Nov 13, 2011

அமெரிக்க ஏர்போர்ட்டில் அப்துல் கலாமிடம் கோட்,ஷூவை கழற்றி 2 முறை வெடிகுண்டு சோதனை !


 அமெரிக்க ஏர்போர்ட்டில் முன்னாள் ஜனாதிபதியும் அணு விஞ்ஞானியுமான அப்துல் கலாமின் கோட், ஷூவை கழற்றி பாதுகாப்பு அதிகாரிகள் 2 முறை வெடிகுண்டு சோதனையிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இரட்டை கோபுரங்களை, அல் கய்தா தீவிரவாதிகள் தகர்த்த பின் பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகரித்தன. குறிப்பாக விமான நிலையங்களில் தீவிர கண்காணிப்பு போடப்பட்டுள்ளது. ஆனால், வெளிநாட்டில் இருந்து வரும் தூதர்கள், தலைவர்களை கூட அவர்கள் விட்டு வைக்காமல் சோதனை செய்வதற்கு பல நாடுகள் கண்டனம் தெரிவித்தன. இந்தியாவில் இருந்து சென்ற முன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ், பெண் தூதர் மீரா சங்கரை அமெரிக்க விமான நிலையத்தில் அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது.
கடந்த 2009ம் ஆண்டு டெல்லியில் விஞ்ஞானி அப்துல் கலாமிடம் அமெரிக்க ஏர்லைன்ஸ் அதிகாரிகள் சோதனையிட்டனர். அதற்கு மத்திய அரசு, அரசியல் தலைவர்கள், மக்கள் என பல தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். ஆனால், பாதுகாப்பு விதிகளின்படிதான் சோதனையிடுகிறோம் என்று அமெரிக்கா கூறியது. எனினும் தொடர்ந்து இந்திய தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் நியூயார்க்கில் பல்வேறு நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு 29ம் தேதி இந்தியா திரும்ப ஜான் எப் கென்னடி விமான நிலையத்துக்கு அப்துல் கலாம் வந்துள்ளார். அப்போது விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் கலாமை தீவிர சோதனையிட வேண்டும் என்று கூறியுள்ளனர். அதற்கு ஏர் இந்தியா அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும், வலுக்கட்டாயமாக கலாமின் கோட் மற்றும் ஷூக்களை கழற்றி வெடிகுண்டுகள் இருக்கிறதா என்று அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அதற்கு எதிர்ப்பு எதுவும் தெரிவிக்காத கலாம், அமைதியாக விமானத்துக்குள் சென்று சீட்டில் அமர்ந்தார். சிறிது நேரம் கழித்து விமானத்துக்குள் வந்த அதிகாரிகள், கலாமை மீண்டும் சோதனையிட வேண்டும் என்று கூறினர். கோபம் அடைந்த ஏர் இந்தியா அதிகாரிகள் கடும் கண்டனம் தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போதும் அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள், கலாமின் கோட், ஷூக்களை கழற்றி சோதனையிட்டனர். பின்னர் அவற்றை கலாமிடம் திருப்பி கொடுத்தனர். இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி, அணு விஞ்ஞானி என்று கூறியும் 2 முறை சோதனையிட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்க விஐபிக்களை சோதனையிடுவோம்
எஸ்.எம்.கிருஷ்ணா ஆவேசம்
இந்திய தூதர்கள், தலைவர்களை சோதனை செய்வதை நிறுத்தாவிட்டால், அமெரிக்காவில் இருந்து இந்தியா வரும் அமெரிக்க தலைவர்களை சோதனையிட வேண்டிய நிலை வரும் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கடுமையாக கூறியுள்ளார்.
அணு விஞ்ஞானியும், முன்னாள் ஜனாதிபதியுமான அப்துல் கலாமை, நியூயார்க் விமான நிலையத்தில் 2 முறை சோதனை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து அமெரிக்காவுக்கான இந்திய தூதர் நிருபமா ராவை தொலைபேசியில் தொடர்பு கொண்ட வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, இந்த பிரச்னையை அமெரிக்க நிர்வாகத்தின் கவனத்துக்கு எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க கேட்டுக் கொண்டார்.
மேலும், அமெரிக்க விமான நிலையத்தில் கலாமை 2 முறை சோதனையிட்டது கடும் கண்டனத்துக்கு உரியது. இதுபோன்ற ஏற்றுக் கொள்ள முடியாத செயல்களை அமெரிக்க அதிகாரிகள் உடனடியாக நிறுத்தாவிட்டால், இந்தியா வரும் அமெரிக்க தலைவர்களையும் விஐபிக்களையும் நாங்கள் சோதனையிட வேண்டியிருக்கும் என்று எஸ்.எம்.கிருஷ்ணா எச்சரித்துள்ளார். மேலும், கலாமிடம் சோதனை நடந்தது குறித்து முழு அறிக்கை அளிக்க அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்தை கிருஷ்ணா கேட்டுக் கொண்டுள்ளார்.

No comments: