Dec 5, 2012

காவிரி டெல்டா விவசாயிகளுக்கு 12 மணி நேரம் மும்முனை மின்சாரம்: முதல்வர் ஜெயலலிதா

டெல்டா மாவட்டங்களில் 15 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா பயிர், போதிய தண்ணீர் இல்லாததால் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் பம்பு செட்டுகள் மூலம் பயிர்களை காப்பாற்ற வசதியாக, காவிரி டெல்டா பகுதிகளில் பிப்ரவரி மாதம் வரை மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
‘காலையில் 6 மணி நேரமும், இரவில் 6 மணி நேரமும் இந்த மும்முனை மின்சாரம் வழங்கப்படும். மேலும் சம்பாவை காப்பாற்றவும், பாதிப்பு ஏற்பட்டால் போதிய இழப்பீடு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. டீசல் பம்பு செட்டுகளை இயக்குவதற்கு ஏக்கருக்கு 600 ரூபாய் மானியம் அளிக்கப்படும். எனவே, விவசாயிகள் தன்னம்பிக்கை இழக்க வேண்டாம்’, என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு, வினாடிக்கு 1000 கன அடியில் இருந்து 4000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அணையின் மொத்த நீர்மட்டம் 50.95 அடியாகும், தற்போது அணையில் 18415 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. அணைக்கு வினாடிக்கு 3158 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. மேலும், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நாளை முதல் கர்நாடகம் தண்ணீர் திறந்துவிட்டால் கூடுதலாக தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளது.

No comments: