Aug 5, 2014

உணவு யுத்தம்!-27

பிஸ்கட் பிடிக்கிறதா?
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்தபோது ஒரு அறிவிப்பைத் தொடர்ந்து கேட்டேன்… ‘ரயில் பயணத்தில் கவனமாக இருங்கள். மயக்க மருந்து கலந்த பிஸ்கட் கொடுத்து ஏமாற்றிவிடுவார்கள்’ என்றது அந்தக் காவல் துறை அறிவிப்பு.
ஒரு பக்கம் பயணம் பாதுகாப்பில்லாமல் போய்விட்டதே என்ற அச்சம் எழுந்தபோதும் மறுபக்கம் முகம் தெரியாதவர் கொடுத்தால்கூட பிஸ்கட்டை ஏன் சாப்பிட விரும்புகிறோம் என்ற எண்ணமும் கூடவே வந்தது.

இலக்கியக் கூட்டமோ, கருத்தரங்குகளோ, தொலைக்காட்சி நேர்காணலோ, அறிந்தவர் வீட்டுக்குப் போனாலோ… ஒரே மாதிரியான பிஸ்கட்தான் சாப்பிடத் தருகிறார்கள். காகிதத்தை தின்பது போல ஒரு ருசி.
பிஸ்கட் நம்காலத்தின் சகல நேர நிவாரணி. அழுகிற குழந்தையாக இருந்தாலும் அழையாத விருந்தாளியாக இருந்தாலும் பிஸ்கட்தான் ஒரே தீர்வு.
உப்பு பிஸ்கட், மிளகு பிஸ்கட், ஓம பிஸ்கட், ராகி பிஸ்கட், சாக்லேட் பிஸ்கட். க்ரீம் பிஸ்கட், வேஃபர், ஓட்ஸ் பிஸ்கட், குருவி பிஸ்கட், தேன் கலந்த பிஸ்கட், பழ பிஸ்கட், ஏலக்காய் பிஸ்கட், தேங்காய் பிஸ்கட் இப்படி நூற்றுக்கும் மேற்பட்ட ரகங்கள், சுவைகள். 
பேச்சிலர் வாழ்க்கையில் திருவல்லிக்கேணி மேன்ஷனில் வசித்தபோது நண்பர்கள் பிஸ்கட்டை பசிதாங்கி என்பார்கள். பசிக்கிற நேரத்தில் ஒன்றிரண்டு பிஸ்கட்டுகளைச் சாப்பிட்டு பசியை ஆற்றிக்கொள்ள வேண்டும் என்பது எழுதப்படாத விதி. அவசர உதவிக்காக எப்போதும் கோதுமை பிஸ்கட்டுகள் அறையில் கிடக்கும்.
இந்த பிஸ்கட்டுகளில் ஒன்றை ஒருமுறை காகத்துக்கு உணவாகப் போட்டேன். வேகமாக வந்து அதை கொத்திப் பார்த்த காகம் இதை மனுஷனால் மட்டும் சாப்பிட முடியும் என்பது போல முகத்தைத் திரும்பிக்கொண்டு காலால் உதறி தள்ளிவிட்டு கரைந்தபடியே பறந்தது. சில பிஸ்கட் ரகங்களைப் பசி இல்லாத நேரங்களில் மனிதர்களால் ஒரு துண்டுகூட சாப்பிட முடியாது என்பதே உண்மை.
எனது நண்பர்களில் ஒருவர் எப்போதும் தனது காரில் ஐந்து ரூபாய் பிஸ்கட் பாக்கெட்டுகள் நிறைய வைத்திருப்பார். எதற்கு என கேட்டதற்கு, ‘சாலை சிக்னலில் நின்று பிச்சை எடுப்பவர்களுக்குக் காசு கொடுப்பதற்குப் பதிலாக பிஸ்கட் பாக்கெட்டுகள் தந்துவிடுவேன். காசு கொடுப்பதைவிட பசியைப் போக்குவதே முக்கியம் என நினைக்கிறேன்’ என்றார். ஆச்சர்யமாகவும் புது வழியாகவும் இருந்தது.
இவரைப் போலவே இன்னொரு நண்பர் அலுவலகம் கிளம்பும்போது இரண்டு பிஸ்கட் பாக்கெட்டுகள் வாங்கி பைக்கில் வைத்துக்கொள்வார். காரணம் கேட்டபோது, ‘சேல்ஸ்மேனாக வேலை செய்கிறேன். நாங்கள் போகிற வீடுகளில் உள்ள நாய்களை சமாளிக்கத் தினமும் இரண்டு பாக்கெட் பிஸ்கட் தேவைப்படுகிறது’ என்றார்
எப்படி எல்லாம் பிஸ்கட் பயன்படுகிறது பாருங்கள்.
சமீபத்தில் ஒரு பிரபல பிஸ்கட் கம்பெனியின் விளம்பரத்தில் நடிப்பதற்காக இந்தி திரையுலக நட்சத்திரம் ஒருவருக்கு 12 கோடி சம்பளம் என நாளிதழில் செய்தி வெளியாகியிருந்தது. எதற்காக பிஸ்கட்டை இப்படி விளம்பரப்படுத்துகிறார்கள்? ஒரு நடிகருக்கு 12 கோடி பணம் தரப்படுகிறது என்றால், அந்தச் சுமையை யார் மீது ஏற்றுவார்கள்? இன்னொரு டிவி விளம்பரத்தில் பிஸ்கட் சாப்பிடுவதை ஆர்கசம் போல காட்டுகிறார்கள்.
உணவுப் பொருட்களின் விற்பனையை அதிகப்படுத்த ஊடக விளம்பரங்களில் எல்லா தந்திரங்களையும் கையாளுகிறார்கள். அவர்களின் குறி சிறார்கள் மற்றும் இளைஞர்கள். ஆண்டுக்கு 10 ஆயிரம் கோடிக்கும் மேலாக உணவு விளம்பரங்களுக்குச் செலவிடப்படுகின்றன. இவ்வளவு விளம்பரம் செய்து ஏன் உணவுப்பொருளை விற்கிறார்கள்? இப்படி விற்கப்படும் பொருளின் தரம் மற்றும் அதன் பக்கவிளைவுகள் பற்றி ஏதாவது விழிப்பு உணர்வு நம்மிடம் இருக்கிறதா என்ன?
பீட்சா சாப்பிடுங்கள், பிஸ்கட் சாப்பிடுங்கள், நூடுல்ஸ் சாப்பிடுங்கள், சாக்லெட் தின்னுங்கள், குளிர்பானம் குடியுங்கள் என்று 24 மணி நேரமும் விளம்பரங்கள் நம் வீட்டு ஹாலுக்குள் ஒலித்தபடியே இருந்தால் பள்ளிப் பிள்ளைகளின் மனதைப் பாதிக்காமலா இருக்கும்?
அதன் விளைவு இன்று 80 சதவிகித பள்ளி மாணவர்கள் இடைவேளையின்போது ஐந்து ரூபாய் பாக்கெட் என விற்கும் பிஸ்கட்டுகள் மட்டுமே சாப்பிடுகிறார்கள். அதுதான் பிஸ்கட் விற்பனை மிகவும் உயர்ந்து போனதற்கான முக்கியக் காரணம்.
பள்ளிக்கூடம் செல்லும் பிள்ளைகளின் லஞ்ச் பாக்ஸை பற்றி பெற்றோர்கள் பெரிதாக கவனம் கொள்வதே இல்லை, பெரும்பான்மை பிள்ளைகள் சத்துகுறைவான, போதுமான சரிவிகித உணவு இல்லாத மதிய உணவைத்தான் கொண்டுபோகிறார்கள். கீரைகள், பச்சைக் காய்கறிகள், சிறுதானியங்கள் உண்ணுகின்ற மாணவர்களைக் காணுவது அரிதாக இருக்கிறது.
‘டோட்டோசான் ஜன்னலில் ஒரு சிறுமி’ என்ற ஒரு ஜப்பானிய நூல் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியாகியிருக்கிறது. ஒவ்வொரு பெற்றோரும் மாணவரும் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம் இது என்பேன்.
டெட்சுகோ குரோயாநாகி என்ற பெண், தான் படித்த டோமாயி என்ற பள்ளியைப் பற்றி இந்த நூலில் பகிர்ந்திருக்கிறார். இந்தப் பள்ளியில் வகுப்பறையாக ரயில் பெட்டிகள் மாற்றி அமைக்கப்பட்டிருந்தன. இந்தப் பள்ளியில் பயின்ற டோட்டோசான், மாணவர்கள் மீது இந்தப் பள்ளி எந்த அளவு அக்கறை காட்டியது என்பதற்கு ஒரு உதாரணம் சொல்கிறார்.
வீட்டில் இருந்து மாணவர்கள் கொண்டுவரும் மதிய உணவில் என்ன இல்லையோ, அதைப் பள்ளியே தயாரித்து மாணவர்களுக்கு வழங்குவது வழக்கமாக இருந்தது. அதாவது மாணவர்களின் ஆரோக்கியத்துக்குத் தேவையான காய்கறி, மீன், முட்டை போன்றவற்றைப் பள்ளியே சமைத்து ஒவ்வொரு மாணவரின் டிபன் பாக்ஸிலும் எது குறைகிறதோ அதை சாப்பிடப் பரிமாறுவார்கள். இதனால் மாணவர்களுக்கு சரிவிகித உணவு முறையாக கிடைப்பதுடன் பள்ளி தங்கள் மேல் எவ்வளவு அக்கறையாக உள்ளது என்பதும் உணர்த்தப்படுகிறது.
அதன் காரணமாகவே குழந்தைகள் உணவை வீணடிப்பதில்லை. ஒரு பருக்கையைக்கூட சிதறுவதில்லை. குச்சிகளைக் கொண்டு சாப்பிடப் பழக்குவது என்பது ஓவியம் வரையக் கற்றுத்தருவதற்கு இணையானது. இரண்டிலும் கவனமும் அக்கறையும் தேவை என்கிறார் யமாகுசி என்ற கல்வியாளர்.
பள்ளிக் குழந்தைகள் எடுத்துச்செல்லும் பிஸ்கட்டுகளில் அவர்கள் உடல்நலத்துக்கான புரதம், கொழுப்பு மற்றும் இதர பொருட்கள் எந்த அளவில் உள்ளன, அவை போதுமானவையா, பழங்கள், முளைக்க வைத்த தானியங்கள் ஆகியவை பிஸ்கட்டுகளுடன் கொடுத்து அனுப்பலாமா என்பதைப் பற்றி பெற்றோர் அக்கறைகொள்ள வேண்டும்.
மாணவர்கள் என்ன சாப்பிடுகிறார்கள் என்பதைப் பற்றி எந்தப் பள்ளியும் அக்கறைகொள்வது இல்லை. அசைவம் சாப்பிடக் கூடாது, துரித உணவுகள் கூடாது என்ற கட்டுப்பாடுகள்தான் இருக்கிறது. ஆரோக்கியமான உணவைத்தான் குழந்தைகள் சாப்பிடுகிறார்களா என பள்ளிகள் கண்காணிப்பது இல்லை. அதில் அக்கறை செலுத்துவதும் இல்லை.
சில பள்ளி வளாகத்தில் செயல்படும் கேன்டீன்களும் விடுதிகளிலும் தயாரிக்கப்படும் உணவு வகைகள் மோசமான தரத்தில் இருக்கின்றன. அது மாணவர்களின் ஆரோக்கியத்துக்கு ஊறு விளைவிக்கும் என்பதைக்கூட பள்ளி கண்டுகொள்வது இல்லை.
நாலு பிஸ்கட்டும் பாலும் கொடுத்துவிட்டால் பையன் தானே வளர்ந்துவிடுவான் என்ற தவறான கற்பிதம் நிறைய பெற்றோர்களுக்கு இருக்கிறது. மருத்துவர்கள் இதற்கு மாற்றான அறிவுரைகள் கூறும்போது கீரை, பழம், காய்கறிகள் எல்லாம் பையன் சாப்பிட மாட்டான் என பெற்றோர்களே ஒதுக்கிவிடுகிறார்கள்.
பிஸ்கட் நமக்கு பிடித்தமான உணவுதான், ஆனால் தேவையான உணவா என்று நாம் யோசிக்கத்தான் வேண்டியிருக்கிறது.
100 வருஷங்களுக்கு முன்பு பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் வழியேதான் பிஸ்கட் நமக்கு அறிமுகமானது. ஆரம்ப காலங்களில் அதை நோயாளிகளின் உணவு என்றே வகைப்படுத்தி வைத்திருந்தார்கள். பின்பு அது பணக்காரர்களின் சிறு தீனியாக உருமாறியது… விருந்துகளில் பரிமாறப்பட்டது.
இன்றும் சென்னையில் காலை எழுந்தவுடன் பிஸ்கட் உடன் டீ சாப்பிடும் பழக்கம் அடித்தட்டு மக்கள் பலரிடமும் காணப்படுகிறது. பொறை டீ, பிஸ்கட் டீ, பன் டீ என ஏதாவது ஒன்றுடன்தான் காலையைத் தொடங்குகிறார்கள். பிரிட்டிஷ் காலத்துப் பழக்கம் இன்னமும் நம்மை விட்டுப் போகவில்லை.
சிறுவயதில் குருவி பிஸ்கட் என்ற ஒன்றை விரும்பிச் சாப்பிட்டிருக்கிறேன். குருவி, யானை, ஒட்டகம், சிங்கம் போன்ற வடிவங்களில் தயாரிக்கப்படும் பிஸ்கட் யாருடைய கற்பனை என அப்போது தெரியாது. வளர்ந்த பிறகே அந்த பிஸ்கட்டுக்குப் பின்னாலும் ஒரு வரலாறு இருப்பதை அறிந்தேன்.
விலங்குகளின் வடிவத்தில் பிஸ்கட் தயாரிக்கும் பழக்கம் இங்கிலாந்தில்தான் துவங்கியது. ஆரம்ப காலங்களில் யானை, கரடி, ஒட்டகம், குரங்கு, புலி, முதலை என 54 வகையான விலங்குகளின் வடிவங்களில் பிஸ்கட்டுகள் செய்யப்பட்டன. பிரிட்டனில் இருந்து அமெரிக்கா சென்ற இந்த யானை பிஸ்கட்டுகளை பெர்னாம் சர்க்கஸ் கம்பெனி தனது விளம்பரத்துக்காகப் பயன்படுத்தியது. சர்க்கஸ் பார்க்கப் போகிறவர்கள் விலங்கு வடிவ பிஸ்கட்டுகளை வாங்கிச் சாப்பிட விரும்பினார்கள். அதனால் இந்த பிஸ்கட்டுகள் புகழ்பெறத் தொடங்கின.
அதன் பிறகு கிறிஸ்துமஸ் காலங்களில் சிறார்களை மகிழ்விப்பதற்காக விலங்கு வடிவ பிஸ்கட்டுகள் கொண்ட டின்கள் பரிசுப் பொருளாக உருமாறின. இப்போதும் அது போன்ற டின்னில் அடைத்த விலங்கு வடிவ பிஸ்கட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால் இதில் 54 விலங்குகளின் உருவமில்லை, 26 மட்டுமே உள்ளன. புதிதாக எந்த விலங்கின் வடிவத்தில் பிஸ்கட் தயாரிக்கலாம் என சிறார்களிடமே ஆலோசனை கேட்ட பிஸ்கட் கம்பெனிகள் சூப்பர் ஹீரோக்கள், மற்றும் ஏலியன்ஸ் உருவங்களில் தற்போது பிஸ்கட் தயாரிக்கிறார்கள்.
பிஸ்கட் சாப்பிடுவது நல்லதா, கெட்டதா என்ற வாதப் பிரதிவாதங்கள் உள்ளன. அதன் நன்மை தீமையை முடிவு செய்வது அத்தனை எளிதானது அல்ல….

No comments: