வாகனங்களில் முறைகேடு செய்ய முடியாத நம்பர் பிளேட்களை பொருத்தும் திட்டத்தை 4 வாரத்தில் அமல்படுத்த வேண்டும்’ என்று மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், இதுதான் கடைசி வாய்ப்பு என்றும் எச்சரித்துள்ளது. வாகனங்களில் பயன்படுத்தும் நம்பர் பிளேட்களில் தீவிரவாதிகள், சமூக விரோதிகள் முறைகேடுகள் செய்து பல்வேறு தீவிரவாத செயல்களில் ஈடுபடுகின்றனர். இதை தடுப்பதற்காக, முறைகேடுகள் செய்ய முடியாத அதிக பாதுகாப்புமிக்க நம்பர் பிளேட்களை வாகனங்களில் பொருத்துவதற்கான உத்தரவை கடந்த 2001ல் மத்திய அரசு பிறப்பித்தது. ஆனால், இதை அமல்படுத்துவதில் மாநில அரசுகள் ஆர்வம் காட்டவில்லை.
இதையடுத்து, இதை அமல்படுத்தும்படி மாநில அரசுகளுக்கு உத்தரவிடும்படி அகில இந்திய தீவிரவாத எதிர்ப்பு இயக்கத்தின் தலைவர் எம்.எஸ்.பிட்டா, உச்ச நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த திட்டத்தை அமல்படுத்தும்படி பலமுறை உத்தரவிட்டும் மாநில அரசுகள் பின்பற்றவில்லை. இந்த நிலையில், தலைமை நீதிபதி கபாடியா தலைமையிலான பெஞ்ச் முன்னிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது, ‘முறைகேடு செய்ய முடியாத நம்பர் பிளேட் திட்டத்தை அனைத்து மாநில அரசுகளும் 4 வாரத்தில் அமல்படுத்த வேண்டும். இதுதான் கடைசி வாய்ப்பு. இனிமேல், அவகாசம் எதுவும் கொடுக்க முடியாது. இந்த உத்தரவை அமல்படுத்தாவிட்டால், சம்பந்தப்பட்ட மாநில அரசு அதிகாரிகள் மீது நோட்டீஸ் எதுவும் கொடுக்காமல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும். இந்த உத்தரவை அமல்படுத்துவது பற்றி மாநில அரசுகள் 4 வாரத்தில் பதில் வாக்குமூலம் தாக்கல் செய்ய வேண்டும்’’ என்று பெஞ்ச் கடுமையாக உத்தரவிட்டது.
No comments:
Post a Comment