Dec 17, 2012

ஜூன்2013குள் மின்வெட்டு இல்லாத மாநிலமாக தமிழகம் மாறும்: நாஞ்சில் சம்பத்!

அ.தி.மு.க. அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நாகர்கோவில் நாகராஜா கோவில் தேரடி திடலில் நடந்தது. கூட்டத்திற்கு அமைச்சர் பச்சைமால் தலைமை தாங்கினார். நாஞ்சில் முருகேசன் எம்.எல்.ஏ., நகரச் செயலாளர் சந்திரன், அவைத்தலைவர் சதாசிவம், இணைச்செயலாளர் லிசம்மா, துணைச் செயலாளர் சிவகாமி, பொருளாளர் ஞானசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கட்சியின் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் பேசியதாவது:-

தனி மனிதனின் தலை எழுத்தை தீர்மானிப்பது பிரம்மா. தமிழகத்தின் தலை எழுத்தை தீர்மானிப்பது அம்மா என்ற நிலை இன்று உள்ளது. நாம் எல்லாம் அதிகம் கேட்கும் வார்த்தைகள் அடுத்த பிரதமர் அவர் தான் என்ற நல்ல வார்த்தைகள்தான். மின் பற்றாக்குறையை காரணம் காட்டி தி.மு.க. செயற்குழுவை கூட்டி ஆர்ப்பாட்டம் அறிவித்திருக்கிறார்கள். ஆர்ப்பாட்டம் நடத்தினால் மின்சாரம் வந்து விடுமா? மின்வெட்டுக்கு காரணமே தி.மு.க.தான்.

2001-2006-ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியில் 500 மெகாவாட் மின்சாரம் தமிழகத்தில் உபரியாக இருந்தது. இதனால் வெளிமாநிலங்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டது. தற்பொழுது ஆட்சிக் காலத்தில் 600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. உடன்குடியில் 1000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யவும், உப்பூரில் 1,200 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யவும், வட சென்னையில் 600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வருகிற ஜூன் மாதத்தில் இருந்து தமிழ்நாடு மின்வெட்டு இல்லாத மாநிலமாக மாறும். கேரள மீனவர்கள் இருவரை இத்தாலியைச் சேர்ந்த கடற்படை வீரர்கள் சுட்டுக்கொன்ற சம்பவத்தில் மத்திய அமைச்சர் அந்தோணி கேரளாவிற்கு ஆதரவாக செயல்பட்டார். இங்கு தமிழக மீனவர்கள் தினமும் இலங்கை ராணுவத்தால் தினமும் பாதிக்கப்பட்டு வருவதை தமிழகத்தை சேர்ந்த மத்திய நிதி அமைச்சரோ, மற்ற அமைச்சர்களோ இதுவரை வாயை திறக்கவில்லை.தமிழக மக்களை ஏமாற்றி வருகின்றனர்.

இலங்கை அதிபர் ராஜ பக்சேயை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று துணிச்சலோடு தீர்மானம் கொண்டு வந்தவர் ஜெயலலிதா. அன்னிய முதலீட்டுக்கு எதிரான வாக்கெடுப்புக்கு பல கட்சி கள் விலை போய் விட்டன. ஆனால் விலை போகாத ஒரே கட்சி அ.தி.மு.க. மட்டும் தான்.

1 comment:

Easy (EZ) Editorial Calendar said...

மக்களுக்கு நல்லது நடந்தா சரிதான்......தகவலுக்கு மிக்க நன்றி.....

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)