Nov 27, 2011

செவ்வாய் கிரகத்துக்கு புறப்பட்டது நாசா ராக்கெட்; 55 கோடி கி.மீ. தூரம்.. 8 மாத பயணம்



நாசா,  -

செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்ந்ததற்கான, வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதா என்பது குறித்து ஆராய்வதற்காக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையம் நேற்று ராக்கெட் அனுப்பியது.
சூரிய குடும்பத்தில் சூரியனுக்கு நெருக்கமாக இருக்கும் கோள் புதன். இதற்கு அடுத்து சுக்கிரன். 3-வதாக நாம் (பூமி). நமக்கு அடுத்து இருப்பது செவ்வாய். எல்லாம் தனித்தனியே தங்கள் ரூட்டில் சுற்றிக் கொண்டிருக்கும் கிரகங்கள் என்பதால், எப்போதும் ஒரே இடைவெளி இருக்காது. மிக நெருக்கத்தில் வரும்போது பூமி - செவ்வாய் இடையே 5.6 கோடி கி.மீ. தூரம் இடைவெளி இருக்கும். அதிகபட்ச இடைவெளி 40 கோடி கி.மீ. வரை போகும்.
நமக்கு பக்கத்து கிரகம் என்பதால், செவ்வாயிலும் உயிர்கள் வாழ்ந்ததற்கான, வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் அனேகமாக இருக்கலாம் என்பது விஞ்ஞானிகளின் நீண்ட கால சந்தேகம். இதுதொடர்பாக தீவிர ஆராய்ச்சி செய்வதற்காக ‘மார்ஸ் சயின்ஸ் லேபரட்டரி’ என்ற விண்கலத்தை அனுப்ப நாசா முடிவு செய்தது.
செவ்வாய் கிரகத்தில் இறங்கி ஆய்வு செய்வதற்காக ‘கியூரியாசிட்டி’ ரோவர் வாகனம் தயாரிக்கப்பட்டது. ரூ.12 ஆயிரத்து 500 கோடி செலவில் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அமெரிக்காவின் புளோரிடா மாநிலம் கேப்கேனவராலில் உள்ள ஏவுதளத்தில் இருந்து ரோவர் வாகனம் மற்றும் ஆய்வு கருவிகளை சுமந்துகொண்டு ‘அட்லாஸ்5’ ராக்கெட் நேற்று புறப்பட்டு சென்றது. 8 மாதங்களில் 55 கோடி கி.மீ. தூரம் பயணித்து அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி செவ்வாயை இந்த ராக்கெட் சென்றடையும் என்று திட்டமிடப்பட்டுள்ளது.
செவ்வாய் கிரகத்தை துளையிட்டு ஆய்வு செய்யும் டிரில்லிங் கருவிகள், அதிநவீன மாஸ்டர் கேமராக்கள் ஆகியவை கியூரியாசிட்டி வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ளது குறிப்பிட்டதக்கது. அடுத்த ஆண்டு ஆகஸ்ட்டில் தரையிறங்கியதும் எக்ஸ் பேண்ட் டிரான்ஸ்மிட்டர் உதவியுடன் பூமிக்கு தகவல்களை ரோவர் வாகனம் அனுப்பும்.


தொடர்பான செய்திகள்.
அமெரிக்கா செவ்வாய்க்கு விண்கலம் அனுப்புகிறது அமெரிக்கா

No comments: