Feb 2, 2015

நலம் 360’ – 26,27,28,29,30,31,32 final

நலம் 360’ – 26

கோணலாக நின்று, கொஞ்சம் கோக்குமாக்காகப் புன்னகை புரிந்து, க்ளிக் செய்தால், செல்ஃபிக்களைக் குவிக்கும் 12 மெகாபிக்ஸல் செல்போன் கேமராவைவிட நம் கண்கள் அதிவிசாலமானது. ‘மனித கண்கள், 576 மெகாபிக்ஸல் திறன் கொண்டவை’ என்கிறது ஒரு கணக்கு. அதனால்தானோ என்னவோ மனதுக்குப் பிடித்தவரைக் கண்ணோடு கண்கொண்டு நோக்கும்போது, மனதுக்குள் வயலின் இசைப்பதும், ‘பத்தாப்பு ஃபெயில்’ பேர்வழிகூட எதுகை மோனையோடு கவிதை எழுதுவதும் நடக்கிறது. ‘கண்களால் அல்ல, மூளையால்தான் நாம் பார்க்கிறோம்’ என அறிவியல் சொன்னாலும், பார்த்த விழி பார்த்தவுடன் மூளை சிதறி, ‘குணா’ கமலாக உலாத்துவதற்குக் காரணம் கண்களின் விந்தைதான்!
சிக்கிமுக்கிக் கல் கையில் சிக்கும் வரை, மனிதன் சூரிய ஒளியில் மட்டுமே தன் வாழ்வைக் கட்டமைத்தான். கற்களின் உரசலில் உமிழ்ந்த வெளிச்சம், நாளடைவில் கார்பனும் பிற இழைகளும் உமிழும் வெளிச்சம் வரை வளர்ந்ததில், இரவு என்பது கடிகாரத்துக்கு மட்டும் என்றானது. அதுவும் சமீபத்திய விதவிதமான எல்.இ.டி வெளிச்சங்கள் ஒளிரும் துரித வாழ்வியலில், கண்கள் கணிசமான பாதிப்புகளை எதிர்கொள்கின்றன. எல்.இ.டி ஸ்க்ரீன் உடைய செல்போன் ஆகட்டும், டேப்லெட் கணினிகள் ஆகட்டும் ஒரு பல்பை நேரடியாகப் பார்த்துக்கொண்டிருப்பது போன்றதுதான் என நம்மில் பலருக்குப் புரிவது இல்லை.
‘என் புள்ளை அவனே பாஸ்வேர்டு போட்டுக்குவான்’, ‘குட்டிப் பாப்பா எப்படித்தான் கரெக்டா கேம்ஸைத் தட்டித் தட்டி விளையாடுறான்னே தெரியலை?’ என, கனிந்த ‘ஆப்பிளை’ச் சுவைக்க வேண்டிய குழந்தைகள் ‘மினி கணினி’ ஆப்பிளில் விளையாடுவதை மெச்சும் பெற்றோருக்கு ஓர் எச்சரிக்கை… குழந்தையின் கார்னியாவையும் ரெட்டினாவையும் எல்.இ.டி திரை தொடர்ச்சியாக உமிழும் ஒளிக்கற்றை பாதிக்கலாம். குறிப்பாக, அதன் ஊதா நிறம் உண்டாக்கும் அபாயம் குறித்த சர்ச்சை விவாதங்கள் உலகெங்கும் வலுத்துவருகின்றன. மாட்ரிட் பல்கலைக்கழக ஆய்வு, ‘எல்.இ.டி ஸ்க்ரீன் வெளிச்சத்தால் கண்கள் பாதிப்படைவது உறுதி’ எனக் கூச்சலிட… இன்னொரு பக்கம், ‘அதெல்லாம் சும்மா… எல்.இ.டி ரொம்பப் பாதுகாப்பானது’ என சமாளிப்பிகேஷன் தட்டுகிறார்கள், டேப்லெட் தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனங்களின் கண் மருத்துவர்கள். அவர்கள் பொய் சொன்னால் சாமி கண்களைக் குத்துமா என சத்தியமாகத் தெரியாது. ஆனால், 400 நானோ மீட்டருக்குக் குறைவான பாண்ட் அலகுடன் உமிழப்படும் கதிர்களால் கண்களின் கார்னியாவும் ரெட்டினாவும் வெப்பமாகி கண்களைக் குத்தும் என்ற எச்சரிக்கை மட்டும் உண்மை!
‘ஆமா… இப்படி என்ன செஞ்சாலும் பாதிப்புனு பயமுறுத்திட்டே இருங்க. கம்ப்யூட்டர் முன்னாடிதானே எனக்கு வேலை. நான் வேற என்னதான் பண்றது?’ எனக் கேட்போருக்கு சில உபாயங்கள். 30 நிமிடங்களுக்கு ஒருமுறை கணினித் திரையைவிட்டு பார்வையை விலக்கி தூரத்தில் உள்ள பொருட்களைப் பாருங்கள். கணினித் திரையை உற்று நோக்கிக் கொண்டிருக்கும்போது, கண்கள் இமைக்க மறக்கிறது. ஆகவே, 30 நிமிட இடைவெளியில் திரையைவிட்டு பார்வையை விலக்கி இமைப் பட்டாம்பூச்சிகளை சிறகடிக்க வைப்பது நலம். ஏனெனில், கண்களின் விழிப்படலங்கள் எப்போதும் கொஞ்சம் ஈரமாக இருக்க வேண்டும். கணினி வேலை அந்த விழிப்படலங்களை உலர்த்திவிடும். அடிக்கடி கண் சிமிட்டல்களோடு வெதுவெதுப்பான ஈரத் துணிகொண்டு கண்களைத் துடைத்து, புருவங்களை மசாஜ் செய்யுங்கள்!
நாகரிகத் தொட்டில் ஆட்டலில் மூக்குத்தி, தொப்புளுக்குத் தாவியது. கையில் குத்திய பச்சை, பற்களில் பதிந்தது. மேட்சிங் பிளவுஸ் நாகரிகம் மேட்சிங் உதட்டுச் சாயம் தாண்டி இப்போது மேட்சிங் கான்டாக்ட் லென்ஸ் வரை வந்து நிற்கிறது. கண்களின் கார்னியாவுக்கு ரத்தம் மூலம் ஆக்ஸிஜன் கிடைக்காது. அதனால்தான் உயிர் பிரிந்த பிறகும் கண்கள் மரிக்காமல், இன்னொருவருக்குப் பார்வை தருகின்றன. ஆனால், ஃபேஷன் என கலர் கலராக கான்டாக்ட் லென்ஸ் அணிவது, கார்னியாவின் செல்களைக் கொஞ்சம்
கொஞ்சமாகச் சிதைத்து, பார்வைத்திறனைப் பாதிக்கும்.  பார்வைக் குறைபாட்டுக்காக ஐந்தாறு ஆண்டுகளுக்கும் மேலாக கான்டாக்ட் லென்ஸ் அணிபவருக்கு கண் எரிச்சல், வெளிச்சத்தைப் பார்க்கும்போது ஏற்படும் கண் உறுத்தல் உண்டாவது இதனால்தான். ஆக, முடிந்தவரை கான்டாக்ட் லென்ஸ் தவிர்த்து அழகோடு அறிவாளி லுக்கும் தரும் மூக்குக் கண்ணாடிகளை அணிந்து பழகுங்கள்.
‘அம்மா… போர்டுல எழுதிப் போடுறது எனக்குச் சரியாவே தெரிய மாட்டேங்குது…’ என உங்கள் பிள்ளை சொன்னால், அது கண் பிரச்னையா, கணக்குப் பிரச்னையா எனத் தெரிந்துகொள்வது மிக முக்கியம். ‘ஹாரிபாட்டர்’ படம் ஏகத்துக்கும் ஹிட்டானதில், இன்று சும்மாங்காட்டியும் முட்டைக் கண்ணாடி போட்டு முழிக்க பல குழந்தைகளுக்குக் கொள்ளை ஆசை. அப்படியான குழந்தைகளுக்கு சிறுவயது முதலே உணவில் சில சமாசாரங்களைச் சேர்த்து விழித்திறனை ஆரோக்கியமாகப் பராமரிக்க வேண்டும்.
‘போன கண்ணும் திரும்பி வருமாம் பொன்னாங்கண்ணி கீரையாலே’ என்றொரு சொலவடை உண்டு. அந்த அளவு சத்தான அந்தக் கீரையைச் சமைத்துச் சாப்பிட சங்கடப்படக் கூடாது. நிறமிச் சத்துள்ள சிவப்பு பொன்னாங்கண்ணியும் சிறப்பானதே. இந்தக் கீரையை நல்லெண்ணெயில் காய்ச்சி, தலைக்குத் தேய்த்துக் குளித்தால் உடல் சூடு குறைந்து கண் பார்வையைச் சீராக்க தேவையான பித்தத்தைச் சீர் செய்யும் என்கிறது சித்த மருத்துவம். இதில் பக்கவிளைவாக முடி போஷாக்காக வளரும். நெல்லிக்காய் பொடியை நீரில் குழைத்து, தலையில் தேய்த்துக் குளிக்கும்போது, கண்கள் குளிரும்; பார்வை துலங்கும் என்பது பாரம்பர்யப் புரிதல்.
‘மெட்ராஸ் ஐ’ பாதித்தால், அலறித் தெறித்து ஓடாமல், கீழாநெல்லிக் கீரையை மோரில் அரைத்துச் சாப்பிடுவதும் கீழாநெல்லிக் கீரையை எண்ணெயில் இட்டுக் காய்ச்சி அதை தலைக்கு வைத்துக் குளிப்பதும், ‘மெட்ராஸ் ஐ’யால் வரும் கண் எரிச்சலைக் குறைக்கும். இதை ‘மெட்ராஸ் ஐ’ பாதிக்காதவர்கள் வருமுன் காக்கும் நடவடிக்கையாகவும் மேற்கொள்ளலாம். கொத்துமல்லிக் கீரையை பச்சையாக சட்னியாக அரைத்துச் சாப்பிடுவது குழந்தைகளின் விழித்திறனை அதிகரிக்கும்.
கண்களுக்கு விட்டமின் ஏ-யின் பயனை, எல்.கே.ஜி முதலே ‘சி ஃபார் கேரட்’ என இங்கிலீஷ் துரைமார்களும் ஆசிரியர்களும் சொல்லிக்கொடுத்திருக்கிறார்கள். ஆனால், கேரட்டைவிட பல்லாயிரம் மடங்கு அதிக கரோட்டினாய்டுகள் நமது முருங்கைக் கீரையில் இருப்பதை, நம்ம ஊர் பாட்டனி வாத்தியர்கள்கூட மறந்துவிட்டார்கள். காதலிக்கு ஆசையாகக் கொடுக்கும் வடிவத்தில் இல்லாததாலும், புறவாசலில் விளைவதாலும் கொஞ்சம் மதிப்பு குறைச்சலாகப் பார்க்கப்படும் பப்பாளியும் கண்களுக்கு பல நல்ல பலன்களை அளிக்கும். மிளகு போட்ட தினைப் பொங்கல், கேரட் தூவிய தினை ரவா கிச்சடி, முருங்கைக் கீரை குழம்பு போட்ட தினைச் சோறு… ஆகியவை அத்தனை கண்ணாளருக்குமான சிறப்பு உணவுகள்.
புலால் உணவில், மீன்கள் கண்களின் நண்பர்கள். வெள்ளாட்டு மண்ணீரல், கண் நோய் பலவற்றுக்கான மிகச் சிறந்த மருந்து. கண்களின் இமைகளில் அடிக்கடி வரும் கண்கட்டிக்கு நாமக்கட்டி போடுவது, கிருமி நாசினியாக இருந்து கட்டிகளை உடைத்து சீழ் வெளியேற்ற உதவும் நெடுங்கால மருந்து.
காதலையும் கோபத்தையும் மட்டும் அல்ல, உடல் ஆரோக்கியத்தையும் காட்டும் ஒரு கருவி கண்கள். அன்றைய தமிழ் மருத்துவர்கள், எண்வகைத் தேர்வுகளான நாடி, ஸ்பரிசம், நா, நிறம், மொழி, விழி, மலம், மூத்திரம் எனும் சோதனைகளில் விழிவழி நோய் அறிதலான கண்களைப் பார்த்து நோயைக் கணித்த வித்தை பிற உலகம் அதிகம் அறியாதது. தூங்கி எழுந்ததும் கண்கள் சிவந்திருப்பது உடலின் அதிசூடு, பித்த உயர்வு ஆகியவற்றின் அடையாளம். இவர்கள் ‘ரத்த அழுத்தம் சீராக உள்ளதா?’ என சோதிப்பது அவசியம். இப்படிச் சிவந்த, சற்று மஞ்சளான கண்கள் உள்ளோருக்கு அஜீரணம், வயிற்றுப்புண் வரும் வாய்ப்புகள் அதிகம்.
கண்களின் மருத்துவ விஷயங்கள் தாண்டி கண்கள் இல்லாத உலகம் பற்றி கண்டிப்பாக நாம் படித்து அறியவேண்டிய இலக்கியம் இரண்டினைப் பற்றி, சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் சு.வெங்கடேசன் சமீபத்தில் சொன்னது நினைவுக்கு வருகிறது. வெளிச்சத்தில் பார்த்ததை இருட்டில் வரையும் மாபெரும் தமிழ் ஓவியன் மனோகர் தேவதாஸ், இருட்டில் செலவழித்த 20 ஆண்டுகளை வெளிச்சத்தில் சிலாகித்து எழுதும் தேனி சீருடையான் ஆகியோர் பற்றியே அவர் குறிப்பிட்டார். Retinitis Pigmentosa எனும் படிப்படியாகப் பார்வை இழப்பைத் தரும் கொடிய நோயில் பார்வையை இழந்துவரும்  மனோகர் தேவதாஸ், தன் இளமைக்காலத்தில் வெளிச்சத்தில் பார்த்த வண்ணங்களால் சிலாகித்தவற்றை, இன்று இருட்டில் தன் தூரிகையில் வரைகிறார். அத்தனையும் பிரமிக்கவைக்கும் சித்திரங்கள். பிறப்பு முதலே பார்வையற்றவராக வறுமைச் சூழலில் பார்வையற்றோர் பள்ளியில் படித்து வந்த தேனி சீருடையான், அறுவைசிகிச்சை மூலம் அதிர்ஷ்டவசமாக மீண்டும் பார்வைபெற்றார். தான் இருட்டில் வாழ்ந்த நாட்களை ‘நிறங்களில் உலகத்தில்’ எனும் புத்தகத்தில் மிக அற்புதமாகப் பதிவுசெய்திருக்கிறார். இவர்கள் இருவரின் கண்களும், முகத்தில் இல்லை; அகத்தில் இருக்கின்றன. மிக அழகாக, அமைதியாக, ஆழமாக..!
நாம் மரிக்கும்போது நம்மோடு மண்ணில் புதைய வேண்டியது இல்லை நம் கண்கள். நமக்குப் பின்னும் இருட்டில் இருக்கும் இன்னொருவருக்கு, உலகத்தை உற்றுப்பார்க்க வாய்ப்பு அளிப்பவை. ஆகவே, அவற்றைக் கூடுதல் அக்கறையோடு பராமரிப்போம்!
-

கண்களைக் காக்கும் நலப் பழக்கங்கள்!
அடிக்கடி தலைக்குக் குளிப்பது கண்களுக்கு மிகவும் ஆரோக்கியம் தரும். அதிலும் எண்ணெய்க் குளியல் மிக அவசியம். நம் தாத்தா பாட்டிகளின் கண்ணாடியற்ற கழுகுப் பார்வைக்கு அதுதான் காரணம். குளித்து முடித்ததும், குறைந்தது 2-3 மணி நேரம் வரை தலையில் இருக்கும்படி எண்ணெய் வைப்பது முடியை மட்டும் அல்ல, கண்களையும் பாதுகாக்கும்.

இரவு நெடுநேரம் விழித்திருப்பது, பின்னிரவிலும் போர்வைக்குள் ‘வாட்ஸ்அப்’பில் கடலை வறுப்பது கண்களைக் கெடுக்கும் உத்திரவாதமான விஷயங்கள்.

அதிக பித்தம் உண்டாக்கும் கண் எரிச்சலால் பாதிக்கப்பட்டவர்கள், நந்தியாவட்டம், தாமரை இதழ்களால் கண்களை மூடிக் கொள்வது இதம் அளிக்கும். இளநீரைக் கொண்டு கண்களைக் கழுவுவதும் கண் எரிச்சல் போக்கும். சித்த மருத்துவர்களிடம் கிடைக்கும் ‘இளநீர்க் குழம்பு’ எனும் கண்சொட்டு மருந்து கண் அயர்வுக்கும், ஒவ்வாமையால் வரும் கண் உறுத்தலுக்கும் நல்ல மருந்து.

காலை – மாலை இரு நேரங்களிலும் உள்ளங்கையை ஒன்றோடு ஒன்று நன்கு தேய்த்து உராய்வில் உருவாகும் வெம்மையை கண்களில் அழுத்திக் கொடுக்கலாம்.

இமைகளை மூடித் திறந்து, கண்களை மேலும் கீழும், பக்கவாட்டில் என உருட்டிச் செய்யும் பயிற்சியை தினமும் காலை, மாலை எனச் செய்ய வேண்டும்.

நலம் 360’ – 27

கொஞ்சம் படபடப்புடன், கட்டியணைத்த மூச்சுத்திணறல் உணர்வுடன் காதல் மட்டும்தான் வருமா என்ன? ஆஸ்துமாவும் அப்படித்தான் வரும். மார்கழிப் பனியில் இருமலும், சிம்பொனியின் தொடக்க இசை போன்ற மூச்சொலியும் கலந்து வருவது ஆஸ்துமாவின்  அடையாளம். ‘பனி விழும் மலர்வனம்’ எனச் சிலாகித்துப் பாட முடியாத அளவுக்கு, பனியும் மலர் மகரந்தமும் இம்சை கொடுக்கும் ஆஸ்துமா நோயாளிகள் இந்தியாவில் மட்டும் 10 கோடி பேர்!
மூச்சைத் திணறவைக்கும் துன்பம்போல் வலி தரும் கொடுமை வேறு இல்லை. அதுவும் ஒன்றரை வயதுக் குழந்தை அந்தத் திணறலைத் தெரிவிக்க முடியாமல், சிணுங்கியும் இருமியும், வயிற்றுப் பகுதி விலா எலும்புச் சதைகள் உள்வாங்கியும், நெஞ்சுக்கூடு மேலெழும்பியும் வதைபடும் கொடுமையை பெற்றோர் பார்க்கும்போது வரும் பயமும் கண்ணீரும்… வேதனையின் உச்சம். நெபுலைசர் இயந்திரமும், நுண்தூள் மருந்தை வேகமாக மூச்சுக் காற்றில் செலுத்தும் இன்ஹேலரும் ஸ்பேசரும் இந்த அவஸ்தையை, பயத்தை, கண்ணீரை இன்று பெருவாரியாகக் குறைத்திருக்கின் றன. ஆனால், அதுவும் எல்லோருக்குமான தீர்வு அல்ல!
ஏன் இத்தனை அவஸ்தைகள் ஆஸ்துமா நோயாளிகளுக்கு? குழந்தையை ஸ்கூல் ஆட்டோவில் ஏற்றும்போது, ‘ஸ்கேல் எடுத்துக்கிட்டியா, ஆஸ்துமா இன்ஹேலர் எடுத்துக்கிட்டியா?’ எனக் கேட்கும் நிலை ஏன் வந்தது? ‘சுளுவாய் வேலை முடிகிறது. கழிவையும் மாசையும் குவியும் குப்பைகளையும் கொட்டும் வசதியுள்ள, கேள்விகேட்காத அப்படியே கேட்டாலும் காசை விட்டு எறிந்தால் கம்மென்று இருக்கிற  நிலப்பரப்பு இதுதான்’ என இந்தியாவை அறிந்துகொண்ட பெரிய நிறுவனங்கள் பெருகியதும், வீங்கிக்கொண்டேபோகும் நகரமயமாக்கலும் இதற்கான மிக முக்கியக் காரணங்கள். கூடவே, ‘இதற்குத்தானா ஆசைப்பட்டோம்?’ என வெற்று மனதுடன் வேடிக்கை பார்ப்பதும், உள்ளுக்குள் ஓசையின்றி அன்றாடம் குமுறி அழும் மனமும், ஆஸ்துமாவின் இரைப்புத் தூண்டுதலுக்கு உளவியல் காரணங்கள். மாசு, மனம், குளிர்காற்று, குளிர்ச்சியில் மூச்சுக்குழல் சுருக்கம் தரும் மரபணுக் காரணமும் ஆஸ்துமாவை வரவேற்கின்றன.
‘தானான தூயதோர் நாசிதன்னில்
சலநோய் நீர்தான் விழுந்து தும்மலுண்டாம்
மானான மார்பு நெஞ்சடைத்து மூச்சு
வலுவாகி பாம்பு போல் சீறலாகும்…
ஏனான இருமலோடு கோழை கம்மல்
இரைப்பாகு மந்தாரகாசமாமே’
- என ‘யூகி வைத்திய சிந்தாமணி’ எனும் சித்த மருத்துவ நூல், மப்பும் மந்தாரமுமான மாலைப் பொழுதில், குளிர்காற்றுடன் கொண்டுவந்து சேர்க்கும் குணங்களாக ஆஸ்துமாவை என்றோ வரையறுத்து வைத்திருக்கிறது. மாசும் மன அழுத்தமும் இல்லாத காலத்தில், இந்தக் குளிர்காற்றில் குத்தவைத்து முன்வளைந்து இருமி இழுத்து துன்புறுவதைக் குறைக்க-தடுக்க, ஆசுவாசப்படுத்த, மாத்திரையும் லேகியமும் உறிஞ்சு மருந்துகளும் மட்டும் போதாது. நிறைய உணவும் செயலும் மனமும் செதுக்கிச் சீராக்கப்பட வேண்டும்.
மிளகைத் தெரிந்த பலருக்கு, அதன் பெரியப்பாவான திப்பிலியைத் தெரியாது. சுக்கு, மிளகு, திப்பிலி எனும் மும்மருந்துக் கூட்டணி, நம்மில் பலரை நெடுங்காலமாக பல வியாதிகளில் இருந்து காத்துவந்த மருத்துவப் பொருட்கள். அதுவும் திப்பிலி, காலம்தொட்டு ஆஸ்துமாவுக்கு மிகச் சிறப்பான தடுப்பு மருந்து. கோழைச் சளியை விலக்கி, மூச்சின் இறுக்கத்தை இது இலகுவாக்கும்.
‘மாமனுக்கு மாமனென மற்றவனுக்கு மற்றவனாக
காமனெனுந் திப்பிலிக்குக் கை’
- என பரிபாஷையில், தேரன் சித்தன் பாடியதை விவரித்தால் திப்பிலியின் பெருமை பிடிபடும். ‘பாரதத்தில் சகுனி மாமனால் வந்த பிரச்னையை, கிருஷ்ணன் மாமா தீர்த்துவைத்ததுபோல், ஆஸ்துமா மாமன்போல் மரபாக வந்திருந்தாலும், கோழையை விரட்டி ஆஸ்துமாவை விரட்டும் திப்பிலி மாமன்’ என்பதுதான் அந்தப் பாடலின் பொருள். இரைப்பு இல்லாத நிலையிலும் இந்தப் பனிக்காலத்தில் நோய்த் தீவிரத்தைத் தடுக்க, மிளகு ரசம் வைப்பது மாதிரி, திப்பிலி ரசம் வைத்து மோர்ச் சோறுக்கு முன்பு கொடுக்கலாம். கோழை அதிகமாக இருக்கையில் தனியாக சூப் மாதிரி இதைக் கொடுத்தால் சளியை வெளியேற்றும். பொதுவாக காற்று மாசுக்களால் மூச்சுக்குழல் இறுகுவதை திப்பிலி சத்துக்கள் தடுப்பதுடன், திடீர் கோழைப்பெருக்கம் நடப்பதையும் நிறுத்தும் என ‘International Journal of Pharmacology’ முதலான பல மருத்துவ சஞ்சிகைகள் உறுதிபடுத்தியுள்ளன.
அஜீரணமும், மலச்சிக்கலும் ஆஸ்துமாவின் பக்க வாத்தியங்கள். இந்த இரண்டையும் விலக்குவது ஆஸ்துமா சிகிச்சைக்கு அதிமுக்கியம். குழந்தைகளுக்கு மாந்தத்தின் நீட்சியாக இந்த இரைப்பு வரும் வாய்ப்பு அதிகம் என்பதால்தான், பனிக்காலத்தில் குழந்தைகளுக்கு ஆஸ்துமா வராமல் தடுக்க வேலிப்பருத்தி எண்ணெய் அல்லது அதன் சாற்றை வீட்டில் கொடுப்பார்கள். இது மலத்தை இலகுவாகக் கழியச்செய்து, வயிற்று உப்புசத்தைப் போக்கி, இரைப்பை இயக்கத்தைக் கட்டுப்படுத்தும். இது வீட்டுத் தோட்டத்தில் வளரும் எளிய மூலிகைச் செடி. வளர்ந்த பிள்ளைகளுக்கு, கடுக்காய் இளம்பிஞ்சை செக்கில் ஆட்டிய விளக்கெண்ணெயில் வதக்கி, பின் அதைப் பொடி செய்துவைத்துக்கொண்டு, இரவில் படுக்கும் முன்னர் ஒரு டேபிள் ஸ்பூன் சாப்பிடக் கொடுக்கலாம். சளி பிடிக்கும் மழைக்காலத்தில் பருப்பு கடைசலில் விளக்கெண்ணெய் சேர்ப்பதுகூட செரிமனத்தைத் தூண்டும்.
ஆஸ்துமாக்காரர் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டிய ஒன்று பால். ஆனால், மிகவும் உடல் வலுவற்ற நிலையில் பிற உணவுகள் ஏற்காத நிலையில் ‘கண்டிப்பாகத் தேவை’ என மருத்துவர் பரிந்துரைத்தால் மட்டுமே பாலில் மிளகும் மஞ்சள் தூளும் பனங்கற்கண்டும் சேர்த்து, மாலை 6 மணிக்கு முன்னதாக அருந்தலாம். பால் சேர்க்காத தேநீர் உடனடி நிவாரணம் தரும் ஆஸ்துமா மருந்து. பல நூறு ஆண்டுகளாக நவீன மருத்துவத்தில் இதற்குப் பயனாகும் தியோஃபிலின் மருந்து, இந்தத் தேயிலையில் இருந்து எடுக்கப்பட்டதுதான். ஆஸ்துமாவில் சளி மூச்சுக்குழலில் ஒட்டிக்கொண்டு வரக் கஷ்டப்பட்டு கோழையாக இருப்பதற்கு ஆடாதொடா இலைச்சாறு பெரும்பயன் அளிக்கும். கரிசாலைக் கீரையையும், முசுமுசுக்கையையும் தேயிலைக்குப் பதிலாகப் போட்டு தேநீர் அருந்துவதும், கொத்துமல்லி இலைக்குப் பதிலாக தூதுவளைக் கீரையை ரசத்தில் போட்டுச் சாப்பிடுவதையும், பஜ்ஜியில் வாழைக்காய்க்குப் பதிலாக கற்பூரவல்லி இலையைப் போட்டு கொஞ்சமாக பஜ்ஜி சாப்பிடுவதும் மழைக்கால சம்பிரதாயமாக மாறுவது மூச்சு இரைப்பைத் தடுக்கும் உணவு உத்திகள்.
மார்கழி மாதத்தில் பெருமாள் பாதத்தை சேவித்துத் தலைவணங்குவதுபோல், வாரம் ஒருமுறை நெபுலைசரில் மூச்சைக் காட்டி சேவித்துவரும் குழந்தைகள் கூட்டம் இப்போது நகரில் அதிகம். இன்னும் சிலரோ, ‘யார் வாயில் வைத்த குழாயோ… எதுக்கு ஆஸ்பத்திரிக்கு போயிட்டு? அதான் 1,000 ரூபாய்க்குக் கிடைக்குதே’ என வீட்டில் வாங்கிவைத்து உறிவதும், மருந்து நிறுவனத்தின் ஆசியுடன் அதிகரிக்கிறது. முதலில் இந்த மோட்டார் மூச்சுதான் சிறப்பு எனப் பேசியவர்கள், இப்போது ‘இல்லை… இல்லை… நாமே உறிஞ்சும் இன்ஹேலர்தான் சிறப்பு’ எனப் பேசத் தொடங்கியுள்ளனர். இன்ஹேலர் இல்லாத காலத்தில் இதே பணியை நம் மரபு வேறு மாதிரி கற்றுத் தந்தது. அதற்கு பேர் ‘ஆவி பிடித்தல்’ அல்லது ‘வேது பிடித்தல்’. ஆஸ்துமா, மூக்கடைப்பு, நீர்கோத்த மரபு உள்ள வளர்ந்த குழந்தைகளை மழை, பனிக் காலங்களில் ஆவி பிடிக்கவைப்பது இரைப்பு வராது தடுக்க உதவும். இதற்கு நொச்சித்தழை, யூகலிப்ட்டஸ் தழை, மஞ்சள் தூள், சித்த ஆயுர்வேத மருந்தகங்களில் கிடைக்கும் மூலிகை எண்ணெய்களை அவர்கள் ஆலோசனைப்படி பயன்படுத்துதல் நல்லது.
‘அதான் இழுக்குதே… அவனைப் போயி ஓடச் சொல்றீங்க, எக்ஸர்சைஸ் பண்ணச் சொல்றீங்க’ என பி.டி கிளாஸில், மருத்துவச் சான்றிதழைக் கொடுத்துவிட்டு மரத்தடியில் கவிதை எழுதப்போய்விடும் மாணவக் கூட்டம், பள்ளியில் எப்போதும் கொஞ்சம் உண்டு. உடற்பயிற்சியால் ஏற்படும் ஆஸ்துமா வகையில் மட்டும்தான் அந்த அதிகப் பயிற்சி தவிர்க்கப்படலாமே ஒழிய, எல்லா ஆஸ்துமாக்காரரை விளையாடவிடாமல் தடுப்பது கூடாது. அப்படியானவர்களுக்கு நுரையீரலின் செயல்படும் திறனை அதிகரிக்க உடற்பயிற்சி பெரிதும் உதவும். குறிப்பாக யோகாசனப் பிராணாயமத்தில் கபாலபாதி எனும் எளிய, மிக சக்திவாய்ந்த நாடிசுத்தி மூச்சுப்பயிற்சி, நுரையீரலின் திறனை (Force Vital Capacity) ஏகத்துக்கும் உயர்த்தும் என்கிறது நவீன அறிவியல்.
கருத்தரித்திருக்கும்போது ஆஸ்துமா தொல்லை வந்தால் மருந்து ‘எடுக்கலாமா… வேண்டாமா?’ என்ற குழப்பம், பல கர்ப்பிணிப் பெண்களுக்கு வரும். மருத்துவர் ஆலோசனைப்படி கண்டிப்பாக சரியான மருந்தை எடுத்துக்கொள்ள வேண்டும். மருந்து எடுக்கத் தவறி, அதீத இரைப்புடன் அவஸ்தைப்படுவது மட்டுமே குழந்தையின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும்.
வீசிங் பிரச்னை இருக்கும்போது ‘அந்த’ விஷயம் அவசியமா… ஆபத்தா? என்ற கோக்குமாக்கு சிந்தனையும் சிலருக்கு உண்டு. பித்த உயர்வைத் தரும் அளவான முத்தமும் அதன் பின்னான மெல்லிய காமமும் இரைப்புக்கு இதம் அளிக்கும் விஷயமே. சிலருக்கு உடற்பயிற்சியால் வரும் இரைப்பும் மனஅழுத்த உச்சத்தில் வரும் இரைப்பும், உடலுறவின்போதும் வரும் சாத்தியம் உண்டு. அப்படியானவர்கள் மட்டும் ஆஸ்துமாவுக்கான தடுப்பு சிகிச்சையை எடுத்துக்கொள்வது அவசியம்.
புளித்த உணவுகள், புளித்த பழங்களான எலுமிச்சை, கமலா ஆரஞ்சு, நுரையீரலில் நீர்த்துவக் கபத்தை உண்டாக்கும் கிர்ணி, சீதா, தர்பூசணியை ஆரம்பத்தில் இருந்தே தவிர்ப்பது நலம். யோகப் பயிற்சி மற்றும் மருத்துவம் மூலம் நல்ல நிலைக்கு மீண்டு வரும்போது இளநீர், வாழை, மாதுளை எனப் படிப்படியாக எல்லா பழங்களுக்கும் பழகலாம். அப்படியே பழத் துண்டுகள் சாப்பிட்டாலும் மிளகு தூவி சாப்பிடுவது நல்லது.
சே குவேரா, சார்லஸ் டிக்கின்ஸ்,  அமெரிக்க அதிபர் தியோடர் ரூஸ்வெல்ட் முதல் நம்ம ஊர் ராஜாஜி வரை ஆஸ்துமாவை ஓரங்கட்டி உயர்ந்த ஆளுமைகள் உலகில் ஏராளம். ஆக, ஆஸ்துமாவுக்குத் தேவையெல்லாம் கூடுதல் அக்கறையும் கொஞ்சம் மருந்தும் மட்டுமே… அச்சம் இல்லை!

ஆஸ்துமா வருமுன் காக்க…
ரும் முன் காப்பது எப்போதும் ஆஸ்துமாவில் மிக அவசியம். கூடுதல் இரைப்பு உள்ளபோது, உடனடியாக மூச்சிரைப்பைக் குறைக்க நெபுலைசரும் இன்ஹேலரும் நிச்சயம் பயன் அளிக்கும். ஆனால், இரைப்பின் வீச்சு திடீரென அதிகரிக்காமல் தடுக்க பாரம்பர்யம்தான் பாதுகாப்பு தரும். திரிகடுகம் எனும் சுக்கு, மிளகு, திப்பிலி கூட்டணியும், தசமூலம் எனும் ஓரிலை, மூவிலை, சிறுவழுதுணை, கண்டங்கத்தரி, சிறு நெருஞ்சில், குமிழ், முன்னை, பாதிரி, பையாணி, வில்வம் என்ற மூலிகைகளும் என இரண்டு மூலிகைக் கூட்டணிகளும் சித்த ஆயுர்வேத மருந்துகளின் பெரும் நம்பிக்கை நட்சத்திரங்கள். ஆஸ்துமா உள்ளோர் வீட்டில் இந்தக் கலவைதான் காபித் தூளாக அல்லது தேநீர்த் தூளாக இருக்க வேண்டும். ஆடாதொடா இலையும் இதில் சேர்த்துக்கொள்ளலாம். இந்தக் கஷாயப் பொடியில் 2 ஸ்பூன் பொடிக்கு 2 குவளை நீர்விட்டு அரை குவளை கஷாயமாக வற்றவைத்து, வடிகட்டி, இளஞ்சூட்டோடு மழைக் காலத்தில் தேநீர்போல் பருகினால், இரைப்பின் அட்டகாசம் சலேரெனக் குறையும்!

எது ஆஸ்துமா?
‘மின்னுவதெல்லாம் பொன்னல்ல’ என்பதுபோல இழுப்பது எல்லாம் ஆஸ்துமா அல்ல. இதய, சிறுநீரக நோயில்கூட இரைப்பு வரும். புகைப் பழக்கத்தால் வரும் COPD நோய், ஆஸ்துமா போலவே 40 வயதுக்காரரை வதைக்கும். ஆஸ்துமா எனும் போர்வைக்குள் மறைந்திருக்கும் காசநோய் குறித்த விழிப்பும் நமக்கு கட்டாயம் வேண்டும். இந்தியாவில் இளங்காசம் எனும் கவனிக்கப்படாத PRIMARY COMPLEX TUBERCULOSIS  நிறையவே உண்டு. ஆக, ‘ஆஸ்துமா’ என்ற சந்தேகம் எழுந்தாலே, அது எந்தவகை ஆஸ்துமா… அல்லது ஆஸ்துமாவோடு இணைந்திருக்கக் கூடிய பிற நோய்கள் என்னவென  ஊர்ஜிதப்படுத்தி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்!

நலம் 360’ – 28

மாமன் வாரான்னு கோழியடிச்சு குழம்புவைக்கப்போறீங்களாக்கும்’ – இந்த விசாரிப்பு, சொல்லாமல் சொல்லும் செய்திகள் ஏராளம். இன்றைக்கும் நாட்டுக்கோழிக் குழம்பும், வெள்ளாட்டு நெஞ்செலும்பு சூப்பும் சமைத்து விருந்து அளிப்பதுதான், விருந்தோம்பலின் உச்சம். ஆனால், சமீப நாட்களாக ‘ஓவர் கொலஸ்ட்ரால்,’ ‘பக்கத்து மாநிலத்துல பறவைக் காய்ச்சல்’ என்றெல்லாம் காரணங்கள் சொல்லி, ‘சிக்கன் வேண்டாம், பொடி தோசை போதும்’ என ஊருக்குள் பல புத்தபிக்குகள் உருவாகிவிட்டனர். இதனால் உள்ளூர்க் கோழிகள் எல்லாம் உற்சாகமாக பரோலில் திரிகின்றன. ‘நான்வெஜ் சுத்தம், சுகாதாரம் கிடையாது. அதுக்குத்தான் அசைவமே சாப்பிடாதேங்கிறேன். சமத்தா… பருப்பு, நெய் மட்டும் சாப்பிட்டா பத்தாதா? அதுல இல்லாத புரோட்டீனா?’ என, சந்தில் சிந்துபாடுவோர் எண்ணிக்கையும் அதிகம். இதன் காரணமாக ‘அசைவம் நல்லதா… கெட்டதா?’ என்ற விவாதம் பல தளங்களில் பட்டையைக் கிளப்புகிறது. அந்த விவாதத்துக்குள் போவதற்கு முன் மிக முக்கியமாக ஒரு விஷயத்தை மனதில் பதிந்துகொள்ளுங்கள்… இப்போதைய சுத்த சைவர்களின் பாட்டன், முப்பாட்டன், அவருக்கும் முந்தைய தலைமுறையினர் எல்லாம் காடைக் கறி, கவுதாரி ரத்தம், சுறாப் புட்டு சாப்பிட்டுத்தான் பரம்பரையை நீட்சியடையவைத்தனர். சமணம் சொன்ன ‘புலால் உண்ணாமை’ என்ற ஒன்லைன் பிடித்துக்கொண்டனர் பிற்கால சைவர்கள். இது செவிவழிச் செய்தி அல்ல; ஆதாரமான வரலாற்று உண்மை!
பண்டைய தமிழரும் சரி… தமிழ்ச் சித்தர்களில் பலரும் சரி, புலால் உணவை விருந்தாக, மருந்தாகப் போற்றியிருக்கின்றனர். ஆடு, ஆமை, மூஞ்சுறு, முதலை வரை நாம் யூகிக்க முடியாத உயிரினங்களை எல்லாவற்றையும் பிடித்து நம் அப்பத்தாக்கள் ‘லெக் பீஸ், ஹெட் பீஸ்’ போட்டு வெளுத்துக்கட்டியிருக்கின்றனர். அசைவ உணவு என்றாலே அது லாப்ஸ்டர், சிக்கன் மட்டுமே என இன்றைய பெர்முடாஸ் தலைமுறை நினைக்கிறது. ஆனால், புலால் உணவின் புரட்டப்படாத பக்கங்கள் நம் வரலாற்றில் ஏராளம். ‘ஈசலைக்கூட சீனாக்காரன் விட்டுவைக்க மாட்டான். வறுத்துத் தின்றுவான்’ என நம்மவர்கள் கேலி கிண்டலாகச் சொல்வார்கள். ஆனால், ‘செம்புற்று ஈயலின் இன் அலைப் புளித்து மெந்தினை யாணர்த்து நந்துக் கொல்லோ’ என்ற சங்க இலக்கியப் பாடல் வரிகள் நம் முன்னோர்கள் ‘ஈசல் ஊத்தப்பம்’ சாப்பிட்டார்கள் என்பதை உணர்த்துகிறது என அவர்களுக்குத் தெரியாது!
மருந்துகள் தராத ஊட்டம் சில புலால் விருந்து தரும். காடை இறைச்சி எனும் QUAIL FLESH அப்படியானது. ‘கட்டில் கிடப்பார்க்கு காட்டில் படும்காடை’ என, காடை இறைச்சியின் அருமை பெருமைகளை அடுக்குகிறது சித்த மருத்துவப் பாடல் ஒன்று. ஆஸ்துமா, அல்சர் போன்ற நோய்களைப் போக்குவதுடன் வற்றலாக சோகை பிடித்திருக்கும் நபர் காடைச்சோறு சாப்பிட்டால், கட்டழகன் ஆவான் என்கிறது நம் பண்டைய தமிழ் நூல்கள். ‘கால் ஆடு, அரை முயல், முக்கால் உடும்பு, முழு காடை’ என, ஒரு பிரபல சொலவடை காடையின் பெருமையைச் சிலாகிக்கிறது. அதாவது ஒரு காடை என்பது, ஆட்டு இறைச்சி சத்தின் கால் பங்கும் முயல் இறைச்சியில் அரைப் பங்கும், உடும்பில் முக்கால் பங்கும் கொண்டதாம். மிகக் குறைவான கொலஸ்ட்ராலும் கோழியைவிடக் கூடுதல் உயிர்ச்சத்துப் பயனும் (micro nutrients) காடைக்கு உண்டாம். காடை முட்டைக்கு, கோழி முட்டையைவிட மூன்று முதல் நான்கு மடங்கு சத்து அதிகம். மூளைக்கு அவசியமான choline சத்தில் தொடங்கி, விட்டமின் பி1, பி12 என அத்தனை சத்திலும் கோழியை விஞ்சுமாம் காடை.
‘வாட்… காடை?’ என அலர்ஜி ரியாக்ஷன் காட்ட வேண்டாம். ஜப்பானும் சீனாவும் உயர் புலால் உணவாக உயர்த்திப்பிடித்த காடை, இப்போது பிரேசில் முதலான தென் அமெரிக்க நாடுகள் பலவற்றிலும் மிகப் பிரபலம். அதனால் இன்னும் எத்தனை நாட்கள் காடை, பிராய்லரில் சிக்காமல் தப்பித்திருக்கும் என சத்தியமாகத் தெரியாது. அதுவரை காடையின் வாடை அறியாமல் இருக்காதீர்கள். அது அசைவப் பிரியர்கள் செய்யும் தப்போ தப்பு!
வெள்ளாடும் வரையாடும்தான் நம் முன்னோர்களால் ‘உச்’ கொட்டி சாப்பிட்டவை. மூணாறு பக்கம் செங்குத்தான வழுக்குப்பாறையில் நிதானமாக ஏறி விளையாடும் வரையாடு, இப்போது அருகிவரும் உயிரினம். அதனால், அந்தப் பக்கம் போக வேண்டாம். வனப் பாதுகாப்பு போலீஸ் உங்களைப் பிடிக்கும். ‘உள்ளாடும் நோயெல்லாம் ஓட வைக்கும்’ எனப் பாடப்பட்ட வெள்ளாட்டுப் புலால், ஹலால் பிரியாணி நமக்குப் போதும். பிற உணவுகளை மருந்துக்குப் பத்தியமாக ஒதுக்கிவைக்கவேண்டிய நோய் தருணங்களிலும்கூட, சாப்பிடக்கூடிய உணவாக வெள்ளாட்டு இறைச்சியைத்தான் குறிப்பிட்டிருக்கின்றனர். கொழுப்பால் உடம்பில் பிரச்னை இல்லாத அத்தனை பேருக்கும், உடல் மெலிந்து வருந்துவோருக்கும் வெள்ளாட்டு உணவு சரிவிகிதமாகச் சத்து அளிக்கும் உணவு. குறிப்பாக, விட்டமின் பி12, அதிகப் புரதம், இரும்புச்சத்து என அத்தனையும் தரும் இந்த இறைச்சி. வெள்ளாட்டு ஈரல், இரும்புச்சத்து குறைவாக உள்ளோருக்கு அத்தியாவசியம். இரும்புச்சத்தை உட்கிரகிக்கத் தேவையான ஃபோலிக் அமிலமும், பி12 உயிர்ச்சத்தும் வெள்ளாட்டு ஈரலில்தான், பிற எந்த உணவைக் காட்டிலும் மிக அதிகம். சைவ உணவு வகைகளில் பி12 கிடையவே கிடையாது.
புலால் உணவுக் கூட்டத்தில் எந்தப் பஞ்சாயத்தும் இல்லாத சமத்துப் பிள்ளைகள் மீன் வகைகள்தான். நம் உடல் தானே உற்பத்தி செய்துகொள்ள முடியாத அமினோ அமிலங்கள் சிலவற்றை ‘ரெடி டு ஈட்’ எனத் தருவது மீன்கள் மட்டும்தான். ஏகப்பட்ட புரதங்களோடு கூடவே அயோடின் முதலான தாது கனிமங்களையும் சேர்த்துத் தரும் தண்ணீர் தேவதைகள் மீன்கள். தசைக்கு புரதம், எலும்புக்கு கால்சியம், மூளைக்கு ஒமேகா-3, ரத்தத்துக்கு இரும்பு, இதயத்துக்கு சோடியம், பொட்டாசியம் என உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் ஊட்டச்சத்து டானிக் தருவது மீன்கள் மட்டுமே. நீர் தேங்கி நிற்கும் குளம், கிணறு முதலான நீர்நிலை மீன்களைவிட, நீர் ஓடிக்கொண்டே இருக்கும் ஆறு, கடலில் உலாத்தும் மீன்களைத்தான் பழந்தமிழ் இலக்கியங்கள் பந்திக்குப் பரிந்துரைக்கின்றன. ஏரி மீன் மட்டும் இதில் விதிவிலக்கு. அது நீரிழிவுக்கும் நல்லது. சுறாப் புட்டு, பிரசவித்தத் தாய்க்கு பால் ஊறச் செய்யும், விரால் மீனின் தலைக் கல், கண்களில் விழும் பூவை நீக்கும், பேராரல் மீன் வயிற்றைக் கட்டும், குறவை மீன் மூட்டுவலி போக்கும் இயல்பு நிரம்பியது என்கிறது சித்த மருத்துவம். ஆற்று மீன்களில் விராலையும் கடல் மீன்களில் வஞ்சிரத்தையும் சிறப்பாகச் சொல்கின்றன பழந்தமிழ் இலக்கியங்கள்.
100 கிராம் மீனில் 22 சதவிகிதப் புரதம் உள்ள மீன்கள் வஞ்சிரமும் சுறாவும்தான். தரையில் இருந்து ஒரு சாண் உயரத்தில் இருந்தால்தான் கீழாநெல்லிக்கு ஈரல் தேற்றும் பயன் உண்டு என்பதுபோல, அரை முதல் முக்கால் மீட்டர் நீளத்துக்கு வளர்ந்த வஞ்சிரம் மீனில்தான் சுவையும் சத்தும் அதிகம் என்கிறது மீன் வளர்ச்சித் துறை அறிவிப்பு. சைவப் பட்சிகள் மீனின் நல்ல சத்துக்களை எடுத்துக்கொள்ள, மீன் எண்ணெய் மாத்திரைகளையாவது சாப்பிட வேண்டும். கண் நோயில் இருந்து புற்றுநோய் வரை தடுக்கும் அந்த எண்ணெய், நெடுநாளாக வதைக்கும் ருமட்டாய்டு மூட்டு வலி, திரும்பத் திரும்ப வரும் சிறுநீரகக் கற்கள் நோய்க்கும்கூட நல்லது.
புலால் உணவில் பல பொக்கிஷங்கள் இருப்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால், அவை இன்று பொதிந்து, வந்துசேரும் பாதையைக் கொஞ்சம் உற்றுப் பார்த்தால் திடுக்கிட்டுப்போவோம். ‘ஒருவேளை கோழிக்கறி சாப்பிடுவதும் ஒரு கோர்ஸ் ஆன்டிபயாடிக் சாப்பிடுவதும் ஒன்றுதான்’ எனச் சம்மட்டி அடிபோல அடித்துச் சொல்லியிருக்கிறது ‘அறிவியல் மற்றும் சுற்றுப்புறவியல் அமைப்பின்’ ஆய்வு ஒன்று. கூவாத, பறக்காத பிராய்லர் கோழிகளின் தீவனத்தில் தினமும் சேர்க்கப்படும் ஆன்டிபயாடிக் துணுக்குகளைக் கணக்கிட்டுத்தான் அவர்கள் அப்படிச் சொன்னார்கள். ‘அட… அப்போ நாட்டுக்கோழிக்குப் போகலாம்’ என்றால், அவற்றுக்குப் பெருகிவரும் மவுசு காரணமாக, அவற்றையும் ரகசியமாக பிராய்லரில் பிரசவம் பார்த்து வளர்த்துவருகிறார்கள்.
கோழியின் கொக்கரிப்பு இப்படியென்றால், ஆட்டு இறைச்சி அநியாயங்கள் தனி அத்தியாயம்! வெகுவேகமாகக் கெட்டுப்போகக்கூடிய இயல்புடைய ஆட்டு இறைச்சியைப் பக்குவப்படுத்தக் கையாளப்படும் உப்புக்களும் கனிமங்களும் அதன் கொலஸ்ட்ராலுடன் இதயநோய் பாதிப்புகளை உண்டாக்கும் வாய்ப்பு மிக அதிகம் என்பதை மறந்துவிடவே கூடாது. உணவகத்தில் பரிமாறப்படும் சிக்கன் செட்டிநாடு, மட்டன் சுக்கா இறைச்சிகள் மைனஸ் டிகிரி குளிரில் பல காலம் பக்குவமாக உறைந்திருக்கும். அதுபோக வேறு மாநிலங்கள் அவசரமாக வீசி எறிந்த மாமிசத்தை குறைந்த விலையில் வாங்கி குளிர்சாதனப் பெட்டியில் அடுக்குவதும் இங்கே அதிகம். எப்போதும் புலால் புதுசாக இருக்க வேண்டும். இல்லையெனில், பறவைக் காய்ச்சல் வராவிட்டாலும் அமீபா கழிச்சலில் இருந்து, சிஸ்ட்டி சர்கோசிஸ் வரை பலவும் நமக்கு பில் போடும்.
‘புலாலா… மரக் கறியா?’ என சமூக, மரபுசார் நம்பிக்கைகளும், அதற்கான தரவுகளும் பல இங்கே உண்டு. ‘இதில் எது உசத்தி?’ என்ற கேள்வியும் விவாதங்களும் தேவையற்றவை. ‘யாருக்கு எது வசதி?’ என்பது மட்டுமே ஆரோக்கிய அலசலாக இருக்க வேண்டும். ஆள்காட்டி விரல் மட்டும் தடதடவென வேலை செய்யும் கணினி உழைப்பாளிகளுக்கு, ஹைதராபாத் தம் பிரியாணி தேவை இல்லாமல் இருக்கலாம். ஆனால், 20 வயதில் 40 கிலோ எடையைத் தாண்டாமல், பனிக்காற்றில் மூச்சை இழுத்துக்கொண்டு நோஞ்சானாக இருக்கும் இளைஞனுக்கு காடை சூப் அவசியம். தொற்றா நோய்க்கூட்டத்தில் மாரடைப்பும் புற்றும் அதிக உடல் எடை கொண்டோருக்குத்தான் ஜாஸ்தி. அந்த நோய்க் கூட்டத்துப் பிடியில் சிக்கிக்கொண்டு, காலை காபிக்கே கோழிக் கால் கடித்தால், ஆப்பை நாமே தேடிச் சென்று ஏறி அமர்வதற்குச் சமம்.
வஞ்சிரம் மீன் குழம்பை உறிஞ்சும் நாக்கு, வாழைத்தண்டு பச்சடிக்கும் ஏங்கும்போதுதான் நலம் நம்பிக்கையோடு முதுகில் தொற்றிக்கொள்ளும்!
                                                                                                                                                                     – நலம் பரவும்…

அசைவம்…
சில அலெர்ட் குறிப்புகள்!
H5N1 என்னும் பறவைக் காயச்சல் ஃப்ளூ வகை, பலரும் நினைப்பதுபோல் சிக்கன் கறி சாப்பிடும்போது தொற்றிக்கொள்ளும் ஒன்று அல்ல. பாதிக்கப்பட்ட கோழி, உலாவிய கோழிப் பண்ணையில் அதனோடு உறவாடிய நபர், அல்லது பறவைக் காய்ச்சலில் இருக்கும் கோழியின் இறைச்சியை உறிக்கும்போது தவறுதலாக தன் கையில் காயம் பெற்று, இரண்டு ரத்தங்களும் நேரடியாகக் கலந்தவருக்குத்தான் வைரஸ் பரவும் வாய்ப்பு உண்டு. ஏழு, எட்டு ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 400 பேரைக் கொன்ற பறவைக் காய்ச்சல்கூட கோழி கொடுத்திருக்க முடியாது. சோதனைக்கூடத்தில் மனிதன் தயாரித்த வைரஸ்தான் அந்த விபரீதத்தை விளைவித்திருக்க வேண்டும். 
கோழி அல்லது மட்டன் ஆகிய இரண்டையும் நேரடியாக, இறைச்சிக் கடையில் இருந்து புதிதாகப் பெறுவதுதான் உத்தமம். ஃப்ரீஸரில் வைத்திருப்பதில் தொற்று நுண்கிருமிகள் இருக்க வாய்ப்புகள் அதிகம். அதுவும் இறைச்சியை நன்கு கழுவுவதால்கூட அந்தக் கிருமிகள் போகாது. சமையல் கொதிநிலையில் வேகும்போதுதான் கிருமி நீங்கும்.
கோழியாக இருந்தால் குறைந்தபட்சம், 165 டிகிரியைத் தாண்டி வேகவைப்பது மிகமிக அவசியம். பிற இறைச்சிக்கு இந்த உஷ்ணநிலை இன்னும் அதிகரிக்கப்பட வேண்டும்.
தும்மல், இருமல், வியர்வை என பல வழிகளில் கிருமிகள், இறைச்சி வெட்டும் நபரிடம் இருந்து இறைச்சிக்கு வரலாம். அவை சரியாக வேகவைக்கப்படாதபோது, SALMONELLA,CLOSTIDIUM போன்ற வகை வகையான கிருமிகள் வளர வாய்ப்பு தரும். ஒவ்வொரு 20 நிமிடத்துக்கும் கிருமியின் அளவு இரட்டிப்பு ஆகும்… வெளியே மட்டும் அல்ல; வயிற்றுக்குள்ளும்கூட! அந்தக் கிருமிகள் வளர ஏதுவான 37 டிகிரி வெப்பநிலை உடலுக்குள் நிலவுவதுதான் காரணம் என்கிறார்கள். இறைச்சியை உப்புக்கண்டம் போடும் வழக்கத்தில் இந்தக் கிருமி ஒளிந்து, உள்ளே வளரும் வாய்ப்புகள் ரொம்பவே அதிகம்.

அசைவம்…
யார் தவிர்க்க வேண்டும்?
சர்க்கரை, இதயநோய், புற்றுநோய் உள்ளோருக்கு புலால் உணவு சரியான தேர்வு அல்ல!
அதிக கலோரி தரும் புலால், அதிக கொலஸ்ட்ராலையும் தருவதோடு தேவைக்கு அதிகமான புரதத்தையும் தரக்கூடும். ரத்தத்தில் சர்க்கரை அதிகரிப்பது, மாரடைப்பு அதிகமாவது, புற்றுநோய்க் கூட்டம் அதிகரிப்பது, அல்சீமர் கூடுவது பெரும்பாலும் புலால் பிரியர்களுக்குத்தான் என்கிறது மருத்துவ உலக ஆராய்ச்சிகள்.
சிவப்பு இறைச்சியில் இருந்து வரும் கார்னிடைன் (CARNITINE), இதய ரத்தக் குழாயைப் பாதிக்கும் பொருள்; மாரடைப்பை வரவழைக்கும் மிக முக்கியமான வஸ்து. சிக்கன் பர்கரில் இருக்கும் கோழித்துண்டு அலாஸ்காவில் மேய்ந்ததும், அமைந்தகரையில் வந்ததும் கலந்ததாக இருக்கலாம். இப்படியான ஹோட்டலுக்கு, விரும்பிய வடிவில் இறைச்சித் துண்டைக் கொண்டுவரவும் இன்று சந்தையில் பெருவாரியாகப் பயன்படுத்தப்படும் இறைச்சிப் பசைகள் (MEAT GLUE) எனும் TRANSGLUTAMINASE பொருளை ஒருவகை ஈஸ்ட்டில் இருந்து உருவாக்குகிறார்களாம். அதன் ஆபத்தை பற்றிய அச்சம் நாளுக்கு நாள் வலுக்கிறது. இத்தனையும் தினம் தினம் புலால் சாப்பிடும் கூட்டத்துக்குப் பொருந்துமே தவிர, மாதம் ஒருமுறை சாப்பிடும் புலால் பிரியர்களுக்குப் பொருந்தாது!

நலம் 360’ – 29

சுவமேத யாகக் குதிரையோடு குறுக்கும் நெடுக்குமாக இந்தியா முழுக்க குதிரையில் பயணித்த அரசக் குடும்பத்தினரில் எவரும், இடுப்பு வலியால் அவதிப்பட்டதாக வரலாறு இல்லை. ‘அஞ்சும் ஆறும்’ அழகாகப் பிறந்த பிறகும், ஏழாவதாக வீட்டிலேயே சுளுவாகப் பிரசவித்த என் பாட்டியை, இப்படி ஒரு வலி வாட்டி வதைத்ததாக, குடும்பத்தில் யாரும் சொன்னது இல்லை. ஆறாம் கிளாஸில் குரங்கு பெடல் போட்டு குச்சி ஐஸ் வாங்க மன்னாபுரம் விலக்குக்குச் சென்றபோது அல்லது  குளத்தாங்கரை கடையைச் சுற்றிச் சுற்றி வந்தபோது, இப்படி ஒரு வலி வந்ததாக எனக்கும் நினைவில்லை. ஆனால், இப்போது எவன் தலையைத் தடவியாவது இதை விற்றே ஆக வேண்டும் என, தினமும் இருசக்கர வாகனத்தில் சுற்றிவரும் இந்த நாட்களில் பலருக்கும் இந்த வலி வருகிறது. பட்டம் விடும் நூலின் மாஞ்சாவை இடுப்பில் தடவினால்போல ஓர் எரிச்சல். கூடவே உள்ளிருந்து திருகாணியைத் திருகுவதுபோல் வலி, இடுப்பின் பின்புறத்தில் இருந்து பிட்டம், தொடையின் பின்பகுதி வழியாக கால் பெருவிரல் வரை வலி சுண்டி இழுக்கும். கூடவே ஆங்காங்கே மரத்துப்போன உணர்வு எனத் தடாலடி வலிக் கூட்டம் மொத்தமாக அழுத்தும். ‘குய்யோ முறையோ’ எனக் குதித்துக்கொண்டு மருத்துவரிடம் போனால், ‘உங்களுக்கு லம்பர் ஸ்பாண்டிலோசிஸ் (lumbar spondylosis) வந்திருக்கிறது’ என்று சொல்வார்… ‘நிறைய நேரம் பைக்  ஓட்டுவீங்களா?’ என ஒட்டுதல் கேள்வியுடன்.
‘கருத்தரித்திருக்கிறோம்’ என ஒரு தாய் உணரும் முன்னரே, அவளின் கர்ப்பப் பைக்குள் சிசுவின் முதுகுத்தண்டு ஆரம்பகட்ட வளர்ச்சியை அடைந்திருக்கும் என்கிறது அறிவியல். கருத்தரிக்க விரும்பும் தம்பதியர், கருத்தரிக்கும் முன்பு இருந்தே ஃபோலிக் அமில மாத்திரை சாப்பிட்டால் குழந்தையின் முதுகுத்தண்டு நலமுடன் வளரும் என்கிறது நவீன மருத்துவம். எந்தக் கணத்தில் கருமுட்டை உருவாகிறது எனக் கணிக்க இயலாது. ஆனால், கருமுட்டை உருவாகும் கணத்தில், ஃபோலிக் அமிலச்சத்து சரியாக இருக்க வேண்டும். பயறு, பருப்பு வகைகள், பட்டாணி, கீரை, பீன்ஸ், ஆரஞ்சு என அனைத்திலும் ஃபோலிக் அமிலம் இருந்தாலும், ஒரு நாளுக்குத் தேவையான 400 மைக்ரோ கிராம் கிடைக்க வேண்டும் என்பதால்தான், அந்த மாத்திரையைக் கருத்தரிக்க விரும்பும் பெண் உட்கொள்ள வேண்டும் என மருத்துவ உலகம் வலியுறுத்துகிறது. தவிர்த்தால் ஸ்பைனா பைஃபிடா spina bifida) எனும் தண்டுவட நோய் வரக்கூடும். பிறந்தவுடன் குழந்தையின் முதுகு, நிமிர்ந்து நிற்கும் வலுவுடன் இருக்காது. நாளுக்குநாள் அது தன்னை உறுதிப்படுத்திக்கொண்டே வரும். அதற்கு பெற்றோரும் சில விஷயத்தைப் புரிந்து நடக்க வேண்டும். பக்கெட்டில் போட்டு குழந்தையைத் தூக்கிச் செல்வது, அல்லது அதிக நேரம் குழந்தையை ஸ்ட்ரோலரில் வைத்து நகர்த்துவது எல்லாம், பின்னாளில் அந்தக் குழந்தைக்கு இடுப்பு வலி முதலான முதுகுத்தண்டுவட நோய்கள் வர வழிவகுக்கலாம்.  தூளியில் போட்டு ஆட்டி, இடுப்பு ஒக்கலில் தூக்கிவைத்து வளர்க்கும் குழந்தைக்கு, இந்தப் பிரச்னைகள் வரும் வாய்ப்பு மிகக் குறைவு.
நிமிர்ந்து நிற்க, மனசுக்கு எவ்வளவு வலிமை வேண்டுமோ, அதே அளவுக்கு  முதுகுத்தண்டுக்கும் வேண்டும்.33 எலும்புகள் கோத்து உருவாகும் முதுகுத்தண்டு, நேராக மூங்கில் கழிபோல் இருக்காது. இடைத் தட்டுக்களால், வளைய நெளிய உதவும் விதமாக கழுத்து, முதுகு, இடுப்பு என மேல் 24 எலும்புகளுடனும், ஒன்றோடு ஒன்று இணைந்து கூபக பிட்டப் பகுதியின் கீழ், ஒன்பது எலும்புகளுடன் இருக்கும். வயோதிகத்தில் முன் கழுத்து வளைந்து கூனாக உருவாகும் கய்போசிஸ் (kyphosis), இடுப்பு கூடுதலாக உள்வாங்கி (கர்ப்பிணிப் பெண்போல) இருக்கும் லார்டோசிஸ் (lordosis), கழுத்து – முதுகுத்தண்டுவட எலும்புகள் அதன் பக்கவாட்டில் கூடுதலாக வளைந்து, இடுப்பு தோள்பட்டை சமச்சீராக இருக்காமல் வரும் ஸ்கோலியோசிஸ் (scoliosis)… போன்ற முதுகுத்தண்டுவட எலும்புப் பிரச்னைகள் சிலருக்கு பிறப்பிலேயே ஏற்படக்கூடும். குழந்தை நிமிர்ந்து நிற்கும்போது முதுகைப் பார்த்தாலே இவற்றைக் கணிக்க முடியும். குறிப்பாக, பெண் குழந்தைகளுக்கு இந்த ஸ்கோலியோசிஸ் பிரச்னை அதிகம் தாக்கும். அந்தப் பெண் பருவமடையும் சமயம் அல்லது அதற்கு முன்னர் இதற்கான சீரமைப்பு அறுவைசிகிச்சை செய்தால் மட்டுமே, பிற்காலத்தில் வலி இல்லாத முதுகும், அது முற்றிலும் வளைந்திராத வாழ்வும் கிட்டும்.
கழுத்து, முதுகு வலிகள் அனைத்துக்கும் இருசக்கர வாகனம் ஓட்டுவது மட்டுமே காரணம் எனப் பலரும் நினைப்பது தவறு. பைக் ஓட்டாத பாட்டிக்கும், சைக்கிள் ஓட்டவே சங்கடப்படும் பல ஆண்களுக்கும்கூட முதுகிலும் கழுத்திலும் வலி வருவது, இன்னபிற பல காரணங்களால். 10-14 மணி நேரம் கணினி திரையின் முன் அசையாது வேலைசெய்பவர்களுக்கு, நின்று கொண்டே பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, கணிசமான எடையைக் கைகளில் தூக்கி, தோளில் நிறுத்தி, தலையில் ஏற்றும் உழைப்பாளிகளுக்கு, பள்ளம்-மேட்டில் விழுந்து எழுந்து செல்லும், பேருந்தின் கடைசி இருக்கையிலேயே அமர்ந்து பயணிக்கும் விளிம்புநிலை மனிதர்களுக்கு, எப்போதும் நிறை மாதக் கர்ப்பிணிபோல வலம்வரும் தொப்பையர்களுக்கு, தோளுக்கும் கழுத்துக்கும் இடையே செல்போனை நிரந்தரமாக வைத்துத் திரியும் ‘பிஸி’யர்களுக்கு… எனப் பலருக்கும் கழுத்திலும் முதுகிலும் வலி அதிகரிக்கும் வாய்ப்புகள் நிச்சயம் ஏகம்!
அப்படி பல காரணங்களின் பொருட்டு, முதுகில் தட்டு லேசாக விலகியதாகக் கணிக்கப்பட்டால், சில வாழ்வியல் விஷயங்களில் பெரும் கவனம் நிச்சயம் வேண்டும்.  உணர்ச்சிவசப்பட்டு முதுகை
 முன்னால் வளைத்து, குண்டு காதலியைத் தூக்குவதோ, தரையில் விழுந்த குண்டூசியை எடுப்பதோ கூடாது. தட்டு உலர்ந்த பொழுதில் முதுகை முன் பக்கம் வளைக்கையில் தட்டு நகர, விலக சாத்தியம் மிக அதிகம். பாத்ரூமில், ஷவரில், இடுப்பு உயர ஸ்டூலின் மேல் வாளி வைத்து, நீர்நிரப்பி குனியாமல் குளிப்பது உத்தமம். குறிப்பாக, மாடியில் இருந்து இறங்கும்போது, இரண்டு இரண்டு படிகளாகத் தாவுவது கண்டிப்பாகத் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. பகவான் அல்லது பகைவன், இவர்களில் கோரிக்கையுடன் யாரைச் சேவித்தாலும் ‘அம்மா’வை வணங்குவதுபோல நெடுஞ்சாண்கிடையாக விழுந்து சேவிக்கலாமே ஒழிய, முன்வளைந்து பாதம் தொடுவது முதுகுக்கு நல்லது அல்ல. மெத் மெத் படுக்கை, படுத்தால் பாதி உடம்பு உள்ளே போகும் படுக்கை,  கல்யாணம் ஆன புதிதில் மாமனார் வாங்கிக்கொடுத்த மெத்தையை, தான் மாமனார் ஆகும் வரை பயன்படுத்தும் பழக்கங்கள் போன்றவை தட்டு விலகியோருக்கு ஏற்றது அல்ல. உறுதியான படுக்கையே சிறந்தது. அல்லது பாயில் ஜமுக்காளம் விரித்து உறங்குதல் நலம். கழுத்துக்கு இரண்டு, கால்களுக்கு ஒன்று, கால்களுக்கு இடையில் இரண்டு என தலையணையைத் துவம்சம் செய்து தூங்குவதும் இடுப்பில், கழுத்தில் வலி சேட்டை செய்ய உதவக்கூடும்.

நோய் எனும் நிலையை எட்டுவதற்கு முன், கழுத்து, முதுகுக்கான உடற்பயிற்சிகளைச் செய்துவந்தாலே போதும்… நிச்சயம் வலியைத் தடுக்கலாம். முதுகுத்தண்டை நெகிழச் செய்யும் சில உடற்பயிற்சிகளை காலைக்கடன், பல் துலக்கல், வாட்ஸ்அப் மேய்ச்சல்போல தவிர்க்க முடியாத அன்றாடப் பணியாக்க வேண்டும். முதுகு அணையும்படியான ergonomics உடைய நாற்காலியில் அமர்வதும், அப்போதும் தரையில் கால் பதியும்படியாக அமர்வதும் தட்டு விலகலைத் தவிர்க்கும். கழுத்து, முதுகு பக்கத் தசைகளுக்கான உடல் இயன்முறை சிகிச்சையுடன், தடாசனம், சூரிய வணக்க யோகம் முதலான பயிற்சிகளிலும், வலியை பல நேரங்களில் 100 சதவிகிதம் சரிசெய்ய முடியும். வயோதிகத்தில் மாதவிடாய் முடிவுக்குப் பின் இந்த வளைவு ஏற்பட, முதுகுத்தண்டுவட தட்டுக்கள் உலர்ந்துபோவது மிக முக்கியக் காரணம். இதைத் தவிர்க்க தினசரி குறைந்தபட்சம் மூன்று லிட்டர் தண்ணீர் அருந்துவது, 1,200-1,440 மில்லி கால்சியம் உணவில் இருப்பதும், போதிய அளவு விட்டமின் டி3 இருப்பதும் அவசியம். மோரில், பாலில், கீரையில் ஏராளமாக கால்சியம் கிடைக்கிறது. விட்டமின் – டி, பயறுகளில் கடல் மீனில் ஏராளமாக சூரிய ஒளியில் இருந்து பெறமுடியும்.
பிரசவத்துக்குப் பின்னர் பெண்களின் இடுப்புத் தசைகள் மீண்டும் வலுப்பெற மிகவும் முனைப்பு காட்ட வேண்டும். பிரசவத்துக்குப் பின்னர் முதுகுத்தண்டுவட இடுப்புப் பகுதி தசைக்கான பயிற்சி கொடுப்பது தொப்பை ஏற்படாமல் இருக்கவும், முதுமையில் அந்தத் தட்டுக்கள் விலகாமல் இருக்கவும் உதவும். ‘பெண் குழந்தைகள் மாதவிடாய் தொடங்கிய காலம் முதல், முதுகுத்தண்டுவடத் தசைகளுக்கான யோகாசனப் பயிற்சி கொடுப்பது இதற்குப் பெரிதும் உதவும்’ என்கிறார் யோகாசனப் பேராசிரியர் நாகரத்னா. மோரும் கம்பங்கூழும் கால்சியம் இரும்புச் சத்துக்கள் மிக அதிகம் உள்ள உணவு. இவை கழுத்து, இடுப்புப் பகுதிகள் வலுவாக இருக்க உதவுகின்றன. கீரைகளில் பிரண்டையும் முருங்கையும், கனிகளில் வாழையும் பப்பாளியும், காய்கறிகளில் வெண்டைக்காயும் தண்டுவடத் தட்டை வலுப்படுத்த உதவுபவை.
முதுகு, கழுத்து வலியைப் பொறுத்தவரை ‘வருமுன் காப்போம்’ மந்திரம் மட்டுமே பயன் அளிக்கும். கொஞ்சம் உடற்பயிற்சியும், நம் உடலை ‘பார்க்கிங்’ செய்வதில் கூடுதல் கவனம் செலுத்துவதும்தான் எப்போதுமான தீர்வு! 


வலி போக்க என்ன வழி?  
Cervical spondysis – கொஞ்சம் உறுத்தலான வருத்தமும் வலியும் தரும் நோய் இது. இந்த வலி பல நேரங்களில் கழுத்தோடு இல்லாமல், தோள்பட்டை முன்கை, விரல் வரை வரக்கூடும் என்பதால், சில நேரத்தில் வலி இடதுபக்கமாக இருக்கும்போது இதய வலியோ எனக் குழப்பம் தரும். மருத்துவரின் முறையான பரிசோதனையே, அது கழுத்து வலியா… இதய வலியா என்பதைச் சொல்லும். எக்ஸ்ரே மூலமும் நோயை உறுதிப்படுத்தலாம். வலியின் தொடக்க காலத்திலேயே சரியான உடற்பயிற்சி செய்தால் இந்த நோயைச் சீராக்க இயலும். தேர்ந்த சித்த-வர்ம மருத்துவரின் உதவியுடன் கொடுக்கப்படும் ‘தொக்கண வர்ம சிகிச்சை’ இந்த நோயை நீக்க உதவும். கழுத்து எலும்பு பகுதிகள் என்பதால், எப்போது, எந்த அளவு அழுத்தம், எந்தத் தைல சிகிச்சை என்ற அனுபவமும் படிப்பும் இந்தச் சிகிச்சைக்கு முக்கியம். பழைய தமிழ் பட வில்லனுக்குப் பின்னால் எப்போதும் இரண்டு பேர் கழுத்தைப் பிடித்துக்கொண்டே நிற்பதுபோல, சுக மசாஜ் நிரந்தர சுகவீனத்தைத் தந்துவிடும். பல தட்டுப் பிரச்னைகளுக்கு அறுவைசிகிச்சை அவசியப்படுவது இல்லை. விபத்தில் முற்றிலுமாகத் தட்டு விலகி, தண்டுவடத்தை அழுத்தி, செயல் இழப்பைத் தரும்போது, அல்லது அதிகபட்ச நரம்புப் பிரச்னைகளைத் தரும்போது, குடும்ப மருத்துவர் மிக அவசியம் எனப் பரிந்துரைத்தால் மட்டுமே அறுவைசிகிச்சை அவசியம். நொச்சி, சிற்றாமுட்டி, தழுதாழை, ஆமணக்கு எனப் பல வாத மூலிகைகள் கொண்டு தயாரிக்கப்படும் தைலங்களால், முதுகு – கழுத்துப் பகுதிகளில் கொடுக்கப்படும் ‘தொக்கணப் புற சிகிச்சை’யாலும் அதைக் கட்டுப்படுத்த முடியும். அப்படியான முறையான சிகிச்சை வழிமுறைகள் இல்லாமல், ஒகேனக்கல் அருவி வாசலில், குற்றாலம் அருவி வழியில், நட்சத்திர விடுதி ஸ்பாவில் மசாஜ் செய்வது, வீட்டில் குழந்தைகளை ஏறி மிதிக்கச் சொல்வதுபோன்ற ‘குறுக்கு வழி’கள், பின்னாளில் நிரந்தரப் பிரச்னைகளை உருவாக்கிவிடும்!

நலம் 360’ – 30

டலின் மிகப் பெரிய உறுப்பு எது? பலரால் யூகிக்க முடியாது. அந்தக் கேள்விக்குப் பதில்… தோல்! ஆம், 50-கே.ஜி தாஜ்மஹாலாக இருந்தாலும் சரி,  90-கே.ஜி தொப்பைத்  திலகமாக இருந்தாலும் சரி… அவர்கள் எடையில் 12 முதல்15 சதவிகிதம் வரை தோல்தான். பலரும் நினைப்பதுபோல் தோல், காதலுக்கு ‘மார்க்கெட்டிங்’ செய்யும் வழவழ வஸ்து மட்டும் அல்ல; ஆயிரக்கணக்கான நுண்ணுயிரிகளுக்கு வாழும் இடம் கொடுத்து, உடலுக்குத் தீங்குசெய்ய நினைக்கும் கிருமிகளை, உடலுக்குள் புகவிடாமல் செய்யும் உறுப்பு. அதேசமயம், முக்கிய மருந்துகளை மட்டும் உள்ளே செல்ல அனுமதிக்கும் புத்திசாலிப் பாதுகாப்பு அரண். உடலின் வெப்பத்தைச் சீராகவைத்திருப்பது, ‘விட்டமின் டி’-யை உருவாக்குவது, சருமத் துளைகள் மூலம் சுவாசிப்பது, யூரியா போன்ற கழிவை வெளியேற்றுவது, கொழுப்பு, நீர் முதலான பொருட்களைச் சேமித்துவைப்பது… எனப் பல வேலைகளை ‘இழுத்துக்கட்டி’ச் செய்யும் உறுப்பு அது. அதனாலேயே தோலில் வரும் நோய்களின் பட்டியல் கொஞ்சம் நீளம்.  அடுப்பங்கரைத் தாளிப்பு முதல் அணுஉலைக் கசிவு வரை உண்டாக்கும் ஒவ்வாமையில் வரும் நோய்கள் சில. பூஞ்சைகளால், பாக்டீரியாக்களால், வைரஸ்களால் வரும் நோய்கள் சில. நோய் எதிர்ப்பாற்றலின் சீரற்ற தன்மையால் வருவன பல. இன்னும் சில… மன உளைச்சலால் மட்டுமே வருகின்றன!

மற்ற வியாதிபோல், மூன்று நாட்களுக்குக் கஷாயம், நான்கு நாட்களுக்கு ஆன்டி பயாடிக், ஐந்து நாட்களுக்கு டானிக்… என எடுத்துக்கொண்டு தோல் நோய்களில் பெருவாரியைச் சடுதியில் குணப்படுத்திவிட முடியாது. சாதாரண அரையிடுக்கு பூஞ்சையால் வரும் ஒவ்வாமைக்கு க்ரீம் தேய்த்தால், மறுநாளே அரிப்பு காணாமல்போகும். ஆனால், அன்று மாலையே மறுஒளி’அரிப்பு’ தொடங்கும். துவைக்காத சாக்ஸை நாள் முழுக்க அணிந்து கழட்டியதும், கணுக்காலில் வரும் அரிப்பை சுகமாகச் சொறிந்து பின் மறந்துவிடுவோம். திடீரென ஒருநாள் காலை உற்றுப்பார்த்தால் தெரியும்… அந்த அரிப்பு, கரப்பான் எனும் ‘எக்சிமா’வாக மாறியிருக்கும். ரத்தத்தில் ஒவ்வாமை அணுக்களால் வரும் இந்த அரிப்பு முதலில் வறட்சியான அரிப்பாகவும், நாளடைவில் நிறம் மாறி நீர்த்துவம் கசிந்தும் வரும். கருத்து, தடித்து, ஏற்படும் இந்த எக்சிமா, பெரும்பாலும் கணுக்கால்கள், முழங்கால்களில்தான் குடியேறி நெடுநாட்களுக்கு வெளியேற மறுக்கும். கரப்பான் படை வறண்டிருக்கிறதா… நீர்த்துவத்தோடு இருக்கிறதா என்பதைப் பொறுத்து, அதைச் சரிசெய்யும் உணவும் மருந்தும் அமைய வேண்டும். வறண்டிருக்கும் பட்சத்தில் சற்று நீர்த்துவக் குணமுள்ள சுரை, வெள்ளைப் பூசணி முதலிய காய்கறிகள், புளிப்பில்லாத மாதுளை, வாழை, கிர்ணி, தர்பூசணி முதலான கனிகள், நல்லெண்ணெய் சேர்த்த உளுந்தங்களி, குறைவாக நெய் சேர்த்த உணவு போன்றவற்றை அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும். நீர்த்துவமாக இருக்கும்போது மேற்கூறிய உணவுகளைத் தவிர்த்து, பிற காய்கனிகளைச் சாப்பிடலாம். இரண்டு வகை கரப்பான்களுக்குமே கோதுமை, மைதா, மீன், நண்டு, இறால், கருவாடு, கம்பு, சோளம், வரகு, பாகற்காய், கத்திரிக்காய் போன்றவற்றை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். வறண்ட கரப்பானுக்கு அருகம்புல் தைலம், நீர்த்துவமுள்ள கரப்பானுக்கு, துவர்ப்புள்ள பட்டைகள் சேர்த்துக் காய்ச்சிய சித்த மருத்துவத் தைலங்கள் வழங்கப்பட வேண்டும். நோய் எதிர்ப்பாற்றலைச் சீராக்கும் சீந்தில் பால் கஷாயம், பறங்கிப்பட்டை, ஈச்வர மூலி, சிவனார் வேம்பு போன்ற மூலிகைகளில் செய்து தரப்படும் சித்த மருந்துகளை, அருகில் உள்ள சித்த மருத்துவரிடம் அணுகிப் பெற்று, தக்க ஆலோசனைப்படி பத்தியமாக சில மாதங்கள் சாப்பிட்டால் கரப்பான் மறையும். தோல், அரிப்புடன் தடித்துக் கருமையாகிய ஆரம்ப காலத்திலேயே மருத்துவர் ஆலோசனை அவசியம். அதை விடுத்து, அங்கேயும் ‘ஏழு நாட்களில் சிவப்பு அழகு’ மருத்துவம் செய்வது, நோய்க்கு நிரந்தர பட்டா போட்டுத்தரும்!
‘இது வெறும் பொடுகு’ என சில காலம் அலட்சியமாக இருந்து, தொலைக்காட்சியில் சொல்லும் எல்லா ஷாம்புகளையும் போட்டுக் களைத்து, ஆனாலும் போகாத பொடுகை கண்ணாடியில் உற்றுப்பார்க்கும்போதுதான் தெரியும்… ‘அது பொடுகு அல்ல. அதையும் தாண்டி அடையாக இருக்கிறது’ என்பது! மருத்துவரிடம் ஆலோசனை செய்யும்போது நெற்றியும் முன் முடியும் சந்திக்கும் இடத்தில் அடையாய் scalp psoriasis  எனும் தோல் செதில் நோய் வந்திருப்பது தெரியும். காதுக்கு உள்ளே, காதின் பின்புறம் முழங்கையின் பின் பகுதி, முதுகு, இடுப்பு, தண்டுவடத் தோல் பகுதி, இரு கால்கள் போன்ற பகுதிகளில் சோரியாசிஸ் வரும்.
‘இதனால்தான் வருகிறது’ எனத் தெரியாத நோய்ப்பட்டியலில் நெடுங்காலமாக இருந்துவருகிறது சோரியாசிஸ்.  நம் உடலுக்கு நோய் எதிர்ப்பாற்றல் தரும் வெள்ளையணுக்களுக்கு இடையிலான உள்நாட்டுக் குழப்பத்தில் விளையும் இந்த நோய், மன உளைச்சலில் அதிகரிக்கும் இயல்பு உடையது. பரீட்சை நேரத்தில், காதல் மறுப்பில், கரிசனக் குறைவில், பதவி உயர்வு குறித்த பரிதவிப்பில், புன்னகையைக்கூட ஸ்மைலியில் மட்டுமே தெரிவிப்போருக்கு சோரியாஸிஸ், ‘இல்லை… ஆனா, இருக்கு’ என கண்ணாமூச்சி காட்டும். இந்த நோயாலேயே ஏற்படும் கடும் மனஉளைச்சலில் நோய் இன்னும் அதிகரிக்கும் எனத் தெரியாது வருந்துவோர்தான் அதிகம். சித்த மருத்துவத் துறை கண்டறிந்த, வெட்பாலைத் தைலம் இந்த நோய்க்கான மிகச் சிறந்த மருந்து. 
சரியான புரிதல் இல்லாமல் சில ஆயிரம் ஆண்டுகள் பெரும் மன உளைச்சலை உருவாக்கியது வெண்புள்ளி நோய். ‘ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு ஒட்டுவாரொட்டியாகப் பரவாது, மரபணு மூலமாக தலைமுறைகளுக்குப் பரவாது, வேறு எந்தப் பக்க நோயையும் தராது’ எனத் தெளிவாகத் தெரிந்து, புரிந்துகொள்வதற்குள் பல நூற்றாண்டுகளைக் கடந்துவிட்டோம். நிறமிச்சத்து ஒன்றின் குறைவால் வெண்புள்ளி நோய் ஏற்படுகிறது. இது தெரியாமல், புரியாமல், சமூகத்தில் பலரை ஒதுக்கிவைக்கும் அவலம், உலகில் வேறு எங்கும் கிடையாது. லேசான புள்ளிகளைத் தொடக்க நிலையில் அறிந்தவுடன், பூவரசம் பட்டையைக் (நாம் சிறுவயதில் பீப்பி செய்து விளையாடுவோமே அந்த இலைதரும் மரத்தின் பட்டையை) கஷாயமாக்கி 60 மில்லி வரை கொடுத்தால், இந்தப் புள்ளிகள் குறையும் என்கிறது ஆராய்ச்சி. ‘நோனி’ பழத்தின் நம்மூர் ரகமான நுணா மரம் (இன்னொரு பெயர் மஞ்சணத்தி) இலையை சட்னிபோல அரைத்து, நல்லெண்ணெயில் காய்ச்சி எடுக்கப்படும் நுணா தைலத்தைத் தடவி வர இந்தப் புள்ளிகள் மறையும்.  இன்னொரு விஷயம், இந்தப் பயன் எல்லோருக்கும் கிட்டுவது இல்லை. தவிரவும் இவை முழுமையாகக் குணப்படுத்தும் என்ற ஆதாரமான முடிவு எதுவும் எட்டப்படவில்லை. ஆனால், இந்தச் சித்த மருந்துகள் எந்தவிதமான பக்கவிளைவும் தராதவை என ஆய்வுகளால் நிரூபிக்கப்பட்டவை. அருகில் உள்ள சித்த மருத்துவரின், அரசு மருத்துவரின் ஆலோசனைகளுடன் இவற்றை முயற்சிக்கலாம். கூடவே, இரும்புச்சத்துள்ள அத்தி, பேரீச்சைப் பழம் போன்றவற்றைச் சாப்பிடுவதும், எலுமிச்சை, ஆரஞ்சு, நெல்லி முதலான புளிப்புள்ள பழங்களைத் தவிர்ப்பதும் அவசியம்.
நாள்பட்ட சிகிச்சை தேவைப்படும் இதுபோன்ற தோல் நோய்களில், நோய் கொஞ்சம் ஆரம்பநிலையைத் தாண்டி அதிகரித்துவிட்டால், புள்ளிகளை முழுக்கத் துடைத்தெறிந்து குணப்படுத்தும் சாத்தியம் பல நேரங்களில் கிடையாது. ஆனால், முழுமையாகக் கட்டுக்குள் வைத்திருக்கலாம். தோல் நோயின் மேலாக வரும் நுண்கிருமித் தொற்று, மிக அதிகமான அரிப்பு, வைரஸால் வரும் அக்கி போன்றவற்றுக்கு, நவீன மருத்துவத்துடன் ஒருங்கிணைந்த சிகிச்சைதான் நல்லது. இருதுறை மருத்துவர்களும் இணைந்து இதுபோன்ற நாள்பட்ட தோல் நோய்களுக்குச் சிகிச்சை செய்வது பாதுகாப்பானது மட்டும் அல்ல, குறைந்த காலத்தில், குறைந்த செலவில், நாள்பட்ட நோய்க் கூட்டத்தின் பிடியில் இருந்து நம்மை வெளியேறவும் உதவும்.
திடீர் தாக்குதலாகத் தடதடவென அரிப்பு வந்து, அரை மணி நேரத்தில் உதடு வீங்கி, கண் சுருக்கம் வந்து, உடம்பு எங்கும் திட்டுத்திட்டாகத் தடிப்பதை ‘அர்ட்டிகேரியா’ என்கிறார்கள். அதை தமிழ் மருத்துவம் ‘காணாக்கடி’ என்கிறது. கண்களால் பார்த்திராதபோது, எதுவோ ஒன்று கடித்ததால் ஏற்படும் சருமப் பிரச்னை என்பதால், அந்தப் பெயர். நோயை எதிர்க்க எப்போதும் தயார் நிலையில் இருக்கவேண்டிய வெள்ளையணுக்கள், ‘கூடுதல் அலெர்ட்’ ஆவதால் உண்டாகும் தொல்லை இது. ‘நாட்டின் எல்லைப் பகுதிப் புதரில் பதுங்கி ஓடும் பெருச்சாளியை, ‘யாரோ… எவரோ?’ எனப் பதறி ஒரு ராணுவ வீரர் ஏ.கே-47 வைத்துத் தடதடவெனச் சுட, ‘ஆஹா… எதிரி வந்துட்டான். அட்டாக்’ என மொத்த பட்டாலியனும் துப்பாக்கிச் சூட்டைத் தொடங்கும் நிகழ்வோடு காணாக்கடி நோயை ஒப்பிடலாம். ரத்தத்தில் உள்ள எதிர்ப்பு சக்தி அணுக்கள், அதிகப்பிரசங்கியாக தன் சகாக்களிடமே தாக்குதல் நடத்த, உடம்பு தடித்து வீங்குகிறது. எதுவுமே செய்யாவிட்டாலும், இரண்டு மணி நேரத்தில், ‘இப்படி ஒன்று இங்கே வந்ததா?’ எனத் தெரியாதபடி தோல் பழைய நிலைக்குத் திரும்பும். ஆனால், அதற்குள் நம் நகங்கள் அந்தப் பிரதேசத்தில் ஏற்படுத்திய காயத்தில் தடயங்கள் நிலைத்துவிடும். சில நேரங்களில் இந்த அர்ட்டிகேரியா மூச்சுத்திண்றல், சிறுநீரகச் செயலிழப்பு வரைகூட கொண்டு சென்றுவிடும். அதனால், இந்த நோய்க்கு சாதுரியமான சிகிச்சை அவசியம். வெள்ளையணுக்களைத் ‘தட்டி’வைத்தோ, ‘கொட்டி’ ஒழுங்காக வேலைசெய்யப் பணிக்கவோ, சரியான நவீன மருத்துவச் சிகிச்சைகளும் சித்த மருத்துவச் சிகிச்சையும் உண்டு. 1 கைப்பிடி அருகம்புல், 2 வெற்றிலைகள், 4 மிளகுகள் சேர்த்து, கஷாயமாக்கி காலையில் சாப்பிடுவதும், மாலையில் சீந்தில் பொடியைச் சாப்பிடுவதும் ‘காணாக்கடி’யைக் காணாமல்போகச் செய்யும் எளிய வழிமுறைகள்.
தோலின் பணியும் பயனும் அறியாது, அதில் மேற்கத்திய முலாம் பூசி (அழகூட்டி என்ற பெயரில்) அதில் நாம் நடத்தும் வன்முறைகள், தோலையும் தாண்டி உட்சென்று தொல்லைகள் தருபவை. சூழலைச் சிதைப்பதில் முன்னணியில் உள்ள அழகூட்டி ரசாயனங்களில் பல, சூழலைச் சிதைப்பதற்கு முன்னர் நம் தோலையும் உடலையும் சிதைக்கும் வாய்ப்புகள் அதிகம். ஏறத்தாழ 80,000 ‘அழகுபடுத்திகள்’ உலகச் சந்தையில் உள்ளன. ஒவ்வொரு குழந்தையும் போடும் நெயில் பாலீஷில் கலந்துள்ள காரீயம் உண்டாக்கும் அபாயம் பற்றி, பெற்றோர்களுக்குத் தெரியாது. குளிக்காமல் கொள்ளாமல், கக்கத்தில் மணமூட்டி அடித்து கல்லூரிக்குக் கிளம்பும் இளசுக்கு, அதிலுள்ள ஃபார்மால்டிஹைடு, எத்திலீன் ஆக்ஸைடு வருங்காலத்தில் குழந்தைப் பேறுக்குத் தடை உண்டாக்கும் எனத் தெரியாது. பின்னர் நள்ளிரவில் டி.வி முன்போ, அல்லது பிரபல குழந்தைப்பேறு மருத்துவர் முன்போ குத்தவைத்து உட்கார்ந்து குறிப்புகள் கேட்க வேண்டியதுதான். முகப் பூச்சுக்களில் இருக்கும் தாலேட், கண் அழகுக்குப் பயன்படுத்தப்படும் பாலிசைக்ளிக் ஹைட்ரோ கார்பன், சில வகை பிளாஸ்டிசைசர்ஸ், பாரபன்கள் (பெரும்பாலான க்ரீம், ஷாம்புக்களில் சேர்க்கப்படும் பிரிசர்வேட்டிவ் பொருள்), நிறமிகளுக்காகச் சேர்க்கப்படும் வண்ண நானோ துகள்கள்… இவை அனைத்தும்  தோலின் இயற்கை அரணை உடைத்து உடலுக்குள் உறிஞ்சப்பட்டு, ‘அழகான நோயாளியை’ உருவாக்கக்கூடும் என்கிறது அறம் உள்ள மருத்துவ அறிவியல்!
- நலம் பரவும்…

வீட்டிலேயே தயாரிக்கலாம் சோரியாஸிஸ் மருந்து!
வெட்பாலை இலைகளைச் செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெயில் போட்டு, மூன்று முதல் நான்கு  நாட்கள் வரை வெயிலில் காயவைத்து எடுக்க, கருநீல நிறம்கொண்ட தைலம் கிடைக்கும். அதை 10 முதல் 15 துளிகள் உள்ளுக்கும் வெளிப்பூச்சாகவும் கொடுக்க, வெகுநாட்களாக இருந்துவரும் ‘சோரியாசிஸ்’ மெள்ள மெள்ளக் குறையத் தொடங்கும். இதையும், இதோடு சேர்த்து, இந்த சோரியாசிஸ் நோய்க்கு என்றே பிரத்யேகமாக அரசு சித்த மருத்துவமனைகளிலும் தேசிய சித்த மருத்துவமனையிலும் வழங்கப்படும் மூலிகை மருந்துகளைக்கொண்டே, இந்த நோயை முழுமையாகக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும்!

வனப்பான தோல் இருக்க…
கறுப்பு நிறம்… அழகு மட்டும் அல்ல,  ஆரோக்கியமும்கூட. அதை சிவப்பு நிறம் ஆக்குகிறேன் என முயற்சிப்பது சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொள்வதற்கு சமம்.
 தோல் உலராமல் வழவழப்பாக வைத்திருக்க உங்கள் அன்றாட மெனுவில், பப்பாளி, மாதுளை, சிவப்புக் கொய்யா, பன்னீர்த் திராட்சை, பெரிய நெல்லி இருந்தால் போதும். டேபிள் பெஞ்சுக்கு வார்னிஷ் அடிப்பதுபோல, தோலை பல ரசாயனங்களால் பட்டைத் தீட்ட வேண்டியது இல்லை.
 பாசிப்பயறு மாவு, நலுங்கு மாவு தேய்த்துக் குளிப்பது, சோப்பு போல் தோலின் இயல்பான எண்ணெய்த்தன்மையைப் போக்காமல், வழவழப்புடன் வனப்பாக இருக்க உதவும்.
 தோல் முற்றிலும் வறட்சி அடையாமல் இருக்க நல்லெண்ணெய்க் குளியல், காயத்திருமேனித் தைலக் குளியல் நல்லது. சிறுவயது முதலே இந்தப் பழக்கங்களைப் பயிற்றுவிக்கப்பட வேண்டும்.
 தோசைமாவு, இயற்கையான புரோபயாட்டிக் சத்துள்ள கொண்ட ஒரு scrub. அதைக்கொண்டு முகத்தைக் கழுவி, தோலின் இறந்த செல்களை நீக்கி முகப் பொலிவு பெறலாம்.
 MELASMA, BLEMISHNESS  முதலான சாம்பல் நிற முகத் திட்டுகளுக்கு, முல்தானிமட்டியில் ஆவாரைப் பூ, ரோஜாப் பூ சேர்த்து அரைத்து எடுத்துக்கொண்ட அந்தக் கலவையை மோரில், அல்லது பன்னீரில் குழைத்துப் பூசி லு மணி நேரம் கழித்துக் கழுவலாம். திட்டுக்கள் மறையும்!

நலம் 360’ – 31

புற்றுநோய்… இந்தியர்களைக் குறிவைத்திருக்கும் புது வில்லன்!
இது ஆறு மாத சிசு முதல் 60 வயது பாட்டி வரை, வயது வித்தியாசம் பார்க்காமல் எல்லோரையும் தாக்குகிறது. புகைக்காத, மது அருந்தாத, அணு உலைக்கு அருகில் இல்லாத, மார்பு விரியும்போது 120 செ.மீ., சுருங்கும்போது 105 செ.மீ நிலையில் உள்ள சிக்ஸ்பேக் நபர்கள் என எவருக்கும் எப்போதும் இந்த நோய் வரும் வாய்ப்பு உண்டு. அஞ்சு சுத்து முறுக்கு, வீட்டு அதிரசம் சாப்பிட்ட சமூகம் நாம். ஆனால், இப்போது எங்கு இருந்து வருகிறது, எப்படிச் செய்கிறார்கள், என்னவெல்லாம் இருக்கிறது என எதுவும் தெரியாமல் எல்லா உணவுப் பொருட்களிலும் மிளகாய் வற்றலைத் தூவி வாய் பிளந்து தின்றுகொண்டிருக்கிறோம். ‘ஐபோன்ல ஓவுலேஷன் ஆப்ஸ் சிக்னல் காட்டுது. இன்னைக்குக் கண்டிப்பா காதல் செஞ்சாகணும்’ என இளம்தம்பதிகள் காதல் புரியவும் அலாரம்வைக்கிறார்கள். இவை எல்லாமும்கூட புற்றுக்குக் காரணங்கள்தான்!
திராட்சைக் கொத்தின் முதுகில் படிந்திருக்கும் ஆர்கனோ பாஸ்பரஸ் உரத் துணுக்குகள், கொளுத்தும் வெயிலில் நின்ற காரின் உட்புற அலங்காரங்கள் உமிழும் பென்சீன், பில்டிங் செட் விளையாடும்போது அதில் கசியக்கூடிய டயாக்சின், சமையலறை அலங்காரத்துக்கு மரமும் பிளாஸ்டிக் கலவையும் சேர்த்துத் தயாரித்த மெலமின் ஃபினிஷ் அடுக்குகள் கசியவிடும் யூரியா ஃபார்மால்டிஹைடு என இவை எல்லாம் அடினோ கார்சினோமா முதலான பல்வேறு புற்றுக்களையும் அடிச்சுவடு தெரியாமல் செருகுகின்றன.
எப்போது ஒரு சராசரி செல், புற்றுச்செல்லாக உருவெடுக்கும் என எவராலும் இன்று வரை துல்லியமாகக் கணிக்க இயலவில்லை. பாதுகாப்பு அரணாக இருந்துவந்த நோய் எதிர்ப்பு சக்தி குறைவுபட்டதாலா, Apoptosis எனும் துல்லிய உடல் செல் புரோகிராம் பிழையாகப் படைக்கப்பட்டதாலா, இல்லை அதைப் படியெடுக்கும்போது மன அழுத்தத்தில், சூழல் சிதைவில், உணவு நச்சில் செல் இழைக்கும் தவறினாலா… எதுவும் தெரியாது. ஆனால், சில உணவுப் பழக்கங்கள் பசியை ஆற்றுவதோடு, நோயைத் தடுக்கவும் பயனாகும் என்பது மட்டும் மருத்துவப் புரிதல்!
‘சூடா ஒரு டீ சாப்பிட்டு வரலாம் மாப்பிள்ளை’ என்ற ஓர் அழைப்பு உற்சாகம் மட்டும் தராது. புற்று அணுக்களை எதிர்க்கவும் வழிவகுக்கும் என்கிறது நவீனப் புரிதல். தேயிலையின் கருப்பொருட்கள் உடலுக்குள் துறுதுறு விறுவிறு உற்சாகத்தை விதைப்பவை. வெள்ளைச் சர்க்கரை, வெள்ளைப் பால் கலக்காமல் கறுப்புத் தேநீராக அருந்தினால் அதிக பலம் நிச்சயம். தேநீரைச் சுவைபட மாற்ற, மணமூட்ட… அதை வறுத்து, ரோஸ்ட் செய்து என பல வன்முறைகளை பிரபல தேயிலை நிறுவனங்கள் நிகழ்த்துவது உண்டு. அந்த அதிகப்பிரசங்கித்தனத்தைச் செய்யாமல், பச்சையாக அப்படியே நீர்த்துவம் மட்டும் உலர்த்திவரும் க்ரீன் டீ, இன்னும் கூடுதல் சிறப்பு. தேநீர் மிகச் சிறப்பாக இருந்தாலும், அதில் கலந்திருக்கும் பூச்சிக்கொல்லித் துணுக்குகள் குறித்த ஆய்வு முடிவுகள் நம்மை அதிரவைக்கின்றன. சோழ மண்டலக் காடுகளை மழித்து தேயிலை பயிரிட்ட சூழலியல் வன்முறை போதாது என, இப்போது அந்தத் தேயிலையிலும் எக்கச்சக்க பூச்சிக்கொல்லிகளை வரம்புக்கு மீறித் தெளிப்பதன் விளைவே இது!
புற்றைப் பொறுத்தமட்டில் நம் முதல் காவலன், பழங்கள்தாம். சொல்லப்போனால், அனைத்துக் கனிகளுமே ஏதோ ஒருவிதத்தில் புற்றுநோயின் வருகையைத் தடைசெய்கின்றன. காடுகளின் ஓரத்தில் கிடைக்கும் இலந்தை முதல், மேற்கத்திய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ரோஸ்பெர்ரிகள் வரை ஒவ்வொன்றும் ஒருவிதத்தில் புற்றோடு மோதும் வல்லமை உடையது. கனிகளின் நிறங்கள், பூச்சிகள், பறவைகளை ஈர்க்க இறைவன் படைத்ததாகக் கூறப்பட்டாலும் அவற்றை ருசிக்கும் மனிதர்களுக்கு சுவையோடு சேர்த்து, புற்றுக்கு எதிரான தடுப்பாற்றலை வழங்கவும் செய்கிறது. சிவந்த நிறத் தக்காளியின் மெல்லிய  தோலில் நிறைந்துள்ள சிவப்பு நிறச் சத்தான லைக்கோபீன்கள், ஆண்களின் புராஸ்டேட் கோளப் புற்றுநோயைத் தடுக்கக்கூடியவை. சாதாரணமாக 50 வயதைக் கடந்த ஆண்களுக்கு புராஸ்டேட் கோள வீக்கம் இயல்பான ஒன்று. அது வெகுசிலருக்கு புற்றாக மாறும் அபாயம் உண்டு. இந்த மாற்றத்தைத் தடைசெய்யும் சத்து,  தக்காளியின் சிவந்த நிறத் தோலுக்கு உண்டு. வெள்ளைப் பூசணி, வெள்ளரி விதையும் இதே திறன்கொண்டவை. புராஸ்டேட் கோள வீக்கம் உள்ளவர்கள் தினமும் சின்ன வெங்காயம், தக்காளி, வெள்ளரிக்காய் போன்ற சாலட்களைச் சாப்பிடுவது அந்தக் கோளப் புற்றைத் தடுக்க உதவும்.
கமலா ஆரஞ்சுப் பழத்தில் உள்ள மெல்லிய உட்தோலில் சிட்ரஸ் பெக்டின் என்ற பொருள் உள்ளது. இது பல புற்றுநோய்களைத் தடுக்கும் இயல்பு உள்ளது. பொதுவாக ஆரஞ்சுப் பழத்தை ஜூஸாகச் சாப்பிடாமல் அப்படியே சுளையாகச் சாப்பிடும்போதும் நார்ச்சத்தும் புற்றுநோய் தடுப்புச் சத்தும் கிடைக்கும். உள்ளூர் கனிகளில் சிவப்புக் கொய்யா, நாவல் பழம், திண்டுக்கல் பன்னீர்த் திராட்சை போன்றவை புற்றுநோய்த் தடுப்பில் திறன் வாய்ந்தவை. குறிப்பாக பன்னீர்த் திராட்சையின் விதையில் உள்ள துவர்ப்புச் சுவையுடைய ரிசர்விடால் சத்து புற்றுநோய்க்கு எதிராகப் போராடும். கொட்டையில்லாத திராட்சைக்கு கூடுதல் விலை கொடுக்கும் முட்டாள் கும்பலாக இனியாவது நாம் இருக்க வேண்டாம். நாவல் பழத்தின் கருநீல நிறம் நாவில் படிவதை நாம் பார்த்திருப்போம். அந்த நிறமிச் சத்தும் புற்றை எதிர்க்கும் வல்லமைகொண்டது.

பெண்களின் மார்பகப் புற்றுநோயையும் நாம் பழங்களைக்கொண்டு எதிர்க்கலாம். 40 வயதைக் கடந்த பெண்கள், மாதவிடாய் முடிவை நெருங்கும் வயதினர், தினமும் உணவில் ஏதேனும் ஒரு கனியை எடுத்துக்கொள்வது மார்பகப் புற்றுநோய் வருகையைத் தடுக்கும். குறிப்பாக பப்பாளிப் பழத் துண்டுகள், மாதுளை முத்துக்கள், தர்பூசணி… இவற்றை தினசரி உட்கொள்ளும்போது புற்றின் வருகை குறையும். வேகவைத்த பீட்ரூட், தர்பூசணி, மாதுளை இவற்றை சாறாக அடித்து அதில் ஓரிரு புதினா இலைகளைப் போட்டு அரை ஸ்பூன் மலைத் தேன் விட்டு வாரம் இரண்டு முறை அருந்துவது பெண்களுக்கு கருப்பை, மார்பகப் புற்றுநோய் வருவதைத் தடுக்கும்.
இரைப்பைப் புற்றுநோய்க்கு அதிக காரமுள்ள உணவுகளைத் தொடர்ச்சியாக எடுத்துவருவதும், மது அருந்துவதும், அடிக்கடி வலி மாத்திரைகள் எடுப்பதும் நாள்பட்ட குடல் புண்கள் மற்றும் இரைப்பைப் புண்கள் இருப்பதும் மிக முக்கியக் காரணங்கள். வயிற்றில் எரிச்சல், வலி இருந்து அது இரைப்பைப் புண் எனத் தெரியவந்தும், உணவில் அக்கறை இல்லாமல் அலட்சியமாக இருப்பது புற்றின் வருகையை விரைவாக்கும். இரைப்பை, குடல் சார்ந்த புற்றுகள் வராது இருக்க, மஞ்சள் ஒரு மிகச் சிறந்த தடுப்பு மருந்து. புற்றுக்குக் காரணிகளாக பல விஷயங்கள் உண்டு. மஞ்சளின் பல்வேறு கூறுகள், ஒருங்கிணைந்து இந்தக் காரணிகளை எல்லாம் சரிசெய்வதால்தான், இந்தியர்களுக்கு மேற்கத்திய நாடுகளைக் காட்டிலும் குடல்புற்று நோயாளிகளின் எண்ணிக்கை குறைவு என ஜான்ஹாப்கின் மருத்துவமனையின் மூத்த புற்றுநோய்ப் பேராசிரியர் டாக்டர் பரத் அகர்வால் தெரிவிக்கிறார். தனியாக எடுத்துக்கொள்ளும்போது மஞ்சள் எளிதில் உட்கிரகிக்கப்படாமல் இருப்பதும், அதுவே பாலில் மஞ்சள் தூள் போட்டுச் சாப்பிடும்போது, உணவைத் தாளித்து எடுக்கும்போது மஞ்சள் சேர்த்தாலும், வெண் பொங்கல், கறிக்குழம்பு இவற்றில் சேர்த்து உணவாக்கும்போதும் மஞ்சள் உட்கிரகிக்கப்படும் வேகம், அளவு அதிகரித்திருப்பதை நவீன ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. இனி உங்கள் வீட்டு சமையலில் ஒரு சிட்டிகை மஞ்சள் இல்லாமல் எந்தப் பரிமாறலும் இருக்க வேண்டாம்.
சமையலறையில் நேரம் செலவழிப்பது, மடமைத்தனம் என்ற தவறான நவீனப் பிற்போக்குச் சிந்தனை நகர்ப்புறங்களில் பெருகியுள்ளது. அடுப்பங்கறை மெனக்கெடல்கள் அநாவசியமானது. அந்த நேரத்தில் வேலைக்குப் போகலாம்; சினிமா பார்க்கலாம், சமூக வலைதளங்களில் நட்பு பெருக்கலாம் என நினைப்பது அறியாமை; மடமை. உணவின் ஒவ்வொரு கவள உருவாக்கத்திலும் அக்கறையும் கரிசனமும் தேவை. நம் கைப்பட உருவாக்கும் மூலப்பொருட்களை அன்றன்றே சமைத்துச் சாப்பிட்டுவிட வேண்டும். ‘ரெடி டு ஈட்’ உணவுகளில் குவிந்திருக்கும் ரசாயனத் துணுக்குகளில் பெரும்பாலானவை தனித்தனியாகப் பார்க்கும்போது புற்றுக்கு வழிவகுப்பவை. குறிப்பாக செயற்கை வண்ணமூட்டிகள், செயற்கை மணமூட்டிகள், நீண்ட நாளுக்குக் கெட்டுப்போகாமல் வைத்திருப்பவை என எல்லாவற்றையுமே அகலக் கண்களால் பார்க்கும்போது, அதன் பின்னணியில் பயங்கரங்கள் ஒளிந்துதான் இருக்கின்றன. துரித உணவுகளில் சேர்க்கப்படும் உப்புக்கள் மறுபடி மறுபடி சூடாக்கப்படும்போது பிரிந்து, செல்களைச் சிதைக்கும் தன்மையோடு உடலில் வலம் வரத் தொடங்கும். அதனால், ‘இப்போது நேரம் இல்லை’ எனச் சொல்லி துரிதங்களைத் துரத்தினால், பிறகு வாழ்க்கையிலேயே அதிக நேரம் இருக்காது. வெள்ளைச் சர்க்கரை எனும் சீனி பலர் நினைப்பதுபோல நீரிழிவுக்கு மட்டும் சாதகமானது அல்ல. புற்றுநோய் பல்கிப் பெருக, உடலுக்கு வெள்ளைச் சர்க்கரைதான் காரணமாக இருக்கிறது. புற்றில் இருந்து மருத்துவத்தால் மீண்டுவரும் ஒவ்வொருவரும் வெள்ளைச் சர்க்கரையைப் பயன்படுத்தப்பட்ட பண்டங்களை முடிந்தவரை சாப்பிடாமல் இருப்பது மிகவும் நலம். ஓர் இடத்தில் புற்றுசெல்களும் நல்ல செல்களும் இருக்கும்போது அந்த இடத்தில் சர்க்கரை வந்தால், புற்றுசெல்கள் சர்க்கரையை வேகமாக உட்கிரகித்து புற்றின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். புற்றுநோயைத் தடுக்க விரும்புபவர்களும், புற்றுநோயில் இருந்து மீண்டுவருபவர்களும் வெள்ளைச் சர்க்கரையை விலக்குவது நன்று. அதேபோல் சர்க்கரைக்கு மாற்றாக ஜீரோ கலோரி எனக் கூறிக்கொண்டு சந்தைக்கு இன்று வரும் பல்வேறு செயற்கை இனிப்புகள், அதி கொதிநிலையில் பிளாஸ்டிக்கு களை எரித்தால் வரும் டயாக்சினைப் போல, புற்றுநோயைத் தருவிக்கும் காரணியாக மாறுகின்றன. 
காய்கறிகளில் பிரக்கோளி புற்றுநோயின் வளர்ச்சியைக் குறைப்பதில் பயன்தருவது நிரூபிக்கப்பட்டுள்ளது. லோ கிளைசிமிக் தன்மையுடைய சிறுதானிய உணவுகள் புற்றுநோய் சிகிச்சையில் பொருத்தமான உணவுகள். குறிப்பாக மோர், சிறிய வெங்காயம் சேர்த்த கம்மங்கூழ், மணமூட்டிகள், நறுமண மூட்டிகளுடன் சேர்த்துச் செய்த வரகரிசி பிரியாணி, உப்புமாவாக பொங்கலாகச் செய்யப்படும் தினையரிசி உணவுகள் என இவை எல்லாமே அடிப்படையில் ரத்தத்தில் சர்க்கரையை மெதுவாக உமிழ்பவை. புற்றுநோய் சிகிச்சையின்போதும், கதிர்வீச்சு சிகிச்சையின்போதும் கதிர்வீச்சுக்குப் பிந்தைய உடல் தேறிவரும் காலத்தின்போதும் தினையரிசி கம்பு, வரகரிசி, சாமை, குதிரைவாலி இவற்றில் சமைத்துச் சாப்பிடுவது சிறந்தது.
கிட்டத்தட்ட 70 சதவிகிதப் புற்றுநோய்களை உணவின் மீதான அக்கறையை வைத்தே, நாம் ஆரம்ப காலத்திலேயே தடுக்க முடியும். கூடுதல் கரிசனமும் பாரம்பர்யப் புரிதல்கொண்ட மெனக்கெடல்களும் மட்டுமே இந்த நோயை முற்றிலும் தடுக்க, தீவிரப்படாமல் இருக்க இன்று வரை உதவும். இன்று பஞ்சாப் மாநிலத்தில் பெருவாரியாக புற்று பெருகியதற்கு மிக முக்கியக் காரணம், பாசுமதி அரிசியை எக்குத்தப்பாக விளைவிக்க அந்த மண்ணில் கொட்டி கபளீகரம் நடத்தும் ரசாயன உரங்கள்தான். பாசுமதி விளைந்த நிலத்தின் அடியில் அணுக் கதிர்வீச்சு உள்ள கனிமங்கள் உருவாகும் அளவுக்கு, அங்கே ஏராளமாக ரசாயனப் பூச்சிக்கொல்லி நச்சுக்கள் கலக்கப்படுவது சமீபத்தில் தெரியவந்துள்ளது. நச்சு ரசாயனத் துணுக்குகள்கொண்ட பளபளப்பான காய்கறிகளைவிடச் சற்று தொய்வாக, பூச்சிக்கும் புகலிடம் கொடுத்த காயும் கனியும் நஞ்சில்லா ருசிகொண்ட உணவு என்பது மட்டும் அல்ல, புற்று வராது நம்மைக் காக்கவும்கூடியது. ஹைதராபாத்தில் உள்ள தேசிய உணவியல் ஆராய்ச்சிக் கழகத்தில் வெளியிட்ட ஆய்வறிக்கை ஒன்று, உலக நாடுகளை எல்லாம் தடைசெய்துள்ள 13 வகை கொடிய ரசாயனங்கள், நாம் அன்றாடம் சாப்பிடும் கத்திரிக்காய் அவரைக்காயில் இருந்து அரிசி, பருப்பு வரை அனைத்திலும் இருப்பதாகச் சொல்கிறார்கள். இந்த ரசாயனத் துணுக்குகளில் பல, உலக சுகாதார நிறுவனம் சொல்லும் குரூப் ஒன் புற்றுநோய் காரணிகள் பட்டியலில் இடம்பெற்றவை.
உற்பத்தியைப் பெருக்குகிறேன்; பிற பூச்சிகளிடம் இருந்து காக்கிறேன்; அதிக நாட்கள் சந்தைப்படுத்துகிறேன் எனப் பல காரணங்களைக்கொண்டு நாம் சாப்பிடும் பெருவாரியான உணவுகளில் நஞ்சு செருகப்பட்டுள்ளது. இன்று பெயர் அளவில் பெருகியிருக்கும் புற்றுநோய்க் கூட்டத்துக்கு மிக முக்கியக் காரணம் இந்தப் பூச்சிக்கொல்லி ரசாயனங்களே. வீட்டுத் தொட்டியில் சின்னதாகச் சிறிய நெல்லிக்காய் அளவில் வரும் தக்காளியிலும் தளதளவென வளர்ந்துவரும் கீரையிலும் இன்னும் கத்திரி, வெண்டை, கொத்தமல்லி கீரையிலும் இந்த விஷத் துணுக்குகள் பிரச்னை கிடையாது. வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம் எனக் கூறிய காலம்போய், வீட்டுக்கு 10 தொட்டிச் செடிகள் வளர்ப்போம் என்பது காலத்தின் கட்டாயமாகிவருகிறது. பணப் பெட்டிகளில் அல்ல, அந்தச் சின்னஞ்சிறு தொட்டிகளிலேயே உங்கள் வாழ்வும் வளமும் இருக்கும்!   

நலம் 360- தொடர் இறுதிக் கட்டுரை

  நலம் 360– இளைப்பாறும் சமயம் இது.  நலத்தின் கோணம் 360 டிகிரி; நலம் என்பது நோய்க்கும் மருந்துக்கான தட்டையான பாலம் அல்ல..என்பதைத்தான் எழுதிவந்தோம். இளங்காலையில் நாம் போடும் ஒரு தும்மலுக்குப் பின்னே இரத்தத்தில் கொஞ்சம் கூடுதாலாகிப் போய்விட்ட இமினோகுளோபுலின்கள் மட்டும் காரணமில்லை. தொலைந்துபோய்விட்ட சில ஈய்ச்சட்டியில் செய்த ரசம், துளசிக் கசாயம் முதலான அன்றாட நல்லுணவும், சில ஆண்டுகளாய் காற்றில் கசிய விடும் அம்மோனியா முதலான ஆயிரக்கணக்கான பிரபஞ்சத்துக்குப் பரிச்சியமில்லாத வாயுக்களும், கரிசனமும் காதலும் காணாமல் போய், ஆதார் அட்டையில் மட்டுமே ஒட்டியிருக்கும் குடும்பமும் கூட காரணமாயிருக்கும் என்ற புரிதலினைச் சொல்ல எழுதியதுதான் நலம் 360.

மொத்த சமூகமும் நலமாயிருக்க நம் முன்னோர்கள் மெனக்கிட்ட போரிட்ட வரலாறு பெரிதினும் பெரிது.  “நோயெல்லாம் கடவுளும் கன்மமும் தந்தது; அதை பரிகரிக்க நினைப்பது, கடவுளை எதிர்ப்பது போன்றது என்ற போக்கை எதிர்த்து, நீ சாப்பிட்ட உணவும், நீ வளர்க்கும் கோபம் காமம், குரோதம், மோகம், மதம், மாச்சரியம் இடும்பை, அகங்காரம் என்னும் எட்டு குணமும் ஒட்டியவைதான் காரணம் எனச்சொன்னவர்கள் நம் 18 சித்தர்கள் மட்டுமல்ல. இன்றைய நவீன மருத்துவத்தின் துவக்கப்புள்ளிகளான இங்கிலாந்தின் டார்வினும், நியூட்டனும்,  நம் நாட்டு வங்காளத்து சூஃபீக்களும், வடலூர் வள்ளலாரும் கூட அந்த வரிசையில் உள்ளவர்தாம். சாதீய சமூக அவலங்களை எதிர்த்து,  நலத்தின் 360 கோணத்தை முதலில் நமக்குக் காட்டியவர்கள் அவ்ர்கள்தாம்


 இப்படிபிறந்த நம் நலப்பேணலை என்பது நாம் நெடுநாள், உணவோடும், வாழ்வியலோடும், மொழியோடும், பண்பாட்டோடும் வைத்திருந்தோம். இப்பரந்த புரிதல்தான் நமது காலை இஞ்சி, கடும்பகல் சுக்கு மாலை கடுக்காய்தடுப்பூசிகளைப் போட்டு ஆயுளை ஆரோக்கியமாய் நகர்த்திய விஷயம். நீர் கருக்கி நெய் உருக்கி மோர் பெருக்கி’, என்று உணவுச் சூட்சுமங்களை சொல்லி நோய்கற்றியவிஷயம். காற்றைப் பிடிக்கும் கணக்கறிவாளனுக்கு கூற்றை உதைக்கும் குரியதுவாமே”- என மூச்சுப்பயிற்சியில் அன்றாடம் செப்பனிட்டுக்கொண்டிருந்த விஷயம். கூடவே “இது சூடு; இது குளிர்ச்சி; இது பின்பனிக்கால உணவு; இது மருதத்திணை உணவு; இது பேறுகால உணவுஎனும் சமையலறை அக்கறைகள் இருந்த விஷயம்

 இருந்தும் கூட, நம் சாமானியனின் சராசரி ஆயுட்காலம் சுதந்திரம் அடையுமட்டும் 37 வயதுதான் இருந்தது. அம்மையிலும், ஊழியிலும், பிளேக்கிலும் காசத்திலும் நம்மில் நிறையபேர் காணாமல் போன வரலாறுண்டு. பிறந்ததில் 3 க்கு ஒன்றை தொட்டிலுக்குப்பதில் பிணக்காட்டுக்கு அனுப்பியவர்களாய்த்தான் இருந்தோம்.. ஒருவேளை, எட்வர்டு ஜென்னரும், லூயி பாஸ்டரும், ராபர்ட் கோச்சும், வந்திராவிட்டால், இன்று நம்மில் எத்தனைபேர் நடமாடிக் கொண்டிருப்போம்? என்பது மிகப்பெரிய கேள்வி. அப்போதைய சமூகத்தின் தொற்று நோய் நலச்சவால்களுக்கு, தன் வாழ்வையே பணயம் வைத்து விடைதேடிய அந்த விஞ்ஞானிகள் கூட்டத்துக்கும் அண்டத்திலுள்ளதே பிண்டம்;; பிண்டத்திலுள்ளதே அண்டம் எனப்பாடிய சித்தர்கள் கூட்டத்துக்கும் அடையாளங்கள் மட்டும்தான் வேறு வேறு. ஆனால் அக்கறைகள் ஒன்றுதாம். நவீன அறிவியலின் புரிதலின் துணைகொண்டு அம்மையையும், வெறி நாய் வைரசையும் விரட்ட அவர்கள் தடுப்பூசிகளைத் தந்திராவிட்டால், நம்மில் நிறையபேர் இன்னும் நடமாடிக்கொண்டிருக்க இன்றும் வாய்ப்பில்லை.

1953-இல் ஜோனாஸ் சால்க் தான் கண்டறிந்த போலியோ தடுப்பூசியை முதலில் தனக்கும் தன் குழந்தைக்கும் போட்டுக் கொண்டு உலகில் போலியோவை விரட்ட எடுத்த முனைப்பும், 48 நாள் தொடர்ச்சியாக கல்வத்தில் 24 விதமான சாறுகளை விட்டு அரைத்து, ஆயிரம் வரட்டிகளை வைத்துப் புடமிட்டு, உலோக மூலப்பொருளை உடலுறிஞ்சிப் பயனாக்கும் பாதுகாப்பான உப்பாக்கி, அதையும் குண்டூசி முனையில் எடுத்து தேனிலோ, மூலிகைப்பொடியிலோ குழைத்து, தான் செய்த பெருமருந்தை தான் சாப்பிட்டுப்பார்க்கும் நம் தமிழ்ச் சித்தனும் எனக்கு ஒரே புள்ளியில்தாம் தெரிகின்றனர்.
அதேபோல், உள்ளங்கையின் பகுதிகளில் உடலை உற்றுப்பார்க்கும் சுஜோக்கும், உடலின் பல்வேறு புள்ளிகளில் உடலின் உயிராற்றல் குவிந்தும், சீராக ஓடும் ஓட்டத்தை அறியும் வர்மமும், தொடுசிகிச்சையும் மிக முக்கியமான நலப்புரிதல்தாம். யிங்- யாங்கின்” ஒருமிப்பை மூலிகைகளைக் கொண்டும், தாய்-சீ நடனம் மூலம் மூச்சை ஆண்டும் சிகிச்சையளிக்கும் சீனமருத்துவமாகட்டும், அதன் இன்னொரு பரிமாணமான ஜப்பானிய கம்போ மருத்துவமாகட்டும், அரபு மருத்துவம், யுனானி மருத்துவம் என ஒவ்வொன்றும் அக்கறையும் அறமும் கொண்ட நீண்ட மரபின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட பதிவுகள்.
ஒருபக்கம் இப்படி நீண்ட தெள்ளிய அனுபவம் கொண்ட மரபு இருக்கின்றது. இன்னொரு பக்கம் இந்த உடல், பல ஆயிரம் கோடி செல்களாகும் முன்னர், முதல் ஸ்டெம் செல்லுக்குள் எப்படி இத்தனை திட்டங்கள் இருக்கின்றது? என படு நுணுக்கமாக ஆய்ந்து சொல்லும் உச்ச அறிவியல் படைத்திருக்கின்றோம். ஆனால் இரு புள்ளிகளும், நம் விளிம்பு நிலைச் சாமானியனின் நலத்தேடலுக்கு விடை சொல்லாமல் விலகிப் போவதுதான் வேதனையிலும் வேதனை. நலம்360 சொல்ல நினைத்ததும் சிந்திக்க நினைத்ததும் அதை மட்டும்தான். 


மேற்கத்திய மருத்துவமுறை படித்தறிந்து விட்டதால், உள்ளூர் நீண்ட அனுபவம் எல்லாம் மடமையும் அறிவற்றதுமாய் ஆகிப்போய்விட்ட்தாய் உதாசீனப்படுத்தி ஓரங்கட்டுவது ஒருபக்கம்.நவீன அறிவியலே மொத்தமாய் பொய்; எங்கள் பாரம்பரியம் அத்தனையையும் விஞ்சியது. உடலையும் உலகையும் ஞானக்கண்களால், முழுமையாய் அறிந்துவிட்டோம். இதில் தேட ஒன்றுமில்லை. உள்ளது உள்ளபடி செய்துபோவதைத் தவிர கேள்விகள் கேட்பதோ, ஆய்வுக்குட்படுத்துவதோ வன்முறை என குமுறும் இன்னொரு பக்கம். இருசாராராரும் உற்றுப்பார்க்க வேண்டிய இன்னொரு கோணம் இருக்கின்றது.
நியூட்டனும், பிளமிங்க்கும், சால்க்குக்கும் நகர்த்திய நவீன மருத்துவ விஞ்ஞானம் இன்று மொத்தமாய், வணிகத்தின் இரும்புக் கரங்களுக்குள் சிக்கியுள்ளது. சூப்பர் ஸ்டார் படம் ரிலீஸ் என்பதால் பாதுகாப்பாய் பல லோ பட்ஜெட் படம் ரிலீஸ் தள்ளி வைப்பது போல, நோயகற்ற தயாராயிருந்தாலும் வணிகத்துக்காக, “இன்னும் 15 வருசம் கழித்து, இந்த புற்று நோய்க்கு மருந்தை ரிலீஸ் பண்ணலாம், என பல மருந்துகள் ரிலீஸ் தள்ளிப்போகும் வணிகப்பிடி, நிறைய மருத்துவருக்குமே தெரியாது. மருந்து ரெடி; நோய் எங்கே? இதற்காக இதுவரை இத்தனை மில்லியன் டாலர் கொட்டியிருக்கின்றோம்..குப்பையிலா போட முடியும்,? நோயை பரப்புங்கள். எனும் தமிழ் சினிமாவின் ஒன் லைன்கள் உருவாக்கும் கம்பெனிகள் நம் உலகில் உண்டு. ஐன்ஸ்டீனும் நியூகோமனும் ஃபேபரும் அறிவியலை நகர்த்திக் கொண்டிருந்த சமயத்தில், அவர்கள் விஞ்ஞானத்தைக் கொண்டே,  லிட்டில் மாஸ்டரை ஜப்பானிலும், ஏஜண்ட் ஆரஞ்சை வியட்னாமிலும், மஸ்டர்டு கேசை இத்தாலி ஓரக்கடற்படைத்தளத்திலும் தெளித்து கோடிக்கணக்கானவர்களை கொன்று குவித்த வரலாறை நாம் மறக்க முடியாது.  நவீன அறிவியலை அன்று மண் வெறிக்காக பயன்படுத்திய கூட்டம், இன்று பணத்துக்கும் பங்குச்சந்தைக்குமாக நகர்த்த தயங்காது மருத்துவர் உலகம் இதை உற்றுப்பார்த்துதான் ஆகவேண்டும்.


நோய்க்கான காரணத்தை நுண்கதிர்களால் நோண்டுகையில், நுண்ணறிவால், புதிதாய் இந்த மருந்து எதற்கு, இதன் சிறப்புக்குப் பின்னால் சீரிய அறம் சார் விஞ்ஞானம் மட்டுமே உள்ளதா? முந்தைய மருந்தின் காப்புரிமை வணிகம் மடிந்ததால், புது மருந்தின் புகுத்தல் நுழைகிறதா? என்பதையும் சிந்திக்கும் நுண்மாண் நுழைபுலம் நமக்கும் வேண்டும். இன்னும் பறவைக்காய்ச்சலும் பன்றிக்காய்ச்சலும் ஏன் எச்ஐவியும் கூட ஆய்வகங்கள் தோற்றுவித்தவை என்ற அறைகூவலை உதாசீனப்படுத்தாமல் உற்றுப்பார்க்க வேண்டும்.
இன்னொரு பக்கம் நாங்கள் ககன குளிகை போட்டு வானில் பறந்தவர்கள்;புஷபக விமானத்தில் கிரகங்களுக்கு இடையே பறந்தவர்கள்‘ எங்களுக்குத் தெரியாததா? என சமூக மடமைகள் பலவற்றிற்கு சந்தனக்காப்பு போட்டு கும்பிடுபவர்கள் இன்னும் உண்டு. பிறந்த பச்சைக்குழந்தையை, அடைமழையின் அமிலமழைத்தண்ணீரில் குளிப்பாட்டி எதிர்ப்பாற்றல் கொடுக்கும், மரணத்தின் விளிம்பில் நிற்கும் நோயாளியை பத்தாயிரம் ஆகும்; கொல்லிமலைக்கு மேலே கொஞ்சூண்டு மூலிகை ஒன்று இருக்கின்றது. அது என் கண்ணுக்குத்தான் தெரியும். அமாவாசைக்கு அடுத்தநாள் அதை கொணர்ந்தால் நீங்க அடுத்த ஒலிம்பிக்சில் ஓடலாம் என் பொய்யுரை சொல்லி, அவரின் இறுதி மூச்சில், இளைப்பாருவதும் இன்னும் இருக்கத்தான் செய்கின்றது. அதேசமயத்தில் சின்னதாய் ஒரு கட்டுமருந்தை, உரைகல்லில் 3 இழைப்பு இழைத்து, உயிர்பிரியும் சன்னியினை நிறுத்திக் காப்பாற்றிய மருந்தையும் அதன் செய்முறையையும் காவிரியில் ஆடிஅமாவசையில் எறிந்திருக்கின்றோம். இரண்டாயிரம் ஆண்டுக்கு முன்னரே போரிலோ, விபத்திலோ கையிழந்த வாலிபனை அதன்பின்னரும் இருபது ஆண்டுகள் வாழும்வண்ணம் அறுவைசிகிச்சை செய்ததை மதுரையின் கோவலன்மெட்டில் அகழ்வாராய்ச்சியில் கார்பன் தரவுகள் சொல்லியிருந்தாலும், மிச்சமிருக்கும் சித்தமருத்துவத்தில் ஆய்வுசெய்ய அத்தனை தடைகள்.  நிறைய மனத்தடை; கொஞ்சம்தான் பணத்தடை. சிக்கன்குனியாவையும், டெங்குவையும் கொஞ்சம் நிறுத்தி இரத்ததட்டுகளை உயர்த்திய நிலவேம்பு போல 750க்கும் மேற்பட்ட தமிழ் மூலிகைகள் களைச்செடியாக மட்டும் காத்திருப்பதும் உதாசீனபடுத்துவதும் உலகிலேயே இங்கு மட்டும்தான் நடக்கும்.
பகுத்துண்டெல்லாம் பல்லுயிரெலாம் எல்லாம் ஓம்ப வேண்டாம்; ஒரு கம்பெனி, ஒரு விதை; ஒரு அரசன் என வாழ்வதுதான் நாகரீகம் என உணவிலும், கரிசனம் எந்த சப்ஜெக்ட்? நான் படிக்கலையே? நான் மட்டும் செங்குத்தாய் வளர்வதுதான் வளர்ச்சி எனும்  நவீனகல்வியிலும், படுவேகமாய்  நாம் நகரத்துவங்கியதில் தொற்றாவாழ்வியல் நோய்க் கூட்டம் சுனாமியாய் நம்மை நோக்கி நகர்ந்து வருகின்றது. இப்போதேனும் கொஞ்சம் விழிக்க வேண்டும்.


நவீன அறிவியலினின் தேடலும், நீண்ட மரபின் புரிதலும் அறம் எனும் புள்ளியில் ஒருங்கிணைய வேண்டும். நானோ துகள்களை தேடும் நுண் ஆடிகள், சாணத்து வறட்டியில் புடமிட்டுச் சமைத்த மருந்துகளை மறுதேடல் செய்யவேண்டும்.. இனி வழியில்லை; இன்னும் காலத்துக்கும் மருந்துதான்; மரணம் அடுத்த நிறுத்தத்தில்என இருக்கும் பல நோயாளிகளுக்கு இந்த ஒருங்கிணைப்பு மட்டுமே பதிலளிக்க முடியும். எந்த காலத்தில சார் நீங்க இருக்கீங்க.. ? எனக்கு அதைப்பத்தியெல்லாம் தெரியாது..எதனாச்சும் ஏற்பட்டிருச்சுன்னா அப்புறம் எங்கிட்ட வரக் கூடாது? சொல்லிட்டேன்”, எனும் ஆங்கில வாசகங்கள்  நோயாளிகளிடம் இனி வேண்டாம்; அத்தனையும் பொய்; ஆபத்து; நான் மட்டும்தான் உனக்கான ஆபத்பாந்தவன்” என நோயின் முழுப்புரிதலில்லாமல் சொல்லும் பழமை போர்த்திய மடமையும் வேண்டாம்.

என்னை நாடி வந்த நோயாளிக்கு, குறைந்த செலவில், கூடிய மட்டும் குறைந்த காலத்தில், முழுமையான, பக்கவிளைவில்லாத, மீண்டும் தலைகாட்டாத, படி நான் இந்த நவீனமருந்தை தருகிறேன். நீங்கள் உங்கள் சூரணத்தைக் கொடுங்கள். அந்த பாரம்பரிய மருத்துவர் தொட்டு உயிராற்றலை நகர்த்தட்டும். இன்னொருவர் மூச்சுக்கு பயிற்சிக்கு அளிக்கட்டும். பாதுக்காப்பான நஞ்சற்ற பாரம்பரிய உணவை நம் இயற்கை விவசாயி ஊட்டட்டும். காதலோடு அதை பரிமாறும் குடும்பமும், கனிவோடு உறவாடும் நட்பும் சேர்ந்து நோய்க்கான சிகிச்சையளீப்போம்என்பதுதான் நலம்360-ன் நாதம். இப்படி கட்டுரையை எழுதி முடித்துவிட்டு, கட்டுரையில் பிழை பார்த்துக் கொண்டிருக்கையில், என் அலைபேசியில் ஒரு குறுஞ்செய்தி. டாக்டர்! நான் மதுமேகநோய்க்கான நவீன மருத்தவர். நேற்று பார்த்த என் நோயருக்கு சிறுநீரக்க்கல்லிருக்கின்றது. அறுவைசிகிச்சை அவசியமில்லை என தோன்றுகிறது. அனுப்பிவைக்கிறேன். உங்கள் சித்தமருத்துவத்தில் சிகிச்சைதாருங்கள்”..

நலம் 360 நம்பிக்கையை விதைத்திருக்கின்றது!. கொஞ்சம் இளைப்பாறிவிட்டு, மீண்டும் வருகிறேன். வணக்கம்.

No comments: