Jan 8, 2012

எனது இந்தியா (10)-கோட்டையில் விழுந்த குண்டுஎனது இந்தியா!( செண்பகராமன் பிள்ளை ) - எஸ். ராமகிருஷ்ணன்.
இந்திய விடுதலைக்கு ஜெர்மனி துணை செய்யும் என்று நம்பிக் கெட்டவர்களில் நேதாஜிக்கு ஒரு முன்னோடி இருக்கிறார். அவர்... செண்பகராமன் பிள்ளை.தமிழ்நாட்டைச் சேர்ந்த இவரின் வாழ்க்கை, எந்த ஒரு திரைப்படத்தை விடவும் அதிகத் திருப்புமுனைகளும் வியப்பும் கொண்டது. 'ஜெய்ஹிந்த் செண்பகராமன்’ என்றும் அழைக்கப்படும் செண்பகராமன் பிள்ளை, திருவனந்தபுரத்தில் பிறந்தவர். தந்தை சின்னசாமிப் பிள்ளை - தாய் நாகம்மாள். திருவனந்தபுரம் மன்னர் உயர்நிலைப் பள்ளியில் ஆறாம் படிவம் படித்துக்கொண்டு இருந்தபோது, 'ஸ்ரீபாரத மாதா வாலிபர் சங்கம்’ என்ற அமைப்பை ஏற்படுத்தி, இந்திய விடுதலைப் போராட்டக் களத்தில் இறங்கினார். 'ஜெய்ஹிந்த்’ என்ற முழக்கத்தை முதலில் எழுப்பியவர்செண்பகராமன்தான்
என்கிறார்கள்.அதுகுறித்து, ஆதாரபூர்வமான தடயங்கள் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால், 1933-ம் ஆண்டு வியன்னாவில் நடந்த மாநாடு ஒன்றில் செண்பகராமன் இந்த முழக்கத்தை முழங்கினார் என்ற குறிப்பு காணப்படுகிறது.               
                                                   அவரது 17-வது வயதில், ஸ்ட்ரிக்ட்லேண்ட் என்ற விலங்கியல் ஆய்வாளரின் நட்பு கிடைத்தது. ஸ்ட்ரிக்ட்லேண்ட், இந்தியாவில் விலங்கினத் தொகுதி பற்றி ஆய்வில் இருந்தார். அவருடன் இத்தாலிக்குச் சென்ற செண்பகராமன், அங்கே சில ஆண்டுகள் கல்வி பயின்றிருக்கிறார். பிறகு, சுவிட்சர்லாந்து மற்றும் பெர்லின் பல்கலைக்கழகங்களில் படித்துப் பொறியியல் துறையில் டாக்டர் பட்டம் பெற்றார். ஜெர்மனியில் இருந்தபடியே அவர், 'இந்திய சுதந்திரப் போராட்ட இயக்கம்’ என்ற சர்வதேசக் குழுவை உருவாக்கிப் போராடினார். 'புரோஇந்தியா’ என்ற மாத இதழைத் தொடங்கினார். ஆங்கிலம் மற்றும் ஜெர்மனியில் அந்த இதழ் வெளியிடப்பட்டது. இந்தியாவில் உள்ள ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்து 1915-ல் ஆப்கானிஸ்தானில் மாற்று அரசு ஒன்றை உருவாக்கினார்கள். இந்த அரசின் வெளிவிவகாரத் துறை அமைச்சராக செண்பகராமன் பிள்ளை நியமிக்கப்பட்டார்.1918-ல் பிரிட்டிஷ் அரசின் நெருக்கடி காரணமாக, இந்த அரசுக்குக் கொடுத்த ஆதரவை ஜப்பான் திரும்பப் பெற்றது.              ஆகவே, இந்தியாவின் தற்காலிக அரசு ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற்றப்பட்டது. 1914-ல் மூண்ட உலகப் போரின்போது ஜெர்மனி அரசு, 'எம்டன்’ என்ற பெயர் கொண்ட பெரிய யுத்தக் கப்பல் ஒன்றை கடல் தாக்குதலுக்குப் பயன்படுத்தியது. 1908-ம் ஆண்டு கட்டப்பட்ட எம்டன் கப்பல் 3,600 டன் எடை கொண்டது. அதன் வேகம் 25 நாட்டிக்கல் மைல். நிலக்கரிதான் அதற்கான எரிபொருள். 10 1/2 செ.மீ பீரங்கிகள் 10 கொண்டது. எதிரியின் கப்பல்களைக் குறிவைத்துச் சுடுவதில் தன்னிரகற்றது. இந்தக் கப்பலில் 360 கடல் வீரர்கள் இருந்தார்கள். இந்தக் கப்பல் பசிஃபிக் கடலில் 4,200 மைல்கள் தூரத்தை 14 நாட்களில் கடந்து சாதனை செய்து இருக்கிறது.எம்டன் கப்பலின் கேப்டனாக இருந்தவர் கார்ல்பான் முல்லர். அவர், நிகரற்ற கடலோடி வீரர். புகைக்கூண்டு, புறவடிவம், அதன் நிறம் ஆகியவற்றை உருமாற்றிக்கொண்டு எதிரிகளைத் திணறடித்தது எம்டன். முதல் உலகப் போரில் 20 கப்பல்களை வீழ்த்தி இருக்கிறது எம்டன்.அந்தக் கப்பல் செப்டம்பர் 21-ம் தேதியன்று சென்னைக்கு வந்தது. செப்டம்பர் 22-ம் தேதி, ஆங்கில அரசுக்குச் சொந்தமான இரு பெரிய எண்ணெய்க் கிடங்குகளின் மீதும், சென்னைத் துறைமுகத்தின் மீதும் பீரங்கித் தாக்குதல் நடத்தியது. இதில், 8,000 பவுண்ட் மதிப்புள்ள 34,600 கேலன் எண்ணெய் நாசமானது. பத்துக்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தார்கள்.இந்தத் தாக்குதலில், புனித ஜார்ஜ் கோட்டைச் சுவரின் ஒரு பகுதி அடியோடு பெயர்ந்து விழுந்தது. கோட்டையை நோக்கி வீசப்பட்ட ஒரு குண்டு வெடிக்காமல் மண்ணில் புதைந்தது. அது இன்றும் காட்சிக்கு வைக்கப்பட்டு இருக்கிறது. எம்டன் ஏற்படுத்திய பீதியால், ஏராளமானோர் சென்னையைக் காலி செய்துவிட்டுப் பதறி ஓடினர். இந்தக் கப்பலில் செண்பகராமன் வரவில்லை. அவரது பெயர் அந்தக் கப்பலின் பெயர் பட்டியலில் இல்லை என்று ஒரு சாரார் கூறுகிறார்கள். ஆனால், அவர் அந்தக் கப்பலில் பயணம் செய்தார் என்று, அவரது மனைவி கூறியிருக்கிறார். பாதுகாப்பு கருதி வேறு பெயரில் அவர் பயணம் செய்திருக்கக்கூடும் என்றும் கருதுகிறார்கள்.
1933-ம் ஆண்டு பெர்லினில் வாழ்ந்த மணிப்பூரைச் சேர்ந்த லட்சுமிபாய் என்ற பெண்ணை, செண்பகராமன் திருமணம் செய்து​கொண்டார். முதல் உலகப் போருக்குப் பிறகு, ஜெர்மனியில் ஹிட்லர் ஆட்சி உருவானது. செண்பகராமன், ஹிட்லருடன் நெருக்கமாகப் பழகி வந்தார். இந்தியா குறித்து ஹிட்லருக்குள் இருந்த ஆழமான வெறுப்பை உணர்ந்த செண்பகராமன், வெளிப்படையாகத் தனது எதிர்ப்பைத் தெரிவித்து இருக்கிறார். ஆகவே, நாஜிக்களின் நெருக்கடிக்கு ஆளானார்.ஒரு விருந்தில் செண்பகராமன் சாப்பிட்ட உணவில் விஷம் கலக்கப்பட்டு இருந்தது. அதை அறியாமல் சாப்பிட்டுவிட்டு நோய்மையுற்ற இவர், சிகிக்சை பெற இத்தாலி சென்றார். தீவிர சிகிக்சை அளித்தும் செண்பகராமன் இறந்து போனார். அவருக்குத் தரப்பட்ட உணவில் யார் விஷம் கலந்தது? அல்லது அது ஒரு கட்டுக்கதையா என்பது தெளிவற்ற தகவலாகவே இன்றும் இருந்து வருகிறது.1934-ம் ஆண்டு மே மாதம் 26-ம் தேதி செண்பகராமனின் உயிர் பிரிந்தது. தனது இறுதி விருப்பமாக, 'என்னுடைய சாம்பலை இந்தியாவுக்கு எடுத்துச் சென்று, எனது தாயாரின் சாம்பலைக் கரைத்த, கேரளாவில் உள்ள கரமனை ஆற்றில் கரைக்க வேண்டும். மீதியை நாஞ்சில் நாட்டு வயல்களில் தூவ வேண்டும்’ என்று தெரிவித்திருந்தார்.ஆனால், அவரது மனைவி லட்சுமிபாயால் அதை எளிதாக நிறைவேற்ற முடியவில்லை. கணவனின் அஸ்தியைப் பாதுகாப்பாக வைத்திருந்தபோதும், லட்சுமி பாய் மீது நாஜி அரசு குற்றம் சுமத்தி அவரை மனநலக் காப்பத்தில் அடைத்தது. அவரைச் சித்ரவதைகள் செய்தது.                                                                     
                                கணவனின் அஸ்தியை வைத்துக்கொண்டு, லட்சுமிபாய் 30 வருடங்கள் போராடினார்.முடிவில், அஸ்தியோடு இந்தியாவுக்கு வந்து சேர்ந்தார். மும்பையில் தங்கி இருந்த அவர், இந்திய அரசின் மரியாதையோடு அந்த அஸ்தி கரைக்கப்பட வேண்டும் என்பதற்காகப் போராடினார். அதுவும் எளிதாக நடக்கவில்லை. ஒரு கட்டத்தில், இந்திரா காந்திக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், இந்திரா ஒரு சிறுமியாக தனது வீட்டுக்கு வந்து போன நிகழ்வை நினைவுபடுத்தி, தனது கணவனின் இறுதி ஆசையை நிறைவேற்ற உதவும்படி கேட்டுக்கொண்டார்.இந்திய அரசு சார்பில், செண்பகராமனின் அஸ்தியைக் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. 1966-ம் இந்திய அரசு சார்பில், செண்பகராமனின் அஸ்தியைக் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. 1966-ம் இந்தியாவின் போர்க் கப்பல் ஒன்றில் செண்பகராமனின் அஸ்தியை எடுத்துக் கொண்டு மும்பையில் இருந்து கொச்சிக்குப் பயணமானார் லட்சுமிபாய். செண்பகராமன் விரும்பியபடியே அவரது அஸ்தி கரமனை ஆற்றில் கரைக்கப்பட்டது. எந்த நதியின் நீரில் தனது தாயின் அஸ்தி கரைந்து போனதோ, அதே நதியில் செண்பகராமனும் கரைந்து போனார். ஆனால், அவர் விரும்பியபடி நாஞ்சில் நாட்டு வயல்களில் அந்த அஸ்தி தூவப்பட்டதா என்ற விவரம் தெரியவில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு, தமிழக அரசு செண்பகராமனுக்கு சிலை வைத்துக் கொண்டாடி இருக்கிறது. 1972-ம் ஆண்டு லட்சுமி பாய் மும்பையில் காலமானார்.செண்பகராமனோடு ஜெர்மனிக்குச் சென்ற அவரது அண்ணன் பத்மநாபன் என்ன ஆனார்? அவரது வாழ்க்கை எப்படி இருந்தது? என்ற விவரங்களை இன்றும் அறிந்து கொள்ள முடியவில்லை. செண்பகராமன் அஸ்தி யோடு 32 வருடங்கள் காத்திருந்த அவரது மனைவியின் வலி மிகுந்த போராட்டம் வரலாற்றின் பாதையில் அழியாத துயரமென மினுங்கிக்கொண்டே இருக்கிறது.

வரலாற்றில் ஆண் அடையும் துயரம் ஒரு விதம் என்றால், பெண் அடையும் துயரம் இன்னொரு விதம். அதன் நிகழ்கால சாட்சியைப் போலவே லட்சுமிபாய் இருந்தார். செண்பகராமனின் அஸ்தியைக் கரைத்த நாளில், லட்சுமிபாய் கதறி அழுதிருக்கிறார். அந்த அழுகை இறந்துபோன கணவனை நினைத்து அழுதது இல்லை. ஒருவரின் ஆசை நிறைவேறுவதற்கு எவ்வளவு தடைகள், போராட்டங்களைக் கடந்து வர வேண்டியிருக்கிறது. அதற்குள் எத்தனை அரசியல் நெருக்கடிகள், கெடுபிடிகள் இருக்கின்றன என்பதை நினைத்தே அழுதிருக்கிறார். வரலாற்றில் படிந்துபோன அந்த துயரக் குரலை உங்களால் செவி கொடுத்துக் கேட்க முடிந்தால், வரலாறு உயிருள்ளது என்பதை வலிமையாக உணர முடியும்.
 நன்றி ஜூனியர் விகடன், எஸ்.ராமகிருஷ்ணன்
No comments: