Aug 3, 2013

சரிவைச் சரிக்கட்ட தெலுங்கானா! காங்கிரஸின் அரசியல் கணக்கு



















ஒரு பக்கம் சந்தோஷத்தையும் இன்னொரு பக்கம் கொந்தளிப்பையும் விதைத்துள்ளது புதிய மாநிலமான தெலுங்கானா! 
உள் துறை அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் கடந்த 2009 டிசம்பர் 9-ம் தேதி, சோனியா காந்தி மற்றும் பிரதமரை சந்தித்த கையோடு, இரவோடு இரவாக, 'தனி தெலுங்கானா அமைக்கப்படும்’ என்ற அறிவிப்பை வெளியிட்டார். அன்றைய தினம், சோனியா காந்தியின் பிறந்த நாள். இது 'சோனியாவுக்குப் பிறந்த நாள் பரிசு’ என்றார் அதிரடியாக. இப்படி இரவோடு இரவாக அறிவிக்கப்பட்டு மூன்று வருடங்களாகிவிட்டன. இப்போதுதான் அந்த அறிவிப்பு உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.
இந்தியா சுதந்திரம் அடைந்த காலகட்டத்தில் 14 மாநிலங்கள் இருந்தன. மைசூர், ஹைதராபாத், காஷ்மீர் போன்ற பல மாகாணங்கள் மகாராஜாக்கள், நிஜாம்களுக்கு உட்பட்டு இருந்தன. சுதந்திரத்துக்குப் பின்னர் இவற்றை எல்லாம் மத்திய அரசு தன்வசம் கொண்டுவந்தது. நிஜாம் அரசரின் கீழ் ஹைதராபாத்தைத் தலைமையிடமாகக் கொண்டிருந்த தெலுங்கானாவை, 1948-ல் தன்வசம் கொண்டு வந்தது மத்திய அரசு. பின்னர் அது தனி மாநிலமாகவே செயல்படத்தொடங்கியது. 1956-ல் மொழிவாரி மாநிலங்கள் அமைக்கும் பணி நடந்தது.
தெலுங்கு மொழி பேசும் மக்கள் அடங்கிய அகண்ட ஆந்திர மாநிலம் அமைய வேண்டும் என்ற போராட்டம் அப்போது வலுப்பெற்றது. இந்தக் கோரிக்கைக்காகவே பொட்டி ஸ்ரீராமுலு உண்ணாவிரதம் இருந்து உயிர்விட்டார். தெலுங்கானா உள்ளிட்ட கடலோர ஆந்திரம், ராயல சீமா போன்ற பகுதிகள் சேர்ந்த அகன்ற ஆந்திரம் உருவானது. அப்போதும் தெலுங்கானா மக்கள் ஆந்திரத்தோடு இணைய விருப்பம் இல்லாமலேயே இருந்தனர். மத்திய அரசு அமைத்த மாநிலங்கள் மறுசீரமைப்பு ஆணையகத்துக்குத் தலைமை வகித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஃபாசல் அலி, 'ஆந்திராவின் மற்ற பகுதி மக்கள் மொழிவாரியாக ஒன்றிணைந்து இருக்க விரும்புகின்றனர். ஆனால் தெலுங்கானாவில் நிலைமை தெளிவாக இல்லை’ என்று அறிக்கை கொடுத்தார். இருந்தும் அப்போதை மத்திய அரசு அதைக் கண்டுகொள்ளவில்லை.

தெலுங்கானா ஆந்திரத்துடன் ஒட்ட விரும்பாததற்குக் காரணம் உண்டு. கிட்டத்தட்ட 200 வருடங்களாக தெலுங்கானா பகுதி, நிஜாம் அரசர்களின் கீழ் தனித்தே செயல்பட்டது. மிகவும் பின்தங்கி இருந்த அந்தப் பகுதி மக்களின் கோரிக்கைக்கு அப்போதைய மத்திய அரசு மதிப்பு கொடுக்கவில்லை. 'ஆந்திர மக்களுக்குக் கடந்த ஐம்பது வருடங்களாகவே அடிமைப்பட்டு இருக்கிறோம்’ என்றே தெலுங்கானா மக்கள் கருதினர்.
தெலுங்கானா மக்களின் உண்மையான உணர்வுகளுக்கு மதிப்பளித்து இந்த முடிவை காங்கிரஸ் எடுத்ததா?
80 நாடாளுமன்றத்  தொகுதிகளைக் கொண்ட உத்தரப்பிரதேசத்தைப் பிரிக்காத காங்கிரஸ் 42 தொகுதிகளைக் கொண்ட ஆந்திராவை இப்படி அவசர அவசரமாகப் பிரிக்க முன் வந்த காரணம் என்ன? ஒரே வார்த்தையில் சொல்வதென்றால்... 'தேர்தல்’.
கடந்த 10 தினங்களாக சோனியா காந்தியின் ஜன்பத் இல்லத்திலும் ராகுல் காந்தியின் துக்ளக் லேன் வீட்டிலும் பரபரப்பான ஆலோசனைகள் நடந்தன. இறுதியில் ஆந்திரா மாநிலத்தை இரண்டாகப் பிரித்து புதிதாக 29-வது மாநிலமாக தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்படும் என்று ஆளும் காங்கிரஸ் கட்சி 30-ம் தேதி அதிகாரபூர்வமாக அறிவித்தது.
வருகிற 2014 தேர்தலுக்கான ரகசிய சர்வேக்கள் ஆந்திராவில் காங்கிரஸ் கட்சிக்கு உள்ள சிக்கல்களை எடுத்து சொல்ல, ஆந்திரத்தை இரண்டாகப் பிளப்பதன் மூலம் தெலுங்கானாவை தம் வசம் கொண்டுவர முடியும் என தீர்மானித்தது காங்கிரஸ். அக்கட்சியில் இப்போது ஆந்திராவுக்குப் பொறுப்பு வகிக்கும் திக்விஜய் சிங் இதைச் சாமர்த்தியமாகச் செய்தார். விருப்பமில்லாமல் இருந்த ராகுலை சம்மதிக்க வைத்ததில் இவருடைய பங்கு முக்கியமானது.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி கூட்டத்தில் பங்கெடுத்த தலைவர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளனர். மகராஷ்டிரா மாநிலத்தின் கிழக்குப் பகுதியின் 11 மாவட்டங்களை உள்ளடக்கிய 'விதர்பா’, உத்தரப்பிரதேசத்தின் கிழக்குப் பகுதியின் 22 மாவட்டங்களைப் பிரித்து 'ஹரித் பிரதேசம்’, மேற்குப் பகுதிகளைப் பிரித்து 'பூர்வாஞ்சல்’, மேற்கு வங்கத்தில் 'கூர்க்காலேண்ட்’, அசாமில் 'போடோலேண்ட் - டிமாலேண்ட்’, மத்திய பிரதேசத்தில் 'விந்திய பிரதேசம்’ என்று பல மாநிலங்களைப் பிரிக்கக் கோரும் வாதங்கள் எழுந்துள்ளன. ஆனால் ஆந்திராவில் காங்கிரஸுக்கு ஏற்பட்டுள்ள சரிவு அந்த வாதங்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டது.
ஆந்திரத்தில் காங்கிரஸ் கட்சி மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டது. இதைச் சரிகட்டுவதற்கு ஒரே வழி.. தெலுங்கானா. கர்நூல், அனந்த்பூர் மாவட்டங்களையும் தெலுங்கானாவில் சேர்க்கவும் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் 21 நாடாளுமன்றத் தொகுதிகள் தனி தெலுங்கானா மாநிலத்துக்கு உட்பட்ட பகுதியில் கிடைக்கும். தெலுங்கானா போராட்டத்தில் முன்னணியில் இருந்த முன்னாள் காங்கிரஸ் பிரமுகரும் டி.ஆர்.எஸ். தலைவரான சந்திரசேகர ராவோடு போடப்பட்டுள்ள ரகசிய ஒப்பந்தமும் ஓகே ஆனதைத் தொடர்ந்துதான் இந்தத் தனி தெலுங்கானா அறிவிப்பு.
தெலுங்கானாவைத் தனியாகப் பிரித்ததில் ஆந்திர மக்களிடம் அதிருப்தி ஏற்பட்டிருப்பது நிஜம்தான். அதைச் சமாளிக்கவும் காங்கிரஸுக்கு ஒரு திட்டம் இருக்கிறது.
பத்து ஆண்டுகளுக்கு மட்டுமே ஹைதராபாத் இரு மாநிலங்களுக்கும் பொதுவான தலைநகர். பிறகு தெலுங்கானாவின் புதிய தலைநகர் விஜயவாடாவா, குண்டூரா என்ற பிரச்னை வரும். மாநில எல்லைகள், தண்ணீர், மின்சாரப் பகிர்வு, அரசு ஊழியர்கள் பகிர்வு என மற்ற பிரச்னைகளும் வந்து சேரும். அதன் மூலம் காங்கிரஸ் எதிர்ப்பு குறைந்துவிடும் என்பது அந்தக் கட்சியின் எதிர்ப்பார்ப்பு.
ஒரே தாய்மொழியினரையும் அரசியல் இரண்டாகப் பிரித்துவிட்டது. ஆனால் இரண்டு மாநிலமும் வளர்ச்சி அடைந்தால் வருத்தப்பட எதுவும் இல்லை!

Jul 28, 2013

காகிதமாகும் இந்திய பணம்

 
         வரலாறு காணாத ரூபாயின் வீழ்ச்சி. ஒரு டாலருக்கு, 61 ரூபாய் என்ற விகிதத்தில், ரூபாய் மதிப்பு குறைந்தது. நம் இந்திய கரன்சி, ஒரு அமெரிக்க டாலருக்கு எதிராக, 53 முதல் 54 ரூபாய் வரை என்ற அளவில் தான் இருந்தது. ஜூன் மாதம் முதல் வாரத்தில் இந்த நிலை, கொஞ்சம் ஆட்டம் கண்டது. நான்கு நாட்கள் இடைவெளியில், 54 ரூபாய் என்ற அளவிலிருந்து, 60 ரூபாய் என்ற அளவிற்கு குறைந்தது.

ரூபாயின் மதிப்பு மேலும் குறைவதை தடுத்து நிறுத்த, ரிசர்வ் வங்கி தலையிட்டு, தன் கைவசம் உள்ள அமெரிக்க டாலரிலிருந்து ஒரு பகுதியை வெளியே விட்டு, ரூபாயின் சரிவை கொஞ்சம் தடுத்து நிறுத்தியது. இருந்தாலும், அடுத்த சில நாட்களுக்குள், இந்திய ரூபாய் மீண்டும் சரியத் துவங்கியது. ஒரு கட்டத்தில், ஜூலை 8ம்தேதி, ஒரு அமெரிக்க டாலருக்கு ரூபாய், 61-21 என்ற கணக்கைத் தொட்டது.அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் ஏன், திடீரென்று வீழ்ச்சி அடைந்தது? இதனால், நம் பொருளாதாரம் எப்படி பாதிக்கப்படுகிறது?எந்த நாட்டிற்கும், அதன் தேவைகள் முழுவதும், உள் நாட்டிலேயே கிடைப்பதில்லை. அவசியமான பல பொருட்களை, வெளி நாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டியிருக்கிறது. இந்தியாவைப் பொறுத்த வரை, நாம் இறக்குமதி செய்யும் பல பொருட்களில் முக்கியமானவை, கச்சா எண்ணெய்.மற்ற பொருட்களில் முக்கியமானவை தங்கம், தாவர எண்ணெய், உணவுப்பொருட்கள், நிலக்கரி, ராணுவ சாதனங்கள், பத்திரிகை காகிதம், கனரக இயந்திரங்கள் முதலியன. நாம் இறக்குமதி செய்யும் பொருள்களுக்கு, செலுத்த வேண்டிய தொகையை, ஏற்றுமதி செய்யும் பொருள்களின் கட்டண மதிப்பிலிருந்து ஈடு செய்கிறோம்.

ஏற்றுமதி செய்யும் பொருள்களின் கட்டண மதிப்பும், இறக்குமதி செய்யும் பொருள்களின் கட்டண மதிப்பும், ஏறக்குறைய சமமாக இருந்து விட்டால் பிரச்னை இல்லை. நடைமுறையில் இது சாத்தியமில்லை. நம் ஏற்றுமதி - இறக்குமதி கணக்கில், பல ஆயிரம் கோடி டாலர், துண்டு விழுகிறது. இதைத்தான், நம் நடப்புக் கணக்கில் பற்றாக்குறை என்று சொல்கிறோம்.இந்தியர்கள் பலர், வெளிநாடுகளில் வேலை செய்கின்றனர். அவர்கள் வருமானத்தில் பெரும் பகுதியை, இந்தியாவிற்கு அனுப்புகின்றனர். இந்த முறையில், நமக்கு அன்னிய செலாவணி கிடைக்கிறது. இதைத்தவிர, தகவல் தொழில் நுட்பத்துறையில், பல இந்திய நிறுவனங்கள், வெளிநாட்டு வர்த்தக ஸ்தாபனங்களின் வேலைப் பொறுப்பின், ஒரு பகுதியை இந்தியாவில் செய்கின்றனர் . இந்த வகையிலும் நமக்கு, அன்னிய செலாவணி கிடைக்கிறது.இதைத்தவிர, வெளிநாட்டு தொழில் நிறுவனங்கள், இந்தியாவில் தொழில் துறையில் முதலீடு செய்கின்றனர். அதற்கான, அன்னிய செலாவணியை அவர்கள் கொண்டு வருகின்றனர். அதே மாதிரி வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களும், இந்திய பங்கு சந்தையில் முதலீடு செய்ய, அன்னிய செலாவணி கொண்டு வருகின்றனர்.

இப்படி வரும், அன்னிய செலாவணியினால், நாம் நம் நடப்பு கணக்கு பற்றாக்குறையை சரி செய்கிறோம். வெளிநாட்டு தொழில் நிறுவனங்களே, வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள். இவர்கள் கொண்டுவரும் அன்னிய செலாவணி நிரந்தரமானதல்ல. இந்த இரண்டு வகை நிறுவனங்களும், எந்த நாட்டில் தங்கள் முதலீட்டுக்கு, அதிக வருமானம் கிடைக்குமோ, அங்கே தாவி விடுகின்றனர். அந்த நேரத்தில், தாங்கள் கொண்டு வந்திருந்த அன்னிய செலாவணி அத்தனையும், திரும்ப எடுத்துச் சென்று விடுவர். அந்த மாதிரி காலகட்டத்தில், நம் நடப்புக் கணக்கு பற்றாக்குறை அதிகமாகும்.இந்த மாதிரி நிலைமைத்தான், ஜூன் முதல் வாரத்தில் ஏற்பட்டது. இதைத்தவிர, கச்சா எண்ணை இறக்குமதி செய்யும் இந்திய நிறுவனங்கள், தாங்கள் இறக்குமதி செய்த கச்சா எண்ணை, கட்டணத்தையும் செலுத்த வேண்டிய நிலையில், அமெரிக்க டாலரை வாங்க முற்பட்டனர். இந்த மாதிரி டாலரின் தேவை அதிகமாகும் போது, இந்திய வர்த்தக வங்கிகளிடம், அந்த அளவு டாலர் கைவசம் இல்லாதிருந்தால், டாலருக்கு கிராக்கி ஏற்பட்டு, ஒரு டாலருக்கு அதிக இந்திய ரூபாய் கொடுக்க வேண்டியிருக்கிறது.இதனால் தான், ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைகிறது. ரூபாயின் இந்த வீழ்ச்சியினால், இறக்குமதி செய்யப்படும் பொருள்களின் விலை உயர்கிறது. பணவீக்கம் அதிகமாகிறது. இதைத்தவிர, நம் நாணயத்தின மதிப்பு குறையும் போது, நம் நாட்டில் முதலீடு செய்ய வெளிநாட்டினர் தயங்குவர்.

இதை மனதில் கொண்டுதான், மத்திய அரசு அவசர அவசரமாக, சில நடவடிக்கைகளை எடுக்கத் துவங்கியிருக்கிறது. முக்கியமாக அன்னிய முதலீட்டாளர்களுக்கு, பல சலுகைகளை அறிவித்திருக்கிறது. இந்தச் சலுகைகளின் மூலம், இந்தியாவிற்கு அன்னிய செலவாணி வரத்து அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில், மத்திய அரசு செயல்பட்டிருக்கிறது. இந்த ஏற்பாடு ஒரு தற்காலிக நிவாரணம் தான்.நிலைமையை சமாளிக்க, அரசு அமெரிக்க டாலரில் கடன் பத்திரங்களை வெளியிடலாமா என்று, தீவிரமாக யோசித்து வருகிறது. இந்திய அரசு வெளியிடும் அமெரிக்க டாலர், கடன் பத்திரங்களுக்கு, வெளிநாட்டில் வழங்கும் வட்டி விகிதத்தை விட, அதிக வட்டி அளித்தால், இந்த டாலர் கடன் பத்திரங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கக்கூடும். இதுவும், ஒரு தற்காலிக நிவாரணம் தான். அன்னிய செலவாணி பற்றாக்குறை, நம்மை துரத்திக் கொண்டே இருக்கும். நம் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படும். வெளிநாட்டு வர்த்தகத்தில் சீனா, ஒவ்வொரு ஆண்டும், கூடுதல் கையிருப்பு பெறுகிறது. இந்தக் கையிருப்பில் பெருமளவு, அமெரிக்க வங்கிகளிலும், அமெரிக்க அரசின் கடன் பத்திரங்களிலும், முதலீடு செய்யப்பட்டிருக்கிறது.

இந்தியாவை விட, சீனா பரப்பளவில் பெரிது. மக்கள்தொகையும் அதிகம். உள்நாட்டு உற்பத்தியின் அளவும் அதிகம். ஏற்றுமதி - இறக்குமதி அதிகம். அன்னிய செலாவணி கையிருப்பு அதிகம். சீன அரசின் நோக்கம், கூடிய சீக்கிரத்தில், உலக அளவில் அமெரிக்காவை விட, எல்லா அம்சங்களிலும் பெரியநாடு என்று, மற்ற நாடுகள் மதிக்க வேண்டும் என்பதுதான். இந்த சூழ்நிலையில் நாம், நம் எதிர்கால பொருளாதார வளர்ச்சியை, மனதில் கொண்டு, சில அதிமுக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டும். சீனாவுடன் வர்த்தக ரீதியாக, ஒரு உடன்பாடு செய்து கொள்ள வேண்டும். முதல்கட்டமாக சீனாவிடமிருந்து, அமெரிக்க டாலரை கடனாக, 10 ஆண்டுகளுக்குப் பின் திருப்பிச் செலுத்துவதாக உறுதி செய்து, பெற்றுக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.இந்தக் கடன் தொகைக்கு, சீனாவுக்கு அதன் முதலீட்டில் அமெரிக்க வங்கிகள் கொடுக்கும் வட்டியை விட, கொஞ்சம் கூடுதல் வட்டி தர, இந்தியா சம்மதிக்க வேண்டும். சீனாவிடமிருந்து, இந்த மாதிரி கடன் பெறுவதில், எந்தத் தவறும் கிடையாது.


இந்தியா, இதற்கு முன் பல ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, உலக வங்கி, இவைகளிடமிருந்தெல்லாம் கடன் பெற்றிருக்கிறது. சீனாவும், தன் உயர்ந்த ஸ்தானத்தை இந்தியா ஏற்றிருக்கிறது என்ற மகிழ்ச்சியில், பல கோடி டாலர் கடனாகத் தர சம்மதிக்கலாம். 10 ஆண்டுகாலத்திற்கு, இந்தத் தொகை நமக்கு கடனாக கிடைத்தால், இது பெருமளவிற்கு நம் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும்.இந்திய ரூபாயின் மதிப்பு இனி குறையாது. 10 ஆண்டுகளில் ஏற்படும் பொருளாதார வளர்ச்சியினால், நம் கடனை திருப்பி செலுத்த வேண்டிய நேரத்தில், நிச்சயமாக சிரமப்படமாட்டோம். இந்திய அரசு சிந்திக்க வேண்டும்.

- வி.கோபாலன் - வங்கி அதிகாரி - பணி நிறைவு