நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் இன்று காலை 5.8 ரிக்டர் அளவில் அடுத்தடுத்து 2 சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. அதிகாலை 1.58 மணியளவில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது. வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின. வீட்டில் இருந்த பொருட்கள் கீழே உருண்டன. தூங்கி கொண்டிருந்த மக்கள் பதறியடித்து வீதிகளுக்கு ஓடி வந்தனர். பின்னர் 70 நிமிடங்கள் கழித்து அடுத்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள் செல்ல பயந்து தெருக்களிலேயே இருந்தனர். நிலநடுக்கத்தால் ஷாப்பிங் மாலில் இருந்த ஒருவர் காயமடைந்தார். அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பல பகுதிகளில் தொலைதொடர்பு, மின்சார சேவை துண்டிக்கப்பட்டது. பாதுகாப்பு நடவடிக்கையாக கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள சர்வதேச விமான நிலையம், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டன. நிலநடுக்கத்தால் உயிரிழப்பு, பெரிய அளவில் சேதம் எதுவும் இல்லை என்று போலீசார் தெரிவித்தனர். நியூசிலாந்தில் கடந்த பிப்ரவரியில் 6.3 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 181 பேர் பலியாயினர். அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் பகுதியில் நியூசிலாந்து அமைந்துள்ளது. அங்கு ஒரு வருடத்தில் சுமார் 15 ஆயிரம் முறை நில அதிர்வுகள் ஏற்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment