இன்று (14.12.2011) தேனியில் நடந்த மனித சங்கிலி போராட்டத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்து கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தமிழகத்தில் 200 இடங்களில் உண்ணாவிரத்தை நடத்தியிருக்கிறோம். சுமார் 10 லட்சம் பேர் பங்கேற்ற உண்ணாவிரத்தை நடத்தி முடித்து, இன்று மனித சங்கிலி என்ற அறப்போராட்டத்தை நடத்தி இருக்கிறோம்.
முல்லைப் பெரியாறு பிரச்சினையில் தமிழகத்தின் உறுதிப்பாட்டை நிலைநாட்டுவதற்கும் மத்திய அரசின் உடனடியான கவனத்தை ஈர்ப்பதற்கும், முல்லைப்பெரியாறு அணை யினால் பாசன வசதி பெறும் தேனி, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், ராமநாதபுரம் மாவட்டங்களில் மாலை 3 மணி முதல் 5 மணி வரை மாபெரும் மனிதச்சங்கிலி அணிவகுப்பு நடத்துவதென்று திமுக செயற்குழு முடிவு செய்திருந்தது.
முல்லைப் பெரியாறு அணையின் பிரச்சனையை மையமாக வைத்து, நாம் இந்த போராட்டத்தை நடத்தியிருக்கிறோம். முறையான பதில் நமக்கு வழங்கப்பட வேண்டும் என்று சொன்னால், நம்முடைய உரிமை நமக்கு வந்தாக வேண்டும். அதுவரை நம்முடைய போராட்டம் தொடரும் என்கிற அந்த உணர்வோடு, இந்த மனித சங்கிலி போராட்டத்தை நடத்தியிருக்கிறோம்.
நாளைய தினம் (15.12.2011) தமிழக சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம், முல்லைப் பெரியாறு அணையின் பிரச்சனையை மையமாக வைத்து எல்லா கட்சிகளும் ஒருங்கிணைந்து ஏகமனதாக நிறைவேற்றப்படக்கூடிய ஒரு தீர்மானம் நிறைவேற்றப்படவிருக்கிறது என்ற நம்பிக்கையோடு நாம் காத்திருக்கிறோம்.
நான் ஒன்றை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். நம்முடைய செயற்குழுவிலே தீர்மானத்தை நாம் அங்கே நிறைவேற்றுகிற நேரத்தில் 12ஆம் தேதி உண்ணாவிரதமும், 15ஆம் தேதி மனித சங்கலியும் நடைபெறும் என்று முடிவு செய்தோம். 12ஆம் தேதி உண்ணாவிரதத்தை குறித்தபடி நடத்தி முடித்திருக்கிறோம். ஆனால் 15ஆம் தேதி நடைபெற இருந்த மனித சங்கலி போராட்டத்தை ஒருநாள் முன்னதாக இன்று (14.12.2011) நடத்த வேண்டிய அவசியம் என்ன. என்ன காரணம் என்பது உங்களுக்கு தெரியும்.
சட்டமன்றத்தை கூட்டுங்கள், சிறப்பு தீர்மானத்தை நிறைவேற்றுங்கள். முல்லைப் பெரியாறு அணையின் பிரச்சனையை மையமாக வைத்து, உடனடியாக அவசரமா சட்டப்பேரவையை கூட்டுங்கள் என்று, கலைஞர் இந்த பிரச்சனை வந்ததில் இருந்து சொல்லிக்கொண்டிருந்தார்.
கலைஞர் மட்டுமல்ல, இன்று தமிழகத்தில் இருக்கக்கூடிய எல்லா எதிர்க்கட்சிகளும், அதிமுகவுடன் கூட்டணி அமைத்து வெற்றி பெற்ற அந்த கட்சிகளும், அதனுடைய தோழமைக் கட்சிகளும், பல்வேறு மாற்றுக் கட்சிகளும், கலைஞர் எடுத்துரைத்த அதே கருத்தைத்தான் தொடர்ந்து வலியுறுத்தினார்கள்.
அப்படி வலியுறுத்திய நேரத்தில் அம்மையார் முதல் அமைச்சர் ஜெயலலிதா அவர்கள், சட்டமன்ற கூட்டத்தை கூட்ட வேண்டிய அவசியம் இல்லை. தேவையில்லை என்று ஆணித்தரமாக, பிடிவாதமாக அதே கருத்தை தொடர்ந்து சொல்லிக்கொண்டிருந்தார்.
திமுக செயற்குழுவைக் கூட்டி, இப்படி ஒரு அறப்போட்டத்தை நடத்தப்போவதாக முடிவு செய்து, 12ஆம் தேதி உண்ணாவிரதமும், 15ஆம் தேதி மனித சங்கலியும் நடத்தப்போவதாக அறிவித்த பிறகு, திடீரென்று விழித்துக்கொண்டதுபோல, ஒருவேளை நம்முடைய மனிதசங்கிலி போராட்டத்தை முறியடிக்க வேண்டும் என்ற காரணத்தினாலோ என்னவோ எனக்கு தெரியாது. அதனால் திடீரென்று ஜெயலலிதா அவர்கள், சட்டமன்றத்தின் அவசர கூட்டத்தை 15ஆம் தேதி நடக்கும் என்று அறிவித்தார்.
உடனே கலைஞர் அவர்கள் அந்த செய்தியை பார்த்தவுடன், திமுக பொதுச்செயலாளரை, பொருளாளரான என்னை, தலைமைக் கழகத்தில் இருக்கக் கூடிய நிர்வாகிகளையெல்லாம் உடனடியாக அண்ணா அறிவாலயத்துக்கு அழைத்து, நாம் நடத்தக்கூடிய மனித சங்கிலி போராட்டம் நடத்தக்கூடிய அதே 15ஆம் தேதி சட்டமன்ற கூட்டத்தை கூட்டியிருக்கிறார். என்று எங்களோடு கலந்து பேசி யோசித்து, உடனடியாக கலைஞர் அவர்கள் என்ன செய்தார் என்று கேட்டால்,
ஒருவேளை அம்மையார் ஜெயலலிதா அவர்கள் இதனை அரசியலாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தாலும், நாம் இதனை அரசியலாக்கக் கூடாது. இது மக்களோட பிரச்சனை. மக்களின் வாழ்வாதார பிரச்சனை. மக்களின் உரிமைப் பிரச்சனை. ஆகவே இதனை அரசியலாக்கக் கூடாது.
எனவே நம்முடைய போராட்டத்தை 15ஆம் தேதி நடத்த வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் சட்டமன்றத்தில் தென்பகுதியில் இருக்கக்கூடிய சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் இடம்பெற்றிருக்கிறார்கள். அவர்கள் சட்டமன்றத்திற்கும் செல்ல வேண்டும் என்றும் கலைஞர் அவர்கள் முடிவு செய்து, போராட்டத்தையும் நடத்த வேண்டும் என்று எண்ணி போராட்டத்தை முன்கூட்டியே நடத்தலாம்.
15ஆம் தேதி சட்டமன்ற கூட்டமா, நாங்கள் முன்கூட்டியே 14ஆம் தேதி மனித சங்கிலியை நடத்திக்கொள்கிறோம் என்று அறிவித்து, இந்த மனித சங்கிலி போராட்டத்தை, தென் பகுதிகளில் இருக்கக்கூடிய 5 மாவட்டங்களில் நாம் நடத்தியிருக்கிறோம்.
நான் எதற்காக இதை சொல்லுகிறேன் என்று சொன்னால், இதுதான் கலைஞர் அவர்களின் அரசியல் பண்பாடு. மக்களுடைய உணர்வுகளை புரிந்துகொண்டு அதற்கேற்ற வகையில், அந்த எண்ணத்தை பிரதிபலித்திருக்கிறார் என்பதை தயவு செய்து நீங்கள் புரிந்துக்கொள்ள வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment