Mar 28, 2013

கண்ணீர்ப் பிழைப்பு!


             தமிழக சட்டப்பேரவையில் மீண்டும் கச்சத்தீவு பிரச்னை எழுப்பப்பட்டு, அதற்கு தமிழக முதல்வர் விரிவான விளக்கமும் அளித்துள்ளார். இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளையும்   அவர் விவரித்துள்ளார்.
கச்சத்தீவு மாநில அரசின் அனுமதி இல்லாமலேயே 1974-இல் இலங்கைக்கு வழங்கப்பட்டது மிகப்பெரிய தவறு என்பதே, உலக அரசியல் நோக்கர்களின் கருத்தாக இருக்கிறது. இதை எதிர்த்து தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு வழக்குத் தொடுத்திருந்தாலும், அந்த வழக்கு இதுவரை விசாரணைக்கு வரவில்லை. விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டாலும், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியுமா என்பதும், கச்சத்தீவைத் திரும்பவும் இந்தியா பெற வேண்டும் என்று தீர்ப்பு வழங்கினாலும், இலங்கையை அந்தத் தீர்ப்பு கட்டுப்படுத்துமா என்பதும் சந்தேகம்தான்.
   கச்சத்தீவு இலங்கை அரசுக்கு அளிக்கப்பட்டாலும், 1974 ஒப்பந்தத்தின்படி, இலங்கை மீனவர்களும், இந்திய மீனவர்களும் இப்பகுதியில் தங்கள் பாரம்பரிய உரிமையுடன், தீவைச் சுற்றிலும் மீன் பிடிக்கலாம், தீவில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்துக்கு வந்து செல்லலாம். இதற்கு யாரும் விசா, கடவுசீட்டு வைத்திருக்க வேண்டியதில்லை. ஆனால், 1976-இல் கடிதம் மூலமான திருத்தத்தில், இந்தத் தீவில் இந்திய மீனவர்கள் தங்கள் வலைகளைக் காயப்போடவும் ஓய்வு எடுக்கவும் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்று மாற்றப்பட்டதாக இலங்கை அரசு சொல்கிறது.
1974 ஒப்பந்தப்படி, கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்துக் கொடுத்த பிறகுதான் இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் தாக்கப்படுவதும் சுடப்படுவதும் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது என்று புள்ளிவிவரங்கள் மூலம் அறியலாம்.ஆனால், இந்தச் சம்பவங்கள் அதிகரிக்கக் காரணம் கச்சத்தீவு மட்டுமே அல்ல. இதை முழுமையாக ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்றால் 1974-லிருந்து 2013 வரையிலான காலகட்டத்தை இலங்கையில் விடுதலைப் புலிகள் ஆதிக்கம் செலுத்திய காலம்; கரும்புலிகள் இக்கடற்பரப்பை ஆதிக்கம் செய்த காலம்; தற்போது இலங்கையில் விடுதலைப் புலிகள் இல்லாத காலம் என மூன்று பகுதிகளாகப் பிரித்துப் பார்க்க வேண்டும்.
    இலங்கை விடுதலைப் புலிகள் கொரில்லாப் போர் தொடங்கியபோது, அவர்களுக்கான உதவிகள் தமிழ்நாட்டிலிருந்துதான் வருகின்றன என்பதால் இலங்கைக் கடற்படையினர் இந்திய மீனவர் படகுகள் ஒவ்வொன்றையும் சந்தேகத்துடன் அணுகினர். கடத்தல்காரர்களாகக் கருதினர். தமிழ்நாட்டுக்குச் செல்லும் அல்லது திரும்பும் புலிகளாகக் கருதினர். இதனால் கண்மூடித்தனமாக தாக்குதல் கடலில் நடத்தப்பட்டது. அப்பாவி மீனவர்கள்தான் இதில் அதிகம் பாதிக்கப்பட்டார்கள்.
        விடுதலைப் புலிகளின் கடற்படையான கரும்புலிகள் ஆதிக்கம் பெற்றபோது, இந்திய மீனவர்களைக் கேடயமாகப் பயன்படுத்தி, இலங்கைக் கடற்படை தாக்கப்படுவதாக இலங்கை ராணுவம் புகார் கூறியது. அப்போதும் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தப்பட்டது.
இப்போது விடுதலைப் புலிகள் இல்லாத நிலை. இப்போதைய சிக்கல் வேறுவிதமாக மாறியிருக்கிறது. இத்தனை காலமாக மீன்பிடிப்பதற்கான தடையாலும், உள்நாட்டுப் போரினாலும் அச்சமடைந்து ஒதுங்கிநின்ற இலங்கை மீனவர்கள் தற்போது மீண்டும் மீன்பிடித் தொழிலைத் தொடங்கியுள்ளனர். இலங்கைக் கடற்பரப்பில்தான் அதிக மீன்வளம் இருக்கிறது என்பதால், இந்திய மீனவர்கள் எல்லைதாண்டிப்போய், இலங்கை மீனவர்களுக்குப் போட்டியாக மீன் பிடிக்கின்றனர்.
தமிழகத்தில் நாம் எவ்வாறு, இலங்கைக் கடற்படையின் அட்டூழியத்தைக் கண்டித்து நடவடிக்கை எடுக்க மத்திய அரசைக் கோருகிறோமோ அதுபோன்று, இலங்கை மீனவர்களும் தங்கள் அரசிடம் இந்திய மீனவர்களின் அத்துமீறல், மீன்கொள்ளை ஆகியவற்றைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோருகின்றனர்.இந்தப் பிரச்னைக்கு ஒரே தீர்வு இலங்கைக் கடற்பரப்பில் எதுவரையிலும் இந்திய மீனவர்கள் சென்று மீன்பிடிக்கலாம், எத்தனை லட்சம் டன் மீன்களைப் பிடிக்கலாம், எத்தனை விசைப்படகுகளை அனுமதிக்கலாம் என்பது குறித்த ஒப்பந்தம் போடுவதாகத்தான் இருக்க முடியும். கச்சத்தீவு மீதான உரிமை கிடைத்தாலும்கூட, இலங்கைக் கடற்பரப்பில் மட்டுமே மீன்வளம் அதிகம் என்பதால், இந்த ஒப்பந்தம் காணப்படாமல் பிரச்னைக்கு முடிவு வராது.இதில் இன்னொன்றும் நாம் பார்க்க வேண்டும். 1974-இல் இருந்த படகு எண்ணிக்கையைவிட இப்போதுள்ள படகு எண்ணிக்கை பல ஆயிரம் மடங்கு உயர்ந்துவிட்டது. ராமேஸ்வரம் மீனவர்கள் மட்டுமல்லாமல், நாகை, காரைக்கால் மீனவர்கள்தான் அதிகமான படகுகளில் செல்கிறார்கள். அதே கடற்பரப்பு, அதே மீன்வளம், ஆனால் பல்லாயிரம் படகுகள். இந்தப் படகுகள் பலவும் அரசியல் புள்ளிகளுக்கும், அவர்களது உறவினர்கள், பினாமிகள், ஆதரவாளர்களுக்கும் சொந்தமானவை. அவர்களும், மீன்பிடித் தொழில், மீன் ஏற்றுமதி என்று பல கோடி ரூபாய் லாபம் ஈட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
         இந்தப் படகு முதலாளிகள் ஒருநாளும் கடலுக்குள் சென்று வலைவீசியவர்கள் அல்ல. துப்பாக்கித் சூட்டில் சாகிறவன் மட்டும் மீனவன். ஒருவேளைக் கஞ்சிக்காக, அலைகடல்மேலே அலையாய்க் கிடந்து உயிரைக் கொடுப்பவர்கள் அவர்கள்தான். முடிந்தால் முடியும் தொடர்ந்தால் தொடரும் அதுதான் அவர்கள் வாழ்க்கை.
       இத்தனை நாளும் போரால் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரமும் கடல்தான் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. இந்திய அரசு வழங்கும் நிவாரணங்கள் ராஜபட்ச அரசால் தென் இலங்கைவாழ் சிங்களர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தத்தான் பயன்படுகிறது என்கிற நிலையில், இலங்கையில் வாழும் தமிழ் மீனவர்களின் பிரச்னையையும் கருத்தில்கொண்டு செயல்பட வேண்டிய கடமை நமக்கு உண்டு.
இலங்கைக் கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க உரிமை பெற்றுத் தருவதோடு, எத்தனை படகுகள் அங்கே செல்ல வேண்டும் என்பதையும் தீர்மானிப்பதாக, உரிமங்கள் வழங்குவோராக தமிழக அரசு இருக்க வேண்டும். அதுதான் இந்தப் பிரச்னைக்குத் தீர்வாக இருக்கும்.

No comments: