தமிழக நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அவருடைய குடும்பத்தினர் மீதான சொத்து குவிப்பு வழக்கை கீழ்கோர்ட்டு விசாரிக்க தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மேலும் அவர்கள் கீழ்கோர்ட்டில் நேரில் ஆஜராக விலக்கு அளித்தும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். தமிழக நிதி அமைச்சராக இருப்பவர் ஓ.பன்னீர்செல்வம். கடந்த 2006-ம் ஆண்டு அவர் மீதும், அவருடைய மனைவி விஜயலட்சுமி, மகன் ரவீந்திரநாத், தம்பி ராஜா, அவருடைய மனைவி சசிகலாவதி,மற்றொரு தம்பி பாலமுருகன், அவருடைய மனைவி லதா மகேஸ்வரி ஆகியோர் மீதும் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை சேர்த்ததாக ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு மதுரையில் உள்ள சிறப்பு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த கோர்ட்டு, குற்றம் சாட்டப்பட்டுள்ள அமைச்சர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட அனைவரும் வருகிற 28-ந் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டது.இந்த நிலையில் அமைச்சர் பன்னீர்செல்வம் உள்பட 7 பேர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளனர்.அதில், இந்த வழக்கை வேறு சிறப்பு கோர்ட்டுக்கு மாற்ற வேண்டும். அதுவரை கீழ்கோர்ட்டு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும். வருகிற 28-ந் தேதி கீழ்கோர்ட்டில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. இந்த மனு நீதிபதி வி.பெரியகருப்பையா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதி, கீழ்கோர்ட்டு விசாரணைக்கு தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் வருகிற 28-ந் தேதி அமைச்சர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட 7 பேரும் கீழ்கோர்ட்டில் ஆஜராக விலக்கு அளித்தும் உத்தரவிட்டார். பின்னர் இந்த வழக்கின் விசாரணையை 2 வாரத்துக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.
No comments:
Post a Comment