Jun 24, 2013

இன்று... உத்தரகாண்ட்.. நாளை.. ஊட்டி?ருத்ர தாண்டவம்!

உத்தரகாண்ட்டில் இயற்கை நடத்திய ருத்ர தாண்டவத்தில், பலராலும் கவனிக்கப்பட்டது, வெள்ளத்தில் பாதி மூழ்கிய சிவன் சிலை!
பர்மார்த் நிகேதன் ஆஷ்ரமம் சார்பில் ரிஷிகேஷில் கங்கை ஆற்றங்கரையில் 30 அடி உயரத்தில் சிவன் சிலை ஒன்றை நிறுவியிருந்தனர். இங்கு காலை, மாலை நேரங்களில் பூஜை நடைபெறும். இந்தப் பூஜையை கங்கா ஆர்த்தி என்று வடநாட்டவர்கள் சொல்கின்றனர். இது மனித வாழ்வின் வலி நிவாரணி என்று பக்தர்களால் வர்ணிக்கப்படுகிறது. இந்த பூஜைகளில் பக்தர்கள் கலந்துகொண்டால், எப்படிப்பட்ட பிரச்னைகளும் சிக்கல்களும் தீரும் என்பது ஐதீகம். கடந்த ஆண்டு வெள்ளப் பெருக்கில் தப்பிய இந்த சிலை, இந்த முறை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுவிட்டது. இதை தெய்வக் குற்றமாகவே வடநாட்டு பக்தர்கள் நினைத்து வருந்துகிறார்கள். இந்தியாவுக்கே ஏதோ ஆபத்து காத்திருக்கிறது என்பதை உணர்த்துகிறது என்பது அவர்களின் எண்ணம்.

வெள்ளப்பெருக்கில் சிக்கித் தவிக்கும் உத்தரகாண்ட் மக்களைக் கண்டு தேசமே பதைபதைக்கிறது. வெள்ளத்தில் சிக்கி நூற்றுக்கணக்கோர் பலி, 5,000-க்கும் மேற்பட்டோர் என்ன ஆனார்​கள் என்றே தெரியவில்லை என்று வரும் தகவல்கள்... வெள்ளப் பாதிப்பின் வீரியத்தை உணர்த்து​கின்றன.  
 கடந்த 17-ம் தேதியில் இருந்து பெரு மழையாகக் கொட்டித் தீர்க்க... உத்தரகாண்ட் வெள்ளக்காடானது. கேதர்நாத், பத்ரிநாத் போன்ற புனிதத்தலங்களுக்கு ஆன்மிக யாத்திரை சென்ற 72 ஆயிரம் பக்தர்கள் சிக்கித் தவிக்கிறார்கள். கேதர்நாத் கோயிலில் மட்டும் 12 ஆயிரம் பக்தர்கள் மாட்டியிருக்கிறார்கள். உத்தர​காண்ட் மாநிலத்தில் பெய்யும் பேய் மழையால் அணைகள் நிரம்பி வழிகின்றன. நதிகளில் வெள்ளக் காடு.
உத்தரகாண்ட் மாநிலத்தில் கங்கோத்ரி செல்லும் வழியில் உத்தரகாசி மாவட்டத்தில் ஒரு பிரமாண்ட கட்டடம் வெள்ளப்பெருக்கில் சிக்கிச் சரிவதை டி.வி-யில் பார்த்திருப்பீர்கள். அந்தக் கட்டட உரிமையாளரை சில வருடங்களுக்கு முன் சந்தித்து எச்சரித்தார் ஸ்ரீதர். 'நதிக்கரையில் இவ்வளவு பெரிய கட்டடத்தை நீங்கள் கட்டுவது தவறு. திடீரென்று இடிந்து விழ வாய்ப்புகள் உண்டு’ என்று சொல்லியும் கேட்கவில்லையாம் அந்தக் கட்டட உரிமையாளர். அதன் விளைவு... இப்போதைய வெள்ளத்தில் பொலபொலவென சரிந்து விழுந்துவிட்டது. உத்தரகாண்ட் மாநிலத்தின் சுற்றுச்சூழல் ஆர்வலர் ஸ்ரீதர், தமிழ்நாட்டுக்காரர். டெல்லி, உத்தரகாண்ட், ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் 'என்விரானிக் டிரஸ்ட்' என்கிற அமைப்பை 1993-ம் ஆண்டு முதல் நடத்திவருகிறார். அவரிடம் பேசினோம்.

''அந்த பில்டிங் மாதிரி பலரும் சட்ட விரோதமான முறையில் கட்டுகிறார்கள். '10 வருடங்கள் இருந்தால் போதும். அதற்குள் காசு பார்த்துவிடுவோம். பிறகு எப்படிப் போனால் என்ன?' என்கிற நினைப்பு அவர்களிடம் இருக்கிறது. இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், ஜம்மு-காஷ்மீர் மாநிலங்களில் நிலநடுக்கம், வெள்ளப்பெருக்கு... போன்ற பேரழிவுகள் எந்த நேரமும் ஏற்படலாம். உத்தரகாண்ட் மாநிலத்தில் அலக்நந்தா ஆறும் பாகீரதி ஆறும் இணைந்து கங்கை நதியாக மாறி ஓடுகிறது. 14 ஆறுகள் குறுக்கும் நெடுக்குமாக ஓடுகின்றன. ஆற்றின் கரை ஒரங்களில் 220 மின்சக்தித் திட்டங்கள் மற்றும் சுரங்கத் தொழில்கள் நடக்கின்றன. இந்தத் திட்டங்களுக்காக சில ஆறுகளை 'டணல்' வழியாகத் திசை திருப்பிக் கொண்டுசெல்கிறார்கள். ஏராளமான மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. இதெல்லாம் இயற்கைக்கு விரோதமானது. இதுமாதிரியான திட்டங்களால்தான் இயற்கை சீற்றம் மக்களைத் தாக்குகிறது. இந்த முறை, பருவ மழை கொஞ்சம் முன்கூட்டியே வந்துவிட்டது. இதை மாநில அரசுகள் எதிர்பார்க்கவில்லை. தேவையான முன்னேற்பாடுகளை செய்யாமல்விட்டதுதான் பயங்கரப் பாதிப்புகள் ஏற்படக் காரணம். 1991-ல் உத்தரகாசி ஏரியாவில் நிலநடுக்கம், 1999-ல் சமோலி ஏரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ஆகியவை இங்குள்ள மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதன் பிறகு சில வருடங்கள் கட்டடங்களை உஷாராகக் கட்டினார்கள். பிறகு, வழக்கம்போல் சட்டவிரோதமான முறையில் கட்ட ஆரம்பித்து​விட்டார்கள். மனிதன் இயற்கையை வஞ்சிக்கும்​போது இதுமாதிரிப் பேரழிவுகளை சந்தித்தாக வேண்டியிருக்கிறது. அதற்கு உத்தரகாண்ட் நிகழ்வும் லேட்டஸ்ட் உதாரணம்'' என்று வருத்தத்துடன் சொல்கிறார்.
உத்தரகாண்ட் மாநிலத்தின் டேராடூனில் அதிரடிப் படைப் பிரிவின் எஸ்.எஸ்.பி-யாகப் பணி​புரிகிறார் செந்தில். வெள்ளப்பெருக்கில் சிக்கித் தவிப்பவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ள அவரிடம் பேசினோம். ''மலைப் பகுதிகளில் இருந்து ஓடிவரும் ஆறுகள் அதிகம். இந்த முறை, அந்த ஆற்றில் பனிப் பாறைகள் உடைந்து கலந்துவிட்டதுதான் பெருக்கெடுப்புக்கு ஒரு காரணம். பொதுவாகவே, இங்கே நிலச்சரிவு மழை சீஸனில் அடிக்கடி ஏற்படும். முன்கூட்டியே மழை பெய்ததால், நிலச்சரிவுகளும் அதிகமாக ஏற்பட்டுவிட்டன. இப்போது கேத்ரிநாத் கோயில் ஏரியாவுக்கு மேலே 'மேக வெடிப்பு' என்று சொல்லப்படும் குறுகிய நேரத்தில் மிக அதிக மழை பெய்துள்ளது. மூன்று நாட்கள் ஆகிவிட்ட நிலையில, மீட்புக் குழுவினர் இப்போதுதான் கோயிலை நெருங்கிக்​கொண்டிருக்கிறார்கள். அங்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இனிமேல்தான் தெரியவரும்'' என்றார்.
உத்தரகாண்ட் மாநிலத்துக்கு ஏற்பட்டிருக்கும் நிலை, நம் நீலகிரிக்கு வரும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்று திகில் கிளப்புகின்றனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.
ஓசை சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர் காளிதாஸ், ''நீலகிரியின் தனித்துவமே நதிகளின் கருவறையாகத் திகழும் சோலைக் காடுகளும் புல்வெளிகளும்தான். ஆங்கிலேயர்கள் தங்களது சுயநலனுக்காக அழித்த நமது காடுகளை சுதந்திரத்துக்குப் பிறகு பேணிப்பாதுகாப்பதற்கு மாறாக, நாமும் மேலும் அழித்தோம். தேயிலைத் தோட்டங்களை உருவாக்கினோம். காய்கறி, பழத்தோட்டம் என்று பணப் பயிர்களை விளைவித்தோம். சட்ட விரோதக் கல்குவாரிகள் மூலம் பாறைகள் வெடிவைத்துத் தகர்க்கப்பட்டன. உலகச் சுற்றுலாத் தலமாக நீலகிரி உருவான பிறகு, வந்துபோகும் மக்களின் வசதிகளுக்கு ஏற்ப நவீன உல்லாச விடுதிகளும் குடியிருப்புகளும் அமைக்க காட்டின் பெரும் பகுதியை சூறையாடிவிட்டோம். காடுகள், புற்கள் போன்றவைதான் மண்ணின் கெட்டித்தன்மையைப் பராமரிக்கிறது. அவை அழிந்துவிட்டதால், நீலகிரி கொஞ்சம் கொஞ்சமாய் மண்ணின் மீதான பிடிமானத்தை இழந்துவிட்டது. அதனால், உத்தரகாண்ட் போன்று இங்கே பெருமழை பெய்தால் ஏற்படும் சேதத்தை நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது. சூழலியலை உணர்ந்த அதிகாரிகளை நியமித்து, இதற்கு மேலும் நீலகிரி மண் பாதிப்புக்கு உள்ளாகாதவாறு காக்க வேண்டியது அரசின் கடமை'' என்று எச்சரித்தார்.


தமிழக பசுமை இயக்கத்தின் இணைச் செயலாளரான ஜெயச்சந்திரன், ''நீலகிரி மாவட்டத்தில் நிலத்தடி நீரே கிடையாது. ஊற்று நீர்தான் உண்டு. ஆனால், இதைப் புரிந்துகொள்ளாமல் மாவட்ட நிர்வாகத்தினரே போர்களைப் போட்டுவருகிறார்கள். கடந்த சில மாதங்களில் மட்டும் கிட்டத்தட்ட 500 போர்கள் வரை போடப்பட்டிருக்கின்றன. அனைத்திலும் தண்ணீர் வராமல் பயனற்றுப்போய்விட்டன. இருப்பினும் உண்மையைப் புரிந்துகொள்ளாமல் போர் போடுவதைத் தொடர்கின்றனர். அதுபோல், மலைப் பிரதேசங்களில் ஜே.சி.பி-களை உபயோகப்படுத்தக் கூடாது. நில மட்டத்தை சமன்படுத்த ஜே.சி.பி. இயந்திரங்களைப் பயன்படுத்துகின்றனர். இதுபோன்ற செயல்களால், இங்கு நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு அதிகரிக்கிறது. இந்த நிலை மேலும் தொடர்ந்தால், நீலகிரிக்கு பெரும் ஆபத்து காத்திருக்கிறது'' என்று வேதனைப்பட்டார்.
தமிழக அரசு சுதாரித்துக்கொள்ள வேண்டிய தருணம் இது.
- பாலகிஷன், ஆர்.லோகநாதன்
Thanks 

உஷார்! உங்களை வேவு பார்க்கிறார்கள்! பேஸ்புக்,இளைய தலைமுறையின் இணைபிரியாத ஓர் அம்சமாகிவிட்டது இணையம். உடலின் ஓர் உறுப்புப் போலாகிவிட்டது. ஃபேஸ்புக், ட்விட்டர், யூடியூப், கூகுள் இல்லாமல் ஒரு நாள் கூட இருக்க முடியாது என்கிற அளவிற்கு அதன் மீது, ‘காதல்’ பிறந்து விட்டது.

அவர்களுக்கு இந்தச் செய்தி அதிர்ச்சியாக இருக்கும். நீங்கள் இணையத்தில் எழுதும் ஒவ்வொரு சொல்லும் உங்களுக்குத் தெரியாமலேயே கண்காணிக்கப்படுகிறது. சுருக்கமாகச் சொன்னால், நீங்கள் உளவு பார்க்கப்படுகிறீர்கள்.

அண்மையில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, அமெரிக்க உளவு நிறுவனங்கள் உலகம் முழுவதும் உள்ள ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ்கள், தகவல்கள் போன்றவற்றை ஃபேஸ்புக், கூகுள் போன்ற நிறுவனங்களிடமிருந்து பெற்று வருவதாக ஒப்புக் கொண்டிருக்கிறார். இதற்காக அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு ஏஜென்சி (‡National Security Agency), ஒரு தகவல்களைத் தோண்டி எடுக்கும் மென்பொருளைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். அப்படி 97 பில்லியன் (9,700 கோடி) தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.


‘பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. ஆனால் நாங்கள், எங்கள் குடிமக்களை வேவு பார்க்கவில்லை’ என்று அமெரிக்கா நியாயம் சொல்கிறது. அது நமது கவலை இல்லை. ஆனால், வேவு பார்க்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இருக்கிறது. ஈரான், பாகிஸ்தான், ஜோர்டான், எகிப்து ஆகியவற்றையடுத்து இந்தியாவும் இடம் பெறுகிறது. இந்தியாவிலிருந்து 6.3 பில்லியன் தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன.

இப்படி இணையவாசிகளை வேவு பார்ப்பதற்குச் சட்டம் இடமளிக்கிறது என்கிறது அமெரிக்கா. ஆனால், இந்தியச் சட்டங்களின்படி இதற்கு அனுமதியில்லை. எனவே, இதைக் குறித்து இந்தியா கடுமையாகக் கண்டனம் தெரிவிக்கும் என்று இணையவாசிகள் எதிர்பார்த்தார்கள்.

ஆனால், இந்தியா இன்னொரு அதிர்ச்சி அளிக்கிறது. இந்தியாவும் அமெரிக்காவைப் போல இணையவாசிகளை வேவு பார்க்கும் அமைப்பை உருவாக்கவிருக்கிறது.

தேசிய மின்னுலக ஒருங்கிணைப்பு மையம் ‡National Cyber Coordination Centre (NCCC) என்ற ஓர் அமைப்பு. 1,000 கோடி ரூபாயில் உருவாக்கப்படும் இந்த அமைப்பு, மின்னுலகிலிருந்து வரக்கூடிய அச்சுறுத்தல்களை அவை உருவாகும்போதே கண்டறிந்து, நடவடிக்கை எடுக்கத்தக்க அறிக்கைகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்கும் என்கிறது இதைப் பற்றிய அரசின் குறிப்பு.

அரசு உருவாக்கவுள்ள இந்தப் புதிய நிறுவனத்தில் அரசின் உளவுத்துறை (IB), ரா போன்ற பல்வேறு அமைப்புகளும் பங்கேற்க உள்ளன. எனவே இதன் நோக்கம், அமெரிக்கா போல அயல்நாட்டவர்களை வேவு பார்ப்பது மட்டும்தானா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதை தெளிவுபடுத்த வேண்டிய கடமை, அரசுக்கு உண்டு.

ஏற்கெனவே சீனா ஃபேஸ்புக், கூகுள் போன்றவற்றின் வலைத்தளங்களைத் தடை செய்திருக்கிறது. ரஷ்யா, கடந்த மே மாதம் ஃபேஸ்புக்கை தடை செய்ய முயற்சித்தது. பின் அதைக் கைவிட்டு, அதற்கு மாற்றாக VK என்ற சமூக வலைத்தளத்திற்கு ஆதரவளித்தது.

இப்படி ஒவ்வொரு நாடும் தங்களுக்கான சமூக வலைத்தளங்களை உருவாக்கிக் கொள்ளுமானால், இணையம் உலகை இணைக்கும் என்ற கருத்தே பொய்த்துவிடும்,