Nov 16, 2011

நில அபகரிப்பு வழக்கில் நடிகரும் ராமநாதபுரம் தொகுதி திமுக எம்.பி.யுமான ஜே.கே.ரித்தீஷ் இன்று அதிகாலை கைது


 நில அபகரிப்பு வழக்கில் நடிகரும் ராமநாதபுரம் தொகுதி திமுக எம்.பி.யுமான ஜே.கே.ரித்தீஷ் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டார். மயிலாப்பூர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த அவரை காஞ்சிபுரம் போலீசார் எழுப்பி கைது செய்து எஸ்.பி. அலுவலகத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு திமுகவினர் திரண்டதால் பரபரப்பு
ஏற்பட்டது.காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த சுங்குவார்சத்திரம் சேந்தமங்கலத்தை சேர்ந்தவர் சாமிக்கண்ணு, நில புரோக்கர். இவர், காஞ்சிபுரம் மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:பிரபல நடிகரும் ராமநாதபுரம் தொகுதி எம்.பி.யுமான ஜே.கே.ரித்தீஷ், சேந்தமங்கலத்தில் எனக்கு சொந்தமாக இருந்த 1.45 ஏக்கர் நிலத்தை போலி கையெழுத்து போட்டு, டெல்லியை சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு விற்றுள்ளார். நிலத்தை அபகரித்து மோசடி செய்த அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது நிலத்தை மீட்டுத் தரவேண்டும்.இவ்வாறு புகாரில் கூறியிருந்தார். அதன் அடிப்படையில், நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில், காஞ்சிபுரம் நில அபகரிப்பு தடுப்பு பிரிவு ஏடிஎஸ்பி பாஸ்கரன் தலைமையில் போலீசார் இன்று அதிகாலை 5 மணிக்கு சென்னை மயிலாப்பூரில்
உள்ள ரித்தீஷ் வீட்டுக்கு வந்தனர். அங்கிருந்த காவலாளியிடம் ‘ரித்தீஷ் இருக்கிறாரா’ என்று கேட்டபடி உள்ளே புகுந்தனர். வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ரித்தீஷை எழுப்பி கைது செய்வதாக போலீசார் கூறினர்.
‘‘எதற்காக என்னை கைது செய்கிறீர்கள். என் மீது என்ன புகார் உள்ளது’’ என்று ரித்தீஷ் கேட்டபோது போலீசார் பதில் எதுவும் கூறவில்லை. பின்னர், அவரைஅழைத்துச் சென்று போலீஸ் ஜீப்பில் ஏற்றினர். ‘எங்கு கொண்டு போகிறீர்கள்’ என்று அவரது உதவியாளர் போஸ் கேட்டுள்ளார். அதற்கும் போலீசார் பதில் கூறவில்லை. வீட்டில் இருந்தவர்களும் வேலையாட்களும் போலீஸ் ஜீப் முன்பு கூடியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து காஞ்சிபுரம் எஸ்பி அலுவலகத்துக்கு ரித்தீஷை  கொண்டு சென்றனர். அவர் மீது 465, 467, 468, 471, 420, 109 ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு
செய்யப்பட்டுள்ளது. நில அபகரிப்பு தொடர்பாக அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையே, ரித்தீஷ் கைது செய்யப்பட்ட தகவல் பரவியதும் காஞ்சிபுரம் எஸ்.பி. அலுவலகம் முன்பு திமுகவினர் திரண்டனர். காஞ்சிபுரம் நகர செயலாளர்
சேகர், ஒன்றிய செயலாளர் பி.எம்.குமார், மாவட்ட துணை செயலாளர் பொன்மொழி, முன்னாள் நகராட்சி தலைவர் சன் பிரான்ட் ஆறுமுகம் தலைமையில்
ஏராளமான திமுகவினர் குவிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ரித்தீஷ் உதவியாளர் போஸ் கூறுகையில், ‘‘மக்கள் நல பணியாளர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டதை கண்டித்து ராமநாதபுரத்தில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் ரித்தீஷ் கலந்து கொண்டார்.இரவுதான் வீட்டுக்கு வந்தார். அதிகாலையில் 5 போலீசார் வந்து, அவரை கைது செய்தனர். கைதுக்கான காரணம் குறித்து
கேட்டபோது எதுவும் கூறவில்லை. எந்த காரணமும் இல்லாமல் அவரை கைது செய்துள்ளனர்’’ என்றார்.

No comments: