நான் மத்திய அரசு சார்பில், கூடங்குளம் மக்களை சமாதானப்படுத்துவதற்காக இங்கு வரவில்லை. எனது தனிப்பட்ட விருப்பத்தின் அடிப்படையில் இந்த ஆய்வினை மேற்கொண்டேன்.
கூடங்குளம் அணு மின் நிலையத்தை இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தேன். அதேபோல், அதன் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து பல்வேறு கேள்விகளைக் கேட்டு, அங்குள்ள
விஞ்ஞானிகளிடம் ஆலோசனை நடத்தினேன்.
இதன் மூலம், கூடங்குளம் அணு மின் நிலையம் மிகவும் பாதுகாப்பானது என்பதை உறுதி செய்தேன். மக்கள் எவ்வித அச்சமும் கொண்டிருக்க தேவையில்லை. எனவே, கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு எதிராக போராட்டம் நடத்துவது தேவையற்றது.
எவ்வித மோசமான விபத்துகள் நேர்ந்தாலும், அணுக் கதிர்வீச்சு வெளியேறாது. மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்பது உறுதி. அந்த அளவுக்கு கூடங்குளம் அணு மின் நிலையம் மிகவும் பாதுகாப்பான ஏற்பாடுகளைக் கொண்டுள்ளது.
பூகம்பம், சுனாமி போன்ற இயற்கை பேரழிவுகளோ அல்லது வேறு ஏதோ வடிவிலோ கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு எவ்வித பாதிப்பும் வராது.
இந்தத் திட்டம் தொடங்குவதற்கு முன்பே விஞ்ஞானிகளால் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இந்தியாவிலேயே மிகக் குறைவான, அதாவது பூஜ்ஜிய வாய்ப்பு என்று சொல்லும் அளவுக்கு பூகம்பம் ஏற்படுவதற்கான சாத்தியம் இல்லாத இடத்தில் தான் அணு மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
பூகம்பமும் சுனாமியும் அடுத்தடுத்து வந்தால் கூட பாதிப்பில்லை. காரணம், அணு உலைகள் வைக்கப்பட்டிருக்கும் உயரம் மிக அதிகமானது. கடந்த முறை தமிழகத்தில் சுனாமி வந்தது போன்றோ அல்லது அதைவிட அதிகமாக வந்தாலும் கூட எந்தப் பாதிப்பும் இருக்காது.
நாட்டின் வளர்ச்சிக்கு மின்சாரம் மிக மிக அவசியம். நம்மிடம் தற்போதுள்ள பாரம்பரிய மின் உற்பத்தித் திறன் மிகவும் குறைவாக இருப்பதால், கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களிலுமே மின் பற்றாக்குறை நிலவுகிறது. இதைப் பூர்த்தி செய்வதற்கு கூடங்குளம் அணு மின் நிலையம் வழிவகுக்கும். தமிழகத்தில் மின் தேவை வெகுவாக பூர்த்தியாகும்.
எனவே, கூடங்குளம் அணு மின் நிலையம் பாதுகாப்பானது என்பதை கருத்தில் கொண்டு, இந்தத் திட்டத்துக்கு மக்கள் ஒத்துழைப்புத் தரவேண்டும். எனது கூடங்குளம் ஆய்வு குறித்து நாளை (திங்கட்கிழமை) பத்திரிகைகளுக்கு விரிவான அறிக்கை ஒன்றை அளிக்கிறேன்," என்றார் அப்துல் கலாம்.
No comments:
Post a Comment