Dec 10, 2011

" ஒஸ்தி " விமர்சனம்


இரு தந்தைக்கு பிறந்த ஒரு தாய் வயிற்று பிள்ளைகள் சிம்புவும் ஜித்தன் ரமேஷும். இவர்களது குடும்ப பிரச்சினையில் வில்லன் நுழைந்து பிரச்சினை செய்கிறான். இதுதான் இப்படத்தின் ஒன் லைன் ஸ்டோரி. இதை வைத்து தனது கமர்ஷியல் வித்தையை காட்டியிருக்கிறார் இயக்குனர் தரணி. சிம்பு குழந்தையாக இருக்கும் போதே அவரது அப்பா இறந்து விட, அவரது அம்மாவான ரேவதி நாசரை திருமணம் செய்து கொள்கிறார்.

அவர்களுக்கு பிறந்தவர்தான் ஜித்தன் ரமேஷ். சிம்பு மேல் பாசம் இல்லாமல் ஜித்தன் ரமேஷ் மேல் பாசம் கொள்கிறார் நாசர். இதனால் சிறுவயதில் இருந்தே அண்ணன் தம்பிகள் இருவரும் முட்டிக் கொள்கின்றனர். பாரபட்சம் காட்டுவதால் சிறுவயதிலிருந்தே தந்தையை வெறுக்கிறார் சிம்பு.


பதினைந்து வருடங்களுக்குப் பிறகு அண்ணனான சிம்பு நன்கு படித்து, அவரது ஊரான காட்டுப்பாக்கத்திற்கு இன்ஸ்பெக்டராக வருகிறார். அவரது தம்பியான ஜித்தன் ரமேஷ் ஊதாரித்தனமாக இருப்பதால், நாசருடன் அவரது எண்ணெய் கடையை பார்த்துக் கொண்டிருக்கிறார்.

பாக்சர் டேனியலாக வரும் சோனு சூட், அந்த தொகுதியில் நடைபெறும் இடைத் தேர்தலில் வேட்பாளராக நிற்கிறார். ஓட்டுப் போடுவதற்காக மக்களிடம் பணம் கொடுக்க 75 லட்ச ரூபாயை அனுப்பி வைக்கிறார். அதை இன்ஸ்பெக்டர் ஒஸ்தி வேலனாக வரும் சிம்பு கைப்பற்றி விடுவதால், இருவருக்கும் பகை மூள்கிறது.

பகையால் தனது அம்மாவான ரேவதியை இழந்து விடுகிறார் சிம்பு. இதனிடையே ரிச்சா மீது காதல் கொண்டு, கல்யாணமும் செய்து கொள்கிறார். சிம்புவை நேரடியாக வீழ்த்த முடியாது என்பதை உணர்ந்து கொள்ளும் சோனு சூட், சிம்புவின் தம்பியை பகடைக்காயாக்கி சிம்புவிற்கு எதிராக திருப்புகிறார்.

இதை எல்லாம் தாண்டி ஒஸ்தி வேலன் எப்படி ஒஸ்தியாகிறார் என்பதை காட்டி ஒஸ்தியின் குஸ்திக்கு முடிவு சொல்லி இருக்கிறார் தரணி.   ஒஸ்தி வேலனாக வரும் சிம்புவிற்கு இன்ஸ்பெக்டர் வேடம் கன கச்சிதமாக பொருந்துகிறது.

சோனு சூட்டின் பணத்தை கொள்ளையடித்து அந்த பணத்திலேயே போலீஸ் ஸ்டேஷனுக்கு கார் வாங்குவதாகட்டும், சோனு சூட்டின் ஆளான கலெக்டர் பாலா சிங்கிடம் கணக்கு காட்டுவதாகட்டும், அமைச்சராக வரும் விஜயகுமாரை மடக்குவதாகட்டும் தன் பணியை சிறப்பாக செய்திருக்கிறார். நடிப்பில் தேர்ந்த சிம்பு தெரிகிறார்.

நெடுவாழி கேரக்டராக வரும் ரிச்சா கங்கோபாத்யாய். இடையழகி, நடையழகி, சிரிப்பழகி, சிவப்பழகி என்ற சொல்லும் அளவிற்கு அழகில் மிளிர்கிறார். ஆனால் இவருக்கு நடிப்பதற்கான வாய்ப்புகள் படத்தில் இல்லை என்பதே உண்மை. பாடலுக்கு வருகிறார் ஆடுகிறார். சிம்புவுடன் கை கோர்த்து செல்கிறார்.

இவரின் தந்தையாக வரும் விடிவி கணேஷ் சில காட்சிகளே வந்தாலும் சிறப்பாக செய்திருக்கிறார். சிம்புவின் அம்மாவாக வரும் ரேவதி, சிம்புவிற்காக ஒரு புறமும் நாசர், ஜித்தன் ரமேஷிற்காக ஒரு புறமும் இருந்து கொண்டு தவிக்கும் தாயாக வந்து மனதில் நிறைகிறார். இவரை சோனு சூட் கொல்லும் போது, நடிப்பால் நம் மனதை கனக்க செய்கிறார்.

நாசர் தன் பங்கை உணர்ந்து நடித்திருக்கிறார். ஜித்தன் ரமேஷ் நடிப்பில் பாஸ் மார்க் வாங்கியிருக்கிறார். தன் காதலியான சரண்யா மோகனிடம் குறும்பு செய்வதாகட்டும், அம்மாவிடம் மாட்டிக் கொண்டு அழுவதாகட்டும்... நிறைவாய் செய்திருகிறார். வழக்கமான வில்லனாக சோனு சூட் வந்தாலும், உயிரை விடும் காட்சியில் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

காமெடி பொறுப்பை சந்தானம், மயில் சாமி, தம்பி ராமையா குரூப் கவனித்துக் கொள்கிறது. இவர்களது சில காமெடி குபீர் சிரிப்பை வரவழைத்தாலும், சில இடங்களில் நெளிய வைக்கிறது. “அம்மா சாமிகிட்ட போயிடிச்சுன்னு சொல்லக் கூடாது.. ஏன்னா அவ வாழும் போதே சாமியாத்தான் வாழுறா...’’ என்று சிம்பு பேசும் வசனத்தில், வசனகர்த்தா பரதனின் திறமை தெரிகிறது.

“குவார்ட்டரை கருமாந்திரம்னு சொல்லாதே... அப்புறம் தமிழ்நாடே கொந்தளிக்கும்...” என்று விடிவி கணேஷ் சொல்லும் போது போகிற போக்கில் சமூக அவலத்தை சுட்டி காட்டி விட்டு போகிறார் இயக்குனர் தரணி. நடனம், கேமிரா, சண்டைப்பயிற்சி என அனைத்தும் ஒஸ்தியாக இருக்கிறது. ‘கலாசலா’ பாடலுக்கு மல்லிகா ஷெகாவத்தின் ஆட்டம் துடிப்பாய் இருக்கிறது.

‘ஒஸ்தி மாமே’ பாடல் முணுமுணுக்க வைக்கிறது. தமனின் பின்னணி இசை படத்திற்கு பக்க பலமாய் இருக்கிறது. முற்பாதி கலகலப்பு.. பிற்பாதி கை கலப்பு என செல்லும் இந்த ஒஸ்தியை இன்னும் ஒஸ்தியான திரைக்கதையோடு எடுத்திருக்கலாம். ‘தபாங்’ படத்தின் ரீமேக் என்பதால் இந்த நிலையா என ரசிகர்களை கேட்க வைக்கிறது.

தரணியின் இந்த ஒஸ்தி லாஜிக் இல்லா மேஜிக் நிறைந்த குஸ்தி!

No comments: