
இந்தியாவில் ஆரியபட்டா காலத்திலேயே மரபுக்கணித முறைப்படி பூமியின் சுற்றளவு குறிக்கப்பட்டு இருக்கிறது. தூரத்தைக் கணக்கிடும் முறைகள் நடைமுறையில் இருந்தன. ஆனாலும், பூகோள இயல்பு குறித்து முழுமையாக அறியப்படவே இல்லை. ஆகவே, மன்னர்கள் காலத்தில் முறையான பூகோள வரைபடங்கள் எதுவும் உருவாக்கப்படவில்லை. காரணம், சிதறுண்டுகிடந்த தனித்தனி ராஜ்ஜியங்களும் அதன் எல்லைகளும் வரையறுக்கப்படாமல் இருந்ததுதான். மொத்த இந்தியா எவ்வளவு பெரியது என்ற துல்லியமான கணக்கு எந்த ஒரு பேரரசரிடமும் இல்லை. அவர்கள் பயண தூரத்தை வைத்துநிலத்தைக் கணக்கிட்டார்கள். ஆகவே, ஓர் ஊர் கடல் மட்டத்தில் இருந்து எவ்வளவு உயரத்தில் இருக்கிறது என்ற விவரத்தை அவர்களால் துல்லியமாக அறிய முடியவில்லை. படையெடுப்பின்போது அவர்களுக்கு இருந்த பெரிய சிக்கல்... படைகள் எந்தப் பாதையில் செல்ல வேண்டும்? எவ்வளவு உயரத்தில் அந்த ஊர் இருக்கிறது? எங்கே பதுங்கி சண்டையிடுவது என்பதே. அதற்காகப் பலவிதமான ரகசிய வரைபடங்கள் உருவாக்கப்பட்டன. ஆனால், எதுவும் துல்லியமானதாக இல்லை.இதன் காரணமாக ஓர் ஊரின் பரப்பளவு எவ்வளவு பெரியது? அதில் எவ்வளவு தூரம் காடும் மலைகளும் இருக்கின்றன? நதி எந்த திசையில் செல்கிறது? இரண்டு நகரங்களுக்கு இடைப்பட்ட நிலவெளி எவ்வளவு நீளமானது? மலையை எப்படிக் கடந்து செல்வது? என்பன போன்ற அடிப்படை விவரங்கள்கூட குழப்பமானதாக இருந்தன.இன்று நாம் பயன்படுத்துவது போல சகலரும் பூகோள வரைபடத்தை பயன்படுத்த அனுமதிக்கப்படவில்லை. வரைபடம் என்பது மிகவும் ரகசியமான ஒன்று. அது, பொக்கிஷ அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருக்கும். போர்க் காலங்களில்தான் அதை வெளியே எடுப்பார்கள். மற்ற காலங்களில் திசையை வைத்தும், சூரியனை வைத்துமே தூரத்தைக் கணக்கிட்டுக் கொண்டார்கள். நிலவரைபடம் உருவாக்கும் விஞ்ஞானம் தனித்த அறிவுத் துறையாக வளரவே இல்லை.11-ம் நூற்றாண்டில் பெர்ஷியாவைச் சேர்ந்த அல்பெருனீ இந்தியாவுக்கு வந்து, அன்றிருந்த ராஜ்ஜியங்களை மாதிரியாகக்கொண்டு ஒரு பிரத்யேக வரைபடத்தை உருவாக்கி இருக்கிறார். ஆனால், அந்தப் படம் முழுமையானதாக இல்லை.
மொகலாய காலத்தைய வரைபடங்களைப்பற்றி, அக்பரின் 'அயினிஅக்பரி’ என்ற நூல் விரிவாகப் பேசுகிறது. அவை, அலி கஷ்மீரி இபின் லுமான் என்பவரால் உருவாக்கப்பட்டது என்று கூறுகிறது. அதுவும் துல்லியமானது இல்லை.அடிப்படையான நிலவியல் விவரங்கள் இல்லாத காரணத்தால் பயணம் போவதும், வணிகச் சந்தை அமைப்பதும், நிர்வாகத்தைப் பிரித்து வரிவசூல் செய்வதும், படை நடத்திப்போவதும் நடைமுறைப் பிரச்னையாக இருந்தது. அதுதான் இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷ் அரசுக்கும் முக்கியமான சிக்கலாக இருந்தது.வெள்ளைக்காரர்கள் இந்தியாவுக்கு நன்மை பயக்கும் எதைச் செய்தாலும், அதற்குள் அவர்களது சுயநலம் ஒளிந்தே இருக்கும். அப்படி, நன்மையும் சுயநலமும் கலந்து உருவானதே இந்தியன் லேண்ட் சர்வே. குறிப்பாக, கிரேட் திரிகோண மெட்ரிக் சர்வே எனப்படும் நில அளவைத் திட்டம்.இந்த நில அளவையியலை முன்னின்று நடத்தியவர் கலோனியல் வில்லியம் லாம்டன் என்ற பிரிட்டிஷ் அதிகாரி. முக்கோண முறையின் அடிப்படையில் கிரேட் ஆர்க் எனப்படும் மாய வளைவை வரைந்து, அதில் இருந்து இரண்டு புள்ளிகளுக்கு இடைப்பட்ட தூரத்தைக் கணக்கிட்டார்கள். இந்தப் பணிக்கு 'தியோடலைட்’ என்ற கருவி பயன்படுத்தப்பட்டது.எனது 'யாமம்’ நாவலை, லாம்டன் சர்வேயை மையமாகக்கொண்டு எழுதியிருக்கிறேன். அதில், இந்தநிலஅளவைப் பணி விரிவாகப் பேசப்பட்டிருக்கிறது. இந்தியாவை அளக்கும் இந்த மாபெரும் திட்டம் சென்னையில்தான் துவங்கியது. அதுவும் பரங்கிமலையில்தான் துவங்கியது. இந்த நில அளவையின் முடிவில்தான், உலகின் மிக உயர்ந்த சிகரம் எவரெஸ்ட் என்று கண்டுபிடிக்கப்பட்டது என்றால், எங்கோ இருக்கும் எவரெஸ்ட்டுக்கும் சென்னையில் உள்ள பரங்கிமலைக்கும் தொடர்பு இருக்கிறதுதானே!பரங்கிமலையில் உள்ள புனித தாமஸின் தேவாலயத்தை நிறையப் பேர் அறிந்திருப்பார்கள். அந்த தேவாலயத்தின் அருகிலேதான் லாம்டன் தனது நில அளவைப் பணியைத் துவக்கிய இடம் உள்ளது. அங்கே ஒரு நினைவுச் சின்னமும் எழுப்பப்பட்டு இருக்கிறது.

லாம்டன் கூடவே பிரான்சிஸ் புகானின் என்ற தாவரவியல் ஆய்வாளர் மைசூர் பகுதியில் உள்ள தாவரங்களை முறையாகப் பட்டியலிட்டு வகைப்படுத்தும்படி அனுப்பி வைக்கப்பட்டார். இந்தத் திட்டங்களை முன்மொழிந்தவர் காலின் மெக்கன்சி.மொத்த நிலப்பரப்பை அளவிடுவது என்பது எளிதானது இல்லை. அதற்கான விசேஷ உபகரணங்கள் எதுவும் இந்தியாவில் கிடையாது. கூடுதலாக எப்படித் தகவல்களைப் பதிவு செய்வது? எந்த முறையில் கணக்கிடுவது? அதை எவ்வாறு தொகுத்து வரைபடமாக்குவது? என்ற சிக்கல்கள் எழுந்தன. அந்தப் பணியை வெற்றிகரமாக செய்து முடிக்க, கணிதம், பொறியியல் துறைகளைச் சார்ந்தவர்கள் பணிக்கு அமர்ந்தப்பட்டார்கள். 200-க்கும் மேற்பட்ட கூலிகள், சர்வே பணியில் ஈடுபடுத்தப்பட்டார்கள். 12 யானைகள், 30 குதிரைகள், 42 ஒட்டகங்கள் சுமைகளைக் கொண்டுசெல்லப் பயன்படுத்தப்பட்டன.
நன்றி : ஜூனியர் விகடன்
நன்றி : ஜூனியர் விகடன்
4 comments:
அடடே.... நீளமா இருக்கே பதிவு.....
வாசிக்க:
ஈரோடு பதிவர் சங்கமம்: பதிவர்களின் அட்டகாச அலப்பரை...
புதிய தகவல் அறிந்து கொண்டேன்...!!!
ஜூனியர் விகடன் லயும் படிச்சேன்.. பகிர்வுக்கு நன்றி
வாங்க வாழ்த்துங்க
செல்லக் குட்டி பிறந்தநாள்
நன்றி ஜூனியர் விகடன்
Post a Comment