முல்லைப் பெரியாறு அணை விவகாரம் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் அணை உடையப் போவதாக மக்களை பயமுறுத்தும் ஒரு நிமிட குறும்படத்தை தயாரிக்க பிரபல மலையாள இயக்குனர் ஆஷிக் அபு திட்டமிட்டுள்ளார். இந்தக் குறும்படம் இனி வெளிவரவுள்ள அனைத்து மலையாள சினிமாக்களுடன் இணைத்து திரையிடப்படும். முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பான வழக்கு தற்போது உச்சநீதிமன்றத்தின் பரிசீலனையில் உள்ளது. புதிய அணையை கட்டியே தீருவோம் என கேரளாவும்,
புதிய அணை கட்ட கேரளாவை அனுமதிக்க கூடாது என்று தமிழகமும் கூறிவருகிறது. கடந்த வாரம் அணை அமைந்துள்ள இடுக்கி மாவட்டத்தில் சில பகுதிகளில் லேசான நில அதிர்வு ஏற்பட்டன. இந்த நில அதிர்வால் அணைக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. ஆனால் அணையில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், அதன் வழியாக தண்ணீர் அதிக அளவில் கசிவதாகவும் கேரளா கூறிவருகிறது. இது குறித்து உச்சநீதிமன்ற உயர்மட்டக் குழுவிடம் கேரளா புகாரும் அளித்துள்ளது.
இந்த நிலையில் மக்களிடையே மேலும் பீதியை ஏற்படுத்தும் வகையில் அணை உடையப் போவதாக கூறும் ஒரு நிமிட குறும்படத்தை தயாரிக்க பிரபல மலையாள சினிமா இயக்குனர் ஆஷிக் அபு திட்டமிட்டுள்ளார். இது குறித்து இயக்குனர் ஆஷிக் அபு, ‘தினகரன்’ நிருபரிடம் கூறியது: தமிழக, கேரள மக்களிடையே பகைமை உணர்வை ஏற்படுத்துவது எனது நோக்கமல்ல. தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தருவதில் எந்த கருத்து வேறுபாடும் கிடையாது. ஆனால் மிக பழமையான இந்த அணை உடைந் தால் தமிழ்நாட்டுக்கான தண்ணீரும் கிடைக் காது. லட்சக்கணக்கான உயிர்ப்பலியும் ஏற்படும்.
இது போன்ற மோசமான ஒரு நிகழ்வு ஏற்படக் கூடாது என்பதற்காகத் தான் மக்களிடயே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த இந்தக் குறும்படத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளேன்.
எனவே இந்தக் குறும்படத்தின் மூலமாவது மக்களுக்கு உண்மை நிலை தெரிய வேண்டும். முதல் கட்டமாக விரைவில் வெளிவரவுள்ள ‘ சொப்ன சஞ்சாரி‘, ‘நாயிகா‘, ‘பியூட்டிபுல்‘ ஆகிய படங்களில் ஒரு கார்டு காண்பிக்கப்படும்.
அதில், ‘முல்லைப் பெரியாறு அணை உடைந்தால் கேரளா அழியும். தமிழ்நாட்டுக்கு தண்ணீர் கொடுப்பதில் எதிர்ப்பு இல்லை. அதே சமயத்தில் தண்ணீர் குடித்து எந்த மலையாளியும் இறக்கக் கூடாது. இந்த பிரச்சினையில் கேரளாவுக்கு ஒரு நல்ல தீர்வு கட்டாயம் வேண்டும். அது நமது உரிமை என்று அந்த கார்டில் இருக்கும்.
படம் தொடங்குவதற்கு முன் அந்த கார்டு காண்பிக்கப்படும். குறும்படத்திற்கான பணிகள் விரைவில் தொடங்கும். இந்தக் குறும்படம் அடுத்து வரவுள்ள மலையாளப் படங்களில் முன் காண்பிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment