Jul 23, 2014

நலம் 360’–5


வ்வொரு பெண்ணும் பூப்பெய்தியதில் இருந்து, தோராயமாக 35 வருடங் களாகவது, மாதத்துக்கு மூன்று அல்லது நான்கு நாட்களை கொஞ்சம் வலி, கொஞ்சம் சிரமம், கொஞ்சம் பயம், கொஞ்சம் சுகவீனம் கலந்தே நகர்த்தி வருகிறார்கள். 47-51 வயதை எட்டும்போது மாதவிடாய் நின்று, ‘இனிமேல் இது இல்லை’ என்ற விடுதலையைத்தான் ‘மெனோபாஸ்’ என்கிறார்கள். இது நல்ல உடல்வாகைப் பெற்றிருக்கும் 35 சதவிகிதத்துக்கும் குறைவான பெண்களுக்குத்தான். மீதமுள்ள 65 சதவிகிதத்தினர் இந்த நாட்களில் படும் அவஸ்தைகள், அனுபவித்தால் மட்டுமே புரியும். சாதாரண ரத்தசோகையில் இருந்து, வாந்தி, தலைவலி, பிழியும் வயிற்று வலி, வயிற்று உப்புசம்… என உபாதைகள் அவஸ்தையாக, ‘சனியன்… இது எப்போ ஒழியும்?’ என்று உதிரத்துக்கு முன்னதாகவே கண்ணீர் ஊற்று எடுக்க, இறுதி யுத்தத்துக்குக் காத்திருப்பார்கள்.

‘மாதவிடாய் நிறுத்தத்தை, இயல்பான உடல் இயங்கியல் நகர்வு’ என்று நினைத்துதான் பெண்ணுலகம் இத்தனை காலம் அதனைக் கடந்து வந்தது. ஆனால், நிலைமை சமீபமாக அப்படி இல்லை. ‘மூட்டுவலி, இடுப்புவலி, இதயப் படபடப்பு, திடீர் வியர்வை, தனிமையான பய உணர்வு’ எனப் பல சிக்கல்களை மெனோபாஸ் தோற்றுவிக்கிறதோ எனச் சந்தேகம் உண்டாகிறது. மாதவிடாய் முடிவை பல்நோய்க்கூட்டமாகவும், நோயின் முதல் அறிகுறியாகவும் பார்க்க ஆரம்பிக்கிறார்கள். ‘சில மாற்றங்களுக்குத் தயாராகும் மனமும் உடலும் தயங்கித் திணறும் சில பொழுதுகள் மட்டும்தான் அப்படி. அதெல்லாம் சீக்கிரமே சரியாகிடும்’ என்று கூறிக்கொண்டே, ‘எதுக்கும் இந்த டெஸ்ட் எல்லாம் பண்ணிடுங்க…’ என்று ஒரு பட்டியலையும் நீட்டுகிறார்கள் மருத்துவர்கள்.
‘உனக்கு எதுக்கும்மா இப்போ அனார்கலி சுடிதார்?’ என்ற வளர்ந்த குழந்தைகளின் உதாசீனங்களும், கூடவே தொலைந்துபோய்விட்ட அவசர முத்தங்கள், அரவணைப்புகள், ‘அட’ எனும் ஆச்சர்யங்கள், சந்திக்க மறுக்கும் கண்கள்… என கணவரின் விலகல் தரும் வலி, பலருக்கு இப்போது மாதாமாதம் அல்ல… தினமும் உண்டு. ‘முகச் சுருக்கமும் வாடலும் உலர்ந்துபோய்விட்ட சருமமும் மகப்பேறுகள் தந்த தொப்பையும்தான், என்னை இப்படி அவரிடம் இருந்து விலக்கி வைக்கின்றனவா? அல்லது மகன்/மகளின் மொழி, உடை, அசைவு, அலங்காரம் அவர்களது முக்கியங்கள், படிப்பு, பரபரப்பு… என எல்லாவற்றையும் புரிந்துகொள்ள முடியவில்லையே… அதனாலா?’ என்ற குழப்பத்துடன் நகரும் நாட்கள் இவை. உடலும் மனமும் வதைபடும் இந்த நாட்களில் என்ன செய்ய வேண்டும், எதைச் சாப்பிட்டால் மீண்டும் புத்துணர்வு பெறலாம், இது நோயா… அல்லது வெறும் பயமா? ஏராளமான சந்தேகங்கள் மெனோபாஸ் பருவப் பெண்களை அலைக்கழிக்கும். ஆங்கிலத்தில் இதனை Empty nest syndrome என்பார்கள்.

தாய்ப் பறவை, தினம் தினம் தன் கூட்டிலுள்ள குஞ்சுகளுக்கு உணவு எடுத்து வந்து வாயில் புகட்டும். ஒருநாள் அப்படி வரும்போது கூட்டில் எந்தக் குஞ்சும் இல்லாததைக் கண்டு, பதறி அலறி முடங்குமாம். அந்தக் குஞ்சுகளுக்கு இறக்கை வளர்ந்து தனியாகப் பறந்து            போய்விட்டன எனத் தாய்ப் பறவைக்குத் தெரியாது; புரியாது. இந்த வலியை, படபடப்பைத்தான், மாதவிடாய் முடிவில் இருக்கும் தாயுடன் ஒப்பிடுகிறார்கள்.
இனிமேல் கருமுட்டை வேண்டாம் என உடல் நிறுத்திக்கொள்ளும் இந்தப் பருவத்தில்தான், எலும்புகளின் சுண்ணாம்பு அடர்வு குறைய ஆரம்பிக்கிறது. ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பு ‘வி.ஆர்.எஸ்’ எடுத்துக்கொள்வதால், இந்தக் குறைபாடு நிகழ்வதாக நவீன மருத்துவம் கூறுகிறது. இதனால் ஏற்படும் ஆஸ்டியோபோரோசிஸ், மகப்பேறு சமயம் விரிந்து சீரான கூபக (pelvis) எலும்புகளைப் பாதிக்கும். அதோடு மாதவிடாயின்போதும் ஓய்வின்றி அடுப்பு ஏற்றி, ரயில் ஏறி, பஸ் ஏறி, எவரும் தன் சிரமம் உணராவண்ணம் ஓடியாடி உழைத்ததில், கால் மூட்டுகளில், கழுத்து – இடுப்பு எலும்புகளில் பெரும்பாலும் கால்சியம் குறையும். இதைத் தவிர்க்க சற்றே அதிகப்படி கால்சியம் சத்து எடுத்துக்கொள்ள வேண்டும். சாதாரணமாக தினசரி 1,000 மி.கி கால்சியம் தேவைப்படும்போது, மெனோபாஸ் சமயத்தில் 1,250 மி.கி வரை அவசியமாம். அப்படி எடுக்கத் தவறும்போது, முதுமையில் குளியலறையில் வழுக்கி விழுந்தால், பாட்டிகளுக்கு தொடை எலும்பின் பந்து கழுத்துப்பகுதி உடைவதற்கான வாய்ப்புகள் அதிகமாம்!
மாதவிடாய் முடியும் தருவாயில் கால்சியம் மட்டும் போதாது; வைட்டமின்-டி சத்தும் தேவை என்கிறது அறிவியல். அதனால், இப்போது வைட்டமின்-டி பரிசோதனை கிடுகிடுவெனப் பிரபலமாகி வருகிறது. மெனோபாஸ் மட்டுமல்லாது, சர்க்கரை வியாதி, இதய வியாதி, ரத்தக் கொதிப்பு/கொழுப்பு என எதற்கு வைத்தியம் செய்தாலும், ‘எதுக்கும் வைட்டமின்-டி சரியா இருக்கானு பார்த்துக்கங்க…’ என அறிவுறுத்துகிறார்கள். சூரிய ஒளியில் இருந்து மனித உடல் தானே இதனைத் தயாரித்துக்கொள்ளும் நிலையில், நம்ம ஊரில் குறைச்சலாகவா சூரிய ஒளி இருக்கிறது… இங்க எதுக்கு இதெல்லாம்? என யோசித்தால், உண்மை விவரம் உலுக்குகிறது.
இந்தியரில் 79 சதவிகிதத்தினருக்கு வைட்டமின்-டி மிகக் குறைவாகவும், 15 சதவிகிதத்தினர் பற்றாக்குறையுடனும், 6 சதவிகிதத்தினருக்கு மட்டுமே சரியான அளவிலும் இருப்பதாக ஆய்வு முடிவுகள் சொல்கின்றன. சூரிய ஒளி தரும் யுவி கதிரை, சருமத்துக்கு அடியில் உள்ள கொழுப்புச் சத்தும் ஈரலும் சேர்ந்து ‘வைட்டமின்-டி3’ ஆக உருமாற்றி அனுப்பும் சம்பவம், பெரும்பாலானோருக்கு கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துபோனது ஏன் எனப் புரியவே இல்லை. ‘ஏ.சி-யில் வேலை செய்கிறார்கள், சூரிய ஒளியையே பார்ப்பது இல்லை, சன் ஸ்கிரீன் லோஷன் தேய்க்கிறார்கள்…’ எனப் பல காரணங்களை அடுக்குகிறார்கள். ஆனால், இவற்றை எல்லாம் தாண்டி, உணவிலும் சூழலிலும் வேறு காரணங்கள் இருக்கக்கூடும் என்ற ரீதியிலும் ஆராய்ச்சிகள் தொடர்கின்றன.
வைட்டமின்-டி சேர்க்காத பால் விநியோகமும், பலர் சைவம் மட்டுமே சாப்பிடுவதும்தான் இதற்குக் காரணங்கள் எனச் சொல்லும் மருத்துவ ஆய்வாளர்கள், அயோடின் சேர்த்த உப்பு போல, ‘வைட்டமின்-டி’யையும் அனைத்திலும் சேருங்கள் எனக் கிட்டத்தட்ட அலறுகிறார்கள். அயோடின் உப்பு தரும் நன்மை-தீமை(?) குறித்த விவாதங்களே இன்னும் நிலுவையில் இருக்கும்போது, இது வேறா எனத் தோன்றுகிறது. அதோடு, அந்த அலறலுக்குப் பின்புறம் இருப்பது அக்கறையா, வணிக் கண்ணியா என்ற பயமும் உள்ளது. இப்போது வாரத்துக்கு ஒருமுறையேனும் வைட்டமின்-டி மாத்திரை சாப்பிடுங்க எனச் சொல்வது மருத்துவ சம்பிரதாயமாகி வருகிறது.
‘அந்த அரசியல் எல்லாம் இருக்கட்டும். முதல்ல எங்களுக்கு கால்சியமும் வைட்டமின்-டி வேறு எங்கு கிடைக்கும்? அதைச் சொல்லுங்க!’ எனக் கேட்போருக்குச் சில செய்திகள்.
பால், கால்சியத்துக்கான சரியான தேர்வு என்றாலும், பால் அருந்துவதால் உண்டாகும் பக்கவிளைவுகளைப் பார்க்கையில், மோர்தான் ‘பெட்டர் சாய்ஸ்’ என்று தோன்றுகிறது. ஒரு குவளை மோரில் கிட்டத்தட்ட 250 மி.கி கால்சியம் கிடைக்கும். சில வகை கீரை, வெண்டைக்காய், சோயா பீன்ஸ், தொலியுடன்கூடிய உருளை, அத்திப்பழம், பாதாம் பருப்பு… இவற்றில் கொஞ்சம் கொஞ்சம் கால்சியம் உண்டு. கீரை, சூரிய ஒளியில் வளரும் சில காளான்கள், மீன், முட்டை, இறைச்சி, ஈரலில்… வைட்டமின் டி அதிகம் கிடைக்கும்.
பெண்களுக்கு மெனோபாஸ் சமயத்தில் வரும் இன்னொரு பிரச்னை, கேன்சர் பயம். புள்ளிவிவரங்கள் சொல்லும் மார்பகப் புற்றின் எதிர்பாராத அளவு உயர்வு, காலங்காலமாக நம்மிடையே உள்ள கர்ப்பப்பை வாய்ப் புற்று இரண்டுமே சமீபத்திய துரித வாழ்விலும், சிதைந்த உணவிலும், மன அழுத்தத்திலும் இன்னும் கூடிக்கொண்டே போகின்றன. ஒவ்வொரு பெண்ணும், இந்தப் பருவத்தில் மார்பகங்களை மேமோகிராம் மூலம் பரிசோதித்துக்கொள்வதும், கர்ப்பப்பை வாய்ப் பகுதிக்கு பாப்ஸ்மியர் சோதனை மேற்கொள்வதும் அவசியமான ஒன்று. தங்கள் பரம்பரையில் முன்பு புற்று வரலாறு இருந்தால்கூட, அவை வரும் வாய்ப்பு அதிகம். நிறைய மகளிர், மாதவிடாய் முடியும் சமயம் வரும் கர்ப்பப்பை நார்க்கட்டியைப் பார்த்து, புற்றுக்கட்டியோ என்ற அச்சத்தில், கர்ப்பப்பையை அறுவைசிகிச்சை செய்து நீக்கிவிடும் போக்கு, மிக அதிகமாக நடக்கிறது. குறிப்பாக, இந்த அறுவைசிகிச்சை கிராமங்களிலும் செமி நகரங்களிலும் அதிகம். புற்றுக்கான மரபு வாய்ப்பு, மிக அதிக ரத்தப்போக்கும் அதனால் ஏற்படும் அனீமியாவையும் தவிர, பிற காரணங்களுக்கு அறுவைசிகிச்சை அவசியம் இல்லை. 30-35 வயதுகளில் ஏற்படும் இந்த வகையான கர்ப்பப்பை நீக்கத்தில், செயற்கையாக நிகழும் மெனோபாஸ், நிறையப் பேருக்கு உடல் எடை திடீர் அதிகரிப்பு, மூட்டுவலி, உளவியல் சிக்கலை ஏற்படுத்தும். அதிக ரத்தப்போக்குடன் சின்ன நார்க்கட்டிகள் இருக்கும்பட்சத்தில், சாப்பாட்டில் துவர்ப்பு சுவை அதிகம் உடைய உணவுகள் சேர்ப்பது அவசியம். வாழைப்பூ பொரியல், வாழைத்தண்டு தயிர்பச்சடி, சுண்டைக்காய் வற்றல், மணத்தக்காளி வற்றல், கிரீன் டீ… போன்றவை துவர்த்து உடல் காப்பவை. எந்தக் கட்டியும் வளரக் கூடாது எனில், இனிப்பு குறிப்பாக வெள்ளை அரக்கனான சர்க்கரையைத் தவிர்ப்பது மிக முக்கியம்.
இதுவும் கடந்துபோகும் என்ற நம்பிக்கைதான் மெனோபாஸுக்கான முதல் எண்ணம். ‘நீ ஏன் என்னோட டிசைனர் ஸாரியைக் கட்டக் கூடாது?’ என மகளின் அன்பான அக்கறையும், ‘என்னோட காலேஜ் ஃபங்‌ஷனுக்கு நீ கண்டிப்பா வர்ற… சொல்லிட்டேன்’ என்ற மகனின் பாசமான கண்டிப்பும் மெனோபாஸுக்கான தடுப்பு வேக்சின்கள். ‘தினம் ஓடிக்கிட்டே இருக்கிற… இன்னைக்கு கம்பு தோசையும் கடலைச் சட்னியும் நாங்க செஞ்சு தர்றோம். நீ கொஞ்சம் டி.வி பாரு, புத்தகம் படி, கேண்டி க்ரஷ் விளையாடு…’ என்ற கணவரின் கரிசனமும் மாதவிடாய் சம்பந்தமான, பிரிஸ்கிரிப்ஷனில் இடம்பெறாத மிக முக்கியமான மருந்துகள்!

உணவு யுத்தம் ! – 24




காபி எதற்காக நெஞ்சே?
‘குடும்பப் பெண்கள் எவரும் காபி கடைகளுக்கு வரமாட்டார்கள். அங்கே பரத்தையர்கள் மட்டுமே வருவார்கள்’ என்ற சூழ்நிலை நிலவியதால் பல காபி ஹவுஸ்களில் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ‘ஆண்கள் நேரம் போவது தெரியாமல் காபி குடித்துக்கொண்டு, வேசிகளுடன் அரட்டை அடித்துப் பொழுதைப் போக்குகிறார்கள். இதனால், இரவு தாமதமாக வீடு திரும்பும் ஆண்களின் செக்ஸ் ஆசை குறைந்துவிட்டது’ என மனைவிகள் போர்கொடி தூக்கினார்கள்.

காபி கடைகளுக்கு எதிராகப் பெண்கள் போராட்டம் நடத்தினார்கள். காபி குடிப்பதால் ஆண்மை பறிபோகிறது என வழக்கு மன்றத்தில் புகார் அளிக்கப்பட்டு நீதிவிசாரணை நடைபெற்றது.
இன்னொரு பக்கம், ஜெர்மனியில் அறிமுகமான காபி கடைகளில் அதிகம் பெண்கள் கூடுகிறார்கள் என்பதால், ஆண்களுக்கு இடம் கிடைக்காமல் போனது. காபி கடைகள் காதலர்களின் மையமாக உருவானது.
ஆரம்பக் காலங்களில் காபி விற்பனையை அதிகப்படுத்த வேண்டி அதை மருந்துப்பொருள் என விற்பனை செய்ய ஆரம்பித்தனர். சுவையூட்டும் பானமாக மட்டுமின்றி, நரம்புகளுக்குப் புத்துணர்வு தரும் மருந்து எனவும் விற்பனை செய்யப்பட்டது. ஆகவே, காபி மருந்துகடைகளில் வைத்து விற்கப்பட்டது.
17-ம் நூற்றாண்டில் டச்சு வணிகர்கள் மூலம் காபி ஜப்பானுக்கு அறிமுகமானது. அங்கே காபி பெரிய வரவேற்பு பெறவில்லை. 1888-ல்தான் டோக்கியோவில் முதன்முறையாக ஐரோப்பிய காபி கடை ஒன்று திறக்கப்பட்டது. அதற்கு முறையான வரவேற்பு இல்லாமல் போனதால், நான்கு வருடங்களில் மூடப்பட்டது. ஆனால், 1930-களுக்குப் பிறகு ஜப்பானில் மீண்டும் காபி மோகம் தலைதூக்கியது. 30 ஆயிரம் காபி கடைகள் நாடு முழுவதும் உருவாகின. மரபாக தேநீர் அருந்துகிற நாடாக இருந்தபோதும், இன்று ஜப்பான் உலகில் அதிகம் காபி குடிக்கும் நாடுகளில் ஒன்றாக அடையாளப்படுத்தப்படுகிறது.
காபி தோட்டங்களில் வேலை செய்வதற்காக, ஒரு மில்லியன் ஆப்பிரிக்க மக்கள் கொத்தடிமைகள் ஆக்கப்பட்டார்கள். கரிபீயத் தீவுகளில் காபி விளைவிக்க அடிமைகளே பயன்படுத்தப்பட்டார்கள். தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் போலவே காபி தோட்டங்களிலும் அடிமை முறை பரவலாக இருந்தது. இன்றும் சிக்மகளூரில் உள்ள காபி தோட்டங்களில், பழங்குடி மக்கள் கட்டாய உழைப்பு செலுத்த வேண்டிய சூழல் உள்ளது.
1615-ல் காபி ஐரோப்பாவுக்கு அறிமுகமானபோது, அது உடலையும் மனத்தையும் கெடுக்கும் பானம் என, அதை தடை செய்யும்படியாக போப் ஆண்டவரிடம் கத்தோலிக்கப் பாதிரிகள் முறையிட்டார்கள். ஆனால் அவர் காபியை தடை செய்ய மறுத்துவிட்டார்.
சீனாவுக்கு ஜெசுவிட் பாதிரியார்கள் மூலம் காபி 1800-களில் அறிமுகமானது. ஆரம்ப நாட்களில் சீனர்கள் எவரும் காபி கடைகள் வைப்பதற்கு முன்வரவில்லை என்பதால், இந்தக் கடைகளை மேற்கத்திய வணிகர்களே நடத்தினார்கள். சீன காபி ஐரோப்பிய காபிகளைப் போலின்றி வாசனைப் பொருட்கள் சேர்க்கப்பட்டு புதிய நறுமணத்துடன் புகழ்பெறத் தொடங்கிய பிறகே, சீனர்கள் காபி கடைகளைத் தொடங்கினார்கள். இன்று உலகெங்கும் சீன காபி கடைகள் புகழ்பெற்று விளங்குகின்றன.
எத்தியோப்பியாவில் காபி குடிப்பது என்பது ஒரு சடங்கு. வீட்டுக்கு யாராவது விருந்தினர் வந்தால், அவர்களுக்கு என விசேஷமாக காபி தயாரிப்பார்கள். இதற்காக, காபி கொட்டைகள் வறுத்து அரைக்கப்பட்டு சூடாக காபி தயாரிக்கப்படும். இந்த காபி தயாரிக்க ஒரு மணி நேரமாகும். அப்படித் தயாரான காபியை உடனே குடித்துவிடக் கூடாது. விருந்தினர்கள் கொஞ்சம் கொஞ்சமாக காபியைக் குடித்து முடிக்க ஒன்றிரண்டு மணி நேரமாகும். குடிக்கக் குடிக்க காபியை நிரப்பிக்கொண்டே இருப்பார்கள். இதனால், ஒரு வீட்டுக்கு காபி குடிக்கப் போய்வருவதாக இருந்தால், நான்கு மணி நேரம் தேவைப்படும். அந்த அளவுக்கு காபி குடிப்பது எத்தியோப்பியாவில் பண்பாடாக மாறியிருக்கிறது.
உடனடியாகக் குடிப்பதற்கு ஏற்றார்போல இன்ஸ்டன்ட் காபி பவுடர் தயாரிப்பது 1771-ல் பிரிட்டனில் அறிமுகமானது. 1853-ல் அமெரிக்காவில் கேக் வடிவில் காபி பவுடர் தயாரிக்கப்பட்டது. நியூசிலாந்தைச் சேர்ந்த டேவிட் ஸ்ட்ராங் என்பவர் உடனடி காபித் தூளை சந்தையில் அறிமுகம் செய்தார்.
இந்தியாவின் காபி விளைச்சலில் கர்நாடகா, கேரளா, தமிழகம் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் முதன்மையாக உள்ளன. இன்று இந்தியாவில் 25 ஆயிரம் காபி விளைவிப்போர் இருக்கிறார்கள். இவர்களில் 98 சதவிகிதம் பேர் சிறிய உற்பத்தியாளர்கள். 10 ஏக்கருக்கும் குறைவான நிலப்பரப்பில் காபி விளைவிப்பவர்கள். இந்தியாவில் 3,46,995 ஹெக்டேர் பரப்பில் காபி உற்பத்தி செய்யப்படுகிறது.
காபி விற்பனையை ஒழுங்குமுறை செய்வதற்காக இந்திய காபி வாரியம் உருவாக்கப்பட்டு, அதன் வழிகாட்டுதலில் காபி உற்பத்தி நடைபெறுகிறது. இது போலவே காபி உற்பத்தியாளர்களின் கூட்டுறவு சங்கம் மூலம் இந்தியா முழுவதும் காபி கடைகள் திறக்கப்பட்டன.
இந்தியன் காபி ஹவுஸ் எனப்படும் இந்தச் சங்கிலித்தொடர் காபி கடைகள் 1957-ல் அறிமுகமாகின. இந்தியன் காபி ஹவுஸ் கடை புதுடெல்லியில் அக்டோபர் 27, 1957-ல் திறக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாகப் புதுச்சேரி, திருச்சூர், லக்னோ, நாக்பூர் மும்பை, கொல்கத்தா, பூனே, சென்னை என இந்தியா முழுவதும் காபி கடைகள் திறக்கப்பட்டு மிகுந்த வரவேற்பு பெற்றன. இன்று கேரளாவில் மட்டும் 52 இந்தியன் காபி ஹவுஸ்கள் செயல்படுகின்றன.
யுத்த காலத்தில் காபியின் விலை உயர்ந்த காரணத்தால், சிக்கரி கலந்து குடிக்கும் பழக்கம் உருவானது. சிக்கரி எனப்படும் தாவரம் பீகார், பஞ்சாப், இமாசலப்பிரதேசம், அசாம், மகாராஷ்டிரா, குஜராத், தமிழ்நாடு, ஒடிசா, உள்ளிட்ட மாநிலங்களில் பயிரிடப்படுகிறது. இதன் வேரில் இருந்தே சிக்கரி பொடி தயாரிக்கிறார்கள். சிக்கரியில் காஃபீன் கிடையாது. அதை காபியுடன் கலந்தால், வாசனை தூக்கி நிற்கும். அதனால் சிக்கரி கலந்த காபியை பலரும் விரும்புகின்றனர்.
நீராவி மூலம் காபி தயாரிக்கும் எக்ஸ்பிரஸோ இயந்திரம் காபியைப் பிரபலப்படுத்தியது. எக்ஸ்பிரஸோ இயந்திரம் டூரின் நகரத்தைச் சேர்ந்த ஆஞ்சலோ மோரியோன்டோவால் 1884-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த இயந்திரத்தை சற்று மாற்றி, நவீனமாக வடிவமைப்பு செய்தவர் லூயி பெஸிரா. இவர் மிலனை சேர்ந்தவர். இவரது தயாரிப்பை பேவோனி நிறுவனம் விலைக்கு வாங்கிச் சந்தையில் அறிமுகப்படுத்தியது.
ஃபில்டர் காபி தயாரிக்கும் மெஷின் 1908-ல் அறிமுகமானது. ஜெர்மனியைச் சேர்ந்த மெடில்டா என்ற பெண்மணி ஃபில்டர் காபி தயாரித்தார். இந்த ஃபில்டர் மெஷினை மெடில்டா குடும்பத்தினரே சந்தைப்படுத்தினார்கள்.
1833-ல் தானியங்கி காபி இயந்திரத்தை டாக்டர் எர்னெஸ்ட் தயாரித்தார். இன்று காபி கடைகளில் பயன்படுத்தப்படும் எக்ஸ்பிரஸோ மெஷின்களை உருவாக்கியவர் அக்கிலஸ் ககியா.
இன்று பெரும்பான்மை சாலையோரக் கடைகளில் பேப்பர் கப்களில் காபி தருகிறார்கள். பேப்பர் கப்களில் காபி குடிப்பது தவறானது. காரணம், மெழுகு பூசப்பட்ட கப்பில் சூடான காபி நிரப்பப்படும்போது, சூட்டில் மெழுகு உருகி காபியுடன் கலந்துவிடுகிறது. அதைக் குடித்தால் வயிற்றுவலி உருவாக வாய்ப்பு அதிகம்.
காபி தயாரிக்கும் இயந்திரங்களின் வளர்ச்சி ஒரு பக்கமும், ஊடகங்களில் தரப்படும் விளம்பரங்கள் மறுபுறமுமாக, காபியை முக்கிய விற்பனைப் பொருளாக்கியுள்ளன.
காபி கடைகளில் விற்பனை செய்வதற்கு என்றே விசேஷ கேக்குகள், ரொட்டிகள் உருவாகின. காபி கடைகளில் படிப்பதற்கென, காபி டேபிள் புக்ஸ் எனும் அழகிய புத்தகங்கள் வடிவமைக்கப்பட்டன. காபி குடிப்பது நம்பிக்கையின், புத்துணர்வின் அடையாளமாக ஊடகங்களால் முன்னிறுத்தப்படுகிறது. அது ஒரு மாயையே. இன்றைய காபி மோகத்தின் பின்னால் வணிக நிறுவனங்களின் 50 ஆண்டு இடைவிடாத விளம்பரங்கள் காரணிகளாக உள்ளன.
இன்றைக்கு எது நல்ல காபி என்பதைவிட, அது எந்தப் பன்னாட்டு நிறுவனத்தின் காபி என்பதை நோக்கி கவனம் திருப்பப்பட்டிருக்கிறது. அதுதான் வணிகத்தின் தந்திரம்.
‘காப்பி எதற்காக நெஞ்சே?
காப்பி எதற்காக?
கையினில் சுக்குடன் மல்லி இருக்கையில்
காப்பி எதற்காக?’
என்றார் பாவேந்தர் பாரதிதாசன்.
இந்தத் தலைமுறைக்கு, பாரதிதாசனையும் தெரியாது, சுக்கு காபியும் பிடிக்காது. பிராண்டட் காபி ஷாப் ஒன்றில், ஒரு நாளைக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்கிறார்கள். அதில் 86 சதவிகிதம் இளைஞர்களே வாடிக்கையாளர்கள் என்கிறது ஒரு புள்ளிவிவரம்.
எதிர்காலத்தில் ஒரு நபரின் ஒரு நாள் சம்பளம் ஒரு காபியின் விலையாக இருக்கும் என்கிறார்கள். காலம் போகிற போக்கைப் பார்த்தால், அது நடந்துவிடும் என்றே தோன்றுகிறது.

உணவு யுத்தம்!-23


கடவுளும் காபி கடைகளும்
திரைப்படத் துறையைச் சேர்ந்த இளம் இயக்குநர் தனது புதிய திரைப்படம் குறித்து விவாதிப்பதற்காக என்னைச் சந்திக்க விரும்பினார். எங்கே சந்திக்கலாம் எனக் கேட்டேன். ‘காபி ஷாப்புக்கு வந்துவிடுங்கள், அங்கேதான் முழுப்படத்தின் திரைக்கதையும் எழுதினேன்’ என்றார். காபி பப் என்கிற நவீன காபி ஷாப்புகள் பண்பாட்டு மாற்றத்தின் நவீன அடையாளங்கள். அவர் குறிப்பிட்ட பன்னாட்டு நிறுவனத்தின் காபி ஷாப்புக்குப் போயிருந்தபோது மேற்கத்திய இசையும் இலவச இணைய வசதியுள்ள மேஜை ஒன்றில் அவர் தனியே அமர்ந்திருந்தார்.
எக்ஸ்பிரஸோ, ஐரீஷ், மோச்சா, லாத்தே, டபுள் ஷாட், ப்ளாட் வொயிட், அமெரிக்கானோ, காபச்சினோ, ஐஸ் காபி, என 30-க்கும் மேற்பட்ட சுவைகளில் காபி வகைகள் கொண்ட மெனுவை என்னிடம் நீட்டி, ‘உங்களுக்கு விருப்பமான காபியைச் சொல்லுங்கள்’ என்றார்.
வழக்கமான ஃபில்டர் காபி இங்கே கிடைக்காது என்பதால் காபி லாத்தே ஆர்டர் செய்தேன். லாத்தே காபி இத்தாலியின் சிறப்புப் பானம். அதில் பாலின் நுரை மிக அதிகமாக இருக்கும். இத்தாலியர்களுக்கு மிகவும் விருப்பமான காபி அது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் சென்னையில் புதிது புதிதாக 100-க்கும் மேற்பட்ட காபி ஷாப்புகள் வந்துள்ளன. இத்தாலிய காபி, அமெரிக்கக் காபி வகை, அரபு வகைக் காபி, பிரெஞ்சு காபி, மொராகோ காபி எனச் சர்வதேச காபி விதங்கள் அத்தனையும் கிடைக்கின்றன.
நெடுஞ்சாலைகளில் நூறடிக்கு ஒரு கும்பகோணம் காபி கடை. இந்தியாவில் காபி விற்பனை ஆண்டுக்கு 1,400 கோடி ரூபாய். இது 2017-ல் 2,250 கோடியை தொடும் என்கிறார்கள். இவ்வளவு காபி மோகம் எப்படி உருவானது என வியப்பாக இருந்தது.
புதுமைப்பித்தனின் ‘கடவுளும் கந்தசாமி பிள்ளையும்’ சிறுகதையில் பூமிக்கு வரும் கடவுளை காபி சாப்பிடத்தான் அழைத்துப் போகிறார் கந்தசாமி பிள்ளை. கடவுளுக்கும் காபி ருசி பிடித்தேயிருக்கிறது.
கடவுள் காப்பியை எடுத்துப் பருகியபோது சோமபானம் குடித்த தேவ களை முகத்தில் தெறித்தது.
”நம்முடைய லீலை” என்றார் கடவுள்.
”உம்முடைய லீலை இல்லைங்காணும். ஹோட்டல்காரன் லீலை. அவன் சிக்கரிப் பவுடரைப் போட்டு வைத்திருக்கிறான்” என்றார் கந்தசாமிப் பிள்ளை
”சிக்கரிப் பவுடர் என்றால்…?” என்று சற்றுச் சந்தேகத்துடன் தலையை நிமிர்த்தினார் கடவுள்.
”சிக்கரிப் பவுடர், காபி மாதிரிதான் இருக்கும்; ஆனால் காப்பி அல்ல; சிலபேர் தெய்வத்தின் பெயரைச் சொல்லிக் கொண்டு ஊரை ஏமாற்றிவருகிற மாதிரி” என்றார் கந்தசாமிப் பிள்ளை
இப்படிக் கடவுளே சிக்கரி கலந்த காபியை குடித்துத்தான் மனுஷனுடன் நட்புறவு ஏற்படுத்திக்கொள்ள வேண்டியதிருக்கிறது. அந்த அளவுக்கு காபி குடிப்பது கைவிடமுடியாத பழக்கமாக மாறிவிட்டிருக்கிறது.
இன்றைக்கும் ஒரு நல்ல காபி குடிக்க வேண்டும் என்பதற்காக ஆட்டோ பிடித்து நல்ல காபி ஹோட்டல் தேடிப்போய்க் குடித்துவருபவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். ஒரு கோப்பை காபி இருந்தால்போதும் காலை உணவு கூடத் தேவையில்லை என்றொரு ரகம் இருக்கிறது. ‘இன்ஸ்டன்ட் காபி பொடியால் தயாரிக்கப்பட்ட காபியை மனுஷன் குடிக்க முடியாது, அது பேதிமருந்து போலிருக்கிறது’ எனச் சலிப்பவர் பிறிதொரு வகை.
ஃபில்டர் காபியிலும் பசும்பால் கொண்டு தயாரிக்கப்படும் காபிக்கு நிகரில்லை எனக் கும்பகோணத்துவாசிகள் புகழ்பாடுகிறார்கள். 
சர்வதேச அளவில் விநோதமான காபி வகைகள் விற்பனைக்கு வந்துள்ளன. அதில் ஒரு வகை, புனுகுப் பூனைக்குக் காபிப் பழங்களை உண்ணக் கொடுத்து, அது மலம் கழிக்கும்போது வெளியேறும் கொட்டைகளை எடுத்து அதில் காபி தயாரிக்கிறார்கள். அந்தக் காபி நிகரற்ற ருசி கொண்டது என்கிறார்கள். அதன் விலை 4,000. இப்படி யானை, குரங்குகள், பறவைகள், விலங்குகளின் கழிவுகளில் இருந்து கிடைக்கும் காபி கொட்டைகளைக்கொண்டு காபி தயாரித்துக் குடிப்பது புதிய மோகமாகப் பரவி வருகிறது. ஐரோப்பாவில் காபி மார்டினி என்ற பெயரில் வோட்கா கலந்த காபி விற்கப்படுகிறது.
50 ஆண்டுகளுக்கு முன்பு வரை காபி குடிப்பது என்பது அந்தஸ்த்தின், உயர்சாதியின் அடையாளம். டீக்குடிப்பவர்கள் என்றால் சாதாரண ஏழை எளிய மக்கள், உழைப்பாளிகள் என்று அர்த்தம். இன்றும் வட இந்தியாவில் காபி குடிப்பவர்கள் என்றால் மதராஸி என்றுதான் சொல்கிறார்கள். காரணம் தேநீர்தான் வட இந்தியாவில் அதிகம் அருந்தப்படுகிறது.
பெரும்பான்மை சைவ உணவகங்களில் இன்றும் டீ விற்பது கிடையாது. உணவிலும் சாதி கலந்திருக்கிறது. கவனமாகப் பின்பற்றப்படுகிறது நண்பர்களே. இன்றும் வீட்டுக்குள் பனங்கிழங்கு, பெல்லாரி வெங்காயம், கசகசா, சோம்பு போன்றவற்றை அனுமதிக்காத குடும்பங்கள் இருக்கவே செய்கிறார்கள். காரணம் பிடிக்காமல் போய்விட்டது என்பது இல்லை. அது பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பயன்படுத்துவது என்ற எண்ணம்.
நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதைவைத்து நீங்கள் யார் என்பதை அடையாளம் கண்டுகொள்வதுடன் உங்களை எப்படி நடத்த வேண்டும் என்பதையும் முடிவு செய்துவிடுகிறார்கள். ஒன்றாகக் கூடி உண்பதால் மட்டும் சாதி ஒழிந்துவிடுவது இல்லை.
உணவு எப்படிச் சமைக்கப்படுகிறது என்பதில் தொடங்கி பரிமாறப்படுவது வரை சாதியக்கூறுகள் கலந்துள்ளன. விருந்தினர்களுக்கு வெள்ளித் தட்டில் சாப்பாடு போடுவது கௌரவத்துக்கானது மட்டும் இல்லை. வெள்ளிக்குத் தீட்டில்லை என்ற சாதிய மனப்போக்கும் உள்ளடக்கியதே. உணவு அரசியலின் முக்கியக் குவிமையம் அது.
குடிதண்ணீரைக்கூட ஒன்றாகப் பகிர்ந்துகொள்ள அனுமதிக்காத இந்திய சமூகத்தில் தேநீரும் காபியும் அறிமுகமானதன் வழியே, ஒரே கடையில் அனைவரும் ஒன்றாக அமர்ந்து தேநீரை, காபியை குடிக்கும் விதம் உருவானது எளிய செயல் இல்லை. அது பண்பாட்டு மாற்றத்தின் அடையாளம் என்கிறார் உணவு ஆய்வாளர் ஜி.எல்.புவே. அதே நேரம் இரட்டைக் குவளை முறையும் காபி குடிப்பவன் உயர்ந்தவன் என்ற எண்ணம் உருவானதையும் நாம் கவனத்தில்கொள்ள வேண்டியிருக்கிறது.
பெருநகரங்களில் முளைத்துக் கிளைவிட்டுள்ள காபி ஷாப் கலாசாரம் மாறிவரும் உணவுப் பண்பாட்டின் அடையாளம். காபி ஷாப் என்பது காபி குடிக்கச் செல்லுமிடம் இல்லை. அது இளம் தலைமுறையின் சந்திப்பு வெளி. அங்கே விருப்பமான பெண்ணுடன் அரட்டை அடிக்கவோ, அலுவல் சார்ந்து கூடி விவாதிக்கவோ, வணிகத் தொடர்புகளை உருவாக்கிக்கொள்ளவோதான் வருகிறார்கள்.
இந்தியாவின் முதல் காபி கடை 1780-ல் கல்கத்தாவில் தொடங்கப்பட்டது, அதைத் தொடர்ந்து ஜான் ஜேக்ஸனால் 1792-ல் மதராஸ் காபி ஹவுஸ் ஆரம்பிக்கப்பட்டது. இங்கே காபி குடிக்க வருபவர்கள் படிப்பதற்காக ஆங்கில நியூஸ் பேப்பர்கள் தரப்பட்டன. இரண்டு நூற்றாண்டுகளில் உலக நாடுகள் எங்கும் காபி அடைந்துள்ள வளர்ச்சி பிரமிக்க வைக்கக்கூடியது.
காப்பிக் கொட்டையில் பல விதங்கள் உள்ளன. தரத்திலும் நிறைய வேறுபாடு இருக்கிறது. இவற்றில் ரோபஸ்டா, அரேபிகா செர்ரி, ப்ளாண்டேஷன் ‘ஏ’, பீபிரி போன்றவை சில ரகங்கள். ஒரு கோப்பை காபியில் 80,140 மில்லி கிராம் வரை காஃபீன் என்ற ரசாயனப் பொருள் கலந்துள்ளது. அதிகம் காபி குடிப்பது பித்தத்தை அதிகரித்து வாந்தி, மயக்கம், தலைச்சுற்றல், அஜீரணம், நரம்பியல் கோளாறுகள் ஆகியவற்றை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
காபி எப்படி அறிமுகமானது என்பதைப் பற்றிப் பல்வேறு கட்டுக்கதைகள் கூறப்படுகின்றன. இதில் எத்தியோப்பியாவில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த இடையர் சிலர் தங்களின் ஆடுகள் வழக்கத்துக்கு மாறான ஆற்றலுடன் இரவிலும் தூங்காமல் இருப்பதைக் கண்டு காரணத்தைத் தேடினார்கள்.
அப்போது அந்த ஆடுகள் காப்பிச் செடி இலைகளையும் பழங்களையும் உண்டதால்தான் இப்படி அதிக விழிப்புடனும் ஆற்றலுடனும் உள்ளது எனக் கண்டு தாங்களும் காபியை பயன்படுத்தத் தொடங்கினார்கள் என்கிறார்கள்.
இந்தச் சம்பவத்தை நிரூபணம் செய்ய எந்த ஆதாரமும் இல்லை. இது செவிவழிக் கதை என்றே எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் ஒன்பதாம் நூற்றாண்டிலே காபி எத்தியோப்பியாவில் அறிமுகமாகிவிட்டது என்பதைச் சான்றுகளுடன் வரலாற்று அறிஞர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். அங்கிருந்து 15-ம் நூற்றாண்டு அளவில் பெர்சியா, துருக்கி, மற்றும் வட ஆப்பிரிக்காவுக்கும் காபி பரவியிருக்கக் கூடும். பின்பு அங்கிருந்து டச்சு வணிகர்கள் மூலம் ஐரோப்பாவுக்கு அறிமுகமானது.
அரபு நாடுகள் காபிசெடியை யாரும் வெளிநாடுகளுக்குக் கொண்டு போகத் தடை விதித்திருந்தது. 1690-ல் அதை மீறி டச்சு வணிகர்கள் காபிச் செடியைக் கொண்டுபோய் ஜாவா நாட்டில் பயிர் செய்தார்கள்.
17-ம் நூற்றாண்டில் பாபா பூதன் என்ற சூபி ஞானி இந்தியாவிலிருந்து மெக்கா, ஏமன் நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு திரும்பி வரும்போது ரகசியமாக ஏழு காபிக் கொட்டைகளைக் கொண்டுவந்தார். அந்தக் காபி விதைகளைச் சிக்மகளூர் மாவட்டத்திலுள்ள சந்திரகிரி மலையில் பயிரிட்டார். அப்படித்தான் காபி இந்தியாவுக்கு அறிமுகமானது. அதனால்தான் இன்றும் கர்நாடகாவில் காபி புகழ்பெற்று விளங்குகிறது என்கிறார்கள்.
காபி வளர்ச்சியில் பிரிட்டிஷ் வணிகர்கள் அதிக ஈடுபாடு காட்டினார்கள். அவர்களின் முயற்சியின் காரணமாகவே இலங்கையிலும் இந்தியாவிலும் காபி வணிகப் பயிராக மாறியது.
கெய்ரோவில்தான் முதன்முதலில் காபி கடைகள் திறக்கப்பட்டன. 17-ம் நூற்றாண்டில் ஐரோப்பிய நகரங்களில் காபிக் கடைகள் ஆதிக்கம் செலுத்த தொடங்கின. காபி கடைகள் அரசியல் விவாதங்களுக்கான பொதுவெளியாக உருமாறின. அங்கே இலக்கிய மன்றங்கள் தொடங்கப்பட்டன. புகழ்பெற்ற எழுத்தாளர் வால்டேர் ஒரு நாளுக்கு 40 கோப்பை காபி சாப்பிட்டதோடு அதைப் புகழ்ந்து எழுதவும் செய்தார்.
இங்கிலாந்தில் காபி கடைகளில் பகல் இரவாக எழுத்தாளர்கள், கவிஞர்கள், அரசியல்வாதிகள் ஒன்றுகூடினார்கள். ஆகவே, முக்கியமான தபால்கள் காபி கடைகளின் முகவரிகளுக்கே அனுப்பி வைக்கப்பட்டன. பிரபல நாவலாசிரியான ஆலிவர் கோல்டு ஸ்மித் தனது நாவலை ஒரு காபி கடையில் வைத்துதான் எழுதினார்.
காபி என்ற ஆங்கிலச் சொல் 1592-ல் டச்சு மொழிச் சொல்லான Koffie என்பதில் இருந்து உருவானது. அதன் மூலச்சொல்  qahwa என்ற அரபி சொல்லாகும்.
கிழக்கிந்திய கம்பெனியின் வணிகம் வழியாக இங்கிலாந்துக்குக் காபி 16-ம் நூற்றாண்டில் அறிமுகமானது. 1651-ல் இங்கிலாந்தின் முதல் காபி கடை புனித மைக்கேல் வீதி என்ற இடத்தில் டேனியல் எட்வர்ட் என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது. துருக்கி வணிகரின் முயற்சியால் இந்தக் கடை தொடங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஆக்ஸ்போர்ட்டில் உள்ள குயின்ஸ் லேனில் 1654-ல் இன்னொரு காபி கடை திறக்கப்பட்டது. அந்தக் கடை இன்றும் செயல்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.
1675-க்குள் இங்கிலாந்தில் 3,000 காபி கடைகள் திறக்கப்பட்டன. காபி கடைகளில் வெட்டி அரட்டை அடிக்கிறார்கள். இதனால் தேவையற்ற மதச் சர்ச்சை உருவாகின்றன எனக் கருதிய மன்னர் இரண்டாம் சார்லஸ் காபி கடைகளை மூடும்படி உத்தரவிட்டார். அதன் காரணமாகக் காபி வணிகத்தில் சிறிய பின்னடைவு ஏற்பட்டது, ஆனால் காபி கடைகள் முழுமையாக மூடப்படவில்லை. பெண்களும் காபி கடைக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கிய சம்பவமும் நடந்தது.

Jul 19, 2014

உணவு யுத்தம்!-22

உணவு யுத்தம்!-22

வேர்க்கடலை பெருகிய கதை!
தமிழ்நாட்டில் வேர்க்கடலை பிரபலமானதற்கும், கடலை எண்ணெய் உற்பத்தியில் தென்னாற்காடு முதல் இடம் வகிக்கவும் கோவிந்த அய்யர் என்பவர் முக்கியக் காரணமாக இருந்திருக்கிறார் என பேராசிரியர் கெ.குமார் சுட்டிக்காட்டுகிறார். அறியப்படாத இந்த ஆளுமையை பற்றி பழைய ’மஞ்சரி’ இதழில் எம்.ஆர்.ராஜகோபாலன், ஒரு விரிவான கட்டுரை எழுதியிருக்கிறார்.
இன்று நாம் விரும்பிச் சாப்பிடும் கடலை உருண்டையைப் பிரபலமாக்கியதில் கோவிந்த அய்யருக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி செல்லும் வழியில் உள்ள சிறிய ஊர் வளவனூர். 1870-களில் அங்கே கோவிந்த அய்யர் என்ற இளைஞர் செக்கு நடத்தி வந்திருக்கிறார். இவரிடம் எண்ணெய் ஆட்டுவதற்காக பல ஊர்களில் இருந்தும் ஆட்கள் வண்டி போட்டு வந்து காத்திருப்பார்களாம்.
தோற்றத்தில் மிக எளியவர் கோவிந்த அய்யர். முழங்கால் வரை தொங்கும் நான்கு முழ வேட்டி, தோளில் ஒரு துண்டு. செருப்பு அணியாதவர். சிறுவயதில் கொத்தவால் சாவடியில் வேலை செய்த அனுபவம் காரணமாக வேர்க்கடலையை வாங்கி எண்ணெய் ஆட்டி விற்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தார். அவருக்கு கல்கத்தாவைச் சேர்ந்த சுலைமான் சாவாஜி என்ற வணிகரின் தொடர்பு உருவானது. அந்த நாட்களில் பர்மாவில் கடலை எண்ணெய்யை பிரதானமாக சமையலுக்குப் பயன்படுத்தி வந்தார்கள். ஆகவே பர்மாவுக்கு ஏற்றுமதி செய்ய உதவியாக சில பீப்பாய்கள் கடலை எண்ணெய்யைத் தனக்கு அனுப்புமாறு சாவாஜி, கோவிந்த அய்யரிடம் கேட்டிருந்தார்.
அப்போது தமிழ்நாட்டில் வேர்க்கடலை விளைச்சல் குறைவு. அத்துடன் பெரும்பாலும் கடலை எண்ணெய்யை விளக்கெரிக்கத்தான் பயன்படுத்தினர்கள். அதைச் சமையலுக்குப் பயன்படுத்தலாம் என்பதை கோவிந்த அய்யர் தெரிந்துகொண்டு ஊர் ஊராகத் தேடிப்போய் சேகரித்து நான்கு பீப்பாய் கடலை எண்ணெய்யைத்தான் வாங்கி அனுப்ப முடிந்தது.
ஆனால், பர்மா சந்தையில் கடலை எண்ணெய்க்கு பெரிய கிராக்கி உள்ளது என சொன்ன சாவாஜி, மேலும் நூறு பீப்பாய்கள் எண்ணெய் வேண்டி, முன்பணம் கொடுத்தார். எப்படியாவது இதை சாதித்துக் காட்ட வேண்டும் என நினைத்த கோவிந்த அய்யர், தமிழகம் முழுவதும் பயணம் செய்து  வேர்க்கடலையை சேகரித்தார். தானே மரச்செக்குகளில் ஆட்டி பீப்பாய்களில் எண்ணெய்யை  நிரப்பினார்.
எண்ணெய் சேகரித்து அனுப்ப மரப் பீப்பாய் தேவைப்பட்டது. அந்த நாட்களில் பீப்பாய் செய்பவர்கள் கொச்சியில்தான் இருந்தார்கள். அவர்களை நேரில் சென்று சந்தித்து மரப்பீப்பாய்களை தயார் செய்தார். வேர்க்கடலைக்கு நல்ல லாபம் இருக்கிறது என்பதை அறிந்துகொண்டு, விவசாயிகளை வேர்க்கடலைப் பயிரிடும்படி ஊக்குவித்தார். 1850 முதல் 1870 வரை அன்றைய சென்னை மாகாணத்தில், வேர்க்கடலை குறைந்த அளவிலேயே பயிரிடப்பட்டது. ஆனால், கோவிந்த அய்யரின் இடைவிடாத முயற்சியால் கடலை உற்பத்தி அதிகமாகத் தொடங்கியது.
அவர் வெறும் வணிகராக மட்டுமின்றி, விவசாயிகளின் நலனில் அக்கறைகொண்டவராகவும் விளங்கினார். இதன் காரணமாக அவர், ஆப்பிரிக்காவின் மொஸாம்பீக் பகுதிகளில் பயிரிடப்படும் வேர்க்கடலை ரகம் ஒன்று, அதிக விளைச்சலை தரக்கூடியது என்பதை அறிந்து, தனது ஆட்களின் மூலம் மொஸாம்பீக்கில் இருந்து 300 மூட்டைகள் வேர்க்கடலையைத் தருவித்து விவசாயிகளுக்கு வழங்கினார். அதன் காரணமாக வேர்க்கடலை உற்பத்தி வேகமாக வளர்ச்சியடைந்தது. மூன்றே ஆண்டுகளுக்குள் இந்தக் கடலை ரகம் தென்னாற்காடு மாவட்டத்தில் முற்றிலுமாக நிலைபெற்றுவிட்டது.
தாது வருஷ பஞ்சகாலம் தென்னாற்காடு மாவட்டத்தை உலுக்கியது. அப்போது பல இடங்களில் உணவு வழங்கும் மையங்களை நிறுவிய கோவிந்த அய்யர், ஒவ்வொரு மையத்திலும் பசியுடன் வந்தவர்களுக்குச் கஞ்சியும், வெல்லப்பாகு வைத்துப் பிடித்த கடலை உருண்டையும் வழங்க ஏற்பாடு செய்தார். இவரது முயற்சியின் காரணமாக ஆயிரக்கணக்கானோர் பட்டினிச்சாவில் இருந்து காப்பாற்றப்பட்டனர். விளக்கெரிக்க மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த வேர்க்கடலையை, உணவுப் பொருளாக மாற்றிய பெருமை கோவிந்த அய்யரையே சாரும் என்கிறார்கள். இப்படித்தான் தமிழகத்தில் கடலை எண்ணெய் சமையலில் முக்கிய இடம் பிடித்திருக்கிறது.
இன்று சமையல் எண்ணெய் வாங்கப் போகும் பெண்கள் பெரும்பாலும் தொலைக்காட்சி விளம்பரங்களை வைத்தே அதைத் தேர்வு செய்கிறார்கள். எந்த எண்ணெய்யில் என்னவிதமான சத்துகள் இருக்கின்றன, அதை எப்படி பயன்படுத்தப்போகிறோம் என்று யோசிப்பதே இல்லை. ஊடக கவர்ச்சியை மனத்தில் கொண்டு தவறான எண்ணெய்யை வாங்கி ஆரோக்கியத்தைக் கெடுத்துக்கொள்கிறார்கள்.
கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துங்கள் எனக் கூறும் மருத்துவர்கள், ஆலிவ் எண்ணெய், தவிட்டு எண்ணெய் போன்றவற்றை உபயோகிக்கும்படியாக ஆலோசனை வழங்குகிறார்கள். இன்றைய உணவு சந்தையில் ஆலிவ் எண்ணெய்யும், சூரிய காந்தி எண்ணெய்யும் தவிட்டு எண்ணெய்யுமே மரபான எண்ணெய்களுக்கு சவால் விடுகின்றன. சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் அரிசித் தவிட்டு எண்ணெய் பரவலாக சமையலுக்குப் பயன்படுத்தப்படுகிறது. இதில் ஒரைசனால் என்னும் பொருள், கொழுப்பு சேர்வதைத் தடுப்பதால் இதயநோய் வராமல் இருக்க உதவும் என்று கருதப்படுகிறது. ஆகவே, இதை சந்தையில் பெரிய அளவில் விளம்பரப்படுத்தி விற்கிறார்கள்.
சூரியகாந்தி முதன்முதலில் மெக்சிகோவில் பயிரிடப்பட்டது. 16-ம் நூற்றாண்டுக்குப் பிறகே இந்தியாவில் அறிமுகமானது. 18-ம் நூற்றாண்டு வரை கிறிஸ்துவ தேவாலயங்களில் உபவாச நாட்களில் இந்த எண்ணெய் பயன்படுத்தப்பட்டது. அதன் பிறகு கடந்த 50 ஆண்டுகளில்தான் சூரியகாந்தி எண்ணெய் சந்தைப்படுத்தப்பட்டு, முக்கிய உணவுப் பொருளாக மாறியுள்ளது. நாம் சுத்தம் செய்யப்பட்ட எண்ணெய் என்று நினைத்துப் பயன்படுத்தும் ரீஃபைண்ட் ஆயிலில், உயிர்ச்சத்துக்கள் எதுவுமே இல்லை. அவை ரசாயன கலப்புடன் உருவாக்கப்படுகின்றன என்கிறார்கள் இயற்கை உணவு ஆர்வலர்கள்.
பாமாயில் தயாரிக்கப்படும் எண்ணெய்ப் பனை, ஆண்டுக்கு ஒரு ஹெக்டரில் 4 முதல் 6 டன்கள் வரை எண்ணெய் கொடுக்கக் கூடியது. இது மற்ற எண்ணெய் வித்துப் பயிர்களுடன் ஒப்பிடுகையில், பல மடங்கு அதிக எண்ணெய் மகசூல் தரவல்லது. ஒரு ஹெக்டேரில் பயிரிடப்படும் எண்ணெய் பனையில் இருந்து 4 ஆயிரம் முதல் 6 ஆயிரம் கிலோ வரை எண்ணெய் கிடைக்கிறது.
ஆலிவ் எண்ணெய் என்பது ஆலிவ் மரத்தின் விதையில் இருந்து பிழிந்தெடுக்கப்படும் சாறு. இதற்கு திரவத் தங்கம் என்று பெயர். இந்த வெண்ணெய், மத்தியத் தரைக்கடல் பகுதிகளில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக, இத்தாலி, கிரேக்கம், போர்ச்சுகல், துனீசியா, மொரோக்கோ ஆகிய நாடுகள் இதனை அதிக அளவில் தயாரிக்கின்றன. உலக ஆலிவ் எண்ணெய் உற்பத்தியில் ஸ்பெயின், இத்தாலி, கிரேக்கம் ஆகிய மூன்று நாடுகள் முக்கிய இடத்தை வகிக்கின்றன. சமையலுக்கும், உடல் நலம் பேணுவதற்கும், அழகு ஒப்பனைக்கும் பயன்படுத்தப்படுகிறது ஆலிவ் எண்ணெய். ஒவ்வொரு எண்ணெய்க்கும் ஒரு கொதிநிலை உண்டு. புகையும் தருணத்தை வைத்து முடிவு செய்வார்கள். எண்ணெய்யை குறைவான வெப்பநிலையில்தான் சமைக்க வேண்டும். அதிகமாக கொதிக்கவிட்டால், அது கெட்ட கொழுப்பாக மாற வாய்ப்பு உண்டு
தேங்காய் எண்ணெய் தயாரிப்பில் சல்ஃபர் பயன்படுத்தப்படுவது பற்றி மக்கள் அதிகம் அறிந்திருக்கவில்லை. தேங்காய் எண்ணெய் எடுக்க முற்றிய தேங்காயை உடைத்து, காயவிடுவார்கள். அப்போது தேங்காயின் பருப்பில் பூஞ்சை வராமல் தடுக்க, சல்ஃபரை புகைக்கச் செய்கிறார்கள். இந்தப் புகை தேங்காய் முழுவதும் பரவி பூஞ்சை வராமல் தடுப்பதுடன், ஐந்து நாட்களில் உலர வேண்டிய பருப்பினை இரண்டு நாட்களில் காய வைத்துவிடுகிறது. ஆகவே சல்ஃபர் கலந்த தேங்காய் பருப்பில் இருந்து, எண்ணெய் எடுத்து விற்கின்றனர். இது உடல் ஆரோக்கியத்துக்குக் கேடு தரக்கூடியது
வறுக்கவோ பொரிக்கவோ, ஒரு முறை பயன்படுத்திய எண்ணெய்யை திரும்பத் திரும்ப உபயோகிக்கக் கூடாது. அப்படிப் பயன்படுத்துவதால்,  ‘டிரான்ஸ்ஃபேட்டி ஆசிட்’ அதிகமாகி, அது ரத்தக்குழாய்களில் கொழுப்பாகப் படியும் என்கிறார்கள் மருத்துவர்கள். சமையலில் எண்ணெய்யை பயன்படுத்தும் முறையில் விழிப்பு உணர்வு வர வேண்டும். எந்தக் காய்கறியை சமைத்தாலும், முதலில் ஆவியில் வேக வைத்துவிட்டு, பிறகு தாளிப்பதற்கு மட்டும் எண்ணெய் உபயோகிக்கலாம். ருசிக்காக எண்ணெய்யில் பொரித்த உணவுகளை விரும்பி சாப்பிடுவதை பெருமளவு குறைத்துக்கொள்ள வேண்டும். இவை யாவற்றையும்விட வெறும் விளம்பர கவர்ச்சியாக உணவுப் பொருள்களை வாங்குவது குறித்து விழிப்பு உணர்வு வர வேண்டும். அதுதான் உடல் ஆரோக்கியத்தின் முதற்படி!

உணவு யுத்தம் 21

ஏமாற்றும் எண்ணெய்!
கடற்கரைக்குப் போயிருந்தேன். தள்ளுவண்டியில் சூடாக வேர்க்கடலை விற்றுக்கொண்டிருந்தார்கள். ஒரு பொட்டலம் 10 ரூபாய் என வாங்கினேன். பிரித்துப் பார்த்தால் உள்ளே சூம்பிப்போன வேர்க்கடலை பருப்புகள். பள்ளி வயதில் ஒரு ரூபாய்க்கு ஒரு பொட்டலம் என பள்ளிக்கூட வாசலில் வேர்க்கடலை விற்பார்கள். ஒரு பொட்டலத்தில் உள்ளதை இரண்டு பேர் சேர்ந்து சாப்பிடுவோம்.
காலமாற்றமும் விலைவாசி உயர்வும் கண்ணுக்கு முன்னே உணவுப் பொருட்களின் விலையைக் கட்டுக்குக்குள் அடங்காமல் போய்விடச் செய்ததை நினைத்தபடியே, சூடான கடலைகளை சாப்பிடத் தொடங்கினேன்.
ஒரு பொட்டலம் கடலையில் நிச்சயம் ஒரு சொத்தைக் கடலை இருப்பது எழுதப்படாத விதி. ஆனால், என் வாயில் அகப்பட்டது ஒரு கல். வேர்க்கடலை போன்ற அதே வடிவில் சிறிய கல் அது. இது எப்படி கடலை அளவிலே இருக்கிறதே… ஒருவேளை வறுக்கும்போது கலந்துவிட்டதோ என யோசித்தேன்.
‘இல்லை. இது வேர்க்கடலையில் கலப்படம் செய்வதற்காகவே தயாரிக்கிறார்கள். வேர்க்கடலையில் இதுபோன்று கல்லைக் கலந்துவிடுவது தொடர்ந்து நடக்கும் மோசடி. இதோ பாருங்கள்… எனது கடலையிலும் அதே கல்!’ என நண்பர் கையை நீட்டிக் காட்டினார். சரியாகக் கடலை அளவேயான கல். இதற்கென தனியாக இயந்திரம் வைத்து தயாரிக்கிறார்களா என்ன? யோசிக்கவே பயமாக இருந்தது.
‘அரிசி, பருப்புபோல கடலை வடிவிலும் கல் உருவாக்கப்பட்டுவிட்டது. தொழில்நுட்ப வளர்ச்சியை எப்படி பயன்படுத்துகிறோம் பாருங்கள்’ என கேலி செய்தார் நண்பர். சாமான்ய ஏழை வியாபாரி செய்த கலப்படத்தை பெரிதுபடுத்துவதாக நீங்கள் நினைக்கக் கூடாது. இன்று கலப்படம் இல்லாத பொருளே இல்லை என்பதற்காகச் சொல்ல வந்தேன்.
”இன்று உணவுச் சந்தையில் கலப்படங்களைத் தயாரிப்பதற்கு என்றே தனியுலகம் ஒன்று திரைமறைவில் இயங்கிக்கொண்டிருக்கிறது.
பெருங்காயத்தில் பிசின் அல்லது கோந்துகளுக்கு மணம் சேர்த்து கலப்படம் செய்கிறார்கள். கொத்துமல்லி தூளில் குதிரைச் சாணத்தூள் கலக்கிறார்கள் சீரகத்தில் நிலக்கரித் தூள் கொண்டு வண்ணம் ஊட்டப்பட்ட புல் விதை கலக்கப்படுகிறது. பாக்குத் தூளில் மரத் தூள் மற்றும் கலர் பொடி சேர்க்கிறார்கள். மஞ்சனத்தி இலையைக் காயவைத்து வறுத்து அரைத்து டீத்தூளுடன் கலக்கிறார்கள். குங்குமப் பூவில் நிறம் மாற்றப்பட்ட உலர்ந்த சோள நார்களைக் கலக்கிறார்கள். நல்ல மிளகில் உலர்த்தப்பட்ட பப்பாளி விதைகள், கறுப்புக் கற்கள் சேர்த்து விற்கிறார்கள். பாலின் கெட்டித் தன்மைக்காக சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வெள்ளை மாவைக் கலக்கிறார்கள். இவ்வளவு ஏன்… கோழி முட்டையை நிறம் மாற்றி நாட்டுக்கோழி முட்டை என அதிக விலைக்கு விற்கிறார்கள். ஆக, கலப்படம் இல்லாத உணவுப் பொருளே கிடையாது. கலப்படப் பொருள்களை விற்பதற்கு என தனி சந்தையே இருக்கிறது. அங்கே இதுபோன்ற கலப்பட உணவுப் பொருட்களை மலிவான விலையில் வாங்கி, அதைக் கொண்டுதான் பெரும்பான்மை சாலையோர உணவகங்கள் நடைபெறுகின்றன” என்றார். கேட்கவே பயமாக இருந்தது.
”இதற்கே பயந்து போனால் எப்படி? எனக்கு அறிமுகமான தள்ளுவண்டி உணவகம் நடத்தும் நபரிடம் அழைத்துப் போகிறேன்” என்றார் நண்பர். இருவருமாக பைக்கில் சென்றோம்.
அந்தத் தள்ளுவண்டி கடையில் சூடாக பஜ்ஜி, சமோசா போட்டுக்கொண்டிருந்தார்கள். நண்பர், தள்ளுவண்டிக்காரருக்கு தெரிந்தவர் என்றபோதும், ஏதாவது பிரச்னை வந்துவிடுமா என மூன்று முறை கேட்டுக்கொண்டு பிறகே விஷயத்தைச் சொன்னார்.
”பெரிய ஹோட்டல்களில் தினசரி பயன்படுத்திய எண்ணெய்யை மொத்தமாக வெளியே விற்பனை செய்கிறார்கள். அதை வாங்கி வந்து சிலர் சிப்ஸ், முறுக்கு, பலகாரம் செய்ய பயன்படுத்துகிறார்கள். அவர்கள் பயன்படுத்திய மூன்றாவது சுற்று எண்ணெய்யை நாங்கள் வாங்குகிறோம். இதுதான் நடைபாதை கடைகளில் பஜ்ஜி, வடை போட உதவுகிறது. நாங்களும் மீதமான எண்ணெய்யை விற்கிறோம். இந்த எண்ணெய் மாணவர்களுக்கான இலவச விடுதிகள் மற்றும் பொறித்த மீன் விற்பவர்களுக்கு விற்கப்படுகிறது. எண்ணெய்யின் நிறம் மற்றும் வாசனை மாறிவிடும் என்பதால், அது தெரியாமல் இருப்பதற்காக, ரசாயன எண்ணெய் கலக்கப்படுகிறது, அதனால், புது எண்ணெய் மாதிரியே இருக்கும்” என்றார்.
”இதை சாப்பிட்டால் வயிறுக்கு கெடுதல்தானே?” எனக் கடைக்காரரிடம் கேட்டபோது, ”வியாபாரத்துல அதைப் பாத்தா முடியுமா?” என திருப்பிக் கேட்டார். கசட்டு எண்ணெய்யில் செய்த பஜ்ஜி, வடை, போண்டாக்களை மக்கள் சூடாக வாங்கி சூப்பராக சாப்பிட்டபடி இருந்தனர்.
கலப்படத்தில் மிகப்பெரிய வருவாய் ஈட்டும் ஒரு தொழில் எண்ணெய் வர்த்தகம். எவ்வளவுதான் சீல் வைத்த அழகிய பாக்கெட்களில் தரச்சான்றுகளுடன் விற்கப்பட்டாலும், டின்களில், சில்லறை வர்த்தகங்களில் எண்ணெய்யில் கலப்படம் செய்வதைத் தடுக்கவே முடியாது.
‌ரீஃபைண்ட் எண்ணெயுடன் ஆர்ஜிமோன் எண்ணெய் அல்லது சோயா எண்ணெய் ஆகியவற்றைக் கலந்து விற்பனை செய்யப்படுகிறது. ரீஃபைண்ட் செய்யப்படுவதால் கலப்படத்தைச் கண்டுபிடிப்பது கடினம்.
கலப்பட எண்ணெய்யில் செய்த உணவால் கண் நோய், வயிறு எரிச்சல், ஒவ்வாமை ஏற்படும். உண்மையில் நாம் காசை கொடுத்து நோயை வாங்கிப்போகிறோம் என பலருக்கும் தெரிவதே இல்லை.
எண்ணெய்யில் பொறித்த உணவுகளை சாப்பிடுவதில் ஏன் இத்தனை ஆர்வம் காட்டுகிறோம். இன்று வயது வேறுபாடின்றி டீப் ஃபிரை உணவு வகைகள்தான் யாவருக்கும் பிடித்திருக்கின்றன. ஆவியில் வேகவைத்த, எண்ணெய் சேர்க்காத உணவுகள் என்றால், அதை பத்தியம் எனக் கேலி செய்கிறார்கள்.
தமிழறிஞர் தொ.பரமசிவன் தனது ‘பண்பாட்டு அசைவுகள்’ நூலில் பழந்தமிழர் பயன்படுத்திய எண்ணெய் வித்துகளாக எள், ஆமணக்கு, வேம்பு, புன்னை, இலுப்பை, தேங்காய் ஆகியவற்றைக் குறிப்பிடுகிறார். 15-ம் நூற்றாண்டின் பிறகே நிலக்கடலை எண்ணெய் வித்தாகப் பயன்படுத்த தொடங்கியது.
எண்ணெய் என்ற சொல் எள்ளில் இருந்து பெறப்படும் நல்லெண்ணெய்யை மட்டுமே முதலில் குறித்தது. பசும்நெய்யில் இருந்து வேறுபடுத்திக் காட்டவே எள்நெய் என அது அழைக்கப்பட்டது. சோழ, பாண்டிய பேரரசர்கள் காலத்தில் எண்ணெய் உற்பத்தி அரசால் கட்டுப்படுத்தபட்டிருக்கிறது. சமையலில் கடலை எண்ணெய்யை பயன்படுத்தும் வழக்கம் விஜயநகரப் பேரரசு காலத்தில் ஏற்பட்டிருக்கக் கூடும் என்கிறார் தொ.பரமசிவன்.
தமிழ்நாட்டு சமையலில் தேங்காய் எண்ணைய்யை அதிகம் பயன்படுத்துவது இல்லை. நல்லெண்ணெய்யும் கடலை எண்ணெய்யுமே முக்கிய இடம் பிடித்திருந்தன. வட இந்தியாவில் கடுகு எண்ணெய் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. அந்த வாசனை தென்னிந்தியர்களுக்குப் பிடிப்பது இல்லை.
கடந்த 25 ஆண்டுகளில் பாமாயில், சூரியகாந்தி எண்ணெய் என அறிமுகமாகின. இப்போது ஆலிவ் ஆயில், தவிட்டு எண்ணெய் என புதிய  எண்ணெய் வகைகள் சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கின்றன.
இந்தியாவில் 2,000 ஆண்டுகளுக்கு முன்பாகவே எள்ளும் கடுகும் பயன்பாட்டில் இருந்திருக்கின்றன. உலக அளவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் நிலக்கடலை அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது.
வேர்க்கடலையின் தாயகம் தென் அமெரிக்கா. வாஸ்கோடகாமாவின் கடற்பயணத்தின் பின்பாக இந்தியாவுக்கு வருகை தந்த ஜெசுவிட் பாதிரிகளின் மூலம் வேர்க்கடலை இந்தியாவுக்கு வந்திருக்கக் கூடும் என்கிறார்கள். மெக்கல்லனின் கடற்பயணத்தின்போது அது பிலிப்பைன்ஸில் அறிமுகப்படுத்தப்பட்டு, அங்கிருந்து கடலோடிகள் வழியாக இந்தியா வந்திருக்கலாம் என்பாரும் உண்டு. அதனால்தான் வேர்க்கடலைக்கு மணிலாகொட்டை என்று பெயர் உருவாகியிருக்கிறது எனவும் சொல்கிறார்கள். சீனாவின் வழியாக இந்தியாவுக்கு வந்திருக்கலாம் என்ற யூகமும் சொல்லப்படுகிறது.
இன்று ஆந்திரா, குஜராத், கர்நாடகா, மகாராஷ்டிரா தமிழ்நாடு ஆகிய ஐந்து மாநிலங்கள் வேர்க்கடலை உற்பத்தியில் முக்கிய இடம் பிடித்துள்ளன. சமைக்கப் பயன்படுத்தப்படும் பல்வேறு எண்ணெய்களில் 50 சதவிகிதம் கடலை எண்ணெய் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. ஆரம்ப காலங்களில் வேர்க்கடலை பன்றிகளுக்கு உணவாகத் தரப்பட்டது. அமெரிக்காவில் வேர்க்கடலை பிரபலமானது கி.பி 1860-ல் ஏற்பட்ட உள்நாட்டு சண்டைகளின்போதுதான்.
டாக்டர் ஜார்ஜ் வாஷிங்டன் கார்வர் என்பவர் ‘வேர்க்கடலையின் தந்தை’ என்று அழைக்கப்படுகிறார். ‘தாவரங்களுடன் பேசிய அற்புத விஞ்ஞானி’ என்ற கட்டுரையில் ஆர்.எஸ்.நாராயணன் என்பவர் கார்வரின் சிறப்புகளை அழகாக எடுத்துக் கூறுகிறார்.
1890-ல் அமெரிக்காவில் பூச்சித் தொல்லையால், பருத்திச் சாகுபடிக்குப் பெரும் நஷ்டம் ஏற்பட்ட வேளையில், வேர்க்கடலையே பருத்திக்கு மாற்றுப்பயிர் என்று கார்வர் எடுத்துரைத்தார்.
‘வேர்க்கடலையில் உள்ள பல்வேறு அமினோ அமிலங்கள் அடங்கிய புரதம் இறைச்சி உணவுக்கு இணையானது. வேர்க்கடலையில் உள்ள மாவுச்சத்து உருளைக் கிழங்குக்கு நிகரானது. ஆகவே, வேர்க்கடலையை உட்கொண்டால் இறைச்சியும் வேண்டாம்; உருளைக் கிழங்கும் வேண்டாம்’ என்றார்.
அத்துடன் கடலையின் 300 வகையான உபயோகங்களைக் கண்டுபிடித்து அமெரிக்க மக்களை வேர்கடலையின் மீது கவனம் கொள்ளச் செய்தார், கார்வரின் முயற்சியால்தான் வேர்க்கடலை விளைச்சல் அமெரிக்காவில் வளரத் தொடங்கியது.
1870-களில் பர்னாம் என்ற சர்க்கஸ் கம்பெனியின் முதலாளி தன்னிடம் வேலை செய்பவர்களுக்கு வறுத்த கடலையை சிறு தீனியாகக் கொடுத்தார். அது பிரலமாகத் தொடங்கியது, வறுத்த வேர்க்கடலை மலிவு விலை தீனி என்பதால், சினிமா தியேட்டர்களில் மலிவு ஸீட்களுக்கு ‘பீநட் கேலி’ என்ற பெயர் உருவானது.