Oct 28, 2011

அத்வானி ஆவேசம் ஊழல் விஷயத்தில் மென்மை போக்கு என்ற பேச்சிற்கே இடமில்லை


ஊழலுக்கு எதிரான தனது யாத்திரையின் இரண்டாவது கட்டப் பயணத்தை, அத்வானி, மதுரையில் இருந்து நேற்று துவக்கினார். இதற்காக, மதுரை வடக்கு மாசி வீதி சந்திப்பில் நேற்று இரவு நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: வெள்ளையர்கள் இந்த நாட்டை 1757 முதல் 1947 வரை ஆண்டனர். அப்போது, இந்தியாவின் வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்தியா, வளர்ச்சி பெற அனுமதிக்கப்படவில்லை. அந்த 200 ஆண்டுகளில் அவர்கள் கொள்ளையடித்த சொத்துக்களின் மதிப்பு, ஒரு லட்சம் கோடி ரூபாய் இருக்கும். சுதந்திரம் பெற்றதும், நம் தலைவர் எல்லாம், இந்தியா வல்லரசு நாடாகிவிடும். இனி இங்கு குடிநீர் பிரச்னை, மின் தட்டுப்பாடு, வறுமை இருக்காது என எதிர்பார்த்தனர். ஆனால், சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகளுக்குப் பிறகும், நாம் இன்னும் வளர்ச்சி பெற்ற நாடாக மாற முடியவில்லை.

அதே சமயம், இந்திய நாட்டு கறுப்புப் பணமும், ஊழல் சொத்துக்களும், சுவிஸ் வங்கியில் கோடி கோடியாக முதலீடு செய்யப்பட்டன. அவற்றின் மொத்த மதிப்பீடு 25 லட்சம் கோடி ரூபாய் இருக்கும் என, கணிக்கப்பட்டுள்ளது. வெள்ளையர்கள் 200 ஆண்டுகள் நம்மை ஆண்டு, ஒரு லட்சம் கோடி ரூபாயை சுருட்டிக் கொண்டனர். ஆனால், நம் நாட்டைச் சேர்ந்தவர்கள், 60 ஆண்டுகளில் 25 லட்சம் கோடி ரூபாய் கொள்ளையடித்துள்ளனர். "யார், எவ்வளவு முதலீடு செய்தாலும் அதற்கான கணக்கு கேட்க மாட்டோம். உரிமையாளர் தவிர வேறு யார் கேட்டாலும், விவரம் சொல்லவும் மாட்டோம்' என, சுவிஸ் அரசு சட்டமே இயற்றியிருந்தது. அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மன் உள்ளிட்ட நாடுகள் கடும் நடவடிக்கை மேற்கொண்டு, ஐ.நா., சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் ஒரு தீர்மானம் நிறைவேற்றின. அதில், "தவறாக சம்பாதித்து முதலீடு செய்யப்பட்ட கறுப்புப் பண முதலைகளின் பட்டியலை, சம்பந்தப்பட்ட நாடுகளிடம், சுவிஸ் வங்கிகள் அளிக்க வேண்டும்' என, வலியுறுத்தப்பட்டது. அதை ஏற்று, சுவிஸ் அரசு ஒரு சட்டம் கொண்டு வந்தது. அதன்படி, தவறான வழிமுறையில் சம்பாதித்து முதலீடு செய்யப்பட்ட கறுப்புப் பண முதலீட்டாளர்களின் பட்டியலை தருவதற்கான முடிவை எடுத்தது.

மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதி, "கறுப்புப் பணத்தை மீட்க இதுவே நல்ல தருணம். அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, வலியுறுத்தினேன். ஆனால், துரதிர்ஷ்டவசமாக, எந்த நடவடிக்கையுமே எடுக்கப்படவில்லை. அதனால் தான், ஊழல் மற்றும் கறுப்புப் பணத்துக்கு எதிரான எனது இந்த ரத யாத்திரையை துவக்க நேர்ந்தது. தங்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை மீட்க வேண்டும் என்ற கோபம், மக்களிடமும் இருப்பதால் தான், செல்லும் இடங்களில் எல்லாம் என் யாத்திரைக்கு அமோக வரவேற்பு காணப்படுகிறது.

வெளிநாட்டில் பதுக்கிவைக்கப்பட்டுள்ள 25 லட்சம் கோடி ரூபாய் கறுப்புப் பணம் இந்தியா கொண்டு வரப்பட்டால், இந்தியாவில் கிராமங்களே இருக்காது. இருந்தாலும், ஆறு லட்சம் கிராமங்களிலும், குடிநீர்ப் பிரச்னை, மின்வெட்டு, வறுமை இருக்காது. நல்ல பள்ளி, மருத்துவமனை, குடியிருப்புகள் இருக்கும். எந்த விவசாயியும், தன் நிலத்துக்குப் பாய்ச்ச நீரின்றி நிற்க மாட்டான். நேரு முதல் மன்மோகன் சிங் வரை ஏராளமான ஆட்சியாளர்களையும் கண்டிருக்கிறேன். ஆனால், தற்போதைய மத்திய அரசைப் போல, ஊழலில் புரையோடிப்போன ஓர் அரசை, எந்த முடிவும் எடுக்க முடியாமல், முடங்கிக் கிடக்கும் ஓர் அரசை நான் பார்த்ததில்லை. இந்த அரசு முடங்கிக் கிடக்கிறது என்பதற்கு, தமிழகம் தொடர்பான திட்டங்களே சாட்சி.

ஒட்டுமொத்த தமிழகத்தையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கூடங்குளம் அணு மின் நிலையம் பற்றி எந்தத் திடமான முடிவும் எடுக்கவில்லை. ஜப்பான் விபத்துக்குப் பிறகு, அணுமின் நிலையம் வைத்திருக்கும் அனைத்து நாடுகளும், அவற்றின் பாதுகாப்பை மறு ஆய்வு செய்தன. குறிப்பாக, கடல் அருகே இருக்கும் நிலையங்களில் கூடுதல் கவனம் தேவை. இப்பிரச்னையில் மத்திய அரசு எந்த முடிவையும் எடுப்பதாகக் காணோம். வளர்ச்சிப் பணிகள் தேவை தான். அதற்காக மக்களின் பாதுகாப்பை விலையாகக் கொடுக்க முடியாது. பாரதிய ஜனதா கட்சி, தமிழக மீனவர்கள் பிரச்னையை கடுமையானதாகக் கருதுகிறது. இலங்கை போலீசாரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதும், கடற்படையினரால் கொல்லப்படுவதும் தொடர்வதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இவ்வாறு அத்வானி பேசினார்.

 Posted By: கோவீந்தராஜ்

No comments: