Nov 25, 2011

அஸ்வின் சதம்: இந்தியா 482 ரன்னுக்கு ஆல்அவுட்!

அஸ்வினின் அதிரடி சதத்தின் உறுதுணையுடன், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் இன்னிங்ஸ்சில், இந்தியா 482 ரன்கள் சேர்த்தது.

ஆட்டத்தின் 4-வது நாளான இன்று, மேற்கிந்திய தீவுகளை விட 108 ரன்கள் பின்னடைவு கண்டுள்ளது இந்திய அணி.


துவக்க ஆட்டக்காரர் கம்பீர் 55 ரன்களையும், சேவாக் 37 ரன்களையும் சேர்த்தனர். சர்வதேச டெஸ்டில் 13 ஆயிரம் ரன்களை பூர்த்தி செய்த டிராவிட் 82 ரன்கள் எடுத்தார்.

6 ரன்களில் சதத்தை தவறிய சச்சின்..

சர்வதேச கிரிக்கெட்டில் சதத்தில் சதம் என்ற வரலாற்றுச் சாதனையை, சச்சின் டெண்டுல்கர் 6 ரன்களில் தவறவிட்டார்.

சச்சின் 94 ரன்களில் ஆட்டமிழந்து, அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சி தந்தார். ராம்பால் பந்துவீச்சில் சம்மி கேட்ச் பிடித்து சச்சின் அவுட் ஆனார்.

இதனால், சச்சின் தனது சொந்த மண்ணில் 100-வது சதமடித்து நிகழ்த்தவிருந்த சாதனை நழுவியது. இது, இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

அஸ்வினின் கன்னி சதம்!

லஷ்மண் 33 ரன்களில் ஆட்டமிழக்க, கோஹ்லி 52 ரன்களைச் சேர்த்தார். டோனி 8 ரன்களை மட்டுமே எடுத்தார்.

அஸ்வின் தனது அதிரடி சதத்தால், அணியின் ரன் எண்ணிக்கையை வெகுவாக கூட்டினார். அவர் 118 பந்துகளில் 103 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். டெஸ்ட் போட்டியில் இது அஸ்வினுக்கு முதலாவது சதமாகும்.

இந்தத் தொடரில் பவுலிங்கில் சிறந்து விளங்கிய அஸ்வின், பேட்டிங்கிலும் தன்னை நிரூபித்து, அணியில் தனது இருப்பை தக்கவைத்துக்கொண்டுள்ளார்.

இஷாந்த் ஷர்மா, ஆரோன் ஆகியோர் சொற்ப ரன்களே எடுத்தனர். ஓஜா ரன் ஏதும் எடுக்கவில்லை.

மேற்கிந்திய தீவுகள் தரப்பில் ராம்பால், சாமுவேல்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், சம்மி 2 விக்கெட்டுகளையும், எட்வர்ட்ஸ், பிஷூ ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

முன்னதாக, மேற்கிந்திய தீவுகள் தனது முதல் இன்னிங்ஸ்சில் 590 ரன்கள் குவித்தது.

மொத்தம் 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் ஏற்கெனவே கைப்பற்றிவிட்டது குறிப்பிடத்தக்கது.

2 comments:

stalin wesley said...

அஸ்வின் சதம்: இந்தியா 482 ரன்னுக்கு ஆல்அவுட்! ////

கல்யாண குசி-ல நல்லா ஆடிட்டாரு போல ..

பகிர்வுக்கு நன்றி பிரதர் ....

MaduraiGovindaraj said...

நன்றி stalin wesley