மாணவர்களுக்கான சர்வதேச அடையாள அட்டை
மாணவர்கள் மாவட்டங்கள், மாநிலங்களை கடந்து நாடு விட்டு பிற நாடுகளுக்கு சென்று படிப்பது இன்று சாதாரண ஒன்றாகி விட்டது. எங்கு சென்றாலும் நமக்கானதொரு அடையாளம் தேவைப்படுகிறது.
எங்கு சென்றாலும் நமக்கானவற்றைப் பெறுவதற்கு, நம்மை மிகச் சரியாக அடையாளப்படுத்திக் கொள்ளவும், சட்ட ரீதியான, சமூகப் பாதுகாப்பு, சலுகைகள் போன்றவற்றை பெறுவதற்கும் ஒரு அடையாள அட்டை தேவைப்படுகிறது.
நம் தமிழகத்திலே கூட பள்ளி, கல்லூரி மாணவர் அடையாள அட்டை இருந்தாலும், பேரூந்தில் இலவசமாக பயணிப்பதற்கு அரசாங்கம் தனியாக ஒரு அடையாள அட்டையை வழங்குகிறது. அது தவிர பள்ளி மாணவர்கள் அடையாள அட்டையைக் கொண்டு பள்ளிச் சீருடைகள் தள்ளுபடி விலையில் ஒரு சில கடைகள் தருகின்றன, கல்லூரி அடையாள அட்டையைக் கொண்டு பல பொழுதுபோக்கு நிறுவனங்கள் தள்ளுபடிகளை தருகின்றன.
மாணவர் அடையாள அட்டையை படிக்கும் கல்லூரிகள், பள்ளிக்கூடங்கள் வழங்கினாலும் அதற்கான பொதுவான அங்கீகாரம் என்பது அனைத்து இடங்களிலும் இருப்பதில்லை.
தமிழக மாணவர்கள் வேறு மாநிலத்திற்கு செல்லும்பொழுதோ, வெளிநாட்டிற்கு சென்று படிக்கும் மாணவர்கள் அங்கிருந்து விடுமுறைக்கு தம் சொந்த நாட்டிற்கு வரும்போதோ அல்லது பயிற்சி படிப்பிற்காக வேறு நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு செல்லும்பொழுதோ, அந்த இடத்தில் மாணவர் சலுகைகளை பெற முடியாத நிலைக்கு உள்ளாகின்றனர்.
இந்த குறையைப் போக்கும் வகையில் கிடைத்திருப்பதுதான் சர்வதேச மாணவர் அடையாள அட்டை(ISIC). யுனெஸ்கோ நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரே சர்வதேச மாணவர் அடையாள அட்டையாக இது விளங்குகிறது.124 நாடுகளில் பயன்படுத்தக்கூடிய இந்த மாணவர் அடையாள அட்டையைக் கொண்டு சில்லறை விற்பனை கடைகள், உணவகங்கள், போக்குவரத்து நிறுவனங்கள், அருங்காட்சியகங்கள், எழுது பொருட்கள், புத்தக விற்பனை நிலையங்கள் போன்ற 1 லட்சத்து 26 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் சலுகைகளைப் பெறுவதற்கு இந்த அட்டை உதவுகின்றது.
தகுதி
முழு நேர படிப்பாக படிக்கும் 12 வயதிற்கு மேற்பட்ட மாணவ, மாணவியர் எவரும் ஆன்-லைன் வழியாக அடையாள அட்டையைப் பெறலாம்.
கட்டணம்
வருடத்திற்கு 500 ரூபாய் மற்றும் வரிகள் சேர்த்து கட்ட வேண்டியது இருக்கும்.
எங்கு விண்ணப்பிக்கலாம்?
ISIC இன் www.isic.co.in/apply என்ற இணைய பக்கம் வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்தவர்களுக்கு அஞ்சல் வழியாக அடையாள அட்டை அனுப்பப்படும்.
மேலும் கூடுதல் தகவல்களுக்கு www.isic.co.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.