Dec 1, 2011

அமெரிக்க கிரீன் கார்டு இந்தியர்கள் சுலபமாக பெற வருகிறது புதிய சட்டம்!


இந்தியா மற்றும் சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு கிரீன்-கார்டு பெற்று செல்ல விரும்பும் ஆட்களுக்கு, கிரீன் சிக்னல் கொடுத்திருக்கிறது அமெரிக்க காங்கிரஸ்! 389 பேர் ஆதரவாக (வெறும் 15 பேர் எதிராக) வாக்களித்துள்ள குடிவரவு மசோதா ஒன்று, அதிகளவில் ஸ்கில்ட் ஆட்களை வெளிநாடுகளுக்கு அனுப்பும் இந்தியா மற்றும் சீனாவிலிருந்து அதிகளவான ஆட்களுக்கு அமெரிக்கக் கதவுகளைத் திறந்து விட்டுள்ளது.

அமெரிக்காவில் கிரீன் கார்டு வழங்கும் முறையில் பெரிய மாற்றம் ஒன்றைக் கொண்டுவருகின்றது இந்த மசோதா. High-Skilled Immigration Act (H.R. 3012) என்ற பெயரில் நடைமுறையில் உள்ள இந்த இமிகிரேஷன் முறை இதுவரை இந்தியர்களுக்கு பாதகமாகவே இருந்து வந்தது.


அது எப்படி என்பதைப் புரிந்துகொள்ள இந்த முறை பற்றி எளிமையாகக் கூறலாம். அமெரிக்காவில் வருடம்தோறும் கிரீன் கார்டு வழங்கப்படும் தொகையில், எந்தவொரு நாட்டுக்கும் 7 சதவீதத்துக்குமேல் கொடுக்கப்படுவதில்லை என்பதே இதுவரை இருந்த நடைமுறை. நாடு என்பது பெரிய நாடாகவும் இருக்கலாம், குட்டி நாடாகவும் இருக்கலாம். இரண்டுக்கும் ஒரே அளவீடுதான். அது 7 சதவீதம்!புரியவில்லையா? ஒரு உதாரணம் கூறுகிறோம் பாருங்கள்.
ஒரு வருடத்துக்கு அமெரிக்கா புதிதாக வழங்கும் கிரீன் கார்டுகளின் எண்ணிக்கை 225,000 என்று எடுத்துக் கொள்ளுங்கள். இந்தத் தொகையின் 7 சதவீதம் 15,750. அமெரிக்க கிரீன் கார்டு கோரி விண்ணப்பிக்கும் இந்தியர்களில் தகுதியான முதல் 15,750 பேருக்கு கிரீன்கார்டு வழங்கப்படும். மீதமுள்ளவர்கள், அடுத்த வருட கோட்டாவுக்கு நகர்த்தப் படுவார்கள்.

குறிப்பிட்ட வருடத்தில் விண்ணப்பித்தவர்களில் மொத்தம் 25,000 இந்தியர்கள் கிரீன் கார்டு பெற தகுதி உடையவர்களாக இருந்தால், என்னாகும்? 15,750 பேருக்கு கிரீன் கார்டு கிடைக்கும். 9,250 பேர் அடுத்த வருடத்துக்கு நகர்த்தப் படுவார்கள். அடுத்த வருடம் உள்ள கோட்டாவான 15,750-ல் இவர்களுக்கு முன்னுரிமை கிடைக்கும்.

அப்படியானால், அடுத்த வருடம் விண்ணப்பிக்கும் தகுதிவாய்ந்த 25,000 பேரில், வெறும் 6,500 பேருக்கே கிரீன் கார்டு கிடைக்கும். மீதி 18,500 பேர் அதற்கு அடுத்த வருடத்துக்கு நகர்த்தப் படுவார்கள். சரி. அந்த வருடத்தில் 15,750 பேருக்கு கிரீன்கார்டு கொடுப்பது என்றால் என்னாகும்?

கடந்த வருடத்திலிருந்து நகர்த்தப்பட்டு வந்த 18,500 பேரில் முதல் 15,750 பேருக்கு கிரீன் கார்டு கிடைக்கும். மீதி 2,750 பேர் 3-வது வருடத்துக்கு மூவ் பண்ணப்படுவார்கள். அதே நேரத்தில் அந்த வருடம் விண்ணப்பிக்கும் தகுதிபெற்ற 25,000 பேரின் கதி? ஒட்டுமொத்தமாக அடுத்த வருடத்துக்கு நகர்த்தப்படுவார்கள்!

இந்த நடைமுறையால்தான் இந்தியர்கள் கிரீன் கார்டு கோரி ஸ்கில்ட் இமிகிரன்ட் பிரிவில் விண்ணப்பிக்கும்போது 10 வருடங்கள் காத்திருக்க நேருகிறது.

இந்த 15,750 என்ற எண்ணிக்கை இருக்கிறதல்லவா? அந்த எண்ணிக்கை அனைத்து நாடுகளுக்கும் ஒரே எண்ணிக்கை என்பதுதான் இதுவரை இருந்த நடைமுறை. அதாவது ஐஸ்லாந்து பிரஜைகளுக்கும் அதே எண்ணிக்கை. இந்தியப் பிரஜைகளுக்கும் அதே எண்ணிக்கை! (மொத்த கிரீன் கார்டுகளில் 7%)

ஐஸ்லாந்தின் ஜனத்தொகை 3 லட்சம். இந்தியாவின் ஜனத்தொகை 1.2 பில்லியன்!

அப்போது புதிதாக வரவுள்ள நடைமுறையில் குறிப்பிட்ட நாடுகளுக்கான 7% மேக்சிமம் அகற்றப்படுகிறது. இதனால், அதிகளவில் விண்ணப்பித்து அதிகளவில் தகுதியுடைய நாட்டவருக்கு அதிகளவில் கிரீன் கார்டு கிடைக்கும்!

மிக அதிகளவில் விண்ணப்பிக்கும் ஆட்கள், சீனர்களும் இந்தியர்களும்தான்!

No comments: