Feb 2, 2015

நலம் 360’ – 15,16,17,18,19,20

நலம் 360’ – 15

‘வெள்ளைத் தோல்’ மோகத்தில், ஆணுக்கான ஃபேர்னஸ் கிரீமில் தொடங்கி, குளிப்பதற்கு முன்பு குளிப்பதற்குப் பின்பு, மழிப்பதற்கு முன்பு, மழிப்பதற்குப் பின்பு, தோலின் ஈரப்பதம் காக்க, நிறம் மங்காமல் இருக்க, முடியை வளர்க்க, முடியை வளைக்க, வியர்வை நாற்றத்தை மறைக்க… என இந்தப் பட்டியல் இப்போது நீண்டுகொண்டேபோகிறது. முடி வெட்டும் கடையில், ”நீங்க ஏன் கொஞ்சம் ஃபேஷியல் பண்ணக் கூடாது, ஃபேஸ் லைட்டா டல்லாயிருக்கே சார்?’ என கட்டிங் போடும் தம்பி, நாசூக்காக மார்க்கெட்டிங் பண்ணும்போது நம்மில் பலருக்கும் ‘பண்ணிப் பார்த்தால்தான் என்ன?’ என்ற நப்பாசை துளிர்விடும்.
‘ஆண்பால் – பெண்பால் என இருக்கும் பால் வித்தியாசம் தோலுக்கும் உண்டா?’ என நிறையப் பேருக்குச் சந்தேகம் இருக்கும்.  கர்ப்பப்பைக்குள் ஆண் குழந்தை ஜனிக்கும்போதே, கொஞ்சம் கூடுதல் தடித்த தோல் என ஏற்பாடு நடந்துவிடுமாம். ஆண் ஹார்மோன் டெஸ்டோஸ்டீரான், அதன் துணைச் சுரப்பு டைஹைட்ரோ டெஸ்டோஸ்டீரான் முதலான ஆண்ட்ரோஜன் ஹார்மோன்கள் கூட்டணியால்தான் ஆணின் தோல் பெண்ணின் தோலைவிட 25 சதவிகிதம் தடிக்கிறது. ஆணின் தோல்  இயற்கையாகவே புற ஊதா கதிர் தாக்கத்தை, வெளிப்புற வெப்பம் மற்றும் குளிர்ச்சியால் ஏற்படும் தொல்லை ஆகியவற்றைத் தாக்குப்பிடிப்பது இதனால்தான். அதே நேரத்தில் கொலஸ்ட்ரால், செரமைடு, கொழுப்பு அமிலங்கள்… போன்றவை ஆணின் தோலில் கொஞ்சம் போனஸாகவே இருப்பதால், சோரியாசிஸ் முதல் அலர்ஜியில் வரும் பிற தோல்வியாதிகள் வரும் வாய்ப்பு பெண்களைவிட ஆண்களுக்கே அதிகம். தோலில் ஏற்படும் காயம் பெண்ணுக்கு ஆறுவதைவிட, கொஞ்சம் மெதுவாகவே ஆணுக்கு ஆறுவதற்குக் காரணமும் இந்தத் தடித்த தோல்தான்.
கொளுத்தும் வெயிலில் டை கட்டிக்கொண்டு,  வடாம் வற்றல் தொடங்கி வாக்கிங் குச்சி வரை விற்கும் ‘வணிகப் பெருக்கி’ ஆண் சமூகம், சாலையிலேயே சுற்றித் திரிவதால் வியர்வை நாற்றம், அரிப்பு, சொறி, சிரங்கு முதலான 88 விதமான பிரச்னைகளைப் போக்க, கிருமிநாசினி கலந்த சோப்புகளைத் தேடுவது இயல்பு. அதோடு, அப்படியே அந்த சோப்பில் TRICLOSAN  சேர்க்கை இருக்கிறதா என்று பார்ப்பதும் நல்லது. சோப்பிலும் பேஸ்ட்டிலும் 40 வருடக் காலமாகச் சேர்க்கப்படும் இந்த TRICLOSAN , ‘அப்படி ஒண்ணும் பெரிசாப் பயன் தரலை; ஆனால் தேய்க்கிறவனுக்குப் புற்றையும், தேய்ச்சுக் கழுவிவிடப்படும் கழிவுநீர் மண்ணுக்குப் போகும்போது நுண்ணுயிர்களுக்கு ஆபத்தும் தருவதாக’ இப்போதுதான் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.
‘அப்போ நாங்களும் நலங்கு மாவு தேய்க்கலாமா?’ என வெட்கப்படும் ஆண்களுக்கு ஒரு ரெசிப்பி. நலங்கு மாவில் கஸ்தூரி மஞ்சளுக்குப் பதிலாக கொஞ்சம் வேப்பிலை, கொஞ்சம் கருஞ்சீரகம் சேர்த்துத் தேயுங்கள். தோல் வறட்சி நீங்கி வழுவழுப்பாக, வாசமாக அதே சமயம் கிருமிநாசினியைப் பயன்படுத்தாமலே, தோல் வனப்பு கிட்டும்.
முகத்தில் முளைத்த முகப்பருவுக்கே கலவரம் ஆகும் இளசுகள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். ஆண் தன் முகத்தில் இருக்கும் முகப் பருவை நோண்டினால், லேசில் ஆறாத அவன் தடித்த தோல்தன்மையால், காலம் முழுக்க முகம் கரும்புள்ளி செம்புள்ளி குத்தியதுபோல மாறிவிடும். நேற்று அரைத்த தோசை மாவில் ஃபேஷியல் செய்வது, திருநீற்றுப் பச்சிலையை அரைத்துப்போடுவது அல்லது அதன் எண்ணெய்யை பரு மீது பூசுவது போன்ற சின்ன மெனக்கெடல்கள், பருக்கள் இருந்த அடையாளம் இல்லாமல் அழித்துவிடும்.
கழுத்து, அக்குள், தொடையிடுக்குப் பகுதிகள் மட்டும் கன்னங்கறுப்பாவதற்கு அங்கே சேரும் அழுக்கு, வியர்வை மட்டும் காரணங்கள் அல்ல. அந்தப் பகுதியில் அதிகரிக்கும் உடல் உட்சூடும்தான் காரணம். ‘நாள் இரண்டு, வாரம் இரண்டு, வருஷம் இரண்டு’ என நலவாழ்வு விதியே உண்டு. அது… தினம் இரண்டு முறை மலம் கழிப்பது; வாரம் இரண்டு முறை எண்ணெய்க் குளியல் எடுப்பது; வருடம் இரண்டு முறை பேதி மருந்து உட்கொள்வது என்பதுதான். இதில் பேதிக்கு மருந்து எடுக்கும் பழக்கம் மொத்தமாக மலை ஏறிவிட்டது. ‘பேதியுரை’ என்பது வெறும் வயிற்றுப்போக்கு உருவாக்கும் விஷயம் அல்ல. அன்று விளக்கெண்ணெய் முதல் பல பேதியுரை மருந்துகளை, உடலின் வாத, பித்த, கப, சமநிலைக்காக வருடத்துக்கு இரு முறை மருந்தாகப் பரிந்துரைத்தனர் நம் முன்னோர்கள். உடனே பேதி மருந்து வாங்க மெடிக்கல் ஷாப் கிளம்பி விடாதீர்கள். எப்போது, எதை, எப்படி, எதோடு சேர்த்து, எந்த வயதில், எந்த நேரத்தில் சாப்பிட வேண்டும் எனப் பெரிய பட்டியலே இருக்கிறது. குடும்ப மருத்துவரை ஆலோசித்து உடல்வாகு, நாடி நடைக்கு ஏற்றவாறு பேதியுரை எடுத்துக்கொள்வது… இந்த கலர் மாற்றத்தைக் காணாமல் செய்துவிடும்.   
முன் நெற்றி வழுக்கைக்குக் கலவரப்படுவதும், பின்மண்டை சொட்டைக்குச் சோர்ந்து போவதும் இன்றைய இளைஞனின் இன்னொரு ‘தலை’யாயப் பிரச்னை. சமீபமாக, கல்லூரியில் படிக்கும் காலத்தில் தலை வாருவது அவமானச் சின்னமாகவே மாறிவிட்டது. குளிக்காமல், தலை வாராமல் அழுக்குச் ‘சென்ராயனாக’ இருந்து ஆட்டம் போட்டுவிட்டு, ‘தறுதலையா இருந்தது போதும் இனி ‘தல’ ஆகணும்’ என வேலைக்குச் சேர்ந்து, டீம் லீடர் கண்டிப்பில் குளிக்க, மழிக்க, தலை வார ஆரம்பித்ததும், முடிகள் சீப்பில், தலை துவட்டும் துண்டில்… என உதிர்ந்து விலகி ஓட ஆரம்பிக்கும். தலைமுடி மீது இயல்பாகவே கரிசனம் எப்போதும் வேண்டும்.
பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் உடலில் பெருகும் பித்தம் நீங்கும் உபாயத்தை இயற்கை அவர்களுக்குக் கொடுத்திருக்கிறது. ஆணின் உடலில் சேரும் பித்தம், அவன் தினசரி தலைக்குக் குளிப்பதிலும், எண்ணெய்க் குளியலிலும், உணவிலும்தான் நீங்க வேண்டும்.தலைமுடி கொட்டுவது என்பது, உடலில் பித்தம் கூடிவிட்டதைச் சொல்லும் உடல் மொழி.  தாடி, மீசை, நெஞ்சில் முடி…  என கரடி மாதிரி உடல் எல்லாம் முடி வளரும் மரபு ஆண் ஹார்மோனில் பொதிந்திருந்தாலும், டெஸ்டோஸ்டீரோனுக்கும் தலைமுடிக்கும் உள்ள தொடர்பை அரைகுறையாக இணையத்தில் படித்துவிட்டு, ‘வழுக்கை வருதே… ஆண்மை குறையுதோ’ என அங்கலாய்க்கும் ஆண்கள் இப்போதும் அதிகம். முடி உதிர்வதில் எல்லாம் ‘அது’ குறையாது. அதிகபட்ச உடல் சூடுதான் பிரச்னை. வறுத்த சோற்றையும் சிக்கன் 65-யையும் நள்ளிரவில் சாப்பிடுவதைக் குறைப்பதில் இருந்து அதற்கான அக்கறை ஆரம்பிக்க வேண்டும். இளவழுக்கை, இளநரை வரும் இளைஞர்கள் இனி நெல்லிக்காய் ஜூஸுக்கு மாறுவது நல்லது.
‘ஒருநாள் சிரித்தேன்; மறுநாள் வெறுத்தேன் உனைக் கொல்லாமல் கொன்று புதைத்தேன்’ எனக் காதலி டென்ஷன் ஆவதற்கு வியர்வை நாற்றமும் காரணம் என்கிறார்கள் உளவியலாளர்கள். ஓடி ஓடி உழைக்கையில், கக்கத்தில் கசியும் வியர்வையில், உச்சா போகும் உடல் பாக்டீரியாக்களால்தான் அந்த ‘உவ்வே’  நாற்றம் உருவாகிறது. வியர்வையைக் குறைக்கணும்; கூடவே சேட்டை  பாக்டீரியாவை நகர்த்தணும்; அப்படியான மணமூட்டி தேவையே ஒழிய, ‘இதை அடிச்சிக்கிட்டீங்கனா அகில உலக அழகியும் உங்க காதலுக்கு கர்ச்சீப் போட்டு வைப்பாங்க’ டைப் விளம்பரங்களை நம்பி வீணாகக் கூடாது. பாக்டீரியாவை நகர்த்தி, சுற்றுச்சூழலைக் கெடுக்காமல் இயற்கையாகவே மணத்தைக் கொடுக்கும் கோரைக்கிழங்கு, சீமை கிச்சிலி கிழங்கு, பாசிப்பயறு மாவுக் கலவையை காலை – மாலை  தேய்த்துக் குளிப்பது வியர்வை தரும் துர்நாற்றத்தைப் போக்கும்.
சிக்ஸ்பேக், சிவப்பழகு, சுருட்டை முடி, வழ வழ தோல் இவற்றைத் தாண்டி,
‘பெண்களை நிமிர்ந்தும் பார்த்திடா 
உன் இனிய கண்ணியம் பிடிக்குதே; 
கண்களை நேராய்ப் பார்த்துதான்

நீ பேசும் தோரணை பிடிக்குதே ’ என இன்றும் பல பெண்களின் மதிப்பீடு இருக்கிறது என்பதை ஆண்கள் மறந்துவிடக் கூடாது!


தயங்காமல் இதழ் முத்தம் பதிக்க…
காதல் இணைக்கு இதழ் முத்தம்கூடப் பதிக்கவிடாமல், வாய் துர்நாற்றத்தால் தவிப்பவரா நீங்கள்? இது உங்கள் கவனத்துக்கு…
வாயில் இருந்து வாந்தி வந்தாலும், துர்நாற்றம் வந்தாலும் வியாதி வயிற்றில்தான் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். பொதுவாகவே பசிக்கும் நேரத்தில் கொஞ்சம் கூடுதலாக வாயில் துர்நாற்றம் வீசும். எனவே, முத்தங்களை சில மாத்திரைகள் போல சாப்பாட்டுக்குப் பிறகு எடுத்துக்கொள்வது காதலைப் பேணும். ‘பைங்கனி இதழில் பழரசம் தருவாள். பருகிட தலை குனிவாள்’ என நீங்கள் நினைத்திருக்க, உங்கள் வாய்க்கு புளிச்ச ஏப்பம் தந்த கொடும்நாற்றம், காதல் இணையைத் தலைதெறிக்க ஓடவைக்கும். ஆதலால், பல் துலக்கி, வாய் கொப்பளித்து, சீரகத் தண்ணீர் குடித்து, புதினா இலை மென்ற பிறகு முத்தத்தால் யுத்தம் செய்தால், காதல் அதிகரிக்கும்!
வீட்டிலேயே தயாரிக்கலாம் முடி வளர் தைலம்!
இந்தத் தைலத்தை ஆண், பெண், குழந்தைகளும்கூடப் பயன்படுத்தலாம்.
தேவை: வெள்ளைக் கரிசாலைச் சாறு 1 லிட்டர், தேங்காய் எண்ணெய் 1 லிட்டர். 
செய்முறை: வெள்ளைக் கரிசாலைச் செடியைக் கசக்கி சிறிது நீர்விட்டு சாறு எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய்யை சம அளவுக்குக் கலக்கி, எண்ணெய் அடியில் மெழுகுப் பதத்தில் கசடு வரும் வரை காய்ச்சி இறக்கவும். கிட்டத்தட்ட 1 லிட்டர் தைலம் கிடைக்கும். அதில் மீண்டும் சம அளவு வெள்ளைக் கரிசாலைச் சாறு சேர்த்துக் காய்ச்ச வேண்டும். மறுபடியும் நீர் வற்றி இன்னும் அடர்த்தியான தைலம் கிடைக்கும். இதேபோல் ஏழு முறை காய்ச்சி எடுத்த தைலத்தைப் பயன்படுத்தினால், முடி கொட்டுவதைத் தடுக்கலாம்; இளநரை வராது; உடல் சூடு தணியும்; பொடுகும் நீங்கும்; ஆரோக்கியமான அடர்த்தி கேசம் கிடைக்கும்!

ஆண் உறுப்பு ஆரோக்கியம்!
கடவுள் பாதி… மிருகம் பாதி என ஆளவந்தானாய், வெளிப் பக்கம் கடவுள்… உள்ளே மிருகமாக இருப்பது அசிங்கம் மட்டும் அல்ல… ஆரோக்கியக் கேடும்கூட. ஆண் உறுப்பின் முன்தோலை பின்னுக்குத் தள்ளி glans penis-ன் ஓரங்களைச் சுத்தம்செய்து அதில் சேரும் smugma-வைக் காலையில் குளிக்கும் ஒவ்வொரு முறையும் நீக்க வேண்டும். இந்தப் பயிற்சியைக் குழந்தைப் பருவத்தில் இருந்தே கற்பிப்பது கட்டாயம்!

நலம் 360’ – 16

உலகில் பிறக்கும் அனைத்து குழந்தைகளும் தங்களின் தாய்மொழிக்கு முன்னரே முந்திக்கொண்டு தொடர்புகொள்ளும் ஊடகம்… சிரிப்பு! ‘புன்னகைதான் மொழிக்கும் முன்னர் மனிதன் கண்டுபிடித்த முதல் தொடர்பு ஊடகம்’ என்கிறார், தலைசிறந்த ‘சிரிப்பு’ ஆய்வாளர் பேராசிரியர் ராபர்ட் புரொவின். பார்வையற்ற, கேட்கும்திறன் இல்லாத குழந்தைகூட பிறந்த சில நாட்களில் சிரிக்கும் என்பது சிரிப்பின் தனிச் சிறப்பு. ஆனால், கைக்குழந்தையாக இருக்கும்போது நாள் ஒன்றுக்கு 200-300 முறை சிரித்துக்கொண்டிருந்த நாம், வளர்ந்து பொறுப்பானவர்கள் ஆகியதும் 15-20 முறைதான் சிரிக்கிறோம்… ஏன்?
புன்னகையும் சிரிப்பும் மகிழ்ச்சியை மட்டும் அல்ல… ஆரோக்கியத்தையும் இலவச இணைப்பாகத் தருகிறனவாம். ஆம்… ”மகிழ்ச்சி’ 100 சதவிகிதம் பலன் அளிக்கும் ஒரு தடுப்பு மருந்து’ என திருக்குறள் முதல் வாட்ஸ்-அப் ஸ்மைலி வரை அனைத்தும் அழுத்தமாகச் சொல்கின்றன. பிரச்னை என்னவென்றால், ‘பிரிஸ்கிரிப்ஷனில் எழுதித் தர முடியாத அந்த மருந்தை எங்கே சென்று வாங்குவது?’ எனத் தெரியாததுதான்! வைரஸ், பாக்டீரியாவில் இருந்து சிட்டுக்குருவி, காட்டுயானை, கடல் மீன் எனப் பலவும் மகிழ்ச்சியாகத் திரியும்போது, மனிதன் மட்டும் மகிழ்ச்சிக்காக ஏன் மெனக்கெட வேண்டியிருக்கிறது? ஏனெனில், உயிர் வாழ பணம் தேவைப்படும் ஒரே உயிரினம் மனிதன் மட்டும்தானே! 
குளத்தாங்கரை, கோயில் வாசல், விளையாட்டு மைதானம், காமெடி சினிமா திரையிடப்படும் திரையரங்கு, பொருட்காட்சி, அப்பளக் கடைகள்,  அலுவலக கேபின், தேரடி முக்கு… என எங்கும் இப்போது சத்தமான சிரிப்பைக் கேட்கமுடிவது இல்லை. நாகரிகம் கருதியோ, நாசூக்குக் கருதியோ சிரிப்பு வெறும் சிக்னலாகக் சிக்கனமாகிவிட்டது. ‘வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும்’ என்ற வழக்குமொழி, ஒரு விஞ்ஞான உண்மையும்கூட! எபிநெஃப்ரின், நார்-எபிநெஃப்ரின், கார்டிசால் ஆகியவை மன அழுத்தம் உண்டாக்கும் ஹார்மோன்கள். ஆனால், மனம்விட்டுச் சிரிப்பது அந்த ஹார்மோன்களின் சுரப்பைக் குறைக்கிறதாம். அதனால், இயல்பாகவே மன அழுத்தம் குறைகிறதாம். கிச்சுகிச்சு மூட்டி சிரித்தாலும் (Simulated laughter) சரி, தானாகவே கிளர்ச்சி அடைந்து சிரித்தாலும் (Simultaneous Laughter) சரி, இரண்டுமே மருத்துவப் பலன்களை அளிக்கும் என்கின்றன ஆய்வுகள். ‘அதென்ன… பொம்பளைப் பிள்ளை கெக்கெபிக்கேனு சிரிக்கிறது?’ எனப் பண்பாட்டைக் காரணம் காட்டி பெண்களை அடக்கும் அடிப்படைவாதிகளின் கவனத்துக்கு ஒரு விஷயம்… இயல்பிலேயே சிரிக்காமல் இருந்து பிறகு சிரிக்கவே மறந்துபோவதுதான், நம்மூர் பெண்களுக்கு மன அழுத்தம், மாரடைப்பு, புற்று போன்ற  நோய்ச்சிக்கல்களைப் பெருக்குகிறது. 
மகிழ்ச்சி, வெற்றி, ஆறுதல், ஆசுவாசம்… எனப் பல உணர்வுகளை வெளிப்படுத்தும் சிரிப்பு, மூளையில் எண்டார்ஃபின்களைச் சுரக்கச்செய்து, நம் மனநிலையை உற்சாகமாக வைத்திருக்கும். ரத்தக்குழாயின் உட்சுவரான எண்டோதீலியத்தின் சுருக்கமும், அதில் கொழுப்புப் படிதலும்தான் ரத்தக் கொதிப்பு, மாரடைப்பு எனப் பல பிரச்னைகளுக்குக் காரணங்கள். மனம்விட்டுச் சிரிப்பது, அந்த எண்டோதீலியத்தை விரிவடையச் செய்யுமாம். ‘கிச்சுகிச்சு மூட்டியோ, ‘மிஸ்டர் பீன்’ படம் பார்த்தோ குபுகுபுக்கும் சிரிப்புகூட, மூளையின் ஹைப்போதலாமஸில் பீட்டா எண்டார்ஃபின்களைச் சுரக்க வைத்து, ரத்தக்குழாய் உட்சுவரை விரிவடையச் செய்யும்’ என்கிறார் மெரிலாந்து பல்கலைக்கழகப் பேராசிரியர் மைக்கேல் மில்லர். 5,000 ரூபாய் மாத்திரை செய்யாததை ஐந்து நிமிடச் சிரிப்பு செய்துவிடும். பெண்களுக்கு மாதவிடாய் முடிவை ஒட்டிப் பயமுறுத்தும் புற்றுக் கூட்டத்துக்கும் சரி, அடிக்கடி சளி, இருமல், தும்மல் வரும் நோய் எதிர்ப்பாற்றல் குறைவுக்கும் சரி… வாய்விட்டுச் சிரிக்காததும் ஒரு காரணம்தான். அதிகமான ரத்தக் கொதிப்பு தரும் மாரடைப்பைக் காட்டிலும், மகிழ்ச்சிக் குறைவால் வரும் மாரடைப்பே அதிகம் எனப் பல ஆய்வுகள் சொல்கின்றன. வயிறு குலுங்கவைக்கும் சிரிப்புதான், மாரடைப்பைத் தள்ளிப்போடும் விலையில்லா மருந்து! ‘வயிறு குலுங்க 10 நிமிடங்கள் சிரிப்பது என்பது, இரண்டு மணி நேரம் வலியை மறக்கவைக்கும் நிவாரணத்துக்கு சமம்’ என்கிறது ஓர் ஆய்வு. தீவிர வலியில் இருக்கும் நோயாளிகளுக்கு கஷாயம், மருந்து, மாத்திரை எனக் கசப்பானவற்றைக் கொடுக்காமல், சார்லி சாப்ளின் நடித்தப் படங்களைக் காட்டி செய்த பரிசோதனைகள் மூலம் இதை உணர்ந்திருக் கிறது மருத்துவ உலகம்.
நோயாளிகளின் மனதில் மலர்ச்சியை உண்டாக்குவதே மருத்துவத்தின் முதல் நோக்கம் என்பதில் உறுதியாக இருந்தவர் அமெரிக்க மருத்துவர் பாட்ச் ஆடம்ஸ். அதற்காக கோமாளி முகமூடி அணிந்துகொண்டு கோணங்கி சேட்டைகளைக்கூட செய்தவர் இவர். அவரது பெயரிலேயே உருவான ஹாலிவுட் சினிமாதான் நம்ம ஊர் ‘வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்’ படத்தின் மூலம். பாட்ச் ஆடம்ஸ் எழுதிய Good health is a laughing matter என்ற நாவலில் ஊசி, மருந்துகளைத் தாண்டி நலம்தரும் முக்கியமான விஷயங்கள் சிரிப்பும் மகிழ்ச்சியுமே என்பதை பல உதாரணங்களுடன் உணர்த்தியிருப்பார் பாட்ச். 
இரண்டும் உணர்வுகள்தானே என்றாலும், ‘கலீர்’ சிரிப்பும், ‘சுரீர்’ கோபமும் மனித உடலில் எக்கச்சக்க வேறுபாடுகளை உண்டாக்கும். கலகலவென வயிறு குலுங்கச் சிரிப்பது கிட்டத்தட்ட 15 விதமான தசைகளுக்குப் பயிற்சி கொடுத்து, கூடவே கொஞ்சமே கொஞ்சம் மூச்சை நிறுத்தும். அதனால்தான் சிலருக்கு சிரிப்போடு விக்கல் தோன்றுவதோடு, இன்னும் சிரிப்பு அதிகரிக்கும்போது கண்ணீர் பைகள் பிதுக்கப்பட்டு ஆனந்தக் கண்ணீரும் ஊற்று எடுக்கிறது. ஆனால், கோபம் இதற்கு நேர் எதிர். அடிக்கடி அதீத கோபம் வந்தால், பி.பி எகிறி வாயைக் கோணவைக்கும் பக்கவாதம், வாழ்வையே கோணலாக்கும் மாரடைப்பு போன்றவை வர வழிவகுக்கும். சர்க்கரை வியாதிக்கு நிவாரணமாக சாப்பிடுவதற்கு முன் ஒன்று, சாப்பிடுவதற்குப் பின் ஒன்று என வகை வகையாக மாத்திரைகள் தருவது சம்பிரதாயம். தினசரி சாப்பாட்டுக்குப் பின்        20 நிமிடங்கள் சிரிப்புப் படம் பார்த்து வயிறு வலிக்கச் சிரித்தவர்களின் HDL (நல்ல கொழுப்பு) கொஞ்சம் கூடுவதையும், அவர்களுக்கு நான்கு மாதங்களில் சர்க்கரையின் அளவு குறைவதையும் அமெரிக்க மருத்துவர்களும் ஜப்பானிய மருத்துவர்களும் கண்டறிந்து ஆவணப்படுத்தியுள்ளனர். இன்னொரு விஷயம்… சிரிப்பு, எல்லா நேரத்திலும் நோயைப் போக்குவது இல்லை. சில நேரங்களில், ஆஸ்துமாக்காரர்களுக்கு சத்தமாகச் சிரித்த அடுத்த இரண்டாவது நிமிடங்களில் மூச்சிரைப்பை உண்டாக்கிவிடும். உடற்பயிற்சியால் ஆஸ்துமா வரும் இயல்பு உடையவர்களுக்கு இந்தப் பிரச்னை இருக்கும்!
‘கிச்சுகிச்சு தாம்பாளம்… கீய்யாகீய்யா தாம்பாளம்’ சொல்லி நமக்குச் சிரிப்புகாட்ட நிறையப் பேருக்கு நேரம் இல்லை. ‘தினமும் நான்கு லிட்டர் தண்ணீர் குடித்தே ஆக வேண்டும்’ என்பதுபோல, ‘தினமும் 25 தடவை சிரித்தே ஆக வேண்டும்’ என்பதும் நலவாழ்வுக்குக் கட்டாயம். அதற்காகக் கோபத்தைக் கட்டுப்படுத்த ‘வசூல்ராஜா’ பிரகாஷ்ராஜ்போல வம்படியாகச் சிரிப்பதை, சிரிப்பு எனச் சொல்ல முடியாது. அப்படியான சிரிப்பு நோயைப் போக்கும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை! சிரிப்பு அகமகிழ்ந்து வரவேண்டும்; உற்சாகத்தின் ஊற்றுக்கண்ணாக இருக்க வேண்டும்.
கொஞ்சம் யோசித்துப்பாருங்கள்… மனிதர்களுக்கு இடையிலான ஈகோ மோதல்தான் சிரிப்பை மறைத்து வன்மத்தை வளர்க்கிறது. இலையோடு ஒட்டியிருக்கும் அழுக்கை தண்ணீர் தெளித்து அகற்றிவிட்டு சாதத்தைப் பரிமாறுவதுபோல, இதயத்தோடு ஒட்டிய ஈகோவையும் விரட்டித்தான் சிரிப்பைப் பூசிக்கொள்ள வேண்டும். எள்ளலுக்குக் குழைதலும், இடக்குக்குக் கனிதலும் இல்லாத தம்பதிக்கு இடையில் ஈகோ அரக்கன் விஸ்வரூபம் எடுத்து, மன அழுத்தத்தை அல்லது மணமுறிவை நோக்கி அவர்களைச் செலுத்துவது சமீபத்திய வேதனை! 
10-12 வருடங்களுக்கு முன் ஒரு சம்பவம். சிடுசிடு கண்டிப்புக்குப் பேர்போனவர் எங்கள் பேராசிரியர் தெய்வநாயகம் (தற்போது மறைந்துவிட்டார்). நான் ஒரு விபத்தில் சிக்கி அறுவைசிகிச்சைக் கட்டுகளுடன் கோரமாகப் படுத்திருந்தபோது என்னைப் பார்க்க வந்திருந்தார். ‘ஒழுங்கா வண்டி ஓட்ட மாட்டியா?’ என்று திட்டுவாரோ என நான் நடுங்கிக்கிடந்தால் பெரும் புன்னகையுடன், ‘அப்புறம்… ஜாங்கிரி வாங்கிட்டு வந்திருக்கேன். ஆனா, அவசரம் இல்லை… பொறுமையா சாப்பிடு. படுத்துக்கிட்டே ஒண்ணு, ரெண்டு போறதெல்லாம் வித்தியாசமா இருக்குல்ல… அனுபவி! எதைப் பத்தியும் கவலைப்படாத… சந்தோஷமா இருடா. வரட்டா!’ எனச் சொல்லிச் சென்றார். அந்த இயல்பான கரிசனமே எனக்கு 10 பாட்டில் குளுக்கோஸ் ஏற்றிய
உற்சாகத்தைக் கொடுத்தது. நீங்கள் வயிற்றுப்போக்கினாலோ அல்லது புற்று நோய்க்கோ சிகிச்சை எடுப்போரிடம், ‘அட… என்ன இப்படி இளைச்சுப்போயிட்டீங்க?’ என அவர்களின் துன்பத்தில் தூபம் போடாதீர்கள். அவர்களிடம் உங்களுக்குத் தெரிந்த ஜோக்குகளைப் பகிருங்கள். நோயில் இருந்து மீண்டுவந்தவர்களின் கதைகளைச் சொல்லுங்கள். அப்படியான தருணங்களில் நீங்கள் அவர்களிடம் வரவழைக்கும் இரண்டு மி.மீ புன்னகைகூட, அவரது வாழ்க்கையை இரண்டு நிமிடங்களுக்கு நீட்டிக்கும்!
சிரிக்கும் தருணங்கள் சில நேரங்களின்தான் உருவாகும்; பல நேரங்களில் உருவாக்கப்பட வேண்டும். சுய எள்ளல் என்பது எளிய நகைச்சுவை. அதிலும் காதலி / மனைவியைச் சிரிக்கவைக்க சுய எள்ளல் சூப்பர் தேர்வு. ஆனால், நாமோ அடுத்தவரை எள்ளி நகையாடுவதை, அதிலும் குறிப்பாக மாற்றுத்திறனாளிகளை எள்ளி நகையாடும் போக்கை எப்படியோ கற்றுக்கொண்டோம். அந்த விஷச் சிரிப்பு வியாதி, விபத்து போன்றவற்றைத் தருமே தவிர, நோயை நீக்காது. மாத்திரை போட்டும் நிற்காத ஜுரம், நெபுலைசர் வைத்தும் நீங்காத மூச்சிரைப்பு, ஊசி மருந்து செலுத்தியும் போகாத வலி… மனசுக்குப் பிடித்தவரின் மார்பில் சாய்ந்து, கைகளை அழுந்தப் பற்றி, புன்னகையோடு அவர் காட்டும் அரவணைப்பில் காணாமல்போகும். சிரிப்பு வெறும் உணர்வு அல்ல… அது தோழமையான உயிர்வித்தை!
பூங்கொடியின் புன்னகை, அலைகடலின் புன்னகை, மழை முகிலின் புன்னகை… என, கொடி, கடல், முகில் போன்றவையே புன்னகைக்கும்போது, மனிதனுக்கு மட்டும் சிரிப்பதில் என்ன கஷ்டம்? நமக்குள்ளும் பூ, அலை, மழையை உண்டாக்கட்டும் புன்னகைகள்!
- நலம் பரவும்…

சிரிக்க சில வழிகள்…
டல்மொழியில் புன்னகைதான் மனதின் ஹைக்கூ. சிறுவயது முதலே அன்பை, நன்றியை, வாஞ்சையை, வாழ்த்தை, தியாகத்தை, காதலை, அர்ப்பணிப்பை… இன்னும் வாழ்வின் எல்லா நல்ல நகர்விலும், அந்த ஹைக்கூவை காம்போவாக கண்களில் காட்டிப் பழ(க்)க வேண்டும். காதலிக்கு ரோஜாப் பூ கொடுப்பதாக இருந்தாலும் சரி, ஆட்டோவுக்கு மீட்டருக்கு மேல் கொடுப்பதாக இருந்தாலும் சரி… புன்னகை பொக்கே அவசியம்!
‘ஓ போடு’வில் தொடங்கி, கைக்குலுக்கல், அரவணைப்பு, சின்ன முத்தம், முதுகு தட்டல், கைதட்டல்… என இவையெல்லாம் சிரிப்பின் சினேகிதர்கள். சிரிப்பைப் பிரசவிக்க இவற்றில் ஏதாவது ஒன்றை முயற்சிக்கலாம்.

‘வாட்ஸ் அப்’பில் வலம்வரும் ஜோக்குகள், ஹீரோ பன்ச்களை உட்டாலக்கடி காமெடி ஆக்குவது, வசனம் இல்லாத சாப்ளின் சேட்டைகளைப் பார்ப்பது… எனத் தினமும் ஏதாவது ஒன்றைப் பார்த்து, ரசித்து, அனுபவித்துச் சிரித்தால்தான் தொற்றாநோய்களை முடிந்தவரை தள்ளிப்போடலாம்… தவிர்க்கவும் செய்யலாம்.

சிரிப்பு, நோய் எதிர்ப்பாற்றலை உயர்த்தும்; ரத்த ஓட்டத்தைச் சீராக்கும்; இதயத்தையும் நுரையீரலையும் நல்வழியில் தூண்டும்; பிராண வாயு ஓட்டத்தை அதிகரிக்க செய்யும்; தசைகளைத் தளர்வு ஆக்கும்; வலி நீக்கும்; ரத்தக் கொதிப்பைக் குறைக்கும். ஞாபக சக்தி, படைப்பாற்றல், துடிப்பாக இருத்தல்… போன்ற மூளையின் செயல்திறனைக் கூர் ஆக்கும்.

உங்கள் வீட்டுச் செல்லக் குழந்தைகளைச் சிரிக்கவைக்க முயற்சி செய்யுங்கள். ‘யானை யானை’ என முதுகில் அம்பாரி சவாரி செய்வது முதல், முகத்தில் சேட்டை ரியாக்ஷன்களைக் கொடுப்பது வரை செய்து அவர்களைச் சிரிக்க வையுங்கள். அவை குழந்தைகளை உங்களுடன் நெருக்கமாக்குவதுடன், அந்தச் சிரிப்பால் அவர்களின் மனங்களும் மலரும்.

குபீர் சிரிப்பை வரவைக்கும் படங்கள், வீடியோக்கள், குட்டிக் கதைகள்… போன்றவை இணையத்தில் ஏகமாகக் கொட்டிக்கிடக்கின்றன. அவற்றில் தரமான வலைதளங்களை புக்மார்க் செய்து வைத்துக்கொண்டு, தினமும் சில நிமிடங்கள் அவற்றை ரசியுங்கள். அதன்பிறகு பாருங்கள்… அலுவலகமோ, வீடோ எதுவாக இருந்தாலும் அது உங்களுக்குச் சொர்க்கமாகத் தெரியும்!

கோபத்தைத் திசைதிருப்புவது எப்படி?
ள்ளுவர் சொல்லிச் சென்றதுபோல, ‘நகையும் உவகையும் சிரச்சேதம் செய்யும்’. ஆனால், ஜிவ்வுனு வரும் சினத்தைத் தடுப்பது எப்படி?
‘கொஞ்சமே கொஞ்சம் சரியான கோபம் தவறு அல்ல. ஆனால், எங்கே, எப்படி, எந்த அளவில், யாரிடம், எப்போது, எங்ஙனம்… என அலகுகள் தெரியாமல் காட்டப்படும் கோபம், கோபப்படுபவனைத்தான் அழிக்கும்’ என்று சொன்னவர் அரிஸ்ட்டாட்டில்.
‘கோபப்படுகிறோம்’ எனத் தெரிந்த அந்தக் கணத்தில் சொல்லவந்த வார்த்தையை, முகக்கோணலை, செயலை அப்படியே தடாலடியாக நிறுத்தவும். சில நிமிட இடைவெளிக்குப் பிறகு, ‘அது அவசியமா?’ என யோசிக்கவும். பல சமயங்களில் ‘அது அநாவசியம்’ எனத் தெரியும்.

கோபம் உண்டாகும் தருணங்களின்போது மூச்சை நன்கு உள்ளிழுத்து விடவும்; கோபம் வளர்க்கும் அட்ரீனலின் ஹார்மோன் கட்டுப்படும்.

நெருக்கமானவர் நம்மீது தொடர்ந்து கோபம் பாராட்டிக்கொண்டே இருந்தால், ஃப்ளாஷ்பேக்கில் போய் எத்தனை கொஞ்சல், கரிசனம், காதல், தந்தவர் அவர் என்பதைச் சில விநாடிகள் ஓட்டிப்பார்த்து, சிந்தியுங்கள். டாபர்மேன் ஆகிப்போன நாம் ஜென்டில்மேன் ஆகிவிடுவோம்.

அடிக்கடி தேவையற்று வரும் கோபத்துக்குப் பின்னணியாக மன அழுத்தம் காரணமாக இருக்கலாம். மனநல மருத்துவர் உதவியும்கூட அவசியப்படலாம். கோபப்படாமல், அவர் உதவியை நாடவும்!

கோபத்தைத் தொலைக்க வேண்டுமே தவிர, மறைக்கக் கூடாது. மறைக்கப்படும் கோபம், கால ஓட்டத்தில் மறந்துபோகாமல், ஓரத்தில் உட்கார்ந்து விஸ்வரூபம் எடுத்து, நயவஞ்சகம், பொறாமை… எனப் பல வடிவங்களை எடுக்கும்!

நலம் 360’ – 17

பிறந்த கணத்தில் அழுகையுடன் ஆரம்பிக்கும் மனிதனின் பேச்சு, அடுத்த சில மாதங்களில் ‘அம்மா’ என்ற வார்த்தையில் தொடங்கி, இறுதிமூச்சின் முனகல் வரை எழுப்பும் குரல்வளை என்கிற ஒலி ஊடகம், மனிதனுக்கு மட்டும் கிடைத்திருக்கும் இயற்கை வரம். அன்பை வெளிப்படுத்த, அக்கறையைக் காட்ட, காதலைச் சொல்லி நெகிழ்த்த… என அனைத்துக்குமான மொழியைப் பிரசவிக்கும் குரல்வளை, மனித உடலின் ஒரு மகத்துவ அமைப்பு. நுரையீரலில் இருந்து மூச்சுக் காற்றை எழுப்பி, குரல்நாண்கள் ஒன்றோடு ஒன்று இணைவதால் ஏற்படும் அதிர்வுதான் குரல். நுரையீரலில் இருந்து வெளிப்படும் காற்று, கழுத்தில் நிலைகொண்டு பல், உதடு, நாக்கு, மூக்கு, அன்னம் போன்றவற்றில் மூளையின் திட்டமிட்ட உத்தரவின்படி சீரான அசைவைப் பெறும்போது, அது ‘சங்கீத ஜாதி முல்லை…’ என சாதகம் செய்துவந்த பாடலாக, ‘டார்லிங் டம்பக்கு…’ என உச்சஸ்தாயில் உற்சாகமாக வெளிப்படுகிறது.
‘குழலினிது யாழினிது என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர்’ என்கிறது வள்ளுவம். அந்த மழலை மொழியின் அத்தனை வசீகரத்துக்கும் காரணம், அது பெண் குரல் என்பதுதான். 12-13 வயது வரைக்கும் மட்டுமே ஆணுக்கும் பெண்ணுக்கும் குரல் கிட்டத்தட்ட ஒரேமாதிரி இருக்கும். 13 வயதைத் தாண்டும்போது, ஆண்களுக்கு ஆண் ஹார்மோன் ஆதிக்கம் தொடங்கி குட்டி மீசை துளிர்க்கும்போது, குரல் உடையத் தொடங்கி வலுப்பெறும். அப்போதுதான் ஆணின் குரல்நாண்கள் நீளம் அடைந்து, விரிவடைந்து, ‘ஆடம்ஸ் ஆப்பிள்’ தொண்டையில் தெரியும். பெண்களுக்கு, இந்தக் குரல்நாண்கள் வளரவும் விரியவும் முயற்சிப்பது இல்லை. அதனால்தான் 30 வருடங்கள் கழிந்தும் ‘காற்றில் எந்தன் கீதம்…’ என எஸ்.ஜானகி பாடினால், முந்தைய சிலாகிப்பு அச்சுஅசலாக அப்படியே தொற்றிக் கொள்கிறது. ஆண் 17-18 வயதை எட்டிய பிறகும் கொஞ்சம் பெண்மை கலந்த குரலில் பேசினால், அது ‘பியூபர் போனியா’ எனும் கோளாறு என்கிறது நவீன மருத்துவம். குரல்நாண்களை இழுக்கும் அறுவைசிகிச்சையுடன், தொடர்ந்து மூன்று மாதங்கள் ஸ்பீச் தெரபியும் எடுத்துக்கொண்டால் ஆண்குரல் வந்துவிடும்.
ஒவ்வொருவரின் உள்ளங்கை ரேகைகளில் தனித்துவம் இருப்பதுபோல், குரலிலும் பிரத்யேக அடையாளங்கள் இருக்கின்றன. ஆனால் மூளைக்குள், குரலை அடையாளம் காண்பதும், தோற்றத்தை அடையாளம் காண்பதும் வெவ்வேறு  துறை என சமீபத்தில்தான் கண்டுபிடித்திருக்கிறார்கள். இணையத்தில் பிரபலமான TED பேச்சுத் தொகுப்பில், அமெரிக்காவின் பிரபல நரம்பியல் துறை பேராசிரியர் ராமச்சந்திரன் இதுகுறித்து ஆச்சர்யம் தெரிவித்திருக்கிறார். விபத்து ஒன்றில் மூளையில் அடிபட்ட நண்பர் ஒருவரைப் பார்க்க வந்த அவரது அம்மாவை, நண்பருக்கு அடையாளம் தெரியவில்லை. மிகவும் வருந்திய அவரது அம்மா வீட்டுக்குச் சென்று, மகனை தொலைபேசியில் அழைத்து, ‘டேய்…’ எனச் சொல்லி முடிக்கும் முன்பே, ‘அம்மா… எங்கம்மா இருக்க..? ஏன்மா நீ இன்னும் என்னைப் பார்க்க வரலை’ எனக் கதறியிருக்கிறார் அந்த மகன். இதுபோன்ற உதாரணங்களுக்குப் பிறகுதான், குரலுக்கான மூளைச் செயலகம் குறித்த புரிதல் மருத்துவ உலகுக்குத் தெரிய வந்தது. கைரேகைகள்போல குரலின் பிரத்யேக வித்தியாசம்தான், சைபர் கிரைம் கிரிமினல்களை அடையாளம் காண உதவுகிறது!
இந்தக் குரல்வளை வெளிக்காற்றுடன் நெருக்கமான தொடர்பில் இருப்பதால், தொற்றும் நோய்க்கூட்டம் சுளுவாக குரலை நொங்கெடுத்துவிடும். ‘அட… ‘காதல் பரிசு’ கமல்போல டீசன்ட்டா இருக்காரே,’ எனப் பயணத்தில் அவருக்குப் பக்கத்தில் அமரும்போது, அவர் ‘வாழ்வே மாயம்’ கமல்போல வழியெல்லாம் இருமிக்கொண்டே வந்தால், ஊர் வருவதற்குள் நமக்கு நோய் வரும். தொண்டைத் தொற்றுகள் குரல்வளையைப் பாதித்து, அதன் உட்சதையை வீங்கவைத்துவிடும். உணவை விழுங்கும்போது, வலி உண்டாகும். சத்தமாகப் பேசும்போது வலி கூடும். வெந்நீரில் உப்புவிட்டு காலை, மாலை வாய் கொப்பளித்து அல்லது கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் சேர்த்த திரிபலா பொடி போட்ட வெந்நீரில் வாய் கொப்பளித்து இதற்குப் பரிகாரம் தேடலாம். கூடவே பாலில் மஞ்சள், மிளகுத்தூள், பனங்கற்கண்டு கலந்து சூடாகக் குடித்தால், குரல்வளை அழற்சி மறையும்.
சிறுவயதிலேயே தொண்டையில் குடியேறும் கிருமி ஸ்ட்ரெப்டோகாக்கஸ் (Streptococcus). நம் நோய் எதிர்ப்பு ஆற்றல் குறையும்போது, அந்தக் கிருமிக்கூட்டம் மெதுவாக டான்சில் வீக்கம் (Tonsillitis), அடினாய்டு வீக்கம் (Adenoiditis) என உண்டாக்கி, பின்னர் மூட்டுவலியை உண்டாக்கி, மெள்ள மெள்ள ரத்தத்தில் கலந்து, இதயத்தின் வால்வுகளில் குடியேறி அதன் செயல்திறனை அழிப்பது எனப் பல பிரச்னைகளுக்குக் காரணம் ஆகின்றன. ‘Licks the joint; bites the heart; kicks the brain’ என இந்த நோயின் நகர்வை நவீன மருத்துவர்கள் கவிதையாகவே கூறுவார்கள். மொத்தத்தில் இந்த நோய் குத்தாட்டம் தொடங்குவது குரல்வளையில்தான். நள்ளிரவில் ஐஸ்க்ரீம், தொண்டை, கன்னக் கதுப்புகளில் ஒட்டிக்கொள்ளும் சாக்லேட் போன்றவற்றை மென்று திரியும் குழந்தைகளுக்குத்தான் இந்தப் பிரச்னை பெரிதும் வருகின்றன. ஆரம்பத்திலேயே இந்தக் கிருமியின் அடாவடியைக் குறைக்க, கற்பூரவல்லிச் சாறும் தேனும் கலந்து சுரசம் செய்து கொடுக்கலாம். மிளகைப் பொடித்து, தேனில் குழைத்து, மிதமான வெந்நீரில் கலந்து கொடுக்கலாம். சித்த மருத்துவத்தில் இதற்குத் தீர்வாக கடற்சங்கை பஸ்பம் ஆக்கி மருந்தாகக் கொடுப்பார்கள். இந்த மருந்தை 3-4 சிட்டிகை நெய்யில் கலந்து கொடுக்க, ஆரம்பகட்ட டான்சில் வீக்கத்தை அடியோடு விரட்டலாம். குழந்தைக்குக் கூடுதல் தேவையான கால்சியம் சத்தையும் சேர்த்துத் தந்து, டான்சில் வீக்கத்தையும் வீழ்த்தும் இந்தச் சங்குபஸ்பம், சிறந்த குரல்வளைக் காப்பான்.
டான்சில் வீக்கம் வந்தால், ‘அதுக்கென்ன, வெட்டி எறிஞ்சிட்டாப் போச்சு’ என்ற மனோபாவம் இப்போது கொஞ்சம் மாறிவருவது ஆறுதலான விஷயம்.   ‘அண்ணாக்குத் தூறு’ எனச் சொல்லப்படும் டான்சில் வீக்கத்துக்கு, வெள்ளைப் பூண்டுச் சாற்றை தேன் கலந்து தொண்டையில் தெரியும் வீக்கத்தில் தடவும் முறை சித்த மருத்துவத்தில் உண்டு. வெள்ளைப் பூண்டை அரைத்து, ஒரு துணியில் தடவி, லேசாகச் சூடுகாட்டி, அந்தச் சூட்டுடன் துணியைப் பிழிந்து, பூண்டுச்சாறு எடுக்க வேண்டும். இதோடு, சுத்தமான தேனை பூண்டுச்சாறுடன் சமஅளவு கலந்து வைத்துக்கொள்ளவும். சுத்தமான பஞ்சில் இந்தப் பூண்டுத்தேனைத் தொட்டு டான்சில் வீக்கத்தில் மென்மையாகத் தடவிவிட, வீக்கம் மெள்ள மெள்ளக் கரையும். ஆனால் மிரண்டு நிற்கும் குழந்தையை மிரட்டிப் பிடித்து, கால்களுக்கு இடையில் இறுக்கி, அவர்களின் வாயைப் பிளந்து… என வன்முறையில் இறங்கக் கூடாது. குழந்தைகளுக்கு விஷயத்தைப் புரியவைத்து மெதுவாகத் தடவ வேண்டும். இல்லையெனில், அந்தச் சாற்றை மூன்று சொட்டுகள் விழுங்கச் செய்தால்கூட போதும்!
தொடர் அஜீரணம், இரைப்பையின் அமிலத்தை எதுக்களித்து மேலே அனுப்பும் நிலையிலோ அல்லது உணவுக்குழாயும் இரைப்பையும் சந்திக்கும் இடத்தின் வால்வு சீராக இல்லாமல்போய் அதனால் அமிலத் தாக்குதல் உண்டாவதாலோ, குரல் கெட்டுப்போகும் வாய்ப்புகள் இப்போது அதிகம். இந்த இரண்டுக்கும் எளிய மருந்து அதிமதுரம். நாட்டு மருந்துக்கடையில் கிடைக்கும் அதிமதுரம் ஒவ்வொரு வீட்டு அஞ்சறைப்பெட்டியிலும் இருக்கவேண்டிய மருத்துவ உணவு. இந்தியாவில் மட்டும் அல்ல… சீன மருத்துவத்திலும் ஜப்பானிய கம்போ மருத்துவத்திலும் அதிமதுரம் மிகப் பிரசத்தி. அதிமதுரம் வயிற்றுப்புண்ணை ஆற்றும் ஆற்றல்கொண்டது. வயிற்றில் அதிகப்படியான அமிலச் சுரப்பையும் குறைக்கக்கூடியது. மேலும், அந்த அமிலம் உண்டாக்கும் வறட்டு இருமலுக்கும், மிகச் சிறந்த கை மருந்தும்கூட. அரை டீஸ்பூன் அளவு அதிமதுரத்தைத் தேனில் குழைத்துச் சாப்பிடலாம். அல்லது அரை டம்ளர் பாலில் கலந்து காய்ச்சியும் குடிக்கலாம்.
கல்லூரிப் போட்டிகளில் மனசுக்குப் பிடித்தவளின் கவனத்தை ஈர்க்க, ‘ஆரோமலே…’  என ஏட்டிக்குப் போட்டியாக மூச்சைப் பிடித்துக் கத்திவிட்டு மறுநாள், ‘மாப்ள…. காத்துதான்டா வருது…’ என்போர், ஒரு விஷயத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும். குரலை முறையற்றுப் பயன்படுத்தினாலும், அளவுக்கு அதிகமாகச் சத்தம் போட்டாலும் குரல்நாண்களுக்கு ஆபத்துதான். இதுபோன்ற தொடர்ச்சியான கத்தல், கூச்சல் குரல்நாண்களில் சிறுசிறு கட்டிகளை உண்டாக்கிவிடும். உரத்தக் குரலில் விஷயத்தைச் சொல்லவேண்டிய ஆசிரியருக்கும், பாடகருக்கும், பேச்சாளருக்கும் அந்தக் கட்டிகள் வர அதிக வாய்ப்புகள் உண்டு. இவர்களைப் போன்ற அத்தனை பேருக்கும் முதல் மருந்து… மௌனம். மாதத்தில் இரண்டு நாட்கள் மௌன விரதம் இருந்தாலே, அந்தக் கட்டிகள் காணாமல்போய்விடும். அப்படிச் சரியாகாதபட்சத்தில் ஆடாதொடை இலையும் இரண்டு மிளகும் சேர்த்து கஷாயம் செய்து மூன்று நாட்கள், இரண்டு வேளை சாப்பிட்டால், குரல்நாண்களில் வீக்கம் குறையும். இதைத்தான் ‘ஆடாதொடையினால் பாடாத நாவும் பாடும்’ என, பதார்த்தகுண சிந்தாமணி பாடல் சொல்கிறது. அந்தக் காலத்தில் அக்கரகாரமும் அதிமதுரமும் சேர்த்து சித்த மருத்துவர்கள் செய்து தரும் கண்டவிழ்தம், திடீரெனக் குரல் கம்மிப்போன பாடகர்களுக்கு ‘கச்சேரி மருந்தாக’ இருந்திருக்கிறது.
‘இவர்தான் முகேஷ்..!’ என சில காலம் முன்பு வரை தியேட்டரில் தோன்றும்போதெல்லாம் இளைஞர்களிடையே ஆரவாரத்தை அள்ளினார் புகைப் புற்றுக்கு உயிரைவிட்ட முகேஷ். ஆனால், 95 சதவிகிதக் குரல்வளைப் புற்று, புகைப் பழக்கத்தால் மட்டுமே வரும் என்பதை, முகேஷ§க்கு விசிலடித்த அந்த இளைஞர்கள் உணர வேண்டும். உலக சுகாதார நிறுவன அறிக்கை ஒன்று, ‘2020-ம் ஆண்டு ஏற்படும் 10 மில்லியன் மரணங்களில் 1.5 மில்லியன் மரணங்களுக்கு, புகைப் பழக்கம் உண்டாக்கும் குரல்வளை புற்றுநோய் காரணமாக இருக்கும்’ என்கிறது. இந்த இடத்தில் எனக்கு ஒரு சந்தேகம்… 100 கோடிக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட இந்தியாவில், ‘புகைப் பழக்கம் தவிர்ப்போம்’ எனப் பிரசாரம் செய்ய பல கோடிகள் செலவழிக்கும் அரசாங்கம், நாடு முழுக்க சிகரெட் தயாரிக்கும் ஐந்து அல்லது ஆறு  கம்பெனிகளுக்கு திண்டுக்கல் பூட்டுபோட்டால், வேலை முடிந்ததே! அதை ஏன் செய்வது இல்லை !
10 ஆயிரம் மைலுக்கு அப்பால் இருந்து தொலைபேசியில், ‘அம்மா’ என அழைத்த மாத்திரத்திலேயே, ‘ஏம்ப்பா குரல் ஒரு மாதிரி இருக்கு? சரியாத் தூங்கலையா? பனி அதிகமா… சளி பிடிச்சுருக்கா? குரங்கு குல்லா போட்டுட்டு வெளியே போக வேண்டியதுதானே தங்கம்!’ என அன்பும் ஆதரவுமாக அம்மா அடுக்கடுக்காகக் கேள்விகளைக் கேட்கச் செய்யும் அளவுக்கு, இயற்கை நமக்கு அளித்த மிக அற்புதமான குரலை, சேதாரம் இல்லாமல் பாதுகாப்பது மிகவும் முக்கியம்!


சிங்கர் சிக்கல்!
த்தமது செல்லக் குழந்தைகளை சூப்பர் பாடகர் ஆக்கவேண்டும் எனப் பெற்றோர்கள் சமீபமாக முண்டியடிக்கிறார்கள். மிக அருமையான பாடல் கலையைக் கற்றுத் தேர்வதில் உள்ள ஆர்வம் வரவேற்கக் கூடியதுதான். குழந்தைகளுக்கு இருக்கும் ஒன்பது வகை அறிவுகளில் பாடல் அறிவும் ஒன்று. ஆனால், அந்த ஒன்பது அறிவுகளும் அனைவருக்கும் இருக்காது. சிலர் பாடுவார்கள், சிலர் பாடல் எழுதுவார்கள், சிலர் பாடலைக் கேட்டு ரசிப்பார்கள்! இதில் நம் குழந்தை எந்தப் பிரிவு என்பதைத்தான் பெற்றோர் – ஆசிரியர் உற்றுநோக்கிக் கண்டறியவேண்டும். பளு தூக்கும் வீரராக விருப்பம் உள்ள குழந்தையை மிரட்டி, உருட்டி, பாட்டு வாத்தியாரிடம் அனுப்பி, ‘பாடியே மூணு பெட்ரூம் ஃப்ளாட் வாங்கிடணும்’ எனக் கணக்குப் போடும் பெற்றோரை, பெட்ரூமே இல்லாத சிறைக்குத்தான் அனுப்ப வேண்டும்.
இயல்பிலேயே இனிய குரல்வளம் பெற்றிருப்போர், அதை எப்படிப் பராமரிப்பது?
எப்போதும் தொண்டையை ஈரமாக வைத்திருங்கள்; ஐஸ்க்ரீமைத் தவிர்ப்பது நலம்; பிராணாயாமப் பயிற்சி மிக அவசியம்; அதிகமாக இனிப்பு – காரம் எடுத்துக்கொள்ள வேண்டாம்; பனங்கற்கண்டு, மிளகு, பால் கூட்டணி… குளிர்காலத்திலும் குரலைப் பாதுகாக்கும்!

திக்… திக்… திக்கு!
‘திக்குவாயால் அவதிப்படும் இந்தியர்கள் 10 மில்லியன்’ என்கிறது ஒரு புள்ளிவிவரம். 80 சதவிகிதம் ஆண்களுக்கு மட்டும் வரும் இந்தத் திக்குவாய் பிரச்னைக்கு ஆழ்மன அச்சமும், உரையாடலின்போது அடுத்தடுத்த சொற்களுக்காக மூளை எடுத்துக்கொள்ளும் மைக்ரோ செகண்டு நரம்பியல் நேரத் தவறுதலும்தான் காரணங்கள் என்கிறது மருத்துவம். பல சமயங்களில் தடையில்லாமல் பாடவே முடிகிற இவர்களால், நேர்முகத் தேர்வில், தொலைபேசியில், கோபமான சமயங்களில் திக்கித் திக்கித்தான் பேச முடிகிறது. திக்குவாயைத் தூண்டும் மன அழுத்தம் மற்றும் அதிகபட்ச ஆழ்மனப் பரபரப்பைக் குறைக்க, தொடர் யோகப் பயிற்சியும், பேச்சுப் பயிற்சியும் மிக அவசியம். கோழி முட்டையில் இருந்து செய்யப்படும் அண்டத் தைலம், வசம்புத் துண்டைச் சுட்ட கரி போன்றவை, சித்த மருத்துவம் திக்குவாய் தீர்வுக்குப் பரிந்துரைக்கும் எளிய மருந்துகள்!

நலம் 360’ – 19

ர்ப்பிணிக்கு மாதுளங்காய் ரசாயனம், சுண்டுவார் ரசம்; பிரசவித்த தாய்க்கு மருந்துப் பொடி, குறிஞ்சிக் குழம்பு; கைப்பிள்ளைக்கு உரைமருந்து, சேய்நெய்; பால் சுரக்க சுறாப்புட்டு சதாவ்ரி லேகியம்; பால் கட்டினால் மல்லிகைப் பூக்கட்டு, பூப்பெய்திய பிள்ளைகளுக்கு உளுந்தங்களி, எள் துவையல்; பெண்களுக்கு மட்டுமே பிரத்யேகமாக, ரகசியமாக ஒளவையார் கொழுக்கட்டை, ஆண்களுக்கு நாட்டுக்கோழிக் குழம்பு, வயசான தாத்தாவுக்குக் கடுக்காய் பிஞ்சு சூரணம்… என வாழ்வின் அனைத்து படிநிலைகளுக்கும் சிறப்பு உணவைத் தந்து, வாழ்வை தெளிவான நலப் புரிதலில் நகர்த்திவந்த இனக் குழு நாம். நலவாழ்வுப் புரிதலிலோ, அகவாழ்வின் அறிதலிலோ அந்த ஒளவையார் கொழுக்கட்டை சங்கதி இன்றைக்கும் நம் தமிழ்ப் பெண்களால் பெர்முடாஸ் டிரையாங்கிள்போல, ரகசியம் பாதுகாக்கப்படுவது, நம் சமூகத்தின் விசேஷங்களில் ஒன்று!
பிறந்த கணத்தில், சீம்பாலுக்கு முன்னதாகச் சிலிர்ப்போடு சொட்டு மருந்தைச் சுவைக்கவைக்க அக்கறை காட்டிய நாம், இத்தனை ஆயிரம் ஆண்டுகள் மரபோடு ஒட்டிவந்த நலவாழ்வுப் பழக்கத்தை ஏன் உதாசீனப்படுத்தினோம்? ‘இது சூடு, அது குளிர்ச்சி, இது வாய்வு, அது கபம், இது பித்தம் கூட்டும்’ என நம் பாட்டி தந்த ‘104’ ஆலோசனைகளைப் பின்பற்றினாலே, அடிக்கடி 108-ஐ தேடாமல் இருக்கலாமே! கைப்பக்குவ உணவின் நலனை ‘பை’பக்குவ துரித உணவுகள் தூரமாக நகர்த்திவிட்டன. நலம் மட்டுமே கொடுக்கும் உணவையும் மருந்தையும் தயாரிக்க, தேவையான அஞ்சறைப் பெட்டியை நாம் மறந்தேவிட்டோம். ‘ஐபோன் ஆப்ஸில்’ இவை பற்றிய விவரணைகள் இல்லாததால், இளைய தலைமுறை, ‘மிளகு தெரியும் சார்… சூப்பில் போடும் சங்கதி. அது என்ன வால்மிளகு?’ என மெயிலில் தகவல் கேட்கிறது. 
‘அட… ஆயுளில் கால் நூற்றாண்டை இப்படியே கழிச்சுட்டோம். இனி என்ன லைஃப்ஸ்டைலை மாத்தி…’ என அலுத்துக்கொள்ள வேண்டாம். சாம்பார் பொடி, ரசப் பொடி, இட்லி மிளகாய்ப் பொடி போல… சில அத்தியாவசியப் பொடிகள் வீட்டில் இருந்தால், நாம் ஆஸ்பத்திரி படிகளை அதிகம் மிதிக்க வேண்டியிருக்காது. அப்படியான பொடிகளை சாதத்தில் பிசைந்தும், தேநீரில் கலந்தும், கஷாயமாகவும் தேவைப்படும் சமயம் சாப்பிடும் மரபு, நம்மிடையே நெடுங்காலம் இருந்து வந்திருக்கிறது. அதை மீண்டும் மீட்டு எடுப்போம். ‘உணவே மருந்தாக… மருந்தே உணவாக’ நலவாழ்வு வாழ்வோம். 
ஜீரணத்துக்கு அஷ்ட சூரணம்!

சாப்பிட்ட பின் புளித்த ஏப்பம், வயிறு இன்னும் கொஞ்ச நேரத்தில் வெடித்துவிடுமோ என்கிற அளவுக்கு வீங்கிப்போவது, பவர் பாயின்ட்டில் முக்கியமான விளக்கம் அளிக்கும்போது, லேசான அமிலத்துடன் முந்தைய நாள் சாப்பிட்ட ரசவடையின் வாசம் தொண்டை வரை எட்டிப்பார்த்துச் செல்வது எனப் பலருக்கும் அனுபவங்கள் இருக்கும். அவர்களுக்குத்தான் இந்த அஷ்ட சூரணம். சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலம், சீரகம், கருஞ்சீரகம், இந்துப்பு… இவற்றை வறுத்துப் பொடித்துக்கொண்டு, சுடுசோற்றில் பிசைந்து சாப்பிட வாயுக் கோளாறு மட்டுப்படும். இனிய பக்கவிளைவாக, கணினித் தலைமுறையினருக்கு  முக்கியமான தொல்லையாக இருக்கும் கழுத்து வலியும் காணாமல்போகும்.
சுட்டிக் குழந்தைகளுக்கு சுண்டவற்றல் பொடி!

குழந்தைகளுக்கு வயிற்றுப் புழுக்களுடன் ‘நொதுக் நொதுக்’கெனக் கழியும் வயிற்றுப்போக்கு சமயங்களில் இருக்கும். அப்போது பூச்சிகளையும் நீக்கி, கழிச்சலையும் தடுக்கும் மருந்து சுண்ட வற்றல் பொடி. இதனுடன் கறிவேப்பிலை, மாங்கொட்டைப் பருப்பு (கொட்டையை உடைத்தால் நடுவில் இருக்கும் பருப்பு), மாதுளையின் ஓடு, ஓமம், வெந்தயம், நெல்லிக்காய் வற்றல்… இவற்றை தனித்தனியே எடுத்து, வறுத்து, பொடித்து, கலந்து வைத்துக்கொள்ள வேண்டும். இதைக் கைப்பிடி சாதத்தில் பிசைந்துகொடுக்கலாம். மாங்கொட்டையையும் மாதுளம் பழத் தோலையும் தூர எறியாமல், நன்கு கழுவி உலர்த்திவைத்துக்கொண்டால், இவை அனைத்தையும் வீட்டிலேயே செய்துகொள்ளலாம்.
பெரியவர்களுக்கு எனும்போது பக்குவத்தில் சின்ன மாற்றம். சுண்டக்காயை லேசாக சிற்றாமணக்கு எண்ணெயில் வறுத்து, உப்பு, மிளகு, சீரகம், கறிவேப்பிலை, வெந்தயம் சேர்த்து மொத்தமாக வறுத்து பொடி செய்துகொள்ளலாம். இதை தினமும் கொஞ்சம் சோற்றில் போட்டுச் சாப்பிட்டால், செரிக்காமல் சிரமப்படுவதும், மூல நோயினால் முனகுவதும் குறையும்.
சளித் தொல்லைக்கு மிளகு கற்பப் பொடி!

‘பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் சாப்பிடலாம்’ என்பது பன்ச் டயலாக். நம்மைச் சுற்றிலும் சூழல் நஞ்சாகி வரும் சூழலில், தினசரி உணவில் மிளகு சேர்ப்பது அவசியம். 200 கிராம் மிளகை 3 நாட்கள் மோரிலும், அடுத்த 3 நாட்கள் இஞ்சிச் சாறிலும், இப்படியாக மும்மூன்று தினங்கள் வேலிப்பருத்தி, தூதுவளை, கற்பூரவல்லி, ஆடு தொடா இலைச் சாறு ஆகியவற்றில் ஊறவைத்து பின் உலர்த்தி எடுத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் சுக்கு, அதிமதுரம், திப்பிலி, கடுக்காய் எல்லாம் வகைக்கு 25 கிராம் சேர்த்து, ஒன்றாக வறுத்து, இடித்த பொடியை சளி, இருமல், மூச்சிரைப்பு உள்ள குழந்தைகளுக்கு காலை உணவு கொடுக்கும் முன்னர் தேனில் 3 சிட்டிகை குழைத்துக் கொடுக்க வேண்டும். நாளடைவில் சளி வெளியேறி மூச்சிரைப்பு நிற்கும். மீண்டும் சளி, இருமல், இரைப்பு வராதபடி நோய் எதிர்ப்பாற்றலைச் சீராக்கும் இந்த மிளகு கற்பப் பொடி, அனைவர் வீட்டிலும் அவசியம் இருக்க வேண்டிய கைப்பக்குவ மருந்து.
சர்க்கரையை விரட்டும் வெந்தயக் கூட்டுப் பொடி!

அப்பா தந்த சொத்தாக அல்லது அலட்டாமல் வேலைசெய்த ‘கெத்’தாக சர்க்கரை வந்துவிடுமோ என்ற பயத்தில் திரியும் நண்பர்கள் சாப்பிட வேண்டிய பொடி இது. வெந்தயம், ஆவாரம் பூ, திரிபலா (கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய்), நாவல் கொட்டை, கறிவேப்பிலை எல்லாம் சம அளவில் எடுத்துப் பொடித்தால், வெந்தயக் கூட்டுப் பொடி தயார். இந்தப் பொடியை 1/2 டீஸ்பூன் சாப்பிட்டுவிட்டு மதிய உணவை எடுத்துக்கொண்டால், அது உங்களுக்கு வரவிருக்கும் சர்க்கரை நோயைத் தள்ளிப்போடும். ஏற்கெனவே சர்க்கரை நோய் வந்திருந்தால், சிகிச்சைக்கு உறுதுணையாக இருந்து, நீரிழிவின் தீவிரத்தைக் குறைக்கும். கறிவேப்பிலையும் வெந்தயமும் சேர்ந்து இருப்பதால் கெட்ட கொலஸ்ட்ராலும், திரிபலாவின் துணையால் மலச்சிக்கலும் குறையும்.
தெம்பளிக்கும் கம்பு, சோளம், உளுந்து கூட்டணி!
இனி வரும் காலத்தில்  ‘பி.சி.ஓ.டி’ (கர்ப்பப்பை நீர்க்கட்டி சிக்கல்) இல்லாத பொண்ணுக்கு ‘சர்க்கரை வியாதி இல்லாத’ வரன் தேவை என்பதுபோன்ற விளம்பரம் கல்யாணச் சந்தைகளில் இடம்பெறலாம். அந்த அளவுக்கு இந்த இரண்டு சிக்கல்களும் வயசுப் பிள்ளைகளை அடித்து ஆடுகிறது. பி.சி.ஓ.டி எனும் சினைப்பை நீர்க்கட்டி நம் வீட்டுப் பெண் குழந்தைகளிடம் குடியேறாது இருக்க, கருப்பட்டி உளுந்து களி மிகவும் சிறந்தது. ஆனால், ‘களியா… என்ன என்னன்னு நினைச்சே?’ எனப் பல வீட்டுப் பெண்களும் ‘ஆங்ரி பேர்டு’ அவதாரம் எடுக்கிறார்கள். அப்படி ஆங்காரமாக மறுக்கும் பெண்களுக்கும் ‘ஸ்பெஷல் ரோஸ்ட் தோசை’ வடிவில் ‘நல்லது’ புகட்டலாம்.
இதற்கு மாவை வழக்கம்போல் தானியங்களை ஊறவைத்தும் தயாரிக்கலாம் அல்லது கீழ்க்காணும் திடீர் பொடியில் சாதாரண தோசை மாவைக் கலக்கியும் தோசை வார்க்கலாம். உளுந்து, கம்பு, சோளம் இந்த மூன்றில் கம்பு, சோளம் இவற்றின் மேலுறை நீக்கியும், உளுந்தை அதன் கறுத்தத் தொலியுடனேயே வைத்து மூன்றையும் வறுத்து, பொடி செய்துகொள்ளவும். கூடவே வெந்தயம், ஃப்ளேக்ஸ் விதை, பாசிப்பயறு மூன்றும்
2 டீஸ்பூன்கள் எடுத்து வறுத்துச் சேர்க்கவும். கம்பும் சோளமும் 70 சதவிகிதம் இருக்க, உளுந்து 25 சதவிகிதம், மற்றவை கூட்டாக 5 சதவிகிதம் இருந்தால் போதும். இந்த மாவை, கோதுமை தோசைக்குக் கரைப்பதுபோல் நீர் விட்டுப் பதமாகக் கரைத்து, புளிப்புக்கு எனக் கொஞ்சம் மோர் சேர்த்து 12 மணி நேரம் வைத்திருந்து,  சூடாகத் தோசை சுட்டுக் கொடுக்கவும். தொட்டுக்கொள்ள எள் துவையல், நிலக்கடலை சட்னி என, மாதவிடாய்க்கு முந்தைய வாரத்தில் அவசியம் இரு முறை இதைக் கொடுக்கவும். கூடவே  வெள்ளைச் சர்க்கரையையும் இனிப்பு பண்டங்களையும் ஒதுக்கிவிடப் பழக்கி, ஓடியாடி விளையாடி, வியர்க்கவும் செய்துவிட்டால் குறித்த நேரத்தில் மாதவிடாய் வந்து மாதர் நலம் காக்கும். கம்பில் இரும்பு, சோளத்தில் புரதம், உளுந்தில் ஃபைட்டோ ஈஸ்ட்ரோஜன், வெந்தயத்தில் மாதவிடாய் வலி நீக்கி, ஃப்ளேக்ஸ் விதையில் ஒமேகா-3 எண்ணெய்… என எல்லாம் தரும் இந்த தோசை, சப்புக்கொட்ட வைக்கும் சுவையான மருந்து.
இருமலை விரட்ட சிற்றரத்தைப் பொடி!

குழந்தைகள் இருக்கும் வீட்டில் கண்டிப்பாக இருக்க வேண்டிய பொடி. நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் இந்தப் பொடியை இரண்டு சிட்டிகை தேனில் குழைத்து குழந்தைக்குக் கொடுக்க, இருமல் தீரும். வறட்டு இருமலாக இருந்தால், சிற்றரத்தையுடன் அதிமதுரம் சமபங்கு எடுத்துக் குழைத்துக் கொடுக்கலாம்.
ஜுரம் தணிக்கும் சுக்குக் கஷாயப் பொடி!

‘சுக்குக்கு மிஞ்சிய மருந்து இல்லை; சுப்பிரமணிக்கு மிஞ்சிய சாமி இல்லை’ என்பது மருத்துவப் பழமொழி. ஆக, அஞ்சறைப் பெட்டியில் முதல் அட்மிஷன் சுக்குவுக்கே. சுக்கு, கடுக்காய், சீந்தில், நிலவேம்பு, பேய்ப்புடல் எல்லாம் நாட்டு மருந்துக் கடையில் வாங்கி நன்கு சுத்தம் செய்து, உலர்த்தி, வறுத்து, ஒன்றிரண்டாக இடித்து, பொடிசெய்து கண்ணாடிப் புட்டியில் காற்று புகாமல் வைத்துக்கொள்ளுங்கள். ஜுரம் வந்தால் இந்தப் பொடியில் ஒரு டீஸ்பூன் போட்டு 200 மி.லி தண்ணீர்விட்டு, அந்தத் தண்ணீர் 50 மி.லி ஆகும்வரை வற்றவைத்துக் கொள்ளுங்கள். காலை – மாலை தேநீர் அருந்துவதற்குப் பதிலாக, இந்தக் கஷாயத்தை மூன்று நாட்கள் இரண்டு வேளை சாப்பிட, காய்ச்சல் பறந்துபோகும்.
அன்பு பெருக்கும் தாதுகல்ப பொடி!
காதலும் காமமுமே கடைக்குப் போய் வகைக்கு கால் படி வாங்கவேண்டிய காலகட்டத்தில், அதற்கும் கைப்பக்குவம் சொல்லாவிட்டால் எப்படி? உலர்த்திய முருங்கைப் பூ, நிலப் பூசணி, அமுக்கரா கிழங்கு, பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு, பாதாம் பிசின், முருங்கைப் பிசின்… இவற்றை சம அளவும், ஆளி விதை, சப்ஜா விதை, பூனைக் காலி விதை, இவற்றை அதற்குப் பாதியும் எடுத்துப் பொடித்து வைத்துக்கொண்டு, இரவு இளஞ்சூடான பாலில் 1/2 டீஸ்பூன் அளவு கலந்து சாப்பிடுவது உடலுறவில் நாட்டத்தையும், விந்தணுக்களின் எண்ணிக்கையையும் பெருக்கும்.
மலச்சிக்கல் தீர்க்கும் கடுக்காய்ப் பொடி!

வரும்போது போய்க்கொள்வது அல்ல மலம் கழித்தல். தினம் அது கழிக்கப்பட வேண்டும். இல்லையேல் வாயுத் தொல்லையில் இருந்து கேன்சர் வரை வர வழிவகுக்கும். கடுக்காய்ப் பிஞ்சை விளக்கெண்ணெயில் லேசாக வறுத்துப் பொடித்து காற்றுப் புகாத இறுக்கமான புட்டியில் வைத்துக்கொண்டு, உணவு உண்ட பின் 30-40 நிமிடங்கள் கழித்து 1/2 தேக்கரண்டி பொடியை வெந்நீரில் கலக்கி இரவில் சாப்பிடுங்கள். சிக்கலின் தீவிரம் பொறுத்து 2 கரண்டி வரைகூட அதிகரிக்கலாம்.
தயார் நிலையில் உள்ள இந்தப் பொடிகளோடு, சுக்கு, மிளகு, திப்பிலி, கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய், அதிமதுரம், வசம்பு, லவங்கப் பட்டை, வால்மிளகு, அன்னாசிப் பூ, மாசிக்காய், கருஞ்சீரகம், சாதிக்காய், ஓமம்… ஆகிய உலர் மருத்துவ உணவுகள் கண்டிப்பாக வீட்டில் கண்ணாடிப் புட்டியிலோ, காற்றுப் புகாத பிற கலன்களிலோ கொஞ்சமாக இருக்க வேண்டும். கூடவே வீட்டுத் தோட்டத்திலோ, பால்கனி தொட்டியிலோ…  கரிசலாங்கண்ணி, துளசி, தூதுவளை, ஆடு தொடா இலை, கீழாநெல்லி, கற்பூரவல்லி… போன்றவற்றை வளர்ப்பதும், உலர் வற்றலாய், மணத்தக்காளி வற்றல், சுண்டைக்காய் வற்றல், பிரண்டை வற்றல் வைத்திருப்பதும் அவசியம்.வருடத்தில் எல்லா மாசமும் மாம்பழ ஜூஸ் தரும் கெமிக்கல் வித்தை இதில் கூடாது. ஆதலால், செடி துளிர்க்கும், பூக்கும், காய்க்கும் பருவத்தில் சேகரிக்கப்பட்டு, உலர்த்தியும் பொடித்தும் பத்திரமாக வைத்திருந்து, நோயின்போது சரியாகப் பரிமாறப்பட வேண்டும். அதுவே ஆயுளுக்கும் நலம் பயக்கும்!

நலம் 360’ – 20

விவாகரத்து பெறுவதில் இந்தியாவில் தமிழகம் முதல் இடமாம்; தவிரவும் மன அழுத்தங்களால் நிகழும் தற்கொலைகளிலும் தமிழகத்துக்குத்தான் இந்தியாவில் முதல் இடமாம். ‘ஆறறிவதுவே அதனோடு மனமே’ என, சிக்மண்டு ஃபிராய்டுக்கும் பல நூற்றாண்டுகள் முன்பே சொல்லிய ‘தொல்காப்பியம்’ படைத்த நிலத்தில், மனதுக்குக் கொடுக்கப்படும் அழுத்தம் மிக மிக அதிகமாகி வருவது அதிரவைக்கிறது!
சமூக எதிர்பார்ப்புகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறும் மனதின் வெளிப்பாடுதான் மன அழுத்தம். அது நோயாக வடிவம் எடுக்காமல் தடுக்க தேவையான முக்கியக் காரணங்கள் இரண்டு. பிற அனைத்து மருத்துவக் காரணங்களையும் தாண்டி, அந்த இரண்டு காரணங்களையும் நாம் வேகமாகத் தொலைத்து வருகிறோம். அதில் ஒன்று… கரிசனம் தரும் பேச்சு; மற்றொன்று… கனிவு காட்டும் முகமொழி.
‘பேச்சு… உயிர் மூச்சு’ எனப் பலருக்குத் தெரிவது இல்லை. ஒரு கட்டத்துக்குப் பிறகு, ‘பேசிப் பயன் இல்லை’ எனப் பின்னாளில் முடிவு எடுத்து வாழ்க்கை இறுகிப்போகாமல் இருக்க, மொழிப் புணர்தல் முக்கியம். துரித வாழ்வின் வெளிப்பக்கத்து இரைச்சல், நம் சுவற்றுக்குள் அமானுஷ்ய மௌனத்தை விதைத்துவிட்டது. ‘சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு’  எனப் பாடுவதற்குள் அம்மாவுக்கு மகப்பேறு விடுமுறை முடிந்துவிடுகிறது. ‘மூணு கண்ணன் வந்த கதை, பூச்சாண்டி போன கதை’ சொல்லிய பாட்டிகள் கடைசித் தங்கையின் பிரசவத்துக்கு கனடா சென்றுவிட்டார். ‘டேய்… மண்ணுல விளையாடாதே ஜெர்ம்ஸ்; கிரவுண்டுல விளையாடாதே அலர்ஜி’ எனச் சொல்லி வளர்க்கப்படும் பிள்ளைகள், வீட்டில்  விர்ச்சுவல் கத்தி, கைத்துப்பாக்கியைக் கொண்டு எவனையோ விரட்டிக்கொண்டே வீடியோ விளையாட்டுகளில் அகோரமாக மூழ்கிவிடுகி றார்கள். சைக்கிள் பாரில் அமர்ந்து டபுள்ஸ் போகும்போது, ‘மச்சான் அவ சிரிப்புல காதல் இருந்துச்சுடா… கண்ணு காட்டிக்குடுத்துருச்சு!’ எனச் சிலாகித்த பொழுதுகள் தொலைந்து, நள்ளிரவு ‘ஸ்மைலி சம்பாஷணை’யால் இளமையிலேயே கண்களைச் சுற்றி கருவளையங்கள் உண்டாகிவிட்டன. ஒரு சிங்கிள் பெட்ரூம் ஃப்ளாட்டுக்காக சம்பளத்தில் பாதியை ஈ.எம்.ஐ அரக்கனுக்கு அள்ளிக்கொடுத்துவிட்டு, காலி சட்டைப் பை காரணமாக பேச்சுமூச்சற்று இருப்பது என, சமூகத்தின் சகல அடுக்குகளிலும் உரையாடல் குறைவு நோய் நீக்கமற நிறைந்திருக்கிறது!
பேச்சுக்கு அடுத்து நவீனம் வேகமாகத் தொலைக்கும் இன்னொரு விஷயம் முகமொழி. வணிகத்துக்கும் வசதிக்கும் கற்றுவிக்கப்பட்ட முகமொழிகளைப் படித்துக் கற்றுத் தேர்ந்ததில், கட்டாயத்துக்காக மட்டுமே அதை அதிகம் காட்டிக் களைத்துப்போகிறோம். கரிசனத்தில், காதலில், காமத்தில் காட்டவேண்டிய முகமொழிகள் மொத்தமாகக் காணாமல் போகின்றன. ‘அதுதான் சரின்னு சொன்னேனே… அப்புறம் என்ன?’ என்ற உணர்வுகள் அற்ற சம்மதங்களில்தான் பல உறவுகள் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. ‘முகம் கொடுத்துக்கூடப் பேச முடியாத அளவுக்கு எந்த விதத்தில் நான் குறைந்துபோய்விட்டேன்’ என முளைக்கும் இந்த ஈகோ, புகை, மதுவால் சீராட்டி வளர்க்கப்பட, புருவச் சுருக்கம், முக இறுக்கம் என முகம் புதுவடிவம் பெறுகிறது. அந்தப் புதுவடிவம் கனிவான முகமொழிக்கு இடம் அளிக்காமல், வெறுப்பை மட்டுமே உமிழ்ந்துகொண்டிருக்கிறது.
தொடர்ந்து இப்படித் தரப்படும் மன அழுத்தங்கள், மூளையின் எண்ணங்களை, படிமானங்களை, கற்பனைகளை மிகச் சிறப்பாக ஆண்டுவரும் செரட்டோனின் முதலான ரசாயனச் சுரப்புகளைத் தடுமாறச் செய்யும். அவற்றின் சீரான பரிமாறலில், மிகத் துல்லியமான ஆட்சியில் தேக்கத்தை, பரபரப்பை உருவாக்கி உருவாக்கி, மெள்ள மெள்ள உள நோயாக உருகொள்ளவைக்கும். அது சிலருக்குப் பயம், சிலருக்குப் புதிது புதிதான கற்பனைகள், சிலருக்குச் சந்தேகம், சிலருக்கு வெறுப்பு என வெவ்வேறு வடிவில் உருவெடுக்கும். 
உள நோயின் ஆரம்ப சமிக்ஞைகளை நெருக்கமான உறவுகளால் மட்டுமே அறிய முடியும். மாஸ்டர் செக்கப்கள் பெரும்பாலும் காட்டிக்கொடுக்காது. மயக்கம், வலி, ஜுரம் போன்ற எந்த உபாதைகளும் இல்லாமல் சரியான தூக்கமின்மை, புன்னகைக்க மறுக்கும் முகம் என மன அழுத்தத்தின் தொடக்கப் புள்ளிகள் மிகச் சாதாரணமாக இருக்கும். அடிக்கடி கைகளைக் கழுவுவது, மீண்டும் மீண்டும் தன் பொருட்களைச் சுத்தமாகத் துடைத்துக்கொண்டே இருப்பதுகூட மன அழுத்தத்தின் தொடக்க நிலைதான். எவ்வளவு விரைவாக இந்த மன அழுத்தத்தை அடையாளம் காண்கிறோமோ, அவ்வளவு விரைவில் ஆரோக்கியத்தை மீட்டு எடுக்க முடியும். இரண்டு மாத்திரைகளில் நோய்க்கிருமி இடத்தைக் காலிசெய்வதுபோல, இரண்டு வேளை மருந்தில் உற்சாகத்தை ஒருபோதும் வாங்கிவிட முடியாது. மன நோய்களில் இருந்து மீட்டு எடுக்கும் மருத்துவம் சில/பல மாதங்களில் இருந்து சில வருடங்களுக்குத் தேவைப்படும்.
மன நோய்கள் ஆரம்ப நிலையில் பெரும்பாலும் குணப்படுத்தக்கூடியவையே. நாள்பட்ட நிலையிலும் கட்டுப்படுத்த முடியும்தான். ஆனால், இங்கே முழுமையான தேவை ஒருங்கிணைந்த சிகிச்சை மட்டுமே. கற்பனையைக் கட்டிப்போட, மனதின் அகோரத்தைக் குறைக்க நவீன மருந்துகள் மிக அவசியம். மருந்துகளால் மீட்டு எடுத்து வரும்போது, முழுமையான வாழ்வியல் பயிற்சி, யோகாசனங்கள், பல்வேறு எண்ணெய்க் குளியல், தொக்கணம், தாரா சிகிச்சைகளின் மூலம் மீண்டும் நன்னிலைக்குத் திரும்பவைக்க பாரம்பரிய மருத்துவம் பெரிதும் கைகொடுக்கும். மருந்தையும் பாரம்பரியத்தையும் தாண்டி அதிமுக்கியமான நீடித்த தேவை உதாசீனப்படுத்தாத உறவு.
மனநலம் பேதலித்தவர்களைக் கட்டிவைக்காமல், கட்டி அணைக்கும் அரவணைப்புகளே இங்கு அவசியம். ஏனெனில், மன உளைச்சல் நோயாளிகளுக்குத் தரப்படும் மருத்துவ, சமூக வசதிகள் இப்போதும் பின்தங்கித்தான் உள்ளன. பின்னிரவைத் தாண்டிய ஒரு நாளில் ஒரு மனநோயாளி உதவியின்றித் துன்புறுகின்றார்… ‘உதவ இயலுமா?’ என அரசாங்க அவசர இலக்கத்தைத் தொடர்புகொண்டால், ‘அடடா… மன நோயாளிக்கு ஆம்புலன்ஸ் அனுப்ப முடியாதே’ எனத் தொடர்பு துண்டிக்கப்படுகிறது. மிகப் பிரபலமான தனியார் மருத்துவமனையை அழைத்தால், ‘ஆம்புலன்ஸ் தர்றோம்… எக்ஸ்ட்ரா பைசா ஆகும். ஆனா, எங்க ஹாஸ்பிட்டலில் பார்க்க மாட்டோம். வேற எங்கேயாவது அழைச்சுட்டுப் போங்க’ என்கிறார்கள். இப்படி உளவியல் நோயாளிகளை உலகம் உதாசீனப்படுத்தும், தவிர்க்கும் அவலம் சென்னை போன்ற பெருநகரங்களிலேயே நிலவும்போது, கிராமங்களின் பில்லிசூனியப் பஞ்சாயத்துகளுக்குக் கேட்கவா வேண்டும்!
உலக சுகாதார நிறுவனம் ‘உடல் நலம்’ என்பதற்கான அர்த்தத்தை இப்படி வரையறுத்திருக்கிறது… ‘நலம் எனப்படுவது யாதெனில், உடல் நோயில்லாமல் இருப்பது மட்டும் அல்ல; மன நலமும் சமூக நலமும் சேர்ந்த நிலையே முழு உடல் நலம்’! ஆனால், இதைப் புரிந்துகொள்ள நவீன மருத்துவம் சில நூறு ஆண்டுகளைச் செலவழிக்க வேண்டியிருந்தது. தமிழ் உலகத்துக்கு இந்தப் புரிதல் 1,500 வருடங்களுக்கு முன்னரே ஏற்பட்டிருக்கிறது.
‘மறுப்பது உடல் நோய் மருந்தென லாகும், 
மறுப்பது உளநோய் மருந்தென சாலும், 
மறுப்பது இனி நோய் வாராதிருக்க 
மறுப்பது சாவை மருந்தென லாமே’

என திருமூலர் மட்டுமல்லாது, அத்தனை சித்தர் கூட்டமும் மன நலம் தொடர்பாக பல பாடல்களைப் படைத்திருக்கிறார்கள். மனம் செம்மையானால் மந்திரங்கள் ஜெபிக்க வேண்டாம்; காடு-கழனிகளை அழித்து தியான மண்டபங்களைக் கட்ட வேண்டாம்; மருந்து மாத்திரை, போதை வஸ்துக்களின் உதவி தேவை இல்லை என, எந்த போர்டு மீட்டிங் போட்டும் முடிவு எடுக்காமல் அன்றே வரையறுத்து வைத்திருக்கிறார்கள். இடையில், எங்கே தொலைத்தோம் இந்தப் புரிதலை? விடுதியாகப் போய்விட்ட  வீட்டிலா, பிராய்லர் கல்விக்கூடத்தில் கற்ற கல்வியிலா, துரத்தலும் தப்பித்தலுமான தினசரி வாழ்விலா? ‘கள்ளினும் காமம் பெரிது’ என வள்ளுவன் வாக்குக்கு ஏற்ப வாழ்ந்து வந்த நம்மை, ‘அட… கள்தான்டா பெரிது; கொண்டாடு’ எனக் குழிபறித்துவரும் வணிகத்தாலா?
- நலம் பரவும்…

மன இறுக்கம் குறைக்கும் உணவுகள்…

பழங்களில் நிறைந்திருக்கும் அதன் நிறமிச் சத்துக்கள் மன இறுக்கத்தைக் குறைக்க உதவும். குறிப்பாக மாதுளம்பழம். மன அழுத்த நோய்க்கு சிகிச்சை எடுத்துக்கொள்பவர்கள், மாதுளம்பழச் சாற்றை வெள்ளைச் சர்க்கரை சேர்க்காமல், ஐஸ் துண்டுகள் சேர்க்காமல் தினசரி அருந்தவும்.

மூளையில் சுரக்கும் செரட்டோனின்  சத்தைச் சீராக்கும் தன்மை கொண்டது வாழைப்பழம். இந்தச் சத்து குறைவினாலும், சீரற்ற நிலையிலும்தான் பல்வேறு உளவியல் நோய்கள் வருகின்றன.

தங்குதடையற்ற இரவு உறக்கம், மன அழுத்த நோயாளிகளுக்கு மிகவும் அவசியம். ஒரு குவளைப் பாலில் அரை தேக்கரண்டி அமுக்கரா கிழங்குப் பொடி போட்டு, சூடான பால் அருந்தினால் நிம்மதியான தூக்கம் வரும்.

பதற்றமும் கற்பனைகளும் நிறைந்த இரவுத் தூக்கத்தில் உழல்பவர்கள், ஒரு சிட்டிகை ஜாதிக்காய்த் தூளை, பாலில் சேர்த்து அருந்திவிட்டு உறங்கச் செல்லலாம். 

மனப்பதற்றம், மன அழுத்தம், மனச்சிதைவு பாதிப்புள்ள நோயாளிகள், தினமும் சீரகத் தண்ணீர் அல்லது வெட்டிவேர் போட்ட மண்பானைத் தண்ணீரை அருந்துதல் நலம். 

குளியல், மன அழுத்தம் போக்கும் மிக எளிய முறை. தினசரி இருமுறை குளிப்பது அன்றாட அழுக்கோடு மன அழுத்தத்தையும் நீக்கும். மன அழுத்தத்துக்கு மருந்து எடுத்துக்கொள்பவர்கள் மருத்துவரிடம் ஆலோசனை செய்து, அவர்களுக்கு என பிரத்யேகமாக உள்ள பிரமித் தைலம், அசைத் தைலம், குளிர்தாமரைத் தைலம் இவற்றில் ஒன்றை வாரத்துக்கு ஒருமுறை அல்லது இருமுறை பயன்படுத்துவது சிறப்பு.

எண்ணெயில் பொரித்த உணவுகள் பித்தத்தைக் கூட்டுவதோடு செரிக்கவும் நீண்ட நேரம் ஆகும். தந்தூரி உணவுகளை மன அழுத்த நோயர்கள் தவிர்ப்பது நலம். ஆவியில் வேகவைத்த உணவுப் பண்டங்களே அவர்களது தேர்வாக இருக்க வேண்டும்.

உணவில் சேர்க்கப்படும் செயற்கை வண்ணமூட்டிகள் குழந்தைகளுக்கு கவனச் சிதைவு நோய் அளிப்பதை அறிவியல் உலகம் நிரூபித்துள்ளது.

கவனத்தில் கொள்ளவேண்டியவை…
மனச்சிதைவால் பாதிப்பட்ட ஒருவர் தொடர்ந்து எடுத்துக்கொண்ட சிகிச்சையால், 100 சதவிகிதம் இயல்புக்கு வந்ததுபோல் இருந்தாலும், எந்தக் காரணம்கொண்டும் மருத்துவர் அனுமதி இல்லாமல் மருந்துகளைக் குறைப்பதும் தவிர்ப்பதும் கூடாது. ஏனெனில், ஆழ்மனதில் நடைபெறும் மாற்றங்கள் மிக நுண்ணிய அளவில் சிறிது சிறிதாக மூளையின் ரசாயனங்களில் மாற்றங்களை ஏற்படுத்தி, திடீரென ஒருநிலையில் இயல்பு மாறி வெளிப்படத் தொடங்கலாம்.

பல்வேறு மன அழுத்த நோய்களுக்கு உறக்கம் இல்லாததே முதல் காரணம். ஆரோக்கிய வாழ்வுக்கு 6 முதல் 7 மணி நேர தடையில்லாத உறக்கம் தேவை. உறங்க ஆரம்பித்ததில் இருந்து 5 முதல் 10 மணித் துளிகளில் கனவுகள் வருவதும், அதிகாலையில் விழிக்கும் தருணத்துக்கு முன்னர் 5 முதல் 10 நிமிடங்கள் கனவு வருவதும் இயல்பான உறக்கத்துக்கான அறிகுறிகள்.

இன்று பெரும்பாலோருக்கு இரவு உறக்கத்தில்கூட அலுவல் மற்றும் குடும்பம் சார்ந்த நினைவுகள் மனதை ஆக்கிரமிக்கின்றன. இதுவும் மன அழுத்தத்தின் அறிகுறியே. அதனால், உறங்கச் செல்லும் முன் இனிமையான மகிழ்வான தருணங்கள் முக்கியம்.

உடற்பயிற்சியும் சரியான பிராணாயாமப் பயிற்சியும் நிம்மதியான உறக்கத்தைத் தரும்!

No comments: