Dec 5, 2011

விவகாரம் விஸ்வரூபம்; எல்லையில் பதற்றம்; கேரளாவுக்கு பஸ் -லாரிகள் நிறுத்தம்

விவகாரம் விஸ்வரூபம்; எல்லையில் பதற்றம்; 
கேரளாவுக்கு பஸ் -லாரிகள் நிறுத்தம் தமிழகத்தில் இருந்து சென்ற லாரி டிரைவர்களை கேரள எல்லையில் மர்ம கும்பல் சரமாரியாக தாக்கியது. வண்டிப்பெரியாறு அருகே தமிழக ஐயப்ப பக்தர்களுக்கு செருப்பு மாலை போட்டு அவமரியாதை செய்து மர்ம ஆசாமிகள் விரட்டியடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதையடுத்து, கேரளாவுக்கு செல்லும் பஸ், லாரி, வேன் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டன. இரு மாநில எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

முல்லை பெரியாறு அணை விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. அணை பலவீனமாக இருப்பதாகவும் அணை உடைந்து பேரழிவு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் கேரள அரசு கூறிவருகிறது.

தற்போதைய அணையை இடித்துவிட்டு புதிய அணை கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை கேரளாவில் அனைத்து கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன. 

தண்ணீர் தர மறுப்பதற்காக கேரளா பொய் புரளி கிளப்புகிறது என்று தமிழக அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. 

தமிழர்களை தாக்குவது, தமிழக வாகனங்கள் சேதப்படுத்தப்படுவது, பெரியாறு அணை தலைமதகு பகுதிக்குள் அத்துமீறி நுழைவது, பேபி அணையை உடைக்க முயற்சிப்பது போன்ற செயல்களில் கேரள அரசியல் கட்சியினர் ஓரிரு நாளாக ஈடுபட்டு வருகின்றனர். 


இதற்கிடையில், தேனியில் இருந்து நேற்று மளிகை பொருட்கள் ஏற்றிக்கொண்டு கேரளா சென்றுவிட்டு இரவு திரும்பிய லாரியை குமுளியில் வழிமறித்து ஒரு கும்பல் உருட்டுக்கட்டைகளால் பயங்கரமாக தாக்கியது. லாரி கண்ணாடிகள், முகப்பு விளக்குகளை அடித்து நொறுக்கிய கும்பல், லாரி டிரைவர் ஸ்டாலினை (32) சரமாரியாக தாக்கியது.

தமிழக பகுதிக்கு ஓடிவந்ததால் தப்பினார். அவர் கூறுகையில், “நள்ளிரவு 12 மணியளவில் குமுளி வணிகவரி செக்போஸ்ட் அருகே உருட்டு கட்டைகளுடன் வந்த கும்பல் மறித்தது. என்னை கீழே இறக்கி சரமாரியாக அடித்து, உதைத்தனர். அந்த கும்பலிடம் இருந்து தப்பி, தமிழக எல்லைக்குள் நுழைந்ததால் உயிர் பிழைத்தேன்” என்றார். 


இதை தொடர்ந்து, தமிழக & கேரள எல்லை பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. உயிருக்கு பாதுகாப்பு இல்லாததால் கேரளாவுக்கு செல்ல மாட்டோம் என்று கூறி, ஆங்காங்கே லாரிகளை டிரைவர்கள் நிறுத்தினர்.

பெரியகுளம் அருகே தேவதானப்பட்டி, சின்னமனூர், லோயர்கேம்ப், கம்பம்மெட்டு உள்ளிட்ட இடங்களில் உள்ள செக்போஸ்ட்களில் நூற்றுக்கணக்கான லாரி, வேன் உள்ளிட்ட வாகனங்கள், பால், காய்கறி ஏற்றிய சரக்கு லாரிகள், ஐயப்ப பக்தர்களின் வாகனங்கள் நிறுத்தப்பட்டன. இதனால் பல கி.மீ. தூரத்துக்கு வாகனங்கள் தேங்கின. தமிழகம் & கேரளா இடையே அரசு பஸ் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. 


தமிழகத்தில் இருந்து அதிகாலையில் கேரளாவுக்கு தோட்ட தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற ஜீப்களும் பாதி வழியில் திருப்பி விடப்பட்டன. கூடலூர், லோயர்கேம்ப் பகுதியில் கேரளாவில் இருந்து தமிழகம் வந்த வாகனங்கள் முன்பு மக்கள் மறியலில் ஈடுபட்டனர். காலை 9 மணிக்கு பின்னர் ஐயப்ப பக்தர்களின் வாகனங்கள் மட்டும் ஒவ்வொன்றாக கேரளா செல்ல அனுமதிக்கப்பட்டன. 


இதற்கிடையில், ஐயப்ப பக்தர்கள் தாக்கப்பட்டிருப்பதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சபரிமலை செல்லும் பக்தர்கள் பலர் குமுளி வழியாக வண்டிப்பெரியாறு சென்று அங்கிருந்து புல்மேடு வழியாக சன்னிதானம் செல்வார்கள். இந்த வழியாக சென்ற தமிழக ஐயப்ப பக்தர்களை வண்டிப்பெரியாறு அருகே ஒரு கும்பல் நேற்று இரவு வழிமறித்துள்ளது.

‘உங்களுக்கு எங்க சாமி எதுக்கு? மரியாதையா திரும்பி போய்டுங்க’ என்று கூறி மிரட்டியுள்ளனர். சில பக்தர்களுக்கு செருப்பு மாலை போட்டு அவமதித்துள்ளனர். இதையடுத்து, சபரிமலை செல்லாமல் திரும்பிய பக்தர்கள் தேனி மாவட்டம் வீரபாண்டிக்கு வந்து போலீசாரிடமும் ஐயப்பா சேவா சங்கத்திலும் புகார் செய்தனர். 


எல்லையில் பதற்றமான சூழல் நீடிப்பதால், அசம்பாவிதம் தவிர்க்க இரு மாநில போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

No comments: