May 12, 2012

வசவாளர்களே வாழ்க ! அறிஞர் அண்ணா


1957-ம் ஆண்டு வாழ்க வசவாளர் எனும் ஓர் கட்டுரையை அண்ணா வரைந்தார்.
நெசவு - நெசவாளர் போல்
வசவு - வசவாளர்
இரு அண்ணாவின் புதிய சொல்லாக்கம் தமிழ் மொழிக்கு புது வரவு.

இரு சொல்லடுக்கு அல்ல; அண்ணாவின் நெஞ்சம்

இந்தக் கட்டுரையில் பெரியார் நம்மை எவ்வளவு தாக்கிப்பேசினாலும் தளராத பொறுமையுடன் நாம் மேற்கொண்ட பணியில் வெற்றி பெறுவோமேயானால் பெரியார் அவர்களும் போற்றிப் புகழ்வது திண்ணம்.

கரி தன் குட்டிக்கு, வீரமும், திறமும் வருவதற்காக துதிக்கையால் குட்டியை இழுத்தும், தள்ளியும் தட்டியும் கொட்டியும், பயிற்சி தரும் என்கிறார்கள். திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு அத்தனை பயிற்சியை தந்திருக்கிறது திராவிடக் கழகம். பயிற்சி போதவில்லையோ என்று ஒருவேளை எண்ணிக்கொண்டு மறுபடியும் பயிற்சி தர முன் வரக்கூடும். அதைத் தவறாகக்கருத வேண்டாம்.
வாழ்க வசவாளர் 02.12.1957.

தோழர் ஈ.வெ.கி. சம்பத் கருத்து வேற்றுமை காரணமாக அண்ணாவைவிட்டு விலகி, பொது மேடைகளில் பேசுகிறார். அப்போது அண்ணா அவர்கள இப்படிக் குறிப்பிட்டார்.

கைமாறு ஏதும் செய்திட இயலாத நிலையில் இருந்தேன், இத்தனைக் காலம். இப்பொழுதுதான் அந்த வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. பெரியாரும், காங்கிரஸ் காரர்களும் என்னென்ன ஏசினார்ளோ அதை அப்படியே சிந்தாமல் எத்துவைத்துக் கொண்டு தோழர் சம்பத் பேசுகிறார். தாங்கிக் கொள்கிறேன். அதுதான் நான் காட்டவேண்டிய கைமாறு என்று கொள்கிறேன். என் இயல்போ எவர் என்னை எக்காரணம் கொண்டு எத்தகைய இழிமொழி கொண்டு தாக்கினாலும் அவர்கள் எப்போதாவது என்னைப்பற்றி எதாகிலும் இரண்டொரு நல்வார்த்தைகள் சொல்லி இருந்தால் அதை நினைவுப்படுத்திக்கொண்டு மனதுக்கு ஆறுதலும் மகிழ்ச்சியும் தேடிக்கொள்வது வாடிக்கை. இது மட்டுமல்ல அன்று நம்மை எவ்வளவோ பாராட்டினவர்கள்தானே, இப்போது நாலு கடுமொழி பேசிவிட்டார்கள். போகட்டும் என்று எண்ணிக்கொள்வேன்.
தம்பிக்குக் கடிதம், 23.04.1961
1957 தேர்தல் நேரம். அண்ணா காஞ்சியில் போட்டியிடுகிறார். காங்கிரசார் அவரை மூர்கத்தனமாக எதிர்த்தனர். ஒரு நாள் அண்ணா எழுந்து வெளியே வந்த போது அவர் வீட்டிற்கு எதிரில் உள்ள மின் விளக்குக் கம்பத்தில் காங்கிரசார் கையில் எழுதி - ஓர் தட்டியை மாட்டியிருந்ததைப் பார்த்தார். அந்தத் தட்டியில் அவர் பிறப்பு பற்றி மிக கீழ்த்தரமாக எழுதப் பட்டிருந்தது.  அண்ணா அவர்கள் பொறுமையாக என்னை அழைத்து ஆத்திரப்பட வேண்டாம் அவர்களுக்குத் தெரிந்தது அவ்வளவுதான். ஒன்று செய்ய வேண்டும். பகலில்தான் தட்டியைப் படிக்க முடியும். இரவில் எல்லோரும் படிப்பதற்கு வசதியாக ஓர் பெட்ரோமாக்ஸ் விளக்கை ஏற்பாடு செய்ய சொன்னவர் அண்ணா!

மறுநாள் அந்த தட்டி அங்கே இல்லை. யார் அதை வைத்தார்களோ அவர்களே வெட்கப்பட்டுக் கழற்றி எடுத்துக் கொண்டுப்போய்விட்டார்கள்.