Nov 27, 2011

தமிழகத்தில் பெய்து வரும் கன மழையால் பல மாவட்டங்களில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது.


தமிழகத்தில் பெய்து வரும் கன மழையால் பல மாவட்டங்களில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. பல ஆயிரம் ஏக்கர் பயிர்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. தொடர் மழை காரணமாக பல கிராமங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. நிவாரணப் பணிகளை அரசு மேற்கொள்ளாததால் மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். இதற்கிடையே, கன்னியாகுமரி அருகே மையம் கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து, புயல் சின்னமாக மாறியுள்ளது. இதனால், தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் வட கிழக்கு பருவ மழை தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக வங்கக் கடலில் 3 காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இதனால், தமிழகம் முழுவதும் பரவலாக கன மழை பெய்தது. அணைகள், ஏரி, குளங்கள் நிரம்பியது. ஆறுகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. பொதுமக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகினர்.

வடகிழக்கு பருவமழை தொடர்ச்சியாக 4வது முறையாக நேற்று முன்தினம் கன்னியாகுமரி கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இதனால், குமரி முதல் சென்னை வரை கடலோர மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. மக்கள் வெளியே செல்ல முடியாமல், வீடுகளுக்குள்ளே முடங்கும் நிலை உருவாகியுள்ளது.இதில் அதிகபட்சமாக மதுராந்தகத்தில் நேற்று 190 மிமீ, விருதாச்சலம் 170 மிமீ, மாமல்லபுரம் 160 மிமீ, தொழுதூர் 150 மிமீ, செங்கல்பட்டு 140 மிமீ, சேத்தியாதோப்பு 140 மிமீ மழை பெய்துள்ளது. மற்ற இடங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேலும் வலுவடைந்து புயல் சின்னமாக மாறியுள்ளது. இது திருவனந்தபுரத்தின் தென் கிழக்கே 120 கிமீ தொலையில் கடலில் மையம் கொண்டுள்ளது. இதனால், நேற்று காலையில் தென் தமிழகத்தில் மிக கனமழை பெய்து வருகிறது. தூத்துக்குடியில் நேற்று பகல் மட்டும் 50 மிமீ, பாளையங்கோட்டை 32 மிமீ, கன்னியாகுமரி 30 மிமீ மழை பெய்துள்ளது.

குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பாம்பன், ராமேஸ்வரம், தூத்துக்குடி துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு (எண்.3) ஏற்றப்பட்டுள்ளது. நேற்று மாலை அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு திசையில் நகரத்தொடங்கியது. இதனால், சென்னை துறைமுகத்தில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கடல் பகுதியில் மணிக்கு 50ல் இருந்து 65 கிமீ வேகத்தில் தரைப்பகுதியை நோக்கி காற்று வீசும். கடலில் சீற்றமும் அதிகம்இருக்கும் என்பதால், தமிழகம் புதுச்சேரி கடலோர பகுதியில் வசிக்கும் மீனவர்கள் கடலுக்குள் மீன்படிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, தென்மாவட்டங்களில் மழை தொடர்ந்து பெய்யும். மேலும், அது வடமேற்கு திசையில் நகர்வதால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் கடந்த இருநாட்களாக பெய்த தொடர் மழைக்கு, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. திருச்செந்தூர், ஜெகதாபட்டினம் உள்ளிட்ட இடங்களில் 200க்கும் மேற்பட்ட படகுகள் உடைந்து சேதமடைந்தன. தஞ்சை, திருவாரூர், நாகைப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் பெய்த தொடர் மழைக்கு 25 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. ராமநாதபுரம் மாவட்டத்தில் ரோடுகள் சேதமடைந்தன.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பலத்த காற்றுடன் விடிய விடிய கொட்டித் தீர்த்தது கனமழை. 50 மலை கிராமங்களில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது. செங்குளம், துரைசாமிபுரம் ஆகிய இடங்களில் கண்மாய்கள் உடைந்தன. ராமநாதபுரத்தில் 200 ஏக்கர் பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. சிவகங்கை மாவட்டத்தில் சுமார் ஆயிரம் ஏக்கர் பயிர்கள் மூழ்கின. திருச்சி திருவெரும்பூர் அருகே சுவர் இடிந்து விழுந்து ஒரு பெண் பலியானார். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் சுவர் இடிந்து விழுந்து சிறுவன் உட்பட 2 பேர் பலியாகினர்.

சென்னையில் புளியந்தோப்பு, கொடுங்கையூர், மாங்காடு, மடிப்பாக்கம், வேளச்சேரி, ஆதம்பாக்கம் ஆகிய இடங்கள் தண்ணீரில் மிதக்கின்றன. பொதுமக்கள் வீடுகளை காலி செய்து விட்டு தெரிந்தவர்களின் வீடுகளில் அடைக்கலம் புகுந்துள்ள னர். திருவாரூர் மாவட்டத்தில் அரசு மருத்துமனைக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. கடலூர், சிதம்பரம் ஆகிய இடங்களிலும் கொட்டிய கன மழைக்கு பல வீடுகள் தண்ணீரில் மிதக்கின்றன.
வீடுகளுக்குள் தண்ணீர் தேங்கியதால் பொதுமக்கள் தங்குவதற்கு அரசு பல இடங்களில் மாற்று ஏற்பாடுகளைச் செய்யவில்லை. அவர்கள் சாப்பாடும் ஏற்பாடு செய்யவில்லை. தண்ணீரை வெளியேற்றவும் நடவடிக்கை எடுக்கவில்லை. போர்க்கால அடிப்படையில் செய்ய வேண்டிய பணிகள் எல்லாம் செய்யப்படாமல் உள்ளன. அமைச்சர்கள் யாரும் மாவட்டங்களுக்குச் சென்று வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவில்லை. சென்னையில் மேயர் உட்பட யாரும் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடவில்லை. அமைச்சர்களும், அரசு அதிகாரிகளும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளாததால் மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

1 comment:

தமிழ்வாசி பிரகாஷ் said...

மதுரையில் ரெண்டு நாளா மழை... நீங்க மதுரைன்னு ப்ரோபைல் பார்த்தேன்... நானும் தான்....
மதுரை பதிவர்கள் கூட்டம் விரைவில் நடைபெற உள்ளது. கலந்துக்கலாமே...
தொடர்புக்கு...thaiprakash1@gmail.com