Aug 3, 2013

சரிவைச் சரிக்கட்ட தெலுங்கானா! காங்கிரஸின் அரசியல் கணக்குஒரு பக்கம் சந்தோஷத்தையும் இன்னொரு பக்கம் கொந்தளிப்பையும் விதைத்துள்ளது புதிய மாநிலமான தெலுங்கானா! 
உள் துறை அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் கடந்த 2009 டிசம்பர் 9-ம் தேதி, சோனியா காந்தி மற்றும் பிரதமரை சந்தித்த கையோடு, இரவோடு இரவாக, 'தனி தெலுங்கானா அமைக்கப்படும்’ என்ற அறிவிப்பை வெளியிட்டார். அன்றைய தினம், சோனியா காந்தியின் பிறந்த நாள். இது 'சோனியாவுக்குப் பிறந்த நாள் பரிசு’ என்றார் அதிரடியாக. இப்படி இரவோடு இரவாக அறிவிக்கப்பட்டு மூன்று வருடங்களாகிவிட்டன. இப்போதுதான் அந்த அறிவிப்பு உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.
இந்தியா சுதந்திரம் அடைந்த காலகட்டத்தில் 14 மாநிலங்கள் இருந்தன. மைசூர், ஹைதராபாத், காஷ்மீர் போன்ற பல மாகாணங்கள் மகாராஜாக்கள், நிஜாம்களுக்கு உட்பட்டு இருந்தன. சுதந்திரத்துக்குப் பின்னர் இவற்றை எல்லாம் மத்திய அரசு தன்வசம் கொண்டுவந்தது. நிஜாம் அரசரின் கீழ் ஹைதராபாத்தைத் தலைமையிடமாகக் கொண்டிருந்த தெலுங்கானாவை, 1948-ல் தன்வசம் கொண்டு வந்தது மத்திய அரசு. பின்னர் அது தனி மாநிலமாகவே செயல்படத்தொடங்கியது. 1956-ல் மொழிவாரி மாநிலங்கள் அமைக்கும் பணி நடந்தது.
தெலுங்கு மொழி பேசும் மக்கள் அடங்கிய அகண்ட ஆந்திர மாநிலம் அமைய வேண்டும் என்ற போராட்டம் அப்போது வலுப்பெற்றது. இந்தக் கோரிக்கைக்காகவே பொட்டி ஸ்ரீராமுலு உண்ணாவிரதம் இருந்து உயிர்விட்டார். தெலுங்கானா உள்ளிட்ட கடலோர ஆந்திரம், ராயல சீமா போன்ற பகுதிகள் சேர்ந்த அகன்ற ஆந்திரம் உருவானது. அப்போதும் தெலுங்கானா மக்கள் ஆந்திரத்தோடு இணைய விருப்பம் இல்லாமலேயே இருந்தனர். மத்திய அரசு அமைத்த மாநிலங்கள் மறுசீரமைப்பு ஆணையகத்துக்குத் தலைமை வகித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஃபாசல் அலி, 'ஆந்திராவின் மற்ற பகுதி மக்கள் மொழிவாரியாக ஒன்றிணைந்து இருக்க விரும்புகின்றனர். ஆனால் தெலுங்கானாவில் நிலைமை தெளிவாக இல்லை’ என்று அறிக்கை கொடுத்தார். இருந்தும் அப்போதை மத்திய அரசு அதைக் கண்டுகொள்ளவில்லை.

தெலுங்கானா ஆந்திரத்துடன் ஒட்ட விரும்பாததற்குக் காரணம் உண்டு. கிட்டத்தட்ட 200 வருடங்களாக தெலுங்கானா பகுதி, நிஜாம் அரசர்களின் கீழ் தனித்தே செயல்பட்டது. மிகவும் பின்தங்கி இருந்த அந்தப் பகுதி மக்களின் கோரிக்கைக்கு அப்போதைய மத்திய அரசு மதிப்பு கொடுக்கவில்லை. 'ஆந்திர மக்களுக்குக் கடந்த ஐம்பது வருடங்களாகவே அடிமைப்பட்டு இருக்கிறோம்’ என்றே தெலுங்கானா மக்கள் கருதினர்.
தெலுங்கானா மக்களின் உண்மையான உணர்வுகளுக்கு மதிப்பளித்து இந்த முடிவை காங்கிரஸ் எடுத்ததா?
80 நாடாளுமன்றத்  தொகுதிகளைக் கொண்ட உத்தரப்பிரதேசத்தைப் பிரிக்காத காங்கிரஸ் 42 தொகுதிகளைக் கொண்ட ஆந்திராவை இப்படி அவசர அவசரமாகப் பிரிக்க முன் வந்த காரணம் என்ன? ஒரே வார்த்தையில் சொல்வதென்றால்... 'தேர்தல்’.
கடந்த 10 தினங்களாக சோனியா காந்தியின் ஜன்பத் இல்லத்திலும் ராகுல் காந்தியின் துக்ளக் லேன் வீட்டிலும் பரபரப்பான ஆலோசனைகள் நடந்தன. இறுதியில் ஆந்திரா மாநிலத்தை இரண்டாகப் பிரித்து புதிதாக 29-வது மாநிலமாக தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்படும் என்று ஆளும் காங்கிரஸ் கட்சி 30-ம் தேதி அதிகாரபூர்வமாக அறிவித்தது.
வருகிற 2014 தேர்தலுக்கான ரகசிய சர்வேக்கள் ஆந்திராவில் காங்கிரஸ் கட்சிக்கு உள்ள சிக்கல்களை எடுத்து சொல்ல, ஆந்திரத்தை இரண்டாகப் பிளப்பதன் மூலம் தெலுங்கானாவை தம் வசம் கொண்டுவர முடியும் என தீர்மானித்தது காங்கிரஸ். அக்கட்சியில் இப்போது ஆந்திராவுக்குப் பொறுப்பு வகிக்கும் திக்விஜய் சிங் இதைச் சாமர்த்தியமாகச் செய்தார். விருப்பமில்லாமல் இருந்த ராகுலை சம்மதிக்க வைத்ததில் இவருடைய பங்கு முக்கியமானது.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி கூட்டத்தில் பங்கெடுத்த தலைவர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளனர். மகராஷ்டிரா மாநிலத்தின் கிழக்குப் பகுதியின் 11 மாவட்டங்களை உள்ளடக்கிய 'விதர்பா’, உத்தரப்பிரதேசத்தின் கிழக்குப் பகுதியின் 22 மாவட்டங்களைப் பிரித்து 'ஹரித் பிரதேசம்’, மேற்குப் பகுதிகளைப் பிரித்து 'பூர்வாஞ்சல்’, மேற்கு வங்கத்தில் 'கூர்க்காலேண்ட்’, அசாமில் 'போடோலேண்ட் - டிமாலேண்ட்’, மத்திய பிரதேசத்தில் 'விந்திய பிரதேசம்’ என்று பல மாநிலங்களைப் பிரிக்கக் கோரும் வாதங்கள் எழுந்துள்ளன. ஆனால் ஆந்திராவில் காங்கிரஸுக்கு ஏற்பட்டுள்ள சரிவு அந்த வாதங்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டது.
ஆந்திரத்தில் காங்கிரஸ் கட்சி மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டது. இதைச் சரிகட்டுவதற்கு ஒரே வழி.. தெலுங்கானா. கர்நூல், அனந்த்பூர் மாவட்டங்களையும் தெலுங்கானாவில் சேர்க்கவும் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் 21 நாடாளுமன்றத் தொகுதிகள் தனி தெலுங்கானா மாநிலத்துக்கு உட்பட்ட பகுதியில் கிடைக்கும். தெலுங்கானா போராட்டத்தில் முன்னணியில் இருந்த முன்னாள் காங்கிரஸ் பிரமுகரும் டி.ஆர்.எஸ். தலைவரான சந்திரசேகர ராவோடு போடப்பட்டுள்ள ரகசிய ஒப்பந்தமும் ஓகே ஆனதைத் தொடர்ந்துதான் இந்தத் தனி தெலுங்கானா அறிவிப்பு.
தெலுங்கானாவைத் தனியாகப் பிரித்ததில் ஆந்திர மக்களிடம் அதிருப்தி ஏற்பட்டிருப்பது நிஜம்தான். அதைச் சமாளிக்கவும் காங்கிரஸுக்கு ஒரு திட்டம் இருக்கிறது.
பத்து ஆண்டுகளுக்கு மட்டுமே ஹைதராபாத் இரு மாநிலங்களுக்கும் பொதுவான தலைநகர். பிறகு தெலுங்கானாவின் புதிய தலைநகர் விஜயவாடாவா, குண்டூரா என்ற பிரச்னை வரும். மாநில எல்லைகள், தண்ணீர், மின்சாரப் பகிர்வு, அரசு ஊழியர்கள் பகிர்வு என மற்ற பிரச்னைகளும் வந்து சேரும். அதன் மூலம் காங்கிரஸ் எதிர்ப்பு குறைந்துவிடும் என்பது அந்தக் கட்சியின் எதிர்ப்பார்ப்பு.
ஒரே தாய்மொழியினரையும் அரசியல் இரண்டாகப் பிரித்துவிட்டது. ஆனால் இரண்டு மாநிலமும் வளர்ச்சி அடைந்தால் வருத்தப்பட எதுவும் இல்லை!

No comments: