Feb 2, 2015

நலம் 360’ -21,22,23.24.25

நலம் 360’ - 21
மருத்துவர் கு.சிவராமன், படம்: வீ.சக்தி அருணகிரி
குழந்தை நலத் துறையில் பதறவைக்கும் ஒரு சொற்றொடர், Sudden infant death syndrome. காரணமே இல்லாமல் திடீரென நிகழும் பச்சிளம் குழந்தை மரணத்துக்கு இப்படி ஒரு பெயர். அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில்கூட, இந்தப் பிரச்னையால் குழந்தை இறப்புகள் ஏராளம். பெற்றோருக்குப் பக்கத்தில் குழந்தையைப் படுக்கவைப்பதும்கூட இந்த இறப்புக்கு  முக்கியமான காரணம் என்பதை, சமீபத்திய ஆராய்ச்சி மூலம் அறிந்துள்ளது அமெரிக்கக் குழந்தைகள் நல அமைப்பு. உடனே அந்த அமைப்பின் ஆய்வாளர்கள் அவசர அவசரமாக, குழந்தைகள் பாதுகாப்பாகத் தூங்குவதற்கான பழக்கத்தை (safe sleep practice) வெளியிட்டனர். அதன்படி, தூங்கும் இடம் காற்றோட்டமாக இருக்க வேண்டும், முதுகு அழுந்தும்படியாக  குழந்தை தூங்க வேண்டும். வயிறு அழுந்தும்படியாகக் குப்புறப் படுக்கவிடக் கூடாது; பக்கவாட்டில் புரண்டுவிடாது இருக்க, அணைக்கும்படியாக மிருதுவான பருத்தித் துணி படுக்கை அவசியம்... என அந்தப் பட்டியல் நீண்டது. ஆனால், அதற்கு எல்லாம் நம்மிடம் பல தலைமுறைகளாக இன்னொரு பெயர் உண்டு... அது தொட்டில் அல்லது தூளி!
'கொவ்வை இதழ் மகளே - என்
குவிந்த நவரத்தினமே
கட்டிப் பசும்பொன்னே - என்
கண்மணியே கண் வளராய்’ எனத் 
தாலாட்டு பாடி, தூளியில் ஆட்டித்   தூங்க வைக்கும் நலப் பழக்கம் 2,000 வருடங்களாக நம்மிடம் உண்டு. ஆனால், தூளியில் குழந்தையைப் போட்டு, நாக்கை அசைத்து தாலாட்டு பாடி குழந்தையின் கவனத்தை ஈர்த்து, கண்களால் அதன் சிந்தனையை ஒருமுகப்படுத்தி, கவனத்தை நிலைநிறுத்திய சில மணித்துளிகளில், அந்தக் குழந்தை தன்னை மறந்து தன் நாவை ஆட்டிப் பார்த்து, பின் அப்படியே பாடலின் ஒலியில் சொக்கி உறங்கும். இந்த அற்புதப் பண்பாடு இப்போது கொஞ்சம் கொஞ்சமாகக் காணாமல் போய்வருகிறது. வழக்கமாக அம்மாவின் பழைய பருத்திச் சேலைதான் தூளி செய்யும் துணி. அன்னையின் மணத்துடன், இருபக்கமும் பருத்திப் புடவையின் அணைப்பில் முதுகில் மட்டுமே படுக்க முடியுமான தொட்டிலின் துணிக்கற்றைக்கு நடுவே, தொட்டில் கம்பு ஒன்றைச் செருகி இருப்பார்கள். காற்றில் ஆடும்போது சுருண்டுகொண்டு, உள்ளே காற்று இறுக்கம் வந்துவிடாமல், தொட்டிலை எப்போதும் விரித்திருக்க உதவும் அந்தக் கம்பு. அதை அங்கு வைத்த பாட்டிக்கு சத்தியமாக Sudden infant death syndrome  பற்றி தெரியாது. safe sleep practice குறித்து தேட அப்போது இணையம் என்ற ஒன்றே இல்லை.  
இன்றைய அறிவியலின் தேடலுக்குச் சற்றும் குறைவில்லாத உலக நாகரிகத் தொட்டிலான தமிழ் மரபு கற்றுத்தந்த நலப் பழக்கம்தான், தூளி. சிறுநீர் கழித்தால் படுக்கையில் தங்காமல் ஓடும் இந்தத் துணித்தூளியில், அதன் தொங்கி ஆடும் குணத்தால், பூரான் - பூச்சிகளும் ஏறாது. குழந்தைகளுக்கு உணவு புரையேறிவிடாமல் காக்கும் படுக்கை நுட்பமும் தூளியில் உண்டு. கூடவே, கொஞ்சம் குலப்பெருமையும், குசும்பு எள்ளலும், உறவின் அருமையும் என எல்லாம் ஏற்றி தூளியில் தாலாட்டு பாடி அமைதியாக உறங்கவைத்தும், ஆர்ப்பரிக்க எழுந்து நிற்க வைக்கவும், களம் அமைத்தது தொட்டில்பழக்கம் மட்டும்தான். நகரங்களில் பழைய பேன்ட்டை ஆணியில் மாட்டிவைத்திருப்பதுபோல் சுவரில் குழந்தையை ஒரு பையில் போட்டுத் தொங்கவிட்டிருப்பதைப் பார்க்கும்போதும், '20 ஆயிரம் ரூபாய்க்கு ஒரு cradle வந்திருக்காம்; நெட்டில் ஆஃபர் வந்திருக்கு’ எனப் பேசுவதைக் கேட்கும்போதும், இன்னும் எத்தனை விஷயங்களை இப்படித் தொலைக்கப் போகிறோமோ என மனம் பதறுகிறது!
'தாய்ப்பாலுக்கு நிகர் ஏதும் இல்லை’ என்பது நாம் அறிந்ததே. அதே தாய்ப்பாலை மார்பகத்தில் இருந்து நேரில் பெறாமல், பிடித்துவைத்து, புட்டியில் குடிக்கும் நகர்ப்புறக் குழந்தைகள் இப்போது அதிகம். வழியே இல்லாதபோது இது சிறந்த மாற்றாகக் கருதப்பட்டாலும், தாயின் மார்போடு அணைந்து, நேராகப் பால் அருந்துவதற்கு இது இணை ஆகாது. நேராக தாய்ப்பால் அருந்தும் குழந்தைக்குக் கிடைக்கும் கூடுதல் மருத்துவப் பயனை, கொஞ்சம் உற்றுப் பார்த்தால், உச்சிமுடியும்கூடச் சிலிர்க்கும். பச்சிளம் குழந்தையின் வாயில், உமிழ் நீரில் இருக்கும் கிருமித்தொற்றை, அந்தக் குழந்தை பால் அருந்தும்போது, தாயின் உடல் உணர்ந்துகொண்டு, உடனடியாக அந்தக் கிருமிக்கு எதிரான antibodies-ஐ ஒரு சில மணித்துளிகளில் தன் உடம்பில் தயாரித்து, அடுத்த வேளை பால் ஊட்டும்போது, தாய்ப்பாலுடன் கலந்து தந்துவிடுமாம். இவ்வளவு விரைவாக தாய், தன் நோய் எதிர்ப்பு ஆற்றலை குழந்தைக்கு அளிப்பதை ஆய்வில் பதிந்து, வியந்து சொல்கிறார்கள் ஆய்வாளர்கள். இந்த antibodies supply காலையில் அலுவலகத்துக்குச் செல்லும் முன் புட்டியில் பிடித்துவைத்த தாய்ப்பாலில் குழந்தைக்குக் கிடைப்பது இல்லை. கூடவே, தாய்ப்பால் சுரப்பு, தாயின் மார்புக் காம்பை உறிஞ்சும்போது மட்டுமே குழந்தை வாய்க்கு வரும். ஆனால், புட்டிப்பால் அருந்தும்போது குழந்தை பாலை உறிஞ்சாமல் இருந்தாலும், அது வழிந்து வாயில் நிரம்பி, சில நேரம் மூச்சுக்குழலுக்குள் செல்லவும்கூட வாய்ப்பு உண்டு.
இன்னொரு விஷயம், தாய்ப்பால் புகட்டும்போது, குழந்தையின் நிறைவும் மகிழ்வும்தான் தாயின் கண்ணுக்குத் தெரியும். எந்த அளவு குழந்தை பால் குடித்திருக்கிறது என தாய் கணக்கிட முடியாது. ஆனால், பராமரிப்பவர் புட்டியில் பிடித்துவைத்த தாய்ப்பாலை அப்படிக் கொடுக்க இயலாது. 'தாய்ப்பாலை வீணாக்கக் கூடாது’ எனப் பெரும்பாலும் புட்டி காலியாகும் வரை கொடுப்பர். இது சில நேரங்களில் கூடுதலாகப் போய், பின்னாளில் குழந்தை தேவைக்கு அதிகம் உண்ணும் பழக்கம் உடையவர்களாக மாறிவிடும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதோடு, தாய்ப்பாலை புட்டியில் பீச்சும் தாய்க்கு மீண்டும் பால்சுரப்பு ஏற்படுவது, இயல்பாக குழந்தை பால் அருந்தும்போது சுரப்பதுபோல சீராக நடைபெறாது. மொத்தத்தில், புட்டிப்பால் புகட்டுவது என்பது, அம்மாவின் கழுத்துச் சங்கிலியை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு, ஓரக் கண்ணால் அம்மாவை ரசித்தபடி, உறிஞ்சலுக்கு நடுவே 'களுக்’ சிரிப்பை கண்களில் காட்டி, குழந்தை பால் உறிஞ்சும் செயலுக்கு, இணை ஆகாது!
உரை மருந்து கொடுத்தாலும், சேய்நெய் தந்தாலும், வசம்பு கருக்கிக் குழைத்துக் கொடுத்தாலும் 'அந்தச் சங்கை எடு... கொஞ்சம்’ என்ற சத்தம் கேட்கும். வட மாவட்டத்தில் 'பாலாடை’ என்றும் தெக்கத்தி மண்ணில் 'சங்கு’ என்றும் அழைக்கப்படும் அந்தக் கால குழந்தை மருந்தூட்டும் கலன், இப்போதைய பிளாஸ்டிக் அவுன்ஸ் கிளாஸிலும் ட்ராப்பர் குழலிலும் தோற்றுப்போய், தொலைய ஆரம்பித்துவிட்டது.  வெள்ளி அல்லது வெண்கலத்தால் ஆன பாலாடையில், குழந்தைக்கு மருந்தூட்டும்போது தாயின் சுத்தமான ஆள்காட்டிவிரலால், மருந்தைக் குழைத்து வாயினுள் அனுப்பும் வசதி உண்டு. மடியில் குழந்தையைத் தலை உயர்த்திக் கிடத்தி, பாலாடையின் மழுங்கிய முனையை, இதழ் ஓரத்தில் வைத்து, மருந்தை அல்லது மருந்து கலந்த தாய்ப்பாலைப் புகட்டும் வித்தை, தாய்க்குக் கட்டாயம் தெரியவேண்டிய உயிர்வித்தை. முடிந்த மட்டும் பிஞ்சுக் குழந்தையின் வாய் நஞ்சு பிளாஸ்டிக்கைச் சுவைக்காமல் இருக்க, இந்த நல்ல பழக்கம் நிச்சயம் மீட்டு எடுக்கப்பட வேண்டும்.
ஏழு, எட்டாம் மாதத்தில் பக்கவாட்டில் இரண்டு பக்கங்களும் தலையணை அணைப்பில் உட்கார்ந்திருந்த குழந்தை, 11-ம் மாதத்தில்  நடை பழக ஆரம்பிக்கும்போது, அன்று நாம் வாங்கித் தந்த நடைவண்டி இப்போது இல்லை. கைகள் மட்டும் ஊன்றிப் பிடித்து நடை பயிலும் அந்தக் கால வண்டிக்கு இப்போதைய walker இணையாவதே இல்லை. குழந்தை மருத்துவ ஆய்வாளர்கள், 'குழந்தைகளுக்கு walker வாங்கித் தராதீர்கள்’ எனக் கூறுகிறார்கள். குழந்தை சரியாக நடப்பதற்கு தசை வலுவை, இடுப்பு வலுவைப் பெறும் முன்னர், எல்லா பக்கமும் தாங்கிக்கொள்ளும் walker வாகனம் உண்மையில் குழந்தையின் இயல்பான நடைத்திறனைத் தாமதப்படுத்தும். ஆனால், நம் ஊர் நடைவண்டி அப்படி அல்ல. பக்கவாட்டுப் பிடி இல்லாததால் நடைக்கான தசைப்பயிற்சியை, இடுப்பு கால்தசைக்கு ஏற்றவாறு தந்து நடையைச் செம்மையாக்கும்.
இப்படி, நம் இனப் பழக்கங்கள் எல்லாம் பெருவாரியாக நம் நலத்துக்கு வித்திடும் நலப் பழக்கங்கள். இடையிடையே வரலாற்றில் அப்போதைய சமூக, மத, இனப் பிணக்குகளும், ஆளுமைப் புகுத்தல்களும் செருகி வந்திருந்தாலும், இன்னும் மிச்சம் இருக்கும் பழக்கங்களையாவது எடுத்தாளத் தவறிவிடக் கூடாது. கலோரி கணக்கிலும், காப்புரிமை சூட்சுமத்துக்குள்ளும் நவீன உணவாக்கம் கட்டமைக்கப்படும்போது, எதைச் சாப்பிட வேண்டும் என மட்டும் சொல்லிச் சென்றுவிடாமல், எப்படிச் சாப்பிட வேண்டும், எதற்குச் சாப்பிட வேண்டும் என எப்போதோ எழுதிவைத்த மரபு நம் மரபு மட்டும்தான்.
'முன்துவ்வார் முன்னெழார் தம்மிற் பெரியார் தம்பாலி ருந்தக்கால்’ என நம்மோடு நம் வயதில் பெரியவர் உணவருந்தினால், அவர்கள் சாப்பிட்டு எழும் முன்னதாக நாம் எழக் கூடாது என நம் இனக் கூட்டம் கிட்டத்தட்ட 1,800 ஆண்டுகளுக்கு முன் ஆசாரக் கோவை நூலில் சொன்னதில் உணவு அறிவியல் கிடையாது; ஆனால் ஓங்கிய உணவுக் கலாசாரம் உண்டு. அதேபோல் தலை தித்திப்பு, கடை கைப்பு எனச் சாப்பிடச் சொன்ன முறையில் இனிப்பில் தொடங்குவது, விருந்தோம்பலில் மகிழ்வைத் தெரிவிக்கும் பண்பாட்டுக்கு மட்டும் அல்ல; ஜீரணத்தின் முதல் படியான உமிழ்நீரை முதலில் சுரக்கவைக்கும் என்பதற்காகவும் சேர்த்துத்தான். இப்படி மாண்பு நிறைந்த உணவுப் பழக்கத்தை, அளவு அறிந்து, பகுத்து உண்டு உண்ணச் சொன்ன செய்தி நம் மண்ணில் பந்தியில் மட்டும் பரிமாறப்படவில்லை; பண்பாட்டிலும் சேர்த்துத்தான். இதை எப்போது புரிந்துகொள்ளப்போகிறோம்? எப்போது முழுமையாகக் கைக்கொள்ளப்போகிறோம்?
- நலம் பரவும்...

'பதார்த்த குண சிந்தாமணி’ எனும் பழம்பெரும் சித்த நூல் சொல்லும் சில நலவாழ்வுப் பழக்கங்கள்:
நாளுக்கு இரண்டு முறை மலம் கழிப்பது.
 வாரத்துக்கு ஒரு முறை எண்ணெய்க் குளியல்.
 மாதத்துக்கு ஒரு முறை உடலுறவு.
 45 நாட்களுக்கு ஒரு முறை நாசியில் (nasal drops) மருந்து விடுவது.
 நான்கு மாதங்களுக்கு ஒரு முறை பேதி மருந்து சாப்பிடுவது.
 வருடத்து இரண்டு முறை வாந்தி மருந்து சாப்பிடுவது.
செய்யக் கூடாத விஷயங்கள்:
 முதல் நாள் சமைத்த உணவு அமுதமாகவே இருந்தாலும் சாப்பிடக் கூடாது.
 கருணைக்கிழங்கு தவிர பிற கிழங்குகளைச்  சாப்பிடக் கூடாது.
 பகலில் தூக்கமும் புணர்ச்சியும் கூடாது.
 நாளுக்கு இரண்டு பொழுதுகள் தவிர மூன்று பொழுதுகள் சாப்பிடக் கூடாது.
 பசிக்காமல் உணவு அருந்தக் கூடாது.
 உணவு உண்ணும்போது இடையிடையே  நீர் அருந்தக் கூடாது.
 தும்மல், சிறுநீர், மலம், கொட்டாவி, பசி, தாகம்,  வாந்தி, இருமல், ஆயாசம், தூக்கம், கண்ணீர்,    உடலுறவில் சுக்கிலம், கீழ்க்காற்று, மூச்சு இவற்றை அடக்கக் கூடாது.
கண்டிப்பாகச் செய்யவேண்டியவை:
 உணவு சாப்பிட்ட பிறகு குறு நடை.
 நீரைச் கருக்கி, மோரைப் பெருக்கி, நெய்யை உருக்கி உண்பது.
 வாழைப்பழத்தைக் கனியாக அல்லாமல்   இளம்பிஞ்சாகச் சாப்பிடுவது.
 எண்ணெய்க் குளியலின்போது வெந்நீரில் குளிப்பது.

நலம் 360’ – 22

கொஞ்சம் வாய் கசந்து, உடம்பெல்லாம் வலித்து, லேசான தலைவலியுடன், சோர்வைத் தரும் அந்தக்கால காய்ச்சல்,  ஒருவகையில் சுகமானதும்கூட. பாயில் படுத்துக்கொண்டே பூண்டுபோட்ட அரிசிக் கஞ்சியை கறிவேப்பிலைத் துவையல் தொட்டு சாப்பிட்டுவிட்டு, அக்கா, அத்தைகளுடன் தாயக்கட்டை உருட்டி விளையாடிய அந்தக் காய்ச்சல் நாட்கள் கலவரப்படுத்தியது இல்லை. கஞ்சியைக்  கடைசி சொட்டு வரை குடித்தவுடன் சுக்கு, மிளகு, மல்லி, கருப்பட்டி போட்டு காய்ச்சிய கஷாயத்தை அம்மா நீட்டுவார். ‘வாய்ல இருந்து டம்ளரை எடுக்காம சாப்பிடணும்… சொல்லிட்டேன்!’ என்ற அதட்டலில் அன்பும் அக்கறையும் பல சிட்டிகை தூக்கலாக இருக்கும். கூடவே, பக்கத்து வீட்டு மாமா தோட்டத்தில் அறுத்து எடுத்து வந்த நொச்சித்தழையை, கொதிக்கும் சுடுதண்ணீரில் போட்டு ஆவி பிடிக்கச் சொல்வார் அப்பா. எல்லாம் முடிந்து, பாயில் படுக்கும்போது அம்மா நெற்றியில் சுக்குப் பற்று போடுவார். அது காய்ந்து, லேசாக நெற்றி எரிய ஆரம்பிக்கையில் தலைவலி காணாமல்போய், சுக நித்திரை நம்மைத் தழுவும். இரவில் வியர்த்துவிட்டால், காய்ச்சலும் காணாமல்போகும். மறுநாள் காலையில் தலைக்குக் குளிக்காமல், ரொட்டி, பிரெட் சாப்பிட்டுவிட்டு பள்ளிக்குப் புறப்படுவோம். ‘ச்சே… இந்தக் காய்ச்சல் இன்னொரு நாள் இருந்திருக்கக் கூடாதா…’ என்ற ஏக்கத்தை உண்டாக்கும் அந்த நாள் காய்ச்சல்! ஆனால், இப்போது நிலைமை அப்படியா இருக்கிறது?
‘என்னது காய்ச்சலா? உஷாரா இருங்க… எல்லா பக்கமும் ‘டெங்கு’வாம், ‘சிக்குன்குனியா’வாம்… ஏதோ மர்மக் காய்ச்சலாம்!’ எனக் கலவரத்துடன்தான் காய்ச்சலை எதிர்கொள்கிறோம். அதிலும் காய்ச்சல் வந்த மூன்றாவது நாள் ஜுரம் குறையாமல் குழந்தை அனத்தத் தொடங்கினால், ‘எதுக்கும் ப்ளட் டெஸ்ட் எடுத்திருங்க’ என மருத்துவர் நீட்டும் பட்டியலில், டைஃபாய்டு, மலேரியா, காமாலை, டெங்கு, சிக்குன்குனியா என வகைதொகையான பரிந்துரைகள். அந்த டெஸ்ட்களை சில/பல ஆயிரங்களைக் கொடுத்து எடுப்போம். அந்த முடிவுகளை கூகுளாண்டவர் உதவியுடன் நாம் அர்த்தப்பெயர்த்திப் பார்த்து,  ‘அட… ஒண்ணும் இல்லை’ என கெத்தாக மருத்துவரிடம் சென்றால், ‘இது கிளினிக்கல் மலேரியா. ரிசல்ட்டில் வராது. சிக்குன்குனியா பாசிட்டிவ் இல்லை; ஆனா, சிக்குன்குனியா மாதிரி காய்ச்சல். இதில் நெகட்டிவாக இருந்தாலும் டெங்குவாக இருக்கலாம். அதனால் காய்ச்சல் இருக்கு… ஆனா, இல்லை!’ என மருத்துவர் புரியாமல் பேச, போன காய்ச்சல் மறுபடி அடிக்க ஆரம்பிக்கும்; குளிரும் மயக்கமும் வரும். ‘எதுக்கும் அட்மிட் பண்ணிடுங்களேன்… ப்ளட் பிளேட்லெட்ஸ் வேற குறையும்போல தெரியுது. எதுக்கு ரிஸ்க்?’ என்ற வார்த்தைகளைக் கேட்டதும், பதற்றம் கவ்விக்கொள்ளும்.
காய்ச்சல் ஒரு தனி நோய் அல்ல. உடல் வெள்ளையணுக்களைக்கொண்டு, கிருமிகளுடன் நடத்தும் யுத்தத்தில் கிளம்பும் வெப்பமே காய்ச்சல். வலுவான நோய் எதிர்ப்பு ஆற்றல் இல்லாதபோது ஜுரம் கொஞ்சம் நீடிக்கலாம். புதுவகையான பாக்டீரியா, வைரஸ்களுக்கு எதிரான யுத்தம் எனில், ஜுரம் நீடிக்கலாம். இரு நாடுகளுக்கு இடையிலான யுத்தத்தில் மின்சாரம் தடைபடுவது, தண்ணீர் தட்டுப்பாடு, மருத்துவமனை வசதி குறைவுகள் இருப்பதுபோல உடலிலும் வெள்ளையணு – கிருமிகளுக்கு இடையிலான யுத்தத்தில் ரத்தத் தட்டுக் குறைவு, உடல் நீர்ச்சத்துக் குறைவு, ஈரல் – மண்ணீரல் வீக்கம் எனத் தொந்தரவுகள் அதிகரிக்கும். அதுவே உடலின் இயல்பு வாழ்க்கையைப் பாதித்து, சுகவீனத்தை உண்டாக்கும்.
அப்படி இப்போது தமிழகத்தை அடிக்கடி ஆட்டிப்படைக்கும் காய்ச்சல், டெங்கு.  கிட்டத்தட்ட உலகின் பாதி மக்கள்தொகை டெங்கு வரும் வாய்ப்பில் இருக்கிறார்கள் என உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது. 2006-12 வரை இந்தியாவில் நடந்த டெங்கு தாக்கம், நம் அரசு சொல்வதைக் காட்டிலும் ஏறத்தாழ 300 மடங்கு அதிகம் என்கிறது ஆய்வு முடிவுகள்.  Aedes aegypti எனும் கொசுவின் மூலம் பரவும் டெங்கு, வைரஸ் காய்ச்சலில் ஒரு வகை. மடமடவென ரத்தத் தட்டுக்களைக் குறைத்து 102 டிகிரிக்கு மேலாக காய்ச்சல், தலைவலி, தசைமூட்டு வலி, தோலில் சிவப்புத் திட்டுக்கள்… போன்றவற்றை உண்டாக்கும். இந்த அறிகுறிகள் தென்பட்டால் தாமதிக்காது மருத்துவ ஆலோசனை பெறுவது முக்கியம். இயற்கை சேமிக்கும் நீர்நிலைகளால் இந்தக் கொசுப் பெருக்கம் உண்டாகாது. மனிதன் சேமிக்கும் நல்ல நீரால்தான், இந்தக் கொசுப் பெருக்கம் நடக்கிறது. காலை வேளைகளில் கடிக்கும் பெண் கொசுக்களால்தான் இந்தக் காய்ச்சல் தரும் வைரஸ், மனிதனுக்குள் பரவும். டயர் வியாபாரிகள் மலையென சேமித்துவைத்த டயர், செல்வம் செழிக்க வீட்டு வரண்டாக்களில் வளர்க்கப்படும் ‘லக்கி மூங்கில்’ செடி ஆகியவற்றின் மூலம்தான், இந்த டெங்கு பரவுகிறதோ என உலக சுகாதார நிறுவனமே அச்சம் தெரிவித்திருக்கிறது. 
டெங்கு காய்ச்சலைப்போல தமிழர்களை அதிகம் வாட்டுவது சிக்குன்குனியா. 50 வருடங்களாக அதிகம் பரிச்சயம் இல்லாதிருந்து 2006-ம் ஆண்டு டிசம்பரில் மீண்டும் தலையெடுக்க ஆரம்பித்த இந்தக் காய்ச்சல் பரிசளிக்கும் மூட்டுவலியின் உபாதைகள் சொல்லி மாளாது. பெரும்பாலும் ஓரிரு வாரத்தில் சரியாக வேண்டிய இந்த வலி ஒரு சிலருக்குத் தங்கிப்போய், ஓர் ஆண்டுக்கு வலி தந்து, சாதாரண கையெழுத்து போடுவதில் இருந்து கணினி தட்டச்சு வரை வலி வாட்டி எடுக்கும். வலிக்காக எடுக்கப்படும் மாத்திரைகள், சிலருக்கு உண்டாக்கும் வயிற்றுப் புண் தனி உபாதை.
டெங்கு, சிக்குன்குனியாவைத் தாண்டி சாதாரண காய்ச்சல், சோதனையில் சிக்காத சில வகை மர்மக் காய்ச்சல்கள், போஷாக்காகத் தேறிவரும் குழந்தையின் எடையைத் தடாலடியாகக் குறைக்கும் சளி-இருமல், காணாமல்போன ஆஸ்துமா மூச்சிரைப்பு மீண்டும் தொற்றிக்கொள்வது, குளிர்க்காலத்தில் அதிகரிக்கும் சோரியாசிஸ் தோல் படை நோய் என மழைக் காலத்தில் குத்தாட்டம் போடும்  பல நோய்க் கூட்டம்.
சரி… காய்ச்சலுக்கு என்ன செய்யலாம்? முதலில் வராமல் தடுக்க முழு முயற்சி எடுக்க வேண்டும். தண்ணீரைச் சேமிக்கும் பாத்திரத்தை மூடிவையுங்கள். வீட்டுக்கு வெளியே மூலையில் நீங்கள் போட்டுவைத்திருக்கும் பழைய பெயின்ட் டப்பா, ரப்பர் டயர், பாத்திரங்களை அகற்றுங்கள். வேப்பம் புகையோ, கார்ப்பரேஷன் கொசுவிரட்டிப் புகையோ காட்டுங்கள். கொதித்து ஆறிய தண்ணீரை மட்டும் அருந்துங்கள். சூடாக அப்போது சமைத்த உணவை உண்ணுங்கள். உங்களுக்கு லேசான தும்மல், ஜுரம் இருக்கும்போது பொது இடங்களுக்குச் செல்வதைத் தவிருங்கள்.
தொற்றுநோய்க் கூட்டம் அதிகம் இல்லாத, சூழல் அவ்வளவாகச் சிதையாத காலத்தில், ‘குடல் தன்னில் சீதமலாது சுரமும் வராது திறமாமே’ என காய்ச்சலுக்கு வயிற்றில் சேரும் அஜீரணத்தையும் மந்தத்தையும் முக்கியக் காரணமாக அன்று சித்த மருத்துவம் சொல்லியது. அதனாலேயே, ‘உற்ற சுரத்துக்கும் உறுதியாம் வாய்வுக்கும் அற்றே வருமட்டும் அன்னத்தைக் காட்டாதே’ என பட்டினியை மருந்தாகச் சொல்லியிருக்கிறார்கள். இன்னும்கூட பட்டினியுடன் காய்ச்சலை வெல்லும் பழக்கம் ஆங்காங்கே இருக்கத்தான் செய்கிறது. ஆனால், இது இப்போதைய தீவிர டெங்கு மாதிரியான தொற்றுக்காய்ச்சல்களுக்கு அப்படியே பொருந்தாது. உடலில் நீர்ச்சத்தும் ஆற்றலும் குறைந்து தீவிர நிலைக்கு அழைத்துச்செல்ல வாய்ப்பு உண்டு. ‘சிறு உணவு பெரு மருந்து’ என சித்த மருத்துவம் சொல்வதுபோல, சிறு உணவாகிய கஞ்சியை மட்டுமே காய்ச்சலின்போது உணவாகக் கொடுக்க வேண்டும். சீந்தில் அன்னப்பால் கஞ்சி,  புழுங்கல் அரிசி, பூண்டு கருஞ்சீரகக் கஞ்சி…  இவை மட்டுமே காய்ச்சல் உணவாக இருக்க வேண்டும். நிறையக் கொதித்து ஆறிய நீரும், புளிப்பில்லாத மாதுளை, ஆரஞ்சுப்பழ ரசமும் பருக வேண்டும்.
லேசாக கண்களையும் மூக்கையும் கசக்கும் குழந்தைக்கு, அடுத்த ஆறு மணி நேரத்தில் தும்மலுடன்கூடிய காய்ச்சல் வரக்கூடும்.  நொச்சித்தழை நான்கு கைப்பிடி, மஞ்சள் இரு துண்டுகள் போட்டுக் காய்ச்சி அந்த ஆவியைப் பிடிக்கவைக்க, மழைக்கால காய்ச்சல் மறையும். திப்பிலி, மஞ்சள், ஓமம், மிளகு இந்த நான்கையும்  நல்ல பொடியாக்கி, ஒரு வேட்டித்துணியில் தூவி, திரிபோல் சுருட்டி, வேப்பெண்ணெயில் நனைத்து, கொளுத்தி, அந்தப் புகையை முகர்வது நீரேற்றம், தலைவலியுடன்கூடிய ஜுரத்தைப் போக்கும். சாதாரண சுக்கு அரைத்து நெற்றியில் பற்று இடுவது, சித்த மருந்துக் கடைகளில் கிடைக்கும் நீர்க்கோவை மாத்திரையைப் பற்று இடுவது மழைக்காலத் தும்மல் சளியுடன்கூடிய சைனசைட்டிஸ் நோயில் வரும் ஜுரத்துக்கான எளிய மருந்து. அதேபோல், தும்பைப் பூச் சாற்றை மூக்கில் துளியாக விடுவதும் மழைக்கால சளி, காய்ச்சல் நீக்கும் எளிய மருந்து.
நிலவேம்புக் குடிநீர், தமிழகத்தில் 2006-ல் சிக்கன்குனியா, 2012-ல் டெங்குவில் இருந்து பெருவாரியான மக்களைக் காப்பாற்றிய சித்த மருந்து. பலருக்கும் கஷாயம் என்றதும் சின்ன பயம் இப்போதும் உண்டு. நாம் தினம் சாப்பிடும் தேநீர், சீனர்கள் நெடுங்காலம் சாப்பிட்ட தேயிலைக் கஷாயம்தான். வற்றக்குழம்பும் சாம்பாரும்கூட ஒரு வகையில் செறிவூட்டப்பட்ட கஷாயம்தான். நோய்க்கு ஏற்ற கஷாயம் குடிக்கும் மரபு, நம் மண்ணில் மீட்டெடுக்கப்பட வேண்டிய பெரும் மருத்துவ மரபு. ஜுரத்துக்கு நிலவேம்புக் கஷாயம், அஜீரணத்துக்கு சீரக கஷாயம், வயிற்றுப்போக்குக்கு ஓமக் கஷாயம், தலைவலிக்கு சுக்குக் கஷாயம், சிறுகுழந்தையின் சளிக்கு துளசிக் கஷாயம், தொண்டைக் கரகரப்புக்கு கற்பூரவல்லிக் கஷாயம்… என வீட்டிலேயே முதலுதவியாகக் கொடுக்கப்பட்ட இந்தக் கஷாய மரபு, வேகமாக வழக்கொழிந்து வருகிறது.
‘அட… கஷாயம் செய்ய இப்போ எங்கே சார் நேரம் இருக்கு? வேணும்னா ஆன்லைன் ஆஃபர்ல அந்தக் கஷாயப் பொடி கிடைக்குமானு சொல்லுங்க… உடனே ஆர்டர் பண்றேன்’ எனக் கேட்போர் அதிகம். கஷாய வெண்டிங் மெஷின் அதற்கான தீர்வு. கோலாவுக்கும் காபிக்கும் பொருத்தப்படும் வெண்டிங் மெஷின்களில் கஷாயத்தை ஊற்றினால், அதற்கு கசக்கவா செய்யும். செலவும் மிகச் சில ஆயிரங்கள்தான். அரசுக்கு அது மிகச் சிறிய செலவு. ஆனால், ஓரிரு அரசு சித்த மருத்துவமனையைத் தாண்டி எங்கும் இது வரவில்லை.
அனைத்து மருத்துவமனைகளில், பொது இடங்களில், அம்மா உணவகங்களில் கஷாய வெண்டிங் மெஷின்களைப் பொருத்தி எவரும் அதை எளிதில் குடிக்கும்படி செய்தால், எத்தனையோ நோய்களை ஆரம்ப அறிகுறிகளிலேயே தடுக்கலாம். சில லட்சங்களை வெண்டிங் மெஷின் பயன்பாட்டுக்கு எனச் செலவழித்தால், அரசின் மருத்துவ ஒதுக்கீட்டில் பல கோடி ரூபாயைக் குறைக்கலாம். பெரும் பெயரும் கிட்டும்… செய்வார்களா?

நலம் 360’ – 23

ருவேளை ‘ஞானப்பழம்’ திருவிளையாடல் இப்போது நிகழ்ந்தால், என்ன நடந்திருக்கும்? ‘என்னது ஞானப்பழமா? இதில் எத்தனை கலோரி? அய்யோ… ஸ்வீட் ஜாஸ்தி! இப்போ  மயிலில் ஏறி உலகத்தைச் சுத்திவந்து இதை ஜெயிச்சாலும், பழத்தைச் சாப்பிட்ட பிறகு தினம் ஊரைச் சுத்தி ஓடவேண்டியிருக்கும். ஸோ… ஸாரி டாடி! எனக்கு ஞானப்பழம் வேண்டாம்’ என யூத் கடவுள் முருகப்பெருமானே பதறும் ‘ஷுகர் உலகம்’ ஆகிவிட்டது நம் சமூகம். தூக்கக் கலக்கத்துடன் தெருநாய் துரத்த, தலைதெறிக்க ஓடவும், மொட்டைமாடியில் மூச்சைப் பிடித்து தவம் செய்யவுமாக இளைஞர்களைப் பதற்றப்பட வைத்திருக்கிறது சர்க்கரை வியாதி பயம்!
‘நாங்க சர்க்கரையே தொடுறது இல்லை. எல்லோரும் ஜீரோ கலோரி இனிப்புக்கு மாறிட்டோம்; செயற்கைச் சர்க்கரை. காபி, டீக்கு மட்டும் இல்லை… பாயசம், பாதம்கீருக்கும் இப்போ அதான்’ எனப் பெருமையாகச் சொல்லும் புத்திசாலிக் கூட்டம் நகர்ப்புறத்தில் பெருகிவருகிறது. ‘டயாபட்டிக் நோயாளிகள்  சர்க்கரை சாப்பிடக் கூடாது. ஆனால், வாழ்க்கையில் இனிப்பு இல்லாமல் இருக்க முடியுமா? ஆகவே, ‘நோய்ச் சிக்கலை உண்டாக்காமல், அதே இனிப்பைத் தரும் இதைச் சாப்பிடுங்க!’ ’ என ஆரம்பித்ததுதான் செயற்கை இனிப்பு வியாபாரம். இப்போது அந்த வியாபாரம் கொஞ்சம் கொஞ்ச மாக, ‘உடல் எடை குறைக்கணுமா, ஜீரோ சைஸ் இடுப்பு வேணுமா, எப்போதும் ஷ§கர் வராமல் தடுக்கணுமா, இந்தச் சர்க்கரை சாப்பிடுங்க’ எனச் சொல்லத் தொடங்கியுள்ளது. துரித உணவிலும் மருந்து மாத்திரைகளிலும் ஏராளமாகப் புழங்கும் இனிப்பு அவதாரங்களின் பட்டியல் கொஞ்சம் பெரிது. Acesulfame, Aspartame, Neotame, Saccharin, Sucralose முதலிய செயற்கை இனிப்புகளும், Erythritol, Hydrogenated starch, Lactitol, Maltitol, Mannitol முதலான சர்க்கரை அமிலங்களும், Stevia, Tagatose, Trehaloseபோன்ற நவீன சர்க்கரைகளும் இதில் அடக்கம். இந்த வகையறாக்களில் முன்பே வந்த Aspartame  எனும் ரசாயனத்தை காபியில் கலந்து குடிக்கலாம்; கேசரி கிண்டிச் சாப்பிட முடியாது. கொதிநிலையில் இந்த வேதிப்பொருள் உடைந்து சிக்கல் உண்டாக்கும் என்பதால், சர்க்கரை வியாதிக்காரர் மட்டும் இதைச் சத்தம் போடாமல் காபியிலோ, தேநீரிலோ கலந்து சாப்பிட்டு வந்தனர். ஆனால், இப்போது சந்தையில் விற்கப்படும் சுக்ருலோஸ், சர்க்கரையில் இருந்தே பிரித்து எடுக்கப்படும் ஒரு செயற்கைச் சர்க்கரை. ‘எவ்வளவு வெப்பத்திலும் எங்க கெமிக்கல் உடையாது; உருகாது; நீங்க கோகோ போட்டு சாக்லேட் செய்தாலும், கோழி அடித்துக் குழம்பு வைத்தாலும் ரெண்டு சிட்டிகை போட்டுக்கங்களேன்’ என இதன் வணிகம் விளம்பரம் செய்கிறது. ‘எஃப்.டி.ஏ அனுமதி வேற இருக்கு’ என அட்டையில் குறிப்பிடுகிறார்கள். ஆனால், கொஞ்சம் வெளியே விசாரித்தால் கிடைக்கும் செய்திகள் அதிரவைக்கின்றன.
‘119 டிகிரி வெப்பத்துக்கு மேல் சுக்ருலோஸ் உடையக்கூடும். டயாக்ஸின் மாதிரியான நச்சை வெளியிடக்கூடும்’ எனச் சில ஆய்வுகள் தொடர்ந்து சொல்கின்றன. நம் மக்களிடையே அதிகமாகப் புழங்கும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரத்தில் கொதிக்க வைக்கும்போது, இந்தச் செயற்கைச் சர்க்கரை, பிளாஸ்டிக்கில் இருந்து பிரியும் டயாக்ஸினைப்போலpolychlorinated dibenzo-p-dioxins and dibenzofurans என்ற வேதிப்பொருளை உருவாக்கும் என ஓர் ஆய்வு பலமாக எச்சரிக்கிறது. ‘200 டிகிரிக்கு மேல்தான் இது வரக்கூடும். இல்லை… இல்லை 350 டிகிரிக்கு மேல் கொதிநிலை உயர வேண்டும்’ என இந்தச் செய்தி பற்றி சர்ச்சை நிலவினாலும், அப்படி உருவாகும் கெமிக்கல், நேரடியான புற்றுநோய்க் காரணி என்பதில் சந்தேகமே இல்லை. ‘இந்தச் செயற்கை இனிப்புகள், சோதனை எலிகளில் ரத்தப் புற்றுநோயை உருவாக்குவதாக’ ஓர் இத்தாலிய ஆய்வை மேற்கோள் காட்டி எச்சரிக்கிறது, அமெரிக்கத் தன்னார்வ உணவுப் பொருள் ஆராய்ச்சி நிறுவனம் Center for science in public interest. இப்படி உணவுப்பொருட்கள் பற்றி சந்தேக சர்ச்சை எழுப்பினால் ‘ஆய்வாளர்களின் சந்தேகங்களுக்கு ஆதாரம் இல்லை. அது pseud-oscience;வெற்றுக் கற்பனை’ என ஒதுக்குகிறது மேற்கத்திய (வணிக) அறிவியல் உலகம். இப்படித்தான் சூழலியலாளர் ரேச்சல் கார்சன் ‘டி.டி.டி’ பற்றி முதலில் பேசியபோதும் அவர்கள் புறக்கணித்தனர். பின்னாளில் விஷயம் புரிந்ததும் ‘குய்யோமுய்யோ’ எனக் கதறி ‘டி.டி.டி-’யை உலகில் இருந்தே அகற்ற வேண்டும் எனத் தீர்மானம் போட்டார்கள். இதேபோல சர்ச்சைக்கு உள்ளான செயற்கை நிறமிகள் குறித்த விவாதங்கள் முதலில் நிராகரிக்கப்பட்டாலும், பிற்பாடு அபாயம் உணர்ந்து, அந்தப் பொருட்கள் பயன்பாட்டில் இருந்து விலக்கப்பட்டன. ‘உணவு எனப்படுவது நிலத்தொடு நீரே’ என உணவுக்கான ஊற்றுக்கண்ணைத் தெளிவாகக் காட்டியது நம் சமூகம். அந்த நிலமும் நீரும் அறியாதது, இந்தச் செயற்கை ரசாயனம்! 
நமது முந்தைய தலைமுறையில் அநேகமாக யாருக்கும் ஓட்ஸ் தெரியாது. சில குதிரை முதலாளிகளைத் தவிர ஒரு நூற்றாண்டுக்கு முன்னர், அமெரிக்காவிலும் ஓட்ஸ் பெருவாரியாகத் தெரியாது. ஆனால், உலக உணவுச் சந்தையில் ஓட்ஸுக்கு இன்று கொஞ்சம் உசத்தியான இடம். காரணம், ஐரோப்பிய உணவு வணிக ஜாம்பவான்கள். எங்கிருந்து வந்தது இந்த ஓட்ஸ்? ரஷியா, கனடா, ஜெர்மனி, பின்லாந்து, ஆஸ்திரேலியா முதலான நாடுகளில் குளிரைத் தாங்கி நின்று வளரும் பயிர்தான் ஓட்ஸ். இங்கே  தொடர் விளம்பரங்கள் காரணமாக, நம் வீட்டு மளிகைப்பட்டியலில் ஓட்ஸ் இடம்பிடிக்க, அண்ணாச்சி கடை ரேக்குகளில் அடுக்கிவைத்துவிட்டார்கள். ‘டயட்ல நான் ரொம்ப ஸ்ட்ரிக்ட். ஷுகர் வரக் கூடாதுனு காலையில் ஓட்ஸ் கஞ்சி, சாயந்திரம் ஓட்ஸ் பிஸ்கட்தான் சாப்பிடுறேன்’ எனச் சொல்வதுதான் இப்போதைய நகர நாகரிகம். குறிப்பாக, குண்டு அம்மணிகள் ‘ஓட்ஸினால் ஒல்லி ஆகலாம்’ எனப் பகல்கனவு காண்கிறார்கள். ஓட்ஸில் கூடுதல் புரதமும், பீட்டா டி குளுக்கானும் இருப்பது உண்மைதான். ஆனால், ஓட்ஸ் எனப்படுவது விளைந்து, கதிர் அறுத்து, உமி நீக்கி நேராக நம்மிடம் சேர்ப்பிக்கப்படும் பொருள் அல்ல. கதிர் அறுத்த பின்னர், தோல் நீக்கி, அதிலுள்ள கொழுப்பு அமிலங்களைச் செயல் இழக்க 100 டிகிரி நீராவியில் வேகவைத்து, உலர்த்தி, அசுர வேகத்தில் ஓடும் இயந்திரத்துக்கு இடையே விட்டு நசுக்கி, அவலாக்கி… பிறகு வீடு வந்து சேரும் வரை ஈரம் இழந்து, கெட்டுவிடாமல், கட்டியாகாமல் இருக்க சில ரசாயனங்கள் சேர்க்கப்பட்டே நம் உணவு மேஜைக்கு வருகிறது.
‘அட… நாம அரிசியையும் புழுங்கல் அரிசி ஆக்குவதற்கு, அப்படித்தானே செய்றோம்?’ என உங்களுக்கு கேள்வி எழலாம். ஆனால், நாம் நேரடியாக நெல்லை வேகவைப்பதால் அதன் மூலம் உமியின் நற்குணங்களை அரிசிக்குள் கொண்டுவந்துவிடுகிறோம். ஆனால், ஓட்ஸ் தயாரிப்பில் நிலைமை தலைகீழ். உமி நீக்கிய ஓட்ஸ் தானியம்தான் (OATS GROATS) நேரடியாக வேகவைக்கப்படுகிறது. ஆனால், அந்தத் தொழில்நுட்பத்தில் கொடுக்கப்படும் வெப்ப அழுத்தத்தால் ஓட்ஸின் கூடுதல் புரதமும், கூடவே ஒட்டியிருக்கும் பீட்டா டி குளுக்கானும் அப்படியே இருக்குமா… சிதையுமா என்பது யாருக்கும் தெரியாது. தெரிந்தாலும் பெரிதாகப் பேச மாட்டார்கள். ஏனென்றால், ஓட்ஸின் இன்றைய இந்திய வணிகம் 5 மில்லியன் டாலருக்கும் அதிகம்!
இத்தனை செய்முறை சோதனைகளைத் தாண்டி  நம் தட்டில் பரிமாறப்படும் ஓட்ஸ் மூலம், ‘ஒரு வேளைக்கு 1.4 கிராம் அளவு பீட்டா டி குளுக்கான் கிடைக்கும்’ என இந்தியாவில் மிகப்பெரிய அளவில் வணிகம் செய்யும் நிறுவனம் கணக்கிட்டுள்ளது. அந்த 1.4 கிராம் அளவு பீட்டா டி குளுக்கானுக்கு இணையான பீட்டா மானானை ஒரு ஸ்பூன் வெந்தயம் மூலம் பெற முடியும். கூடுதலாக, இந்த பீட்டா மானானால், சர்க்கரைக்கு, ரத்தக்கொதிப்புக்கு, பெண்களின் மாதவிடாய்ப் பிரச்னைக்கு நிவாரணம் அளிக்கும் பக்கபலனும் உண்டு. பால் கொடுக்கும் தாய்க்குப் பாதுகாப்பும் அளிக்கும். அயல்நாட்டில் இருந்து குளிரில் விளைவித்து, அடித்து, வேகவைத்து, துவைத்து, தட்டையாக்கி, பலதும் தெளித்து வந்துசேரும் ஓட்ஸ் அவ்வளவு உசத்தி கிடையாது. இன்னுமொரு முக்கியமான விஷயம்,  ஓட்ஸை ஒருபோதும் தாமிரபரணி நதிக் கரையிலோ, காவிரி நதிக் கரையிலோ வளர்க்க முடியாது. பூட்டான் எல்லையோர இமாலயப் பகுதியில் மட்டும் கொஞ்சம் விளைவதாகச் சொல்கிறார்கள். அதனால் இப்போதைக்கு 6,000 டன் ஓட்ஸை ஆஸ்திரேலியாவில் இருந்து இறக்குமதி செய்கிறோம். நம்மிடையே இதைவிட மேலான சத்துக்கள் பொதிந்த பல சிறு தானியங்கள் இருக்க அதைவிடுத்து, இந்த வெளிநாட்டுத் தானியம் அவசியமா?
சர்க்கரை வியாதிக்காரரையும், அது எப்போது வருமோ எனப் பய வியாதியில் உள்ளவரையும் சுண்டி இழுக்கும் இன்னொரு விஷயம் உடற்பயிற்சி உபகரணங்கள். அந்த அயல்தேசத்தவர்கள் மகாபலிபுர சுற்றுலாவுக்கு வந்தவர்களா அல்லது அர்னால்டுடன் சண்டை போட்ட கும்பல் நடிகர்களா எனத் தெரியவில்லை. ஆனால், கொஞ்சம் கட்டுமஸ்தான அந்த ஆண்களும் பெண்களும் எந்த நேரமும் கயிறு, கம்பி, சைக்கிள், ஸ்கூட்டர், தட்டுமுட்டு சாமான்களோடு தொலைக்காட்சியில் கூவிக்கூவி உடற்பயிற்சி உபகரணங்களை விற்கிறார்கள். நாமும் அப்படி சிக்ஸ்பேக் எடுத்து ஷுகர் வராத இறுகிய உடம்பைப் பெறலாம் என அந்தப் பொருட்களை வாங்கினால், பர்ஸின் எடையைத்தான் கணிசமாக இழப்போம். உணர்ச்சிவசப்பட்டு அந்த உடற்பயிற்சி சாதனங்களை வாங்கி வீட்டில் ஈரத்துண்டு காயப்போடத்தான் பலரும் பயன்படுத்துகிறோம். சரியான பயிற்சியாளர் துணை இல்லாமல் அவற்றைப் பயன்படுத்துவதே முதல் ஆபத்து. தவறான இயக்கங்கள் சுளுக்கு முதல் முதுகுத்தண்டு தட்டு விலகல் வரை சிக்கல் உண்டாக்கலாம்! 
அதேபோல் யோகா! மூச்சுப் பயிற்சியின் முழுமையோ, தத்துவப் புரிதலோ எதுவும் இல்லாமல், பளிச் குர்தா, பழைய தாடி வைத்துக்கொண்டு உடலை மட்டும் வளைத்து, ‘இம்யூனிட்டி 10-வது கிளாஸில் வரும்; 20-ம் கிளாஸில் ஷுகர் குறையும். ஞானம் கடைசி கிளாஸில் கண்டிப்பாக வந்துடும்’ என நடத்தப்படும் யோகா வகுப்புகளுக்குச் சென்று கூடுதலாக டென்ஷனை ஏற்றிக்கொள்கிறது ஒரு கூட்டம். நடைப் பயிற்சி, சரியான புரிதலுடன்கூடிய யோகாசன மூச்சுப் பயிற்சி இரண்டும்தான் சர்க்கரை நோயைத் தடுக்கும் அல்லது தாமதிக்கவைக்கும் என்பது ஆராய்ச்சி மற்றும் அனுபவம் கற்றுத்தந்த பாடம்!
சர்க்கரை நோய் உருவாக்கியுள்ள பயத்தில் சந்தையில் குபுகுபுவென ஏக விஷயங்கள் குவிந்துகொண்டிருக்கின்றன. சர்க்கரை வியாதிக்கு என சிறப்புச் சாப்பாடு, சிறப்புக் குளிர்பானம், செருப்பு, பனியன், சட்டை என ஆரம்பித்து, ஷுகர் மருத்துவமனை, ஷுகர் இன்ஷூரன்ஸ், ஷுகர் மளிகைக் கடை, ஷுகர் துணிக் கடை, ஷுகர் சாமியார் வரை பல வியாபாரங்கள் கொடிகட்டிப் பறக்கின்றன. இவை ஒவ்வொன்றையும் வாங்கிக் குவிப்பதால், பணம் குறையும்; ஷுகர் குறையாது. சர்க்கரை நோய் வராமல் இருக்க, வந்த சர்க்கரை எப்போதும் கட்டுப்பாட்டிலேயே இருக்கத் தேவை, நோயைப் பற்றிய தெளிவும் தொடர்ச்சியான, முழுமையான, சந்தோஷமான மெனக்கெடல்களும் மட்டுமே!
- நலம் பரவும்…

சர்க்கரை நோய் வராமல் தடுக்கும் உணவு முறைகள்!
* குழந்தைப் பருவத்திலேயே வெள்ளைச் சர்க்கரை, வெள்ளை மைதாவில் செய்த பரோட்டா, நூடுல்ஸ் போன்றவை தவிர்க்கப்பட வேண்டும்.
* கருப்பட்டி காபி, தேன் கலந்த தேநீர் பருகலாம். பழச்சாறுகளில் சர்க்கரை, பழ சாலட்களில் கூடுதல் இனிப்பு சேர்ப்பது கூடாது.
* கோவைக்காய், பாகற்காய், வெந்தயம், வெங்காயம், முருங்கைக் கீரை, அகத்திக் கீரை ஆகியவை உணவுகளில் சிறுவயது முதலே அடிக்கடி சேர்க்கப்பட வேண்டும்.
* கட்டித் தயிர் சாதம், உருளைக்கிழங்குப் பொரியல், பால்பொருட்கள் கலந்த ஐஸ்க்ரீம், மில்க் ஷேக், மில்க் சாக்லேட்… இவற்றை குழந்தைப் பருவத்தில் அடிக்கடி கொடுப்பது எதிர்காலத்தில் சர்க்கரை நோயை வரவழைக்கும்.
* பழங்களில் மாம்பழம், சப்போட்டா, பலா, சீத்தா, காவன்டிஸ் வாழை இவற்றை சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலையில் உள்ளவர்கள் (impaired glucose tolerance level) தவிர்ப்பது நலம்.

அடிப்படை உடற்பயிற்சிகள்!
* தினசரி 45 நிமிடங்களுக்கு வேகநடை, தொடர்ந்து 15 நிமிடங்களுக்கு பிராணாயாமப் பயிற்சி, அதன் பின் 20 நிமிடங்களுக்கு ஆசனங்கள், 15 நிமிடங்களுக்கு மனப் பரபரப்பை நீக்கும் தியானப் பயிற்சி ஆகியவை மிக அவசியம்.
* நீச்சல் பயிற்சி, உடற்பயிற்சி மையங்களில் பயிற்சியாளர் கற்றுக்கொடுக்கும் உபகரணப் பயிற்சிகள், களரிப் பயிற்சி, சீனத்தின் டாய்ச்சி நடனம்… இவை சர்க்கரை நோயைத் தள்ளிப்போடும்.

நலம் 360’ – 24

டுப்பின் சுற்றளவு அதிகமாக அதிகமாக, வாழ்நாளின் நீளம் குறையும் என்பது நமக்குத் தெரியும். ஆனால், கடந்த ஆண்டு உலகம் எங்கும் நிகழ்ந்த மரணங்களில் அதிகம், உடல் எடை அதிகரித்து ஏற்பட்ட மாரடைப்பினால்தான் என்பது நம்மில் பலருக்குத் தெரியாது. மாரடைப்பின் பின்னணியில் அதிகம் இருப்பது சர்க்கரை நோயும் ரத்தக் கொதிப்பும்தான். உடல் எடை அதிகரிப்பதால் மட்டுமே பெரும்பாலும் இந்த இரண்டு நோய்களும் வருகின்றன. உலகில் 65 சதவிகித மக்கள் வாழும் நாடுகளில், ஊட்டச்சத்து குறைவைக் காட்டிலும், ஊட்டி ஊட்டி வளர்த்ததால்தான் அதிக மரணங்கள் நிகழ்கின்றன.
இன்றைய சூழலில் ஐந்து வயதுக்கும் குறைவான 42 மில்லியன் குண்டுக் குழந்தைகள் நம்மிடையே இருக்கின்றனர். 1980-க்குப் பின் உலகில் குண்டர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்கு உயர்ந்துள்ளதாம்.
பெரும்பாலோர் நினைப்பதுபோல் ஏதோ எண்ணெயில் பொரித்த உணவும், அதிக இறைச்சியும் மட்டுமே உடல் எடையை உயர்த்துபவை அல்ல. அவற்றையும் தாண்டி அன்றாடம் நாம் உண்ணும் பல பொருட்களில், எடையை எகிறவைக்கும் விஷயங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் இருக்கின்றன. துரித உணவுகளில் மறைமுகமாகக் காணப்படும் சர்க்கரை, கொழுப்பு, உப்பு மூன்றுமே உடல் எடை உயர்வுக்கு மிக முக்கியக் காரணிகள்.
காதலிக்கு ‘வருடத்தின் எல்லா மாதங்களிலும் பழம் தருவதற்குப் பதிலாக பழச்சாறு’ தரும் உத்தியாகட்டும், அடித்து வேகவைத்து, துவைத்து, காயவைத்து, பட்டை தீட்டி பளபளப்பாக்கி வரும் அவல் கூட்டம் ஆகட்டும், வாய் எல்லாம் வழிந்து புறங்கையை நக்கிச் சாப்பிடும் நாகரிக சாக்லேட் ஆகட்டும், கேக் – ரொட்டி என சந்தையில் வகை வகையாகக் குவிந்திருக்கும் பண்டங்கள் ஆகட்டும்… அனைத்திலும் சர்க்கரை, உப்பு, கொழுப்பு பெருவாரியாக ஒளிந்திருக்கின்றன. இவை அனைத்தும், உடல் எடையை அதிகரிக்க வைக்கும் உத்தம வில்லன்கள்.
இவற்றைத் தாண்டி ஓடி ஒளியாமல், மிகுந்த ஒய்யாரத்துடன் அனைத்து வாழ்வியல் நோய்களையும் கும்மியடித்து வரவேற்கும் ஓர் உணவு, பரோட்டா. இதை இப்போது, ‘தமிழகத்தின் தேசிய உணவு’ என்றே சொல்லலாம். ‘வேத காலத்தில் தேவர்கள், கடவுளுக்கு வேள்வியில் படைக்கும் உணவான ‘புரதோஷம்’தான் இப்போது பரோட்டா’ எனச் சிலர் கோத்துவிட்டாலும், இன்று தெருமுனை கடையில் இருந்து புறவழிச் சாலை கடை வரை ஊருக்கு ஊர், தெருவுக்குத் தெரு பெருகியுள்ள பரோட்டா கடைகளில் பசியாற, கடவுள் வந்து செல்வதாகத் தெரியவில்லை. வயிறு பசித்த கூலித் தொழிலாளிகளும், நாக்கு ருசிக்காக இளவட்டங்களும்தான் பெருவாரியாக வருகிறார்கள்.
இங்கு மட்டும்அல்ல, கேரளாவிலும் மலேசியாவிலும் மிகவும் பிரபலமான அன்றாட உணவு பரோட்டோ. இதில் வாத்துக் கறி, கோழிக்கறி, வாழைப்பழம் வரை கலந்து ‘ரொட்டி செனாய்’, ‘ரொட்டி அயம்’, ‘ரொட்டி பிசாங்’ என வகை வகையாக நள்ளிரவைத் தாண்டியும் பரோட்டாவைச் சுவைக்கிறார்கள் மலேசியத் தமிழர்கள். விளைவு… தென் கிழக்கு ஆசிய நாடுகளிலேயே அதிக உடல் எடை கொண்டவர்கள் வசிக்கும் நாடு என முதல் இடத்தைப் பிடித்திருக்கிறது மலேசியா. உடல் எடையைக் குறைக்க அந்த நாட்டின் சுகாதார அமைச்சர், சுமார் 10 ஆயிரம் ஸ்கிப்பிங் கயிறு வாங்கி பள்ளி மாணவர்களுக்குக் கொடுத்திருப்பது கூடுதல் செய்தி.
‘கோதுமையில் இருந்து பெறப்படும் மைதா நல்லதுதானே… அது எப்படிப் பிரச்னை ஆகும்?’ என நம்மை அப்பாவியாகக் கேட்கவைத்திருக்கும் வணிகத்தை, கொஞ்சம் உற்றுப் பாருங்கள். கோதுமையில் இருக்கும் தவிட்டை நீக்கி அரைத்தால், பொன் மஞ்சள் நிறத்தில் கோதுமைப் பொடி வரவேண்டும். அப்படி வராமல், வெள்ளை வெளேர் என மைதா வர, அதில் நடத்தும் உணவியல் தொழில்நுட்ப விளையாட்டுகள் நம் நலத்துடனும் நடத்தும் பயங்கர விளையாட்டுகள் என்பது நம்மில் பலருக்கும் தெரியாது.
கோதுமையை, குளோரினேட்டட் நீரில் பல அடுக்குகள் கழுவி, ஊறவைத்து, சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் தடை செய்யப்பட்ட ‘பென்சைல் பெராக்ஸைடு’ போன்ற ரசாயனங்களால் வெளுக்கவைத்து, ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், எமுல்சிஃபையர் எல்லாம் சேர்த்து சந்தைக்கு அனுப்புகிறார்கள். இப்படித் தயாரிக்கப்படும் மைதா… ரொட்டி தயாரிப்புக்குப் பயன்படும் என்றால், மேலே உப்பி உயர வேண்டும்; பரோட்டாவுக்கு என்றால் நீளவாக்கில் இழுவையாக வரவேண்டும். இந்த இரண்டு செயல்களுக்குமே அதிலுள்ள ‘குளூட்டன்’ எனும் புரதத்தின் இருவேறு பிரிவுகள் அவசியம். சந்தைக்கு இழுவை வேண்டுமா, உப்பி உயர வேண்டுமா எனத் தெரிந்துகொண்டு, அதற்கு ஏற்றாற்போல் மைதாவில் நடத்தப்படும் சடங்குகளைக் கேட்டால் நமக்குள் பதறும்.
‘ராஜஸ்தான் மாநிலத்தின் கோதுமையில் இழுவைச் சத்து நிறைந்த புரதம் இருக்கிறது. அங்கு விளைந்த கோதுமையை ஒட்டுமொத்தமாக நாம் வாங்கிக் கொள்ளலாம். மத்தியப்பிரதேசக் கோதுமையில் உப்பி உயரும் தன்மை கூடுதலாக உள்ளது. அதை நாம் வணிகப்படுத்தலாம்’ என, மைதா வணிகர்கள் போட்டாபோட்டிபோடுவது உலகம் அறியாத உண்மை.
சாதாரணமாக 20-30 நாட்களுக்குள் சிதைந்துபோகக்கூடிய மைதா மாவு, சுமார் மூன்று முதல் ஐந்து மாதங்கள் வரையில் அப்படியே இருப்பதற்கு ஆன்டி-ஆக்ஸிடன்ட்களாகச் சேர்க்கப்படும் மலிவான ரசாயனங்கள் இன்னும் நம்மைக் கொத்திப்போடும் அபாயங்கள். வெளுக்க, இழுக்க, உப்ப, மென்மையாக்க, நீடித்திருக்க சேர்க்கப்படும் பலவிதமான ரசாயனக் குளியலில், நம் உடலில் இன்சுலினைச் சுரக்கவைக்கும் கணையத்தின் பீட்டா செல்களைச் சிதைக்கும் ‘அலாக்ஸான்’ உருவாவதுதான் உச்சக்கட்ட வேதனை. உடல்எடை அதிகரிப்பையும், ரத்தத்தில் சர்க்கரை உயர்வையும் நேரடியாகத் தரும் இந்த வஸ்துவைப் பிய்த்துப் போட்டுச் சாப்பிட்டு, ‘மறுபடியும் முதலில் இருந்து வெச்சுக்குவோமா?’ என நம்மில் பலரும் பரோட்டா சூரியாகத் திரிவது சொ.செ.சூ!
பரோட்டாவுக்கான மைதா மாவு மாதிரி, இப்படிப்பட்ட மிகப் பிரபலமான ரொட்டிகளும் வெகுமென்மையாக இருக்கக் காரணம், கோதுமையால் அல்ல. அதற்கான மாவு தயாரிக்கும் மில்லில் இருந்து, பளபளப்பான அந்த உணவகத்தின் செஃப் வரை அதில் தெரிந்தும் தெரியாமலும் சேர்க்கும் ரசாயனங்கள்தான். ரொட்டியைப் படைத்த மேற்கத்திய நாடுகளோ, ‘கோதுமையைத் துவம்சம் பண்ணக் கூடாது; அதில் தவிட்டோடு உள்ள 74 சதவிகித மாவைப் பயன்படுத்த வேண்டும்’ என சட்டம் இயற்றியிருக்க, நம் ஊர் சந்தையோ 57 முதல் 63 சதவிகிதம் வெள்ளை வெளேர், தவிடு இல்லாத மைதாவை ‘மிகத் தரமான மைதா’ எனக் கொட்டிக் குவிக்கிறது.
குழந்தையின் உடல் எடை உயர்வில், உணவு உண்ணும் கலாசாரம் சிதைந்ததும் மிக முக்கியக் காரணம். ‘கார்ட்டூன் பார்க்கும்போது வாயில் அப்பிவிடுவேனாக்கும்’ என ஆரம்பிக்கும் சோறு ஊட்டல், பின்னாளில் பெரும்பாலான குழந்தைகள் தொலைக்காட்சி முன் அமர்ந்து, எதைச் சாப்பிடுகிறோம் என்பதுகூடத் தெரியாமல் சாப்பிடுகின்றன.
‘நொறுங்கத் தின்றால் நூறு வயது’ என்பதை மனதில்கொண்டு, ஆற-அமர நொறுக்கி, உமிழ்நீரில் ஜீரணத்தைத் தொடங்கிச் சாப்பிடும் பழக்கம், உடல் எடையை உயர்த்தாது. அதேபோல், செல்போனில் பேசிக்கொண்டே சாப்பிடுவது, நின்று கொண்டு, நடந்துகொண்டு சாப்பிடுவது என இல்லாமல், தரையில் சம்மணம் இட்டுச் சாப்பிடுவோருக்கு எடையும் தொப்பையும் வரவே வராது.
‘ குழந்தை எல்லாத்துலயும் நம்பர் ஒன் மார்க் வாங்கியிருக்கா…’ என அக்கறைகாட்டும் பெற்றோரில் பலர், குழந்தை தன் உயரத்துக்கு ஏற்ற சரியான உடல் எடையுடன் இருக்கிறதா… எனப் பார்ப்பது இல்லை. குழந்தைப் பருவத்தில் அவனது / அவளது எடை உயர்வு மட்டும்தான், பின்னாளில் அவர்களை வதைக்கும் பல நலப் பிரச்னைகளுக்கும் முக்கியக் காரணம். பெண் குழந்தைகளில் உடல் எடைகூடிய நபர்களில் பாதிப் பேருக்குமேல், சினைப்பை நீர்க்கட்டியுடன் கூடிய மாதவிடாய் தொந்தரவு வருகிறது. அவர்களுக்குத்தான் பின்னாளில் கர்ப்ப காலத்து சர்க்கரை நோய், பின் நிரந்தர சர்க்கரை நோய், மாதவிடாய் முடியும் சமயம் மார்பகப் புற்றுநோய்க்கான வாய்ப்புகள் அதிகம். அதே சமயம் குண்டான ஆண் குழந்தைக்கு, இளம் வயதிலேயே சர்க்கரை நோய், விந்தணுக்கள் எண்ணிக்கைக் குறைவு, மாரடைப்பு, புற்றுநோய் என வரும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.
‘ஆற்றுக்குள் இருந்து அரோகரா என்றாலும் சோற்றுக்குள்தான் சொக்கநாதன்’ என வளைத்து அடிக்கும் வாழ்வியலை நெடுங்காலமாக வைத்திருந்தவர்கள் நாம். பற்றாக்குறைக்கு, சொகுசு கூடிப்போய் உடல் உழைப்பு ஜிம்மில் மட்டும் நடத்தப்படுகிறது. தாராளமயமாக்கலில் உலகின் மொத்தக் குப்பை உணவுகளும் நம் தெருமுனையில் தாராளமாக அலங்கரிக்கப்பட்டுப் பரிமாறப்படுகின்றன. கொஞ்சம் உஷாராக இல்லை என்றால், ‘கொள்ளுத் தாத்தா, பூட்டனை’ நாம் எப்படிப் பார்த்ததே இல்லையோ, அப்படி இப்போதைய குழந்தைகள் ‘தாத்தா/பாட்டியை’ போட்டோவில் மட்டுமே பார்க்கும் பயங்கரம் நிகழ்ந்துவிடும்… உஷார்!

நலம் 360’ – 25

த்தம் காட்டாமல் இன்னொரு வியாதியால் பாதிக்கப்படுவோர் பட்டியலில் முதல் இடத்தை நோக்கி முன்னேறிக்கொண்டிருக் கிறோம் நாம். ஆம்… 2025-ம் ஆண்டு ஈரல் நோயின் உலகத் தலைநகராக இந்தியா உருவெடுக்கும் என அபாய மணி அடிக்கிறார்கள் மருத்துவர்கள். துரித உணவு பாணி நவீன வாழ்வியலை வாரி அணைத்துக்கொண்டதில் இந்தியாவில் இன்றைக்கு ஐந்தில் ஒருவருக்கு ஈரல் நோய் இருக்கக்கூடும் என்கிறது புள்ளிவிவரம். உடம்பின் உள் உறுப்புகளில் மிகப் பெரியதும், இதயம் மற்றும் மூளை ஆகியவற்றைக் காட்டிலும் மிக முக்கியமானதுமான உறுப்பு… ஈரல்!
நாம் சாப்பிடும் உணவில் இருந்து சர்க்கரை, புரதம், கொழுப்பு இவற்றை ஜீரணித்துப் பிரித்து ஆள்வது, ரத்தச் சிவப்பு அணுக்களை, தட்டுக்களை உற்பத்திசெய்வது, ஹார்மோன்களின் செயல்பாட்டைச் சீராக்குவது, நச்சுக்களைக் கழிப்பது… என பல்வேறு முக்கியப் பணிகளைச் செய்வது ஈரல்தான்.
விளைவு… ‘இங்கிலீஷ்காரன்… டெய்லியும் ராத்திரி ரெண்டு கட்டிங் போடாமத் தூங்க மாட்டானாம். அதனாலதான் அவனுக்குக் கெட்ட கொலஸ்ட்ரால் குறைஞ்சிருக்காம். ஒயின்ல இருக்குற பாலிஃபீனால், இதய நோய்க்கு நல்லதாம்டா’ எனத் தவறான புரிதலோடு மதுபானக் கடைகளில் தன் ஈரலைக் கிளறிச் சிதைக்கும் ‘வருத்தப்படாத வாலிபர் கூட்டம்’ பெருத்துவிட்டது. போதாக்குறைக்கு, ‘மக்களுக்குப் புதுசு புதுசா ஏதாச்சும் ஊத்திக் குடுங்கப்பா’ என ஆராய்ந்துகொண்டிருக்கிறது மக்கள் நலம் காக்கவேண்டிய அரசாங்கம்!
இன்ஷூரன்ஸுக்காக ஸ்கேன் செய்யும்போது, ‘சார் ஈரலில் கொஞ்சம் கொழுப்பு படிஞ்சிருக்கு. அவ்வளவுதான். ஃபேட்டி லிவர் கிரேடு 1’ என முன்பு சொன்னபோதெல்லாம் யாரும் அதிகம் அலட்டிக்கொண்டது இல்லை. ஆனால் இப்போது, Non alcoholic fatty liver disease கொஞ்சம் அக்கறையுடன் பார்க்கப்பட வேண்டிய விஷயம். கண்டுகொள்ளாமல்விட்டால், கொழுப்புக்குக் கீழே உள்ள ஈரல் செல்கள் அழற்சியில் நாள்பட்ட ஈரல் நோயை விதைத்துவிடும் என்கிறது நவீன மருத்துவம். ‘நான் அதுக்கெல்லாம் பயப்பட மாட்டேன். ஏன்னா, டீ, காபிகூட குடிக்காத ‘டீடோட்லர்’!’ எனப் பெருமிதப்படுபவர்களே… நீங்களும் கொஞ்சம் உஷார். ஏனென்றால், அலுவலக வாசலில் தினமும் சூடாகச் சாப்பிட்ட பஜ்ஜி, வடையின் எண்ணெய், ஈரலில் கொழுப்பைக் குத்தவைக்கும். கூடவே, சர்க்கரை வியாதிக்காரருக்கும் கொஞ்சம் செல்லத் தொப்பை சேரும் நபருக்கும் ஈரலில் கொழுப்பு படிந்து நோய்க்கு நங்கூரமிடும்.
நம்மில் சிலர், இரும்புச்சத்து டானிக்கில் குழம்பு வைத்து, வைட்டமின் மாத்திரைகளை நறுக்கி பொரியல், கூட்டு செய்து, புரத ஊட்ட உணவைக் கரைத்து உப்பு சேர்த்து, தோசை வார்த்து பெருமிதமாகச் சாப்பிடுவதைப் பார்த்திருக்கலாம். அவர்கள் மற்றவர்களிடம் ‘ஏங்க இப்படிக் கொஞ்சம்கூட கவலைப்படாம இருக்கீங்க? என்னை பாருங்க, எவ்ளோ ஜாக்கிரதையா இவ்ளோ சப்ளிமென்ட்ஸ் எடுத்துக்கிறேன்’ எனப் பெருமிதம் பேசுவார்கள். ஆனால், நாம் சாப்பிடும் தேவையற்ற மருந்தாலும், ஊட்ட உணவாலும்கூட ஈரல் பல்வேறு நோய்களுக்கு நேந்துவிடப்படும்.
இதையெல்லாம் தாண்டி, பகலில் கடிக்கும் கொசு, இரவில் கடிக்கும் வைரஸ், நாளெல்லாம் கடிக்கும் டென்ஷன் என ஈரலுக்கு ஏகப்பட்ட எதிரிகள். அப்போதெல்லாம் திருநெல்வேலி பேருந்து நிலையத்தில் காலை 4 மணிக்கு பாபநாச மலையின் காரையாறு எனும் மலையூருக்கு தனியார் பஸ் ஒன்று கிளம்பும். ‘ஏல… காமாலை பஸ் கிளம்பப்போகுது, ஓடியா… ஓடியா…’ எனக் குரல் கிளம்பவும், வலது பக்க மேல்வயிறைப் பிடித்துக்கொண்டே ஓடிவந்து ஏறும் கூட்டத்தால் நிரம்பி வழியும் அந்தப் பேருந்து. ‘பஸ்ஸா அல்லது ஆம்புலன்ஸா?’ எனப் பல நேரம் சந்தேகத்தைக் கிளப்பும் அளவுக்கு ஈரல் நோயாளிகள் நிரம்பிச் செல்வார்கள். அதனாலேயே அந்தப் பேருந்துக்கு ‘மஞ்சக்காமாலை பஸ்’ என்று பெயர். அவ்வளவு கூட்டமும், அந்த மலைக்கிராமத்தில் சித்த வைத்தியப் பாட்டி ஒருத்தி காலை நேரத்தில் மட்டும் வழங்கும் காமாலை மருந்துக்காகத்தான் செல்லும். இப்படி தமிழகத்தின் பல பகுதிகளில் காமாலைக்கு முலிகை மருந்துகள் வழங்கும் மரபுகள் நிறைய உண்டு.
ஹெப்படிடிஸ்-ஏ பிரிவைச் சேர்ந்த காமாலைக்கு கீழாநெல்லிக் கீரையும் கரிசலாங்கண்ணிக் கீரையும் இன்னும் சில அனுபவ மருந்துகளும் சேர்த்து வழங்கப்படும். இந்தக் காமாலைக் கிருமியைக் கண்டு அவ்வளவாகக் கலவரப்பட வேண்டியது இல்லை. நான்கைந்து நாட்களில் முற்றிலும் சரியாக்கிவிடலாம். ஆனால், கிருமி நீக்கம் செய்யப்படாத ஊசியில், சவரக் கத்தியில், சில நேரங்களில் டயாலிசிஸ் சிகிச்சை, ரத்தம் ஏற்றல், கிருமி உள்ளோருடனான உடலுறவில்… என நுழையும் ஹெப்படிடிஸ்-பி அதிக அக்கறையுடன் எதிர்கொள்ளப்பட வேண்டிய ஒன்று. அலட்சியமாக இருக்கையில் ஈரல் சுருக்க நோயான ‘சிர்ரோஸிஸ்’ வந்துவிடும் ஆபத்தும் மிகுந்தது. ‘விசாவுக்கு ரத்தம் சோதிக்கும்போதுதான் இந்த சனியன் ரத்தத்தில் இருந்தது தெரிஞ்சுச்சு. எப்படி வந்துச்சுனே தெரியலை. ஆபத்தா சார்?’ எனப் பதறும் இளைஞர் கூட்டம், இன்று உலகில் 30 கோடிக்கும் மேல். ‘அப்படியானவர்களுக்கு கீழாநெல்லிக் கீரை பலன் அளிக்கும்’ என சித்த மருத்துவம் சொன்னதை, தன் 25 ஆண்டு கால ஆய்வில் கண்டறிந்து, காப்புரிமைப் பெற்ற சென்னைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் தியாகராஜன், கீழாநெல்லியை உலகெங்கும் உற்றுப்பார்க்கச் செய்திருக்கிறார்.
வைரஸால் வரும் ஈரல் நோய் ஒரு பக்கம் இருக்கட்டும். இன்று இந்தியாவில் இருக்கும் ஒரு கோடிக்கு மேற்பட்ட ஈரல் சிர்ரோஸிஸ் நோயாளிகளில் சரிபாதிக்கு மேல், குடி போதையில் இந்தச் சங்கடத்தை இழுத்து வந்தவர்கள். ‘அளவோடுதான் குடிக்கிறேன்; சோஷியல் ட்ரிங்கர் சார். மார்க்கெட்டிங்கில் இது தவிர்க்கவே முடியாது’ என சப்பைக் கட்டு கட்டும் நபர்களுக்கு ஒன்று தெரியாது. குடி, உங்களையும் உங்கள் குடியையும் மட்டும் அல்ல… குலத்தையே அழிக்கும் என்ற உண்மை. அப்பா குடிக்கும் நபர் என்றால் அவரைப் பாதிக்காத ஈரல் சுருக்கம் அவரது பேரனுக்கு வரக்கூடும். ஒருவேளை அவன் குடி பக்கமே போகாதவனாக இருந்தாலும்கூட, என்றைக்கோ ஒரு காய்ச்சலுக்கு அவன் போட்ட சரியான அளவிலான பாராசிட்டமால் எனும் சாதாரண மருந்துகூட அவன் ஈரலைப் பதம்பார்த்து நோய்வாய்ப்படுத்தும் என்கிறது எப்பிஜெனிட்டிக்ஸ் அறிவியல். போதாக்குறைக்கு, குடிக்கத் தூண்டும் போதையும் தந்தை வழியாக மகனுக்கு மரபணுரீதியாகவே கடத்தப்படுமாம்.
ஒருபக்கம் மது இப்படி ஈரலைக் கெடுக்கிறது என்றால், சமத்துப்பிள்ளையாக வேஷம் கட்டிவந்து அட்டூழியம் செய்யும் வஸ்துக்கள், டிரான்ஸ் ஃபேட், ஹை ஃப்ரக்ட்டோஸ் கார்ன் சிரப் சேர்த்துச் செய்யப்பட்டு தினம் தினம் புதுசு புதுசாக உணவுச்சந்தையில் நுழையும் குக்கீஸ், சிப்ஸ், குளிர்பானங்கள் ஆகியவை. இவை ஈரலின் செல்களைப் பாதித்து, கெட்ட கொழுப்பு எனும் Low density lipoprotein-ஐ ரத்தத்தில் உருவாக்கும். Trans fat free என்ற லேபிளைச் சுமந்துகொண்டுவரும் பொருளுக்கு வர்த்தகரீதியான அர்த்தம் கெட்ட கொழுப்பு இல்லவே இல்லை என்பது அல்ல. ஒரு சர்விங்கில் 0.2 கிராமுக்குக் குறைவாக இருப்பது என்பதுதான் பொருள். நீங்கள் எப்போதும் சாப்பாட்டை ஒரு கட்டு கட்டும் நபராக இருந்தால் துளித்துளியாகக் கொழுப்பு கூடிவந்து, கும்மியடிக்கும் என்பதில் துளியும் ஐயம் இல்லை.
ஈரலில் கொழுப்பு படியத் தொடங்குகிறது என்றால், நிச்சயம் எண்ணெயில் தனிக் கவனம் வேண்டும். அளவு குறைவாகவும், செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய், அரிசித் தவிட்டு எண்ணெய், கடலெண்ணெய் என வகைக்கு ஒன்றாக அரை லிட்டர் மட்டும் வாங்கி, காலை சமையலில் ஒரு வகை எண்ணெய், மதியம் வேறு வகை எண்ணெய் எனச் சமைக்கலாம் என்கிறார்கள் உணவியலாளர்கள்.
ஈரலைப் பாதுகாக்க நிறைய எளிய மூலிகைகளை, உணவுகளை நம் மூத்தோர் அடையாளம் காட்டியுள்ளனர். சாதாரண கீழாநெல்லி, கரிசாலை, நிலவேம்பு, சீரகம், ஆடு தொடா, நொச்சி முதல் கடுகுரோகிணி, வல்லாதகி, மலை வேம்பு என இந்தப் பட்டியல் பெரிது. உலகின் மிகப் பெரிய மருந்து நிறுவனங்கள் எல்லாம் அலசி ஆராயும் இந்த உணவையும் மருந்தையும் நாம் என்னவோ இன்னும் அதிகம் உற்றுப்பார்க்கவில்லை. கீழாநெல்லிக் கீரையையும் கரிசலாங்கண்ணிக் கீரையையும் மஞ்சக்காமாலை வந்தால்தான் கண்ணில் காட்ட வேண்டும் என்பது இல்லை. உண்மையில், அவை நேரடியாக வைரஸோடு மோதலில் ஜெயிக்கிறதா… ஈரல் செல்களுக்குப் பாதுகாப்பு தந்து வைரஸில் இருந்து நம்மைப் பாதுகாக்கிறதா என இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. பித்தநீரைச் சுரக்கும் ஈரல், பித்தம் வசிக்கும் ஓர் உடல் அங்கமாகத்தான் ஒட்டுமொத்தப் பாரம்பரியப் புரிதலும் உள்ளது. அந்த வகையில் காலை நேரத்தில் பல் துலக்கும்போது குமட்டிக்கொண்டு வரும் லேசான பச்சை நிற வாந்தி, பசி மந்தமாக இருக்கும் பொழுதுகள், ஏதேனும் சிகிச்சைக்குப் பின்னரான பசிமந்தம், அஜீரணம் எல்லாவற்றிலும் பித்தத்தால் ஈரல் நோய்வாய்ப்பட்டிருக்கலாம். அவர்களுக்கு எல்லாம், கீழாநெல்லியை வேருடன் பிடுங்கி, நன்கு கழுவி, மோருடன் கொத்துமல்லி சட்னிபோல் அரைத்து, காலையில் கொடுக்கலாம். அதேபோல் கரிசலாங்கண்ணிக் கீரையையும் பிடுங்கி, நிழலில் உலர்த்தி, பொடி செய்து அரை டீ ஸ்பூன் அளவு உணவுக்கு முன் சாப்பிடலாம். கரிசாலையை ஈரல் நோய்க்கான கற்ப மருந்தாகவே பாரம்பர்ய மருந்துகள் பார்க்கின்றன. ‘குருதி தனில் உள்ள கிருமியும் போகுங்காணே…’ என போகர் சித்தர் பேசிய கீரை, கரிசாலை. வள்ளலாரும் சுட்டிக்காட்டிய ஈரலுக்கான மூலிகை என்பது, இன்று நாம் களைச்செடி எனப் பிடுங்கி எறியும் கரிசலாங்கண்ணியைத்தான்!
அதேபோல் மஞ்சள், ஈரலை சாதாரண அழற்சியில் இருந்து ஈரல் புற்று தாக்குதல் வரை காக்கும் மூலிகை. குறிப்பாக, ஆல்கஹாலினால் ஏற்படும் ஈரல் பாதிப்புகளைப் போக்குவதில் மஞ்சளைப்போல பயன் தரும் உணவு வெந்தயம். ‘சார்… அப்படின்னா மதுவுக்கு ‘சைட் டிஷ்ஷா’ கொஞ்சம் நீங்க சொன்ன கீரையில் மஞ்சள், வெந்தயம், சீரகம் எல்லாம் போட்டு சாப்பிடலாமா?’ எனக் கேட்காதீர்கள். வெறிநாயைக் கடிக்கவிட்டுவிட்டு, ரேபீஸ் மருந்தைக் கலந்து குளிப்பதுபோலத்தான் அது.
இன்றைய சூழலில், ஈரல் மாற்று சிகிச்சைக்கு மிகக் குறைந்தபட்சம் 30 முதல் 40 லட்சம் ரூபாய் செலவாகும் என்கிறார்கள். அதற்கும் உடல் உறுப்பு தானம் கிடைக்க வேண்டும். அல்லது உடன் பிறந்தவர் தன் ஈரலை கொஞ்சம் வெட்டிக் கொடுக்க வேண்டும். அடுத்த முறை மதுக் கடைக்குச் செல்கையில், துரித உணவை விழுங்கி மகிழ்கையில், நமக்கு அதெல்லாம் சாத்தியமா என்பதைக் கொஞ்சம் யோசித்துக் கொள்ளுங்கள்!
- நலம் பரவும்…

வீட்டிலேயே செய்யலாம் லிவர் டானிக்!
டுதொடா செடியின் ஆறு அல்லது ஏழு இலைகள் எடுத்துக்கொண்டு, இரண்டு குவளைத் தண்ணீர்விட்டு, கால் குவளையாக வற்றும் வரை காய்ச்சி வடிகட்டி இலைக்கஷாயம் எடுத்துக் கொள்ளுங்கள். இந்த ஆடுதொடா இலைக் கஷாயத்தில் பாகு வெல்லம் சேர்த்து ஜீரா காய்ச்சுவதுபோல் பாகுபதத்தில் காய்ச்சிக் கொள்ளுங்கள். இதோடு கால் பங்கு தேன் கலந்து புட்டியில் அடைத்துவைத்துக்கொள்ளுங்கள். இந்த சிரப் ஈரலுக்கு வலுகொடுத்து ரத்தத் தட்டுகளை உயர்த்தும். நோய் எதிர்ப்பாற்றல் குறைந்த நிலையிலோ, நாள்பட்ட ஈரல் நோய்களிலோ புற்றுநோய் சிகிச்சையின்போதோ, மாதவிடாய் சமய அதிக ரத்தப்போக்கின்போதோ ரத்தத் தட்டுகள் குறையும். அப்போது இந்த ஆடுதொடா டானிக் ரத்தத் தட்டுகளை உயர்த்தி உடலுக்குக் கேடயமாக இருக்கும்.
எந்தவித ரசாயனக் கலப்பும் இல்லாமல் செய்வதால் குறைந்த நாட்களுக்குத் தேவையான அளவுக்கு மட்டும் தயாரித்துவைத்துக்கொள்ளவும். இந்த ஆடு தொடா சிரப், சளி மற்றும் இருமலையும்  போக்குவது கூடுதல் பயன்!

ஈரலின் எதிரிகள்!
மது: மதுவில் 6 சதவித ஆல்கஹாலாக இருந்தாலும் சரி, 60 சதவித ஆல்கஹாலாக இருந்தாலும் சரி… அது ஓர் உயிர்க்கொல்லியே! வேறுபாடு, கடைசிக் காரியத்தின் நாள் எப்போது என்பது மட்டுமே!
புகை: புகை, ஈரலை நேரடியாகப் பாதிக்கும் மிக மோசமான எதிரி.
வலி நிவாரணிகள்: தேவை இல்லாமல் அதிக அளவில் பயன்படுத்தும் வலி நிவாரணிகள் அனைத்தும் ஈரலைப் பலவீனப்படுத்தும்.
ஆபத்தான உணவுகள்:  கெட்ட கொழுப்பினால் செய்யப்படும் நொறுக்குத் தீனிகள் – சிப்ஸ், குக்கீஸ், பிஸ்கட். குளிர்பானங்கள் மற்றும் இனிப்புக் கூழ்பண்டங்களில் (ஐஸ்கிரீம் போல) சேர்க்கப்படும் சோளச் சர்க்கரை சிரப். (ஹை ஃப்ரக்ட்டோஸ் கார்ன் சிரப்)
இதுபோக, மன அழுத்தம், மலேரியா, மஞ்சள் காமாலை, டெங்கு, டைஃபாய்டு முதலிய நோய்களால் நுண்ணுயிர் தொற்றுக் காலங்களிலும் ஈரல் பாதிக்கப்படலாம்!

No comments: