முல்லைப் பெரியாறு விவாகரத்தில் கேரள&தமிழ்நாடு எல்லைப் பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது. கேரளாவில் உள்ள அரசியல் கட்சிகளின் தூண்டுதலால் எல்லைப்பகுதியில் உள்ள தமிழர்கள் தாக்கப்படுவதுடன் தமிழ்நாட்டிலிருந்து செல்லும் வாகனங்களும் தாக்குதலுக்கு உள்ளாகின்றன. இதையடுத்து தமிழகத்தில் உள்ள கேரள மாநிலத்தை சேர்ந்தவர்களின் கடைகள் தாக்கப்பட்டன.
இப்பிரச்சனை பற்றி நடிகர், நடிகைகள் தெரிவித்துள்ள கருத்து:
நடிகரும் இயக்குனருமான பார்த்திபன்: தமிழர்கள், மலையாளிகளுக்கு இடையேயான தாக்குதலை தடுக்க முதலில் நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் இப்பிரச்னைபற்றி ஆலோசித்து முடிவெடுத்து நல்லதொரு அறிவிப்பை வெளியிட வேண்டும். இதனால் அப்பாவி மக்களுக்கிடையேயான கருத்து வேறுபாடு மறையும்.
இப்பிரச்னையில் சினிமா கலைஞர்கள் தலையிடக்கூடாது ஏனென்றால் அவர்களுக்கு பிரச்னை பற்றி முழுமையாக யாரும் தெரிவிப்பதில்லை.
நடிகர் பிரசாந்த்: உயிர் வாழ முக்கிய ஆதாரம் தண்ணீர்தான். உயிரை காக்கக்கூடிய தண்ணீரை காரணம் காட்டி மனித உயிர்கள் பலியாகக்கூடாது. தமிழர்கள், மலையாளிகள் சகோதரர்களாகவே வாழ்ந்து வருகின்றனர். இப்பிரச்னைக்கு மத்திய, மாநில அரசுகள் சுமூக தீர்வு காண வேண்டும்.
நடிகை குஷ்பு: இப்பிரச்னையில் மாநில எல்லைபகுதிகளில் வாழும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். அணையை ஆராய்ந்து பார்த்து அதிகாரிகள் தந்த அறிக்கையில் அணைக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று கூறி உள்ளனர். எனவே இதில் வன்முறையில் ஈடுபடுவது தேவையற்றது. தமிழ் மக்களின் உயிர் எவ்வளவு முக்கியமோ அதுபோல கேரள மக்களின் உயிரும் முக்கியம். இப்பிரச்னைக்கு சுமூக காண முயற்சிக்க வேண்டும்.
நடிகைமம்தா: மக்களுக்காகத்தான் ஆட்சியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை மத்திய, மாநில அரசுகள் மறந்துவிட்டன. இப்பிரச்னையில் உடனடியாக தீர்வு காண்பதற்கு என்ன தடையாக இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை. இதில் நீண்ட கலந்தாய்வுகள் தேவையற்றது. உடனடியாக தீர்வு காண வேண்டும். அணை உடைந்தால் இருதரப்பு மக்களுமே பாதிக்கப்படுவார்கள் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.
நடிகர் சுரேஷ் கோபி: முல்லைபெரியாறு விவகாரத்தை தேசிய பாதுகாப்பு பிரச்னையாக மத்திய அரசு கருத வேண்டும். நீண்ட வருடமாக இருக்கும் இப்பிரச்னைக்கு உடனடி தீர்வு காண வேண்டும்.
No comments:
Post a Comment