந்த வர்த்தக உடன்பாட்டுக் கூட்டம். பிரிக் செயல்பாட்டுக்குரிய சங்கமக் கட்டணமாக இந்திய வங்கிகளின் முதலீடு 810 மில்லியன் டாலர் என்றால் சீனாவின் வழங்கல் அதேகாலத்தில் 4.3 பில்லியன் டாலர், பிரேசிலின் வழங்கல் 1.5 பில்லியன் டாலர் ஆகும்.
 உலகளாவிய நிலையில் தனியார் ஈக்விட்டி நிறுவனங்கள் ஆண்டுக்கு சுமார் 1 ட்ரில்லியன் டாலர் சொத்து சம்பாதிக்கின்றன. அதில் இந்தியாவில் 5 சதவிகிதம் முதல் போட்டால் 50 பில்லியன் டாலர் சம்பாதிக்கலாம் என்பதுகூட தப்புக்கணக்காகி விட்டதாம். இந்தியாவின் சமத்துவ முதலீட்டுச் சந்தை ஆரோக்கியமாயில்லை.
 2007-இல் 17 பில்லியன் டாலருக்கு இந்தியாவில் புழங்கிய ஈக்விட்டி நிறுவனங்கள் எல்லாம் முடங்கிவிட்டன. பங்குச்சந்தை இறங்கி இறங்கிப் போவதால் ஐந்து ஆண்டுகள் முடிந்த பின்பும்கூட முதலீட்டாளர்களால் புத்துணர்வு பெறாமல் கிணற்றில் போட்ட கல்லாக உள்ளனர். வெளியேறவும் முடியவில்லை. வியாபாரம் செய்யவும் முடியவில்லை.
 அன்னிய வங்கி, இன்சூரன்ஸ் நிறுவனங்களும் டல்லாகிவிட்டன. மூலதனம் இல்லாமல் புதிய வியாபாரம் செய்ய இயலவில்லை. போட்ட முதலுக்கே ஆபத்து சூழ்ந்துவிட்டது. தொழில் வளர்ச்சி இல்லாமல் சொத்துகளாயுள்ள பணம் மூலதனமாக மாறவில்லை. பணவீக்கம், நாணயமிழந்த அரசுக்கடன் பத்திரம், பங்குச்சந்தை சரிவு ஆகியவற்றால் வருமானம் தொழில் முதலீடாக மாறாமல் தங்கமாகப் பதுக்கப்படுகிறது.
 கள்ளப்பணமாக சுவிஸ் வங்கிக்கு டிபாசிட்டாகி சுவிட்சர்லாந்திலும், ஜெர்மனியிலும் மூலதனம் வளர உதவுகிறது. இதுபோன்ற காரணங்களினால் இன்சூரன்ஸ் நிறுவனங்களின் இழப்புகளை ஈடுசெய்ய சுமார் 7.5 பில்லியன் டாலர் செலவானதாக ஒரு தகவல். இது உலகளாவிய நிதி நிலை என்றாலும்கூட இந்தியாவால் எழுந்திருக்க முடியுமா என்ற கேள்வி எழுகிறது.
 மேலைநாடுகளின் மந்தநிலைக்கும் இந்திய மந்தநிலைக்கும் வேற்றுமை உண்டு. அவர்களுக்கெல்லாம் கையில் காயம், காலில் அடி, லேசான எலும்பு முறிவு, கட்டுப்போட்டுக்கொண்டு ஓய்வெடுக்கலாம். காயம் ஆறிவிடும். எழுந்து நடமாடலாம். இந்தியா படுத்த படுக்கையாகிவிட்டது. ஒரு நோய்க்கு வைத்தியம் செய்தால் மற்றொரு நோய் வந்துவிடுகிறது. வாதம் தலைக்கேறிவிட்டது. சக்கர நாற்காலியில் அமரும் நிலைக்குத்தான் குணப்படுத்த முடியும்.
 இந்தியப் பொருளாதாரத்தை நாடி பிடித்துப் பார்க்கும்போது, ஸ்டாண்டர்ட் அண்ட் பூர் உலகளாவிய முதலீட்டாளர்களின் ஆலோசனை நிறுவனம் புட்டுப்புட்டு வைக்கும் காரணங்களில் முன்னிற்பது நம்பிக்கை இழந்த நாணயமே. முதலீட்டுக் கடன் உயர்ந்த அளவுக்கு ஜி.டி.பி உயராமல் முதலீட்டுக் கடனுக்கும் ஜி.டி.பி அதாவது மொத்த தொழில் உற்பத்தி வருமான மதிப்புக்கும் இருக்க வேண்டிய விகிதாசாரம் தொய்ந்துவிட்டது.

 ஏற்றுமதி குறைந்து இறக்குமதி உயர்கிறது. அவர்களின் கணக்குப்படி ஜி.டி.பி.யில் ஏற்றுமதி மதிப்பு 40 சதம் இருக்க வேண்டும். கடன்கள் தொழில் மூலதனமாக மாறாதபோது ஏற்றுமதிக்கு வழி இல்லை. அப்படி எதுவும் சந்தர்ப்பம் வந்தாலும் சந்தையில் போட்டாப் போட்டி. நாணயத்தை மதிப்பிழக்க வைப்பதிலும் சர்வதேசப் போட்டி நிகழ்கிறது.
 இழப்பதற்கு இனி என்ன உள்ளது என்று கேட்கும் அளவில் இந்தியாவில் டாலர் மதிப்பு கூடி ரூபாய் மதிப்பு நாளுக்கு நாள் இறங்குவதே கண்ட பலன். டங்கல் திட்டத்தை ஏற்றுக்கொண்டு உலக வர்த்தக அமைப்பு உடன்பாட்டில் இந்தியா கையெழுத்திட்டு உலகமயமாதல் என்ற வலையில் சிக்கி அநேகமாக 20 ஆண்டுகள் நிறைவுற்றிருக்கலாம்.
 ஜி.டி.பி.யில் ஏற்றுமதியின் ஆற்றலே உலக வளர்ச்சிக்கு அடிப்படை என்று டங்கல் புதிய வேதம் படைத்தார். ஏற்றுமதியின் ஆற்றல் அங்காடிகள் அமைந்தால்தான் மேம்படும்.
 உலகமயமாதலில் அன்னிய முதலீட்டாளர்கள் வந்து இந்தியாவில் தொழில் செய்து ஏற்றுமதி செய்தால் இந்தியாவுக்கும் லாபம் என்ற கருத்தை நாம் ஏற்றாலும்கூட, அன்னிய முதலீட்டாளர்கள் இன்று வர மறுப்பது ஏன்? இந்திய முதலாளிகளுக்குத் தங்கள் பங்குகளை விற்றுவிட்டு அன்னிய முதலீட்டாளர்கள் விமானம் ஏறுவது ஏன்?
 ""வருந்தி அழைத்தாலும் வாராதவர் வாரார்'' என்ற நிலைமைக்கு அவர்கள் தள்ளப்பட்டு விட்டபோது, இனி யார் வருவாரோ? இதை ஆண்டவனால் கூட கூற முடியாது. நாணயத்தை இழக்காமல் பொருளாதாரம் மேம்பட இனி நாம் எதுவும் ஒரு புதிய வழி உண்டு என்றால் ""தன் கையே தனக்கு உதவி'' என்று மகாத்மா போதித்த கீதைதான் ஒளிகாட்டும் என்று தோன்றுகிறது.

   மேலைநாடுகளின் மந்தநிலைக்கும் இந்திய மந்தநிலைக்கும் வேற்றுமை உண்டு. அவர்களுக்கெல்லாம் கையில் காயம், காலில் அடி, லேசான எலும்பு முறிவு, கட்டுப்போட்டுக்கொண்டு ஓய்வெடுக்கலாம். காயம் ஆறிவிடும். எழுந்து நடமாடலாம்.
 இந்தியா படுத்த படுக்கையாகிவிட்டது. ஒரு நோய்க்கு
 வைத்தியம் செய்தால் மற்றொரு நோய் வந்துவிடுகிறது.
ஆர்.எஸ். நாராயணன்
நன்றி தினமணி