நலம் 360’ – 7
‘காசு, பணம், துட்டு, மணி, மணி…’ – என ஆடவைக்கும் வாழ்க்கைச் சூழலில், அமைதியாக வளர்ந்து ஆளைக் கொல்லும் அரக்கனாக விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது ரத்தக் கொதிப்பு நோய். ‘இந்த நோய்க்குக் கூடுதல் கவனம் கொடுங்கள். உங்கள் நாட்டில், கிட்டத்தட்ட 25 வயதுக்கு மேல் உள்ள மக்களில் 25 சதவிகிதம் பேருக்கு பி.பி எகிறிப்போய் இருக்கிறது’ என்று இந்தியா மீது கரிசனக் கவலை தெரிவிக்கிறது உலகச் சுகாதார அமைப்பு. மாரடைப்பு, பக்கவாதம், சிறுநீரகச் செயலிழப்பு, கண் பார்வை பறிபோதல்… எனத் தீர்ப்பதற்கு மிகக் கடினமான பல பிரச்னைகள உண்டாக்கும் இந்த ரத்தக் கொதிப்பு, முழுக்க முழுக்க தவிர்க்கக்கூடியதும் கட்டுப்படுத்தக்கூடியதும்கூட. நோய்குறித்த அலட்சியமும் தவறான புரிதலும் ‘துரத்தலும் தப்பித்தலுமான’ துரித வாழ்வியலும்தான் இந்த நோய் கும்மியடித்துக் குத்தாட்டம் போடுவதற்கான முக்கியமான காரணங்கள்.
ரத்தக் கொதிப்பு நோய் வர, மரபும் ஒரு முக்கியமான காரணம். ஆனால், 60 வயதைத் தாண்டி அப்பா-அம்மாவுக்கு வந்த இந்த ரத்தக் கொதிப்பு, சூழலையும் வாழ்வியலையும் நாம் சின்னாபின்னமாக்கியதில் 25 வயதில் எல்லாம் இப்போது தலைகாட்டத் தொடங்கி இருக்கிறது. உணவைப் பக்குவப்படுத்தும் வித்தை குறித்த நம் மூத்தக்குடியின் அனுபவ முதுமொழியான ‘உப்பில்லாப் பண்டம் (சீக்கிரம்) குப்பையிலே’ என்பதைத் தப்பாகப் புரிந்துகொண்டு, மானம் ரோஷம் அதிகரிக்க வேண்டும் என்று உப்பை அள்ளி அள்ளிப் போட்டுக்கொள்வதிலும், ‘நாங்கள் கூடுதலாக எந்தச் செயற்கை கெமிக்கலும் சேர்க்கவில்லை’ என்று கூவிக் கூவி விற்கப்படும் குளிர்பானத்தையும் பாக்கெட் பழச்சாறையும் முட்ட முட்டக் குடிப்பதிலும் உப்பு தப்பாட்டம் போடத் தொடங்கிவிடுகிறது.
உப்பு, ஊறுகாயில் மட்டும்தான் இருக்கும் என்பது தப்புக் கணக்கு. இனிப்புச் சுவையோடு இருக்கும் ஜாம், ரொட்டிகளிலும் உப்பு இருக்கிறது. ‘கொஞ்சம்தானே… எப்போவாவதுதானே!’ என வயிற்றுக்குள் கொட்டப்படும் சிப்ஸ், சூப்பில் தூவப்படும் உப்பு, ‘ரெடி டு ஈட்’ எனும் அத்தனை துரித வகையறா உணவுகளிலும் உப்பு தூக்கலாகவே தூவப்படும். சுவையூட்டுவதாகச் சொல்லிவரும் மோனோ சோடியம் குளூட்டமேட், ‘உணவைக் கெட்டுப்போகாமல் பாதுகாக்குமாக்கும்’ எனச் சொல்லிச் சேர்க்கப்படும் சோடியம் நைட்ரேட், சோடியம் பை கார்பனேட் வகையறாக்கள் எல்லாம் உப்புச் சத்தான ‘சோடியம்’ நிரம்பியவையே. கேக், சாக்லேட், பாஸ்ட்ரி, பீட்சா, பர்கர், நூடுல்ஸ், பன்னீர் பட்டர் மசாலா… என, துரித உணவுகள் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக சோடியம் உள்ளே போவதுதான் 45 வயதில் வரவேண்டிய நாய் குணம், நாலாம் வகுப்பு, ஐந்தாம் வகுப்புகளிலேயே வாலாட்டி வளர்கிறது.
சாது பொமரேனியனாக இளமையில் இருக்கும் இந்தக் குணம் ஆவேச அல்சேஷனாக ஆர்ப்பரிக்கும்போது, ‘சார்… நீங்க மாத்திரை சாப்பிட்டே ஆகணும்… அதுவும் காலம் பூரா!’ என்ற மருத்துவ எச்சரிக்கை மிரட்டும். அப்போது, ‘சார் உங்களைப் பார்த்தாதான் எனக்கு பி.பி ஏகிறுது. மத்தபடி நான் புத்தர் மாதிரி’ என, கொதிப்பை அளந்து பார்த்துச் சொன்ன மருத்துவரை பூச்சாண்டியாக்கித் தப்பிக்க முயற்சிப்பவர், ‘வீட்ல பொண்டாட்டி இம்சை… ஆபீஸ்ல சீனியர் தொல்லை… இதுல நான் எங்கே நிம்மதியா இருக்கிறது?’ என அலுத்துக்கொள்வோர், ‘நேற்று தூங்கலை; வரும்போது டிராஃபிக்ல வண்டி ஓட்டினேன். அதனாலயா இருக்கும்!’ என மருந்து சாப்பிட மறுப்போர் என விதவிதமான காரணங்களைச் சொல்லி, ரத்தக் கொதிப்பை அதிகரித்துக்கொள்ளும் பரந்த மனசுக்காரர்கள் இங்கே அதிகம்.
சரி, ‘அந்தக் கொதிப்பைக் குறைக்க மருந்து கண்டிப்பாக அவசியமா?’ என்று கேட்டால், ‘ஆம். நிச்சயம் அவசியம்’. இதயம் சுருங்கும்போது மிக அதிகபட்சமாக 140-ம், விரியும்போது 90-ம் தாண்டி ரத்த அழுத்த அளவு இருந்தால் ரத்தக் கொதிப்பு என்கிறது மேற்கத்திய விஞ்ஞானம். ‘136-ஐ தாண்டவில்லை. அது ஆரம்பக்கட்ட லேசான உயர்வுதான்’ எனில், உணவில் திருத்தம், நிறைய நடைப்பயிற்சி, யோகா, தியானப் பயிற்சி, சரியான தூக்கம் மூலம் நிச்சயம் அதைக் கட்டுக்குள் வைக்கலாம். கூடவே, நாம் வழக்கமாக மருத்துவரிடம் போனால் முன்கையில் பார்க்கும் பிரஷர், புற ரத்தக் குழாய்களில் உள்ள அழுத்தத்தை மட்டும்தான் பிரதிபலிக்கும். மத்திய ரத்தக்குழாய் அழுத்தத்தையும் சோதித்தால்தான், உண்மையிலேயே நோய் கட்டுக்குள் இருக்கிறதா எனக் கண்டுபிடிக்கலாம் என்கிறது இன்றைய நவீன மருத்துவம். அதனால்தான் பல நேரம் இந்த வியாதி இருப்பது பலருக்கும் தெரியாமல் போய், ஒரு பக்கம் ஸ்ட்ரோக் பாதித்த பிறகு, ‘அடடா… இவ்ளோ பி.பி இருந்துருக்கு; அவரும் சிரிச்சுக்கிட்டேதான் இருந்தாரு. எப்படி இப்படி ஆச்சு?’ என நாம் குழம்பித் தவிப்போம்!
ரத்தக் கொதிப்பைக் கட்டுப்படுத்த, உலகம் முழுக்க பல மூலிகைகளை வைத்து ஆராய்கிறார்கள். சீரகம், பூண்டு, வெங்காயம், வெந்தயத்தில் தொடங்கி செம்பருத்தி, முருங்கைக் கீரை, தக்காளி, கேரட் வரை பல உணவுக் காய்கறிகளில் ரத்தக் கொதிப்பைக் கட்டுப்படுத்தும் கூறுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளன. ஆனால், இவை எல்லாம் மருந்துக்கு துணை நின்று பயனாகும் உணவே (functional food ingredient) தவிர, மருந்துக்கு மாற்று கிடையாது.
நம் சித்த மருத்துவ மரபு வெகுகாலம் பயன்படுத்தி வந்த வெண்தாமரை சூரணத்துக்கு, இதயத்தில் இருந்து வெளியாகும் ‘கரோடிட் நாடி’யின் திடத்தன்மையைச் சீராக்கி ரத்தக் கொதிப்பைக் கட்டுப்படுத்தும் குணம் இருப்பதை முதல்கட்ட ஆய்வில் நிரூபித்திருக்கிறார்கள் சென்னை இராமச்சந்திரா மருத்துவமனைப் பல்கலைக்கழக ஆய்வாளர்கள். இன்னும் பலகட்ட ஆய்வுகளைக் கடந்து உண்மை ஊர்ஜிதமாகும்பட்சத்தில், வெண்தாமரை உலகெங்கும் உற்றுப் பார்க்கப்படும். இந்த உள்ளூர் பூக்களை சரஸ்வதிக்கு மட்டும் சமர்ப்பித்துவிட்டுப் போகாமல், அதைக் கொஞ்சம் தேநீராக்கிக் குடித்தோ, சித்த மருத்துவர்களிடம் அதன் மூலிகை சூரணத்தைப் பெற்றோ ஆரம்பக்கட்ட லேசான ரத்தக் கொதிப்பைக் கட்டுப்படுத்தலாம். பார்த்த முதல் நாளே பற்றிக்கொள்ளும் காதல்போல, முதல் அளவீட்டின்போதே எக்குத்தப்பாக எகிறி இருக்கும் கொதிப்புக்கு, முலிகை மருந்துகள் மட்டும் நிச்சயம் போதாது. நவீன மருத்துவமும் மிக மிக அவசியம்.
சீனாவில் ரத்தக் கொதிப்பு மருத்துவமனைக்கு நோயாளி ஒருவர் போனால், அங்கே அவரை பரிசோதிக்கும் மருத்துவர், அவர் அறையிலேயே அதை உடனே குறைக்க நவீன மருந்தும், கொஞ்சம்கொஞ்சமாக அதைக் கட்டுப்படுத்த சீன மூலிகையும், வாழ்வியல் பழக்கமாக ‘தாய்சீ’ நடனமும் கூட்டாகப் பரிந்துரைக்கிறார்கள். அமெரிக்கப் பல்கலைக்கழகங்களிலோ, நவீன மருத்துவ மாலிக்யூலும், பாரம்பரிய மூலிகையும் ஒரே சமயத்தில் பரிந்துரைக்கப்படும்போது, ஒரு மருந்தின் உயிர்செயல்தன்மையை (bio availability) மற்றது மாற்றுமா என்ற ஆய்வுகள் முடுக்கிவிடப்படுகின்றன. இரு துறைகளிலும் பன்னெடுங்காலமாக ஜாம்பவான்களைக் கொண்டிருக்கும் நம் ஊரிலோ, ‘எனக்கு அதைப் பத்தி எல்லாம் தெரியாது. அது உங்க இஷ்டம். உங்களுக்கு விருப்பம் இருந்தா என்கிட்ட பாருங்க’ எனப் பாரம்பரியமும் மேற்கத்தியமும் எந்தப் புள்ளியிலும் ஒருங்கிணைய மறுப்பதில், இந்திய இதயங்கள் மெள்ள மெள்ள துடிப்பைத் தவறவிட்டுக்கொண்டிருக்கின்றன!
உறக்கத்தைத் தொலைக்கும் பழக்கம் உள்ள நகரவாசிகளுக்கு 40 சதவிகிதமும், கிராமங்களில் எதிர்பாராத அளவாக 17 சதவிகிதமுமாக ரத்தக் கொதிப்பு நோயாளிகள் இருக்கிறார்கள் என்கிறது பப்ளிக் ஹெல்த் ஃபவுண்டேஷன் ஆஃப் இந்தியாவின் கணக்கு. இரு தரப்பிலும் எக்குத்தப்பாக எகிறும் இதன் உயர்வுக்கு மிக முக்கியமான காரணம், மது. ‘கொஞ்சமா குடிச்சா தப்பு இல்லை, வொயின் நல்லதாமே, இது பொம்பளைங்க குடிப்பதாமே..!’ என முழுவீச்சில் நடைபெறும் பொய்ப் பிரசாரமும், ‘இந்த வருஷம் இன்னும் அதிகமா வித்துக் காட்டணும்’ என அரசாங்கமே அட்டகாசமாக நடத்தும் மது வணிகமும் இந்தப் புள்ளிவிவரம் பொங்கி எழ ஊர்ஜிதமான காரணங்கள்.
தனியே நடக்க முடியாமல், கையில் உருட்டி ஒரு வாய் சாப்பிட முடியாமல் முடங்கி இருக்கும் எத்தனையோ அம்மாக்களுக்கு, ஜேசுதாஸ் பாடல் பின்னணியுடன் தூக்கிச்செல்ல ‘சூப்பர் ஸ்டார்’ பிள்ளைகள் கிடையாது. வாரம் மூன்று நாள் டயாலிசிஸ் செய்ய வசதி இல்லாத மகனின் மீது கரிசனம் கொண்டு, ‘அவனுக்கு எதுக்குச் செலவு?’ என முக வீக்கத்துடன், ‘இருக்கிற வரை இருந்துட்டுப் போறேன்!’ எனச் சொல்லும் பெற்றோர்கள்தான் இங்கு ஏராளம். ‘நாளைக்கு கண்டிப்பா தீம் பார்க் போலாம்டா செல்லம். இப்போ சமத்தா தூங்கு’ என மகளை உறங்க வைத்துவிட்டு, மகள் விழித்துப் பார்க்கையில், மருத்துவமனைப் படுக்கையில் குழாய்களுக்கு நடுவில் மாரடைப்புக்குச் சிகிச்சை எடுத்துக்கொண்டிருக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ரத்தக் கொதிப்பு கட்டுப்படுத்தப்படாததுதான் இதற்கு மிக முக்கியமான காரணம். ஆரம்பத்தில் இருந்தே முறையான வாழ்வியலும், சரிவிகித உணவும், வருமுன் காக்கும் மருத்துவமும் இருந்துவிட்டால் இத்தனையும் பெரும்பாலும் தவிர்க்கக்கூடியதே!
ரத்தக் கொதிப்புக்கு இதுவரை தடுப்பு மருந்து இல்லை என்கிறார்கள். ஆனால், வேலை முடிந்து களைத்து வீட்டுக்குச் சென்றதும் எதிர்கொள்ளும் மனைவியை, ‘அற்றைத் திங்கள் அந்நிலவில், நெற்றித்தரள நீர்வடிய, கொற்றப்பொய்கை ஆடியவள் நீயா?…’ எனச் சிலாகிக்க வேண்டாம். ‘என்னடா செல்லம்… கண்ணு மின்னுது. என்ன விசேஷம்?’ என்ற சின்ன விசாரிப்புகூட அவளுக்கு ரத்தக் கொதிப்பு அபாயத்தைத் தடுக்கும். பதிலுக்கு, ‘வெண்ணிறப் புரவியில் வந்தவனே! வேல்விழி மொழிகள் கேளாய்…’ என மனைவி இசைப்பாட்டு பாட வேண்டாம். கண்களால் சிரித்து, ‘உங்களைப் பார்த்தாலே உள்ளே ஆயிரம் வாட்ஸ் பாயுதுல்ல… அதனாலயா இருக்கும்!’ என்று சிரித்துக் கைபற்றினால், ரத்தக் கொதிப்பு வருகை நிறையவே தள்ளிப்போகும். அப்படியான தருணங்களே ரத்தத்தில் கொதிப்பு தித்திப்பாக மாறும் ரசவாதம் நிகழும்!
நன்றி -விகடன்