Nov 27, 2011

துயரங்கள் இலவசம்?! ஆனந்த விகடன் தலையங்கம்


'நஷ்டத்தில் மூழ்கிவரும் பொதுத் துறை நிறுவனங்களைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயம்... கடந்த ஆட்சிக் காலத்தில் அரங்கேற்றப்பட்ட தவறுகளின் பின்விளைவு... கைகொடுக்காத மத்திய அரசு...' என்றெல்லாம் காரணங்களைச் சொல்லி, பேருந்துக் கட்டணம், பால் விலை இரண்டையும் ஒரே மூச்சில் ஏற்றிவிட்டார் முதல்வர் ஜெயலலிதா. மின் கட்டண உயர்வும் தவிர்க்க இயலாதது என்று திகில் முன்னோட்டம் தந்துள்ளார்.
 சபிக்கப்பட்ட நடுத்தர மற்றும் கீழ்த்தட்டு மக்களுக்கு விழுந்திருக்கும் மற்றொரு மாபெரும் அடி இது. அதிலும், சுதாரிக்கக்கூட அவகாசம் கொடுக்காமல் உடனடியாக அமலாக்கப்பட்ட கட்டண உயர்வால், கையில் போதிய பணம் இல்லாமல் பாதி பயணத்தில் இறங்கிச் சென்ற அப்பாவிகள் பட்ட அவமானம் அளவிட முடியாதது.
ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற ஒரே லட்சியத்தோடு, தமிழகத்தின் இரண்டு பெரும் கட்சிகளும் மாறி மாறி இலவச அறிவிப்பு நடத்தியபோது, அவர்களை வள்ளல்களாகவும், வானில் இருந்து இறங்கிவந்த தெய்வங்களாகவும் வாழ்த்தி வரவேற்றதன் விளைவுதானே இந்த விலையேற்றச் சுமை!

இலவசங்களை வாரி இறைக்க இந்தத் தலைவர்களிடம் கற்பக விருட்சமோ, அட்சய பாத்திரமோ, காமதேனுவோ இல்லை என்பது நமக்கு நன்றாகவே தெரியும். கட்டண உயர்வுகளாகவும், வரி உயர்வுகளாகவும் நம் பைகளில் இருந்து அள்ளி எடுக்கும் பணத்தில் இருந்துதான் இலவசம் என்ற பெயரில் கிள்ளிக் கொடுக்கிறார்கள் என்பதை எல்லோரும் எப்போது உணரப்போகிறோம்?

இலவச போதையில் நாம் இப்படியே அமிழ்ந்துகிடந்தால்... மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி மட்டும் அல்ல... 'அடுத்த வேளை சோற்றையும் அரசாங்கமே கொடுத்தால் தான் உண்டு' என்று மொத்தமாகக் கையேந்தும் நாள் வந்துவிடும்!

சமைத்த மீனைத் தட்டில் வீசும் தலைவர்கள் வேண்டாம், மானமுள்ள தமிழனுக்கு... அவனே மீனைப் பிடித்துக்கொள்ளக்கூடிய சுய மரியாதைச் சூழலை உண்டாக்கும் தலைவர்களே தேவை என்பதை உரிய வகையில் புரியவைப்போம்.

அதன் பிறகுதான், இலவசங்கள் எனும் தூண்டில் புழுவைக் காட்டி, மக்களையே மீன்களாகப் பிடித்து பதவிப் பசியாறும் வழக்கத்தை இந்த தந்திரத் தலைவர்கள் நிறுத்திக்கொள்வார்கள்!


நன்றி  :ஆனந்த விகடன்

No comments: