Nov 17, 2011

பேருந்து கட்டணங்கள் மற்றும் பால் விலையை உயர்த்தும் தமிழக அரசின் முடிவுக்கு தலைவர்கள் கடும் எதிர்ப்பு


பேருந்து கட்டணங்கள் மற்றும் பால் விலையை உயர்த்தும்:தமிழக அரசின் முடிவுக்கு மதிமுக பொதுச் செயலர் வைகோ திமுக தலைவர் கருணாநிதி, தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்ளிட்ட தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.மேலும், மின் கட்டணத்தை உயர்த்துவதற்காக, மின்சார ஒழுங்குமுறை ஆணையத்துக்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்திருப்பதற்கும் அவர்கள் கண்டித்துள்ளனர்.
தமிழகத்தில் பேருந்து கட்டணங்கள் மற்றும் பால் விலையை உயர்த்தப்பட்டது தொடர்பாக அரசியல் கட்சித் தலைவர்கள் வெளியிட்ட கருத்துகள்:

 மதிமுக பொதுச் செயலர் வைகோ:
"ஜெயலலிதாவின் மக்கள் விரோத போக்கின் அடையாளம்தான் இந்த விலையேற்றம். இலவச திட்டங்களை கொடுத்து விலையை உயர்த்தியுள்ளது கண்டிக்கத்தக்கது."
 
 திமுக தலைவர் கருணாநிதி:
பேருந்து கட்டணம், பால் விலை உயர்வை கண்டிக்கிறேன். விலை உயர்வுக்கான காரணம் என்னவென்று ஆராய்ந்து, திமுக தனது கருத்தை தெரிவிக்கும். தேவைப்பட்டால் திமுக போராட்டத்தில் ஈடுபடும்.




தேமுதிக தலைவர் விஜயகாந்த்:
அரசின் முடிவு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. தமிழக அரசு அறிவித்துள்ள விலையேற்றம் மக்களை ஏமாற்றும் செயல். இந்த விலையேற்றத்தை உடனடியாக திரும்பப் பெறவேண்டும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன்:
அதிமுகவுக்கு வாக்களித்து மிகுந்த எதிர்பார்ப்போடு இருந்த ஏழை, எளிய சாதாரண மக்களுக்கு நிவாரணம் அளிப்பதற்கு பதிலாக, தமிழக முதல்வர் அறிவித்துள்ள இந்த கட்டண உயர்வுகள் வெந்தப்புண்ணில் வேலை பாய்ச்சுவது போல கடுமையான பாதிப்பை உருவாக்கியுள்ளது.
மாநில அரசின் இந்த விலை உயர்வை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வன்மையாக கண்டிப்பதோடு, அறிவித்துள்ள கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டுமென வலியுறுத்துகிறோம்.
இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் தா.பாண்டியன்:
           "பொருளாதார சுமையை சுமக்க முடியாமல் இருக்கும் மக்களின் தலையில்  கூடுதலாக சுமையை ஏற்றி வைப்பது, எந்தவிதத்திலும் நியாயமானதுமாற்று வழிகளை கண்டறிந்து இன்றைய நெருக்கடிகளைத் தீர்ப்பதற்கு தமிழக அரசு முயற்சிக்க வேண்டும். இதற்குப் பதிலாக மக்களின் மீது கட்டண உயர்வை உயர்த்துவது எந்தவிதத்திலும் நியாயமானது ஆகாது."
பாமக நிறுவனர் ராமதாஸ்:
"தமிழ்நாடு மின்சாரவாரியமாக இருந்தாலும், அரசு போக்குவரத்து கழகங்களாக இருந்தாலும் ஆவின் நிறுவனமாக இருந்தாலும் அதில் இழப்பு ஏற்படுவதற்கு நிருவாக குறைபாடுகளும், அதன் முக்கிய பதவிகளில் இருப்போரின் சுரண்டலும்தான் காரணமாகும்.
ஏற்கெனவே விலை உயர்வால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் மக்கள் மீது மேலும் சுமைகளை சுமத்துவது மக்கள் நலனில் அதிமுக அரசுக்கு அக்கறை இல்லை என்பதையே காட்டுகிறது. தமிழக அரசின் இத்தகைய போக்கை கண்டித்து மிகப்பெரிய அளவில் மக்கள் போராட்டம் வெடிக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை."

No comments: