ப.சிதம்பரத்திடம் பேட்டி காண்பது, பொருளாதார வகுப்பு ஒன்றில் பங்கேற்பதற்குச் சமம். பண மதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி வரி, தற்போதைய இந்தியப் பொருளாதாரத்தின் நிலை என முன்னாள் நிதியமைச்சரிடம் பேச நிறைய விஷயங்கள் இருக்கின்றன. ``காலை 11 மணிக்குச் சந்திக்கலாம். ஆனால், மேலேகுறிப்பிட்ட மூன்று விஷயங்கள்தான் பேசுபொருளாக இருக்க வேண்டும்’’ என்கிற நிபந்தனையோடு பேட்டிக்கு அழைத்தார் ப.சி.
`` `டிமானிட்டைசேஷன் அறிவிப்பு வந்த உடனேயே கள்ளப் பணம், கறுப்புப் பணம், ஊழல் மூன்றையுமே இதனால் ஒழிக்கமுடியாது என்று சொன்னேன். நான் சொன்னதுதான் நடந்திருக்கிறது’ என்று சொல்கிறீர்கள். அப்படியானால், அந்த நோக்கங்கள் எப்போதும் நிறைவேற்றப்பட முடியாதவையா?’’
``நான் சொல்வதை நீங்கள் நன்றாக உள்வாங்கிக்கொள்ள வேண்டும். ‘அந்த நோக்கங்கள் நிறைவேற்றப்பட முடியாதவை’ என்று நான் சொல்லவே இல்லை. ஆனால், ‘பண மதிப்பு நீக்கத்தால், அதைச் செய்ய முடியாது’ என்றுதான் சொல்கிறேன். நான் சொன்னதுதானே இப்போது நடந்துள்ளது! அந்த நோக்கங்களை அடைய வேண்டுமானால், அதற்கு வேறு வேறு வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டும். சீனாவில் ஊழலுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகளை அந்த நாட்டின் அதிபர் எடுக்கிறார். பண மதிப்பு நீக்க நடவடிக்கை மூலமாகவா அவர் ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கிறார்?
இல்லை, வேறு எந்த நாட்டிலாவது பண மதிப்பு நீக்க நடவடிக்கை எடுத்து ஊழலை ஒழிக்க முற்பட்டுள் ளார்களா? இல்லையே! உண்மையில், ஊழலை ஒழிப்பதற்கு இந்த அரசு நடவடிக்கை எடுத்தால், அதை நாங்கள் வரவேற்போம். ஆனால், பண மதிப்பு நீக்கம் அதற்கு வழியல்ல என்பதைத்தான் எடுத்துரைக்கிறோம்.”
``பண மதிப்பு நீக்க நடவடிக்கைமூலம் ஒரேயொரு நன்மை கூடவா ஏற்படவில்லை?’’
``ஒரு நன்மையாவது ஏற்பட்டு இருக்கிறதா? என்று கேட்கிறீர்கள். நானும் தேடித் தேடிப் பார்க்கிறேன். ஒன்றும் ஏற்படவில்லை. ஆனால், மக்கள் மனதில் ஓர் அச்சம் ஏற்பட்டுள்ளது. ‘பெரிய அளவிலான தொகையை ரொக்கத்தில் புழங்கக் கூடாது’ என்ற அச்சம் மக்களிடம் உருவாகி உள்ளது. ஆனால், ஒரு ஜனநாயக நாட்டில், அச்சத்தின் மூலமாகச் சீர்திருத்தம் கொண்டுவர முடியாது; அப்படிக் கொண்டுவரவும் கூடாது. பொறுப்பான விதிகள், பொறுப்பான சட்டங்கள், பொறுப்பான நிர்வாக நடவடிக்கைகள் மூலமாகத்தான் மக்கள் மத்தியில் ஒரு மனப் புரட்சியை ஏற்படுத்த வேண்டும்; அப்படித்தான் ஏற்படுத்தவும் முடியும். மாறாக, அச்சத்தின் மூலம் ஒரு சீர்த்திருத்தத்தைக் கொண்டுவந்தால், அந்த அச்சம் தொடக்கத்தில் வேண்டுமானால், கொஞ்சம் வீரியமாக இருக்கும்; போகப்போக அதுவும் மெல்ல மெல்ல மறைந்துவிடும். அதற்கு இந்தப் பண மதிப்பு நீக்க நடவடிக்கை மிகச் சிறந்த உதாரணம். கடந்த டிசம்பர் மாதத்தில் மக்களிடம் ரொக்கப் புழக்கம் குறித்து இருந்த அச்சம், இந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இல்லையே!’’
`` `பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் கறுப்புப் பணம் வெள்ளைப் பணமாக மாறிவிட்டது’ என்று எப்படிச் சொல்கிறீர்கள்?’’
``15 லட்சத்து 44 ஆயிரம் கோடி ரூபாய் நோட்டைச் செல்லாது என்று அறிவித்துவிட்டு, எங்களுக்கு இதில் 3 லட்சம் கோடி மிஞ்சப்போகிறது என்று மார் தட்டினார்கள். ஆனால், இன்றைக்கு நடந்தது என்ன? 15 லட்சத்து 44 ஆயிரம் கோடியில், 15 லட்சத்து 28 ஆயிரம் கோடி ரூபாய் வங்கிக்கு வந்துவிட்டது. வங்கிக்கு வராதது வெறும் 16 ஆயிரம் கோடி. அதிலும் பெரும்பகுதி நேபாளம், பூட்டானில் சிக்கி உள்ளது. இன்னும் கொஞ்சம் என்.ஆர்.ஐ கைகளில் இருக்கிறது. அதுபோக, ரூபாய் நோட்டுக்களை மாற்ற முடியாதவர்கள் கையில் கொஞ்சம் இருக்கிறது. அப்படியானால் என்ன அர்த்தம்... கறுப்புப் பணமும், கள்ளப் பணமும் வங்கிக்கு வந்து தற்போது வெள்ளைப் பணமாகிவிட்டது. ஆகவேதான், நான் குற்றம் சாட்டுகிறேன். வேறு பலரும் இந்தக் குற்றத்தைச் சாட்டுகிறார்கள். பெரிய கறுப்புப் பண முதலைகள், தங்களின் கறுப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக மாற்றுவதற்கு அரசே இந்த வழியை வகுத்துத் தந்ததோ என்று!’’
``அதுபற்றி விசாரணை நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளதே?’’
``விசாரணை நடத்தட்டும். ஆனால், இன்று... மொத்தக் கறுப்புப் பணமும், வெள்ளைப் பணமாக மாறி, வங்கிகளில் கம்பீரமாக உட்கார்ந்துள்ளதே! அது யார் கையில் இருந்த பணம் என்பதற்கு இன்னும் பதில் இல்லையே. அந்த விசாரணையை மேற்கொள்வதிலும் சிக்கல் இருக்கிறதே? ரிசர்வ் வங்கி, எந்த வங்கிக் கிளைக்கு, எந்த எண்ணில் உள்ள பணத்தை அனுப்பினோம் என்ற ‘டேட்டாவை’ பராமரிக்க வில்லை. அதனால், அதிலும் சிக்கல் இருக்கிறதே!”
``டிஜிட்டல் பரிவர்த்தனைகள், டிஜிட்டல் முறையில் வணிகம் செய்யும் மிகப்பெரிய நிறுவனங்களுக்கு ஆதரவாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகச் சிலர் சொல்கிறார்களே?’’
``தனி மனிதர்கள் செய்யும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் என்பதை அளவீடாகக் கொண்டால், அவர்களுடைய 10 பணப்பரிவர்த்தனை களில் ஒன்றிரண்டு அதிகரித்துள்ளன. ஆனால், நாட்டின் மொத்த டிஜிட்டல் பரிவர்த்தனையை அளவீடாக எடுத்துக் கொண்டால், அது மிகப்பெரிய அளவில் ஏற்றம் கண்டதாகப் புள்ளிவிபரங்கள் சொல்லவில்லை. கடந்த நவம்பர் மாதம், டிஜிட்டல் பரிவர்த்தனையான பணத்தின் மதிப்பு 94 லட்சம் கோடி. இது கடந்த மார்ச் மாதத்தில் 149 லட்சம் கோடியாக உச்சம் பெற்றுள்ளது. ஆனால், கடந்த அக்டோபர் மாதத்தில் 99 லட்சம் கோடியாக மீண்டும் கீழிறங்கிவிட்டது. அதாவது, டிஜிட்டல் பரிவர்த்தனை மேலே ஏறி, பிறகு மீண்டும் இறங்கி முந்தைய இடத்திற்குப் பக்கத்திலேயே வந்துவிட்டது. ஆக, டிஜிட்டல் பரிவர்த்தனை மிகப்பெரிய அளவில் வளரவில்லை; அது வளர்ந்ததற்கு ஆதாரங்களும் இல்லை.’’
``பண மதிப்பு நீக்கம் என்பது உங்கள் எண்ணத்திலேயே உதிக்கவில்லை; சரி. ஆனால், ஜி.எஸ்.டி உங்களுடைய எண்ணத்தில் பிறந்த திட்டம்தானே? நீங்கள் அதையும் கடுமையாக இப்போது விமர்சிக்கிறீர்களே?’’
``நாங்கள் சொன்னதை அவர்கள் அமல் செய்திருந்தால், நாங்கள் விமர்சித்திருக்க மாட்டோம்; மாறாக, பாராட்டி இருப்போம்! ஆனால், இவர்கள் அப்படிச் செய்யவில்லை. நாங்கள் சொன்னது ‘ஒரு நாடு-ஒரு வரி; எளிதான வரி முறை; எளிதான விதி’. சிங்கப்பூரில் ஒரு வரி, மலேசியாவில் ஒரு வரி, ஆஸ்திரேலியாவில் ஒரு வரி... அதைப்போன்ற ஒரு வரி முறைதான் ஜி.எஸ்.டி. ஆனால், இவர்கள் கையில்போன ஜி.எஸ்.டி என்பது `குரங்கு கையில் பூமாலை’ போலாகிவிட்டது. 8 வரி விகிதங்களை விதித்துள்ளனர். 0, 3, 5, 12, 18, 28, 40 மற்றும் அதற்கு மேல் செஸ் வரி. மோட்டார் காருக்கு 20 சதவிகித செஸ் வரி இருக்கிறது. இதற்குப் பெயர் ஜி.எஸ்.டி-யா? இல்லை. இதற்கு, அவர்கள் வேறு எதாவது ஒரு பெயர் வைக்க வேண்டுமேயொழிய, இதை ஜி.எஸ்.டி என்று சொல்லவே கூடாது.
இவர்கள் அமல்படுத்தி இருப்பதில், ஒவ்வொரு மாதமும் ஒவ்வொருவரும் 3 ரிட்டன் தாக்கல் செய்ய வேண்டும்! இதையா நாங்கள் சொன்னோம்? ஒரு மாநிலத்தில் ஒரு நிறுவனம் தொழில் செய்தால், 37 ரிட்டன் தாக்கல் செய்ய வேண்டும்; 10 மாநிலத்தில் தொழில் செய்தால், 370 ரிட்டன் ஃபைல் செய்ய வேண்டும்; ஒரு வருடத்துக்கு 36 ரிட்டன். அதோடு, ஆண்டு ரிட்டன் ஒன்று சேர்த்து மொத்தம் 37. இந்தியா முழுவதும் தொழில் செய்யக்கூடிய நிறுவனங்கள் இருக்கின்றன. அவர்கள் எல்லாம் 1000 ரிட்டன்களுக்குமேல் ஃபைல் செய்ய வேண்டும். இதையா நாங்கள் சொன்னோம். இதைவிட மிகமிக முக்கியமான கேடு என்னவென்றால்... வரிச்சுமை. நாங்கள் என்ன சொன்னோம்... இந்த வரி, நியாயமான வரியாக இருக்கும் என்று சொன்னோம்; இந்தவரி மக்கள் மீது வரிச்சுமையை ஏற்றாது என்று சொன்னோம். நாங்கள் சிந்தனையில் வைத்திருந்த ஜி.எஸ்.டி என்பது வேறு. இவர்கள் அமலுக்குக் கொண்டுவந்துள்ள வரி என்பது முற்றிலும் வேறு! 4 மாதங்கள் 10 நாள்கள் கழித்து ஞானோதயம் பிறந்து, அவசர அவசரமாக 170 பொருள்களில் 28 சதவிகிதத்தை 12, 18 என்று குறைத்திருக்கிறார்கள்; ஏன் இந்த ஞானோதயம் அப்போது பிறக்கவில்லை? நாடாளுமன்றத்தில் நாங்கள் சொன்னபோது மூர்க்கத்தனமாக மறுத்தார்களே! ஏன்?’’
``நீங்கள் குறிப்பிட்ட ஜி.எஸ்.டி-யில் இவ்வளவு நன்மைகள் உண்டென்றால், அதை பி.ஜே.பி அரசாங்கம் செய்துவிட்டுப் பெயர் வாங்கியிருப்பார்களே. பிறகு, அதை அவர்கள் நிராகரிக்க என்ன காரணம்?’’
``அறியாமைதான் காரணம். அவர்களுக்குப் புரியவில்லை. அறியாமையோடு சேர்ந்த முரட்டுப் பிடிவாதம். அதுதான் காரணம் என்று நான் நினைக்கிறேன்.’’
`` `ஜி.எஸ்.டி-யை நடைமுறைப்படுத்துவதில் சில சிக்கல்கள் வரும். அதை நாங்கள் அனுபவத்தின்மூலம் சரி செய்வோம்’ என்றது மத்திய பா.ஜ.க அரசு. அதை இப்போது கடைபிடிக்கவும் செய்கிறதே?’’
`` ‘நாங்கள் எங்களுடைய அனுபவத்தில் இருந்து பிழையைத் திருத்திக்கொள்வோம்’ என்றால், உங்களுக்கு அனுபவம் வந்து அந்தப் பிழையைத் திருத்திக் கொள்ளும்வரை, அந்தச் சுமையை மக்கள் அனுபவிக்க வேண்டும் என்று அர்த்தமா? ஏற்கனவே, அனுபவம் உள்ளவர்கள் அதைச் சுட்டிக்காட்டும்போது, அந்த அனுபவ முறையை ஏற்றுக்கொள்வதில் என்ன பிரச்னை? நீங்கள் அனுபவம் பெற்றுத் திருந்தும்வரை, அந்தத் துன்பங்களை மக்கள் ஏன் அனுபவிக்க வேண்டும்? திருக்குறள் 551-ல் நமக்குச் சொல்லும் பாடம் என்ன? ஓர் அரசு மக்களுக்குத் தீமை இழைக்கக் கூடாது. அரசு நன்மை இழைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை; தீமை இழைக்கக் கூடாது.’’
`` ஜி.எஸ்.டி-யால் எந்தப் பலனும் இல்லை என்று சொல்கிறீர்களா?’’
``பலன் உண்டு; அது வரும். எப்போது வரும் என்றால், நாங்கள் சுட்டிக்காட்டிய பிழைகளை எல்லாம் திருத்தம் செய்து, தற்போது நடைமுறையில் உள்ள வரியை, உண்மையான ஜி.எஸ்.டி-யாகக் கொண்டுவரும் போது, பலனும் வரும். முதலில் 28 சதவிகித வரியை ஒழிக்க வேண்டும்; உச்ச வரி என்பது 18 சதவிகிதம் என்பதைக் கொண்டுவர வேண்டும்; எந்த வரியாக இருந்தாலும் எந்த வரி விகிதமாக இருந்தாலும் 18 சதவிகிதத்துக்கு மிகாது என்பதை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும்; அனைத்துச் சேவைகளுக்கும் அனைத்துப் பொருள்களுக்கும், ஒரே வரி என்ற கொள்கையை அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்; பிறகு, அந்த வரியைக் கட்டுவதற்கு எளிதான விதிகளை அவர்கள் உருவாக்க வேண்டும்; உங்களுக்கு எழுத முடியவில்லை என்றால், யாரையாவது நான்கு பேரை அழைத்து, “அய்யா எளிதான விதிகளை எழுதித் தாருங்கள்” என்று கேட்க வேண்டும். உங்களுக்குத்தான் எழுதத் தெரியவில்லையே... பிறகு ஏன் நீங்களே விதிகளை எழுதுகிறீர்கள். மாதம் 3 ரிட்டன் தாக்கல் செய்ய வேண்டும் என்பதைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்... காரைக்குடியில் ஜவுளிக்கடையும் செருப்புக்கடையும் வைத்திருப்பவர்கள் இதை எப்படிச் செய்ய முடியும். அவர்கள் பில் புக் வைத்துள்ளனர்; நாளேடு, பேரேடு பராமரிக்கின்றனர். திடீரென்று அந்தக் கடைக் காரரைப் பார்த்து, “நீ மாதம் மூன்று ரிட்டன்... ஆன்-லைன், கம்ப்யூட்டரில் ஃபைல் செய்ய வேண்டும்” என்று சொன்னால், அதை எப்படி அவரால் செய்ய முடியும்? 5 ஆயிரம், 10 ஆயிரம் ரூபாய்வரை கொடுத்து, பயிற்சி பெற்றவர்களை வைத்துத்தானே அதைச் செய்ய வேண்டி உள்ளது. இது கட்டுப்படியாகுமா? நான் சொல்லும் இந்த உதாரணம், முனிசிபல் நகரத்தில்! இதைப்போல எத்தனை நகரங்கள் நாடு முழுவதும் உள்ளன; எத்தனை ஊர்கள் உள்ளன. அங்கெல்லாம் எப்படி ஆன்-லைனில் ஃபைல் செய்வார்கள். ஆன்-லைனில் ஃபைல் செய்ய வேண்டும் என்றால், வை-ஃபை வசதி வேண்டும்; தடையில்லாத மின்சாரம் வேண்டும்; மின் கணினிப் பயிற்சி வேண்டும். இந்தப் பயிற்சிகளை எல்லாம் இந்த அரசு கொடுத்துவிட்டதா? இந்தியாவில் கோடிக்கணக்கான வியாபாரிகளுக்கு, வர்த்தகர்களுக்கு, கோடிக்கணக்கான மக்களுக்கு இந்த அரசு பயிற்சி கொடுத்துவிட்டதா?’’
``கடந்த ஐ.மு.கூட்டணி ஆட்சி, தற்போதைய பாரதிய ஜனதா ஆட்சி... இரண்டிலும் நிலவிய பொருளாதார வளர்ச்சியை ஒப்பிட்டுச் சொல்ல முடியுமா?’’
``முதல் 5 ஆண்டுகளில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் சராசரி வளர்ச்சி 8.5 சதவிகிதம். மூன்று ஆண்டுகளில் தொடர்ச்சியாக 9 சதவிகிதத்துக்கும் அதிகமான வளர்ச்சி. அந்த 5 ஆண்டுகள் தான் சுதந்திர இந்தியாவில் பொருளாதாரத் துறையின் பொற்காலம் என்பதை உலகம் முழுவதுமே ஒப்புக் கொண்டது. மொத்தம் 10 ஆண்டுகளையும் எடுத்துக் கொண்டால், சராசரி வளர்ச்சி என்பது 7.5 சதவிகிதம். பாரதிய ஜனதா கட்சியின் மூன்று ஆண்டுகளில் சராசரி வளர்ச்சி என்ன? 2013-14 ல் நாங்கள் பதவியில் இருந்து விலகும்போது, அந்த ஆண்டு ஏற்றுமதி 300 பில்லியன் டாலரைத் தாண்டியது. அதாவது 30 ஆயிரம் கோடி டாலரைத் தாண்டியது. இந்த மூன்று ஆண்டுகள் பாரதிய ஜனதா ஆட்சியில், எந்த ஆண்டும் ஏற்றுமதி 300 பில்லியன் டாலரைத் தாண்டவில்லை. ஆண்டுக்கு ஆண்டு ஏற்றுமதி உயர வேண்டும். ஆனால், 2013-14-ல் அடைந்த உச்சத்தை இவர்கள் இன்னும் தாண்டவில்லை. எங்கள் ஆட்சியில் தனியார் முதலீடு மொத்த ஜி.டி.பி-யில் 35 சதவிகிதம். 37 சதவிகிதத்தைக் கூட நாங்கள் தொட்டோம். இன்று ஜி.டி.பி-யில் என்ன நிலை? 28 சதவிகிதம். அதாவது 7 முதல் 8 சதவிகிதம் சரிந்திருக்கிறது; குறைந்திருக்கிறது. தனியார் முதலீடே கிடையாது. அதனால்தான், அரசு இப்போது வரியைப்போட்டுச் செலவழிக்கிறது. தனியார் முதலீடு கணிசமாகக் குறைந்துள்ளது. சிறு தொழில்களுக்கு மைனஸ் 5 சதவிகிதம், நடுத்தரத் தொழில்களுக்கு மைனஸ் 3 சதவிகிதம் கடன் கொடுக்கப்படுகிறது. கடந்த 20 ஆண்டுகளில் சிறு-குறு தொழில்களுக்கு, இவ்வளவு குறைவாகக் கடன் கொடுக்கப்பட்டதே கிடையாது. ஆகவே தான், சிறு-நடுத்தரத் தொழில்கள் பெருகவில்லை. அதில் வேலைவாய்ப்புகளும் கிடைக்கவில்லை. தொழில்துறைக்கு கடன் வளர்ச்சி நெகட்டிவ். கடந்த ஆண்டுக் கடன் கொடுத்தைவிட இந்த ஆண்டுக் கூடுதலாகக் கடன் கொடுத்தால், அதுதான் வளர்ச்சி. இது உலகம் முழுவதும் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ள குறியீடு. தொழிலுக்கு முதலீடு வேண்டும். முதலீடு என்றால் என்ன? கடன் வாங்கிய பணம், சொந்தப் பணம் என்ற இரண்டும் சேர்ந்ததுதான் முதலீடு. சொந்தப் பணத்தைப் போட கடன் வாங்க வேண்டும். கடன் வாங்கிய பணத்துக்கு ஈடாகச் சொந்தப் பணத்தைப் போட வேண்டும். கடனே வாங்கவில்லை என்றால், சொந்தப் பணமும் போட வில்லை... தொழிலும் தொடங்கவில்லை என்றுதானே அர்த்தம். இது அடிப்படையான பொருளாதார அறிவுள் ளவர்களும் ஏற்றுக் கொள்வார்கள். கடன் வளர்ச்சி என்பது நாட்டின் வளர்ச்சியின் உண்மையான குறியீடு.
ஆக, ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஆட்சியிலும் தற்போதைய பாரதிய ஜனதாவின் ஆட்சியிலும் ஏற்பட்ட தொழில் வளர்ச்சி உள்ளங்கை நெல்லிக்கனி.’’
``உங்கள் ஆட்சியில் வாராக் கடன்களாக நீங்கள் விட்டுச் சென்றதால், இன்றைய அரசாங்கத்துக்குப் பெரும்சுமை ஏற்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டப்படுகிறதே?’’
``வாராக் கடன் என்பது திடீரென்று வரவில்லை. பொருளாதார வளர்ச்சி 7 அல்லது 8 சதவிகிதம் தொடர்ந்து இருந்தால், வாராக் கடன் ஆகியிருக்காது. அரசு சொல்லும் புள்ளிவிபரத்தையே எடுத்துக் கொள்ளுங்கள். 31 மார்ச் 2014-ல் வாராக் கடன் 3 லட்சம் கோடி. அதைத்தவிர மற்ற கடன் எல்லாம் வந்த கடன்தானே! வட்டியும் தவணை தவறாமல் அசலும் முறையாகக் கட்டப்பட்ட கடன்தானே! சரி, அந்த வாராக் கடன் என்பது மூன்று லட்சம் கோடி மட்டுமே. இன்றைக்கு வராக் கடன் எவ்வளவு? 10 லட்சம் கோடி. ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் ஒழுங்காகக் கட்டப்பட்டுக் கொண்டிருந்த கடன், இப்போது வராக் கடனாக மாறியிருக்கிறது. இது உங்கள் ஆட்சியில் தானே மாறியிருக்கிறது. இது ஏன் வாராக் கடனாக மாறியிருக்கிறது. பொருளாதாரம் சரிந்துவிட்டதால், இது வாராக் கடனாக மாறியிருக்கிறது. பொருளாதாரம் நிமிர்ந்து வளர்ந்திருந்தால், அவனுடைய தொழிலும் நன்றாக நடந்திருக்கும். அதிகமான பொருள்களை விற்றிருப்பார்கள். கடனைக் கட்டியிருப்பார்கள். ஆனால், பொருளாதாரம் சரிந்ததால், தொழில் சரிந்தது. தொழில் சரிந்ததால், வியாபாரம் சரிந்தது. அதனால், வராக் கடன் அதிகரித்தது.’’
`` `ஜி.டி.பி-யில் காங்கிரஸ் சொல்லும் தொழில் வளர்ச்சி என்பது மாயத்தோற்றம். உண்மையில் அது வேலை வாய்ப்புக்களை உருவாக்கவில்லை; எங்கள் அரசில்தான் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டன’ என்று பா.ஜ.க சொல்கிறதே?’’
``சி.எம்.ஐ.இ-யின் அறிக்கையின்படி, இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரை 6 மாதத்தில் 19 லட்சத்து 60 ஆயிரம் வேலை வாய்ப்புகள் குறைக்கப்பட்டுள்ளன. இந்த அறிக்கையை அரசு இன்னும் மறுக்கவில்லை; மாற்றுப் புள்ளி விபரத்தையும் கொடுக்கவில்லை. கல்லூரி நடத்துபவர்கள் கேம்பஸ் வேலைவாய்ப்பு 40 சதவிகிதம் சரிந்திருக்கிறது என்கிறார்கள். தொழில் முனைவோர் கூட்டங்களில் கலந்து கொள்ளும் சமயங்களில், ‘கடந்த 12 மாதங்களில், யார் யாருடைய தொழிலில் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி, புதிய ஆள்களை நியமித்து இருக்கிறீர்கள்’ என்று நான் கேட்கிறேன். என் முன்னால், ஒரு கை கூட உயரவில்லை. இதுதான் உண்மை நிலவரம்.’’
``உலக வங்கி வெளியிட்டுள்ள பட்டியலில், தொழில் எளிதாகத் தொடங்குவதற்கு வசதியான நாடுகளின் பட்டியலில், இந்தியா 130-வது இடத்தில் இருந்து 100-வது இடத்துக்கு முன்னேறி உள்ளதே! பண மதிப்பு நீக்க நடவடிக்கை மொத்தமாக இந்தியப் பொருளாதார வளர்ச்சியை வீழ்ச்சி அடைய வைத்துள்ளது என்பது உண்மையானால், இது எப்படிச் சாத்தியமாகும்?’’
``130-வது இடத்தில் இருந்து 100-வது இடத்துக்கு எப்படி வந்தோம் என்று கேட்கிறீர்கள்? இது நல்ல கேள்வி. உலக வங்கியின் அந்தக் கூற்றுக்கு, ஆதாரமாக நடத்தப்பட்ட ஆய்வு, இந்தியாவில் இரண்டு நகரங்களில் மட்டும் நடப்பது. ஒன்று மும்பை; மற்றொன்று டெல்லி. இந்த இரண்டு நகரங்களில், இரண்டு இடங்களில் ஏற்பட்ட கணிசமான முன்னேற்றத்தால், இந்தியாவின் இடம் உயர்ந்துள்ளது. அதில் ஒன்று, மும்பையிலும் டெல்லியிலும் மின்சார இணைப்பு பெறுவதற்கான அவகாசம் தற்போது குறைக்கப்பட்டு இருப்பது; இப்போது அந்த இரண்டு நகரங்களில் மின் இணைப்பு பெறுவதற்கான கால அவகாசம் வெகுவாகக் குறைந்துள்ளது. இரண்டாவது Insolvency and Bankruptcy Code சட்டத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றி இருக்கிறது. தமிழில் `மஞ்சள் கடிதாசி கொடுத்தாச்சு, போண்டியாகி விட்டது, திவாலான கம்பெனி’ என்று சொல்கிறோம் இல்லையா... அதுதான். அதற்கு நாடாளுமன்றம் ஒரு சட்டத்தை நிறைவேற்றி, கம்பெனிகள் திவாலாவதை விரைவில் முடித்து வைப்பதற்கு ஒரு Tribunal-ஐ நிறுவி இருக்கிறது. அவ்வளவுதான்! மேலும் நூறாவது இடம் என்பது முதல் இடம் அல்ல; நூறாவது இடம் என்பது நூறாவது இடம்தான்! இதில் என்ன பெருமை இருக்கிறது.’’
``மத்திய பா.ஜ.க அரசின் பொருளாதார நடவடிக்கைகளை நீங்கள் தொடர்ந்து கறாராக விமர்சிப்பதால்தான், உங்களை மோடி தனிப்பட்ட முறையில் தாக்குகிறாரா?’’
``இது வரம்பு மீறிய கேள்வி. நீங்கள் வரம்பை மீறிவிட்டீர்கள். ஒப்புக் கொண்ட பேட்டியின் பொருள்களில் இதுபோன்ற கேள்விகள் வராது. ஆனாலும், நான் பதில் சொல்கிறேன். நான் மத்திய உள்துறை அமைச்சராக இருந்தபோது, மோடி குஜராத் முதல்வராக இருந்தார். அப்போது டெல்லியில் நடக்கும் முதல் அமைச்சர்கள் கூட்டங்களில் அவர் கலந்துகொண்டுள்ளார். அப்போது ஓரிரு முறை அவரைப் பார்த்திருக்கிறேன். தனிப்பட்ட முறையில் அவரைச் சந்தித்ததே இல்லை. பேட்டியை இத்தோடு முடித்துக்கொள்ளலாம்” என எழுந்து நிற்கிறார் ப.சிதம்பரம்.
Thanks Anatha vikatan
Thanks Anatha vikatan