Jun 22, 2014

நலம் 360’ - 1


மருத்துவர் கு.சிவராமன், ஓவியம்: ஹாசிப்கான்

குந்தா மலைக்கிராமத்தின் சாலையோரத்தில் தேநீர் அருந்திக்கொண்டிருந்தபோது வந்த தொலைபேசி அழைப்பு, என் வாழ்வின் மறக்க முடியாத ஒரு தருணத்தைப் பரிசளித்தது!



''எனக்கு 71 வயசு. 40 வருஷ விகடன் வாசகன். 'ஆறாம்திணை’ முடிஞ்சிருச்சுனு படிச்சப்ப, மனசு பாரமாயிடுச்சு. நெஜமா சொல்றேன் தம்பி... கண்ணீர் வந்திருச்சு! ரெண்டு வருஷத்துல என் வீடே வேற மாதிரி ஆகிருக்கு. எல்லாரும் எண்ணெய் தேய்ச்சுக் குளிக்கிறாங்க. உளுந்தங்களி திரும்ப வந்திருக்கு. மருமக முடக்கறுத்தான் தோசை சுடுறா. வித்துடலாம்னு சொன்ன பூமில 'ஏதாச்சும் செய்யலாமாப்பா?’னு பையன் கேட்கிறான். இப்போ 'ஆறாம்திணை’யைக் கண்டிப்பா நிறுத்தியே ஆகணுமாப்பா?'' மேலும் நெகிழ்வுடனும் ஆதங்கத்துடனும் அந்தத் திருப்பூர் பெரியவர் பேசப் பேச, நான் அழுதேவிட்டேன். எத்தனை கடிதங்கள், தொலைபேசி அழைப்புகள், இணையத்தில், சமூக வலைதளங்களில் நிரம்பி வழிந்த அரவணைப்புகளில் நானும் விகடனும் கொஞ்சம் ஆடித்தான் போய்விட்டோம். இழந்ததையும் தொலைத்ததையும் எடுத்துச் சொல்லி, தினம் நம் மீது இறுகும் இறுக்கமான வணிகப்பிடியை அடையாளம் காட்டி, நலவாழ்வை நோக்கி நகர வழிகாட்டிய வரிகள்தான் 'ஆறாம்திணை’ கட்டுரையின் வாசக்கால்கள். அழுக்குப் புடைவை அணிந்த பொக்கை வாய்ப் பாட்டியைக் கண்டதும் பட்டணத்துப் பேரக் குழந்தை ஓடிச்சென்று கட்டி அணைப்பது போலதான், 'ஆறாம்திணை’யை அதன் வாசகர்கள் உச்சிமோந்து அணைத்துக்கொண்டார்கள்.



அதே நெகிழ்வுடனும் நிறைவுடனும் கொஞ்சம் இளைப்பாறிவிட்டு வரலாம் என சென்னை வெப்பத்தில் இருந்து தப்பி, சொந்த கிராமத்துக்குச் சென்று, பக்கத்துத் தோட்டத்தில் புதுசாக வாங்கியிருந்த டிராக்டரை குதூகலமாக ஓட்டிப்பார்த்தபோதுதான் அந்த அழைப்பு! ''சார்... எங்க இருக்கீங்க?'' என விகடன் ஆசிரியர் தொலைபேசினார். ''சின்ன பிரேக் எடுத்துக்கலாம்னு சொன்னீங்களே... அதான் ஊரு பக்கம் வந்துட்டேன்...'' என நான் பதிலளிக்க, ''இங்க மெயிலும் போனும் கதறது. ''ஆறாம்திணை’யை ஏன் நிறுத்தினீங்க?’னு கேட்கிறாங்க. அடுத்த வெர்ஷனை உடனே ஆரம்பிச்சிடலாம்னு ஐடியா. தலைப்புகூட முடிவு பண்ணிட்டோம். நீங்க ரெடியா?'' என்று கேட்க, 'நலம் 360’ பூத்துவிட்டது.



'நலம் 360’... வெறும் மருத்துவக் கட்டுரை அல்ல. நலவாழ்வு என்பது மருந்து, மாத்திரை, கசாயம், ஈ.சி.ஜி. விஷயம் அல்ல. ஆரோக்கியம் என்பது, சிக்ஸ்பேக் உடம்பில் கட்டமைக்கப்படுவதும் கிடையாது. ஆறு லட்சம் பாலிசி மூலம் அதை வாங்கி வீட்டில் வைக்கவும் முடியாது. அஞ்சறைப்பெட்டியிலும், அடுப்பாங்கரைப் பரணில் கவிழ்த்திவைத்த வெங்கலத் தவலையிலும், ரசம் வைக்கும் ஈயச்சட்டியிலும், பட்டாசல் மாடக்குழியில் பத்திரப்படுத்திய அகல்விளக்கிலும், வாய்க்கால், வரப்பு ஓரங்களில் வளர்ந்து நிற்கும் நீர்முள்ளி, கீழாநெல்லியிலும், கரிசாலை கண்மையிலும், கத்தாழை எண்ணெய்க் குளியலிலும், வசம்புக் கட்டை கை வளவியிலும், மருதாணிப் பற்றிலும், புளியில்லா பொரிச்ச குழம்பிலும், சுண்டுவார் ரசத்திலும், இடுப்புச் சுருக்குப்பை தாம்பூலத்திலும்தான் நம் நலவாழ்வு நங்கூரமிட்டு இருந்தது!



வண்ணத்துப்பூச்சியின் சிறகு அசைவில் எங்கோ சூறாவளி உருவாகும் கேயாஸ் தியரி போல, மீந்துபோன சாம்பாரை ப்ளாஸ்டிக் கவரோடு ரயில் பயணத்தின்போது வீசி எறிவதில்கூட, யாருடைய வாழ்க்கைப் பயணத்திலோ ப்ளாஸ்டிக்கின் சுவடுகளான அடினோ கார்சினோமா தூக்கிச் செருகும் சாத்தியம் மிக அதிகம். பின்னிரவில் முகநூலில் ஏற்றிய தன் புகைப்படத்துக்கு எத்தனை 'லைக்ஸ்’ விழுந்திருக்கின்றன என இரவெல்லாம் பரபரப்புடன் 15 நிமிடங்களுக்கு ஒரு முறை செல்போனைச் சீண்டும் இளசுகளுக்கு, உறக்கம் தொலைத்த தன் உடம்புக்கு நோய்க்கூட்டம் 'லைக்’ போட்டிருக்கும் விஷயம் தெரியவில்லை. இதுவும் இன்னபிறவுமாக நல்வாழ்வு தொடர்பான விசாலமான பார்வையை விதைப்பதே நலம் '360’-ன் நோக்கம்!



'எண்சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்’ என்பது முதுமொழி. ஆனால், அந்த எண்சாண் உடம்பு, நலத்தோடு அன்றாடம் நகர்வதற்கு அடிப்படையான விஷயம் வயிறும் அதில் நடக்கும் செரிமானமும்தான். சாப்பிட கொஞ்சமே கொஞ்சம் தாமதமானாலும் லேசாக நெஞ்சாங்கூட்டுக்குக் கீழே எரிவதும், 'எண்ணெய் பலகாரம் வீணாகுதே’ என என்றைக்கோ ஒரு நாள் சாப்பிட்டதற்கு, அடுத்த இரண்டு நாள்கள் ஏப்பத்தில் வாசம் காட்டி வதைப்பதையும் நாம் பல சமயம் அலட்சியப்படுத்திவிடுவது உண்டு. அரிசியையும், கம்பையும், சோளத்தையும், மணத்தக்காளிக் கீரையையும் பல ஆயிரம் ஆண்டுகளாகப் பார்த்துப் பழகிய நம் ஜீரண மரபுக்கு, சிவப்பு சிக்கன் பீஸுடன் வரும் 'அலூரா சிவப்பு’, 'எரித்ரோசைன்’ ஆகியவை கொஞ்சம் திகிலாகத்தான் இருக்கும். இந்தத் திகிலில், சில துளி ஜீரணசுரப்பைக் கூட்டவோ குறைக்கவோ செய்யும்போதுதான் அல்சரில் இருந்து கொலைட்டிஸ் வரை குடலின் இயல்பு தாறுமாறாகச் சிதைகிறது. கடைசிப் பந்தில் சிக்ஸர் விளாசி ஜெயித்துவிடலாம் என்று பழகிவிட்ட டி-20 மனம், அலுவலகம், பள்ளி, கல்லூரிகளுக்கு கடைசி நிமிடத்தில் அள்ளிப் போட்டுக்கொண்டு அரக்கப் பரக்கக் கிளம்பும் பழக்கம்... இவைதான் வியாதிக்குச் சிவப்பு கம்பளம் விரிக்கும்!



உமிழ்நீரில் தொடங்குகிறது ஜீரணம். உணவு மேஜையில் மூக்கின் மோப்பத்தில் தொடங்குகிறது என்றுகூட சொல்லலாம். 24 மணி நேரத்தில் சுரக்கும் சுமார் 11.25 லிட்டர் எச்சில், அதனுடன் நாம் உண்ணும் கார்போஹைட்ரேட்டை உடைத்து, குளுக்கோஸ் துகள்களாக்கி ஜீரணத்துக்கு பிள்ளையார் சுழி போடுகிறது.



ஒரு துண்டு உணவு உள்ளே போனதும் வாயில் ஊறும் எச்சிலில் உணவைச் செரிக்க உதவும் மியூசின் அமைலோஸ் சுரப்புகளும், உடலுக்கு ஒவ்வாத பொருள்களை முறித்து வெளியேற்றும் லைபேஸ் நொதியும் சுரக்கத் தொடங்கும். உணவை மெதுவாக நொறுக்கி, அந்த உமிழ்நீருடன் கலந்து உள் அனுப்ப வேண்டும். இதற்கு எல்லாம் அறுசுவையை உணரும் ஆசுவாசமான மனம் நிச்சயம் வேண்டும். இடது கையில் கம்ப்யூட்டர் மவுஸோ, ஸ்மார்ட் போனோ, தொலைக்காட்சி ரிமோட்டோ... ஏன் 'ஆறாம்திணை’ புத்தகமோ வைத்துக்கொண்டு வலது கையில் பாற்கடல் அமிர்தம் சாப்பிட்டால்கூட அது பாழ் தான். உணவு உத்தமமாக ஜீரணிக்க பரபரப்பு இல்லாத மனம் அடிப்படைத் தகுதி.



உடலை நோய்ப்பிடிக்குச் சிக்காமல் தற்காக்கும் பொடி வகைகளை நம் முன்னோர்கள் காலம் காலமாக உணவில் சேர்த்து வந்திருக்கின்றனர். சாதாரண சளி, இருமலில் இருந்து சர்க்கரை வியாதி வரை காக்கும் அப்படியான ஒரு பொடி அன்னப் பொடி. சமீபமாக எக்குத்தப்பு இரவு விருந்து உண்டாக்கும் எதுக்களிப்பு, வயிறு முதல் தொண்டை வரை எரியவைத்து நாள்பட்ட வயிற்று வியாதியை (Gastroesophageal Reflux Disease) வரவைக்கிறது. இதற்கு அன்னப்பொடி மிகச் சிறந்த மருந்து. ஜீரணத்தை வரைமுறைப்படுத்தும் அன்னப்பொடியின் செய்முறை பெட்டிச் செய்தியில்.



தாய்ப்பாலுக்குப் பின் அரிசி/கஞ்சியில் தொடங்கி, ஐந்து வயதுக்குள்ளாகவே ஹைதராபாத் தம் பிரியாணி வரை ஜீரணிக்கப் பழகும் நம் ஜீரண மண்டலம், உடலுக்கான மிகப் பெரிய பாதுகாப்பான அரண். அதில் ஓட்டை உடைசல் ஏற்படுவதற்குக் காரணம்... வாயைக் கட்டாமல் வளைத்து அடிக்கும் மனோபாவமும், எதைத் தின்கிறோம் என்ற அக்கறையில்லாத வாழ்வியலும், 'ஒரு வாய் சாப்பிட்டுவிட்டுப் போயேன்’ என்ற கரிசனக் குரலை அலட்சியப்படுத்தி நகர்வதும்தான். சின்னச் சின்ன அக்கறைகளை சிறுவயது முதல் உண்டாக்குவது மட்டுமே நாளைய நலவாழ்வுக்கான நம்பிக்கைகள்.



நம்பிக்கையோடு நலம் காப்போம்!



- நலம் பரவும்...



அன்னப்பொடி

தேவையான பொருள்கள்: சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலம், சீரகம், நிழலில் உலர்த்திய கறிவேப்பிலை, கல் உப்பு அனைத்தும் தலா 50 கிராம். பெருங்காயம் 25 கிராம்.

செய்முறை: சுக்கின் புறத்தோலைச் சீவி உலர்த்தி, மற்றவற்றை எல்லாம் நன்கு குப்பை நீக்கி உலர்த்தி, அனைத்தையும் பொன்வறுவலாக வாணலியில் வறுத்து, பொடித்துவைத்துக்கொண்டு வாரம் மூன்று நாள் முதல் உருண்டைச் சோற்றில் பிசைந்து சாப்பிடுவது அஜீரணத்தைப் போக்கும் எளிய மருந்து.

உணவுக்கு முன் வெந்தயப்பொடி, உணவோடு அன்னப்பொடி அல்லது ஐங்காயப்பொடி, உணவில் தூதுவளை ரசம், உணவுக்குப் பின் கடுக்காய்ப்பொடி என்று உணவை மருந்தாக்கிச் சாப்பிட்டவர்கள் நாம். நவீனத்தில் மாடுலர் கிச்சனாக மாறிப்போன அடுப்பங்கரையில், ஆலிவ் ஆயிலும் மயோனைஸும் குடியேறி, ஓமத்தையும் திப்பிலியையும் ஓரங்கட்டி ஒழித்துவிட்டன. கொஞ்சம் அவற்றை மீட்டெடுத்து சாம்பார் பொடி, ரசப்பொடி செய்வது போல அன்னப்பொடி செய்து சாப்பிட்டுப் பாருங்கள். ஆரோக்கியம் உங்கள் வீட்டில் ஆயுளுக்கும் குடியிருக்கும்! 
சுகர், பி.பி., போன்றவற்றை தவிர்க்க, தமிழர்கள் 'கை’க்கொள்ளும் ஒரே உத்தி... நடைப்பயிற்சி! ஆனால், நாம் மேற்கொள்ளும் நடைப்பயிற்சி முறையானதா? இதுகுறித்த சில சரி, தப்பு விவரங்கள் இங்கே...

நடைப்பயிற்சிக்கு மாற்றாக மருந்து கிடையாது. இந்தப் பயிற்சி இல்லாமல் எடை குறைக்கவோ, சர்க்கரை நோயை வெல்வதோ சாத்தியமே இல்லை.

எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். காலையில்தான் நடக்க வேண்டும் என்பது இல்லை. இரவில் நடக்கையில் 5-10 சதவிகிதம் பயன் குறையலாமே தவிர, தப்பு கிடையாது.

ஓடுவதற்கும் நடப்பதற்கும் கலோரி எரிப்பில் அதிக வித்தியாசங்கள் இல்லை. 30 நிமிடங்களில் 3 கி.மீ கடக்கும் வேகத்தில் 45 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் நடக்கலாம். ஆனால், 'விண்டோ ஷாப்பிங்’ போல பராக்குப் பார்த்துக்கொண்டே நடப்பது அதிகம் பயன் தராது.

நடைக்கு முன்னர் தேநீர் அருந்தலாம். குறிப்பாக, சர்க்கரை நோயாளிகள் நடைப்பயிற்சிக்கு முன்னர் பச்சைத் தேநீரும், கொஞ்சம் முளைகட்டிய பயறு அடங்கிய சுண்டலும் சாப்பிடலாம்.

நடக்கும் 45 மணித்துளிகளும் பாட்டு கேட்டுக்கொண்டே நடப்பேன்’ எனப் பிடிவாதம் பிடித்தால், கூடிய விரைவில் ஆரோக்கியமான காதுகேளாதவராக மாறக்கூடும்.

குடும்ப உறவுச் சிக்கல்கள், ஷேர் வேல்யூ, பட விமர்சனம், தோனியின் ஹெலிகாப்டர் ஷாட் எனப் பேசிக்கொண்டு நடப்பது உடற்சோர்வையும் மன உளைச்சலையுமே தரும்.

'அதான் கிச்சன்ல, மொட்டைமாடில நடக்கிறேனே... அதுவே ரெண்டு கி.மீ வரும்!’ போன்ற சமாதானங்கள் உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்வது.

சர்க்கரை நோயாளிகள், கண்டிப்பாக வெறும் காலில் நடக்கக் கூடாது. தரமான, எடை குறைவான, மெத்தென்ற கேன்வாஸ் ஷூ அல்லது செருப்பு நல்லது.

நன்றி ஆனந்த விகடன் 

No comments: