1
கடந்த காலம் நிகழ் காலத்திற்குக் கற்றுத்தரும் பாடத்தின் பெயர்தான் வரலாறு. சரித்திரம் என்பது உறைந்துபோன கற்படிவம் இல்லை, அது வாழ்வனுபவங்களின் வழியே நாம் கவனிக்கத் தவறிய உண்மைகளை, மறந்துபோன நினைவுகளை, அறியப்படாமல்போன துயரங்களை நினைவூட்டும் அறிவுத் துறை.அதிகாரம் கைமாறுவதன் சரித்திரத்தை மட்டுமே வாசித்துப் பழகிய நமக்கு, சரித்திரம் என்பது ஒரு பெரும் மானுடப் பிரவாகம் என்பதைப் புரிந்துகொள்வது சற்று சிரமமாகவே இருக்கக்கூடும்.வரலாற்றின் குரலுக்குச் செவிசாய்க்காமல் நிகழ்காலப் பிரச்னைகளைப் புரிந்துகொள்ள முடியாது, வரலாற்றினை ஒரு நதி என உருவகப்படுத்தினால், ஒரே நதிதான் எல்லாக் காலத்திலும் ஒடிக்கொண்டு இருக்கிறது, ஆனால்,

நீதிக்காகக் காத்திருப்பது பிறரோடு பகிர்ந்துகொள்ள முடியாத துயரம், மன உளைச்சல். இன்று எளிய மனிதர்களில் இருந்து அரசியல் தலைவர்கள் வரை பலரும் நீதிமன்றத்தில் தங்களுக்கான நீதி கிடைக்குமா என்று காத்துக்கிடக்கிறார்கள்.மனு நீதி, விதுர நீதி, சாணக்கிய நீதி, பதினென் கீழ்க்கணக்கு நீதி நூல்கள் என்று எண்ணிக்கையற்ற நீதி சாஸ்திரங்கள் இந்தியாவில் இருக்கின்றன. ஆனால் நடைமுறை வாழ்வில் இவை தனிமனிதனைப் பாதிக்கவே இல்லை.ஒவ்வொரு நீதிமன்ற வளாகத்திலும் வலியும் மௌனமும் கொண்ட மனிதர்கள் நிற்கிறார்கள், நீதிதேவதை அவர்களை சலனமற்று பார்த்துக்கொண்டே இருக்கிறாள்.இந்திய வரலாறு எத்தனையோ வழக்குகளைச் சந்தித்திருக்கிறது... சில விசித்திரமானவை; சில புதிரானவை.சுதந்திர இந்தியாவின் முதல் பெரும் நீதி விசாரணை, காந்தி கொலை வழக்கு. வேறு எந்த வழக்கினையும் விட இந்த வழக்கு முதன்மையானது, காரணம் அஹிம்சையைப் போதித்த காந்தியைக் கொன்றவனை எப்படித் தண்டிக்கப்போகிறார்கள்? அப்படி ஒருவனுக்குத் தண்டனை தருவதை காந்திய வழி ஏற்றுக்கொள்ளுமா? எதற்காக காந்தி கொல்லப்பட்டார்?


பிப்ரவரி 4-ம் தேதி பிர்லா இல்லத்திற்குச் சென்ற வாடகை காரைக் கண்டுபிடித்து டிரைவர் சுர்ஜித் சிங்கைக் கைது செய்தது போலீஸ். சங்கர் கிருஷ்டய்யா, சாவர்க்கர், நாராயண் ஆப்தே ஆகியோர் கைதானார்கள். ஆப்தே டெல்லியில் உள்ள இந்து மகாசபையின் பின் உள்ள காட்டில் துப்பாக்கி சுட பயிற்சி அளித்த மரத்தை அடையாளம் காட்டினான். கோட்சே சுடப் பழகிய வீட்டின் உரிமையாளர் டாக்டர் பார்ச்சர் கைது செய்யப்பட்டார். ஒன்பது பேரைக் கொலையில் உடந்தையானவர்கள் என்று கைது செய்தார் மும்பையைச் சேர்ந்த போலீஸ் உயர் அதிகாரி நகர்வாலா. எந்த அரசியல் குறுக்கீடும் இல்லாமல் இருந்தால் மட்டுமே, தான் இந்த விசாரணையைச் செய்வேன் என்று நகர்வலா கண்டிப்புடன் கூறியிருந்தார். அப்படியே நடந்தேறியது!காந்தியின் உடலைப் பரிசோதனை செய்த இர்வின் மருத்துவமனை, சிவில் சர்ஜன் லெஃப்ட்டினென்ட் காலோனா தானேஜா, காந்தியின் உடலில் 1/4 x 1/6அளவு ஆழமான முட்டை வடிவத் துளை விழுந்த ஐந்து காயங்கள் இருந்ததைக் குறிப்பிட்டார். அவை, உடலைத் துளைத்த துப்பாக்கிக் குண்டுகளால் உருவானவை என்று உறுதி அளித்தார். காந்தியைச் சுட்ட துப்பாக்கியின் எண் 606824.

ஒன்பது குற்றவாளிகளும் மூன்று வரிசையில் அமர்ந்திருந்தனர், சாவர்க்கர் மட்டுமே அதில் மிகுந்த சோர்வாகக் காணப்பட்டார். மற்றவர்கள் தங்களுக்குள்ளாக சிரித்துப் பேசிக்கொண்டு இருந்தார்கள்.ஜூன் 24-ம் தேதி விரிவான விசாரணை ஆரம்பமாகி, நவம்பர் 6-ம் தேதி வரை நடைபெற்றது. அரசுத் தரப்பில் 149 சாட்சிகள் விசாரிக்கப்பட்டார்கள். 720 பக்க ஆதாரங்கள் பதிவு செய்யப்பட்டன, வழக்கிற்குத் துணை சேர்க்கும்படியாக 404 ஆவணங்களும், 80 தடயப் பொருட்களும் நீதிமன்றத்தின் முன்வைக்கப்பட்டன. 160 பக்கம் குற்றவாளிகளின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. 297 பக்க எழுத்துபூர்வமான அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. ஏழு புகழ்பெற்ற வழக்கறிஞர்கள் வழக்கில் பங்கேற்றனர்.கார்க்கரேக்கு மராத்தியும், சங்கருக்கு தெலுங்கும், மதன்லாலுக்கு இந்தியும் தெரிந்திருந்த காரணத்தால், வழக்கு விசாரணையில் மொழிப் பிரச்னை ஏற்பட்டது. அரசுத் தரப்பில் தலைமை வழக்கறிஞர் சி.கே.தப்தரி வழக்கை நடத்தினார்.எதிர்த் தரப்பில் எல்.பி. போப்பட்கர் முக்கிய வழக்கறிஞராகப் பணியாற்றினார். அவரோடு 15 முக்கிய வழக்கறிஞர்கள் குற்றவாளிகளுக்காக ஆஜர் ஆனார்கள்.கோட்சே தனது அறிக்கையை கோர்ட்டில் வாசித்தான். அது 93 பக்கங்கள்கொண்டது. 35 ஆயிரம் சொற்கள் அதில் இருந்தன. அந்த அறிக்கையில் தன்னை ஒரு வீரப் புருஷனைப் போல அவன் காட்டிக்கொண்டான்.1949-ம் ஆண்டு பிப்ரவரி 10-ம் நாள் வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டது, விரிவான 204 பக்கத் தீர்ப்பு அது. அந்தத் தீர்ப்பில் காந்தி போன்ற அஹிம்சாவாதியைக்கூட ஒருவன் கொன்றுவிட்டுத் தண்டனையில் இருந்து தப்பிவிடக் கூடாது என்பதற்காகவே, கோட்சேவுக்கு மரண தண்டனை வழங்கப்படுவதாக நீதிபதி கூறியிருந்தது கவனிக்கத்தக்கது.நீதியின் செயல்பாடு, இந்திய சமூகத்தில் அறத்தின் முக்கியத்துவம் என்று நீதியரசர் ஆத்மசரண் முன்னுதாரணமான ஒரு தீர்ப்பை எழுதினார். அந்தத் தீர்ப்பில் இந்தியப் பிரிவினையில் இருந்து எப்படி காந்தியைக் கொல்லும் சதிச் செயல் விதை ஊன்றப்பட்டது என்பதில் துவங்கி, காந்தியைக் கொன்றவர்களின் அரசியல் பின்புலம் வரை அத்தனையும் கவனமாக விவரிக்கப்படுகிறது.

இந்த வழக்கு சுட்டும் உண்மைகள்தான் வரலாற்றின் கசப்பான நிஜங்கள். பிரிவினையின் பெயரால் நடைபெற்ற வன்முறைகளுக்கு உண்மையில் யார் காரணம்? காந்தி போன்ற மகானைக் கொல்லும் மனநிலை எப்படி உருவாகிறது? காந்தி கொல்லப்படக்கூடும் என்று முன் உணர்ந்திருந்த உள்துறை அமைச்சகம் ஏன் உரிய பாதுகாப்பு ஏற்பாடு செய்யாமல் போனது? காந்தியை கொன்றது ஒரு முஸ்லீமாகத்தான் இருக்கக்கூடும் என்ற கசப்பு உணர்வில் நிறைய வன்முறைகள் நடைபெற்றன, அந்த துவேசத்தின் விதை எப்படி உருவானது? அதுதான் இன்றும் முற்றி வளர்ந்திருக்கிறது இல்லையா?அதே நேரம் நீதி விசாரணைக்குள் எந்த அரசியலும் இருக்கக் கூடாது. சுதந்திரமாக நேர்மையாக அது நடைபெற வேண்டும் என்பதையும் காந்தி விசாரணை முன்உதாரணமாகக் காட்டுகிறது. அது போன்ற அறத்தை ஏன் நாம் இன்று இழந்துவிட்டோம்?
தொடரும் பயணம்...
விகடன்
No comments:
Post a Comment