தமிழகத்தின் தென்கோடி முனையில், தவறான சிகிச்சை அளித்ததாக கருதி, பெண் டாக்டர் வெட்டி கொலை செய்யப்பட்டார் என்ற செய்தி காட்டுத் தீயாக பரவ, மருத்துவ உலகமே கொதித்து போய் உள்ளது. அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள் வேலை நிறுத்தம், ஆர்ப்பாட்டம், ஊர்வலம் என அடுத்தடுத்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. தனியார் மருத்துவமனைகளும் இன்று போராட்டத்தில் ஈடுபடவுள்ளன. ஆனால், பொது மக்கள் இந்த போராட்டத்தை முழுமையாக ஆதரிக்கவில்லை. "டாக்டர்களின் கோரிக்கை நியாயமானது. டாக்டர்களுக்கு முழுபாதுகாப்பு அளிக்க வேண்டும்' என்பதை வலியுறுத்தும் அதேவேளையில், திடீரென டாக்டர்கள் வேலை நிறுத்தம் செய்ததை அவர்கள் கடுமையாக கண்டித்துள்ளனர்.
இதுகுறித்து சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த வடிவேலு கூறியதாவது: மருத்துவ பணி அத்தியாவசிய பணி. எனவே மருத்துவர்கள் திடீரென ஸ்டிரைக் செய்வது சட்டப்படி குற்றம். மேலும், கொலை செய்தவர் உடனடியாக கைது செய்யப்பட்டு விட்டார். அவர் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்பதே பெரும்பாலான மக்களின் கருத்து. அரசும் அந்த குற்றவாளிக்கு ஆதரவாக இல்லை. கூடுதல் பாதுகாப்பு வேண்டும் எனக் கோரி அரசின் கவனத்தை ஈர்ப்பதற்கு எத்தனையோ வழிகள் இருக்கின்றன. கறுப்பு பேட்ஜ் அணிவது, பணி நேரத்துக்கு பின் ஆர்ப்பாட்டம், மனித சங்கிலி போராட்டம் என எத்தனையோ வழிகள் இருக்கின்றன. ஆனால், திடீரென வேலை நிறுத்தம் செய்வதால் என்னை போன்றவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம்.
டாக்டர்கள் கோரிக்கை நியாயமானது. அவர்களது வேலைநிறுத்தம் நியாயமற்றது. இவ்வாறு வடிவேலு கூறினார்.ராயப்பேட்டை மருத்துவமனைக்கு தனது மகனை சிகிச்சைக்கு அழைத்து வந்த கற்பகம் கூறியதாவது: டாக்டரை கடவுளாகத்தான் நினைக்கிறோம். கொலை செய்தவரை பிடித்து கடுமையாக தண்டிக்கணும். அதுக்காக டாக்டர்கள் ஸ்டிரைக் செய்தா, எவ்வளவு பேர் பாதிக்கப்படுவாங்க...
அரசு மருத்துவமனையில் பணியாற்றி ஓய்வு பெற்ற டாக்டர் ஒருவர் கூறியது: டாக்டர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களின் கவனக்குறைவால், ஆண்டுக்கு, 10 ஆயிரம் பேர் உயிரிழப்பதாக சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.
இதற்கு யார் பொறுப்பேற்பது? ஆனால், தவறுக்கு தண்டனை கொலை அல்ல. அதே வேளையில், மருத்துவ துறையினரும் பொறுப்புடன் நடக்க வேண்டும். அரசு மருத்துவர்கள், கன்சல்டன்டாக, தனியார் மருத்துவமனைகளுக்கு செல்லலாம். ஆனால், தனியாக கிளினிக் நடத்தக் கூடாது. இவ்வாறு ஓய்வு பெற்ற டாக்டர் கூறினார்.
மருத்துவ பாதுகாப்பு சட்டப் பிரிவைஅமல்படுத்தாதது ஏன்? : தூத்துக்குடி பெண் டாக்டர், படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் உள்ள, தனியார் மருத்துவமனைகள், இன்று ஒரு நாள் மூடப்படும் என, இந்திய மருத்துவச் சங்க மாநிலத் தலைவர் தங்கவேலு தெரிவித்தார். கோவையில் அவர், நிருபர்களுக்கு நேற்று அளித்த பேட்டி: அரசு வெளியிட்டுள்ள, மருத்துவப் பாதுகாப்புச் சட்டப் பிரிவு, 48ன்படி, மருத்துவமனை அல்லதுமருத்துவர் தாக்கப்பட்டால், ஜாமினில் வெளிவர முடியாத சட்டத்தில், கைது செய்யப்படுவர். குற்றம் நிரூபிக்கப்பட்டால், மூன்று முதல், 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை, இச்சட்டத்தின் கீழ், யாரும் தண்டிக்கப்படவில்லை. இச்சட்டத்தை உடனடியாக அமல்படுத்த, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.மற்றவர்களின் உயிர் காக்கும் டாக்டர்களின் உயிருக்கு, சமூக விரோதிகளிடமிருந்து, பாதுகாப்பு அளிக்க வேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்தி, கோவையில் இன்று, 250 தனியார் மருத்துவமனைகள் மூடப்படுவதோடு, டாக்டர்கள், மருத்துவமனை ஊழியர்கள் பங்கேற்கும் பேரணியும் நடக்கிறது. இவ்வாறு தங்கவேலு தெரிவித்தார்.
சேதுலட்சுமி செய்தது தவறு - பெயர் சொல்ல விரும்பாத இ.எஸ்.ஐ., அதிகாரி ஒருவர் கூறியதாவது: சேதுலட்சுமி கொலை செய்யப்பட்டதை கடுமையாக கண்டிக்கிறோம். மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்பதை ஏற்கிறோம். ஆனால், இ.எஸ்.ஐ., விதிகளின்படி, சேதுலட்சுமி, தனியாக கிளினிக் நடத்தவோ, தனியாக பிராக்டீஸ் பண்ணவோ கூடாது. அவர் தனியாக மருத்துவம் செய்யாமல் இருப்பதற்காக, 2,000 ரூபாய் அலவன்ஸ் பெற்று வருகிறார். மத்திய அரசு வழங்கும் அலவன்சுடன் ஒப்பிட்டால், இது மிகவும் குறைவு தான். இருந்தாலும், விதிப்படி அவர், தனியாக பிராக்டீஸ் செய்யக் கூடாது. "அலவன்ஸ் வேண்டாம்' என எழுதி கொடுத்துவிட்டு, தனியாக பிராக்டீஸ் செய்யலாம். சேதுலட்சுமி அப்படி எழுதி கொடுக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
நன்றி : தினமலர்
3 comments:
இந்த சம்பவத்திற்கு,மருத்துவர் அல்லாத ஒருவரால் மிக நேர்த்தியாக எழுதப்பட்ட முதல் கட்டுரை இது என்று நினைக்கிறேன்..நிறைய நியாயங்களை உரைத்து இருக்கிறீர்கள்..நன்றியும் வாழ்த்துக்களும்..மருத்துவனாய் இருந்தும் இந்த வேலை நிறுத்தத்தில் என்னைப் போன்ற பலருக்கு ஈடுபாடில்லை..
தங்களின் கட்டுரையின் ஒரே ஒரு கருத்தை மட்டும் தெளிவு படுத்த விரும்புகிறேன்...
//அரசு மருத்துவமனையில் பணியாற்றி ஓய்வு பெற்ற டாக்டர் ஒருவர் கூறியது: டாக்டர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களின் கவனக்குறைவால், ஆண்டுக்கு, 10 ஆயிரம் பேர் உயிரிழப்பதாக சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது. //
இது உலகம் முழுவதிற்குமான மரண பட்டியல் அறிக்கை..உலகம் முழுதும் ஒரு ஆண்டில் நடக்கும் மருத்துவமனை மரணங்களில் இது கால் சதவிகிதத்துக்கும் குறைவானதே..நான் இதனை நியாய படுத்தவில்லை..ஆனால் எல்லா மருத்துவமனை மரணங்களுக்கும் மருத்துவரைக் குற்றம் சொல்லும் அறியாமையை தங்களின் கருத்து வளர்த்துவிடும் என்ற அச்சத்தினால் இதனை தெளிவு படுத்துகிறேன்...நன்றி...
இன்று என் மயிலிறகில்...எழுதக்கூடாத பதிவு....
இது என் வலையின் விளம்பரத்திற்கான இணைப்பு அல்ல..இந்த ஒரு கருத்து நண்பர்கள் பலருக்கு கட்டாயம் போய் சேரவேண்டும் என்ற நோக்கத்தின் வழியே இது..
Post a Comment