Jun 9, 2013

கருணாநிதியின் பேச்சு!அந்துமணி பா.கே.ப.,

தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு, மறைந்த முன்னாள் தலைவர்கள், சரித்திரம் படைத்த அரசர்கள், காவிய நாயகர் - நாயகிகளுக்கு சிலை வடிப்பதில் ஆர்வம் அதிகம். '70களில் அவர் முதல்வர் பதவி வகித்த போது, சென்னை மெரினாவில் பலருக்கும் சிலை எடுத்தார்!
சோழ மன்னன் ராஜராஜனுக்கு, தஞ்சை பெரிய கோவிலினுள் சிலை அமைக்க, 71ம் ஆண்டு முயன்றாராம் கருணாநிதி. ஆனால், அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி, கோவிலுக்குள் சிலையை வைக்க அனுமதிக்கவில்லையாம். அதனால், கோவிலுக்கு வெளியே சாலை ஓரத்தில் சிலையை வைத்தார் கருணாநிதி என்று, முன்பு எப்போதோ நடுத்தெரு நாராயணன் சார் கூறி இருந்தார் என்னிடம்!
"திண்ணை' பகுதியின், நடுத்தெரு நாரயணன் சாரை சமீபத்தில் சந்தித்தபோது, "ராஜராஜன் சிலை திறப்பு விழாவின் போது, கருணாநிதி ஆற்றிய உரை உங்களிடம் இருந்தால் கொடுங்களேன்...' எனக் கேட்டிருந்தேன். தேடித் தருவதாகச் சொல்லி இருந்தார்.
சமீபத்தில், வேறு எதையோ தேடும்போது, 71ம் ஆண்டு நாளிதழ் பிரதிகளை பார்க்க நேர்ந்தது.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேச்சு கிடைத்தது. அது:
தஞ்சை பெரிய கோவில், மாமல்லபுரம், கங்கை கொண்ட சோழபுரம் போன்ற கோவில்களை நம்மிடம் ஒப்படைத்தால், இன்னும் சிறப்பாக நம்மால் வைத்திருக்க முடியும். அவைகளை மாநில அரசிடம் ஒப்படைத்தால், இந்திய ஒருமைப்பாடு ஒன்றும் கெட்டு விடாது!
மதுரையில் திருமலை நாயக்கரின் சிலை நிறுவப்பட்டு இருக்கிறது. அதுவும் அம்பிகை இருக்கிற கர்ப்பகிரகத்துக்கு அருகிலேயே இருக்கிறது. மதுரை கோவிலை முழுவதும் அவர் கட்டியதற்கான சரித்திரபூர்வ ஆதாரம் இல்லை.
திருப்பணி செய்தவருக்கே சிலை வைக்கப்பட்டு இருக்கும் போது, பெரிய கோவில் முழுவதையும் கட்டிய ராஜராஜசோழனுக்கு ஏன் உள்ளே சிலை வைக்கக் கூடாது?
சேதுபதிக்கு ராமேஸ்வரத்தில் சிலை வைக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், ராஜராஜ சோழனுக்குத் தடை! ராஜராஜ சோழனுக்கு சிலை வைக்கப் போவது உறுதி; அதுவும், நாம் நினைக்கிற இடத்தில் வைப்போம்!
— இப்படிப் பேசி இருக்கிறார்; அதை ஒரு படி எடுத்துக் கொண்டேன்.
அடுத்த முறை நாராயணன் சார் ஆபிஸ் வந்த போது, இந்த காப்பியைக் கொடுத்து படிக்கச் சொன்னேன். அவர் படித்து முடித்ததும், "இந்திரா காந்தி தான் மறுத்து விட்டார். அதன் பின், வி.பி.சிங், தேவகவுடா, வாஜ்பாய் அரசுகளில், தி.மு.க., அங்கம் வகித்தது. ஆனால், ராஜராஜன் இன்னும் முச்சந்தியில் தானே நிற்கிறான்... ஏன் சார்...' என அப்பாவியாகக் கேட்டேன்.
"போய் கேட்க வேண்டிய இடத்தில் கேளு... என்னை வம்பில் மாட்டி விடாதே!' என்றபடியே நான் கொடுத்த டீயை குடித்துவிட்டு, நடையைக் கட்டினார்!

No comments: