Oct 9, 2012

ஒட்டுண்ணிகள்! தினமணி தலையங்கம்


காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா என்ன தொழில் செய்கிறார் என்று யாருக்கும் தெரியாது. அவரை ""வெற்றிகளைக் குவிக்கும் வியாபாரி. அரசியலுக்கு மாற மாட்டார்'' என்று பிரியங்கா தெரிவித்தபோது என்ன தொழில் செய்கிறார் என்று யாரும் கேட்கவில்லை. இப்போது "உங்கள் தொழில் என்ன? உங்களுக்கு எப்படி இவ்வளவு சொத்துகள் வந்தன?' என்று "ஊழலுக்கு எதிரான இந்தியா' அமைப்பின் தலைவர் கேஜரிவால் மற்றும் பிரசாந்த் பூஷண் இருவரும் கேட்கிறார்கள் என்றால், அதற்கு வலுவான காரணங்கள் இருக்கின்றன.
 "வெறும் ரூ. 50 லட்சம் முதலீட்டில் தொடங்கிய தொழில் இப்போது ரூ.300 கோடிக்கும் மேலாக மதிப்பு பெற்றது எப்படி?' என்று கேட்கும் கேஜரிவால், இதுவரை ராபர்ட் வதேரா நடத்தும் நிறுவனங்கள் வாங்கியுள்ள சொத்துகள் குறித்த விவரங்களையும், "இந்த சொத்துகள் ஏன் சந்தை மதிப்பைவிடக் குறைவான விலையில் உங்களுக்கு விற்கப்பட்டன? எந்த அடிப்படையில் இந்தச் சொத்துகளை வாங்கக் கடன் அளிக்கப்பட்டது?' என்று கேள்விகளை அடுக்கிக்கொண்டே செல்கின்றார்.
 இந்தியாவின் மிகப்பெரும் வீடு, மனை, நிலம் விற்பனை நிறுவனம் டி.எல்.எப். இந்த நிறுவனம் வதேராவுக்கு நம்பிக்கையின் பேரில் வியாபார ரீதியாக ரூ.65 கோடி முன்பணம் கொடுத்ததை ஒப்புக்கொள்கின்றது. ஆனால், ஏன் முன்பணம் கொடுக்கவேண்டும்? அதற்காக அவரிடம் செய்துகொண்ட தொழில் ஒப்பந்தம் என்ன? என்று அதுகுறித்து விளக்கம் கேட்டால் சொல்ல மறுக்கிறது.
 "நாங்கள் கொடுத்த பணத்தில் ரூ.15 கோடியைத் திருப்பிச் செலுத்திவிட்டார். ரூ.50 கோடிக்கு நிலப் பரிமாற்றம் நடந்துள்ளது' என்று மட்டும் சொல்கின்றது டி.எல்.எப். நிறுவனம். இந்த நிறுவனத்தின் பதில் சட்டப்படியாக சரியாக இருந்தாலும்கூட, ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை என்பதை நாம் சொல்ல வேண்டியதில்லை, அந்த நிறுவனத்தின் பங்கு விலை கடந்த இரு நாள்களில் அடைந்துள்ள வீழ்ச்சியே சொல்லும்!
 டிஎல்எப் நிறுவனம் - ராபர்ட் வதேரா இடையிலான கொடுக்கல் வாங்கல், வியாபாரம் ஆகியவை சட்டப்படி கணக்குக் காட்டப்பட்டிருக்கிறது என்கிறார் வதேராவுக்காக வக்காலத்து வாங்கும் மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித். ஆனால், இதேபோன்று எல்லா நிறுவனங்களுக்கும், எந்தப் பிணையும் இல்லாமல் ரூ.65 கோடியை முன்பணமாக டி.எல்.எப். அள்ளிக் கொடுத்துவிடுமா? இந்தப் பரிவர்த்தனை அவர் ராபர்ட் வதேரா என்பதற்காக அல்ல, அவர் சோனியா காந்தியின் மருமகன் என்பதற்காகத்தான் என்று விவரம் தெரியாத குழந்தைகூடச் சொல்லிவிடுமே!
 இந்தியாவில் எம்.பி., எம்.எல்.ஏ., அமைச்சர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள் உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகள், அரசியல் தலைவர்கள் என்று யார் பெயரிலும் பெருமளவு சொத்து கிடையாது. அரசியல்வாதிகள் வேட்புமனு தாக்கலின்போது தெரிவிக்கும் சொத்துகளைத் தவிர வேறு ஏதும் சேர்த்துக்கொண்டதில்லை. சிலர் பாவம், சொந்தமாக ஒரு கார்கூட இல்லாதவர்கள்!
 ஆனால், இவர்களது மனைவிமார்கள் கோடீஸ்வரர்களாக இருக்கிறார்கள். பிள்ளைகள், மாப்பிள்ளைகள், அண்ணன், தம்பி, மைத்துனன் எல்லாரும் பெருந்தொழிலதிபர்களாக மாறிவிடுகிறார்கள். இந்திய அளவிலும் தமிழ்நாட்டிலும் இத்தகையவர்களைப் பட்டியல்போட்டால், அதில் விதிவிலக்காக இருப்பவர்களை விரல்விட்டு எண்ணி விடலாம்.
 பெரிய இடத்துத் தொடர்புடைய யாரை வேண்டுமானாலும் கேட்டுப்பாருங்கள். அவர்கள் எல்லோருமே தங்கள் "திறமையால்' வளர்ந்ததாகத்தான் சொல்கிறார்கள். ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி யாரையும் மிரட்டவில்லை, தொழில்போட்டியை ஒடுக்கவில்லை, அதுவாக வளர்ந்தது என்கிறார்கள். இதை நாம் நம்புவோம் என்றும் நம்புகிறார்கள்.
 உரிய ஆவணம் அல்லது தொழில் திட்டம் இல்லாமல் கடன், முன்பணம் பெறுவது ஊழலாகக் கருதப்படுவதில்லை; ஒரு தொழில் முனைவோருக்கான வாய்ப்பாகப் பேசப்படுகிறது. ஒரு இணை நிறுவனத்தின் வளர்ச்சியை நசுக்கினால் அதனை தொழில்போட்டியில் இயல்பானதாகப் பார்க்கிறார்கள். அதிகாரிகளைத் தங்கள் நிறுவன மேம்பாட்டுக்குப் பயன்படுத்திக்கொண்டால், அது நட்பு ரீதியிலான ஆலோசனையாகப் பார்க்கப்படுகிறது. இவை யாவும் "ஊழல்' என்ற வட்டத்துக்குள் வருவதே இல்லை.
 ஒருவர் தனது பதவியைத் தவறாகப் பயன்படுத்தினால் குற்றம் சொல்லும் இந்திய அரசியல் சட்டம், அவரது உறவினர்கள், அதைத் தவறாகப் பயன்படுத்தினால் அதை அப்பதவி வகிப்பவரின் குற்றமாகப் பார்ப்பதில்லை. இதுதான் சட்டத்தின் ஓட்டை. ஆகவே எம்.பி., எம்.எல்.ஏ., அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் சொத்துகளில் மாற்றம் இருப்பதே இல்லை. அவர்களைச் சுற்றியுள்ள ரத்த உறவுகள் மலையென சொத்துகளைக் குவித்துக்கொண்டே இருக்கின்றன.
 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில், சந்தைப் பொருளாதார அடிப்படையிலான கார்ப்பரேட் சட்டத்தின்படி, ஒரு நிறுவனத்தின் பங்குகளை இன்னொரு நிறுவனம் வாங்குவது சட்டப்படி சரி என்கிற நியாயத்தைப் பயன்படுத்தித்தான் முறைகேடு நிகழ்ந்தது. வதேரா விவகாரத்தில் மட்டுமல்ல, பிரமுகர்களின் வாரிசுகள் சம்பந்தப்பட்ட பணப் பரிமாற்றங்கள் சட்டத்தின் போர்வையில் சரியாகத்தான் இருக்கிறது. நேர்மைக்கு விடைகொடுத்துவிட்டு பணத்துக்கு சிவப்புக் கம்பளம் விரிக்க முற்பட்டிருக்கும் சந்தைப் பொருளாதார அவலத்தின் வெளிப்பாடுதான் சுற்றி இருப்பவர்கள் சொத்து சேர்க்கும் சாமர்த்தியம்.
 அரவிந்த் கேஜரிவாலும், பிரசாந்த் பூஷணும் கூறுவதுபோல, லோக்பால் அமைப்பு என்று ஒன்று இருந்திருந்தால், வதேரா மீதான குற்றச்சாட்டை அங்கே தாக்கல் செய்திருக்கலாம். நீதிமன்றத்தில் சட்டம்தான் எடுபடுமே தவிர தர்மத்துக்கு இடம் கிடையாதே...
 வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்த அதிகாரிகள், அமைச்சர்கள் கைது செய்யப்படுவதைப்போல, வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்த அவர்தம் உறவுகள் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்படும் நிலைமை வராமல் போனால் இந்திய ஜனநாயகம் தீவிரவாதிகளின் பிணைக்கைதியாகிவிடும் துர்பாக்கியம் ஏற்படும், ஜாக்கிரதை!

Oct 1, 2012

குமுதம் ரிபோர்டர் பைத்தியம் :நாஞ்சில் சம்பத் கடும் தாக்கு

குமுதம் ரிபோர்டேரும் பைத்தியம் அதை படிக்கிறவர்களும் பைத்தியம் நாஞ்சில் சம்பத் கடும் தாக்கு

      கூட்டணியில் இருந்த காலத்திலேயே போயஸ் தோட்டத்தின் வாசல் படிகளை மிதிக்காதவன் நான்

மற்றவர்களை காட்டிலும் வைகோவோடு எனக்கு ஆழமான அடர்த்தியான தொடர்பு உண்டு ,கல்லூரி படிக்கிற கால் சட்டை பருவம் முதல் என் காலடியில் காணாமல் போன தமிழர் மாண்புகளை கண் முன்னாள் மீட்டு எடுக்கும் காவிய தலைவன் வைகோ என்று நம்பி அவரின் கரம் பற்றியவன் நான் ,செய்தி வந்த அந்த நாளிலும் கழகத்தின் விதைகளை அரபு நாடுகளில் தூவி கொண்டு இருந்தேன் ,கூட்டணியில் இருந்த காலத்திலேயே போயஸ் தோட்டத்தின் வாசல் படிகளை மிதிக்காதவன் நான் இது போன்று பரபரப்புக்காக செய்தி போட்டு பணம் தேடுவதை விட குமுதம் ரிபோர்ட்டர் வேறு ஏதாவது தொழில் செய்து பிழைக்கலாம் ,கழக தோழர்கள் இது போன்ற செய்திகளை நம்ப வேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன்

Sep 3, 2012

ராஜபக்சவுக்கு எதிராக ம.பி.யில் மதிமுக போராட்டம்: வைகோ

இந்தியா வரும் இலங்கை அதிபர் ராஜபக்ச மத்திய பிரதேச மாநிலம் சாஞ்சியில்  நடைபெற் உள்ள நிகழ்ச்சியில் பங்கேற்க வரும்போது,அவருக்கு எதிராக அங்கு மதிமுக  போராட்டம் நடத்தும் என்று அக்கட்சிட்யின் பொதுச் செயலாளர் வைகோ  அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"இலட்சக்கணக்கான  ஈழத்தமிழர்களை சிங்கள இனவாத அரசு முப்படைகளை ஏவி எங்கள் தமிழக்குல ரத்த  உறவுகளை கோரமாக கொன்று அழித்த கொடியவன் ராஜபக்ச, மத்திய பிரதேச  மாநிலத்தில் சாஞ்சியில் செப்டம்பர் 21 ஆம் தேதி புத்தமதம் தொடர்பான கல்வி  மையத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்பதற்காக அழைத்துள்ளதாகவும்,  ராஜபக்சே அதில் பங்கேற்கப் போவதாகவும், பாரதிய ஜனதா கட்சியின் மக்களவை  எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.கவுதம புத்தர் பெருமகனார் பெயரை உச்சரிப்பதற்கு கூட அணுவளவும் தகுதி இல்லாத  கொடிய கொலைகாரன்தான் ராஜபக்சே,புத்தரின் பெருமை பேசும் விழாவில் ராஜபக்ச  கலந்துகொண்டால் புத்தரின் எலும்புகள் கூட அதை மன்னிக்காது.
 
மத்தியில் காங்கிரஸ் தலைமை தாங்கும், சோனியா காந்தி இயக்கும் ஐக்கிய  முற்போக்குக் கூட்டணி அரசு ஈழத்தமிழர்களை அழிக்க சிங்கள அரசுக்கு ஆயுதங்களும்,  ஆயிரக்கணக்கான கோடிகளும் கொடுத்து, தமிழ் இனக்கொலைக்கு உடந்தையாக  செயல்பட்டு இன்றுவரை மன்னிக்க முடியாத பல துரோகங்களை செய்து வருகிறது.

புத்தரின் பெயரைச் சொல்வதற்கு எந்த அருகதையும் இல்லாது தமிழர்களை படுகொலை  செய்த சிங்கள இனவாத ராஜபக்ச அரசுக்கு, புத்தரின்  புனிதப்பொருள்களை  அனுப்பக்கூடாது  என்று வற்புறுத்தி யிருந்தேன். ஆனால், தமிழர்களின் மன வேதனைகளை  உதாசினப்படுத்திவிட்டு புத்தர் பெருமானின் எலும்புகள் உள்ளிட்ட புனிதப்பொருள்களை  மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் குமாரி செல்ஜாயும், தேசிய அருங்காட்சியகத்தின்  இயக்குநர் நாயகம் பிரவீண் ஸ்ரீவத்சவாவும் கொழும்புக்கு கொண்டுபோய் தமிழர்களின்  ரத்தம் தோய்ந்த ராஜபக்ச கரங்களில் ஒப்படைத்தனர்.இதற்கு என்றைக்கும் மன்னிப்பே  கிடையாது.

மத்திய பிரதேசத்தில் இருந்து நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவரான வாஜ்பாய்  பிரதமராக இருந்த காலத்தில், சிங்கள அரசு பணம் கொடுத்தாலும் இந்திய அரசு  ஆயுதங்களை விற்காது என்று துணிச்சலாக முடிவெடுத்து அனைத்துக்கட்சி கூட்டத்திலும்  அறிவித்தார்.அதனையே செயல்படுத்தினார். ஆனால் இன்றோ உடல் நலம் மிக நலிந்து  பேசவும் முடியாமல் அடல் பிகாரி வாஜ்பாய் படுத்த படுக்கையாக இருப்பதால்தான்  இப்படிப்பட்ட மன்னிக்க முடியாத துரோகம் தமிழருக்கு செய்யும் கேடுகெட்ட செயலை  சுஷ்மா சுவராஜூம், மத்திய பிரதேச பா.ஜ.க. அரசும் அறிவிக்கும் நிலை  ஏற்பட்டுள்ளது.

பாரதிய ஜனதா கட்சி தலைவர் நிதின் கட்காரியும், ஈழத்தமிழர்கள் நலனில் உண்மையான  அக்கறை கொண்டுள்ள யஷ்வந்த்சின்கா போன்ற பாரதிய ஜனதா கட்சி தலைவர்களும்  மகிந்த ராஜபக்சவை புத்தர் விழாவுக்கு அழைக்கும் முடிவை ரத்து செய்ய உரிய  நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

எனது நியாயமான இந்த வேண்டுகோளை உதாசீனம் செய்து மாபாவி ராஜபக்சவேவை  மத்திய பிரதேச சாஞ்சியின் விழாவுக்கு அழைத்து வந்தால், அதனை எதிர்த்து சாஞ்சியில்  செப்டம்பர் 21 ல் எனது தலைமையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்  கருப்புக்கொடி போராட்டம் நடத்தும் என்று திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறேன்"  என்று கூறியுள்ளார்.