Dec 1, 2012

ஒரு இரவு பார்வை:தூங்கா நகரம் மதுரை

நைட் ரவுண்ட்-அப்


தூங்கா நகரம் இரவில் எப்படி இருக்கிறது? ஒரு நள்ளிரவில் மதுரையைச்சுற்றி வந்தோம்..
இரவு 11 மணி பை பாஸ் ரோடு, கருப்பண்ணசாமி கோயில்:
அந்த நேரத்திலும் கருப்பண்ணசாமி பிஸி. தன்னுடைய புதிய பைக்கை வாசலில் நிறுத்திவிட்டு, சாவியைச் சாமியின் காலடியில் வைத்து நெற்றியில் விபூதியைத் தீட்டிக்கொண்டிருந்தார் ஒரு வாலிபர். பைக் சக்கரத்தில் எலுமிச்சை நசுங்கியது. முன்தினம் 'பீட்சா’ படம் பார்த்த எஃபெக்ட் இன்னும் போகாததால், நாமும் கருப்பண்ணசாமிக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டு நைட் ரவுண்ட்ஸைத் தொடங்கினோம்.
இரவு 11.30:
அப்படியே கீழவாசல் பகுதிக்கு வந்தால், ஓட்டல்களில் மிஞ்சிய இரவு உணவை டிரை சைக்கிளில் கொண்டுவந்து குடிசை மாற்று வாரியப் பகுதிக்கு சப்ளை செய்து கொண்டிருந்தார் ஒருவர். மக்களுக்கு மலிவு விலைப் பொருட்களாவும், பன்றிகளுக்கு விலையில்லாப் பொருட்களாகவும் அள்ளி இரைக்கப்பட்டன அந்த உணவு. தூங்கா நகரை தூங்கவிடாமல் செய்வதில் பெரும் பங்கு வகிக்கும் திடீர் நகரைக் கடந்தபோது, நமக்குள் கொஞ்சம் பயம் வந்தது. ஏரியா அப்படி.

பெரியார் பஸ் ஸ்டாண்ட் பக்கம் நின்றால் ஆட்டோவுக்குக் கூப்பிடுவதுபோல், ரொம்ப கேஷூவலாக 'அதற்கு’ கூப்பிடுகிறார்கள் சில அழகிகள். ''நாங்களும் மதுரைக்காரய்ங்கதான்'' என்று அவர்களிடம் பேச்சுக்கொடுக்க ஆரம்பித்தபோது, 'ஏய்... வர்றதுன்னா வா. இல்லாட்டி மூடிக்கிட்டு போ. மதுரைக்காரன்... அது இதுன்னு சொல்லிட்டுத் திரிஞ்ச கொன்டேபுடுவோம்'' என்று முஷ்டி முறுக்கினார்கள் இரண்டு ரௌடி சார்கள்.
இரவு 12 மணி, ரெயில் நிலையம்:
ரெயில்வே ஸ்டேஷன் வாசலில் நூற்றுக்கணக்கானவர்கள் கூட்டம் கூட்டமாகப் படுத்துக் கிடந்தார்கள். என்னென்ன பொருட்கள் எல்லாம் தலையணை அவதாரம் எடுத்திருக்கின்றன என்று கவனித்தபோது ஆச்சரியமாக இருந்தது. ஒருவரின் தலையில் செருப்பு, மற்றொருவரின் தலையில் லக்கேஜ், இன்னொருவருக்கு தன் கை, அடுத்தொருவருக்கு பக்கத்தில் படுத்திருந்தவரின் கை. ரெயில்வே ஸ்டேஷனுக்குள் தூங்க போலீஸார் அனுமதிக்காததால், எல்லாரும் இப்படிக் கும்பலாகத் தூங்கிக்கொண்டிருந்தார்கள். மதுரையிலேயே கொடுத்துவைத்தக் கொசுக்கள் அதிகமிருப்பது இங்கேதான். கொசுவர்த்தி தொல்லை இல்லாமல், வெரைட்டியாக ரத்தம் குடிக்கின்றன!


ஏ.டி.எம். ஒன்றின் வாசலில் டிப்டாப் ஆசாமி ஒருவர் திருதிருவென்று விழித்தபடி உட்கார்ந்திருந்தார். 'ஒரு திருடர் சிக்கிட்டார்’ என்று அருகில்போய் பேச்சுக் கொடுத்தோம். 'கார்டை சொருகினேன் தலைவா. 8,000-னு டைப் பண்ணிட்டு பார்த்தா, பணம் வரலை. கார்டும் உள்ளே போயிடுச்சு. விஷயத்தைச் சொல்லலாம்னா இந்த ஏ.டி.எம்-க்கு வாட்ச்மேனே கிடையாது. வேற யாராச்சும் உள்ளேபோய் கார்டை நுழைச்சி, என்னோட 8,000 வெளியே வந்திடுமோனு பயமா இருக்கு. அதனாலதான் இங்கேயே பட்டறையப் போட்டுட்டேன். 'அவுட் ஆஃப் சர்வீஸ்’னு எழுதித் தொங்க விட்டுடலாம்னு பார்த்தேன். அட்டையும் இல்லை. பேனாவும் இல்லை. அதான் நானே ஷட்டரை இறக்கிவிட்டுட்டு, காவலுக்கு உட்கார்ந்திருக்கேன்' என்றவர் நம்மைப்பற்றி விசாரித்துவிட்டு, 'முதல்ல காலையில பேங்குக்குப்போய் எப்படி பணத்தை மீட்கிறதுனு கவலையா இருந்துச்சு. ஆனா, இப்போ பணத்தைப்பத்தின கவலையைவிட, டெங்குவைப்பத்தின கவலைதான் ஜாஸ்தியா இருக்கு. கொசுக்கடி பின்னுது சார்' என்றார் பரிதாபமாக.
கிளம்பியபோது, 'சார் நீங்க என் கூடவே விடிய விடிய உட்கார்ந்து இந்த அனுபவத்தை எழுதுங்களேன்' என்றார் சிரிக்காமல். 'காத்திருங்க. வேற யாராச்சும் துணைக்கு வருவாய்ங்க தலைவா' என்றபடி நாம் கிளம்ப, எங்கிருந்தோ வந்த நாய் ஒன்று அவரது அருகில் படுத்துக்கொண்டது. மனிதருக்கு டெங்குவோடு, ரேபிஸ் பயமும் வந்திருக்கக்கூடும்.
மணி 12:30 மணி ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்ட்:
அந்த நேரத்திலும் புரோட்டாவை ஒருபிடி பிடித்துக்கொண்டிருந்தார்கள். பஸ் ஸ்டாண்டை ஒட்டி வைகை கரைச்சாலையில், அழுக்குச் சட்டையுடன் ரெண்டு பேர் அங்குமிங்கும் நடந்துகொண்டிருந்தார்கள். யாராவது சிக்கினால், வழிப்பறி செய்துவிட்டு ஆற்றுக்குள் இறங்கி ஓடிவிடுவார்களாம். வைகையில் தண்ணீர் இல்லாதது எவ்வளவு வசதியாக இருக்கிறது என்று வியந்தபடி, வேறு பாதையாக கோரிப்பாளையம் வந்தோம். அந்த நேரத்திலும் தேவர் சிலைக்குக் கால் வலிக்க காவலுக்கு நின்றார்கள் போலீஸார்.

அரசு ஆஸ்பத்திரிக்குள் நுழைந்தால் கொசுவர்த்தி வாசனை. ஒவ்வொரு ஆளைச் சுற்றியும் சீரியல் செட்போல நான்கைந்து கொசுவர்த்திகள் எரிந்தன. ஒரு கொசுவர்த்தியைப் பல துண்டுகளாக உடைத்து, சுற்றிலும் வைத்தால்தான் கொசு கடிக்காதாம். சிலர் பாக்கெட் கணக்கில் ஸ்டாக் வைத்திருந்தார்கள்.
நள்ளிரவு 1 மணி, அரசு பாலிடெக்னிக்:
சுள்ளான்கள் சிலர் போஸ்டர் ஒட்டிக்கொண்டிருந்தார்கள். எல்லாம் நினைவஞ்சலி போஸ்டர்கள். தான் ஒட்டிய போஸ்டர் மீது இன்னொரு போஸ்டரை அவர்கள் ஒட்டுவதைப்பார்த்து, பெருசு ஒருவர் பொங்க, ''இது என்ன உன் வீட்டுச் சுவரா? வர்றவன் போறவன் எல்லாம் ஒட்டத்தான் செய்வாய்ங்க... வேணுமுன்னா ஒவ்வொரு போஸ்டர் பக்கத்துலேயும் காவலுக்கு ஆள்போடு'' என்று வயதுக்கு மரியாதை கொடுக்காமல் பேசினார்கள் சுள்ளான்கள்.


சைரன் ஒலிக்க தீயணைப்பு வாகனம் ஒன்று திருமங்கலம் ரோட்டில் பறந்தது. உடனே பக்கத்தில் இருந்த சாமி பல்க்கில் (மதுரையில் 24 மணி நேரமும் பரபரப்பாக இயங்குகிற, அதிகம் விற்பனை நடக்கிற பல்க் இது) மேற்கொண்டு ஒரு லிட்டர் பெட்ரோல் போட்டுவிட்டு, பின் தொடர்ந்தோம். பழங்காநத்தம் ஜி.ஆர்.டி. ஹோட்டலில் இருந்து புகை கிளம்பிக்கொண்டிருந்தது. பரபரப்பாகப்போய் இறங்கினால், கிச்சனில் தீ விபத்தாம். அதை போட்டோ எடுக்கவிடாமல் தடுக்க, நான்கு ஊழியர்களை ஏவி விட்டிருந்தார்கள். ' பெர்மிஷன் கேட்டுட்டுப் போட்டோ எடுங்க... என்ன?' என்று மிரட்டிய ஊழியரிடம், 'யார்கிட்ட பெர்மிஷன் கேட்கணும்'' என்றோம். 'மார்னிங் டியூட்டிக்கு வர்ற மேனேஜரிடம்'' என்றார் அவர்.
'சரிண்ணே, தீயை எல்லாம் அணைச்சி, ரூமைக் கழுவிவிட்டபிறகு, போன் போடுங்க. வந்து போட்டோ எடுக்கிறோம்'' என்று கடுப்பாகச் சொல்லிவிட்டு, கிளம்பினோம்.
- கே.கே.மகேஷ்
படங்கள்: பா.காளிமுத்து
en.vikatan

6 comments:

Avargal Unmaigal said...

நான் வாழ்ந்த மதுரையை மீண்டும் நினைவில் கொண்டு வர உதவியதற்கு நன்றி நான் கடந்த தடவை வந்த போது எல்லா நகரங்களும் மாறி இருந்தன ஆனால் மதுரை மட்டும் அப்படியே இருக்கின்றது

திண்டுக்கல் தனபாலன் said...

பழைய ஞாபகங்கள் வந்தன...

தூங்கா நகரத்தைப் பற்றி அருமையாக பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி...

த.முத்து கிருஷ்ணன் said...

அருமை நண்பரே

வா.கோவிந்தராஜ், said...

வருகை தந்த அனைவருக்கும் நன்றி

சித்திரவீதிக்காரன் said...

தூங்காநகரமான மதுரை குறித்த நல்ல பதிவு. ஆனால், இரவு நேர இட்லி & புரோட்டாக்கடைகளை குறிப்பிடாமல் விட்டுவிட்டார்களே!
பகிர்விற்கு நன்றி.

Tamilandth said...

நல்ல பதிவு.