Dec 8, 2011

முல்லை பெரியாறு : இடுக்கி மாவட்டத்தில் பதட்டம் , ஐயப்ப பக்தர்கள் அவதி !


முல்லை பெரியாறு அணை பிரச்னை காரணமாக, கேரளா, இடுக்கி மாவட்டத்தில், ஐயப்ப பக்தர்கள் தாக்கப்பட்டு வருவதால், அவர்களில் பெரும்பாலானோரின் பயணம் ரத்தாகியுள்ளது. தமிழக - கேரள எல்லையில், வாகனப் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டு, பயங்கர பதட்டம் நிலவுகிறது. 

முல்லை பெரியாறு பிரச்னை காரணமாக, தமிழக - கேரள எல்லையில் சில நாட்களாக மறியல், கடையடைப்பு சம்பவங்கள் நடக்கின்றன. இதில் ஐயப்ப பக்தர்கள், தொழிலாளர்கள் மற்றும் பாமர மக்கள் தொழில் பாதிப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர். நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே எலியாஸ் கடை சந்திப்பு பகுதியில் நேற்று காலையில் ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டம் நடந்தது. மறியலில் ஈடுபட்ட 14 பேரை, போலீசார் கைது செய்தனர். தமிழகத்தில் இருந்து வழக்கமாகச் செல்லும் பயணப்பாதைகள் முழுவதும், பதட்டம் எப்போது தீரும் என்ற கேள்விக்குறி எழுந்திருக்கிறது. சென்னை, திண்டுக்கல், ஓசூர் போன்ற மாவட்டங்களில், கேரள உரிமையாளர்களின் நகைக் கடைகள், நிதி நிறுவனங்கள் மீது, மக்கள் ஆவேசத்தில் தாக்குதல் நடத்தினர். 


மாற்றுப் பாதை: குமுளிவழியாக, கேரளாவிற்கு சாலைப் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டு உள்ளது. தாக்குதல் பீதியில் அய்யப்ப பக்தர்கள், பொள்ளாச்சி - பாலக்காடு, பொள்ளாச்சி - மீனாட்சிபுரம், பொள்ளாச்சி - நடுப்புனி வழியாகவும், கோவை - வாழையாறு, ராஜபாளையம், கன்னியாகுமரி, செங்கோட்டை, தென்காசி - அச்சன் கோவில் வழியாகவும் செல்லத் துவங்கியுள்ளனர். ஆனால், இது தடைபடுமா அல்லது தொடருமா என்பது இப்போது தெரியாது என, பலரும் கருத்துதெரிவித்தனர். பெரும்பாலானோர், மாற்றுப் பாதை குறித்த விவரம் தெரியாமல், திண்டாடி நிற்கின்றனர். ஆந்திரா, கர்நாடக பக்தர்கள், மேற்கொண்டு பயணத்தை தொடர முடியாமல், டிக்கெட்டை கையில் வைத்துக் கொண்டு மிரண்டு போயுள்ளனர்.கார்த்திகை தீபநாளன்று அதிகம் பக்தர்கள் ஐயப்பனை தரிசிப்பது நிச்சயம் தடைபட்டதால், மிகவும் அதிருப்தியுடன் உள்ளனர். 

பயணம் தற்காலிக ரத்து: தமிழகத்திலிருந்து கிளம்ப இருந்தவர்கள், தங்கள் பயணத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர்.

டிசம்பர் 27ம் தேதி வரை, மண்டல பூஜைக்காக, சபரிமலை நடை திறந்திருக்கும் என்பதாலும், டிசம்பர் 30ம் தேதி மீண்டும் மகர ஜோதிக்காக நடை திறக்கப்படும் என்பதாலும், பிரச்னை தீரும் வரை காத்திருந்து, பின், பயணத்தை மேற்கொள்ள முடிவு செய்துள்ளனர். ஆனால், முன்கூட்டியே பஸ், ரயில் டிக்கெட் வாங்கியுள்ளவர்கள், டிக்கெட்டைரத்து செய்யவும் முடியாமல், புதிதாக டிக்கெட் கிடைக்காவிட்டால் என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர். 

பஸ்களில் கூட்டம் குறைந்தது: ""முல்லை பெரியாறு பிரச்னை காரணமாக, கோவையிலிருந்து கேரளாவுக்குச் செல்லும் பஸ்களில், தற்போது பயணிகளின் கூட்டம் குறைந்துள்ளது,'' என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கோவை) தெரிவித்து உள்ளது. 

அரசு போக்குவரத்துக் கழக உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: கோவையில் இருந்து கேரளாவில் பாலக்காடு, திருச்சூர் உள்ளிட்ட நகரங்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதில், பாலக்காடுக்கு மட்டுமே அதிக பஸ்கள் இயக்கப்படுகின்றன. அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 13 பஸ்களும், கேரள போக்குவரத்துத் துறை சார்பில் 13 பஸ்களும் கோவை - பாலக்காடு இடையில் இயக்கப்படுகின்றன. 10 டவுன் பஸ்கள், எல்லைப்பகுதியான வாளையார் வரை சென்று வருகின்றன. கோவை - பாலக்காடு வழித்தடத்தில் இதுவரை எந்த பிரச்னையும் பஸ் போக்குவரத்தில் ஏற்படவில்லை. ஆனால், பயணிகளின் எண்ணிக்கை மட்டும் வெகுவாகக் குறைந்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.


1 comment:

Unknown said...

ஏன்யா நீ அங்கே போற...............ஏற்கனவே அவிங்களுக்கும் நமக்கு வாய்க்கா தகராறு இதுல இது வேறயா................