போன்ற வைரமுத்து வரிகளை ‘காப்பி-பேஸ்ட்’ செய்து, வாட்ஸ்-அப், ஃபேஸ்புக்களில் காதலித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். காதலின் சாஃப்ட்வேர் இப்படி காலமாற்றத்துக்கு ஏற்ப தரம் உயர்ந்தாலும், ஹார்டுவேர் நிறையவே பழுதாகி வருவதாக மருத்துவ ஆய்வுகள் பலமாக எச்சரிக்கின்றன.
குடும்பக் கட்டுப்பாடு பிரிவு, ஐந்து கிலோ அரிசி, 500 ரூபாய் இனாம் எல்லாம் தேவை இல்லாமலே, இயல்பாகவே மனித இனத்தின் கருத்தரிக்கும் தன்மை பல மடங்கு குறைந்துவருகிறதாம். 1 மில்லி விந்துவில் 60-120 மில்லியன் உயிர் அணுக்கள் இருந்த காலம் மலையேறி, 15 மில்லியன் இருந்தாலே பரவாயில்லை என மருத்துவம் ஆதரவு ஆறுதல் சொல்கிறது. அதிலும் பெரும்பாலானவர்களுக்கு வெளியாகும் அணுக்களில் 10 சதவிகிதம் மட்டுமே உயிர்ச்சத்து நிறைந்ததாக இருக்கிறதாம். நமக்கு முன்னால் இந்தப் பூவுலகில் பிறந்த எலி, எருமை, குரங்குகளுக்கு எல்லாம் இந்த எண்ணிக்கையும் சதவிகிதமும் பல மடங்கு அதிகமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கிறது. 31-40 வயதையொட்டிய தம்பதிகளில், 46 சதவிகிதம் பேருக்குக் கருத்தரிப்புக்கான மருத்துவ உதவி தேவை என்கிறது இந்திய ஆய்வு ஒன்று. விளைவு… தெருவுக்கு இரண்டு அண்ணாச்சிக் கடைகள் மாதிரி, ஊருக்கு ஊர் செயற்கைக் கருவாக்க மையங்கள் பெருகிவருகின்றன. என்ன ஆச்சு நமக்கு மட்டும்?
பல்வேறு காரணங்கள்… வாகனம் கக்கும் புகை, பிளாஸ்டிக் பொசுங்களில் பிறக்கும் டயாக்ஸின், இன்னும் பல காற்று மாசுக்களை கருத்தரித்த பெண் சுவாசிப்பது, அவள் வயிற்று ஆண் குழந்தையின் செர்டோலி செல்களை (பின்னாளில் அதுதான் விந்து அணுக்களை உற்பத்தி செய்யும்) கருவில் இருக்கும்போதே சிதைக்கிறதாம். ‘உணவு உற்பத்தியைப் பெருக்குகிறேன்’ என மண்ணில் நாம் தூவிய ரசாயன உர நச்சுக்களின் படிமங்கள், இப்போது நம் உயிர் அணுக்களுக்கு உலை வைக்கின்றன. பெண்கள் ஸ்ட்ராபெர்ரி இதழ் அழகு வேண்டி, தாலேட் கலந்த உதட்டுப்பூச்சு தடவுவது, முத்தமிடுவோருக்கு காதல் தந்து, கூடவே கருத்தடையும் செய்துவிடுகிறதாம்.
மறுபுறம்… சைக்கிள்ஸ்டாண்டில், குட்டைச்சுவரில், கடைசி பெஞ்சில், நண்பர்களால் நடத்தப்படும் ஆண்மை குறித்த ரகசிய டியூஷன்களில், மனசுக்குள் ஒட்டிக்கொள்ளும் விந்து குறித்த தப்பான புரிதல்களால் நொந்துதிரியும் ஆண்கள் ஏராளம்… தாராளம். ஆறரை அடி உயர ஆப்பிரிக்க ‘போர்னோ’ நடிகர்களைப் பார்த்து, ‘அவனை மாதிரி இல்லையே… எனக்கு சிறுசா இருக்கே!’ என உள்ளுக்குள் குமுறும் ஆண்மகன்கள் ஏராளம். இதுபோன்ற உளவியல் ஆண்மைக் குறைவு ஆர்ப்பரித்து வளர்வதற்கு, பாலியல் அறியாமை மிக முக்கியக் காரணம்.
இளங்காலை எதிர்பாராத முத்தத்தில் தொடங்கி, எள்ளலும், கொஞ்சலும், திமிறலும், குதூகலமும் சேர்ந்து முடிவாக நான்கைந்து நிமிடங்களில் உறவுகொள்ளும் உயிர்வித்தையை உணராது, ‘நீலப்படத்தில் அவங்க 0.45 மணி நேரமா முனகிட்டு இருக்காங்களே… நமக்குத் துரித ஸ்கலிதம் சிக்கல் இருக்கோ?!’ எனக் குமைகிறார்கள் இளைஞர்கள். போதாததற்கு ‘சுய இன்பத்தால் சுருங்கிப்போச்சா?’ எனும் விஷ விதைகளை நள்ளிரவு டாக்டர்கள் நட்டுவைக்க, ‘அப்போ… நான் அப்பாவாகவே முடியாதா?’ என்ற கேள்விக்குள் உறைகிறார்கள். ‘ஆண்களில் சுய இன்பம் செய்பவர்கள் 99 சதவிகிதத்தினர்; மீதி 1சதவிகிதத்தினர் பொய்யர்கள்’ என்று ஆங்கிலப் பழமொழி இங்கே உங்கள் கவனத்துக்கு.
நாம் சாப்பிடும் ஒவ்வொரு வாய் உணவும் சாரம், செந்நீர், ஊன் கொழுப்பு, எலும்பு, மஞ்சை… எனப் படிப்படியாக ஆறு தாதுக்களைக் கடந்தே, ஏழாம் உயிர்த்தாதுவான சுக்கிலத்தை அடையும். அத்தனை இடர்பாடுகளையும் தாண்டி சேகரிக்கப்படும் உயிர்துளியை அநாவசியமாக வீணாக்க வேண்டாம் என்பது சித்தர்களின் கருத்து. மற்றபடி சுய இன்பம் என்பது, கொலை பாதகம் அல்ல; அன்றாட அவசியமும் அல்ல!
நள்ளிரவு தாண்டியும் மடியில் மடிக் கணினியைக் கட்டிக்கொண்டு அழும் ஐ.டி ‘இணையர்களின்’ எண்ணிக்கை எகிறிக்கொண்டேயிருக்கிறது. எப்போதுமே நெருக் கடியிலும் பயத்திலும் வாழும் அவர்களுக்கு, இரவு கண் விழிப்பால் உடலின் பித்தம் கூடி விந்து அணு உற்பத்தியைக் குறைக்கிறது. மடிக்கணினி, விதைப்பகுதிச் சூட்டை அதிகரித்து உயிர் அணுக்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் என்பதையும் அவர்கள் உணர்வது இல்லை… அல்லது உதாசீனப்படுத்துகிறார்கள்.
உடலில் இதயம், மூளை போன்ற அத்தியாவசிய உறுப்புகளை எலும்புகளும் தசைகளும் பொத்திப் பாதுகாக்க, விந்து உற்பத்தி ஸ்தலமான விதைப்பையை மட்டும் உடலுக்கு வெளியே தொங்கவிட்டிருப்பதற்கு முக்கியமான காரணம், உடல் வெப்பத்தில் இருந்து 3-4 டிகிரி அது உஷ்ணம் குறைவாக இருக்க வேண்டும் என்பதுதான். ஆனால், விஷயம் புரியாமல் இறுக்கமான உள்ளாடை, சருமத்தோடு ஒட்டித் தைத்ததுபோல இறுக்கமான ஜீன்ஸ்… என இயற்கையின் செட்டிங்ஸை மாற்றுவது சரியா? எள்ளு, கொள்ளுத் தாத்தாக்களின் வீரிய விருத்திக்கு, காத்தாடிய ‘பட்டாபட்டி’ உள்டவுசரும், பட்டும்படாத எட்டு முழ வேட்டியும் எந்த அளவுக்கு உத்தரவாதம் கொடுத்திருக்கிறது என்பது புரிகிறதா?
விதைப்பையில் உருவாகும் நாள அடைப்பு, சொந்த விந்துவையே பாக்டீரியாவாகப் பார்க்கும் பழுதாகிப்போன உடல் எதிர்ப்பாற்றல், பிட்யூட்டரி, ஹைபோதாலமஸ் கோளங்களின் செயல்பாட்டுக் குறைவால் நிகழும் ஹார்மோன் குறைவு… என விதவிதமான மருத்துவக் காரணங்களும் ஆண்மைக்குறைவை அதிகரிக்கின்றன.
‘அட… பிரச்னையா அடுக்காதீங்க. சிக்கல் தீர என்ன வழி? அதைச் சொல்லுங்க!’ எனப் பொங்கி எழுவோருக்கு, பாரம்பர்ய வாழ்க்கைமுறையே பதில்! அதற்காக ‘காண்டாமிருகக் கொம்பு தர்றேன், சிட்டுக்குருவி லேகியம் கை மேல் பலன் கொடுக்கும், தங்கபஸ்பம் ரெடி பண்ணிரலாம்’ என உட்டாலக்கடி வியாபாரிகளிடம் சிக்கிக்கொள்ளக்கூடாது. போலிகளிடம் சிக்காமல், ஒழுங்காக கீரை, காய்கறி சாப்பிட்டாலே, உயிர் அணு செம்மையாகச் சுரக்கும்!
உயிர்ச்சத்து… விதைகளிலும், மொட்டுக்களிலும், வேர்களிலும் பொதிந்து இருக்கும் என கருதியதாலோ என்னவோ, சித்த மருத்துவம் பல தாவர விதைகளை, மொட்டுக்களை, வேர்களை ஆண்மை அபிவிருத்திக்கான மருந்துகளில் அதிகம் சேர்க்கிறது. சப்ஜா விதை, வெட்பாலை விதை, பூனைக்காலி விதை, மராட்டி மொக்கு, மதனகாமேஸ்வரப் பூ, அமுக்குராங்கிழங்கு, சாலாமிசிரி வேர், நிலப்பனைக் கிழங்கு என அதன் பட்டியல் நீளும். வளம் குன்றிய தேரி நிலத்தில் வளரும் நெருஞ்சில் முள்ளின் சப்போனின்கள், விந்தணுக்களை உற்பத்தி செய்யும் செர்டோலி செல் பாதிப்பைச் சீராக்கும் என்கிறது மருத்துவத் தாவரவியல். அதேபோல் பூனைக்காலி விதையும், சாலாமிசிரியும், அமுக்குராங்கிழங்கும் அணுக்களை உயர்த்த, டெஸ்டோஸ்டீரோன் ஹார்மோன்களைச் சீராக்க எனப் பல பணிகள் செய்வதை, நவீன உலகம் உற்றுப் பார்க்கிறது. உடனே, ‘ஒவ்வொன்றிலும் தலா 100 கிராம் வாங்கி ஒரு கலக்குக் கலக்கி…’ என ஆரம்பித்துவிட வேண்டாம். பிரச்னை உற்பத்தியிலா, பாதையிலா, மனதிலா என்பதை, உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசி யுங்கள். அதன் பிறகு தேவைக்கு ஏற்ப உங்கள் உணவுப் பழக்கத்தைத் தீர்மானியுங்கள்.
மிக முக்கியமாக, புரிதலிலும் விட்டுக்கொடுத்தலிலும் மட்டுமே தாம்பத்ய பயிர் வீரியமாக விளையும். கருத்தரிப்பைச் சாத்தியப்படுத்துவதில், உறுப்பின் அளவைக் காட்டிலும் மனதின் அளவுக்குத்தான் ஆண்மை அதிகம் உண்டு. ஆதலால் காதல் செய்வீர்… ஆரோக்கியமாக!
சீன மருத்துவ, சித்த, ஆயுர்வேத மருத்துவ இலக்கியங்களில் பன்னெடுங்காலத்துக்கு முன்பே தைராய்டு கோளத்தின் நோய்கள் பேசப்பட்டுள்ளன. தைராய்டு கோளத்தில் வரும் முன் கழுத்து வீக்கத்தை (Goitre) லியோனார்டோ டாவின்சியின் உலகப் புகழ்பெற்ற ‘Madonna of the Carnation’ ஓவியம் சித்திரித்திருக்கிறது. தைராய்டு என்பது, முன் கழுத்தில் மூச்சுக்குழலில் அமைந்திருக்கும் பட்டாம்பூச்சி வடிவக் கோளம். அந்த வடிவம் ‘தைராய்டு’ என்ற பழங்காலப் போர் ஆயுதம்போல இருந்ததாக உணர்ந்த தாமஸ் வார்ட்டன் என்கிற விஞ்ஞானி, அந்தக் கோளத்துக்கு ‘தைராய்டு’ எனப் பெயர் சூட்டினார். இந்தக் கோளம் சுரக்கும் சுரப்பு குறைந்தால்… ஹைப்போதைராய்டு, அளவு அதிகமானால்… ஹைப்பர்தைராய்டு, முன் கழுத்து வீங்கியிருந்தால்… ‘காய்ட்டர்’ என்கிற கோளவீக்கம் என நோய்களாக அறியப்படுகின்றன. இவ்வளவு நீண்ட வரலாறு கொண்ட இந்த நோயை, இன்றளவிலும் முழுமையாகக் குணப்படுத்தும் மருந்து ஆதாரபூர்வமாகக் கண்டறியப்படவில்லை. காலை எழுந்து பல் துலக்கியதும், முதல் வேலையாக தைராக்சின் மருந்தை விழுங்குவோர் இப்போது அநேகர்.
தைராய்டு தொடர்பான நோய்கள், பெண்களைத்தான் அதிகம் தாக்குகின்றன. எனினும், அது பெண்களுக்கான பிரத்யேக நோய் அல்ல. ஆண்களுக்கு ‘அந்த’ விஷயத்தில் நாட்டம் குறைவது, ஆண்மை குறைவது, முதியவர்களின் மறதி… போன்ற குறைபாடுகளுக்கு தைராய்டு சுரப்பு குறைவதும் ஒரு காரணம். பெண்களின் மாதவிடாய் சீர்கேடு, பாலிசிஸ்ட்டிக் ஓவரி எனப்படும் சினைப்பை நீர்க்கட்டி உருவாவது, கருத்தரிப்பு தாமதம் ஆவது, கருமுட்டை வெடிக்காமல் இருப்பது போன்றவற்றுக்கு முக்கியமான காரணம் இந்த தைராய்டு சுரப்பு குறைவே. ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் தொடங்கி, 14 அல்லது 15-வது நாளில் கருமுட்டை வெடிப்பு கட்டாயம் நிகழ வேண்டும். அந்த வெடிப்பை நிகழ்த்த ஹார்மோனைத் தூண்டுவது தைராய்டு சுரப்பிதான். மாதவிடாய், 30 நாட்களுக்கு ஒருமுறை நிகழாமல், அல்லது கருத்தரிப்பு, தாமதம் ஆகும் சமயத்தில், முதலில் தைராக்சின் சுரப்பு சரியாக உள்ளதா என்பதைப் பரிசோதிக்க வேண்டும்.
மாதவிடாய் சீர்கேடு மட்டும் அல்ல, உடலின் ஒட்டுமொத்த வளர்ச்சிக் குறைபாடு, எடை அதிகரிப்பு, அறிவாற்றல் குறைவு, முடி உதிர்தல், சரும உலர்வு… எனப் பல நோய்கள் தோற்றுவாய்க்கும் தைராய்டு சுரப்பு குறைவே காரணம். ‘இதற்குத் தீர்வே கிடையாதா? எப்போ… எப்படிக் கேட்டாலும், மாத்திரையை நிறுத்தக் கூடாது என்று டாக்டர் சொல்றாரே?’ என்று வருத்தத்துடன் கேட்போர், இந்தியாவில் மட்டும் சுமார் 4.2 கோடி பேர்!
ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 150 மைக்ரோ கிராம் அயோடின்தான் நமக்குத் தேவை. அயோடின் உப்பு அதிகம் உள்ள கடலோர மண்ணின் நிலத்தடி நீரில் இருந்தும், கடல் மீன்களில் இருந்தும் இந்த உப்பு நமக்கு எளிதாகவே கிடைக்கும். ஆனால், இதுவே நன்னீர் மீன்களில் அயோடின் சத்து 20-30 மைக்ரோகிராம்தான் கிடைக்கும். தவிர, பால், முட்டை, காய்கறிகளில் இருந்தும் அயோடினை எடுத்துக்கொள்ள வேண்டும். மண்ணின் அயோடைடு சத்தைப் பொறுத்தே, அதில் வேர்விட்டு வளரும் காய்கறிகளில் அயோடின் அளவு கிடைக்கும்.
சுமார் 15 வருடங்களுக்கு முன், இந்தியாவின் கடல் ஓரத்தைவிட்டு விலகியுள்ள ஏறத்தாழ 226 மாவட்டங்களைச் சேர்ந்தவர்களின் அயோடின் சேர்க்கையையும், தைராக்சின் சுரப்பு அளவையும் இந்திய மருத்துவக்கழகம் ஆய்வு செய்தது. முடிவு, ஏராளமானோர் அயோடின் குறைவுடன் இருப்பதை உறுதிசெய்தது. இப்படியேவிட்டால், பெருவாரியான மக்கள் ஹைப்போதைராய்டு நோயால் பீடிக்கப்பட்டு சாதாரண உடல்சோர்வில் தொடங்கி, உடல் வளர்ச்சிக் குறைவு, மூளை செயல்திறன் குறைவு வரை ஏற்படக்கூடும் எனக் கருதினார்கள். உடனே அவசர அவசரமாக, இந்தியர் அனைவருக்கும் அயோடினை உணவில் அன்றாடம் கொடுக்க முடிவு செய்தது அரசு. உலக சுகாதார நிறுவன வழிகாட்டுதலின்படி அன்றாடம் நாம் சாப்பிடும் உப்பில் அயோடினைச் செறிவூட்டிக் கொடுப்பதைக் கட்டாயம் ஆக்கினார்கள். விளைவு, உப்பை உப்பளத்தில் காய்ச்சி பல கடல்சார் கனிமங்களின் தாவர நுண்கூறு கலவையாகத் தந்த காலம் மலையேறி, செறிவூட்டப்பட்ட சோடியம் குளோரைடை சோற்றில் போட்டுச் சாப்பிடும் நிலைக்கு வந்தோம்.
அயோடினை அதிகம் பெறவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அறுசுவையில் ஒரு பிரதான சுவையான உப்புச் சுவையை அதன் இயல்பான கடல் கனிமங்களில் இருந்து பெற்றபோதுதான், நாம் உப்பின் தேவையற்ற குணங்களைத் தவிர்த்தும், தேவையானவற்றை சரியான அளவில் பெற்றும் வந்தோம். அந்த உணவுக் கூட்டமைப்பை செயற்கை உப்பு நிச்சயம் அளிக்காது.
சென்னை மருத்துவக் கல்லூரியின் ஓய்வுபெற்ற எண்டோகிரைனாலஜி பேராசிரியர் ஒருவர், ‘இந்த அயோடைஸ்டு உப்பு, மருந்து என்பதே சரி. அது எப்படி எல்லோருக்குமான உணவாகும்? முழுமையான ஆய்வுகள் நடத்தப்படாமல், அவசரகதியில் உட்கொள்ளவைக்கப்பட்ட இந்த உப்பே, நல்ல நிலையில் இயங்கும் தைராய்டுகளையும் நோய்வாய்ப்படுத்துகிறது’ என்றார். அயோடின் அதிகரித்தால் அது பெரிதாக நச்சு இல்லை எனச் சொல்லப்படுகிறது. ஆனால், சில சமயம் அதுவே காய்ட்டர் நோய்க்கு காரணமாகிவிடும் என மருத்துவ உலகின் ஓர் அச்சம் உண்டு.
சரி… இந்த நோயைத் தவிர்க்க என்னதான் வழி? கடல்மீன் உணவுகள்தான் முதல் தேர்வு. வாரம் ஓரிரு நாள் மீன் உணவு சாப்பிடுவது அயோடினை சரியான அளவில் வைத்திருக்க உதவும். ‘மீனா… வாட் யூ மீன்?’ என அலறும் சைவர்கள், அதற்குப் பதிலாக ஊட்ட உணவாக கடல் பாசிகளை உணவில் கண்டிப்பாக எடுத்துக்கொள்ள வேண்டும். குறிப்பிட்ட சில உணவுகளே தைராய்டு கோளத்தில் பாதிப்புகளை உண்டாக்கும் (GOITROGENIC) எனக் குறிப்பிடுகிறார்கள். அந்த உணவுப் பட்டியலில் நம் ஊர் கடுகும் முட்டைக்கோஸும் இடம் பிடித்திருக்கின்றன. லேசாக முன் கழுத்து வீக்கமோ, ஹைப்போதைராய்டு நோயோ இருக்கும்பட்சத்தில், தாளிப்பதற்கு கடுகு, தடாலடி பொரியலாக முட்டைக்கோஸ் சமைப்பதைத் தவிர்க்கவும்.
இன்னொரு முக்கியமான விஷயம்… சந்தையில் உள்ள ஊட்டச்சத்துப் பானங்களில் அதிகமாகச் சேர்க்கப்படுவது சோயா புரதம். ‘அட… பிள்ளை போஷாக்கா தேறி வரட்டும்’ எனக் காரணம் சொல்லி, நேரடிச் சந்தை மற்றும் மல்ட்டிலெவல் மார்க்கெட்டிங் மூலமோ அவற்றை மருத்துவர் ஆலோசனை பெறாமல் கொடுப்பது நிச்சயம் நல்லது அல்ல. ஏனென்றால், ‘புற்றைக் கட்டுப்படுத்தும்’, ‘இது மெனொபாஸ் பருவப் பெண்களுக்கு நல்லது’, ‘நோய் எதிர்ப்பு ஆற்றலைத் தரும்’, ‘உடல் எடையைக் கூட்டும்’ எனக் கூவிக்கூவி விற்கப்படும் இந்தப் புரதம், சில நேரங்களில் தைராய்டு கோள வீக்கத்தையும் தரும். ‘மாதவிடாய் சரியாக வரவில்லை, மந்த புத்தியாக இருக்கிறாள், இவனுக்குப் படிப்பு ஏறவே மாட்டேங்குது’ என்போருக்கு கடல் கடந்து விற்பனைக்கு வரும் டானிக்குகளைவிட, கடல் மீன்தான் நன்மை பயக்கும். கடல் மீன் தைராய்டு சுரக்க அயோடினைத் தரும். தைராய்டு நோயில் வலுவிழக்கும் எலும்புக்கு வைட்டமின் – டி தரும். மந்தம் ஆகும் மூளை குதூகலித்து உத்வேகம் பெற டி.ஹெச்.ஏ அமிலம், ஒமேகா கொழுப்பு எல்லாமும் பரிமாறும். கடையில் விற்கப்படும் புரத உணவுகளைக் காட்டிலும், பட்டை தீட்டாத தானியங்கள், பயிறுகளைச் சேர்த்து அரைத்து வீட்டில் செய்யப்படும் சத்துமாவு போன்றவை புரதச்சத்தைக் கொடுப்பதோடு, தைராய்டு நோயை மட்டுப்படுத்தும் கால்சியம், செலினியம் போன்றவற்றையும் அளிக்கும்.
தைராய்டு சுரப்பு குறைவாக இருந்தால், சரியான சிகிச்சை மிகவும் அவசியம். தைராக்சின் சத்துக் குறைவு உள்ளோருக்கு நேரடியாகவே அந்தச் சத்தைக் கொடுத்து வருகிறது நவீன மருத்துவம். எந்தக் காரணம்கொண்டும் மருத்துவர் அனுமதி இல்லாமல் இந்தச் சத்து மாத்திரைகளை நிறுத்துவதும், அளவைக் குறைப்பதும் கூடாது. பாரம்பர்ய பிற மருத்துவ முறைகளைப் பின்பற்றுபவர்கள், அந்த மருத்துவ முறை மூலம் தைராய்டு கோளத்தைத் தூண்டியோ, அல்லது உடல் இயக்க ஆற்றலைச் சீராக்கியோ தைராய்டு கோளம் இயல்பு நிலைக்கு வரும் வரை, அதற்கான சத்து மருந்துகளை ஒருங்கிணைந்து எடுத்துக்கொள்வதுதான் நல்லது. தடாலடியாக நிறுத்துவது பெரும் நோய்ச் சிக்கலை ஏற்படுத்தும்.
சித்த, ஆயுர்வேதப் புரிதலில் கபத் தன்மையையும், பித்தத் தன்மையையும் சீராக்கும் மூலிகைகளை, மருந்துகளை இந்தத் தைராய்டு நோய்க்குப் பரிந்துரைப்பர். ‘அன்னபவழச் செந்தூரம்’ என்கிற பாரம்பர்ய சித்த மருந்தும், மந்தாரை அல்லது ‘கான்சனார்’ இலைகளால் செய்யப்படும் ‘காஞ்சனார் குக்குலு’ என்கிற ஆயுர்வேத மருந்தும் இந்த நோய்களில் அதிகம் ஆராயப்பட்ட பாரம்பர்ய மருந்துகள். நவீன மருந்து அறிவியல் ஆய்வும், இந்த மருந்துகள் தைராய்டு சத்தை நேரடியாகத் தராமல், தைராய்டு கோளத்தைத் தூண்டி, அதன் செயல்திறனை ஊக்குவிக்கின்றன என்பதை உறுதிப்படுத்துகிறது. கூடவே உடல் எடை குறைவு, மாதவிடாய் கோளாறு போன்றவற்றைச் சீர்செய்வது இந்த மருந்துகளின் தனிச்சிறப்பு.
யோகாசனமும் மூச்சுப் பயிற்சியும் தைராய்டு கோளம் சரியாக இயங்குவதில் பெரும் பங்கு வகிக்கின்றன. சூரிய வணக்கம், கபாலபாதி பிராணாயாம மூச்சுப் பயிற்சி, விபரீதகரணி யோகப் பயிற்சி… ஆகியவை உடல் இயக்க ஆற்றலை வலுப்படுத்தும் என்கின்றன ஆராய்ச்சிகள்.
ஒரு தைராய்டு சுரப்பு குறைவு நோயாளி காலையில் ஒரு மாத்திரை சாப்பிடுவதோடு நிறுத்திக்கொள்ளாமல், கூட்டாக இந்த யோகாசனப் பயிற்சி, ஏதேனும் பாரம்பர்ய மருந்து, கூடவே அடிக்கடி கடல்மீன் உணவு/கடற்பாசி உணவு சாப்பிடுவது போன்றவற்றைக் கடைப்பிடிப்பதன் மூலம் மட்டுமே, மெள்ள மெள்ள இந்த நோயின் பிடியில் இருந்து விலக முடியும். ஆனால், என்று வரும் இந்த ஒருங்கிணைப்பு?
- நலம் பரவும்…
கடல் உணவுகள் சில…
அயோடினும் புரதமும் நிறைந்த கடல் மீன்கள், தைராய்டு குறைவு நோய்க்கான சிறப்பு உணவுகள். கூடுதல் புரதமும் வைட்டமின் – டி சத்தும் இவற்றின் ஸ்பெஷல். அதிலும் குறிப்பாக வஞ்சிர மீன் குழம்பு, மிக அதிகப் புரதம் கொண்டது. இதை குடம்புளிக் கரைசலில் செய்தால், உடல் எடையையும் குறைக்கும்!
சுறா புட்டு, பாலூட்டும் பெண்ணுக்கு தைராய்டு குறைவைச் சரியாக்குவதுடன், பால் சுரப்பை மிக அதிகமாக்கும்!
பொரித்த சீலா மீனில், புரதச்சத்தும் அயோடினும் மிக அதிகம்!
‘அகர் அகர்’ என்கிற கடற்பாசியில் வட இந்தியர்கள் செய்யும் இனிப்பு, குழந்தைகளுக்கு நலம் தரும் உணவு. பால், வெல்லம், அகர் அகர், ஏலக்காய்த் தூள் சேர்த்து இதைச் செய்யலாம்!
ஸ்பைரூலினா என்கிற சுருள்பாசி மாத்திரைகள், ஊட்ட உணவு வகைகளில் மிகப் பிரபலம். மீன் சாப்பிடாதோர் இதைச் சாப்பிடலாம்!
புற்றுநோய்… உஷார்!
ஒட்டுமொத்த சூழல் சிதைவு, மனம் வெதும்பிய வாழ்வியல்… போன்ற காரணிகளால் பல புற்றுநோய்க் கூட்டம் பெருகிவரும் சூழலில் தைராய்டு கோளப் புற்றும் அதிகரிக்கிறது. PAPPILLARY, FOLLICULAR, MEDULLARY, ANAPLASTIC… என நான்கு வகையில் இந்தப் புற்று வரலாம். இதில் வெகுசாதாரணமாக வரக்கூடியது PAPPILLARY. தைராய்டு கோள வீக்கத்தை எப்போதும் அலட்சியமாக எடுத்துக்கொள்ளாமல், எளிய அல்ட்ரா சவுண்டு மற்றும் FNAC பரிசோதனைகள் மூலம் தொடக்கத்திலேயே பரிசோதித்து, இந்த வீக்கத்தின் இயல்பைத் தெரிந்துகொள்ளலாம். ஒருவேளை புற்றுநோயாக இருக்கும்பட்சத்தில், ANAPLASTIC பிரிவைத் தவிர்த்து மற்றவற்றை அறுவைசிகிச்சை போன்ற சரியான ஒருங்கிணைந்த சிகிச்சைகள் மூலம், முழுமையாக நலம்பெற வாய்ப்பு அதிகம். புற்றாக இல்லாதபட்சத்தில், வெறும் வீக்கத்தைக் கண்டு கலவரப்படத் தேவை இல்லை!
நலம் 360’ – 14
திடீரென ஒரு நாள் ‘சுரீர்’ என பல் வலியெடுத்து, முகம் கோணி, காது, தொண்டை, பின்மண்டை வரை வலித்த பிறகே நாம் பல் மருத்துவரைத் தேடுகிறோம். ஆனால் பல் மருத்துவ உலகம் சொல்வதெல்லாம், ‘பற்களின் பாதுகாப்பு பிறந்தவுடன் தொடங்கியிருக்க வேண்டும்’ என்பதைத்தான்!
சிசுவுக்கு தாய்ப் பால் புகட்டியதும் மிருதுவான, சுத்தமான துணியால் மிகமிக மென்மையாக ஈறுகளைத் துடைப்பதில் இருந்து பல் பராமரிப்பு தொடங்குகிறது. நள்ளிரவில் பால் கொடுத்துவிட்டு ஈறுகளைச் சுத்தம் செய்யாமல் விடுவதைத் தவிர்க்க வேண்டும். குழந்தைகளுக்கு அனைத்து
பற்களும் முட்டிக்கொண்டு வெளியே வந்தவுடன், தினமும் இரு முறை பல் துலக்கும் பயிற்சியைக் கற்றுக்கொடுப்பது, ‘பல்’லாண்டு கால பல் பாதுகாப்புக்கு உத்தரவாதம் தரும். குழந்தைகளுக்கு என பிரத்யேகமாக ஃப்ளுரைடு கலக்காத பற்பசைகளைப் பயன்படுத்தலாம். இன்னொரு முக்கியமான விஷயம், ‘இப்போ ஈ காட்டப்போறியா இல்லையா?’ எனப் பயமுறுத்தி, குழந்தைகளைப் பல் துலக்கப் பயிற்றுவிக்கக் கூடாது. பல் துலக்குவதை, வாய் கொப்பளிப்பதை ஒரு குதூகல விளையாட்டுபோல் அவர்களுக்குக் கற்றுக்கொடுப்பது மிக முக்கியம். அதே சமயம் ஆர்வக்கோளாறில் பற்பசையைக் கணிசமாகப் பிதுக்கி, பற்களில் அப்பி, உப்புத்தாள் போட்டு சுவரைப் பட்டி பார்ப்பதுபோல் தேய்ப்பதும் முட்டாள்தனம். ஒரு நிலக்கடலை அளவுக்கான பற்பசையே மந்திரப் புன்னகையை அளிக்கும்.
இன்னும் நம்மில் பலருக்கு பற்களின் இடையே சிக்கியிருக்கும் துணுக்குகளை நீக்கும் DENTAL FLOSS (பற்களுக்கு இடையே மெல்லிய இழையைவிட்டு சுத்தம் செய்யும் பயிற்சி) பழக்கம் பற்றிய அறிமுகமே இல்லை. ஆனால், கல்யாணம் நிச்சயமானவுடன் வாழ்க்கையில் முதன்முதலாக பல் மருத்துவரிடம் சென்று, ‘கல்யாணம்… பற்களைச் சுத்தம் பண்ணணும்’ என நிற்போம். அவர் பலப் பல உபகரணங்களின் உதவியுடன் பற்களை சுத்தம் செய்யும்போது வெளியேறும் அழுக்கைப் பார்த்து, ‘இத்தனை வருஷமும் இவ்வளவும் நம்ம வாய்க்குள்ளயா இருந்துச்சு’ என நொந்துபோவோம். அதே உத்வேகத்துடன் வந்து, ‘இனி தினம் மூணு தடவை பல் தேய்க்கணும்’ என ஆரம்பித்து சில நாட்களுக்கு பிரஷ்ஷ§ம் வாயுமாகத் திரிவோம். ஆனால், எல்லாம் சில நாள் ஷோதான்!
பராமரிப்பைத் தாண்டி, பல்லைப் பாழடிக்கும் பழக்கங்களில் இருந்து விடுபடுவதுதான் பாதுகாப்புக்கான முதல் படி. சாப்பிட்ட பின் பலர் உதடுகளை மட்டும் தேய்த்துக்கொள்வார்கள். ஆனால், நன்றாக வாயைக் கொப்பளிப்பது முக்கியம். அதுவும் ஆரோக்கியம் தரும் விட்டமின் சி சத்துள்ள பழங்களைச் சாப்பிட்டால்கூட முடிவில் வாயைக் கொப்பளிக்காமல் விட்டால், அந்தப் பழங்களின் அமிலத் துணுக்குகள் பற்களில் கறையை உண்டாக்கும்; எனாமலைச் சுரண்டும்.
‘ஆலும் வேலும் பல்லுக்குறுதி’ எனப் பலகாலம் படித்து வந்தாலும், ‘அந்த இரண்டும் எங்க ஃப்ளாட்ல இல்லையே’ என்ற பரிதவிப்புடன், ஷாருக் கான், அனுஷ்கா சொல்லும் பேஸ்ட் மற்றும் பிரஷில்தான் நம்மில் பலர் பல் துலக்குகிறோம். அந்த பேஸ்ட் மற்றும் பிரஷில் நடக்கும் வணிக யுத்தம் எக்கச்சக்கம். சினிமா திரையரங்குகளில் மட்டுமே விளம்பரம் வந்திருந்த காலம் தொடங்கி, இன்று ஆன்லைன் விளம்பரங்கள் வரை, ‘ஆயுர்வேத மூலிகையாலே… தயாரிப்பது…’ எனப் பாடிக்கொண்டு ஒரு குடும்பமே பளிச் பற்களைக் காட்டிப் பரவசப்படுத்தும். ஆரம்பத்தில், ‘உங்கள் டூத் பேஸ்ட் வெள்ளையாக இருந்தால் மட்டுமே, பற்களும் வெள்ளையாக இருக்கும்’ எனப் பாடி வந்தன விளம்பரங்கள். இடையில், ‘கலர்கலர் கெமிக்கல்கள்தான் உங்கள் பற்களுக்குப் புத்துணர்ச்சி அளிக்கும்’ என மினுங்கும் நிற ஜெல் பேஸ்ட்களை இளமையின் அடையாளம் ஆக்கினர். உப்பு, கரித்தூள் கொண்டு பல் தேய்த்துக்கொண்டிருந்த தாத்தா பாட்டிகளிடம், ‘கரித்தூள் வெச்சு விளக்க, அது பல்லா… பழைய பாத்திரமா?’ எனக் கிண்டலடித்தோம். ஆனால், இப்போது அதே கரித்தூளை ‘activated charcoal’ வடிவில் அடக்கியது என்று விளம்பரப்படுத்தி சார்க்கோல் இழைகளால் தயாரித்த பிரஷ் விற்கிறார்கள். ஆக, கூடிய விரைவில் ஆலங்குச்சி பிரஷ், வேலங்குச்சி பிரஷ் எல்லாம் பன்னாட்டு நிறுவனங்களால் விற்கப்படலாம். ‘உங்கள் சட்டைப் பையில் இருக்கும் பணத்தை, உங்களை வைத்தே கிழித்தெறிய வைத்துவிட்டு, கூடுதல் வட்டியில் காலமெல்லாம் கடன் வாங்கவைக்கும்’ வணிக சித்தாந்தத்துக்கு இதைவிட மோசமான எடுத்துக்காட்டு இருக்க முடியாது.
ஆலும் வேலும் மட்டும் அல்ல, மருதம், இலந்தை, இலுப்பை, இத்தி, கருங்காலி… எனப் பல துவர்ப்புத் தன்மையுள்ள மூலிகைக் குச்சிகளை, அதன் பட்டையோடு சேர்த்து பல் துலக்கப் பயன்படுத்தியது நம் பாரம்பர்யம். ஹெர்குலிஸில் இருந்து வந்தியத்தேவன் வரை அதில் ஒன்றைத்தான் பயன்படுத்தியிருக்க வேண்டும். ஆலங்குச்சியில் குளிர்ச்சி, இலந்தையில் இனிய குரல்வளம், இத்தியில் விருத்தி, இலுப்பையில் திடமான செவித்திறன், நாயுருவியில் புத்திக்கூர்மை, தைரியம், மருதத்தில் தலைமயிர் நரையின்மை, ஆயுள் நீட்டிப்பு… என பல்குச்சி மூலம் சகல நிவாரணங்களைச் சொல்லிக்கொடுத்தவர்கள் நம் முன்னோர்கள். பல் துலக்க, துவர்ப்புத்தன்மை பிரதானமாக இருக்கவேண்டும். மேற்குறிப்பிட்ட அத்தனை குச்சிகளும் அதைத்தான் தந்தன. பொதுவாக துவர்ப்புச் சுவை தரும் தாவர நுண்கூறுகள் அனைத்தும் நோய் எதிர்ப்பு ஆற்றலையும், எதிர் நுண்ணுயிரித்தன்மையையும், ஆன்ட்டி-ஆக்சிடென்ட் தன்மையையும் தருவன என்பது இன்றைய தாவரவியலாளர் கண்டறிந்தது.
திருக்குரானில்தான் முதன்முதலில் ‘மிஸ்வாக்’ குச்சியைப் பல் துலக்கப் பயன்படுத்தச் சொன்னார்கள். துவர்ப்புச் சுவையுடைய மெஸ்வாக் குச்சி மரத்தின் பெயர் உகாமரம். வழக்குமொழியில் குன்னிமரம் என்பார்கள். உகா குச்சியின் பயனை நாம் மறந்தாலும் பேஸ்ட் கம்பெனி மறக்கவில்லை. மூலிகைப் பற்பசையில் அதற்கு எனத் தனிச் சந்தை உண்டு. திரிபலா சூரணம் எனும் மும்மூர்த்தி மூலிகைக் கூட்டணி, வாய் கொப்பளிக்கவும், பல் துலக்கவும் மிக எளிதான மிக உன்னதமான ஒரு மூலிகைக் கலவை. பல உடல் வியாதிக்கும் பயன் அளிக்கும் கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் கூட்டணி பல் ஈறில் ரத்தம் வடிதல், வலி, ஈறு மெலிந்து இருத்தல், கிருமித்தொற்று… போன்ற வாய் மற்றும் பற்கள் பிரச்னைக்குப் பலன் அளிக்கும் எளிய மருந்து.
பற்களுக்கு ‘ரூட் கேனால்’ சிகிச்சை இப்போது பிரபலம். பற்கள் மற்றும் அதைச் சூழ்ந்துள்ள வெளி மற்றும் உள்சதைப் பகுதிகள் அழற்சியால், கிருமித் தொற்றால் பாதிப்பு அடையும்போது, பல் முழுதாகப் பாழ்பட வாய்ப்பு உண்டு. முன்னெல்லாம் குறடு வைத்து பல்லைப் பிடுங்கிவிடுவார்கள். இப்போது, பல்லை நீக்காமல் பாதிப்படைந்த சதைப்பகுதியை மட்டும் நீக்கி, இயல்பாகப் பல்லைப் பாதுகாக்கும் சிகிச்சைதான் ரூட் கேனால். உங்கள் குடும்ப மருத்துவர் பரிந்துரைந்தால், அதை மேற்கொள்வது உங்கள் பல்லை நெடுநாள் பாதுகாக்கும்.
பல் வலி, பல் பிரச்னை மட்டும் அல்ல. பல்லின் புறப்பகுதியில் வரும் அழற்சி மற்றும் தொற்றுப் பக்கவாதம், மாரடைப்பு முதல் ஆண்மைக் குறைவு வரை ஏற்படுத்தும் என்கிறது ஆங்கில மருத்துவம். தினம் இருமுறை பல் துலக்காவிட்டால், ‘அந்த’ ஆர்வம் குறையும் நிலை வரலாம். ‘கருப்புபூலா வேர்’ எனும் சாதாரணச் செடியில் பல் துலக்கினால், ஆண்மை பெருகும் என்கிறது சித்த மருத்துவம். PERIODONTITIS எனும் அழற்சியே பலருக்கு வாயில் துர்நாற்றத்தை உண்டாக்கும். குறிப்பாக சர்க்கரை வியாதியினருக்கு இந்தப் பிரச்னை அதிகம். அதே சமயம் வாய் துர்நாற்றத்துக்கு பல் பிரச்னை மட்டும் காரணம் அல்ல. அஜீரணம், நாள்பட்ட குடல்புண், ஈரல், கணைய நோய்கள்கூட காரணங்களாக இருக்கலாம். ‘வாய் நாறுது’ எனச் சொல்லி, சந்தையில் விற்கும் விதவிதமான மணமூட்டிக் கொப்பளிப்பான்களில் வாய் கொப்பளித்தால், வாய் மணக்காது… வாஷ்பேசின் வேண்டுமானால் மணக்கக்கூடும்!
‘பல்லுன்னா அப்படித்தான் காரை ஏறும்; விழும்; பொக்கை ஆகும். அதுக்கெல்லாம் எதுக்கு இவ்வளவு அக்கறை? பொம்பளைக்கு எதுக்கு பல் கிளீனிங், பல் செட்டு?’ என மடமை பேசும் சமூகச்சூழலில் இருந்து, இன்னும் நம்மில் பலர் வெளியே வரவில்லை. ஸ்டெம் செல் உதவியுடன் டைட்டானியப் பல் வளர்க்கும் வித்தையை நவீன உலகு ஆய்வு செய்கிறது. ஆலும் வேலும் பற்களைப் பராமரிக்கும் என 3,000 வருடங்களாக நம் இலக்கியம் அழுத்திச் சொல்கிறது. ஆனால், இதை வணிகம் மட்டும்தான் இணைக்க வேண்டுமா? சமூக அக்கறையுடன் இரண்டு அறிவியலும் இணைந்தால், அழகான அடித்தட்டு மக்களின் முகங்கள் புன்னகைக்கும்!
- நலம் பரவும்…
எது சரி… எது தப்பு?
அறிவுப் பல்லை (WISDOM TOOTH) கண்டிப்பாக அகற்ற வேண்டும் என்பது இல்லை. அது குறுக்கே வளர்ந்தால், தாடை சதைப்பகுதியில் சீழ்க்கட்டியை உருவாக்கினால் மட்டுமே அகற்றலாம்.
பல் வலிக்கு நிவாரணமாக கிராம்புத் தைலம் தடவுவது அல்லது வலிக்கும் பல்லில் கிராம்பை வைத்துக் கடித்துக்கொள்வது பாட்டி வைத்தியமுறை. ஆனால், இன்று சந்தையில் கிடைக்கும் கிராம்பில் 100-க்கு 90 சதவிகிதம், அதன் எண்ணெய் நீக்கப்பட்ட வெறும் சக்கை மட்டுமே இருக்கிறது. கிராம்பு எண்ணெயிலும் கலப்படம் அதிகம். பல்லில் உண்டாகும் லேசான வலிக்கு, அந்த இடத்தில் இஞ்சித்துண்டு வைத்துக் கடிப்பதும், கூடவே அரை டீ-ஸ்பூன் அமுக்கரா சூரணம் சாப்பிடுவதும் நிவாரணம் தரும். அப்போதும் வலி அதிகரித்தால் அல்லது தொடர்ந்தால், பல் மருத்துவரின் ஆலோசனை அவசியம்.
ஈறில் ரத்தக் கசிவு இருந்தால், அது பல் நோயாகத்தான் இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. அது ரத்தத்தட்டு குறை நோயோ அல்லது ஆரம்பக்கட்ட சர்க்கரை நோயாகவோகூட இருக்கலாம்.
டீன் டிக்கெட்டுகள் பற்களில் பச்சை குத்திக்கொள்கின்றனர். ‘பல் மேல் உறைபோல செய்து அதில்தான் குத்துகிறோம். அதனால் பல்லுக்குப் பாதிப்பு இல்லை’ என இப்போது சொன்னாலும், நாளை மருத்துவ உலகம் எதை மென்று விழுங்கும் என யாருக்கும் தெரியாது… எனவே, உஷார்.
சீரான பல் வரிசை அமைக்கும் அழகியல் சிகிச்சை அதிகரித்துள்ளது. ஆனால், இது பார்லருக்குப் போய் முடிவெட்டுவதுபோல இல்லை. பல் மருத்துவரின் ஆலோசனை மிக அவசியம்.
பல்லில் காரை, மஞ்சள் கறை படிவதைப் போக்க, அமில உணவுகளைச் (தேநீர், பழச்சாறுகள்…) சாப்பிடும்போதெல்லாம் வாயைக் கொப்பளிக்கலாம்.
சிலர் மாருதி காரையே பற்களால் கடித்து இழுக்க, பலருக்கு பால்கோவா கடித்தாலே பற்கள் கூசும். ‘பல் உறுதியாக இருக்க கால்சியமும் பாஸ்பரஸும் நிறைந்த பால் பொருட்கள் பயன்படும்’ என்கிறார்கள் பல் மருத்துவர்கள். மோரும் கம்பும் சேர்ந்த கம்பங்கூழ் நல்லது என்கிறார்கள் பல் போன பாட்டிகள்!
பல் பத்திரம்
தினமும் காலை, மாலை இருவேளைகளிலும் 7 முதல் 10 நிமிடங்கள் வரை மென்மையான இழைகளால் ஆன டூத் பிரஷால் (mild, soft, wild, hard என்றெல்லாம் பல பிரஷ்கள் சந்தையில் உண்டு.) பல் துலக்கினால் போதும். ஆலும் வேலும் பல்லுக்கு உறுதிதான். ஆனால், உமிழ்நீர்பட்ட ஒரே குச்சியை ஒவ்வொரு நாளும் உபயோகிக்க முடியாது. தினம் ஒரு குச்சியை உடைத்தால், ஓர் ஊர் பல்தேய்க்க ஒரு காட்டையே அழிக்கவேண்டி வரும். அது சூழலுக்குக் கேடு. அந்தக் கால சாப்பாடு பல்லை அவ்வளவாகப் பாதித்திருக்காது. இப்போதைய சாப்பாட்டில் நேரடியாகவும் மறைமுகமாகவும் இருக்கும் பல ரசாயனத் துணுக்குகள், பல்லையும் வாயையும் பதம்பார்ப்பதால், பேஸ்ட், பிரஷ் பரவாயில்லை. வாரம் ஒரு நாள் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதுபோல், வாரம் இரண்டு நாட்கள் மூலிகை பல் துலக்குதல் நடத்தலாம்.
குளிர்பானம், சவ்வு மிட்டாய், தனி சர்க்கரை போன்றவை, பற்களின் எனாமலைப் பாதிக்கும். ஜீரணக் கோளாறால் வயிற்றில் சுரக்கும் அமிலம், வாய்ப் பகுதிக்கு வந்து பல் எனாமலை அரிக்கும்.
குழந்தைகள் ஃப்ளுரைடு இல்லாத பசையைப் பயன்படுத்துவது நல்லது. அதிகபட்ச ஃப்ளுரைடுகூட பல் அரிப்பு தொடங்கி சர்க்கரை வியாதி வரை உண்டாக்கும்.
‘சிறு துரும்பும் பல் குத்த உதவும்’ எனச் சொன்னாலும் சொல்லிவைத்தார்கள்… நம்மவர்கள் குண்டூசி, கொண்டை ஊசி, உட்பட கூர்முனைகொண்ட பல பொருட்களாலும் பல் குத்துகின்றனர். பொதுவாகப் பல் குத்துவதே தவறு. அதற்குப் பதில் சாப்பிட்டு முடித்ததும், வாயை நன்கு கொப்பளியுங்கள். அல்லது அதற்கென உள்ள மென்மையான இழைகளால் சுத்தம் செய்யுங்கள்.
எண்ணெய்க் கொப்பளிப்பு சமீபத்தில் மிகவும் பிரபலம். கிருமிகள் நீங்க, உடல் சூடு குறைய, வாய்ப் புண்களைத் தடுக்க… செக்கில் ஆட்டிய நல்லெண்ணெயால் வாயைக் கொப்பளிக்கலாம்.