Nov 22, 2011

முதல்வர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு; ஜெயலலிதா இன்று ஆஜராகிறார்


 முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை பெங்களூர் தனி நீதிமன்ற நீதிபதி மல்லிகார்ஜுனையா முன் இன்று விசாரணைக்கு வருகிறது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜெயலலிதா உள்பட அனைவரும் ஆஜராவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக முதல்வர் ஜெயலலிதா மீதான வழக்கு கடந்த 6 ஆண்டுகளாக பெங்களூர் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் அமைக்கப்பட்டுள்ள தனி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கு விசாரணை முடியும்
நிலையில் உள்ளதால், வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள ஜெயலலிதா நேரில் ஆஜராகி வாக்குமூலம் கொடுக்க வேண்டும் என்று தனி நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி கர்நாடக உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதா தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் 313ன்படி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் கண்டிப்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் நீதிமன்றத்திற்கு வரும் ஜெயலலிதாவுக்கு உரிய பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கும் உத்தரவிட்டது. அதை தொடர்ந்து ஜெயலலிதாவின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தனி நீதிமன்றத்தை தற்காலிகமாக பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறை அருகில் உள்ள காந்தி பவனுக்கு மாற்றம் செய்தனர். கடந்த அக்டோபர் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் ஜெயலலிதா நேரில் ஆஜராகி நீதிபதி கேட்ட 567 கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

மொத்தம் 1384 கேள்விகள். எனவே இன்னும் 817 கேள்விகள் ஜெயலலிதாவிடம் கேட்க வேண்டியிருப்பதால், அடுத்த விசாரணையை நவம்பர் 8ம் தேதிக்கு நீதிபதி மல்லிகார்ஜுனையா ஒத்தி வைத்திருந்தார். அன்று நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருக்க விலக்குகோரி ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 
அதை தொடர்ந்து, கடந்த 11ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது,

ஜெயலலிதா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் டி.குமார், ஜெயலலிதா நேரில் ஆஜராக அவகாசம் கொடுக்கும்படி மனு செய்தார். அதை ஏற்று கொண்ட நீதிபதி மல்லிகார்ஜுனையா, நவம்பர் 22ம் தேதிக்கு ஒத்திவைத்தார். அதன்படி பரப்பனஅக்ரஹாரா சிறை பகுதியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. முதல்வர் ஜெயலலிதா ஆஜராகி மீதியுள்ள 817 கேள்விகளுக்கு பதிலளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்று எச்.ஏ.எல். விமான நிலையம் முதல் பரப்பன அக்ரஹாரா சிறை வரை பலத்த பாதுகாப்புக்கு மாநகர போலீஸ் கமிஷனர் ஏற்பாடு செய்துள்ளார்.

No comments: