Jan 8, 2012

முல்லைப் பெரியாறு பிரச்னை: வைகோ பேட்டி.

முல்லைப் பெரியாறு பிரச்னைக்காக துவக்கத்தில் இருந்தே பல்வேறு போராட்டங்களை நடத்தியவர் வைகோ. அவரிடம் ஒரு சூடான பேட்டி.
”1999ல் மாநிலங்களுக்கிடையிலான நதிகளை நாட்டுடமையாக்குவது பற்றிய தனிநபர் மசோதாவை முதலில் நான் கொண்டுவந்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடந்தது. மு ல்லைப் பெரியாறு அணைப்பிரச்னையை வலியுறுத்தி 2004-ல் ஆயிரம் கி.மீக்கு மேல் நடைபயணம் போனேன். மாநாட்டை நடத்தினோம். தொடர்ந்து ஊர்வலம், உண் ணாவிரதம் என்று பலவிதமான போராட்டங்களை நடத்தினோம்’’ என்று தன்னுடைய பங்கை மென்மையாகச் சொல்லிக்கொண்டு போனவரிடம் கேள்விகளை அடுக்கியதும் படிப்படியாக உஷ்ணமானது உரையாடல்.
 திராவிடம் என்று ஒருகாலத்தில் நாம் அரவணைத்துக் கொண்ட கேரளாவுடன் முல்லைப் பெரியாறு அணை தொடர்பான சிக்கல் உருவானதற்கு மூலகாரணம் யார்?

‘‘கேரளத்தில் மின்சாரம் தயாரிக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் இடுக்கியில் புதிய அணையைக் கட்டினார்கள். எழுபது டி.எம்.சி. தண்ணீர் கொள்ளளவு உள்ள அந்த  அணையில் அவர்கள் எதிர்பார்த்த அளவுக்கு நீர்வரத்து இல்லை. அப்போது அங்கு தலைமைப் பொறியாளராக இருந்த பரமேஸ்வரன் நாயர் உள்ளிட்ட பலர் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தைக் குறைத்து தண்ணீரை இடுக்கி அணைக்குக் கொண்டுவந்து விடலாம் என்று திட்டமிட்டார்கள். அதற்காக முல்லைப் பெரியாறு அணை  பலவீனமாக இருப்பதாகச் சொல்லி 1979ல் மலையாள நாளிதழ் ஒன்றின் மூலம் பீதியைக் கிளப்பினார்கள். அதிலிருந்து சிக்கல் ஆரம்பித்தது.’’

 தமிழக அரசுக்கு அணையில் எந்த அளவுக்கு உரிமை இருக்கிறது?
‘‘அப்போது ‘சென்னை ராஜதானி’யாக இருந்தபோது உருவான முல்லைப் பெரியாறு அணையில் எட்டாயிரம் ஏக்கர் நிலத்திற்கான குத்தகைப் பணத்தை நாம்தான் கட்டி வ ருகிறோம். நமக்கு 999 ஆண்டுகளுக்கான உரிமை இருக்கிறது. அதற்கான ஒப்பந்தமும் போடப்பட்டிருக்கிறது. அந்த அணை இருக்கிற பகுதியில் அதிகப்படியான  தமிழர்கள் வசித்தும் மொழிவாரி மாகாணப் பிரிவினையின் போது கேரளாவுடன் அந்தப்பகுதி இணைக்கப்பட்டது பெரும் பாதகம்.’’
அணையின் பாதுகாப்பை நன்றாக உணர்ந்தும் கேரளா தொடர்ந்து பல விதங்களில் எதனால் பீதியைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது?

‘‘அதுதான் மிகுந்த வருத்தத்தையும் அதிர்ச்சியையும் தருகிறது. ஏனென்றால் கேரளாவில் உள்ளவர்கள் நன்கு படித்தவர்கள்.
அணையின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய நிபுணர் குழுக்கள் அமைக்கப்பட்டு அந்தக் குழுக்கள் பாதுகாப்பை உறுதிசெய்தன. அதன்பிறகு 2006 பிப்ரவரி 27 அன்று  உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அந்தத் தீர்ப்பு தமிழகத்திற்குச் சாதகமாக இருந்தது. அதில் குறிப்பிடப்பட்ட முக்கியமான அம்சம் ‘கேரள அரசோ அதிகாரிகளோ அதை மீறி  எதுவும் செய்யக்கூடாது’ என்று வலியுறுத்தியிருப்பதுதான்.’’
தீர்ப்பு இப்படி இருந்தாலும் கேரள அரசு அதை மீறி எப்படி சட்டமன்றத்தில் சட்டத்திருத்தம் கொண்டுவர முடிந்தது? வெளிப்படையாக தேசிய இறையாண்மையை மீறி  நடந்த இந்தச் செயலை ஏன் மத்திய அரசு அப்போதே தட்டிக் கேட்கவில்லை?
‘‘கேரளாவைச் சேர்ந்தவர்கள் மத்திய அரசில் முக்கியப் பொறுப்புகளை வகிக்கிறார்கள். அவர்கள் நினைத்ததைச் சாதிக்கிறார்கள். கேரளாவின் தவறான போக்கிற்கு  அவர்களும் துணை போனார்கள். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வெளி வந்ததும் அதை எதிர்த்து கேரள நீர்ப்பாசன நீர்ப்பராமரிப்பு மசோதாவைக் கொண்டுவந்தார்கள். அதில்  முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்ட அளவை 136 அடியாகத்தான் குறிப்பிட்டிருக்கிறார்கள். இது உச்சநீதிமன்றத்திற்கே விடுக்கப்பட்ட சவால்.
இந்திய இறையாண்மையை, இந்திய ஒருமைப்பாட்டைக் காக்க உண்மையிலேயே தவறிவிட்டார்கள்.
முல்லைப் பெரியாறு உட்பட கேரளாவில் உள்ள 22 அணைகள் சம்பந்தப்பட்ட எந்த விஷயத்திலும் இந்தியாவில் உள்ள எந்த சிவில் நீதிமன்றமும் தலையிட முடியாது  என்று கேரள அரசு சட்டத்திருத்தம் கொண்டுவந்த போதே, அது செல்லாது என்று மத்திய அரசு தலையிட்டு உச்சநீதிமன்றம் மூலம் அதைச் செய்திருக்க வேண்டும்.  இதைவிட ஒரு அக்கிரமம் இருக்க முடியாது.’’
அப்படி என்றால் தேசியத்தைப் பொறுத்தவரை தமிழகத்திற்கு ஒரு அளவுகோல், கேரளாவுக்கு ஒரு அளவுகோல் என்றாகிவிடாதா?

‘‘இந்தப் பிரச்னையில் தலையிட மத்திய அரசும் தவறிவிட்டது. உச்சநீதிமன்றமும் தவறி விட்டது. இந்த வழக்கு மறுபடியும் உச்சநீதிமன்றத்திற்குப் போனது. இங்கும், கேர ளாவிலும் அரசுகள் மாறின. திரும்பவும் 33 வாய்தாக்களுக்கு கேரளா இழுத்தடித்தது. அதன்பிறகு மீண்டும் தமிழகத்தின் பக்கம்தான் நியாயம் இருக்கிறது என்று  உச்சநீதிமன்றம் ஏற்கெனவே அளித்த தீர்ப்பைத்தான் அளிக்க இருக்கிறது என்பதை உணர்ந்த கேரளா, நரித்தந்திரத்துடன் அரசியல்சட்ட அமர்வில் இதை விவாதிக்க  வேண்டும் என்று வாதாடுகிறது. தமிழக அரசின் வழக்கறிஞரான பராசுரன் முதலில் மறுத்தவர் பிறகு எழுத்துபூர்வமாக ஒப்புதல் கொடுத்ததுடன், புதிய அணை கட்ட ஆட்சேபனை இல்லை என்றும் சொன்னது என்ன வினோதம் பாருங்கள்.’’
தமிழகத்தின் எல்லையோர மக்கள் கட்சிபேதம் பார்க்காமல் கிளர்ந்தெழுந்து போராடினதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?

‘‘புதிய அணையை உடைப்போம் என்று அச்சுதானந்தன் முதலில் சொன்னார். மண்வெட்டி, கடப்பாரையுடன் ஊர்வலம் போனார்கள். அதை எதிர்த்து 658 ஊர்களில் கூ ட்டங்களில் பிரச்சாரம் பண்ணியிருக்கிறேன். சமீபத்தில் கேரள நீர்வளத்துறை அமைச்சர் அணையை உடைத்து அந்தப் பொருட்களை எடுத்துக் கொண்டுபோய் சாலை  அமைக்கப் போவதாகச் சொல்லியிருக்கிறார். இதைவிடத் திமிரான வார்த்தையைச் சொல்ல முடியுமா? தமிழக மக்கள் கொந்தளித்து எழ இதுதான் காரணம்.’’
இந்தப் பிரச்னை தொடர்பாக பிரதமரைச் சமீபத்தில் சந்தித்தீர்களே.. என்ன கோரிக்கையை முன்வைத்தீர்கள்?
‘‘‘ ‘நீங்கள் அணையைப் பாதுகாக்க மத்திய பாதுகாப்புப் படையை அனுப்புங்கள். அணைக்கு ஏதாவது ஆபத்து ஏற்படுத்த முயன்றால் இந்தியா உடைந்துபோகும்’ எனறு  நேரடியாகச் சொன்னேன். அதற்கு பிரதமர் ‘கேரள அரசின் சம்மதம் இல்லாமல் மத்திய பாதுகாப்புப் படையை அனுப்பமுடியுமா என்பதுபற்றி நான் ஆலோசிக்கணும்’ எ ன்று சொன்னார்.
அப்போது குறுக்கிட்டு நான் சொன்னேன். ‘பிரதமர் என்னைத் தவறாக நினைக்கக்கூடாது. ஏற்கெனவே ஈழத்தமிழர்களை அழிக்க ஆயுதங்களைக் கொடுத்திட்டீங்கங்கிற  காயம் ஏற்படுத்திய புண் இன்னும் ஆறலை. இப்போது மேலும் எங்க மனசைக் காயப்படுத்திறீங்க. கேரளா அணையை உடைத்தால் சோவியத் ரஷ்யா உடைஞ்ச மாதிரி  இந்தியாவும் உடைஞ்சு போயிடும்’ என்று சொன்னேன். இதற்குப் பதில் அளித்த பிரதமர் ‘நான் கவலைப்படுறேன்’ என்று சொன்னார். ‘நான் சொல்றதுக்கு  கவலைப்படாதீங்க… நான் சொன்ன மாதிரி நடக்கும்’ என்று சொன்னேன்.
முக்கியமான ஒன்றை இங்கே பதிவு பண்ண விரும்புகிறேன். 2006 நவம்பர் 9, 10 தேதிகளில் மத்திய அரசினுடைய உள்துறை அமைச்சகத்தின் உளவுத்துறையில் இருக்கிற  தொழில் பாதுகாப்புப் பிரிவு ஒரு அறிக்கையை அனுப்பியிருக்கிறது. அதில் ‘முல்லைப் பெரியாறு அணைக்கு ஆபத்து வருகிறது. அதை உடைக்க முயற்சி நடக்கிறது.  அதனால் அணைப்பகுதியில் உள்ள கேரள போலீஸாரின் பாதுகாப்பை விலக்கிவிட்டு மத்திய ரிசர்வ் போலீஸை அனுப்புங்கள், அணையைக் காப்பாற்றுங்கள்’ என்று  தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. உளவுத்துறையே அப்படிச் சொல்லியிருக்கும்போது ஏன் அந்தப் பாதுகாப்பைத் தரவில்லை? தன்னுடைய தீர்ப்பையே காலில் போட்டு  மிதித்த கேரள அரசு பண்ணுகிற அக்கிரமங்களை தடுக்க ஏன் உச்சநீதிமன்றமே முன்வரவில்லை?’’
இந்த நிலையில் தமிழகம் என்னதான் செய்ய முடியும்?
‘‘கடையடைப்பு, உண்ணாவிரதம் என்று அறவழியில்தான் நாம் போராடிக் கொண்டிருக்கிறோம். இரண்டு பேர் தங்களுடைய உயிரை மாய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.  காங்கிரஸ் அரசை எதிர்த்து ஒரு இளைஞர் அங்கு தீக்குளித்திருக்கிறார்.
தங்களுக்கு நஷ்டம் வருவதைப் பொருட்படுத்தாமல் வியாபாரிகள் கடையடைக்கிறார்கள். எந்தக் கட்சி அடையாளங்களும் இல்லாமல் மக்கள் அவர்களாகப் போராடு கிறார்கள். சாதாரணப் பெண்கள் கதறுகிறார்கள்.
இதற்கு என்னதான் தீர்வு என்று கேட்கலாம்.
‘நாங்கள் அணையை உடைக்கும் திட்டத்தைக் கைவிட்டுவிட்டோம்.. புதிய அணை எதையும் கட்ட மாட்டோம். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்குக் கட்டுப்படுவோம்’ என்கிற முடிவை கேரளா எடுத்தால்தான் இந்தச் சிக்கல் தீரும்.’’.3 comments:

Rathnavel said...

நல்ல பதிவு.
நன்றி.

மயிலன் said...

//கேரளாவைச் சேர்ந்தவர்கள் மத்திய அரசில் முக்கியப் பொறுப்புகளை வகிக்கிறார்கள். அவர்கள் நினைத்ததைச் சாதிக்கிறார்கள். கேரளாவின் தவறான போக்கிற்கு அவர்களும் துணை போனார்கள்.//

இறையாண்மைக்கு எதிரானது என்றாலும் நம்மவர்கள் நமக்காக எதுவும் சாதித்து கொள்ளவில்லை என்று நினைக்கும் போது வேதனை தான் எஞ்சும்...

தேர்தல் அரசியல் தாண்டிய ஒரு தலைவரை மக்களிடம் கொண்டு செல்லும் முயற்சி அருமை.. வாழ்த்துக்கள்

Ramani said...

அருமையான குழப்பங்களை அடியோடு
நீக்கிப் போகும் தெளிவான பேட்டி
பகிர்வுக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்